அக்கம்மா அக்கா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 9,858 
 

மழை விட்டு விட்டு தூறிக் கொண்டிருந்தது, எங்கு பார்த்தாலும் அழுகைச் சப்தம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

அடி பாதகத்தி தொண்ணூறு வயசுலையும் கல்லு மாதிரி நான் இருக்கையில, அடி நாயே நீ இப்படி பாதியிலேயே போய் சேந்துட்டேயேடி என் ராசாத்தி..

நீ அரளிப் பூ வச்சா

அல்லிராணியாட்டம்,

செவ்வந்தி பூ வச்சா

செங்கமலமாட்டம்..

மல்லிக பூ வச்சா

மந்த மாரியாட்டம்..

என ஓங்காரமாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் கருப்பாயி பாட்டி…

தெருவெங்கும் செகதியாய் இருந்தது, சிறுவர்கள் சிலர் கொட்டுக்காரர்களை சுற்றிக் கொண்டு நின்றிருந்தனர். வீட்டின் முன் கொட்டகை போடப்பட்டிருந்தது. அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தான் கனகு. நீண்ட இடைவெளிக்கு பின் அந்த ஊருக்கு அவன் வந்திருந்தான். பலர் ஏதோ ஒரு புது மனுசனைப் பார்ப்பதைப் போல, அவனை பார்த்தனர்.

ஆனால் கனகு யாரையும் கவனிக்கவில்லை, அவன் கண்களில், நாற்காலியில் சாத்தி வைக்கப்பட்டிருந்த அக்கம்மாதான் பதிந்திருந்தாள். சுவரில் ஆணி அடிக்கப்பட்டு அக்கம்மாவினுடைய நாடி கட்டப்பட்டிருந்தது, அக்கம்மா அக்கா முன்பை விட கருத்தும் , பருத்தும் இருப்பதாக கனகுவின் மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அக்காவின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த ஒரு ரூபாய் நாணயத்தைப் பார்க்கும் பொழுது, எத்தனையோ முறை அவளது கைகளினாலேயே வாங்கிய ஒரு ரூபாய்கள், கனகுவின் நினைவில் வந்து சென்றது. அந்த ஒடு வேய்ந்த வீடு முழுவதும் , ஒரு வாசனை விரவியிருந்தது, அது இறந்து போனவர்களினுடைய வீடு,, என்பதை அது உறுதிசெய்வது போலிருந்தது.

மேலும் கனகுவினால் அங்கிருக்க இயலவில்லை, அவன் கைககள் நடுங்கத் தொடங்கின, இதயம் வலக்கத்தை விட அதிகமாய் துடிப்பதை அவன் உணர்ந்தான், சிறிது நேரம் அங்கிருந்தால் மயங்கியே விடுவான் போல, மயக்கம் போட்டால் கேலி செய்வார்களே என எண்ணிக் கொண்டு அக்கம்மாவின் வீட்டிற்கு நேர் எதிரே உள்ள வயல் வெளியை நோக்கி நடக்கத் தொடங்கினான். வயல்வெளிகளிலும் அக்கம்மாவின் குரல் ஒலிப்பதை போன்ற ஒரு பிரமை அவன் மனதில் இருந்து கொண்டேயிருந்தது.

அங்கு விசாலமாய் பரவியிருந்த , வேம்புகளினூடே வந்து நின்றான். வேம்புவின் வாசம் அவனுக்கு பிடித்திருந்தது. தன்னை சகஜ நிலைக்கு கொண்டுவர வேம்புவை பற்றிக் கொண்டு தாறுமாறாக செல்லும் மூச்சுக் காற்றை, அவதானித்துக் கொண்டிருந்தான். பட்டாம் பூச்சிகளுக்கு பின் ஓடித் திறிந்தது, அடர்ந்த முள் மரங்களுக்கு இடையே வீடுகள் அமைத்து விளையாடி மகிழ்ந்தது, ஒன்றாக மாடு மேய்த்தது, ஒட்டு வீட்டின் மேல் படர்ந்திருக்கும் சுரக்காய்களை பறிக்க பயந்த பொழுது அக்கா தைரியம் சொன்னது, பம்பரம் விட்டது என அக்கம்மா அக்காவுடன் பழகி கழித்த அந்த கால்சட்டை பருவகால நினைவுகள் இன்னும் மனதில் பசுமையாய் இருந்தது. அக்கம்மா கனகுடன் கூடப் பிறந்தவள் அல்ல, ஆனால் ஒரே வயிற்றில் பிறந்தவர்களுக்கு கூட இல்லாத பாசம் அக்கம்மாவிற்கும், கனகுவிற்குமிடையே இருந்தது.

இப்போது கொட்டுகளின் ஒலி சன்னமாய் கனகுவின் காதுகளில் கேட்டது, அக்கம்மாவின் வீட்டிலிருந்து நீண்ட தூரம் அவன் வந்திருந்தான். சில கணங்கள் அக்கம்மா அக்கா இறக்காமல் இருக்க கூடாதா, இதெல்லாம் பொய்யான நிகழ்வாய் அமைந்துவிடக் கூடாதாயென அவன் ஏங்கினான்.

-2-

அக்கம்மா அதிகம் படிக்கவில்லை ஆனால் படித்தவர்கள் தெரிந்துவைத்திருக்கும் விசயங்களை விட அதிகம் தெரிந்து வைத்திருந்தாள். களை எடுப்பதிலிருந்து, கதிர் அருப்பது வரை அனைத்து விவசாய வேலைகளையும் அவளுக்கு அத்துபடி..

களை வெட்டுன்னா அது அக்கம்மா வெட்டப்போல இருக்கனும், அக்கம்மா களை வெட்டுன காட்டுக்கு சாயங்காலம் போய் பாத்தா அக்கம்மா வெட்டுன நெற தனியா கண்ணாடி மாதிரி தெரியுமுள்ள… என ஊர் மக்கள் புகழ்ந்து பேசும் அளவுக்கு அக்கம்மாவின் களைவெட்டு பெயர் போயிருந்தது.

டேய், நேரம் போய்கிட்டேயிருக்கு நீ என்ன பொம்பள புள்ளையாட்டம் அழுதுக்கிட்டு இருக்குறவன் , அவதான் நம்மள மசுரா நெனச்சுட்டு மதிக்காம, நாண்டுட்டு செத்து போயிட்டாள்ல அவளுக்கு போய் அழுதுக்கிட்டு, வாடா என கனகுவைப் பார்த்து சத்தம் போட்ட முனியாண்டி பெரியப்பா, தனது துக்கத்தை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

மழைத் தூறிக் கொண்டிருந்தது, கனகு தேர்கட்டுவதற்கு மாயனைத்தேடி சென்று கொண்டிருந்தான். அவன் மனமெங்கும் அக்கம்மா நிறைந்திருந்தாள். நெருஞ்சி முட்கள் காலில் தைத்து உண்டாகும் வலியை விட அக்கம்மா அக்கா இறந்துவிட்டாலே என்ற உள்ளுணர்வு அவனை வதைத்துக் கொண்டிருந்தது.

அக்கா ஏன் தற்கொலை செய்து கொண்டாள், அக்காவின் பிஞ்சு மனது தற்கொலைக்கு எப்படி உடன் பட்டது, என்ற கேள்விகள் அவன் உள்மனதில் எழுந்தவண்ணம் இருந்தது. அந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் அவன் தட்டு தடுமாறிக் கொண்டிருந்தான்.

பால்ய காலத்தில் ஒரு முறை பிளேடால் எதேச்சையாக தெரியாமல் கைகளை அருத்துக் கொண்ட பொழுது, அழுது கூச்சல் போட்ட அக்காவா இன்று தற்கொலை செய்து கொண்டாள் என கனகுவின் மனம் நம்பமறுத்தது. ஆனால் என்ன செய்வது நம்பித்தானே ஆக வேண்டும். அக்காதான் இறந்துவிட்டாளே… என அவனுக்கு அவனே சமாதானம் செய்து கொண்டான்.

அக்கம்மாவுடன் தனது பால்ய காலத்தில் இருந்த நினைவுகளை அவனது உள் மனம் மேலும் அசைபோட துவங்கியது. அது ஒரு வசந்த காலமாக இருவருக்கும் அமைந்தது. அது விளயாட்டினாலும், கள்ளம் கபடமற்ற மனங்களினாலும் சூழப்பட்ட அற்புதமான காலமது.

தொலைக்காட்சிகள் அதிகம் இல்லாத அக்காலகட்டங்களில் , கிராமத்தில் ஏதோ ஒரு சில வீடுகளில்தான் தொலைக்காட்சிகள் இருக்கும்.பெரும்பாலும் தொலைக்காட்சிகள் இருக்கும் வீடுகளில் பெரியவர்களுக்கு 50 காசும், சிறுவர்களுக்கு 25 காசும் பெற்றுக் கொண்டுதான் தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பார்கள். வீட்டிலே கூட்டம் நிரம்பியிருக்கும் ,ஒரு கிழவரோ,கிழவியோ வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு எல்லோரிடமும் பணம் பெற்றுக் கொண்டுதான் வீட்டிற்குள் செல்ல விடுவார்கள். அத்தகைய வீடுகளில் டிவி பார்க்க மூன்று கண்டிசன் இடப் பட்டிருந்தது. சிரிப்புக் காட்சி வந்தாலும் யாரும் அதிகம் சப்தம் போடக் கூடாது. மனதை நெகிழ வைக்கும் காட்சி வந்தாலும் யாரும் கண்ணீர் விட்டு அழக் கூடாது.

சிறு குழந்தைகள் யாருக்காவது, அவசரத்தில் மூத்திரம் பெய்தால், குழந்தையை தூக்கி வந்தவர் நிகழ்ச்சி முடிந்ததும் , வீட்டையே தண்ணீர் ஊற்றித் துடைத்து சுத்தம் செய்து தர வேண்டும். இத்தனை விதிகளுக்கும் உட்பட்டு அக்கம்மா கனகுவை அழைத்து செல்வாள்.

ஒரு ஞாயிற்றுக் கிழமையில் மஹாபாரதம் பார்க்க கனகுவை அழைத்துச்சென்ற பொழுது ”கூட்டம் அதிகாமாயிருச்சு , நீ வேணுமுன்னா போ , இவன வெளிய விட்று” என அந்த காசு வாங்கும் கெழடு கூறிய போது.. எந் தம்பியே பாக்காத மஹாபாரதம் ஒங்களுக்கு தேவையா என சப்தம் போட்டுக் கொண்டே , எந் தம்பி பெரியாளாகி பெரிய டிவியா வாங்கி எனக்கு காமிப்பான்யா என அக்கம்மா ரகளை செய்த நினைவுகள் கனகுவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

-3-

அக்கம்மா ஏழாம் வகுப்பிலேயே இருமுறை கோட்டைவிட்டதால், அவளது அப்பா அக்கம்மாவை மேற்கொண்டு படிக்க வைக்கவில்லை. போதும் போதும் நீ படிச்சு கிழிச்சது, நாளையிலயிருந்து முத்தாயி குருப்போட சேந்து குத்தகைக்கு களையெடுக்க போ, அம்மா இல்லாத பொண்ணுன்னு செல்லங்கொடுத்து வளத்தது தப்பா போச்சு.. என அப்பா சொன்ன நாளில் அக்கம்மா அந்த தெரு வீதி, சிறு குழந்தைகளுக்கு, ஆரஞ் மிட்டாய் வாங்கி கொண்டாடினாள். படிப்பு என்றாலே அக்கம்மாவிற்கு கசப்பாய் இருந்தது. கருவேலங்காட்டிற்குள் சுற்றித்திரியவும்., மாடு மேய்க்கவும் , களையெடுக்கவும்தான் அக்கம்மாவின் மனம் விருப்பம் கொண்டிருந்தது.

எல்லோர் வாழ்விலும் காதல் என்ற தென்றல் தொட்டு விட்டு போவது போல அக்கம்மாவையும் அந்த தென்றல் தொட்டது. அந்த தென்றல் ஊருக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வந்த கணக்கு வாத்தியாரிடமிருந்து, வந்தது.

பள்ளிக் கூடமே கசப்பாய் இருந்த அக்கம்மாவிற்கு, காதல் வந்த தறுணத்தில் பள்ளிக் கூடம் இனிக்க தொடங்கியது, பள்ளியையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள். ஏம் புள்ள பள்ளிக்கூடத்துக்கே போகமாட்டேனு கொஞ்ச வருசம் முன்னாடி , மிட்டாயி வாங்கி கொடுத்த நீயா புள்ள இப்போ பள்ளிக் கூடத்து பக்கம் சுத்தி வர்ற, பாரப்பா…ம்,ம்,ம்ம்ம் என தோழிகளின் கேலி பேச்சுக்கு அக்கம்மா புன்னகையே செய்தாள்.

காதல் கடிதங்களை கனகுதான் இருவருக்கும் பரிமாறுவான். கணக்கு வாத்தியார் கடிதத்தை பெற்றுக் கொண்டு நியூட்ரின் சாக்லேட் , கனகுவிற்கு தறுவார். அவன் ஒவ்வொரு முறையும் கடிதம் கொண்டு போகும் போதும் , நியூட்ரின் சாக்லேட்டை மனதில் எண்ணிக் கொண்டே செல்வான். கனகுவின் பாக்கெட் சாக்லெட்டுகளால் நிரம்பிக் கொண்டிருந்தபோது அக்கம்மா, வாத்தியாரின் காதலும் , யாருக்கும் தெரியாமல் மெல்ல மெல்ல பின்னி படரும் புடலைக் கொடி போல வளர்ந்து கொண்டிருந்தது.

சில மாதங்கள் கழித்து வெய்யில் ஊரித் திறிந்த ஒரு மதிய வேளையில் அக்கம்மா, கனகுவை அழைத்துக் கொண்டு கோபமாய் கணக்கு வாத்தியாரிடம் வந்தாள், கையில் கத்தையாக கணக்கு வாத்தியார் எழுதிய காதல் கடிதங்கள் இருந்தது. வாத்தியாரும் கைகளில் அக்கம்மா எழுதிய காதல் கடிதங்களுடன் இருந்தார். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அந்த இடமே நிசப்தமாய் இருந்தது. சிறிது நேரத்திற்கு பின் இருவரும் கடிதங்களை கிழிக்க தொடங்கினர். பின் கனகுவிடம் தீப்பெட்டி தந்து கடிதங்களுக்கு தீவைக்க சொன்னார்கள். கனகு தீக்குச்சியை உரசினான் , அவன் மனதில் எங்கே கணக்கு வாத்தியார் கொடுத்த சாக்லேட்களை திருப்பிக் கேட்டுவிடுவாரோ என்ற பயம் இருந்தது.

அந்த தீ ஜுவாலையோடு அக்கம்மாவின் காதல் எரிந்துபோனது, இந்த காதல் விவகாரம் அக்கம்மாவிற்கும், வாத்தியாருக்கும், கனகுவிற்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். சில நாட்கள் அக்கம்மா அழுது கொண்டிருந்தாள். அக்காவின் அருகில் படுத்திருந்த ஒரு இரவுப் பொழுதில் போர்வையை விலக்கி ஏங்க்கா அழுகுற என கனகு கேட்டதற்கு

”டேய் எனக்கு செவ்வா தோசமாம், அதனால என்னக் கட்டிக்கிறவன் வேகமா செத்து போயிருவாங்கன்னு, யாரோ சொன்னாங்களாம் , அதனால நாம இனிமே பழக வேணாம் என்னைய மறந்துடுன்னு சொல்லிட்டாப்ள , அதனாலதான் மூஞ்சில அடிச்சாப்ல தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன், எனக் கூறினாள் அக்கம்மா. கனகு கவலப்படாதக்கா நான் படிச்சு வேலைக்கு போயி உன்ன நல்லா வச்சு பாத்துக்கிறேன் எனக் கூறியவுடன் அவனை கட்டி அரவணைத்துக் கொண்டாள் அக்கம்மா.

வயது வளர வளர அக்கம்மாவை விட்டு கனகு தூரம் சென்றுகொண்டே இருந்தான். படிப்பதற்காக வெளியூர் போகும் போதும் வரும் போதும் அக்கா பஸ் ஸ்டாப்பிற்கே வந்து விட்டு விட்டும்,அழைத்தும் செல்வாள். கிராமத்தில் அனைவரும் அக்கம்மாவை தம்பி பைத்தியம்னு சொல்ல ஆரம்பித்தனர்.

படித்து முடித்து வேலைக்காக அலைந்து, டெல்லியில் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு சேர்ந்த பிறகு ஊருக்கு வருவது குறைந்து போனது, அக்காவை எவ்வளவோ முறை, இங்க வந்துருக்கா என அழைத்ததற்கு அவள் வர மறுத்தாள் , திருமணமும் செய்ய மறுத்தாள் , ஊரில் உள்ள அனைவரிடமும் வெள்ளந்தியாக பழகுவாள்,

-4-

அப்படிப்பட்ட அக்கா சுடுகாட்டை நோக்கி பயணமாக நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. கனகு அக்காவை தேரில் தூக்கி வைத்தான். அவனது மனம் சொல்ல முடியாத வலியில் உலர்ந்து போயிருந்தது.

“கோவிந்தா, கோவிந்தா என கூட்டத்தினர் சப்தமிட தொடங்கினர். மாயன் கட்டிய தேரில் அக்கம்மா தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு மயானம் நோக்கி பயணமானாள். கருப்பாயி பாட்டி மயங்கி விழுந்தார்.

அக்கம்மா ஊரைத்தாண்டி வந்துவிட்டாள். மரங்கள் அனைத்தும் அசையாமல் இருந்தது, அது அக்கம்மாவின் மரணத்தை தாள முடியாமல் தன் துக்கத்தை காட்டிக் கொண்டிருந்தன. அக்கம்மாவின் உடலை இறக்கி வைத்து, ஏற்கனவே அடுக்கி வைத்திருந்த கட்டையில் கிடத்தினார்கள். பின் அக்காவின் மீது கட்டைகளைவைத்து அக்கம்மாவின் முகத்தை மறைக்க வறட்டியை வைத்தார்கள். கனகுவிற்கு கண்கள் குளமாகியது கைகள் நடுங்கத் தொடங்கின.யாருமற்ற தனிமையில் இருப்பது போன்றிருந்தது

கொள்ளி வைக்க அக்காவின் உறவினர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். அது அக்கம்மாவின் மேல் உள்ள பாசத்தினால் அல்ல, அக்கம்மா சேர்த்துவைத்திருந்த பணத்திற்காக, அக்காவின் உடல் அநாதையாய் கிடப்பதை கனகுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

டேய் நாதாரிப் பயலுகளா, நீங்கள்ளாம் மனுசங்களாடா, அக்கா உசுரோட இருந்த வரைக்கும் அவளுக்கு ஆதராவா இல்லாம மனச நோகடுச்சுக் கொண்டுட்டு, இப்ப என்னடா பாசாங்கு பண்றீங்க .. என ,ஆழ் மனதில் அடக்கிவைத்திருந்த வார்த்தைகளை வீசிவிட்டு அக்கம்மாவிற்கு கொள்ளிவைத்தான் கனகு. அக்கம்மாவை எரித்த மறுதினம் மேகங்கள் திறண்டு கடுமழை பெய்தது. வறண்ட பூமியெங்கும் குளிர்ந்து பசுமையானது.குளம், குட்டைகள் பெருகி வழிந்தது.

சில தினங்களுக்கு பிறகு கனகு ஊருக்கு திரும்ப, டவுனுக்கு போகும் பேருந்தில் ஏறிக் கொண்டான், “நல்லவங்க செத்தாத்தான் இப்படி கனமழை பெய்யுமாம், அக்கம்மா செத்து நமக்கு மழைய தந்துட்டு போயிட்டா” என கிராமத்து பெண்கள் சிலர் பேருந்தினுள் பேசிக் கொண்டது கனகுவின் காதில் விழுந்தது, கனகு அக்கம்மாவின் நினைவுகளினுடேயே லயித்திருந்தபோது பேருந்து ஹாரன் சப்தத்தோடு அந்த ஊரைவிட்டு மெல்ல நகரத் தொடங்கியது.

– நன்றி : அதீதம் இணைய இதழ் (ஏப்ரல் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *