பின்னல் இழைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 8,442 
 
சரியாக ராயபுரத்திற்குள் நுழையும்போது கரண்ட் கட்டானது. ஹோவென்று கத்தும் குழந்தைகளை கடக்கும்போது தோன்றியது… நாம் எப்போது கடந்தோம் இந்த பருவத்தை…எங்கு தவறவிட்டோம் இந்த உற்சாகத்தை… கரண்ட் வந்தாலும் போனாலும் இந்த சிறுவர்களின் உற்சாகத்தில் ஒரு துளியாவது போதும்… இந்த கரண்ட் இல்லாத புழுக்கத்திலும் நிம்மதியாய் உறங்கமுடியும் என்று தோன்றியது ரமேஷுக்கு. பழனிச்சாமி அண்ணன் கடையில் ஒரு மெழுகுவர்த்தியும், ஒரு கோல்ட் பிளேக் கிங்க்ஸ் பாக்கெட்டும் வாங்கி கொண்டான், விகடனும் ஒரு கோல்ட் பிளேக் கிங்க்ஸும் இருந்தால் கக்கூஸிலேயே கொஞ்சம் பொழுதை ஓட்டலாம், ஆனால் சில சமயம் எல்லாம் தயார் நிலையில் இருக்கும் போது தீப்பெட்டி கிடைக்காமல் அவதியாய் இருக்கும். என்ன நினைத்தானோ, திரும்பவும் கடைக்குச் சென்று ஒரு தீப்பெட்டியும் வாங்கிக் கொண்டான்.
மணி பத்தரை இருக்கும், இத்தனை இரவிலும் முழித்துக் கொண்டிருக்கிறது இந்த ஊர்… அதன் உற்சாகமும்… திருப்பூர், தூங்கா நகரம், நம்ம ஊரு பக்கம் மதுரை தான் தூங்கா நகரம்னு சொல்வாய்ங்க!. இங்கு அனேக வீடுகளில் பின்னலாடைத் தொழில் சம்பந்தமான ஏதோ ஒன்றை நம்பி தான் பொழப்பு ஓடிக்கொண்டிருக்கும். ராயபுரத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் இருக்கிறது கம்பெனியில் அவனுக்கு ஒதுக்கிய கெஸ்ட் ஹவுஸ்… தேனியில் இருக்கும் அவன் வீட்டை விட வசதியான அறைகள்… உட்காந்து போற மாதிரி கக்கூஸ்… போதுமான அளவு லைட், பேன், கட்டில் மெத்தைன்னு எல்லாம் வசதியாத்தான் இருக்கு… இதுக்கு முன்னாடி ஒரு ஜெனரேட்டரும் இருந்தது, அடிக்கடி கரண்ட் போவதால், டீசல் ஊத்தி கட்டுப்படியாகவில்லை என்று கம்பெனி நிறுத்தி விட்டது. இவனுடன் இந்த வீட்டில் இன்னும் இரண்டு பேர் தங்குகிறார்கள் தனகோபால் திருநெல்வேலி, பெருமாள்புரம்… இன்னொருத்தன் மலையாளி.. பாலகாட்டான்… பேரு வினய்… இவனை விட அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் இருவரும்… ஒருத்தன் கட்டிங் இன்சார்ஜ், இன்னொருத்தன் மெர்ச்சண்டைசர்… இவனுக்கு ரெண்டு மூணு வருஷம் சீனியராத்தான் இருப்பாங்க… இவன் வந்தே ஜூனோட அஞ்சு வருஷம் ஆகப்போகுது…
தேனி பாலிடெக்னிக்லயே டிப்ளமோ படிச்சுட்டு, அப்புறம் ஏஇபிசி மூலமா… ஆயத்த ஆடை தரக்கட்டுப்பாடு பட்டயப்படிப்பு முடிச்சதுக்கப்புறமா… இந்த கம்பெனில டிரெய்னியா சேர்ந்து க்யூசி ஆயாச்சு… இப்போ ரெண்டு வருஷமா க்யூசிதான். இந்த கம்பெனி பத்தி இவனோட சித்தப்பா தான் சொன்னாரு… அவரு இந்த கம்பெனிலதேனி, கம்பம், பெரியகுளம் சைடுல இருந்து சின்ன வயசுப்பிள்ளகள இது போல கம்பெனில சேத்து விடுவார்… இங்கே இருக்கிற திருமணத்திட்டம், சுமங்கலித்திட்டம், அணுக்கமா பேசி நிறைய பிள்ளகளா அங்க இருந்து கொண்டு வந்திருக்காரு… ஒரு பிள்ளைக்கு இவ்வளவு காசுன்னு நல்ல கமிஷன்… பிள்ளகட்ட இருந்தும் ஒரு மாச காசு வாங்கிகிடுவாரு… தேனில ரெண்டு வீடும், தோப்பும் வாங்கிட்டாரு… அவரு தான் இந்த கார்மெண்ட் டெக்னாலஜி மாதிரி ஏதாவது படிடீ… திருப்பூர்ல நமக்கு தெரிஞ்ச கம்பெனிலாம் இருக்கு, சேத்து விட்டுடுறேன்னு சொன்னார்… அதே மாதிரி… இப்ப இந்த கம்பெனில இருக்கேன்…
நூல் மில், சாயப்பட்டறை, எம்ப்ராய்டரி, பிரிண்டிங் எல்லாம் சொந்தமா இருக்கிறா மாதிரி பெரிய கம்பெனி இது… அஞ்சு கம்பெனி இருக்கு மொத்தமா.  இது ராஜஸ்தான்காரன் கம்பெனி… அவன் வர்றதே இல்லை…. இங்க… சில ஒர்க்கிங் பார்டனரா ரெண்டு மூனு உள்ளூர் கவுண்டர்கள வச்சு ஓட்டிக்கிட்டு இருக்காரு… அவிங்க சார்பா, மேற்பார்வை பார்க்க, கோள் சொல்ல, உளவு பார்க்கன்னு ஒரு வடக்கத்திக்காரன் முக்கியமான செக்‌ஷன்ல எல்லாம் இருப்பான்… பான் போட்டு துப்பிட்டு, தம்பக் போட்டு அதக்கிட்டு… அவனுங்க தமிழ் பேசுறத பார்க்கும் போது நல்லா கம்பிய காய வச்சு நாக்குல இழுக்கணுமுன்னு தோணும் என்ன பண்றது… நமக்கு மேல இருக்குறாய்ங்க பேசாம பொத்திட்டு அவிங்க முன்னாடி கொஞ்சம் கூழக்கும்பிடு போட்டு பொழப்பு ஓட்ட வேண்டியது தான்… இங்க வந்ததுக்கு பேசாம தேனிலயே… ரேணுகா மில்லுல வேலைக்கு சேந்திருக்கலாம்… ஆனா இவ்வளவு சம்பளம் கிடைக்காது… செலவு போக வீட்டுக்கு மூணு ரூவா அனுப்பமுடியுது… உன்னால தாம்ல ராசு வீட்ல மூணு வேளை நல்லா திங்கிறோம், உடுக்கிறோம் என்ற அம்மாவின் வார்த்தைகள், ரமேஷை வேறு ஒன்றையும் சிந்திக்க வைக்காது.
இன்னைக்கு வீட்டுக்கு சீக்கிரம் வந்து துணிமணியெல்லாம் தொவைக்கணும்னு நினைச்சு முடியாமப் போச்சு, போன ஞாயித்துக்கிழம தொவைக்கணும்னு நினைச்சதுலயும் மண் விழுந்து ஷிப்மெண்ட்…அது இதுன்னு வரச் சொல்லிட்டாய்ங்க… இன்னைக்கு… வாயேஜ் இருக்குன்னு, ஜம்ப் ஸ்டிச், ஷேட் வேரியேஷன்னு செக் பண்ற பீசுல எல்லாம் எல்லாக் குறையும் இருக்கிறா மாதிரி கதை பண்ணி சாவடிச்சிட்டான் இந்த பையர் க்யூசி நாய்… ரீசெக்கிங் வேற போட்டுட்டான்… ஒவ்வொரு ஷிப்மெண்டு போறத்துக்கும், அவன  உருவுனா தான் காரியம் ஆகுது… சொன்ன தேதில ஷிப்மெண்ட் அனுப்பலேன்னா… ஏர்ல தான் அனுப்பணும்… கடுக்கன் போட்ட முதலாளி அங்கிருந்து குதிப்பான், இங்க இருக்கிறவன் எல்லாம் நம்மளப் பிடிச்சு ஏறுவானுங்க… என்ன பொழப்புடே இது…  என்ன பண்றது பங்காளி அப்படித்தான், ஊர விட்டு வந்திருக்கோம்… இத்தனை ஓவாய் நம்ம ஊருல எவன் குடுப்பான் என்பான் கூட இருக்கும் தனகோபால்… இந்த பையர் க்யூசி பய கூட மதுரை திருமங்கலம் தாண்டி கல்லுப்பட்டி தான் சொந்தவூர்… ஆனா துரை தமிழே பேசமாட்டான்… இங்கிலீசு தான்… ரமேஷுக்கு அப்படியே பொசுபொசுன்னு வரும்… வேற வழியில்லாம, சிரிச்சுக்கிட்டே சமாளிப்பான். இன்னைக்கு அவங்கூட போய்த் தான் படையப்பால புரோட்டாவும், ஒரு வறுவலும் சாப்பிட்டான்… அவனுக்கும் சேத்து இவன் தான் காசு கொடுத்தான்… அவன் முன்னாடி சிகரெட் பிடிக்கறதில்லை… இல்லேன்னா அதுவும் நம்ம தான் வாங்கணும் வீட்டுக்கு போயி பாத்துக்கலாம்னு விட்டுட்டான்.
வீட்டுக்கு வந்தா கரண்ட் இல்லை, தனகோபாலும், வினய்யும்… ஒரு ஆர்சி… வாங்கி வச்சுட்டு, மசால்கடலை, மிக்சர்னு மொட்டமாடில உக்காந்து தண்ணியடிச்சுட்டு இருப்பாய்ங்க போல! மாடிக்கு போற கதவு திறந்து இருந்தது… வாரத்துல நாலு முறையாவது வழக்கம் மாறாம இதே லாகிரி வஸ்துகள் தான் அவிங்களுக்கு… ஏதோ பேசுவானுங்க சிரிப்பானுங்க, அதும் ஹிந்தில… ஒரு எழவும் புரியாது நமக்கு… பாதி நேரம் நம்மளப் பார்த்து சிரிக்கிறா மாதிரி இருக்கும்… மாடிக்கு போகலாம் என்று முன் கதவை சாத்திவிட்டு… தன் அறைக்கு சென்று லுங்கியை மாற்றிக் கொண்டான்.  கையில் சிகரெட் பாக்கெட்டும் தீப்பெட்டி எடுக்க நினைத்தவன், மேலேயிருந்து சிகரெட் வாடை வருவது கண்டு தீப்பெட்டி மேலேயே இருக்கக்கூடுமென்று, ஒரு கையில் லுங்கியை தூக்கிக் கட்டிக்கொண்டு மேலே ஏறினான். வினய், தனகோபாலுடன் இன்று இன்னுமொருவர் இருந்தார். வாடா… இப்பதான் வருதா… என்றான் வினய்.  பாஸ்! இது தான் நம்ம ரூம் மேட், பிரண்ட் அப்புறம் கலீக் ரமேஷ் என்று குளறிக் கொண்டே பேசினான்
அவன் அறிமுகப்படுத்தியவரை ஏற்கனவே எங்கோ பார்த்தது போல இருந்தது, ஒல்லியாய் இருந்தார். ஒரு வெள்ளை சட்டை முன் பட்டன்கள் திறந்திருந்தது… நெஞ்சு மத்தியில் மட்டும் மயிர் இருந்ததாய் பட்டது… ஏதோ ஒரு டார்க் கலரில் பேண்ட் அணிந்திருந்தார்… ஏற்றி வாரிய முடியும், சரியாய் கத்தரித்த மீசையும், மேடேறி சரிந்த மூக்கும், அதன் மேல் கண்ணாடியும், உள் குவிந்த இடுங்கிய கண்களும் அவரை கொஞ்சம் கொக்கரக்கோ படத்தின் கதா நாயகன் போல காட்டியது, நிலா மட்டுமே இருந்த குறைந்த வெளிச்சத்தில் இவ்வளவு தான் தெரிந்தது.  இடது கையை ஊன்றி எழுந்து ரமேஷுடன் கை குலுக்க நினைத்தவர், முடியாமல் உட்கார்ந்த மாதிரியே… சாரி பாஸ் என்று கை குடுத்தார்… ரொம்ப சூடா இருந்தது அவரின் கை… உள்ளங்கை மெத்தென சதைப்பற்றாய் இருந்தது.  சுண்டு விரலில் இருந்த ஈரம் இவன் கையில் விட்டவர், பாஸ் சாப்பிடுங்க பாஸ்! என்று… இன்றைக்கு வழக்கத்திற்கு மாறாய்… மான்சன் ஹவுஸும், ஒல்ட் காஸ்க்கும், வறுத்த முந்திரிகளும் இருந்தது, மசாலாக்கடலையுடன்… புதிதாய் இருந்த பாஸின் கைங்கர்யம் என்று ரமேஷுக்கு தெளிவாய் தெரிந்தது.
தனகோபால் தான் அவரை அறிமுகப்படுத்த எத்தனித்தான்… பங்காளி இவர் பேரு முரளிடா… சொந்தமா ஒரு கம்பெனி வச்சிருக்காரு… சின்னது தான்… மிடில் ஈஸ்டுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் எக்ஸ்போர்ட் பன்றாரு… யூ எஸ் டொமஸ்டிக் ஆர்டரும் சின்ன லெவல்ல பன்றாரு… இப்போ இவருக்கு டைரக்ட் ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறாரு… அதான் நம்ம வினய்க்கு கொஞ்சம் பேர யூ எஸ் பையிங் ஆபிஸ்ல தெரியும்ல அதான் யாரோ சொல்லி பாக்க வந்தாரு… அப்படியே சரக்கு அடிப்பீங்களான்னு கேட்டு அவரே வாங்கிட்டு வந்துட்டாரு… ரமேஷுக்கு புரிந்து போயிற்று… இன்னைக்கு முரளி மாட்டிக்கிட்டாரு போல என்று நினைத்துக் கொண்டு, எனக்கு ஏதும் வேணாம் நான் ஏற்கனவே சரவணன் கூட போயி படையப்பால சாப்பிட்டுட்டு…தள்ளுவண்டில பழம் வாங்கி சாப்பிட்டுட்டு தான் வர்றேன், இனி என்னால ஏதும் முடியாது ஒரு சிகரெட் மட்டும் போதும், என்று அங்கு விரித்திருந்த பாயில் படுத்துக் கொண்டே சிகரெட் பிடிக்க ஆரம்பித்தான்… கொசு அதிகம் இருப்பதாய்ப் பட்டது… ஆனாலும் கரெண்ட் வர்ற வரை வீட்டுக்குள்ள போக முடியாது என்று வானத்தையும் நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். சப்தரிஷி மண்டலம்…
நிறைய நேரம் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டதும், சிரித்துக் கொண்டிருந்ததும் கேட்டது, இடையிடையே ரம்யாகிருஷ்ணன், சினேகா என்றும் சரவணா ஸ்டோர்ஸ் என்றும் ஏதோ சொல்லக்கேட்டது… ரமேஷிற்கு… யாரோ காலால் நெட்டித்தள்ளுவது தெரிந்தது… கட்டியிருந்த லுங்கிய இழுத்து போர்த்தியிருந்தது விலகிக் கிடந்தது… டேய்! எழுந்திருடா… என்று உதைக்க பதறிக்கொண்டு எழுந்தவன்… கீழே நழுவிய லுங்கியை இழுத்துபிடித்துக் கொண்டு நின்றான்… யார் நீங்க என்ன வேணும் என்று கேட்டான், வந்தவர்… லைட் கலர் சர்ட்டும், காக்கி கலர் பேண்டும் அணிந்திருந்தார்… நன்கு வளர்ந்த புருவமும் அவரின் மீசை போலவே முறுக்கிக் கொண்டு நின்றது… சுத்தி பார்த்த போது இறைந்து கிடந்த முந்திரி பருப்பும், மசால்க்கடலையும் ஏதோ  நடந்ததன் அறிகுறி மாதிரி தெரிந்தது… பாட்டில்களும், உடைந்த மண்சட்டியில் நசுக்கிய எரிந்த புழுக்களாய் சிகரெட் துண்டுகளும் பாயில் கொட்டிக் கிடந்தது.  வாடா ஸ்டேஷனுக்கு என்று லுங்கியோடு இழுத்தார் வந்திருந்தவர்… முழுதும் நரைந்திருந்தவர், இன்னும் பணியில் இருக்கும் ஆச்சரியத்தை காட்டாது, என்னாச்சு சார், எங்க வரணும் என்ற போது, பேண்ட் இருக்கா… போட்டுட்டு வா சொல்றேன் என்றார்.
ரமேஷுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது குளிரிலா, அல்லது பயத்திலா என்று தெரியவில்லை…கீழே இறங்கி பேண்ட்டை போட்டுக் கொண்டு அவருடன் கிளம்பினான்… ராயபுரம் போலீஸ் ஸ்டேஷன் நெருங்கிய போது பயம் பிடித்துக் கொண்டது… குடிச்சுட்டு ஏதும் கலாட்டா பண்ணிட்டாங்களா… அல்லது சாப்பிடபோற போது ஏதாவது தகராறா என்னவென்று தெரியவில்லை… அந்த முரளிய எங்க பாத்திருக்கோம் என்று மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது ரமேஷுக்கு… ஸ்டேஷனின் முன்னால் இருந்த பெஞ்சில் உட்காரச் சொன்னார்… ரமேஷ் உட்கார்ந்து கொண்டான்… ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது… தனபாலும், வினய் மட்டுமே இருந்தார்கள்… யார்யாரோ வந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்… ஒரு லுங்கி கட்டிய ஆள்… அய்யா… நாயில்லீங்க அய்யா அது… ஏலே உட்காருலே…பேசிக்கிட்டே இருந்த லத்தில அடிக்கிற அடியில கொட்டய தொண்டைக்கு ஏத்திப்புடுவேன் ஏத்தி… சூத்தப் பொத்திக்கிட்டு ஒக்காருலே…தெரியாமத்தான் வந்திருக்கமா சோலிக்கு… போய் சொன்ன எடத்தில ஒக்காருலே…
ரமேஷுக்கு தாங்கமுடியல… மூத்திரம் வேற முட்டிக்கிட்டு நிக்குறா மாதிரியிருக்கு… இவிங்க என்னத்த்துக்கு இங்க ஒக்காந்திருக்காய்ங்க… கூட இருந்த ஆளையும் காங்கலே… கொல கில பண்ணிட்டாய்ங்களோ ஏதாவது தகராறு ஆயி… மணி எத்தனை இருக்கும்… ஜன்னலில் எட்டிப் பார்க்க, அதிகாலை மூணு நாப்பது… நம்ம இதுல மாட்டிக்கிட்டா… என்ன பண்றது… அய்யோ நம்ம ஆத்தாவையும், தங்கச்சியையும் யாரு பாத்துப்பா… நாம தான் குடிக்கவே இல்லையே… இவங்க வர்றதுக்கு முன்னாலேயே தூங்கிப்பிட்டோம்னு சொல்லிப்பாக்கலாம் என்று ஏதேதோ தோன்றுகிறது ரமேஷுக்கு… உள்ளே மூணு பட்டை பெரிய ஏட்டு… அவர்களிடம் ஏதோ பேசுவது போல கேட்டது… என்ன என்று தெரியவில்லை… இங்க பாத்து தான் கைய ஆட்டி ஆட்டி பேசுறாரு… பயத்துல அடிவயிறு இன்னும் முட்டியது… அந்த ஏட்டு வெளியே வந்தார்… ஏலேய்.. நீதான் இவனுங்க கூட்டாளியா… ஆமா இல்லை என்று மாத்தி மாத்தி தலையாட்டினான் ரமேஷு… ஒழுங்காச் சொல்லுலே… இல்ல ஒன்னையும் தூக்கி உள்ள வைக்கவா என்று மிரட்ட… ரொம்பவும் பயந்து போனான் ரமேஷ். அழுகை வரமாதிரி ஆகிவிட்டது அவனுக்கு.
எச்சிக்கூட்டி முழுங்கி, ஆமா என்று தலையும் ஆட்டினான்… கையில காசு எவ்வள வச்சிருக்க… தடவி தடவி பார்க்க பேண்ட் பாக்கெட்டில் மிஞ்சிய ஒரு நானூறு சில்லறை இருந்தது… நானூறு என்று சொன்ன ரமேஷிடம்… ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து இவனுங்கள் கூட்டிட்டு போ… என்றார். கையில அவ்வளவு இல்லைன்னு சொல்ல, யாரையாவது வந்து கொடுக்க சொல்லு… இதுவரைக்கும் என்ன செஞ்சாங்கன்னு சொல்லல… திடீரென்று என்ன நினைத்தாரோ… கொண்டா இருக்கிறத… வந்து ஒரு கையெழுத்துப்போட்டு கொடுத்துட்டு கூட்டிட்டு போ… என்றார். ஏதும் தீவிரமாய் இருக்க வாய்ப்பில்லை என்று நம்பிக்கை வந்தது ரமேஷுக்கு, இங்கிருந்து போனாப்போதும் என்று எங்க காட்டினாரோ அங்க கையெழுத்துப் போட்டுட்டு வெளியே வந்துவிட்டான்.
ரெண்டு பேரும் துணிய ஒழுங்கா மாட்டிட்டு, தலைய கோதிவிட்டுட்டு வெளியே வந்தானுங்க… வீட்டுக்கு கூட்டிட்டு வரும்போது தெரிந்தது அன்றைக்கு மஹாவீர் ஜெயந்தி என்று! அன்று முழுதும் மதுவிலக்காம்.  இவனுங்களுக்கு சரக்கு தீர்ந்தவுடன்… ஏதோ ஹைவே தாபால போய் இன்னும் சரக்கு வாங்கி அடிச்சிருக்காங்க… ரெய்டு வந்து பிடிச்சுட்டு போயிட்டாங்க… அந்த ஆளு எங்க என்று கேட்ட ரமேஷிடம்… அந்த ஆள் ஐநூறு கொடுத்துட்டு எஸ்கேப் ஆயிட்டான்…பங்காளி! சரக்கு வாங்கி கொடுத்தவன் ஜாமீனும் கொடுப்பானா.. என்று சிரித்தான் தனகோபால்… எங்களுக்கு ஜாமீன் கொடுக்கத்தான் ஒன்னைய கூப்பிட்டு வரச்சொல்லி அட்ரஸும், சாவியும் கொடுத்து அனுப்பினோம் என்ற போது, இந்த போலீஸ்காரரு ரொம்ப நல்லவரு…அதான்… வீட்டுக்கு வந்து ஒன்ன கூப்பிட்டு வந்திருக்காரு…என்று சிரித்துக் கொண்டே சொல்லியவனை ரமேஷ் முறைத்துக் கொண்டிருந்தான்.
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *