ஓவர் ப்ரிஜ்ஜில் இன்னொரு ஆக்ஸிடென்ட்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 16,016 
 

ஸ்டேஷன் இன்சார்ஜ் சோமசேகருக்கு அந்தக் கார் டிரைவரைப் பார்த்ததுமே பிடிக்காமல் போயிற்று. காரணம் கேட்டால் இன்ட்யூஷன் என்று சொல்வார். இருக்கலாம்.

அது ஒரு வெள்ளை ஸ்கார்பியோ. முன்னால் கொடி கட்டுவதற்கான ஹோல்டர் இருந்தாலும் கொடி எதுவும் கட்டப்படவில்லை. ஆனால் அதன் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் அந்த வண்டியின் உரிமையாளர் ஒரு முக்கியப்புள்ளி என்று மௌனமாகப் பறைசாற்றியது. சோமசேகர் கண்கள் எதையும் விடவில்லை.

சிக்னலில் நிற்காமல் ஜம்ப் செய்ய முயன்றதால் தான் அதை மடக்கி நிறுத்தி வைத்தார். சாதாரண நாட்களில் போனால் போகட்டும் என்று விட்டுவிடுவார். ஆனால் இன்று அவரது போலீஸ் உள்ளுணர்வு அதை நிறுத்தச் சொல்லியது.

“வெளில எறங்கு”

“சார், லைசென்ஸ் இன்சூரன்ஸ் எல்லாம் பக்காவா இருக்கு சார். கொஞ்சம் அவசரமா போக வேண்டியிருந்ததுனாலத் தான் சார் இந்தத் தப்பச் செஞ்சிட்டேன். ப்ளீஸ் மன்னிச்சுக்குங்க சார்”

“சந்திரன், மொதல்ல இந்த ஆள எறக்கி அப்படி ஓரமா ஒக்கார வையுங்க. அப்புறம் பேப்பர்ஸ் எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணுங்க” என்று அவர் சொன்னதும், கான்ஸ்டபுள் சந்திரன் ஒரு இயக்கப்பட்ட எந்திரன் போல தயாரானார். சோமசேகர் அருகே போடப்பட்டிருந்த ஒரு கல்லின் மீது உட்கார்ந்தார்.

ஒரு இரண்டு நிமிடத்தில் சந்திரன் அவரிடம் வந்தார்.

“சார் எல்லாம் சரியா இருக்கு…” என்று இழுத்தார்.

“என்னய்யா இருக்குன்னு இழுக்கற? என்ன விஷயம்?”

“ சார் உள்ளார ஒரு சூட்கேஸ் வச்சிருக்கான். என்ன இருக்குன்னு கேட்டா மழுப்பறான். அதான்…”

“ சே!” என்று ஆயாசத்துடன் சோமசேகர் எழுந்தார். அங்கே பயத்துடனும் ஒருவித பதட்டத்துடனும் நின்றுகொண்டிருந்த அந்தக் கார் டிரைவரை நெருங்கி “ என்னையா இருக்கு சூட்கேசுல? சொல்லித் தொலைய வேண்டியதுதானே? இல்லாட்டி தெறந்து காமி”

“ சார், அது வந்து.. வேணாம் சார்… பெரிய அய்யாவுக்குத் தெரிஞ்சாக் கோவிப்பார்.”

“யாருய்யா அது? தெறந்து காமிக்கலேனா நான் கோவிப்பேன். சந்திரன், சாவிய வாங்கி தெறந்து பாருங்க. தர மறுத்தா, கேஸ் புக் பண்ணி, ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க.”

“சார்! அதெல்லாம் வேணாம் சார்” என்று அலறினான் ட்ரைவர். “இந்தாங்க சாவி” என்று சந்திரனிடம் கொடுத்துவிட்டு, சோமசேகரைப் பார்த்து “நான் பெரிய அய்யாவுக்கு ஒரு போன் பண்ணிக்கட்டுங்களா?” என்றான் கலவரத்துடன்.

அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்த சேகர், சரியென்று தலையாட்டினார்.

சூட்கேசைத் திறந்து மௌனமாகச் செக் செய்த சந்திரன், திடீரென்று “சார்” என்று குரல் கொடுத்தார். அந்தக் குரலைக் கேட்டு சேகர், ட்ரைவர் இரண்டு பேருமே திடுக்கிட்டார்கள். ட்ரைவர் போனை கையில் வைத்தபடி ஓடிவிடுபவன் போல நின்றான். கண்ணாலேயே அவனை எச்சரித்த சேகர் வண்டியை நெருங்கினார்.

“என்னய்யா?”

“சார் இந்தச் சூட்கேசைப் பாருங்க” என்று சந்திரன் அதை சேகர் பக்கம் திருப்பினார். சேகரின் கண்கள் விரிந்தன. கட்டு கட்டாக ஆயிரம் ரூபாய் நோட்டுகள். எப்படியும் ஒரு கோடி இருக்கும்.

“டேய், இங்க வா!” என்று டிரைவரைக் கூப்பிட்டார். அவன் போனில் யாருடனோ (பெரிய அய்யாவாக இருக்கும்) பேசிக்கொண்டிருந்தான். இன்ஸ்பெக்டர் கூப்பிட்டதும் பதட்டத்துடன் ஓடி வந்தான். “என்னடா இது?” என்று கேட்ட அவரிடம் பதில் சொல்லாமல் மொபைலை நீட்டினான். சிறிது யோசித்த சேகர் அதை வாங்கி “ஹலோ!” என்றார்.

மறுமுனையில் ஒரு ஆளுமையான குரல் “ ஹல்லோ இன்ஸ்பெக்டர். நான் …. பேசறேன். கொஞ்சம் அவனப் போக விடுங்க. மேட்டர் அவசரம்” என்றது.

“சார், கார்ல….” என்று ஆரம்பித்தவரை கட் செய்து, “ ரெண்டு ஸீ இருக்கு. உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துக்குங்க. வண்டி ரொம்ப நேரம் அங்க நிக்க வேணாம். எனக்கு ரிஸ்க். போக விடுங்க” என்றார்.

சோமசேகருக்கு கோவம் உச்சந்தலையில் ஏறியது. “ என்ன பேசறீங்க சார்? அதெல்லாம் ஒண்ணும் நடக்காது. சட்டப்படி என்ன செய்யணுமோ அது தான் செய்வேன்”

“சார், பணம் வேண்டாம்னா வேற ஏதாவது வேணும்னாலும் செய்யறேன். ப்ளீஸ். என் நிலைமைக்கு நான் இப்படியெல்லாம் கெஞ்சுனதேயில்லை. அந்த நாயினால வந்த வினை”

சேகர் பதில் சொல்ல எத்தனிக்கும் முன் அவர் மொபைல் சிணுங்கியது.

அவர் ஸ்டேஷனில் இருக்கும் இன்னொரு கான்ஸ்டபுள் கனகராஜ். “சார், தாம்பரம் பிரிஜ்ஜுல ஒரு பெரிய ஆக்ஸிடென்ட். மெசேஜ் வந்திச்சி. ஸ்டேஷன்ல வேற யாருமே இல்ல. நான் அங்க போகறேன். உங்ககிட்ட சொல்லிட்டு போகலாமின்னுதான் போன் செஞ்சேன்.”

“வேணாம் கனகராஜ்! நான் இங்க கிட்டத்துல தான் இருக்கேன். நான் போறேன்” என்று சொல்லி, “சந்திரன், அந்தக் கார கொஞ்சம் ஓரமா பார்க் பண்ணுங்க. ஏய், ட்ரைவர் நீ சூட்கேசோட என் ஜீப்புல ஏறு” என்று சொல்லிவிட்டு அவர் மொபைலில் “நான் உங்க ஆள பெட்டியோட கூட்டிக்கிட்டு போறேன். ஒரு ஒன் அவர்ல உங்களுக்கு மெசேஜ் வரும். முடிஞ்சா அதுக்குள்ள லீகலா எதுனாச்சியும் safety செஞ்சுக்குங்க” என்று சொல்லி பதிலை எதிர்பாராமல் கட் செய்தார்.

இரண்டு நிமிடங்களில் அவர் ஜீப், அந்த ட்ரைவர் சூட்கேஸ் சகிதம், தாம்பரம் ஓவர் ப்ரிஜ் நோக்கிப் பறந்தது. ஐந்து நிமிடங்களில் ஆக்ஸிடென்ட் ஸ்பாட்டை அடைந்து விட்டார்.

விபத்து அவர் எதிர்பார்த்ததை விட கோரம். இறந்தவரின் தலை கழுத்துவரை சிதைந்திருந்தது. உடலைச் சுற்றி ஒரே ரத்தக் களரி. இவரைப் பார்த்தவுடன் அங்கே நின்றிருந்த ஒரு ட்ராபிக் போலீஸ்காரர் ஓடி வந்தார். இவருக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு “ சார் ஒரு இருவது நிமிஷம் இருக்கும் விபத்து நடந்து. செத்தவர் பேரு சுப்ரமண்யம். சிட்டில கொஞ்சம் பேருள்ள வக்கீல். அவர் பாக்கெட்டுல இருந்த மொபைலப் பார்த்து சில நம்பர் நோட் செஞ்சு வச்சிருக்கேன். இன்பார்ம் பண்ணிடட்டுமா” என்றார்.

“ம்ம்ம்” என்று முனகினார் சேகர். அநியாயமாக ஒரு உயிர் சேதப்பட்டு இருந்தது. “இடிச்சவன் எங்க?”

“ சார் இது ஹிட் அண்ட் ரன். அவன் தப்பிச்சுட்டான். லாரி. யாரோ ஒரு புண்ணியவான் நம்பர் நோட் பண்ணிட்டான். இதோ இருக்கு.”

“ சரி, ஒரு பத்து நிமிஷம் இங்க இருங்க. நான் ஸ்டேஷன்லேர்ந்து ஆளக் கூப்பிடுறேன். மத்த வேலையெல்லாம் அவங்க பாத்துப்பாங்க”

“எஸ் சார்”

“அப்புறம் சார் கிட்ட கொஞ்சம் பேசணும்”

“இப்படி வாங்க” என்று தன் ஜீப் அருகில் அழைத்துச் சென்றார்.

“சொல்லுங்க”

“சார், இவர யாரு இடிச்சதுன்னு எனக்குத் தெரியும். இவர் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? போன மாசம் எக்மோர்ல நடந்த ஹிட் அண்ட் ரன் கேசுல செத்துப் போன பெண்ணோட குடும்பத்துக்கு ஆதரவா ஆஜராகி, இடிச்ச அந்தக் காலேஜ் பையனுக்குத் தண்டனை வாங்கித் தந்தாரே, அந்த வக்கீல் தான் இவர். அந்தப் பையனோட குடும்பத்தார் தான் ஏற்பாடு செஞ்சு இந்த ஆக்ஸிடென்ட் செஞ்சிருக்காங்க. இதச் செஞ்சது…” என்று சற்றுத் தணிந்த குரலில் சேகரின் காதில் ஏதோ சொன்னான்.

“உண்மைய சொல்றீங்களா இல்ல எதுவும் விளையாடறீங்களா? “

“உண்மை சார். நான் கண்ணால பார்த்தேன். அவன் தான் லாரி ஒட்டிவந்தான்.”

“சரி நீங்க போங்க”

அந்த ட்ராபிக் போலீஸ் அரைமனதுடன் அங்கிருந்து அகன்றார். சோமசேகர் ஒரு ஸிகரெட் எடுத்துப் பற்ற வைத்தார். புகையை உள்ளே இழுத்து வெளியே விட்டார். இரண்டு மூன்று இழுப்பு வேக வேகமாக இழுத்து விட்டு அதைக் கீழே போட்டு ஷூ காலால் மிதித்து அணைத்தார். ஜீப்புக்குள் தலையை விட்டு அங்கே உட்கார்ந்திருந்த டிரைவரிடம் “உங்க பெரிய அய்யாவுக்குப் போன் போடு” என்றார்.

அவன் குழப்பத்துடன் நம்பர் போட்டு ஓரிரு வார்த்தைப் பேசிவிட்டு இவரிடம் போனைத் தந்தான்.

“ஹல்லோ..”

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர்”

“என்ன வேணும்னாலும் செய்யறேன்னு சொன்னீங்க…”

“ஆமாம் இப்பவும் சொல்றேன்”

“ ஒரு ஆளு பேரு சொல்றேன். அவன…” என்று போனில் கிசுகிசுக்க ஆரம்பித்தார்.

Print Friendly, PDF & Email

1 thought on “ஓவர் ப்ரிஜ்ஜில் இன்னொரு ஆக்ஸிடென்ட்

  1. மிகவும் அற்புதமான கதை. முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்! பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *