சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொல்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 16,427 
 

’என் தப்பை உணர்ந்து விட்டேன். மன்னித்து விடுங்கள்.’ என்ற தகவலைக் கடைசியாக ஃபேஸ்புக்கில் பதிப்பித்த கையோடு, மொபைல் ஃபோனைப் பிடித்துக் கொண்டே செத்துப் போயிருந்தான்.

கொட்டிக் கிடந்த கருஞ்சிவப்பு ரத்தத்தில் அவன் உடம்பு மிதக்கிற மாதிரி இருந்தது.

“இது நாலாவது கொலை.” என்றார் இன்ஸ்பெக்டர் தாண்டவம்.

“எல்லாம் ஐ.டி பசங்க ஸார். வேலை பார்த்தமா வீட்டுக்குப் போனமான்னு இல்லாம எப்பப் பாரு மூஞ்சிப் பொஸ்தகம், டிவிட்டருன்னு கூத்தடிச்சிக்கிட்டிருக்கான்க. இப்ப போன உசுரு திரும்பி வருமா?” என்றார் கான்ஸ்டபிள் கனகு கோபத்தோடு.

ஹை ஹீல்சின் டாக் டாக் சத்தமும், செண்ட் வாசமும் குப்பென்று அடிக்கவே திரும்பிப் பார்த்தார்கள். காற்றில் அலைபாயும் தலைமுடியை ஒதுக்கிக் கொண்டே வந்தாள் அந்த இளம்பெண். இறுக்கமான ஷர்ட்டின் மேல் பட்டன் திறந்திருந்தது. காபிக் கொட்டை கலரில் முழங்காலுக்குக் கொஞ்சம் அருகிலான மிடி. பட்டைக் கண்ணாடியைக் கழற்றி விட்டு கான்ட்டாக்ட் லென்ஸ் போட்டுக் கொண்டாளென்றால் ஒரு சினிமா கதாநாயகியாக ஆகி விட முடியும்.

“நீங்க சொல்றது தப்பு ஸார். அதெல்லாம் அஞ்சு பத்து வருஷம் முன்னால. இப்ப சோஷியல் மீடியாவில் குடும்பத் தலைவிகள் இருக்காங்க. ரிட்டயர் ஆன தாத்தா, பாட்டிகள் இருக்காங்க. ஸ்கூல் பசங்க. கதை எழுதறவங்க. அரசியல்வாதிகள். மொத்த சமூகமும் அதுல உக்காந்திருக்கு.”

தாண்டவம் லேசான எரிச்சலோடு அவளைப் பார்த்தார். “ஃபாரன்சிக் வரலை. கரொனர் வரலை. ஃபோட்டோக்ராஃபர் வரலை. அதுக்குள்ளே உன்னை யாரும்மா இங்கே வரச் சொன்னது? யோவ் வேலுச்சாமி, க்ரைம் சீன் பெரிமீட்டருக்குள்ளே யாரை வேணா உள்ளே விட்ருவியா?”

வெளியே இருந்த வேலுச்சாமி சன்னமாகக் காதில் விழுந்தார். “மேடம் லெட்டர் காட்னாங்க ஸார்.”

அரசு முத்திரையிட்ட அச்சடித்த காகிதத்தை அவரிடம் காட்டிக் கொண்டே புன்னகைத்தாள் சைபர் க்ரைம் சாதனா. “இன்ஸ்பெக்டர், ஃபாரன்சிக், போட்டோக்ராஃபி எல்லாம் பத்தாது. போலிஸ் டிபார்ட்மெண்ட் தூங்குதான்னு ஐ.ஜியோட ட்விட்டர்ல நூத்தி நாப்பது எழுத்துல ஆளாளுக்குத் திட்டறாங்க. ஒரு சைபர் க்ரைம் ஸ்பெஷலிஸ்ட் இன்வால்வ் ஆகணும்னு ஐ.ஜிதான் என்னை உடனே போகச் சொன்னார். என்னை எதிரி மாதிரி பார்க்காதிங்க. உங்களுக்கு உதவி செய்யத்தான் வந்திருக்கேன்.”

“பின்னந்தலையில் ஆழமா ஒரு வெட்டு. எட்டு இடத்தில் கத்திக் குத்து. ஃபாரன்சிக் வரணும். ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் எடுக்கணும். பாடியை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பணும். இதுல நீ என்னம்மா உதவி பண்ணப்போறே?”

“எவிடென்சை கத்தியிலும், ரத்தத்திலும் தேடிட்டிருந்தீங்கன்னா ஃபாரன்சிக் ரிப்போர்ட் வரதுக்குள்ளே அவன் இன்னும் பத்துக் கொலை பண்ணிடுவான். பேட்டர்ன் புரியுதா ஸார்? சோஷியல் மீடியாவில் பகிரங்க மன்னிப்புக் கேட்டுட்டு செத்துப் போறாங்க. விவகாரம் இணையத்தில் இருக்கு.”

“இணையமா?”

“இன்ட்டர்நெட் ஸார். சுத்தத் தமிழ்ல இணையம்ன்னு சொல்லுவாங்க.”

தாண்டவம் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். “சை, பதினஞ்சு வருஷம் முன்னால பொறந்து தொலைச்சிருந்தா இந்த எழவையெல்லாம் பார்க்காம ரிட்டயர் ஆகியிருக்கலாம்.” அவள் அவரை உற்றுப் பார்க்க, “சரி, சொல்லும்மா. இப்ப உனக்கு இங்கே என்ன வேணும்?”

“கத்தி, ரத்தம் எல்லாம் நீங்க பாருங்க ஸார். எனக்கு விக்டிம்மோட இன்ட்டர்னெட் ஐடெண்ட்டிட்டி வேணும். அவன் கம்ப்யூட்டர், மொபைல், டேப்ளட் எல்லாம் கொஞ்சம் அலசணும். அவனோட சோஷியல் நெட்வொர்க்கை லென்ஸ் வெச்சு ஆராயணும். கொலையாளியை அதுக்குள்ளேதான் தேடணும்.”

டைரியைப் புரட்டுவதும், கசங்கின கடிதங்களை ஆராய்வதும், தெருமுனை ஆட்டோ ஸ்டாண்டில் விசாரிப்பதுமான பழைய சித்தாந்தங்கள் இந்தக் கேசில் பயன்படாது என்பதைத் தாண்டவம் உணர ஆரம்பித்தார். ஒன்றல்ல, இரண்டல்ல இது நாலாவது கொலை. இதற்கு முன்னர் இறந்த தனியார் கல்லூரி விரிவுரையாளரும் சரி, எக்ஸ்போர்ட் பிசினஸ் நடத்தும் இளம் தொழிலதிபரும் சரி, உலக சினிமாக்களை ப்ளாகில் விமர்சனம் செய்யும் தாலூகா ஆபிஸ் ஊழியரும் சரி கொலையாவதற்கு முன்னால் சொல்லி வைத்தாற்போல இரண்டு நாட்களுக்கு படு டென்ஷனாய் காணப்பட்டிருக்கிறார்கள். சுற்றி இருப்பவர்களிடம் காரணம் இல்லாமல் எரிந்து விழுந்திருக்கிறார்கள். கைகள் நடுங்க, முகம் சிவக்க தொடர்ந்து ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் சராமாரியாக உரையாடிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

சடலத்தை மார்ச்சுவரி வேனில் ஏற்றி அனுப்பி விட்டு தாண்டவம் களைப்பாய் நெற்றியைத் துடைத்த போது, சைபர் க்ரைம் சாதனா லேப்டாப்புடன் வந்தாள்.

“பையன் தீவிரமான இளையராஜா ரசிகன். ரெண்டு நாளா ட்விட்டர்ல பெரிய இசைத் தகராறு. ரஹ்மான் ரசிகர்களோட கன்னாபின்னான்னு மோதியிருக்கான். முக்கியமா நாராசம்ங்கிறவரோட நடந்த கான்வெர்சேஷனைப் பாருங்க. ரொம்ப ஹாட்டா இருக்கு.”

திரையில் வழிந்தோடும் ட்விட்டர் டைம்லைனைப் பார்த்துக் கொஞ்சம் படபடப்படைந்தார் தாண்டவம். “என்னம்மா இப்படி குழாயடிச் சண்டை நடந்திருக்கு? எல்லாம் படிச்சவங்க இல்லையா?”

சாதனா கண்சிமிட்டினாள். “அதான் சோஷியல் மீடியா. இன்ட்டர்னெட். கொஞ்சம் ஈகோவை டச் பண்ணிட்டா அப்புறம் நாம என்ன டைப் பண்றோம்னு நமக்கே தெரியாது.”

“யார் இந்த நாராசம்? இவனை ட்ரேஸ் பண்ணிக் கண்டுபிடிச்சு முட்டிக்கு முட்டி தட்டி நொறுக்கினா எல்லா உண்மையும் வெளியே வந்துருமே?”

“நீங்க என்ன பண்ணுவீங்க. உங்க சர்வீஸ் பூராவும் இப்படி அவசர அவசரமா யாரையாச்சும் பிடிச்சு முட்டிக்கு முட்டி தட்டியே பழகிட்டீங்க. இது டிஜிட்டல் யுகம். லத்தியை விட்டுட்டு புத்தியை யூஸ் பண்ணனும் ஸார்.” என்றவளை லேசான எரிச்சலோடு பார்த்தாலும், உடனடியாக அதை அடக்கிக் கொண்டார். சாதனா தொடர்ந்தாள். “இவன் கேசில் இசைச் சண்டை. காலேஜ் லெக்சரர் விவகாரத்தில் கரிக்கட்டைங்கிறவரோட ஜாதித் தகராறு. தாலூகா கிளார்க் மண்புழுவோட இலக்கியச் சண்டை போட்டிருக்கார். தொழிலதிபருக்கு கட்சிப் பிரச்சனை.”

“நாராசம், கரிக்கட்டை, மண்புழு… இவங்க எல்லாம் யாரு? இது ஒரே ஆள் நடத்தும் தொடர் கொலைன்னுதானே நினைச்சிட்டிருக்கோம்.”

“இருக்கலாம் ஸார். இவங்க எல்லாரும் ஒரே ஆளா கூட இருக்கலாம். பேரை மாத்தி வெச்சிட்டு இணையத்துல உலாவறது சர்வ சாதாரணம்.”

தாண்டவம் பல்லைக் கடித்தார். “அந்த கம்ப்யூட்டர் பொட்டிக்குள்ளே என்னதான் நடக்குது? போலிப் பேரோட உலாவறது பக்கா ஃபோர்ஜரி இல்லே? ஆள்மாறாட்டம் செக்’ஷன் 419, 468… மோசடி செக்’ஷன் 465… இத்தனையும் போடலாமே?”

கான்ஸ்டபிள் கனகு, “471 கூட போடலாம் ஸார்.” என்றார்.

பளிச்சென்று சிரித்தாள் சாதனா. “அப்புறம் ஜெயில் தாங்காது ஸார். இன்ட்டர்னெட்டோட பலமே அனானிமிட்டிதான். புனைபெயர்ல எழுதற எல்லாருமே கெட்டவங்க இல்லை. கூச்சப்பட்டு பேரை மறைச்சிக்கிறவங்க நிறைய இருக்காங்க. வெண்பா எழுதிட்டு, புஸ்தகங்களை லிஸ்ட் போட்டுட்டு, ராத்திரி கிண்டின உப்புமாவை ஃபோட்டோ பிடிச்சு போட்டுட்டு சந்தோஷப்படற அப்பாவிகள்தான் நிறைய.”

“இவ்வளவு மோசமா கெட்ட வார்த்தைல சண்டை போடற கரிக்கட்டை, மண்புழு, நாராசம் எல்லாம் அப்பாவி மாதிரி தெரியலைம்மா… பப்ளிக்ல இப்படி ஆபாசமா பேசறதுக்கே பத்து செக்’ஷன்ல உள்ள வெக்கலாம்.”

“யாரும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதுங்கிற தைரியத்தில் பேசறதுதான். நேர்ல பார்த்தா இவங்க எல்லாம் பூனைக்குட்டி மாதிரிக் கூட இருக்கலாம்.”

கனகு தலையை சொறிந்து கொண்டே கேட்டார். “ஏதோ நம்பரை வெச்சு ஆளைப் பிடிச்சிரலாம்ன்னு ட்ரெயினிங்க்ல சொல்லிக் குடுத்தாங்களே?”

“கரெக்ட். நீங்க இண்ட்டர்னெட் கனெக்ட் பண்ணினா உங்க கம்ப்யூட்டருக்கு ஒரு நம்பர் குடுப்பாங்க. ஐ.பி. அட்ரஸ்னு அதுக்குப் பேரு. அதை வெச்சு அப்பாவிகளை வேணா கண்டு பிடிக்கலாம். சைபர் கிரிமினல்கள்க்கு ஐ.பி. மாஸ்க்கிங் பண்ணத் தெரியும். அவ்வளவு சுலபமா மாட்டிக்க மாட்டாங்க.”

“இப்ப என்னம்மா பண்ணப் போறோம்?”

“ஒரு நாள் டைம் தாங்க ஸார். இவங்க எல்லாரும் ஒரே ஆளான்னு நெட்வொர்க் ட்ரேஸ் பண்ணி முதல்ல கண்டுபிடிக்கிறேன். அதைக் கண்டுபிடிச்சா மத்த புதிரெல்லாம் தானே அவிழ்ந்துடும்.”

அடுத்த நாள் கத்தை கத்தையாய் பிரிண்ட் அவுட் காகிதங்களோடு ஹோண்டா ஆக்ட்டிவ்வாவில் வந்திறங்கிய சாதனா, “மண்புழு, கரிக்கட்டை, நாராசம் மூணு பேருமே வேற வேற ஆளுங்க. இவங்களுக்கும் இந்த தொடர் கொலைகளுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியலை.” என்று சொல்ல – தாண்டவம் ஏமாற்றமானார்.

“ஆனா ட்விட்டர்லயும், ஃபேஸ்புக்குலயும் தகராறு நடந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மூணாம் நபர் யாரோ இவங்களைக் கொன்னுருக்காங்க. இந்த பிரிண்ட் அவுட் எல்லாம் நிதானமா பாருங்க ஸார். டிவிட்டர் ஃபேஸ்புக்குல நடந்த சண்டை சச்சரவுகளோட டிரான்ஸ்க்ரிப்ட். யார் யார் என்ன பேசியிருக்காங்கன்னு அட்சர சுத்தமா இருக்கு. எனக்கு ஒரு டவுட் இருக்கு. உங்க எக்ஸ்பீரியன்ஸ்ல உங்களுக்கும் அதே க்ளூ கிடைக்குதா பாருங்க. அப்படிக் கிடைச்சா கொலைகாரனைப் பிடிக்க நெட்ல நாம வலையை விரிக்கலாம்.”

சாதனா சொன்னதும் சுவாரஸ்யமாகி தாண்டவம் அந்தத் தாள்களில் இருக்கும் ஒவ்வொரு உரையாடலையும் உன்னிப்பாய்ப் படிக்க ஆரம்பித்தார். தகராறு இசையிலோ, சாதியிலோ துவங்கி பிறகு பர்சனலாகி, குடும்ப உறுப்பினர்களை இழுத்து… “ச்சை எந்த ஐடியைப் பார்த்தாலும் கொலைகாரன் மாதிரியே பேசியிருக்காங்க.”

எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் கனகு தயக்கமாக, “ஸார்… நாலு சண்டைக்குமான ஒரு கனெக்’ஷன் எனக்குத் தெரியுது.”

அச்சடித்த தாளின் மேல் தொட்டுக் காட்டினார்.

‘இனைய பொருக்கிகளா… ‘ – இது ஐ.டி. பையன்.

‘தைறியம் இறுந்தா நிஜமாண பேர்ல வந்து பேசுங்கடா.’ – இது தொழிலதிபர்.

“கொலையான நாலு பேருமே சர்வசாதாரணமா எழுத்துப் பிழைகளோட எழுதறாங்க ஸார்.”

சாதனா பிரகாசமடைந்து கையைப் பிடித்துக் குலுக்க – கனகு லேசாக வெட்கப்பட்டார். சாதனா இன்ஸ்பெக்டர் தாண்டவத்திடம் திரும்பிச் சொன்னாள். “அதேதான் ஸார் எனக்கும் டவுட். ஒரு வருஷம் முன்னால வரைக்கும் பிலாக்கணம்-னு ஒருத்தர் இணையத்தில் யாரு தமிழைக் கொலை பண்ணினாலும் வந்து அறச் சீற்றத்தோட தட்டிக் கேட்டுட்டிருப்பார். இலக்கணப்பிழை விட்டா சீறிப் பாய்வார். திடீர்ன்னு அவரை சோஷியல் மீடியாவில் ஆளையே காணோம்.”

தாண்டவம் நிமிர்ந்து உட்கார்ந்தார். “என்னம்மா அது?… யாரு தமிழைக் கொலை பண்ணினாலும்ன்னா சொன்னே?”

– 25 பிப் 2014(நன்றி: http://www.sathyarajkumar.com/)

Print Friendly, PDF & Email

1 thought on “சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *