பாவத்தை அனுபவிப்பாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 10,118 
 

பகுதி – 1

ராமநாதனும் தேவதாஸும் நண்பர்கள்.

இருவருமே ஏழை என்றாலும் இணைபிரியாமல் ஒருவருக்கொருவர் அனுசரணையாக வாழ்ந்துவந்தார்கள்.ஏழ்மையைப் பங்கிட்டுக்கொண்டு கண்ணீரைப்பகிர்ந்துகொண்டு ஒற்றுமையுடன் இரு குடும்பங்களும் வாழ்ந்துவந்தாலும் இருவரது வியாபாரமுமே மிக மோசமாகப் படுத்துவிட்டதால் அடுத்த வேளைச் சோற்றுக்கு வழி என்ன என்பதை அறியாமல் தவித்த வேளையில் அஹமத் நகரில் துணி ஆலை ஒன்றில் கூலிப்பணிக்கு ஆள் எடுப்பதாக அறிந்து அங்கும் இங்கும் கொஞ்சம் கடன் வாங்கிக்கொண்டு இருவரும் ரயிலேறினார்கள்.

மனைவிகள் முடிந்த வேலையைச் செய்து சில நாட்கள் சமாளிக்கவேண்டும் என்றும் வேலையில் சேர்ந்து முதல் மாதச் சம்பளத்தை அனுப்பிவைப்பதாகச் சொல்லி இருவருமே தம் மனைவியரை சமாதானப்படுத்தினார்கள். அதிகம் படித்திராத காரணத்தால் கிடைத்த வேலையைச் செய்வது என்னும் முடிவுடன் புறப்பட்டுச் சென்றனர்.

ராமநாதனுக்கு இரு பெண்குழந்தைகள். ஆறு வயதும் நான்கு வயதுமாக.

தேவதாஸுக்கு குழந்தையே பிறக்கவில்லை. ஐந்து வருடங்கள் தானே ஆகிறது காத்திருக்கலாம் என்று பொறுமையுடன் காத்திருந்தார்கள்.

அஹமத் நகர் சென்றதும் இருவரும் ஒற்றுமையாகவே ஒரே அறையில் தங்கி ஆறாயிரம் ரூபாயில் கிடைத்த வேஸ்டிங் பிரிவில் துணிகளின் கழிதல்களை வகைப்படுத்தும் வேலையில் சேர்ந்து கருத்துடன் பணி செய்துவந்தார்கள்.

நாட்கள் போயின. கண்மூடித்திறப்பதற்குள் ஆறுமாதம் போய்ச் சேர்ந்தது.
ஆறுமாதங்களின் உழைப்பில் எந்த சேமிப்பும் செய்ய இயலவில்லை இருவராலும். சிக்கனமாக சமைத்துச் சாப்பிட்டும் அவசியமற்ற செலவுகளைக் குறைத்தும் வீட்டுக்கு செலவுக்கு மனைவிமார்களுக்கு அனுப்பியும் கிடைத்த வசதியில் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்.

என்றாவது அவர்கள் வறுமை தீரும் என்னும் நம்பிக்கை மட்டும் இருவரிடமும் மாறாமல் இருந்தது.

இப்படியாகச் சென்றுகொண்டிருந்த காலத்தில் ஒருநாள்..

இருவரும் அன்று கொஞ்சம் மிச்சம் இருந்த பணிகளை முடித்துவிட்டு அருகில் இருந்த டாய்லட்டுக்குக் சென்றனர். அந்த கோடவுனில் வேலை செய்த 12 பேரில் பத்துபேர் சென்றுவிட்டதால் இருவர் மட்டுமே இருந்தனர்.டாய்லட்டில் இருந்து இருவரும் வெளியே வர முயற்சிக்கும் போது அந்த கோடவுனில் யாருமே இல்லாமல் வெறிச்சோடி இருந்தாலும் அதை ஒட்டி இருந்த சிறு குப்பைஅறைக்குப்பக்கத்தில் இருவர் பேசுவது கேட்டது. பேச்சு ஒரு மாதிரியாகப்போகவே ராமநாதனும் தேவதாசும் டாய்லட்டின் ஒருக்களித்த கதவருகில் நின்று கேட்டனர்.

அமைதியாக இருந்த கோடவுன் கூடத்தில் அந்த இருவரும் பேசியது துல்லியமாகக் கேட்டது. குரல்களை வைத்து அவர்கள் யாரென்று புரிந்துகொள்ள முடிந்தது இருவராலும்.

ஒருவர் அந்த மில்லின் முதலாளி. இன்னொருவர் அந்த மில்லின் சீனியர் மேனேஜர்.

‘’ ஓம் பிரகாஷ்.. இங்கே வைப்பது யாருக்கும் தெரியாதல்லவா..? ‘’

’’ கண்டிப்பாக தெரியாது சாஹப். இந்த பகுதிக்கு யாரும் வருவது இல்லை. இங்கே குப்பைகளும் எதற்கும் தேறாத வேஸ்டும் இருப்பதால் இங்கே ஒளித்துவைத்தால் யாருக்கும் தெரியாது. அதுவும் நாளை ஒரு நாளைக்கு தானே.. நாளை இன்கம் டாக்ஸ் ரெய்ட் முடிந்ததும் எடுத்து அப்புறப்படுத்திவிடலாம்.’’

‘’ இங்கே இருக்கும் குப்பைகளை அள்ளும் மாங்கேலால் என்னைக்கு வருவான்..? யோசிச்சிக்கோ.. அவன் கையில் கிடைத்துவிடப்போகிறது.. உன் யோசனையை நம்பித்தான் இதற்கு ஒத்துக்கொள்கிறேன்..ம்ம் .. சீக்கிரம் ஆகட்டும்..’’

‘’ இல்லை சாஹப்.. மாங்கே லால் வருவது சனிக்கிழமைதான். அதற்கு இன்னும் நாலு நாள் இருக்கு. மேலும் இந்த கறுப்பு பாலிதீன் பை குப்பைக்காக பயன்படுத்தும் கட்டிப்பை. இதில் இருப்பது குப்பை என்றே இங்கே இருப்பவருக்குத் தோன்றும். எனவே பயமில்லை. நாளை இரவில் எடுத்துக்கொள்ளலாம்..’’

சிறிது நேரத்தில் அவர்கள் வெளியேறிச்செல்வதும் அங்கே அடுத்திருந்த காவலாளியுடன் ஏதோ பேசுவதும் நாமநாதனுக்கும் தேவதாஸுக்கும் புரியவந்தது .

மெல்ல வெளியில் வந்த இருவரும் முதலாளியும் மேனேஜரும் பேசிக்கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர். அங்கே குப்பை மலைகளுக்கு இடையில் அலட்சியமாக இடப்பட்டு இருந்த கருப்புப்பாலிதீன் பையைத் திறந்து பார்த்தவர்களுக்கு தாங்க முடியாத அதிர்ச்சி..!

பகுதி – 2

கருப்பு நிற பாலிதீன்பைக்குள் கற்றை கற்றையாய் ஆயிரம் ரூபாய் நோட்டுக் கற்றைகள். இருவருக்கும் அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் போலிருந்தது. இத்தனை நிறைய பணத்தை ஒருசேரக்கண்டதே இல்லை அல்லவா..?

சட்டென்று சமனத்திற்கு வந்தவன் தேவதாஸ் தான்.

’’டேய் ராமநாதா.. இது நமக்கு அதிருஷ்ட தேவதை கொடுத்த செல்வம். கிட்டத்தட்ட நாலு கோடி ரூபாய் தேறும் போலிருக்கு. இதை நாம கொண்டுபோயிட்டா யாருக்கும் தெரியப்போறதும் இல்லை. திருடனுக்கு தேள்கொட்டினதைப்போல முதலாளியும் சும்மா இருந்துடுவான். அல்லது மேனேஜரை சந்தேகப்படுவான். நாம இங்கு இருந்தது யாருக்கும் தெரியாது. இதை உன் பேக்கிலும் என் பேக்கிலும் வைச்சு போயிடுவோம். வா சீக்கிரம்.. எடு.. ‘’

‘’ இது தப்பிலையா..? எவருடைய பணமோ இது.. நாம கொண்டுபோவது சரியா..? ‘’ ராமநாதன் தயங்கினான்.

‘’ இல்லடா.. இது திருட்டுத்தனமா சம்பாதிச்சது, நேர்மையா சம்பாதிச்சி இருந்தா இதை கணக்குல காட்ட என்னதயக்கம்..? யோசிக்க நேரமில்லை.. இருட்டி இருக்கு.. வா சீக்கிரம்..’’

முழுமனதில்லை என்றாலும் ஏழ்மையும் வறுமையும் ராமநாதனை சம்மதிக்கவைத்தது.

அந்த பணத்தை இரண்டு பேருடைய தோல் பைகளிலும் திணித்துக்கொண்டு மிச்சம் இருந்ததை பேண்ட் சுற்றிலும் இடுப்பில் செருகிக்கொண்டு வெளியேறினார்கள்.

கேட்டில் இருந்த வாட்ச்மேன் யாரும் இல்லை என்னும் அசிரத்தையால் ஏதோ இந்திப்பாடலை முனகிக்கொண்டு பீடியின் சுவையில் மெய்மறந்து இருந்தான்.

அந்த கோடவுனுக்கு மெயின் கேட் மட்டுமே இருந்தது என்பதாலும் சுற்றிலும் காம்பவண்டு சுவர்கள் மிக உயரத்தில் இருந்ததாலும் இவர்கள் மெல்ல வெளியேறி வாட்ச்மேன் அசந்த நேரத்தில் நழுவிவிட்டார்கள்.

வெளியிலிருந்து யாரும் வராததாலும் உள்ளே இருந்து யாரும் வருவதை எதிர்பாராததாலும் வாட்ச்மேன் அசிரத்தையாக இருந்ததால் இவர்கள் வெளியேறியதைக் கண்காணிக்க இயலவில்லை.

எல்லாவற்றிலும் அதிருஷ்டம் இவர்கள் பக்கம் இருந்ததால் அறைக்கு வந்து பணத்தை எண்ணிப்பார்க்கும் போது அது ஐந்து கோடி ரூபாய் ஆக இருந்ததைக் கண்டு அசந்துவிட்டார்கள்.

ஆனால்தேவதாஸ் தெளிவாக இருந்தான்.

” ராமநாதா.. இந்த பணம் நாம ரெண்டு பேருக்கும் கடவுள் கொடுத்தது. இதில் ரெண்டரைக்கோடி உன்னுடைய பணம். ரெண்டரைக்கோடி என்னுடையது. நாம பங்கிட்டு சந்தோஷமா இருக்கலாம். ஆனா இதை உடனே செய்யக்கூடாது. இப்போ நம் கிட்ட பணம் இருக்குன்னு காட்டிக்கிட்டா சந்தேகம் நம்ம மேல வரும். மாட்டிக்கிடுவோம். அதனால ஒருமூனு மாசம் ஆறுமாசம் இப்படியே இருப்போம். எல்லா அமளியும் அடங்கினப்பறம் நாம நம்ம ஊருக்கே போய் செட்டில் ஆகிடலாம்.. என்ன சொல்றே..? ”

ராமநாதனுக்கு பரபரப்பாகவும் அதே சமயம் பயமாகவும் இருந்தாலும் இவன் சொல்வது சரி என்றே பட்டது.

பணத்தை தம் அறையில் டிரங்குப்பெட்டியில் துணிகளுக்கு அடியில் வைத்து பூட்டி சாவிகளை ஆளுக்கொன்றாய் பத்திரமாக சூட்கேசில் போட்டுவைத்தார்கள்.

மறுநாள் வழக்கம் போல் வேலைக்கும் போனார்கள். தேவதாஸ் இயல்பாக இருந்தாலும் ராமநாதனுக்கு மட்டும் உள்ளுக்குள் பயம் இருந்துகொண்டே இருந்தது. இருப்பினும் வேலையில் கவனமாக இருப்பது போல் இருந்தான். அன்று எந்த பரபரப்பும் நிகழவே இல்லை.

மறுநாள் வேலைக்குச் சென்றபோது அங்கே முதலாளியும் மேனேஜரும் பேயறைந்தது போல் இருந்ததையும் யாரிடமும் ஒன்றும் விசாரிக்காமல் வேலை செய்யும் நபர்களையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது தமக்குல் சன்னமாகப் பேசிக்கொள்ளவும் செய்தார்கள்.

ராமநாதனும் தேவதாஸும் யாருக்கும் ஐயம் வராத வகையில் ஆளுக்கொரு மூலையில் வழக்கமாக பணிகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.

நீண்ட நேரம் கவனித்தும் எந்த மாறுதல்களையும் கவனிக்காத முதலாளியும் மேனேஜரும் யாரெல்லாம் நேத்து லீவு என்று கேஷுவலாக விசாரித்தபோது எவருமே நேற்று விடுப்பு எடுக்கவில்லை என்று அறிந்ததும் இன்னும் முகம் இருண்டு போயிருந்தது.

அன்றைய பொழுதுக்கும் ராமநாதனும் தேவதாஸும் பணி நேரத்தில் பேசிக்கொள்ளாமல் வழக்கம் போல லஞ்ச் டைமில் மட்டும் சேர்ந்து சாப்பிட்டார்கள். லஞ்ச் நேரத்திலும் முதலாளியும் மேனேஜரும் சுற்றி சுற்றி வந்து அனைவருடைய பேச்சுகளையும் கவனிக்காதது போல் கவனிக்கவும் செய்தார்கள்.

முதலாளி எதுவோ கோபமாக மேனேஜரிடம் பேசுவது தெரிந்தாலும் இவர்கள் இயல்பாகவே இருந்தார்கள்.

எவரிடமும் வாய் திறந்து கேட்கவும் இயலாமல் போலீசுக்கும் போக இயலாமல் தேவதாஸ் நினைத்தது போலவே திருடனுக்கு தேள்கொட்டியது போலவே இருந்தார்கள்.

இதைப்போல சில நாட்கள் தொடர்ந்து நடந்தது.

எந்த வித முகபாவனையிலும் ராமநாதனும் தேவதாஸும் தம் பதட்டத்தைக் காட்டிக்கொள்ளாத தால் இருவர் மேலும் ஐயம் வர வாய்ப்பில்லாமல் போனது. மேலும் இருவரும் புதிய தொழிலாளிகள் என்பதால் இவர்களுக்கு ஒன்றும் தெரிந்திருகக் வாய்ப்பில்லை என்பது போல் முதலாளி இருந்துவிட்டார். அவரது ஐயம் இப்போது மேனேஜர் மேல் தாவி இருந்தது.

எது நடந்தாலும் அமைதியாய் இருப்பது என்றே ராமநாதனும் தேவதாஸும் காலத்தைக் கழித்தார்கள்.

பகுதி – 3

சில நாட்கள் பரபரப்புக்குப் பிறகு முதலாளி தேற்றிக்கொண்டார் போலத்தான் தோன்றியது இருவருக்கும்.

இருப்பினும் உடனடியாக எதுவும் செய்யலாகாது என்பதைத் தீர்மான*மாகக்கொண்டு வழக்கம் போலவே ஏழ்மையையும் காட்டிக்கொண்டனர்.அங்கு பணிபுரியும் 12 பேரையுமே ரகசியமாக முதலாளி நோட்டம் விட்டுக்கொண்டிருப்பதாகவே இருவருக்கும் தோன்றியது. அடை இதனால் இயல்பாகவே காட்டிக்கொண்டனர்.

ஆயிற்று..மேலும் ஒரு ஆறுமாத காலம் ஓடிற்று. இடையில் இருவரும் நள்ளிரவு நேரத்தில் ட்ரங்க் பெட்டியைத்திறந்து பணம் பத்திரமாக இருக்கிறதா என்று சோதித்துக்கொண்டனர். அப்போதெல்லாம் உணர்ச்சிக்குவியல் எதுவும் அதிகம் காட்டாமல் ராமநாதன் இருந்தாலும் தேவதாஸ் மட்டும் அந்த பணத்தை ஆசையுடன் தடவிக்கொண்டிருந்தான். ஆஹா .. இரண்டரைக்கோடி.. வாழ்நாள் முழுக்க சம்பாதிக்க முயன்றாலும் இத்தனை பணத்தை கண்ணில் பார்க்க முடியாது. ஐந்து கோடியும் நம்முடையதாய் இருந்தாலும் நல்லதாகத்தான் இருக்கும்.. ஆனால் ராமநாதனும் கூட இருந்து தொலைச்சுட்டானே.. இப்படிஎல்லாம் தேவதாஸின் மனம் விகாரமடைந்துகொண்டே இருந்தது. ( விகாரம் = வேறுபாடு ) இன்னொரு விபரீதமான திட்டம் ஒன்றும் தேவதாஸின் மனதில் உருவாகத் தொடங்கி இருந்தது.

அவர்கள் அஹமத் நகர் சென்று ஒருவருடம் ஆகிவிட்டது. பணம் கையில் கிடைத்து ஆறுமாதம் ஆகிவிட்டது. இந்த ஆறுமாதத்தில் அந்த பணத்தை செலவு செய்து சந்தோஷமாக இருக்க மனம் பரபரத்தது. தேவதாஸ் கனவுலகில் மிதந்தான். ராமநாதனுக்கு மட்டும் உள்ளூர ஒரு பயமும் நடுக்கமும் இருந்துகொண்டே இருந்தது.

இனியும் அந்த பணத்தை அனுபவிக்காமல் இருப்பது அந்த அதிருஷ்ட தேவதைக்கு செய்யும் அநியாயம் என்பதாக உணர்ந்த தேவதாஸ் ராமநாதனிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தான்.

” ராமநாதா.. இன்னும் நாம் ஏண்டா இந்த அழுக்கு ஃபேக்டரில குப்பை பொறுக்கிக்கிட்டு இருக்கனும். இப்ப நாம கோடீஸ்வரர்கள். நாம அனுபவிக்க வேண்டாமா..? ”

” என்ன செய்யலாம் நீயே சொல்லுடா.. எனக்கு ஒன்னும் புரியல. ஒரு பயம் இருந்துகிட்டே இருக்குடா.. ” என்றான் ராமநாதன்.

” நாம ஊர்விட்டு வந்து ஒருவருடம் ஆயிடுச்சு… ஊருக்கு போகனும்னு சொல்லி 15 நாள் லீவு எடுத்துக்கிட்டு போயிடலாம்டா.. ”

” அதுக்குப்பிற*கு..? ஏன் வேலைக்கு வரலன்னு முதலாளி யோசிக்கமாட்டானா..? தேடமாட்டானா..? ”

” அதுக்கும் ப்ளான் இருக்குடா.. போனபின் நமக்கு உடம்பு சரியில்லை. வேலைக்கு வரமுடியலை.. விவசாயம் பாத்துக்கிட்டு ஊரிலேயே இருக்கலாம்னு நினைக்கிறோம்னு ஒரு கடுதாசி போட்டா போச்சு.”

” அது நல்ல ஐடியாதான்.. நம்மை சந்தேகப்பட்டு முதலாளி ஊருக்கு தேடிவந்து பார்த்தா..? ”

” போடா லூசு… நாம என்ன ஊரிலேயா இருக்கப்போறோம்.. மெட்ராஸுக்கு போய் அங்க எங்காவது கடை கண்ணி போட்டு செட்டில் ஆகவேண்டியதுதான்.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நீ வீணா யோசிக்காதே.. வா இன்னைக்கு லீவு லட்டர் கொடுத்துடலாம்.. ”

அவர்கள் பேசிய படி லீவு லட்டரை நீட்டியபோது புது மேனேஜர் ( பழைய மேனேஜரை சில மாதமாக காணவில்லை ) லீவு நான் சான்க்ஷன் செய்ய முடியாது.. யாரு ரொம்ப நாள் லீவு கேட்டாலும் முதலாளி தன்னை வந்து பாக்கும்படி சொல்லி இருக்காரு.. நீங்க முதலாளிகிட்ட போய் பேசிக்கோங்க என்று கூறிவிட்டான்.

பகுதி – 4

முதலாளியிடம் போனபோது அவர் இந்த இருவரையும் ஏற இறங்கப்பார்த்துவிட்டு எப்போ ஜாயின் செய்தீங்க என்று கேட்டார்.

” போனவருஷ*ம் .. ஒன்னாத்தான் சேர்ந்தோம் சாஹேப்.. ” தேவதாஸ் கூறினான்.

” ம்ம்ம்..எப்போ திரும்புவீங்க..? ” உற்று நோக்கியபடி கேட்டார் முதலாளி.

” அதிகபட்சம் 20 நாள் தான் முதலாளி..”

” சரி சரி… முழு முகவரி போன் நம்பர் எல்லாம் குறிச்சு கொடுத்துட்டு போங்க..இருபது நாளைக்கு தான் லீவு சாங்ஷன் செய்றேன்.. அதுக்கு மேல போனா அந்த லீவுக்கு சம்பளம் கிடையாது.. சரியா..? ” என்று கூறி அவர்களை அனுப்பிவீட்டார்.அவர்களது விடுப்புக்கடிதத்தை கையெழுத்திட்டுக் கொடுத்து மானேஜரிடம் கொடுக்கச்சொல்லி கடித நகலைத்தந்து அனுப்ப மறக்கவில்லை.

பிறகு மானேஜரிடம் சென்று அந்த கடித நகலைக்கொடுத்து அவர்கள் பொறுப்பில் இருந்த வேஸ்ட் துணிகளின் கணக்கையும் ஒப்படைத்தனர். பிறகு விட்டால் போதும் என்னும் பரபரப்புடன் அந்த மில்லை விட்டு வெளியேறினர் இருவரும்.

மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வெளியில் வந்த இருவரும் உற்சாகமாக கடைகளுக்குச் சென்று கவனமாக அதிக ஆடம்பரப்பொருட்களை வாங்காமல் இருந்த சேமிப்புப் பணத்தில் மட்டுமே சில பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர். இடையில் மருந்துக்கடைக்குச் சென்று சில மருந்துகளையும் வாங்கிக்கொண்டான் தேவதாஸ்.

மிகப்பெரிய சூட்கேஸ் இரண்டை வாங்கி அதில் துணிகளுக்கு இடையில் பணக்கட்டுகளையும் அடுக்கிக்கொண்டு யாருக்கும் சந்தேகம் வராதது போல எல்லாமே திட்டமிட்டபடி செய்தார்கள். எல்லா மூளையும் தேவதாஸுடையது தான். ராமநாதனுக்கு ஏனோ உள்ளுக்குள் பயம் இருந்துகொன்டே இருந்தது.

மறுநாள் ட்ரெயினில் ஏறி தமது இருக்கைகளைத்தேடி அமர்ந்துகொண்டனர். இருபத்து நான்கு மணி நேரப்பயணம் என்பதால் முன்பதிவு செய்திருந்தனர். இதற்கிடையில் அடிக்கடி சிந்தனை வயப்பட்டான் தேவதாஸ். எதையோ திட்டம் போட்டு நிறைவேற்றும் எண்ணத்துடன் முகம் இறுகியும் சுருக்கமாயும் இருந்தது.

சரியான வாய்ப்புக்குக் காத்திருந்தது போல் விரைந்து சென்றுகொண்டிருந்த ரயிலில் வாசல் அருகில் நின்று வெளிக்காற்றை உள்ளிழுத்துக்கொண்டிருந்தான் தேவதாஸ்.. மாலை நேர மந்தமான குளிர்காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தாலும் தேவதாஸின் நெற்றியில் லேசான வியர்வைத்துளிகள் அவன் எதோ விபரீதம் செய்யப்போவதைக் காட்டிக்கொண்டிருந்தன..

ரயில் வண்டியில் அத்தனை கூட்டமும் இல்லை. சீசனில்லாத நேரம் காரணமோ என்னவோ..

ராமநாதனைப் பார்த்தான் தேவதாஸ். தன் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி சாய்ந்திருந்தான். ஒரு நிமிடம் பாவமாக இருந்தது தேவதாஸுக்கு. ஆனால் மறுநிமிடம் மொத்தமாக ஐந்து கோடிகளைக் காணப்போகும் காட்சி வந்து அதைக் கலைத்தது.
நான் தானே எல்லா திட்டமும் வகுத்தேன். அவன் கூட இருந்ததைத் தவிர என்ன செய்துவிட்டான்..? அனைத்தும் என் பணம் தான்.. ஆனால் பிடுங்கிக்கொண்டு அவனுக்குத்தராமல் இருந்தால்..? முதலாளியிடம் அவன் சென்று போட்டுக்கொடுக்கமாட்டான் என்பது என்ன நிச்சயம்..? பிறகு முதலாளி அடியாட்களோடு வந்து அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு கொன்றுபோடவும் தயங்க மாட்டார்..

ஒருகணம் அவனது நல்ல மனம் சற்று தயங்கி யோசித்தது. நாம் சொல்லி வைத்துக்கொன்டபடி இருவரும் பங்கிட்டே வாழ்ந்தால் தான் என்ன..?

அடுத்தகணம் ஐந்துகோடி ரூபாயின் வாசனையும் ஸ்பரிச உணர்வும் அவன் மனதை இறுக்கியது.

ராமநாதனை தன் அருகில் அழைத்தான். எதுவும் அறியாத அப்பாவி ராமநாதன் தேவதாஸ் நிற்கும் வாசலுக்கு வந்தான்..

” ஹேய் ஹேய் … பார்த்து பார்த்து.. ஐயோ.. ” என்று வேகமாகக் கத்திய தேவதாஸ் ராமநாதனைப் பிடித்து இழுத்து ஓடும் ரயிலில் இருந்து தள்ளியே விட்டான்.. ஓ என்ற ராமநாதனின் இறுதி ஓங்காரம் ரயிலின் சத்தத்துடன் கலந்து கோரமாக ஒலித்தது.

பகுதி – 5

தேவதாஸ் இப்போது கோடீஸ்வரன். அவனுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது குறையாக இருந்ததால் எங்கும் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் செலவு செய்து வேண்டிக்கொண்டும் அங்கப்பிரதட்சணம் செய்தும் தங்கத்தொட்டில்கள் கட்டியும் என்ன எல்லாம் செய்யமுடியுமோ அனைத்தையும் செய்து பார்த்தான். புத்திர காமேஷ்டியாகம் கூட செய்யமுடியுமா என்று விசாரித்தான். ஆனால் அது வழக்கத்தில் இல்லை என்று பண்டிதர்கள் சொன்னதால் விட்டுவிட்டான்.

எத்தனை கொடும்செயல்கள் புரிந்தோருக்கும் கடவுள் பல சமயம் கருணை காட்டிவிடுவார்தானே..? அதே நிலைதான் தேவதாஸுக்கும் நேர்ந்தது. ஏழு வருட கடும் முயற்சிக்குப்பின்னர் அவன் மனைவி சாந்தா குழந்தை உண்டானாள்.

தேவதாஸுக்கு தலைகால் புரியவில்லை. நெருங்கிய உறவினர்கள் எல்லோருக்கும் வாரி வழங்கினான். தன்கையில் தன் வாரிசு வரப்போவதை எண்ணி அவன் ராம நாதனுக்குச் செய்த கொடும் செயலையும் கூட மறந்துவிட்டான்.

எப்போதேனும் உறக்கமில்லாமல் புரளும் போது ராமநாதனின் ஓ என்னும் இறுதி அலறல்மட்டும் காதில் விழுந்தது. திடுக்கிட்டு கண் விழித்துப்பார்த்து மனதைத் தேற்றிக்கொண்டாலும் உள்ளூற நடுக்கம் இருந்தது உண்மைதான்.

ராமநாதனைத் தள்ளிவிடும்முன் அவன் எழுப்பிய கூக்குரலில் அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவருமே அது ஒரு விபத்து என்று நம்ப வைத்தது. மேலும் இருவரும் நண்பர்கள்; ஒன்றாக பயணம் செய்த வகையில் தேவதாஸ் கொலை செய்து இருப்பான் என்பதாக நினைக்கக்கூட இடமில்லாமல் ஆக்கிவிட்டது. அவன் கதறி அழுத நடிப்பும் வாசல்பகக்த்தில் இருக்கும் கம்பி கை வழுக்கி விழுந்ததாக புலம்பி அழுது சொன்னதால் ஒருவருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. ரயில் நிறுத்தப்பட்டு சடலம் சிதறுண்ட நிலையில் போலீஸுக்குத் தகவல் அறிவித்து வந்து விசாரித்த வகையில் அது விபத்தென்று போலீஸ் முடிவு செய்து விட்டது.

உடல் அடக்கம் செய்யவோ எரியூட்டவோ இல்லாத நிலையில் சிதறுண்டு விட்டதால் சதைக்கூளத்தை வாரி எடுத்து எரியூட்டச் சொல்லி ரயில்வே போலீஸ் உடனடியாக வழக்கை முடித்தது. பொதுவாக ரயிலில் அடிபட்டு இறக்கும் எந்த வழக்குமே இவ்விதமாகத்தான் உடனடியாக முடிக்கப்படும் என்பது கூட தேவதாஸுக்கு புதிய அதிசய்மான அனுபவமாய் இருந்தது. இத்தனை எளிதில் தனது கொலை மறைக்கப்பட்டுவிட்டதையும் தான் நினைத்ததை விட மிக நன்றாகவே அவன் திட்டம் பலித்து ஐந்து கோடி ரூபாயும் தனதான விதத்தை எண்ணி மகிழ்ந்தான்.

ஆனாலும் அவன் மனதில் ராமநாதனின் இறுதி ஓங்கார ஓலம் பயத்தைக் கொடுத்து அடிக்கடி அதிரவும் வைத்துக்கொண்டுதான் இருந்தது. ஒரு நல்ல நண்பனைக் கொன்றுவிட்டோமே என்று அவன் மனதில் ஒரு இரக்கம் வந்தபோதெல்லாம் கற்றை கற்றையாய் ஆயிரம் ரூபாய்க் கட்டுகள் கண்முன் வந்து ரயிலில் அவனது அந்த பயத்தைப் போக்கியே விட்டது.

எந்த சந்தேகமும் எழாத வகையில் தேவதாஸ் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டே ஊருக்கு வந்து சேர்ந்தான்.

வந்ததும் தனியறைக்குச் சென்று தேவதாஸின் பெட்டியில் இருக்கும் பணத்தையும் தனதாக்கி ஒளித்துவைத்துவிட்டு ஐம்பதினாயிரம் ரூபாயைஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு ராம நாதன் வீட்டுக்குச் சென்று ஓ என்று ஊரே அயரும் வகையில் அழுது ரயிலில் அவன் செட் அப் செய்த கதையையே கூறி எல்லார் முன்பும் நடித்தான்.ஊரே சட்டென்று சில நிமிடங்களில் ஒன்று கூடி தேவதாஸின் கதைகளைக் கேட்டது.

அளவுக்கதிகமான அளவில் அழுகையும் மூக்குறிஞ்சலுக்கும் இடையில் அழகாகக் கதை புனைந்து கூறினான். இருவரும் 20 நாட்கள் விடுமுறையில் வந்ததாகவும் மனைவிமக்களுடன் அந்த விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் செல்ல திட்டமிருந்தது எனவும் எல்லாம் இப்படி பாழாய்போயிற்றே என்று அழுது அரற்றி கதையைப் புனைந்து கூறி நம்பவைத்தான்.

ஊருக்கே ராமநாதன் தேவதாஸ் நட்பு புரிந்து இருந்ததால் எள்ளளவும் ஐயப்படவே இல்லை. மேலும் அவர்களை நம்ப வைக்க ஒரு திறமையான நாடகத்தையும் தேவதாஸ் அரங்கேற்றினான்.

அங்கே ராமநாதனின் உறவினர்கள் ஊர்க்காரர்கள் கூடி இருந்த அந்த சோக நேரத்தில் தேவதாஸ் தனது திட்டத்தை அரங்கேற்றினான்.

மெல்ல ராமநாதனின் மனைவி அருகில் சென்று ஊர்க்காரர்கள் நன்கு கேட்கும்படி கொஞ்சம் உரக்கவே பேசத்தொடங்கினான்.

” தங்கச்சி.. அழாதேம்மா.. ராமநாதன் என் கிட்ட எவ்வளவு நட்பா இருந்தான். என்னை ரொம்ப நம்பினான். எனக்கு கை ஒடிந்தது போல இருக்கும்மா.. ”

” ஹூம்.. எனக்கு தெரியும்ணா.. எங்கிட்ட எவ்வளவோ சொல்லி இருக்காரு. நான் கொடுத்துவைக்கலியே..” என்று மீண்டும் அழத்தொடங்கினாள்.

” அவனோட கடைசி ஆசை அவன் சிறுக சிறுக சேமிச்சு பொண்ணுங்களை கரை ஏத்தனும்கிறதுதான். அதுக்கு கொஞ்சம் காசு சேத்தும் வைச்சு என் கிட்ட கொடுத்தும் வைச்சான்.. இதோ இந்தா.. இதை வைச்சுக்கோ.. ஐம்பதினாயிரம் ரூபாய் இருக்கு. இதை வைச்சுக்கிட்டு ஆண்டவன்மேல பாரம் போட்டு உன்னை தேத்திக்கோ..” என்றவன் தன் கையில் இருந்த மஞ்சள பையில் இருந்து ஐம்பதினாயிரம் ரூபாயை எடுத்து ஊரார் முன்னிலையில் அவளிடம் கொடுத்தான்.

ஊரே அதிசயித்து உச் கொட்டியது. அவனது நடிப்பு அந்த அளவுக்கு தத்ரூபமாக இருந்ததோடு அவன் நினைத்திருந்தால் அந்த ஐம்பதினாயிரத்தை சொல்லாம மறைச்சு எடுத்துக்கிட்டிருக்கலாமே.. எவ்வளவு நல்லவனா இருந்தா தானாகவே கொடுப்பான். உத்தமன் இவனைப்போலதான் எல்லாரும் இருக்கனும் என்றெல்லாம் ஊரே பாராட்டியது.

அவ்வளவுதான். அதற்குப் பின்னர் ராமநாதன் குடும்பத்தைத் திரும்பியும் பார்க்கவில்லை தேவதாஸ்.

தொழில் செய்யப்போகிறேன் என்று தன் குடும்பத்தை சென்னைக்கு அழைத்துப்போனான். அங்கே ஒரு பல்பொருள் அங்காடி ஒன்றை விலைக்கு வாங்கி நடத்தலானான். காசுமேல் காசு கொட்டிப்புரண்டது.

கேட்டவர்க்குக் கொடுக்காமல் கெட்டவர்க்கே அள்ளிக்கொடுக்கும் தெய்வமும் அவனுக்கு ஒரு குழ்ந்தை பாக்கியமும் கொடுத்தது.

தானங்கள் செய்து மகிழ்ந்தான். ஆனால் அந்த தானங்களையும் கணக்கில் காட்டி கருப்புப்பணத்தை மெல்ல மெல்ல வெள்ளையும் ஆக்கினான்.

இப்படியே காலம் சென்று அவனுடைய பையனும் ஐந்து வயதுப் பாலகனாகிவிட்டான்.

இடையிடையில் அவன் ராமநாதன் குடும்பம் கஷ்டப்படுவதாக அறிந்தும் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. இரண்டு பெண்குழந்தைகளுக்க்கான செலவு அவன் தலையில் விடிந்துவிட்டால்.

ராமநாதன் இறந்து ஏழுவருடங்கள் உருண்டோடிவிட்டது.

மாலை நேரம். பகல் நேரத்தூக்கம் கழிந்து தந்து கடைக்குச் செல்ல தயாராகிக்கொண்டு இருந்தான் தேவதாஸ்.

” அப்பா… ”என்று பள்ளியில் இருந்து வந்த மகேஷ் தேவதாஸின் காலைக்கட்டிக்கொண்டான். அவனுக்கு தாயை விட தந்தையை ரொம்ப பிடித்திருந்தது. பொதுவாக ஆண்குழந்தைகள் அம்மாவிடம் அதிகம் பாசமாக இருக்கும் என்பார்கள். ஆனால் மகேஷோ தாயை அவ்வளவாக நேசிப்பது இல்லை. குழந்தைப்பருவத்தில் தாயிடம் நெருக்கமாய் இருந்தாலும் மூன்று வயதுக்குப்பிறகு அவனில் மாற்றம் வரத்தொடங்கியது.

” அப்பா அப்பா இன்னைக்கு புது சார் வந்து சேர்ந்திருக்காரு அப்பா.. ரொம்ப நல்லசார்ப்பா.. ”

” அட மகிக்குட்டி.. நீ முதல்ல அம்மாகிட்ட போய் ட்ரெஸ் மாத்திக்கிட்டு பால் குடிப்பியாம்.’ அப்பா கடைக்கு போயிட்டு நைட் வந்து கதைகள் பேசுவேனாம்.. ” அன்புடன் மகேஷை முத்தமிட்டு தலை கலைத்துகொஞ்சிய தேவதாஸ் அவனை கீழே அனுப்பினான். உறங்குவது மட்டும் முதல் அடுக்கில். மற்றவை எல்லாம் கீழே ஹாலில் தான்.

சரிப்பா .. என்று புள்ளிமான் குட்டிபோல ஓடிய மகேஷ் சில நிமிடத்தில் ஐயோ அப்பா என்று அலறியது காதில் விழுந்தது.

பகுதி – 6

பதறி அடித்து ஓடினான் தேவதாஸ். அடுக்களையில் இருந்த அவன் மனைவியும் பதட்டத்துடன் ஓடிவந்தாள்.

‘’ ஐயோ என்னாச்சு… நான் பால் எடுத்துக்கிட்டு வரதுக்குள்ளே இப்படி படில விழுந்திட்டியே.. கடவுளே.. ‘’ ஒரு தாயின் பதட்டம் அவள் கண்ணிலும் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது.

படிகளில் வேகமாய் ஓடி இறங்கியதில் கால் தடுமாறி விழுந்து கிடந்தான் மகேஷ். தலையில் அடிபட்டு ரத்தம் தரையில் பரவிக்கொண்டிருந்தது. மயக்கமாகிவிட்டிருந்தான் குழந்தை.

தேவதாஸுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. வாரி எடுத்து மகனின் தலையில் வழிந்த ரத்தத்தை நிறுத்த கையால் அடைத்தான்.

‘’ ஓடு ஐஸ்கட்டி கொண்டுவா.. என்று மனைவிக்கும் கட்டளையிட்டான். காட்டன் வேஷ்டி ஒன்றையும் ஐஸ்கட்டியையும் உடனே கொண்டுவந்தாள் அவன் மனைவி. ஐஸ்கட்டியை அடிபட்ட இடத்தில் வைத்து தலையைச்சுற்றிலும் துணியால் கட்டினான். அவசரத்திலும் அவன் பரபரப்பிலும் போனை எடுத்து டயல் செய்யப்போனவன் பிறகு அந்த எண்ணத்தைக் கைவிட்டு காருக்கு ஓடினான்.. அவன் கையில் மகேஷ் துவண்டு தொங்கினான்.

பின்னாலேயே ஓடிய மனைவி நினைவாக கார் சாவியையும் எடுத்துக்கொண்டு கதவைப்பூட்டிக்கொண்டு விரைந்தாள். வேலைக்காரர்கள் யாரும் நிரந்தரமாக வைத்துக்கொள்ளாததால் வேலைசெய்துவிட்டு சென்றிருந்தாள் வேலைக்காரப்பெண்மணி.

அடுத்திருந்த மேக்ஸ் ஹாஸ்பிடலுக்கு காரை விரைவாகச்செலுத்தினான் தேவதாஸ். பின் இருக்கையில் மடியில் துவண்டிருக்கும் மகேஷைப்பிடித்துக்கொண்டு அரற்றிக்கொண்டே வந்தாள் அவன் மனைவி.

அவசரப்பிரிவுக்கு சென்றவன் கையில் குழந்தை மகேஷின் ரத்தம் நிறைந்த தலைக்கட்டினைப்பார்த்த ரிஷப்ஷனிஸ்ட் உடனே அவசரப்பிரிவின் பணியாட்களை விளித்து ஸ்ட்ரெச்சருக்கு ஏற்பாடு செய்தாள். தலைமை மருத்துவர் உடனே ஓடிவந்து குழந்தையின் நாடியைப் பார்த்து எமெர்ஜன்சி வார்டுக்குள் கொண்டுபோகச் சொல்லிவிட்டு ‘’ என்ன நடந்தது ? எதுவும் போலீஸ் கேசா..? ‘’ என்று தேவதாஸிடம் கேட்டார்.

‘’ இல்லைங்க டாக்டர்.. மாடிப்படியில இருந்து விழுந்துட்டான் என்பிள்ளை ‘’ என்று கேவலுடன் சொன்னான் தேவதாஸ்.

உடனடியாக எம்டி ஸ்கேனுக்கு ஏற்பாடு செய்யச்சொல்லிவிட்டு அந்த அவசர வார்டுக்குள் நுழைந்தார் டாக்டர்.

தலையில் கைவைத்துக்கொண்டு மனைவியைத் தேற்றவும் வழியில்லாமல் அங்கே இருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்தான் தேவதாஸ்.அவன் மனைவி தனது பெற்றோருக்கும் உறவினருக்கும் தொலைபேசியில் தகவலைச்சொல்லி அழுதாள்.

அவன் எண்ணங்கள் எங்கெங்கோ ஓடின.. ஏனோ சட்டென்று ராமநாதனின் அந்த கடைசி அவலக்குரல் அவன் காதில் கர்ண கடூரமாய் ஒலித்தது.

என் பாவத்தின் பலன்களை அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டதோ..? என் ஆசை மகனை அன்பு மகனை செல்ல மகனை இழந்து விடுவேனோ..? வேறு குழந்தை இனி பிறக்காது என மருத்துவர்கள் சொல்லி விட்டதால் தன் ஒரே மகனைக் கண்ணும்கருத்துமாய் வளர்த்தான் தேவதாஸ்.

மகேஷோ உலக அதிசயமாய் தன் தந்தையுடன் என்றும் ஒன்றியே இருந்தான். உறக்கம் முதல் விழிப்பு வரையிலும் அவனது கழுத்தைக்கட்டிக்கொண்டே உறங்குவது மகேஷின் வழக்கம்.

சற்றே தந்தை அசைந்தாலும் சட்டென விழித்து கண்ணைக்கசக்கிக்கொண்டு தந்தையைக் கண்டதும் நிம்மதியாக மீண்டும் உறங்குவது மகேஷின் வழக்கமாய் இருந்தது.

இன்னொரு அதிசயத்தையும் தேவதாஸ் தன் மகனில் கண்டான். ஒரு சிறு குழந்தைக்கு இருக்கும் அதீத அறிவை விட மிக அதிகமான அறிவும் பேச்சு முதிரிச்சியும் பல முறை தேவதாஸின் அதிசயிக்க வைத்திருக்கிறது.

எத்தனை நேரம் சென்றதோ அறியவில்லை. அவன் தோளில் யாரோ கைவைப்பதை உணர்ந்த தேவதாஸ் நினைவுச்சோகத்திலிருந்து விழித்தான்.

டாக்டர் நின்றுகொண்டிருந்தார். பதைத்து எழுந்த தேவதாஸும் அவன் மனைவியில் என்னாச்சு டாக்டர் என்று ஒரே குரலில் கேட்டனர்.

‘’ உயிருக்கு ஆபத்தில்லை மிஸ்டர்… ‘’

‘’ தேவதாஸ் டாக்டர்… ஓ .. கடவுளுக்கு நன்றி.. எப்படி இருக்கு டாக்டர் இப்ப..? நாங்க பார்க்கலாமா..? ‘’

;; இப்போ மயக்கத்திலிருக்கான்.. எப்படியும் ஒரு 10 மணி நேரம் உறக்கம் இருக்கும்.. அதுக்குப் பிறகுதான் கண்விழிப்பான்.. அதுக்குப் பிறகு சில டெஸ்ட்கள் இருக்கு.. கொஞ்சம் காம்ப்ளிகேடட் ஆகத்தான் இருக்கும்னு தோணுது. ஏன்னா.. பின் மண்டையில் பலமா அடிபட்டு இருக்கு.. மூளைக்கருகில் ப்ளட் க்ளாட் இருக்கு.. லெட் ஸீ..நீங்க போய் குழந்தையை பாருங்க.. ஆனா டோண்ட் மேக் நாய்ஸ்.. ‘’ என்று சொல்லிவிட்டு சென்றார் டாக்டர்.

அவசரமாய் உள்ளே ஓடிய தேவதாஸும் அவன் மனைவியும் வாடிய கீரைக்கட்டு போல கிடந்த மகேஷைப் பார்த்தனர்.

நாம் எத்தனை முயன்றாலும் விதியின் செய்கைகளைக் கணிக்கவும் முடியாது கலைக்கவும் முடியாதல்லவா..?

நேற்று வரை துறுதுறுத்த புதிய நாய்க்குட்டி போல அங்கும் இங்கும் ஓடிக்களித்த களிப்பித்த மகேஷ் கிடந்த நிலையைக் கண்டு தேவதாஸும் மனைவியும் கண்ணீர் வடித்தனர். மயக்கத்தில் இருந்த மகேஷின் தலையை மெல்ல கோதி அழுதாள் தேவதாஸின் மனைவி. தேவதாஸோ மகனின் பிஞ்சுப்பாதங்களைப் பற்றி மனதுக்குள் பொங்கிய பூகம்பத்துக்கத்தை அடக்க வழிகாணாது தவித்தான்.

அப்போது அங்கே வந்த நர்ஸ் இயந்திரம் போல பேசினாள். ‘’ எக்ஸ்யூஸ்மி சார்.. பேஷண்ட்டை தொந்தரவு செய்யாமல் வெளியே போய் காத்திருங்க. ப்ளீஸ். இது எமெர்ஜென்சி வார்ட். இங்கே யாரும் அலோவ்ட் கிடையாது .. ‘’ அவளுக்கென்ன தெரியும் பெற்றோரின் வேதனைகள்..? ஆயிரக்கணக்கான நோயாளிகளைப் பார்த்து மரத்தே விட்டிருந்தது அவள் மனம். இறுகியே விட்டிருந்தது இதயம்.

இலங்கையிலிருந்து துரத்தப்பட்ட அப்பாவித்தமிழர்களைப்போல வேதனையில் தலை துவள வெளியே வந்தனர் இருவரும்.

’’ நீ போய் வீட்டில இரு. நான் இங்கே இருந்து பாத்துக்கிறேன். ’’ என்றான் தேவதாஸ்.

‘’ இல்லைங்க.. புள்ள கண் முழிச்சு ரெண்டு வார்த்தை பேசாம என்னால போகமுடியாதுங்க.. மன்னிச்சிடுங்க ‘’ இதைச் சொல்லும் போதே அவன் மனைவியின் கேவல் அழுகையாக மாறி கொஞ்சம் சத்தமாக அழத்தொடங்கினாள். தேவதாஸுக்கோ யாராவது அழுது முன் உதாரனம் காட்ட காத்திருந்தவனைப்போல் கதறி அழுதான். அவன் கண்களில் அவன் செய்த பாவங்கள் எல்லாம் தட்டாமாலை சுற்றி வந்தன.

அவன் மனக்கன் முன் அடிக்கடி ராமநாதனின் இறுதி ஓலம் அடிக்கடி வர ஆரம்பித்தது.

நிறைவுப்பகுதி ( 7 )

நாட்கள் வாரங்களாயின. வாரங்கள் மாதங்களாயின. சரியாகச் சாப்பிடாமல் தூக்கமில்லாமல் தேவதாச் எய்ட்ஸ் முற்றிய நிலையிலான நோயாளியைப்போலானான். மகேஷ் இன்னும் அதே மருத்துவமனையில் தான் மயக்கம் தெளியாமல் கிடந்தான்.

மருத்துவர் இந்தியாவிலிருக்கும் அனைத்து மூளை நிபுனர்களையும் வரவழைத்துப் பார்த்துவிட்டார். எந்த சோதனையும் எந்த மருத்துவ முறையும் பலிக்கவில்லை. என்ன பிரச்சினை என்று தெளியவே அத்தனை விற்பன்னர்களாலும் முடியவே இல்லை.

தேவதாஸின் பணம் கவர்ச்சி நடிகையின் க்ளைமேக்ஸ் சீன் பாட்டில் துணிகள் குறைவதைப்போல குறைந்துகொண்டே வந்தது. மருத்துவமனையிலேயே பழியாகக் கிடந்ததால் அவனது பல்பொருள் அங்காடியின் வேலையாட்கள் வரும் லாபத்தை எல்லாம் வெல்லக்கட்டியை கொறித்துக் காலிசெய்யும் எறும்புகளைப்போல தின்றனர். வியாபாரம் படுத்து விட்டதாக மேனேஜர் கூறியது எதுவும் தேவதாஸ் காதில் இறங்கவே இல்லை.

மருத்துவர் வெளி நாட்டில் இருந்து நிபுணர்களை எல்லாம் வரவழைத்துச் சோதித்துப்பார்த்தார். வெயிலில் வைத்த பனிக்கட்டி போல் பணம் கரைந்ததே தவிர மகேஷ் பிழைத்தபாடில்லை. நிரந்தர கோமாவில் சென்றுவிட்டான் குழந்தை.

இருந்த கோடிகள் கரைந்தாலும் தேவதாஸுக்கு அதைப்பற்றிய கவலையும் இல்லாமல் போய்விட்டது. அமெரிக்காவில் ஒரு நிபுணர் அங்கே ப்ரூக்ளின் மருத்துவமனையில் வைத்து தலையில் மேஜர் ஆப்ரேஷன் செய்யலாம் என்று கூறியதன் பேரில் அதையும் செய்து பார்த்ததில் சில கோடிகள் கரைந்தன. பயன் மட்டும் இல்லை.

இறுதியில் டாக்டர்கள் கை விரித்தனர். மகேஷ் அலறிய அப்பா என்னும் அலறல் தான் கடைசி அலறலாக இருந்தது.

வீட்டுக்குக்கொண்டுவந்தனர் மகேஷை. வீட்டின் பேரிலும் நிறைய கடன் வாங்கி அதைக் காலி செய்ய ஒருமாத அவகாசமே தந்திருந்தான் கடன் கொடுத்த சேட்.

என்ன செய்வதென்று புரியாத நிலையில் தேவதாஸும் அவன் மனைவியும் காட்டில் அகப்பட்ட இரு அனாதைக்குழந்தைகளின் மனநிலையில் இருந்தனர்.

வள்ளுவர் சொல்லி இருக்கிறார். நல்லமுறையில் வராத பணம் சடுதியில் கரைந்து போய்விடும் என்று. அதற்குச் சிறந்த உதாரணமாய் தேவதாஸின் வாழ்க்கை அமைந்தது. கார்கள் விற்கப்பட்டுவிட்டன. ஷாப்பிங் மால் விற்று கடன்களை அடைத்தான். இருக்கும் வீடும் ஒரு மாதத்தில் பறிபோகும் நிலை. இந்த நிலையைக் கனவிலும்கூட நினைக்காதவனாய் இருந்தவன் தேவதாஸ்.

அத்தனையும் இழந்தாலும் மகேஷ் பிழைத்தால் போதும் என்னும் ஆசையில் இருந்த தேவதாஸின் ஆசையில் மண் விழுந்தது.

வீட்டில் அமைதியாக ஆழ்நிலையில் உறங்கிக்கொண்டிருந்தான் மகேஷ். பேருக்கு சமையல் என்பது போல் சமைத்துவிட்டு மேலே வந்த தேவதாஸின் மனைவி தன் கணவனைச் சாப்பிட அழைத்தாள்.

தேவதாஸ் மறுத்தான். ’’ போய் கஞ்சி கொண்டு வா மகேஷுக்கு ஊட்டி விடலாம்’’ என்றான்.

சரி என்று கீழே போனாள் அவன் மனைவி.

தேவதாச் மகேஷின் காலடியில் அமர்ந்து மகேஷையே பார்த்துக்கொண்டிருந்தான்.

’’ என்னை மன்னிச்சுடு மகேஷ்.. என் ஆசை மகனே.. உனக்காக நான் செய்த முயற்சி எல்லாமே பலனின்றிப் போனதடா.. என் பணத்தை எல்லாமே செலவ்உ செய்துவிட்டேனடா.. என்னை விட்டு போயிடாதே மகேஷ்.. உன்னை இப்படியே வைத்து நான் இறுதி வரை காப்பாற்றுவேண்டா..’’ என்று கண்கலங்க இதயம் துடிக்க அழுதவன் மகேஷின் கால்களின் மேல் தலையை வைத்து கதறிக் கதறி அழுதான்.

‘’ தேவதாஸா..? உன் பணம் என்றா சொன்னாய்..? மீண்டும் சொல்.. அது உன் பணமா..? ‘’ ஒரு கரகரத்த குரல் கேட்டது தேவதாஸுக்கு.

திடுக்கிட்டான். தலையைத்தூக்கி சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே யாருமில்லை. மகேஷோ அமைதியாக வாடிய மலர் போல் கிடந்தான்.

பிரமையா அது..? அது யா… யா.. யாருடைய குரல்..? திடுக்கிட்டான் தேவதாஸ்.

ஆம் அது ராமநாதனின் குரல்தான். அங்கும் இங்கும் பார்த்தான், அப்பொதுதான் மகேஷிடம் மெல்ல அசைவு வந்தது. 11 மாதங்கள் கோமாவில் இருந்த பிள்ளை அசைந்தான். அவனைப்பார்த்துக்கொண்டிருந்த தேவதாஸ் வியப்பில் ஆ என்று அலறினான்.

அந்த நேரம் மகேஷ் கண்விழித்தான். அவன் கண்கள் சிவந்திருந்தன. மெல்ல எழுந்து உட்கார்ந்தான். பிறகு பேசத்தொடங்கினான்.

‘’ தேவதாசா.. நான் உன் ராம நாதன் டா.. பாவி உன் மேல் உயிரா இருந்த ராம நாதன் டா.. நீ என்னை தள்ளிவிட்டுட்டு இரக்கமில்லாம நடிச்சப்ப நான் விழுந்து உடனே செத்திட்டேன்னு நினைச்சியா.. இல்லடா.. நான் என் உடலைத்தான் இழந்தேன். என் ஆன்மா உடனே உன்னருகில் தான் இருந்தது. நான் எத்தனையோ முயற்சித்தும் உன்னிடம் பேசமுடியவில்லை. பாவி உனக்கு நான் என்ன துரோகம் செய்தேண்டா சொல்லு.. ‘’

தேவதாஸ் பாறையாய் இறுகிக்கிடந்தான். பின்னால் கஞ்சி கொண்டு வந்த அவன் மனைவி மகேஷ் இப்படி கரகரத்த குரலில் பேசியதும் மயங்கிச் சருந்தாள். மயக்கநிலைக்குப் போனாள்.

’’ முட்டாளே.. உன் துரோகம் என்னுடன் போகட்டும் என்றுதான் உன் மனைவியை மூர்ச்சை அடைய வைத்தேன். அவளுக்கு இப்போது நடந்தது எதும் நினைவில் இருக்காது. ‘’ தேவதாஸ் கூப்பிய கரங்களுடன் நடு நடுங்கிக் கேட்டுக்கொண்டிருந்தான்.

‘’ உன்னை விட்டு பிரியமுடியாமல் உன்னையே சுத்தி சுத்தி வந்தேண்டா பாவி.. ஏண்டா அப்படி செய்தே..? நீ என்னைக்கொன்னுட்டு அடைய நினைத்த*காசு நிலைக்காதுன்னு உனக்கு காட்டத்தான் உன் வயித்திலேயே பிறந்தேன். எந்த பணத்தை நீ அனுபவிக்க நினைச்சியோ அந்த பணத்தை எல்லாம் எனக்காகவே நீ இழந்தாய். இது தான் விதி. இது தான் நீ செய்த பாவத்தை அனுபவித்த விதம். இனியாவது பழைய வாழ்க்கையை ஆரம்பி. உழைத்து முன்னேறு. நான் உன்னுடன் எப்பவும் இருப்பேன். இப்ப என் இந்த இரவல் உடம்பை விட்டு போகிற காலம் வந்தாச்சு.. நான் போறேன். நாம் செய்யும் பாவங்கள் அதே பிறவியிலேயே தீர்க்கப்பட்டால் மிக நல்லது. அந்த வகையில் உனக்கு நான் நல்லதைத்தான் இப்பவும் செய்தேன். போறேண்டா தேவதாஸா.. உன் ராமநாதன் போறேண்டா….. ‘’

இதைச்சொல்லிய மகேஷ் மீண்டும் படுக்கையில் சரிந்தான். அவனது சுவாசமும் நின்றது.

முற்றும்

பின்குறிப்பு: இக்கதை முத்தமிழ்மன்றம் மற்றும் தமிழ்மன்றத்தில் பதிந்திருக்கிறேன். பத்திரிகைகளுக்கு அனுப்பப்படவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *