கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 14,391 
 

அன்று அந்த புகழ் பெற்ற வில்லன் நடிகர் ஜெகன், சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் சத்தியமூர்த்தியின் எதிரே அமர்ந்து தன் மனக்குழப்பத்தைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். ஜெகன் நடிகிறார் என்றாலே அப்படம் வசூலில் சக்கை போடு போடும். சமீப காலமாக அவருக்கு கதாநாயகனாக நடிக்கும் விஸ்வாவைப் பார்க்கும் போதெல்லாம் ஒரே வெறுப்பாக வரும் காரணம் புரியவில்லை.

விஸ்வா, ஜெகனுக்கு நல்ல நண்பன். கதாநாயகனாக ஜொலித்துக்கொண்டிருப்பவர்.

“கொலை செய்து விடலாம் போல ஒரு வெறுப்பு ஏன் வரவேண்டும் டாக்டர் ? என்னை குணப்படுத்திக்கொள்ள வேண்டும்”. அழாத குறையாய் டாக்டரிடம் அவர் மன்றாடிக்கொண்டிருந்தார்.

“படங்களில் நான் அவருடன் சண்டை போடவேண்டும். கதைகளில் அவர் எனக்கு எதிரி. எல்லா படங்களிலும் அவரிடம் நான் தோற்கவேண்டும். ரத்தகாயங்களுடன் தோல்வியில் அவமானப்பட்டு நிற்க அவர் சிரித்து எனக்கு பாடம் புகட்டுவது போல பேசவேண்டும். ஆனால் இதெல்லாம் நடிப்பு என்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது. இது தவிர வேறு ஏதோ புரியாத காரணம் இருப்பதாக எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. ப்ளீஸ் ஹெல்ப் மீ டாக்டர்”.

ஜெகன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த டாக்டர், “சரி நாளை படப்பிடிப்பு நடக்கும் சமயம் அங்கு நேரில் வந்து பார்க்கிறேன்” என்றார்.

அதன்படி அவர் அங்கு சென்ற போது விஸ்வாவும், ஜெகனும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். தமாஷாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்தர்கள். படப்பிடிப்பு ஆரம்பமாகியது. விஸ்வா கதாநாயகி சிவானியுடன் ஆடிப்படிக்கொண்டிருக்க ஜெகன் புதர் மறைவில் நின்று பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். டைரக்டர் ராமன் “கட் கட் இன்னும் கொஞ்சம் வில்லத்தனம் உங்கள் கண்களில் வரவேண்டும். டீப்பாக உங்கள் வெறுப்பைக் காண்பிக்க வேண்டும். மேக்கப் மேன் ! கொஞ்சம் கிளிசரின் போட்டாவது அவர் கண்களில் சிகப்பை ஏற்றப்பார்” என்றார்.

“கொஞ்சம் உதட்டை இறுக்கிக் கொள்ளுங்கள். விழிகளை உருட்டுங்கள். கோபத்தைக் கொண்டு வாருங்கள்”. நடிப்பை ஜெகனிடமிருந்து பிழிந்தெடுத்துக் கொண்டிருந்தார்.

மேக்கப்மேன் நடேசன், ஜெகன் அருகில் வந்து டச்சப் செய்துகொண்டே “சார் ! அந்த விச்வாவை விட நீங்கள் செம அழகு சார். நடிப்பில் உங்களை அவர் மிஞ்ச முடியாது சார். ஏதோ விதி அவர் கதாநாயகனகி விட்டார். நீங்களோ வில்லன்தான்” என கிசு கிசுத்தார். டச் அப் மேன் நடேசன் அவருடைய வேலையை மட்டும் பார்க்காமல் அவரால் முடிந்த கைங்கரியத்தையும் சேர்த்தே செய்துவிடுகிறார் போலும் என டாக்டர் நினைத்தார்.

அன்று மாலை ஜெகன் டாக்டரை சந்தித்த போது, “உங்கள் நடிப்பு மிகமிக அபாரம். டைரக்டர் ராமன் படமா கொக்கா? ஒவ்வொருவரிடைருந்தும் நடிப்பை எப்படி எக்ஸ்ட்ராக்ட் செய்கிறார் பாருங்கள். படம் பிச்சுக்கிட்டுப் போகும் பாருங்கள்” என பாராட்டினார்.

“டைரக்ட்டருக்கு விஸ்வாவைப் பிடிக்காதோன்னு எனக்கு தோணுது டாக்டர். நான்தான் முடியைப் பிச்சுக்கப் போறேன். நடிப்புக்கே முழுக்கு போட்டுட்டு நிம்மதியா இருக்கப் போறேன் டாக்டர்” என ஜெகன் புலம்ப, “அவசரப் படாதீர்கள் ஜெகன். உங்களுக்கு மருந்து எழுதித்தருகிறேன். ஒரு வாரத்திற்கு அப்புறம் என்னை வந்து பாருங்கள்”. பிரிஸ்கிரிப்ஷனை கிறுக்கி ஜெகனிடம் கொடுத்தார்.

ஆனால் ஒரு வாரத்திற்குள்ளாகவே எல்லா செய்தித் தாள்களிலும் அந்த செய்தி கொட்டை எழுத்துகளில் வெளிவந்திருந்தது. அது விஸ்வாவின் மரணச் செய்தி. தலையங்கம், இரங்கல் செய்திகள் போட்டோக்கள் கேள்விகள் எல்லாம் விஸ்வா மயம்தான். மரணம் கொலையா? தற்கொலையா? போஸ்ட் மர்டம் ரிப்போர்ட் படி கழுத்தை நெரித்துக் கொலை என்றதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்தது.

மக்கள் குரல் ஓங்கி ஒலித்தது. விசாரணை லிஸ்டில் டாக்டர், இயக்குனர், இவர்களின் பெயர்கள் முதலாக இருந்தது.

விஸ்வாவின் மனைவி நர்மதா டாக்டருக்கு மாமா பெண். ஆனால் அவரை மறுத்து சினிமா மோகத்தில் விஸ்வாவைக் கைபிடித்தாள். இது ஒரு காரணம்போதுமே. டாக்டரின் கிளினிக் சோதனை போடப்பட்டது. ஜெகனின் மெடிகல் ரிபோர்ட் போலீஸ் கைகளில் கிடைக்க அது அசைக்கமுடியாத சாட்சியமானதால். ஜெகனும் விசாரணைக்கு ஆளானார்.

நர்மதா புகாரின் பேரில் மேக்கப் நடேசனும் விசாரிக்கப்பட்டார். இவர்கள் மூவருமே விஸ்வா வீட்டினுள் சர்வ சாதாரணமாக போய்வரும் வழக்கம் உள்ளவர்கள்.விஸ்வா அவரது படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார் என்றால் இவர்களுள் யாரோதான் என போலீஸ் நினைத்தது.

கிடைத்த கைரேகையோ இவர்கள் யாருடையதும் இல்லை. குழப்பம்தான் மிச்சம்.

விஸ்வா வீட்டினருகே மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை பயன்படுத்தப்பட்டது. மக்கள் கூட்டத்தை படம் பிடித்து பத்திரிகைகளில் போட அப்பத்திரிகைகள் அமோக விற்பனை கண்டன. டீ.வி சானல்களில் இதே செய்திகள்தான்.

டீ.வி பார்த்துக்கொண்டிருந்த ஜெகன், மக்கள் கூட்டத்தில் இருந்த ஒருவனைப்பார்த்துவிட்டதனால் நிமிர்ந்து உட்கார்ந்தார். உடனேயே யாருக்கோ டயல் செய்தார். அடுத்த நிமிடத்தில் கொலைகாரன் போலீசில் சரணடைந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது.

ஜெகனின் ரசிகர் மன்ற தலைவன்தான் விஸ்வாவை கொலை செய்ததை ஒத்துக்கொண்டான்.

என் தலைவரை படங்களில் கதாநாயனாக நடிக்கும் அவர் அசிங்கப்படுத்துவதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் விஸ்வாவின் வீட்டிற்கு ஜெகனின் ரசிகர் மன்ற தலைவன் என்று சொல்லிக்கொண்டு போனேன்..அவரும் என்னை அன்புடன் வரவேற்றார். ஏதோ காரணமாக அவர் தன் படுக்கை அறைக்குள் போனபோது நானும் கூடவே சென்று அவரைக் கொலை செய்தேன்..என் தலவர் எனக்கு போன் பண்ணி குற்றவாளி நீதான் என்று கண்டுபிடித்துவிட்டேன். மரியாதையாக சரணடைந்துவிடு என்றார். என் தலைவன் கட்டளை யிட்டதும் அதன்படியே செய்தேன் என்றான்.

எப்படி சார் கண்டுபிடித்தீர்கள் என்று இன்ஸ்பெக்ட்டர் ஜெகனிடம் ஆர்வமுடன் கேட்க ஜெகன் சொல்லத்தொடங்கினார்.

“இவன் என் தீவீர ரசிகன். ஒருமுறை எனக்கு உடல் நலமில்லாமலிருந்தபோது தீக்குளித்தது இவன்தான். முகம்முழுக்க தீக்காயங்களுடன்தான் இவன் உயிர் பிழைத்தான். நிறைய கவிதைகள் எழுதி எனக்கு அனுப்புவான். அதில் மறைமுகமாக, எது பெரிதோ அது இல்லாவிட்டால்தான் இந்த ஜகம் ஜொலிக்கும் என்பதுபோன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். ஆரம்பத்தில் புரியவில்லை. கூட்டத்தில் இவனைப்பார்த்தபோது இவன் தீக்காயங்களைப் பார்த்ததும் எனக்கு புரிந்தமாதிரி இருந்தது. எதுக்கும் அவனை மிரட்டிப்பார்த்தேன். போலீஸில் சரணடைந்துவிட்டான். இப்படிப்பட்ட முட்டாள் கொலைகார ரசிகர்கள் எனக்கு தேவை இல்லை. நான் ரசிகர் மன்றத்தை கலைத்துவிடுவேன் சார்” என்றார் மிகவும் வருத்தத்துடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *