கார் க்ரைம்

2
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 19,884 
 

பியர் கிண்ணத்தை மேசை மேல் வைத்தபடி திரும்பினான் ராம்குமார். அவனெதிரே அமர்ந்திருந்த அந்த மனிதரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. இந்த க்ளப்பில் இதற்கு முன் அவரைப் பார்த்ததில்லையே என்று புருவத்தை நெறித்தபோது அவர் புன்னகைத்தார்.

“ஐயாம் டாக்டர் மாயகிருஷ்ணன்.சைக்யாட்ரிஸ்ட்”என்றார்.கைகளை நீட்டினார்.அதைக் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான் ராம்குமார்.

“டாக்டர்.ஐ நீட் யுர் ஹெல்ப்.நான் ஒரு சிக்கல்ல இருக்கேன்”

“என்ன சொல்லு. எவளையாவது லவ் பண்ணி ஏமாந்துட்டியா”

“இல்லை டாக்டர். என் பிசினஸ்ல லவ் பண்றதுக்கெல்லாம் நேரமில்லை. எனக்கு அழகான மனைவி இருக்கா. வைஜயந்தி என் மேல உயிரையே வைச்சிருக்கா. என் பிசினஸ் அவசரத்துல கொஞ்சம் கொஞ்சமா”

“கடன் ஏதும் இருக்கா”

“இல்லை. நான் ஒரு ட்ரில்லினேர் ஆகற தூரத்துல இருக்கேன்.பணம் இல்லை என் பிரச்சனை”

“பின்னே”

“மனம். நான் ஒரு மனநோயாளியாகிட்டு இருக்கேனோன்னு சந்தேகம்”

“வாட். அதை எப்படி நீங்க சொல்லலாம்.ஒரு டாக்டர்தானே சொல்லனும்”

தலையை குனிந்து கொண்டான். இன்னொரு ஷிவாஸ் ரீகலை எடுத்துக் கொண்டு சொன்னான்.

“முதன் முதலா இதே க்ளப்ல நான் மட்டும் தனியா உட்கார்ந்து கிண்ணத்துல கொஞ்சமா நீர்வீழ்ச்சியில இருந்து அருவித்தண்ணி ஸ்லோமோஷன்ல கொட்டற மாதிரி ஒயினை ஊத்திட்டே இருக்கும்போது அந்த கிண்ணம் என் கூட பேச ஆரம்பிச்சது. போதும் ராசா.நிறுத்துன்னு.போதைன்னு நினைச்சேன். தவறு. என் கிரடிட் கார்டு என்னைப் பார்த்து சிரிச்சது”

“காட். இது ஹலூசினேஷன்.இதை வளர விட்டாதான் மனநோயாகும். நீங்க ஒரு டாக்டரைப் பார்த்திருக்கனும்”

“பார்த்தேன் டாக்டர். அந்த டாக்டரோட ஸ்டெத்தாஸ்கோப்ல என் மனைவி வைஜயந்திதெரியறா”

“மனைவிதானே. இக்னோர் பண்ணிட்டு டாக்டர் கூட பேசினிங்களா”

“இல்லை. வெளிய வந்துட்டேன். இப்ப என்னோட பிரச்சனை ஒண்ணே ஒண்ணுதான்”

“மனைவிக்கு தெரிஞ்சு போச்சா”

“இல்லை. என் காருக்கு தெரிஞ்சு போச்சு”

“பார்டன். என்ன சொல்றிங்க ராம்குமார். காருக்கு தெரிஞ்சு போச்சா”

“ஆமா டாக்டர். என்னோட கார் என்னைப் பார்த்துட்டு சிரிச்சது. நான் கூட க்ளட்ச் பாக்ஸ்ல ப்ராப்ளம்னு நினைச்சேன்.ஆனா அப்புறம் அது என்கூட பேச ஆரம்பிச்சது”

“கார் எங்கேயாவது பேசுமா”

“அப்பதான் எனக்கு சுரீர்னு உறைச்சது. மைகாட் எனக்கு ஸ்கிட்ஸோஃபெரீனியா வந்துடுத்தோன்னு பயந்துட்டேன். காரை ரோட்டுலயே விட்டுட்டு கால்டாக்சி பிடிச்சி வீட்டுக்குப் போயிட்டேன். மறுநாள் காரை ஸ்டார்ட் பண்ணினா என்னை தனியா விட்டுப் போயிட்டியே ராசான்னு கார் என் கூட பேசுது”

“மைகாட். இது நிச்சயம் மனவியாதிதான்.ஆனா குணப்படுத்திரலாம்”

“என் கார் சொல்றதைக் கேட்டா ஆச்சர்யப்படுவிங்க”

“என்ன சொல்லுது. கொலையா பண்ணச் சொல்லுது”

“ஆமா டாக்டர். எத்தனை நாள்தான் நல்லப்பிள்ளையா இருப்பே. தண்ணியடிக்கறதுல கூட சாத்வீகமான ட்ரிங்காக எடுத்துக்கறியே. ஒருநாளாவது டக்கீலா மாதிரி அசுர ட்ரிங்க் எடுத்துட்டு கொட்ற மழையில எவளையாவது கிஸ்ஸடிச்சிருக்கியா. எப்பப்பார்த்தாலும் மனைவியோட புடவையைப் பிடிச்சிட்டு பாப்பா மாதிரி அலையற. ஒரு அடல்ட்ரி உண்டா.ஒரு துரோகம் உண்டா. அட ஒரு கொலையாவது பண்ணியிருக்கியா.நீ வாழறதே வேஸ்ட் அப்படின்னு பேசுது” என்றதும் யோசித்தார் மாயகிருஷ்ணன். மதுக்கிண்ணங்களை ஒதுக்கியவாறு நறுக்கி வைத்திருந்த வெள்ளரிப்பிஞ்சுகளை வாயில் போட்டவாறே பின்னால் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். கேட்டார்.

“அப்புறமென்ன. கொலையா பண்ணின ?”

“ஆமா”என்றான்.

“மைகாட். மறுபடி சொல்லு”
“ஒரு கொலை கூட பண்ணலைன்னா என்னை மனுஷனாவே ஒத்துக்கமாட்டேன்னு என்னோட கார் சொன்னப்புறம் சும்மா இருக்கலாமா..அதனால என்னோட காரை ஓட்டிக்கிட்டே ஒரு மழைராத்திரியில போனேன். ஒரு புளியமரத்துகிட்டேஇருந்து ஒரு பொண்ணு நின்னுகிட்டிருந்தா. பார்த்தாலே ஆள் பிடிக்கறதுக்காக நிக்கறாள்னு புரிஞ்சது. காரை நிறுத்தி உள்ளே வரவழைச்சி அவ சிரிச்சிட்டே இருக்கறப்ப அவ கழுத்தை கைகளால நெறிச்சி,கண்கள் பிதுங்கிப் போய் செத்துட்டா. அவளை அதே மரத்தடியில போட்டுட்டு காரை கொண்டு போய் அபார்ட்மன்ட் காரேஜ்ல விட்டுட்டு பத்து நாளா காரை எடுக்கவே இல்லை. வைஜயந்தி கூட ஒரு மாதிரியா பார்த்தா. பத்துநாள் கழிச்சி காரை எடுத்தா கார் சிரிக்குது”

“கார் சிரிக்குதா”

“ஆமா.அத்தனை பயமா உனக்கு. நீ ஏன் இன்னொரு கொலை பண்ணி தைரியத்தை வரவழைச்சிக்கக் கூடாதுங்குது. எனக்கு பயமா இருக்கு டாக்டர்.என்னை காப்பாத்துங்க” என்றான் ராம்குமார்.

மாயகிருஷ்ணன் யோசித்தார்.

“உன் காருக்கு இன்சூரன்ஸ் இருக்கா”

“இருக்கு டாக்டர்”

“அப்ப ஒரு கொலை பண்ணிரலாம். நான் திட்டம் வகுத்துத்தரேன். அடுத்த வாரம் என்னை வந்து பார்”

“அடுத்த வாரம் வரைக்கும் தாங்காது டாக்டர். நான் பாட்டுக்கு குழம்பிப் போய் என் மனைவியை கொன்னுட்டா”

“அதுக்கும் ஒரு வழி இருக்கு. ஜவுளிக்கடைகளுக்கு பொம்மைகள் செஞ்சுத் தர்ற கம்பெனி எனக்குத் தெரியும். ஒரு ஜவுளிக்கடைக்குன்னு சொல்லி ஒரு பொம்மை வாங்கித் தரேன். அதை வேணும்னா உன்னோட அவுட் ஹவுஸ்ல வைச்சு ‘கொன்னு’ பாரேன்”
எழுந்தார்.

முகவரி அட்டையை தந்து விட்டு அகன்றார் மாயகிருஷ்ணன். வெளியே வந்து காரை எடுத்தபோது கார் மெலிதாக சிரித்தது.

“முட்டாள் நீ என்ன சின்னப் பையனா. பொம்மையை கொலை செய்வாயா. அதை விட நீ ஒரு அழகான பொண்ணை கொலை செய்யலாம். உன்பின்னால் பார். உன்னையே பார்த்தபடி ஒரு பொண்ணு நிக்கறா. அவளை வேணும்னா கொல்றியா”என்றது கார்.

திரும்பினான்.

அந்தப் பெண் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அருகில் வந்தாள்.

“ஹாய் ஐம் ராஷ்மி. என்னோட பாய்ஃப்ரன்ட் வரலை. ஜாய்ன்மி” என்றாள்.

“போம்மா. பத்திரமா வீடு போய் சேரு” என்று காரை கிளப்பிக் கொண்டு விரைந்தான் ராம்குமார். வீடு போகும் வரை கார் கெக்கெக் என்று சிரித்துக் கொண்டே வந்தது

அடுத்த வாரம்-

“கம்மான் யங்மேன். உன் கொலை முயற்சிக்கு தடை போட ஒரு ப்ளான் இருக்கு என்கிட்ட” என்றார் டாக்டர் மாயகிருஷ்ணன்.

“என்ன சார். அந்த பொம்மை உத்தி எல்லாம் வேண்டாம். கார் சிரிக்குது”

“சிரிக்கற ஆளை அழிச்சிருவம். உன் காரை எடுத்துட்டு வா. நடுரோட்டுல நிக்க வைச்சிட்டு ஒரு டாங்கர் லாரியை வைச்சி மோதி தகர்த்துரலாம்”

தகர்த்தார்கள்.

கார் அப்பளமாக நொறுங்கியது. நொறுங்கும்போது ‘அடப்பாவி கொலைகாரா’ என்பது போல் கேட்டது. சே. பிரமை. நொறுங்கிய மிச்சத்தை எட்ட நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு கை குலுக்கினான்.

“இன்சூரன்ஸ்காரங்களுக்கு சொல்லிரு. டேமேஜ் க்ளைம் கிடைச்சதும் புதுசா ஒரு ‘நல்ல’ காராகப் பார்த்து வாங்கிரு” என்றார்.

ooOoo

ஷோரூமிலிருந்து புத்தம் புதிதாக அந்த கறுப்புநிற காரை வாங்கிக் கொண்டு வந்தான் ராம்குமார். கார் எதுவும் ‘பேச’வில்லை. ரெஸ்ட்டாரென்ட்டில் சிக்கன் கபாப் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்திருந்தான். எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. வீட்டுக்கு வந்தான். ‘எதுவும்’ பேசவில்லை. கார் சாதுவாக நின்றிருந்தது.

பேசிப்பார்க்கலமா?

“ஏய்..கார்.ஏதாவது பேசேன்”

மௌனமாக நின்றிருந்தது.அப்பாடா என்றிருந்தது.அவனது தோளைத்தொட்டவாறு கேட்டாள் வைஜயந்தி.

“என்னங்க கார்கிட்ட என்ன பண்ணறிங்க. கார் என்ன உங்க கூட பேசவா போகுது”

“அது சரி. பட்டாதான தெரியும். ஓரு கப் காபி குடேன்.பசிக்குது”

“என்னங்க. எங்கேயாவது ஒரு டூர் போயிட்டு வரலாமா. புதுக்கார் வாங்கியிருக்கம்”

“டூர் போலாம். ஆனா கார்லயா”என்று இழுத்தனை இழுத்து-

“போய்த்தான் ஆகனும்.”என்று அடம்பிடித்தாள்.

பாண்டிச்சேரி.

அரவிந்தர் ஆசிரமம் போய்விட்டு வரும் வழியில் கார் முனகிக் கொண்டு நின்று போனது.இறங்கி பானட்டை திறந்து பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினான்.

“என்னங்க ஆச்சு”

“தெரியலை.இந்த ஆன்ரோடு ஹெல்ப்லைனை பிடிக்கறேன்.ஆளை வரச்சொல்றேன்”

“வர்றாங்களாமா”

“தெரியலை. கால்சென்டர்ல யாரோ ஒரு லேடி பேசறா. ஆள் வர்ற மாதிரி தெரியலை. லோக்கல்ல ஏதாவது சர்வீஸ் சென்டரைப் பார்க்கலாம்”

அருகிலிருந்த வொர்க்ஷாப்பிலிருந்து வந்தவன் காரைப் பார்த்து விட்டு-

“சார் டிரான்ஸ்மிஷன்ல ஒரு எலக்ட்ரிக் சர்க்யூட்ல கனெக்ஷன் கட் ஆயிருக்கு. இதுக்கு ஸ்பேர் கிடைக்குமான்னு தெரியலை. பாய்க்கடையில எந்த ஸ்பேர் வேணும்னாலும் கிடைக்கும். டேய் குமாரு.போய் பாய்கிட்ட நான் சொன்னேன்னு வாங்கிட்டு வா. நீங்க மரநிழல்ல நில்லுங்க சார்” என்றவன் அரைமணியில் சரி செய்தான். ராம்குமார் நீட்டிய ஐநூறு ரூபாயை வாங்கிக்கொண்டு பைக்கில் ஏறியவன் தன் சகாவிடம் சொன்னான்.

“பாய்கடையில கிடைக்காத சாமானே இல்லைடா.ஆக்சிரன்ட்ல ஜாம் ஆன வண்டியை கூட கொண்டு வந்து பார்ட்ஸை பிரிச்சிடுவார். தக்க சமயத்துல டிரான்ஸ்மிஷன் ஸ்பேர் ‘சிப்’ கிடைச்சது. வா போவம்”

மரத்தடியில் நின்றிருந்தாள் வைஜயந்தி. கார் அருகே போனான் இக்னிஷனை முடுக்கி விட்டான். வைஜயந்தி அருகே உள்ளே வந்து அமர்ந்ததும்,”யார்கிட்ட பேசறிங்க” என்றாள் ஆச்சர்யமாக.

ராம்குமார் அவள் கழுத்தருகே கைகளைக் கொண்டு போய்… மேற்கொண்டு சொல்ல விருப்பமில்லை எனக்கு. என்னுடைய கார் சொல்லாதே என்கிறது.

– TA விஜய் [tavijey@gmail.com] (ஜூலை 2009)

Print Friendly, PDF & Email

2 thoughts on “கார் க்ரைம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *