என் பெயர் கான், ஆனால் நான் தீவிரவாதியல்ல

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,073 
 

மழை நசநசத்துக் கொண்டிருந்தது. பெங்களூரில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட் வரைக்கும் தொடரும். மழைக்காலத்தில் சாலையோர மரங்களில் பாசி படிந்து கிடப்பதை பார்க்க முடியும். இந்த வருடம் ஜூன் மாதத்தில் மழை இல்லை. ஜூலையின் இறுதியில் இருந்துதான் பெய்து கொண்டிருக்கிறது.

அருள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. தினமும் பைக்கில்தான் அலுவலகம் போய் வருகிறான். அலுவலகத்திலிருந்து வீடு போய்ச்சேர ஒரு மணி நேரம் பிடிக்கும். மழைக் காலத்தில் ஒன்றரை மணி நேரம் கூட ஆகிவிடுகிறது. வழக்கமாக டொம்ளூர், கோரமங்களா, ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் ஆகிய பகுதிகளை தாண்டும் வரை அருள் கண்டகண்ட சமாச்சாரங்களை யோசித்துக் கொண்டே வருவான். கண்டகண்ட சமாச்சாரங்கள் என்பதில் அலுவலகப் பிரச்சினை, வீட்டுச்சிக்கல்கள், சினிமாக்கதைகள், பழைய காதலிகள் என எது வேண்டுமானாலும் அடங்கியிருக்கும். எதைப் பற்றியும் யோசனை செய்ய விருப்பமில்லாத போது யாருடனாவது ஃபோனில் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவான்.

ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டைக் கடந்து மங்கமன்பாளையாவைச் சேரும் இடத்திலிருந்து அருளுக்கு பதட்டம் தொற்றிக் கொள்ளும். மங்கமன்பாளையாவில் முஸ்லீம்கள் அதிகம். சாலைகள் குறுகலானவை. வீடுகள் குட்டி குட்டியாகவும் நெருக்கமாகவும் அமைந்திருக்கும். இந்தச் சாலைகளில் வேகமாக பைக் ஓட்டும் இளைஞர்களும், வாகனங்களைப் பற்றிய எந்த பயமும் இல்லாமல் சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களும் அருள் பதட்டம் அடைவதற்கு தேவையான சூழலை உருவாக்கி வைத்திருப்பார்கள். பெங்களூர் வந்த புதிதில் இந்தப்பகுதியைத் தாண்டுவதில் அருளுக்கு பெரிய சிரமமமோ அல்லது பயமோ இருக்கவில்லை.

தீபாவளிக்கு முந்தின நாள் நிகழ்ந்த அந்த சம்பவத்தை பார்த்த பிறகு அருளால் பதட்டம் அடையாமல் இருக்க முடியவில்லை. அது ஒரு முன்னிரவு நேரம். அருள் அலுவலகம் முடிந்து வரும் போது மங்கமன்பாளையாவில் ஆண்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பார்க்கவேண்டும் என மூக்கு அரித்தது. இறங்கி கூட்டத்திற்குள் சென்றான். ஒரு ஆளை நிறுத்த வைத்து முகத்தில் இரத்தம் வரும் வரைக்கும் அடித்துக் கொண்டிருந்தார்கள். அவன் அனேகமாக வட இந்தியனாக இருக்கக் கூடும். பேசுவதற்கான தெம்பு அவன் உடலிலும் மனதிலும் இல்லை என்பது தெரிந்தது. இருப்பினும் அவனுக்கு அடி கொடுப்பதை சில இளைஞர்கள் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அவன் ஒரு முஸ்லீம் குழந்தையின் மீது பைக்கை இடித்துவிட்டானாம். அவனை அடித்தது போதும் என்று சொல்வதற்கு அருகில் ஒருவரும் இல்லை. அருளுக்கும் அத்தகைய துணிச்சல் துளியும் கிடையாது.

கூட்டத்தை கலைத்துக் கொண்டு வந்த ஒரு போலீஸ் கான்ஸடபிள் ”சலோ சலோ” என்றார். கூட்டம் களைவதற்கு முன்பாகவே அருள் கிளம்பி வந்துவிட்டான். இதன் பிறகுதான் மங்கமன்பாளையாவை கடக்கும் போதெல்லாம் அருள் பதட்டம் அடையத் துவங்கினான். அவனையும் அறியாமல் “மை நேம் இஸ் கான். ஆனால் நான் தீவிரவாதியல்ல” என்ற ஷாருக்கானின் வசனம் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருந்தாலும் பதட்டத்தை தவிர்க்க முடிந்ததில்லை. ஆனால் இது ஐந்து நிமிட பதட்டம்தான். அதுவும் வெளிகாட்டத் தேவையில்லாத மென் பதட்டம். மங்கமன்பாளையாவைத் தாண்டி பொம்மனஹள்ளியை அடையும் போது தான் நார்மல் ஆகிவிடுவதை அருள் உணர்ந்திருக்கிறான்.

இன்றைக்கு மழையின் காரணமாக குடியிருப்புகள் இருக்கும் சாலைகளில் ஒருவரும் இல்லை. மங்கமன்பாளையாவை அடைந்த போது மின்சாரமும் இல்லை. கும்மிருட்டாக இருந்தது. சலவை செய்து வைத்திருக்கும் சட்டையை இரண்டு நாட்களுக்கு அணிந்து கொள்ளும் வழக்கமுடைய அருள் இன்று புதுச்சட்டை அணிந்திருந்தான். சட்டை ஈரமாகாமல் இருந்தால் இன்னொரு நாள் அணிந்திருக்க முடியும் என நினைத்தான் ஆனாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் வண்டி ஓட்டுவது அருளுக்கு ஆசுவாசமாக இருந்தது. தினமும் மழை வந்தாலும் கூட பரவாயில்லை என்று தோன்றியது.

கொஞ்சம் வேகம் எடுத்தான். மழை நீர் ஹெல்மெட் கண்ணாடி மீதாக வழிந்து கொண்டிருந்தது. பாதை சரியாகத் தெரியவில்லை. நூறு மீட்டர்கள் கடந்திருப்பான். சடாரெனெ சத்தம் கேட்டது. ஏதோ உருவத்தின் மீது இடித்துவிட்டான். மோதலுக்கு சில வினாடிகள் மட்டுமே தேவைப்பட்டது. இடிப்பதற்கு முந்தைய நொடி வரை அந்த உருவம் அருளின் கண்களுக்குத் தெரியவில்லை. இடிக்கும் கணத்தில் யார் மீதோ இடிக்கவிருப்பதாக உணர்ந்தான். ஆனால் வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஹெல்மெட் தனியாகக் கிடந்தது. அருளும் கீழே கிடந்தான். ஆனால் அவனால் எழுந்திருக்க முடிந்தது. எழுந்து பார்த்த போது எதிரில் வந்த அந்த உருவம் சாக்கடைக்குள் கிடந்தது. சப்தம் எதுவும் இல்லை. வெளிச்சம் இல்லாததால் யாரென்றும் பார்க்க முடியவில்லை. அவசர அவசரமாக செல்போனில் இருந்த டார்ச்சை அடித்து பார்த்தான்.

அருளுக்கு ஒரு கணம் மூச்சு நின்று திரும்ப வந்தது.நிறைமாத கர்ப்பிணிப்பெண். பர்தா அணிந்திருந்தாள். அசைவற்றுக் கிடந்த அவளது நெற்றி சாக்கடையின் விளிம்பில் அடித்திருந்தது. பால் பாக்கெட் வாங்கி வந்திருப்பாள் போலிருக்கிறது. பாக்கெட் அவளுக்கு அருகில் உடைந்து கிடந்தது. இதற்கு மேலும் அருளால் அவளைப் பார்க்க முடியவில்லை. அவள் மீதான பரிதாபத்தைவிடவும் தான் தப்பிக்க வேண்டும் என்ற பயமே அவனை அவசரப்படுத்தியது. மிக அவசரமாக பைக்கை எடுத்தான். முதல் உதையில் ஸ்டார்ட் ஆகவில்லை. இன்னொரு உதைக்கு பிரச்சினை செய்யாமல் பைக் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அந்தப் பெண்ணை திரும்பிப்பார்த்தான். அப்பொழுதும் அசைவற்றுத்தான் கிடந்தாள். யாரோ ஒருவன் பின்னாலிருந்து ஓடி வருவது தெரிந்தது. பைக்கை முறுக்கினான். அது வேகமெடுத்த போது நெற்றியில் இருந்து வழிந்த இரத்தம் அவனது கண் இமைகளில் பிசுபிசுத்தது. மழை இன்னமும் நசநசத்துக் கொண்டிருந்தது. “மை நேம் இஸ் கான்” என்ற வசனம் ஏனோ திரும்பவும் நினைவுக்கு வந்தது.

– ஜூலை 18, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *