கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2013
பார்வையிட்டோர்: 9,978 
 

ஒரு பெரிய கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்த அந்தப் பன்னாட்டு நிறுவனம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. “சிஸ்டம் அனலிஸ்ட்” என்று பெயர் பொறிக்கப்பட்ட கட்டத்தினுள் உட்கார்ந்தபடி கணினித் திரையையே வெறித்தபடி இருந்தாள் அகிலா. இன்று சாயந்திரம் அவளை பெண் பார்க்க வருகிறார்கள். அதற்குண்டான பூரிப்போ , வெட்கமோ எதுவும் இல்லை அதற்குக் காரணம் அவள் வயதல்ல. இந்த முப்பது வயதிலும் வெட்கமும் சந்தோஷமும் மரத்துப் போகாமல் தான் இருந்தாள் நேற்று இரவு வரை.

அகிலா !! ஒரு கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இரண்டாவது பெண். ஆண்களுக்கே உரித்தான எல்லாச் சபலங்களும் உள்ள அப்பா. கல்லானாலும் கணவன் என்ற வாக்கியத்தையே வாழ்க்கையாக ஏற்ற அம்மா , பெண்ணாகப் பிறந்ததன் நோக்கமே அழகாக அலங்கரித்துக் கொண்டு கண்ணுக்கு அழகாக நின்று வருங்காலக் கணவனைக் கவர்வது ஒன்றுதான் என்று நினைக்கும் அக்கா. இவர்கள் மத்தியில் படிப்பிலும் , அறிவு சார்ந்த கருத்துக்களின் மேல் காதலும் கொண்ட அகிலா தனிமைப்பட்டாள்.புத்தகங்களே அவளுக்குத் துணையானது.நன்றாகப் படித்தாள். பருவ வயதில் வரும் சலனங்களை மனக் கட்டுப்பாட்டின் மூலம் அடக்கி , மேலும் உக்கிரமாக பாடத்தில் ஆழ்ந்தாள்.வீட்டில் அதிகம் பேசாததாலோ , நன்றாகப் படித்ததாலோ இல்லை வீட்டிலுள்ளோர் கூறும் கருத்துக்களை எப்போதும் மறுத்துப் பேசி வந்ததாலோ அவளை திமிர் பிடித்தவள் என்றே நினைத்தனர் , சொல்லவும் செய்தனர். அதனால் எல்லாம் பாதிக்கப்படுபவள் அகிலா அல்ல.

அவள் ப்ளஸ் டூ முடித்து அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிக்க இடம் கிடைத்த விஷயத்தை வீட்டில் சொன்னபோது வீட்டில் பூகம்பம் ஏற்பட்டது. அம்மாவும் , அக்காவும் தான் முதலில் போர்க்கொடி தூக்கியது. “இருக்குற பணத்த ஒன் படிப்புக்கு வாரி விட்டுட்டா நாளக்கி ஒங்க கல்யாணத்துக்கு என்னா செய்யறது? ” என்று நியாயம் பேசினாள் அம்மா.அக்காவுக்கு இவள் படிப்பால் தன் திருமணம் இன்னும் தள்ளிப் போய்விடுமோ என்ற பயம்.அப்பா”எல்லாம் போதும் படிச்சுக் கிளிச்சது. இந்த ரெண்டு கருமத்தையும் வீட்ட விட்டு வெளியேத்தவே நா சம்பாதிக்கறது போதாது ,இந்த லெட்சணத்துல ஒன்ன படிக்க வெச்சுட்டு அப்புறம் ரிடைர்மெண்டுக்கப்புறம் நாங்க சோத்துக்குத் தாளம் போடறதா?” என்றார்.அவர் கவலை அவருக்கு. அவர் தன்னுடைய குடியையும் மற்ற சவாசங்களையும் குறைத்துக் கொண்டாலே நிறையப்பணம் சேமிக்கலாமே? என்று வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கினாள் அகிலா.தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கடனுதவியோடு அவள் மேற்கொண்டு படித்து வேலை கிடைத்ததும் கடனை அடைக்க முடிவு செய்திருப்பதாக உறுதியாகக் கூறிவிட்டாள். அவள் அப்பாவும் சில பெரிய மனிதர்களிடம் விசாரித்து சரியென்று படவே ஏற்றுக்கொண்டார்.அகிலாவுக்கே அது ஒரு ஆச்சரியம் தான்.அம்மா தான் முனகிகொண்டே இருந்தாள்.

அந்த நான்கு வருடங்கள் அவள் பட்ட பாடு! அப்பப்பா!!ஏனோ அப்பா அக்காவின் கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். இவள் படிப்புச் செலவால் தான் என்று அக்கா எப்போதும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.அகிலாவை சாடைமாடையாகவும் நேராகவும் திட்டினாள்.அம்மாவும் அகிலாவால் தான் அக்கா கல்யாணம் நடக்கவிலை , அக்கம்பக்கத்தவர் ஒருமாதிரிப் பேசுகிறார்கள் என்று இவளைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அப்பாவிடம் அபரிமிதமான மாற்றம். செலவுக்குக் காசு அதிகமாகக் கொடுக்காவிட்டாலும் இவளை ரொம்பவும் தாங்கிப் பேசினார்.அது அக்காவின் ஆத்திரத்தை மேலும் கிளறி விட்டது. இவள் படிப்பதாலேயே அப்பா சலுகை காட்டுகிறார் என்று நினைத்து அகிலாவிற்கு எவ்வளவு இடைஞ்சல் கொடுக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்தாள். எல்லாத் தடைகளையும் தாண்டி நான்காவது வருடம் முடியும்முன்னே இப்போது வேலை பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தில் , ஐந்து இலக்கச் சம்பளத்தில் வேலை கிடைத்து விட்டது.

அதன் பிறகு அவர்கள் குடும்பத்திற்கே ஏறுமுகம் தான் , ஃப்ரிட்ஜ் வாங்கினார்கள் , அம்மாவுக்கும் , அக்காவுக்கும் பட்டுப் புடவை வாங்கினார்கள் , அப்பா பீடியை விட்டு சிகரெட் பிடிக்கலானார். வங்கிக் கடன் ஒரு பெரிய சுமையாய் அழுத்தாததால் கொஞ்சம் பெரிய இடமாகப் பார்த்து அக்காவுக்கு கல்யாணம் செய்தார்கள். மாப்பிள்ளை , அரசு அலுவலகம் ஒன்றில் எழுத்தராக இருக்கிறார். அக்காவுக்கு இன்னும் பெரிய இடமாக , தனியார் நிறுவனம் ஆயினும் பரவாயில்லை மேனேஜராக வேலை பார்க்கும் மாப்பிள்ளை வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அப்பாதான் பென்ஷன் வரும் உத்யோகம் என்று அக்காவை அடக்கி விட்டார்.அதுவும் ஆயிற்று கல்யாணம் முடிந்து எட்டு வருடங்கள் ஓடி விட்டன. இரண்டு பிள்ளைகளுடன் ஒவ்வொருமுறையும் விடுமுறைக்கு அக்காவரும் போது வீடே அதிரும். கல்யாணம் முடிந்து குழந்தைகள் பிறந்தும் அக்காவிற்கு அகிலாவின் மேல் தோன்றிய பொறாமை கொஞ்சம் கூடக் குறையவில்லை. அகிலாவின் உடைகள் , அவளின் நாகரிகமான தோற்றம் , முடியை வெட்டி அலங்கரித்திருந்த விதம் , வீட்டில் அவளுக்குக் கிடைக்கும் மரியாதை இவை அவளின் பொறாமைத்தீயில் நெய் ஊற்றின.”இந்த மாதிரி காச தூக்கி எறிஞ்சு அலங்காரம் செஞ்சுகிட்டா கழுதை கூட அகிலாவ விட அழகா இருக்கும் ” என்று வேடிக்கையாக சொல்வது போல் சொல்வாள்.அதற்கு அம்மாவும் சேர்ந்து சிரித்து விட்டு “எல்லாம் இவள் போன பிறகு” என்பது போல் கை ஆட்டுவது தான் இவளுள் கோபத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்தும். அது போன்ற சந்தர்ப்பங்களில் இதே வார்த்தையை தான் அக்காவைப் பார்த்து சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்று யோசிப்பாள்.முன்பு புத்தகமே அடைக்கலமானது போல இப்போது அலுவலக வேலைகளில் தன்னை ஆழ்த்திக் கொண்டாள்.அதன் பலன் மேன்மேலும் உயர்ந்து கொண்டே போனாள்.வீட்டு சூழ்நிலையிலிருந்து ஒரு மாற்றமாக அலுவலகத்தில் எல்லோருடனும் நன்றாகப் பேசிப் பழகினாள் ஒரு அளவோடு.

அக்காவுக்குக் கல்யாணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு இவளுள் திருமண ஆசை எழுந்தது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. இவளோடு வேலையில் சேர்ந்த பலர் ஒவொருவராக கல்யாண இன்விடேஷனை நீட்டினார்கள். அதில் பல காதல் திருமணங்கள் .இருவரும் அதே அலுவலகத்தில் வேலை செய்தனர்.அப்பாவாகப் பேச்சை ஆரம்பிப்பார் என்று நினைத்தாள் அது இல்லை என்றானது..அக்காவின் திருமணத்தைப் பற்றி எப்போதிருந்தோ கவலைப் பட ஆரம்பித்த அம்மாவும் வாயே திறக்காமல் போகவே , வேறு வழியின்றி அகிலாவே மற்ற நண்பர்கள் திருமணத்தைப் பற்றிக் கூறி ஜாடைமாடையாகச் சொன்னாள். அவள் ஜாதகத்தை அப்பா பரணிலிருந்து எடுத்ததிலிருந்து அவருக்குப் புரிந்து விட்டது என்று நினைத்தாள். வீட்டில் எப்போதும் அகிலாவின் கல்யணப் பேச்சு தான். ஒரு விஷயத்தில் அப்பா மிகவும் கண்டிப்பாக இருந்தார். பத்துப் பொருத்தங்களும் பொருந்தியிருந்தால் தான் மேற்கொண்டு பேசுவது என்று உறுதியாக இருந்தார். மனசெல்லாம் பூரித்தது அகிலாவுக்கு.அகிலாவின் மண வாழ்க்கை மேல் அப்பவிற்கு உள்ள அக்கறையைப் பார்த்து.இவள் சம்பளத்தைக் கேட்டே பலர் ஓடிவிட்டனர். அவளை விட சம்பளம் கம்மியாக வாங்கினாலும் பரவாயில்லை என்று வந்த ஒருசில வரன்களை “எம்பொண்ணோட குணத்தப் பாக்காம பணத்தப் பாக்குறானுங்க பரதேசிங்க ” என்று அப்பாவே தட்டிக் கழித்தார்.”அப்பாவா இவ்வளவு பொறுப்பாக சிந்திக்கிறார்” என்று வியந்து போனாள் அகிலா.அந்நிலையில் தான் அரித்ரோ தாஸ்குப்தா இவள் வாழ்வில் குறுக்கிட்டான்.அவளுடன் அதே அலுவலகத்தில் கல்கத்தாவிலிருந்து மாற்றலாகி வந்த வங்காளி.

வங்காளிகள் வட இந்தியர்கள் அல்ல அவர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வசிப்பவர்கள் என்றும் , அவர்களிலும் கறுப்பானவர்கள் உண்டு என்பதையும் அரித்ரொவிடமிருந்து பார்த்து கேட்டு தெரிந்து கொண்டாள். நாளுக்கு நாள் இருவருக்கும் நெருக்கம் அதிகமானது.அகிலாவின் அலுவலகத்திலேயே காதலித்து கல்யாணம் செய்துகொண்ட ஒருசிலருக்கு விவாகரத்து ஆகியிருந்தது. அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்புகளால் அலுவலகம் நாறியது. அவர்கள் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்ட கெட்ட வார்த்தை வசவுகள் அப்பப்பா!! என்ன ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் பேசினார்கள் என்பது தான். அவற்றையெலாம் பார்க்கப்பார்க்க மனதுள் ஒரு பயம் வந்து புகுந்து கொண்டது அகிலாவுக்கு.அந்த நிலையில்தான் அரித்ரோ அவன் மனதை அகிலாவிடம் சொன்னான். அதைக்கேட்டதும் , அவளுக்கு முதலில் ஏற்பட்ட உணர்வை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. சந்தோஷம் , வெட்கம் ,இவற்றை மீறிக்கொண்டு பயம்தான் இருந்தது. அவ்ர்களுக்குள் கொஞ்சமும் பொருந்தாது என்றும் அவசரப்பட்டு கல்யாணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்திற்கு செல்வதில் தனக்கு சிறிதும் சம்மதமில்லை அதற்கு பதில் பரஸ்பர மதிப்பும் மரியாதையோடு தனித்தனியாகவே இருந்துவிடலாம் என்று தான் யோசித்து எடுத்த முடிவை அரித்ரொவிடம் சொல்லிவிட்டாள்.

அவன் முகம் மாறாமல் ஏற்றுக்கொண்டான் , “நான் உனக்காகக் காத்திருப்பேன் என்று சினிமா வசனம் பேச மாட்டேன் , எனக்கு வேறொரு பெண்ணின் மீது ஈடுபாடு ஏற்பட்டாலோ , இல்லை என் வீட்டார் கட்டாயப் படுத்தினாலோ கண்டிப்பாக முழு மகிழ்ச்சியோடு கல்யாணம் செய்து கொள்வேன் , அதுவரையில் உனக்கும் உன் முடிவை மாற்றிக் கொள்ள சமயமிருக்கிறது” என்றான். அந்த பதிலே அவளை மேலும் பயமுறுத்தியது. அவன் மேலும் தொடர்ந்தான்.”காதல் என்பது ஒரு மென்மையான உணர்வு , இந்தப்பெண் அல்லது இந்த ஆண் என் வாழ்க்கைத் துணையானால் வாழ்க்கை சிறக்கும் என நம் இதயம் செய்யும் முடிவு. அதை ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாகவும் , ஆரவாரமாகவும் மாற்றுகிறீர்கள் , விரும்பியது கிடைக்கவில்லையென்றால் அந்த விருப்பம் நெஞ்சில் சுகமான நினைவுகளை மீட்ட வேண்டுமே அன்றி வெறுப்பையோ , கோபத்தையோ வெளிப்படுத்தினால் அது எப்படிக் காதலாகும்? நீ மறுத்தற்கு நான் கோபப் பட்டால் அது உன் மீதான என் ஆளுகையைத்தான் காட்டுமேயல்லாது அன்பைக்காட்டாது”என்றான். அகிலாவுக்கு ஏதோ புரிந்த மாதிரியும் இருந்தது , ஒன்றும் புரியாத மாதிரியும் இருந்தது. ஆனால் அவனை மறுத்து தான் அவசரப் பட்டு விட்டோமோ என்ற நினைப்பை தவிர்க்க முடியவில்லை.

கொஞ்ச நாட்களாக காணாமல் போயிருந்த கல்யாணப் பேச்சு மீண்டும் ஆரம்பமானது.இம்முறை அகிலாவால் ஒன்ற முடியவில்லை ஏதேதோ காரணம் சொல்லி அவளே தட்டிக் கழித்துவிட்டாள்.அவ்ள் தனிமையில் யோசித்துப் பார்த்த போதுதான் ஒரு உண்மை அவளுக்குப் புரிந்தது.வீட்டாரின் பேச்சுக்கு பயந்து தான் அரித்ரொவை வேண்டாம் என்று சொல்லிவிட்டோம் என்று புரிந்துகொண்டாள். “அப்பாதான் என் வாழ்க்கையில் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறார் அவரிடம் விஷயத்தை சொல்லி புரிய வைத்து விடலாம்” என்று அவர்கள் ரூமுக்குப் போனாள். இவள் பெயர் அடிபடவே தன்னையறியாமல் நின்று கேட்டாள். ” என்னங்க அகிலாவுக்கு இன்னும் எவ்வளவு வரந்தான் பாப்பீங்க? அவளும் தட்டிக் கழிக்கறா நீங்களும் பேசாம இருக்கீங்களே?” என்றாள் அம்மா. “அடிப்போடி பைத்தியம் ! அவளுக்கு கல்யாணம் செஞ்சு அனுப்பிட்டா நீயும் நானும் பழயபடி சிங்கிதான் அடிக்கணும்.எனக்கென்ன பென்ஷனா வருது கவலை இல்லாம காலத்தை ஓட்ட?அவ சம்பதிக்கற பணம் இல்லையானா நீ இப்படி பளப்பளன்னு சேல கட்ட முடியாது தெரிஞ்சிக்கோ.”என்ற அப்பாவின் குரல் அகிலாவின் மனதில் நெருப்பை வாரி இறைத்தது.மூச்சைப்பிடித்துக் கொண்டு மேலும் கேட்டாள்.”ஏன் அவ காசுல நான் மட்டும்தான் சுகம்மா இருக்கேனோ? நீங்க எப்புடி?முண்ணூறு ரூவாக்கு கொறஞ்சு ஐயா இப்ப சட்டையே போடறதில்ல . இதுல என்ன சொல்ல வந்துட்டீங்க பெருசா” என்று சண்டைக்குப் போனாள்.

வெளியில் கேட்டுக்கொண்டிருந்த அகிலாவிற்கு நெஞ்சு படபடத்தது.”அது இருக்கட்டும் நீங்க இப்படி வர மாப்பிள்ளைங்கள தட்டிக் கழிச்சுக்கிட்டே போயி அவளா ஒரு மாப்பிள்ளயப் புடிச்சிட்டா என்ன செய்வீங்க?” என்ற அம்மாவின் கேள்விக்கு “அது எப்படி என்னை மீறிப் போய்டுவாளா? நம்ம சாதி , மதம் ஒண்ணும் இல்லன்னா ஜாதகத்துல தோஷம்னு எதையாவது சொல்லி அவளை என் வழிக்குக் கொண்டு வந்திட மாட்டேன்?” மேற்கொண்டு கேட்கப்பிடிக்காமல் தன் அறைக்கு வந்தாள். அவளுள் சிந்தனை ஓடியது” நான் என்ன இந்த வீட்டில் சம்பாதிக்கற மிஷினா? “அதைத்தவிர ஒன்றும் சிந்திக்ககூடத் தெரியவில்லை அவளுக்கு.மூளை , மனது ரெண்டுமே வெறுமையாகப் போனது. நல்லவேளை அக்கா இல்லை.இருந்திருந்தால் அவள் என்ன சொல்லியிருப்பாளோ? பெற்ற தாய் தந்தையே சுயநலத்திற்காக இவளை பலி கொடுக்கத் துணிந்து விட்ட பிறகு உடன் பிறந்தவர்கள் எம்மாத்திரம்?ஓடிப்போய் அரித்ரொவிடம் இதைச் சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது.ஒருவேளை இதுதான் காதலோ?

பலவாறாக சிந்தித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் அகிலா. எப்படியிருந்தாலும் அப்பா இந்த மாப்பிள்ளையையும் வேண்டாம் என்றுதான் சொல்லப் போகிறார் , இந்த கண்துடைப்பு வைபவத்திற்கு போகாமல் இருந்தாலென்ன? அன்றைக்கு என்று பார்த்து அரித்ரோ வரவில்லை உடம்பு சரியில்லையென்று லீவு எடுத்திருந்தான்.எதற்கும் இருக்கட்டும் என்று அவன் முகவரியை வாங்கி வைத்துக்கொண்டாள்.வேண்டுமென்றே அன்று வீட்டிற்கு லேட்டாகப் போனாள். வீட்டில் நுழைந்த உடனே அக்காதான் ஆரம்பித்தாள்.” எல்லாம் சம்பாதிக்கற திமிரு! இவளை இந்த வீட்டுல யார் கேள்வி கேட்க முடியும்? நான் இப்படி செஞ்சிருந்தா அப்பா என்னை வெட்டிப் போட்டிருப்பாரு , இப்பப்பாரு வாயே தொறக்காம உக்காந்திருக்காரு” அகிலா பதிலேதும் பேசாமல் பாத்ரூமிற்குள் நுழைந்து தாழிட்டுக்கொண்டாள். வெளிச் சத்தம் கேட்காமல் இருக்க குழாயை திறந்து விட்டாள்.கொஞ்சம் ஆஸ்வாஸப்படுத்திக் கொண்டு வந்தவளை அப்பா பிடித்துக் கொண்டார். “ஏம்மா இன்னிக்கு ஆபீஸ்ல வேல ஜாஸ்தியா? இல்ல இந்த பெண் பாக்கற ஏற்பாடு பிடிக்கலயா? எதுவா இருந்தாலும் சொன்னாதானேம்மா தெரியும்?” பதில் பேசாது உடைமாற்ற சென்றாள். அம்மா “பாருங்க நீங்க கேக்கக் கேக்க எவ்வளவு திமிரா போறான்னு,எல்லாம் நீங்க குடுக்கற எடம்”அம்மாவின் அர்ச்சனை தொடர்ந்தது.உடைமாற்றியவள் ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்து டிவியை ஆன் செய்தாள். அதற்கு மேல் பொறுக்க முடியாதவராய் அப்பா “இதப் பாரும்மா உன் மனசுல உள்ளதச் சொல்லு , உனக்கு கல்யாணம் செஞ்சுக்க இஷ்டமில்லேன்னா நான் வற்புறுத்த மாட்டேன் பயப்படாமே விஷயத்தைச் சொல்லு”. அப்பாவின் பயம் என்ற வார்த்தை இவளுக்கு சிரிப்பை மூட்டியது. “நான் யாருக்கு ,ஏம்ப்பா பயப்படணும்?”என்றவளை இடை வெட்டினாள் அக்கா.”அவ ஏம்ப்பா பயப்படணும்? அவ என்ன என்னை மாதிரி மக்கா? படிச்சு வேலைக்குப் போறா , எக்கச்சக்க சம்பளம் வேற , போதாததுக்கு நீங்களும் அவள தலையில தூக்கி வெச்சு ஆடறீங்க!அவ எப்படி ஒருத்தனுக்கு அடங்கி குடும்பம் நடத்துவா? அதான் கல்யாணமே வேண்டாம்னு இருக்கா ,அது மட்டுமில்லடி ஒன் திமிருக்கு எந்தப் பயலும் ஒன்ன ஏறெடுத்தும் பாக்க மாட்டான்”என்று பொரிந்து தள்ளினாள்.அவள் பேசப்பேசவே ஒரு முடிவுக்கு வந்திருந்த அகிலா விடுவிடென்று தன் அறைக்குப் போய் அவளிடம் இருப்பதிலேயே அழகான சுடிதாரைத் தேர்ந்தெடுத்து அணிந்துகொண்டாள் , இலேசாக மேக்கப் போட்டுக்கொண்டாள்.

படீரென்று கதவைத்திறந்தவள் நேரே அக்காவிடம் போய் நின்றாள். “அக்கா தெரிஞ்சோ தெரியாமலோ என் வாழ்க்கையில ஒரு முக்கியமான முடிவு எடுக்க நீ காரணமாயிட்டே அதுக்கு ஒனக்கு தாங்க்ஸ் , நிச்சயமா நீ என்ன மாதிரி இல்ல , உன்னோட இருவத்திமூணாவது வயசுல ஒனக்கு கல்யணம் ஆச்சு ஆனா எனக்கு இப்போ வயசு முப்பது , அதைப் பத்தி என்னிக்காவது யொசிச்சிருக்கியா நீ ?எனக்கு மட்டும் உணர்ச்சிகளே இல்லன்னு நெனெச்சியா?”என்றவள் அப்பாவிடம் சென்று “இவ்வளவு நேரம் நீங்க எல்லாரும் பேசினது ஒத்திகை பாத்து அரங்கேறின நாடகமா இல்லையான்னு எனக்குத் தெரியாது , நான் நேத்தே உங்க சுயநலத்தைப் புரிஞ்சிக்கிட்டேன் , இனிமேயும் இந்தக் குடும்பத்துக்கு உழைக்க நான் தயாரா இல்ல ! என் வாழ்க்கைய நானே தேடிக்கறேன்” என்றாள். பதறிப்போன அப்பா ” யாருடி அவன் எந்த கஸ்மாலம் ,பொறம்போக்கு உன் மனசக் கெடுத்தது.கெட்டது மனசு மட்டும் தானா அல்லது எல்லாத்தையும் மொத்தமா விட்டுட்டியா? எத்தன நாளா நடக்குது இந்தக் கூத்து?” என்று அகிலாவின் முடியைக் கொத்தாகப் பிடித்தார். அவர் கையைத்தட்டிவிட்டு அவரைத் தள்ளி விட்டவள் “இன்னொரு வாட்டி என்மேல கை வெச்சீங்க நான் பேசாம இருக்கமாட்டேன் , என் ரத்தத்தை உறுஞ்சுற அட்டைப் பூச்சிங்க நீங்களா என்மேலயா கை வெக்கறீங்க ?ஒரு ஃபோன் போட்டேன் எல்லாரும் உள்ள போயிருவீங்க ஆமா! வழிய விடுங்க ” என்று ஆவேசம் வந்தவள் போல் வெளியே போக எத்தனித்தாள். அம்மா ” ஏண்டி இன்னேரத்துல எங்க போற? யாரப் பாக்கப் போற? சொல்லிட்டாவது போடி” என்றாள். “இந்த வீட்டுல நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல , இருந்தாலும் நான் எங்கே போறேன்னு தெரிஞ்சிக்க நீயாவது ஆசைப்பட்டியே அதனால சொல்றேன் , நான் எங்கூட வேலை பாக்குற பெங்காலி அரித்ரோ வீட்டுக்குத்தான் போறேன் , அவரத்தான் நான் கல்யாணம் செஞ்சுக்கப்போறேன் “என்று நிறுத்தி நிதானமாக சொன்னாள்.

” போடி போ! அவன் என்ன சாதியோ ?என்ன மதமோ?அவங்கூட நீ வாழ்ந்துடுவியா? ஆசையெல்லாம் அடங்குனதும் அவன் உன்னத் தள்ளி விட்டுருவான் அப்ப எங்களைத் தேடிக்கிட்டு நீ தானே வருவே! அப்ப தெரியும் உனக்கு அப்பா , அம்மாவோட அருமை”என்று சாபமிட்டாள் அம்மா, “உன் சாபம் என்னை ஒண்ணும் செய்யாதும்மா! தண்ணிக்குப் பயந்து கரையிலயே இருந்தா நீச்சல் எப்போ கத்துக்கறது? அதனால நான் வாழ்ந்து பாக்கப் போறேன்? நானா உங்களைத் தேடி வரமாட்டேன் ,நீங்க வேணும்னா என்னைத்தேடி வாங்க ” என்று படியிறங்கப் போனவளை அப்பாவின் குரல் தடுத்தது “அம்மா அகிலா ! மூடியிருந்த என் கண்களைத் தொறந்துட்டேம்மா நீ ஆசப் பட்ட பையனுக்கே உன்னைக் கட்டி வெக்கறேன் , இப்ப உள்ள வாம்மா “என்று தேனொழுகக் கூப்பிட்டார்.மனமாற்றத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே வாசலுக்கு வந்தவள் தூரத்தில் வீட்டு வாடகை வாங்க அண்ணாச்சி வருவதைப் பார்த்து விட்டு , புரிந்து கொண்டவள் அப்பாவைப்பார்த்து காறித்துப்பத்துடித்த மனதை அடக்கியபடி அரித்ரோ வீட்டுக்கு விரைந்தாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “அகிலா

  1. இந்த அகிலாகதையை படித்தாவது சில பெண்கள் மனம் மாறி தனக்கு என்று ஒரு வாழ்கையை அமைத்து கொள்ளட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *