அடுத்த பெண்மணி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 6,851 
 

(இதற்கு முந்தைய ‘மகள்களின் சம்மதம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

வழக்கமாக அலுவலகத்திலிருந்து எட்டு மணிக்கு மேல் வீடு திரும்பும் சுகுணாவின் கணவன் சுப்பையா, அன்று ஆறு மணிக்கே திரும்பிவிட்டான். வீடு அமைதியாக இருந்ததை நுழைந்ததுமே கவனித்து விட்டான். எப்போதும் அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும் டி.வி. இன்று சுகுணாவைப்போல் அமைதியாக இருந்தது.

“என்ன இன்னிக்கி வீடு சப்தமே இல்லாம கெடக்கு?”

சுகுணாவிடமிருந்து பதில் வரவில்லை. சுப்பையாவுக்கு புத்திசாலித்தனம் சற்று அதிகம். உடனே பதில் வராவிட்டால் வர இருப்பது ரொம்பப் பெரிய பதில் என்பதைப் புரிந்துகொண்டான். சுகுணாவை சீண்டுவதற்காக குரலில் கிண்டலுடன், “ஒங்கப்பா மறுபடியும் கல்யாணம் கில்யாணம் பண்ணிக்கப் போறாரா என்ன?” என்றான்.

சுகுணா அரண்டு போனாள். ஐயோ! நிஜமாகவே அவள் எதிர்பாராத பந்து இது! அதுவும் முதல் பந்து! அதிலேயே விழுந்துவிட்டது விக்கெட்!

சுகுணா அழ ஆரம்பித்தாள். சும்மா தமாஷாகக் கேட்டதற்குப்போய் மனைவி ஏன் இப்படி அழ வேண்டும் என்று சுப்பையாவுக்கு விளங்கவில்லை. கடைசியில் விபரம் தெரிந்தபோது அசந்து போய்விட்டான். தமாஷாகக் கேட்டது இப்போது நிஜமாகி விட்டதே!

முதலில் சிறிது நேரத்திற்கு ‘இது என்ன புது கூத்து?’ என்று பேசாமல் இருந்தான். பிறகுதான் மண்டைக்குள் உறைத்தது. சபரிநாதனுக்கு ஆண் வாரிசு கிடையாது என்ற ஒரே விசேஷ காரணத்திற்காகத்தான் சுப்பையாவின் அப்பா சுகுணாவைத் தேடி வலைபோட்டுப் பிடித்து அவனுக்கு மனவியாக்கினார். அவருடைய கொள்கை அது.

மகன்களுக்கு கால தாமதமானாலும் பரவாயில்லை என்று ஆண் வாரிசு இல்லாத பெரிய பணக்கார குடும்பத்தில்தான் பெண் எடுத்தார். இப்போது இரண்டாம் கல்யாணம் செய்து கொள்வதின் மூலம், சபரிநாதனுக்கு நாளைக்கே ஆண் வாரிசு வந்து விட்டால்? இந்தக் கேள்விதான் சுப்பையாவின் மண்டையைப் போட்டுக் குடைந்தது.

வயல்கள், தோட்டங்களை விற்று சுகுணாவுக்குச் சேர வேண்டிய பங்கை பணமாகத் தந்துவிடச்சொல்லி இரண்டு வருடங்களுக்கு முன்பு சுப்பையா ஒரு பெரிய ஆட்டமே காட்டினான். இத்தனை வயல்கள், தோட்டங்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறார் மாமனார் என்பது அவனுடைய அபிப்பிராயம். அதுவும் பெண்டாட்டி செத்துப்போன பொறவு? ஆனால் சபரிநாதனும் ஒரு மாதிரியான முரட்டு ஆசாமி என்பதால் சுப்பையாவும் ரொம்ப ஆட்டம் காட்டாமல் வாலைச் சுருட்டிக்கொண்டு அப்போது அடங்கிப் போனான்.

இப்போது அந்தப் பழைய கதையெல்லாம் வேறு அவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது. “ஒங்க அப்பாவுக்கு மண்டைக்குள்ள ஏதோ நட்டு திடுதிப்புன்னு கழண்டு போச்சி… அதான் சஷ்டியப்தப் பூர்த்தி இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கும்போது மறுபடியும் புது மாப்பிள்ளையாகப் பார்க்கிறார்.” என்று அனல் பறக்கக் கத்தினான்.

தொடர்ந்து, “எனக்கு மட்டும் ரெண்டு மூணு வருஷமாவே ஒங்கப்பன் மேல சந்தேகம்தான் திடுதிப்புன்னு இப்படி ஒரு ‘கவுத்துமா’ வேலை பார்ப்பார்ன்னு. ஏன்னா அவரால தன்னோட முன்வாலை வெச்சிக்கிட்டு சும்மா இருந்துர முடியாது. இந்த விஷயம் மட்டும் எங்கப்பா காதுக்கு போச்சுன்னு வச்சிக்க, அவ்வளவுதான். எங்க வீட்ல அந்த நாமக்காரரை கால்காசுக்கு நம்ப மாட்டாங்க சொல்லிட்டேன்.”

சுகுணா மெளனம் காத்தாள்.

“சரி, இப்ப நீ என்ன செய்யறதா இருக்கே?”

“நான் செய்யறதுக்கு இனிமே என்ன இருக்கு?”

“அவரு கல்யாணத்துக்குப் பெறகு ஜாலியா திம்மராஜபுரத்துல போயி இஷ்டத்துக்கு நீயும் ஒன் அக்காவும் இனிமேல் இருக்க முடியாதுடி.”

“முடியாட்டி போகுது. எனக்கும் அக்காவுக்கும் ஆச்சி வீடு இருக்கவே இருக்கு.”

“ஆமா, பூச்சி வீடு இருக்கு. ஆடிக்காத்துல இங்க அம்மியே பறக்குது! ஆச்சி வீடு இருக்காம் இவளுக்கு. ஆச்சி வீடு இருந்து என்னத்த செய்ய? ஆச்சி இருக்க வேண்டாமா?”

சுகுணாவிற்கு சுள்ளென்று கோபம் வந்தது. “ஒங்க கரி நாக்கை வச்சிக்கிட்டு சும்மா வாயை மூடிட்டு இருங்களேன்.”

“என்னைச் சொல்றீயே, கல்யாணமும் வேண்டாம், கருமாதியும் வேண்டாம்னு நாமக்காரர்கிட்டே சொல்லேன்.”

“நான் என் வாயால அவர்கிட்ட அதைச் சொல்ல மாட்டேன்.”

“பிடிக்காததை பிடிக்கலைன்னு சொல்றதுல என்னடி பயம்?”

“பிடிக்காதது என்னோட அபிப்பிராயம். கல்யாணம் அவரோட தனிப்பட்ட விஷயம். அதுல என்னால தலையிட முடியாது.”

“ஓஹோ. அப்ப நான் இன்னொரு கல்யாணம் செய்துக்கிட்டா அப்பவும் அது என் சொந்த விஷயம்னு வாயை மூடிட்டு இருப்பியா?”

“இது குதர்க்கம். இப்படியெல்லாம் கேட்டா என்கிட்ட இருந்து பதில் வராது.”

“ஹும்… காலம்போன காலத்ல ஒங்கப்பனுக்கு கல்யாணமாம்! நான் இப்பவே சொல்லிட்டேன். நாமக்காரரு கல்யாணத்துக்கு நான் செத்தாலும் வரமாட்டேன்!”

“வராட்டி போங்களேன்.”

அப்போது சுகுணாவின் மொபைல் சிணுங்கியது.

சுப்பையா டிஸ்ப்ளே ஸ்க்ரீனைப் பார்த்து, “கல்யாண ராமர்தான் பண்றார். என்னைப்பற்றி கேட்டா நான் இன்னும் ஆபீஸ்லர்ந்து வரலைன்னு சொல்லிடு.” மகனையும் இழுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினான்.

சுகுணா எடுத்தவுடன், “மாப்ளை இருக்காராம்மா?” என்றார்.

“அவர் இன்னும் வரலைப்பா.”

“சரி, நீ அவர்கிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லும்மா.”

“சரிப்பா.” அவர் போனை வைத்துவிட்டார்.

சுகுணாவுக்கு மனநிலை மாறியது.

‘அப்பாவும் பாவந்தான். இன்னொரு கல்யாணத்லதான் அவருக்கு சந்தோஷம்னா பண்ணிட்டுப் போகட்டுமே! நம்ம அப்பாதானே..!’

திம்மராஜபுரத்தில் சபரிநாதன் என்னவோ பாதிக் கல்யாணத்தை நடத்திவிட்ட கிளுகிளுப்பில் அடுப்படியில் சமைத்துக் கொண்டிருந்தார். அவர் சமைத்த சமையலை ஒரு பிடி பிடித்தார். பெண் பார்க்கப் போகிறோம் என்கிற எண்ணமே அவர் உணர்வுகளை புதுப்பித்திருந்தது. அவருக்குத் தெரிந்த இருபத்தேழு வயசுப் பெண்களையெல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டார். ஆனால் கவனமாக காந்திமதியை மட்டும் சுத்தமாக மறந்துவிட்டார். இளம் பெண்களுக்கான புத்தம் புதிய பிரக்ஞை அவருள் கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியும் பார்த்தது! இளம்பெண் ஒருத்தியின் உடனடித்தேவை அவருக்குள் அரும்பு மாதிரி பற்றிக்கொண்டுவிட சபரிநாதன் மகவும் சுறுசுறுப்பாக காரியத்தில் இறங்கிவிட்டார்.

திருவண்ணாதபுரத்தில் அவருக்குத் தெரிந்த கல்யாணத் தரகர் ஒருவரைப் போய்ப் பார்த்தார்.

“அண்ணாச்சியைப் பார்க்க திம்மராஜபுரத்திற்கு நானே வந்திருப்பேன்.”

“நீங்க அங்க வரவேண்டாம்னுதானே நானே வந்தேன்…”

“அண்ணாச்சிக்கு நான் என்ன செய்யணும்?”

“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கேன் அய்யாச்சாமி.”

“தாராளமா பண்ணிக்கோங்க அண்ணாச்சி. ஒங்களுக்கு என்ன கொறைச்சல்?”

சபரிநாதனுக்கு செல்லமாக அய்யாச்சாமியின் கையைப்பிடித்து குலுக்க வேண்டும்போல இருந்தது. தன் அந்தஸ்த்தை நினைத்து அதைச் செய்யாமல் தவிர்த்தார்.

“என்னோட ரெண்டு மூணு சேக்காளிங்க, இனிமே போய் எதுக்கு கல்யாணம்ன்னு என்னைக் கேக்காங்க சாமி.” சபரிநாதன் நாக்குக் கூசாமல் ஒரு பொய்யை அள்ளிவிட்டார்.

“சொல்றவங்க சொல்லிட்டுப் போறாங்க. இன்னைக்கி ஒங்க சம்சாரம் உயிரோட இருந்தா நீங்களும் அவங்களும் ஒண்ணாத்தானே குடித்தனம் பண்ணிக்கிட்டு இருந்திருப்பீங்க? பேரன் பேத்தி வந்தாச்சி; இனிமே நமக்கு என்னத்துக்கு குடித்தனம்னு சொல்லிட்டு ஆளுக்கொரு பக்கமாவா பிரிஞ்சி போயிருப்பீங்க?”

“அதெப்படி?”

“எத்தனை வயசானாலும் ஒரு ஆம்பிளைக்கு பெஞ்சாதி வேணும். ஒரு பொம்பளைக்கு புருசன் வேணும். சில சமயங்கள்ல அந்த மாதிரி இல்லாம போயிரும். அதை வச்சி நமக்குள்ள எந்தக் கட்டுத் திட்டத்தையும் ஏற்படுத்திக்கக் கூடாது. அவரவர் மன நிலைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ற மாதிரிதான் நடந்துக்கணும். தப்பே கிடையாது அதுல. ஒரு பெண்ணின் நிரந்தர அருகாமை என்பது ஒரு சுகமான அனுபவம். தவிர, நீங்க ஒரு ஆரோக்கியமான ஆண். ஒங்களுக்கு எப்படிப்பட்ட இடத்துல எப்படியாப்பட்ட பொண்ணு வேணும்னு சொல்லுங்க அண்ணாச்சி. அதுமாதிரி ஏற்பாடு செஞ்சிரலாம்.”

சபரிநாதன் அவருடைய விருப்பத்தை சுருக்கமாகச் சொல்வதாக நினைத்துக்கொண்டு ரொம்ப விரிவாகச் சொன்னார்.

“ஒங்க கல்யாணம் முடிஞ்சாச்சின்னே நெனச்சிக்குங்க அண்ணாச்சி” என்று சொல்லி எழுந்துகொண்டார். இது அய்யாச்சாமியின் வெறும் வாய்ப் பந்தல் இல்லை. மனப்பூர்வமான வார்த்தைகள். அந்த வார்த்தைகளை சொன்னமாதிரி காப்பாற்றியும் விட்டார். அவர் பார்த்து நிச்சயம் பண்ணிக் கொடுத்த பெண்ணின் பெயர் ராஜலக்ஷ்மி. ஊர் கல்லிடைக்குறிச்சி.

Print Friendly, PDF & Email

1 thought on “அடுத்த பெண்மணி

  1. Reads like exactly Maya Nathigal by writer Stella Bruce (psuedonym). All the serial stories are also replica of the novel with names changed. Please clarify

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *