அக்கா தங்கை..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2022
பார்வையிட்டோர்: 5,770 
 

“யார் இவள்..? எங்கோ. பார்த்த முகம் மாதிரி தெரிகிறது..?” என்கிற யோசனையுடன் அலுவலக வரவேற்பறையில் நுழைந்தான் தினேஷ்.

அவனைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த அவள் இவன் உள்ளே வர…மரியாதை நிமித்தம் சட்டென்று எழுந்து நின்றாள்.

“உட்காருங்க. யார் நீங்க..?” அமர்ந்தான்.

அவளும் அமர்ந்தாள்.

“பத்து நாளைக்கு முன்னாடி கோட்டுச்சேரியில் ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டு வந்தீங்களே சுமதி. அவளோட அக்காள் வைதேகி நான்.” என்று அவள் தன்னை அறிமுகப் படுத்தி கொண்டாள்.

“அக்காவா..? !” யோசித்த தினேஷ்..

“பெண் பார்த்த அன்னைக்கும் சரி. நிச்சயதார்த்தம் முடித்த அன்னைக்கும் உங்களை அங்கே நான் பார்க்கலையே..”சொன்னான்.

“பெண் பார்த்த அன்னைக்கு அடுப்படியில் பலகார வேலையில் இருந்தேன். நிச்சயம் அன்னைக்கு அறையில் இருந்தேன்.” சொன்னாள்.

“ஏன்..??”

“மூத்தவள் இருக்க இளையவளுக்கு முடிக்கிறதுனால எதிர்ல வரலை.”

“ஓகோ..!” இவனுக்குப் புரிந்தது.

“இப்போ எதுக்கு என்னைப் பார்க்க வந்தீங்க..?” ஏறிட்டான்.

“ஒரு முக்கிய விசயம் உங்ககிட்ட சொல்லனும். தனியே பேசனும்..”தினேசுக்கு மட்டும் கேட்கும்படி தணிந்த குரலில் சொன்னாள்.

“அப்போ கொஞ்ச நேரம் இருங்க. நான் அலுவலகத்தில் அனுமதி சொல்லி வர்றேன். நாம வெளியில் போய் பேசலாம்.”அவள் பதிலை எதிர்பார்க்காமல் எழுந்து உள்ளே சென்றான்.

சிறிது நேரத்தில் வந்து…

“வாங்க..”என்று அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

அருகிலுள்ள பூங்காவில் இருவரும் எதிர் எதிரில் அமர்ந்தார்கள்.

‘பார்த்து முடித்து விட்டு வந்த சுமதியை விட இவள் அழகு சுமார். நிறம் கம்மி. முகத்தில் முப்பது முப்பத்து மூன்று களையைத் தவிர மொத்தமாய் சுமதியின் சாயல் !’ எடை போட்டு முடித்த தினேஷ்…..

“ஏதோ… முக்கிய விசயம்ன்னு சொன்னீங்க..?” என்றான்..

“ஆமா..”

“என்ன..?”

“உங்களிடம் சுமதியைக் காட்டி நிச்சயம் முடிச்சி, என்னை மணவறையில் உட்கார வைச்சு திருமணம் முடிக்கிறதாய் அப்பா அம்மாவுக்குத் திட்டம் !”

“அப்படியா..??!!…”தூக்கிவாரிப்போட்டது இவனுக்கு.

“ஆமாம் !”

“ஏன்..??” கூர்ந்து பார்த்தான்.

“எனக்கு முடிக்க அப்படி யொரு திட்டம். நான்.. இது துரோகம், மன்னிக்க முடியாத குற்றம். பின்னால எனக்குக் கஷ்டம், வாழ முடியாதுன்னு நான் நிறைய சொல்லியும் அது அவுங்க காதுல ஏறலை. ஏறாது.! இதுக்கு என் தங்கையும் உடந்தை.’’ நிறுத்தினாள்.

தினேஷ் அவளைப் பார்த்தபடியே கம்மென்றிருந்தான்.

” எனக்கு இதில் துளி சம்மதம் கிடையாது. அதனால.. மணவறையில் தாலி கட்டுறதுக்கு முன்னால பெண் மாறி இருக்குன்னு நீங்களா கண்டு பிடிக்கிற மாதிரி சொல்லி சுமதியை முடிக்கனும்…”என்றாள்.

“ஓகோ…!!” அவனுக்குத் திட்டம் தெரிந்தது.

வந்த வேலை முடிந்து விட்டதால் வைதேகி தலை குனிந்திருந்தாள்.

“சரி. மணமேடையில் நான் அப்படி செய்தால் உங்க அம்மா, அப்பாவுக்கு அது அவமானமாய் இருக்காதா..?” தினேஷ் தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“இருக்கும் ! அதுக்காக மணப்பெண்ணை மாத்தி நம்பிக்கைத் துரோகம் செய்யிறதா….? தப்பு.!!” என்று அழுத்திச் சொன்ன வைதேகி…..

” அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம். இந்த ரகசியம் நமக்குள் இருக்கனும். அடுத்தவங்களுக்குத் தெரியக்கூடாது. நானும் உங்களைச் சந்திச்சது வெளியில் தெரியக்கூடாது. !” கராறாகச் சொன்னாள்.

எல்லாவற்றையையும் ஏற்றுக் கொண்டது போல அவளையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தினேஷ்….

“சரி. நீங்க போங்க. எதுவும் வெளியில தெரியாது. எல்லாம் நான் கவனிச்சுக்கிறேன். எதுக்கும் பயப்பட வேணாம். !” என்றான்.

“சரி” திருப்தியாய் எழுந்தாள்.

“ஒரு நிமிசம் உட்காருங்க. ஒரு சந்தேகம்..”

“என்ன..?” அமர்ந்தாள்.

“உங்களுக்கு ஏன் திருமணம் முடிக்கலை..?”

“ஜாதகக் கோளாறு. வரன் வந்து வந்து தள்ளிப் போச்சு. எனக்காக தங்கச்சி காத்திருக்கக் கூடாதுன்னுதான் அவள் திருமணத்துக்குச் சம்மதிச்சேன். ஆனா… அப்பா, அம்மா, தங்கையெல்லாம் இப்படி ஒரு திட்டத்தோடு இருக்கிறது இப்பதான் அவுங்க சொல்லி தெரியுது.” நிறுத்தினாள்.

அவள் நல்ல உள்ளம் புரிந்த தினேஷ்…..

‘என் தாலி உனக்குத்தான்! அன்னைக்குத்தான் இந்த இன்ப அதிர்ச்சி உனக்குத் தெரியும் வைதேகி!’ என்று மனதில் சொல்லி கொண்டே….

“சரி போங்க.” எழுந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *