இரவு நேரக் குற்றங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 15,687 
 

ஸ்டேஷனுக்குப் பாதி வழியில் இருக்கும் போதே, இன்ஸ்பெக்டர் ஆர்யாவின் செல் ஒலித்தது.

தன் ஸ்டேஷனிலிருந்து என்று உறுதிப் படுத்திகொண்டபிறகு “சொல்லு” என்றான் அதிகாரத் தொனியில்.

“சார்! கங்கணா மண்டபத்தாண்ட ரத்தக் கறையோட துணிங்க கெடக்குதுன்னு இன்பார்மேஷன் கெடச்சிருக்கு. நீங்க எங்க இருக்கீங்க?”

“ ஒரு பதினஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன். நீ ஒண்ணு செய்யி. ரெண்டு பேர அனுப்பி வை. யாரையும் அண்ட விடாமப் பார்த்துக்க. அப்புறம் மோப்ப நாய்க்கும் சொல்லிடு.”

“கண்டிப்பா சார்”

காரை பீச் ரோடில் இருந்து திருவல்லிக்கேணி போகும் இடப்புறம் திருப்பிய ஆர்யா ரொம்ப களைத்திருந்தான். தொடர்ந்து இரவு ட்யூட்டி பார்த்து வருகிறான் கடந்த ஆறு மாதங்களாக. அவனால் பகலில் சரியாகத் தூங்க முடிவதில்லை. ஸ்டேஷனில் சற்று ஓய்வாக இருக்கலாம் என்றால் இரவு நேர வேலைப் பளு அதிகம்.

இருவது நிமிடத்தில் கங்கணா மண்டபம் சென்று விட்டான். அந்த இரவு நேரத்திலும் ஒரு பத்து பேர் கூடியிருந்தனர். இரண்டு போலீஸார் அவர்களை விரட்டிக் கொண்டிருந்தனர். ஒரு ஆக்ரோஷமான போலீஸ் நாயுடன் ஒருவர் நின்றிருந்தார்.

“என்ன ராஜாமணி! சௌக்கியமா?” என்று அவரைக் கேட்டார் ஆர்யா.

“எஸ் சார்!”

“மோப்பம் புடிச்சாச்சா? போகலாமா?”

“போகலாம் சார்” என்று சொல்லி நாயை உசுப்ப அது வேகமாக அவரையும் இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தது. ஆர்யாவும் அவரைத் தொடர்ந்தார். பார்த்தசாரதி கோவில் வாசல் வழியாக ஓடி சுங்குவார் தெரு என்று தொடர்ந்து அப்பால் உள்ள அயோத்திக் குப்பத்தின் பின் பகுதிக்கு இட்டுச் சென்றது.

அங்கு சென்ற பின் நிதானித்த நாய், திடீரென்று ஒரு குடிசைக்கு அருகில் சென்று குலைத்தது. சட்டென்று உஷாரான ஆர்யா தன் துப்பாக்கியை எடுத்துத் தயார் நிலையில் வைத்து, அடிமேல் அடிவைத்து குடிசைக் கதவைத் திறந்தான்.

உள்ளே அரைகுறை ஆடைப் பெண் மீது ஒரு அரை குறை ஆடை ஆண் படர்ந்திருந்தான். போலீஸ் நுழைந்ததால் கலவரமான இருவரும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார்கள்.

அவனை ஓங்கி அறைந்தான் ஆர்யா. அலறியபடியே அவன் காலடியில் விழுந்தான். “யாரடா கொல செஞ்ச? சொல்றா! இல்லாட்டி அடிச்சே கொன்ருவேன்!”

“சார்! அடிக்காதீங்க சார்! நான் வேணும்னே செய்யலீங்க. போதைல சண்டை ஆயிரிச்சி. அவனும் என்ன அடிச்சான். நான் ஒரு ஓத விட்டேன். படாத எடத்துல பட்டுரிச்சி. ஸ்பாட்லேயே காலி. நான் பயந்து போய் அவன தூக்கி
நம்ம மெரீனாவாண்ட கடல்ல போட்டுட்டேன். தண்ணில வுளுந்து செத்துட்டான்னு நெனைப்பாங்கன்னு. என்ன அடிக்காதீங்க சார், நான் எடத்தக் காட்டறேன்!”

அப்புறம் மெரீனா விஜயம். பிணத்தை எடுத்து போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினான். பிறகு அந்த ஆள ஜீப்பில் ஏற்றிக்கொண்டு ஸ்டேஷன். அப்புறம் எழுத வேண்டிய ரிப்போர்ட்கள் எழுதி அவனை சிறையில் வைத்தான்.

ரொம்பவும் களைப்பாக இருந்தது. ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தான். கடந்த ஆறு மாசம் தொடர்ந்து நைட் ட்யூட்டி. மல்லிகா (மனைவி) கூட சொல்லிப் பார்த்து அலுத்துவிட்டாள். சண்டை கூட போட்டாள். இவன் என்ன செய்வான்?

மல்லிகா ஒரு பேங்கில் வேலை பார்த்தாள். இவன் ட்யூட்டி முடிந்து வரும் வேளையில் அவள் கிளம்பி விடுவாள். சரியாகப் பேசிக்கொள்ள கூட முடியவில்லை.

இப்படி சுயப் பச்சாதாபத்தில் மூழ்கி இன்னொரு சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது போன் அடித்தது.

பன்னீர்செல்வம்! அவன் CI. அவ்வப்போது டிப்ஸ் தருவான். கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வான்.

“என்ன செல்வம்? இந்நேரத்துல? ஏதும் அர்ஜண்டா?”

“ஆமா சார்! நம்ம பைக்ராப்ட்ஸ் ரோடுல ஒரு பெரிய ஹோட்டல் இருக்கில்ல அங்க பலான மேட்டர் நடக்குது சார். இப்பம் ரெய்டு போனீங்கன்னா புடிச்சிர்லாம். அத்த சொல்லத்தான் போன் பண்ணினேன்”

“சரி செல்வம், நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லி மொபைல் கால் கட் செய்தான்.

“மாணிக்கம், பொன்னம்பலம், நீங்க ரெண்டு பேரும் என்னோட வாங்க. ஒரு ரெய்டு.”

அடுத்த இரண்டு நிமிடத்தில் அவன் காரிலேயே மூவரும் புறப்பட்டார்கள். ஐந்தாவது நிமிடத்தில் ஹோட்டல் வாசலில் இருந்தார்கள். சட்டென்று இறங்கி ரிசப்ஷன் சென்று அங்கிருந்த டை அணிந்த ஆளிடம் தன் ஐடி கார்டைக் காட்டினான் ஆர்யா. அவன் முகம் வெளிரிற்று.

“சர், வீ ஆர் எ ரெஸ்பெக்டபிள் ஹோட்டல்..” என்று ஆரம்பித்தவனை ஒரு முறை முறைத்தான். அவன் அடங்கிப் போனான். முதல் மாடிக்குச் செல்லும் லிப்ட் அருகில் பொன்னம்பலத்தை நிறுத்திவிட்டு மாணிக்கத்துடன் படியேறிச் சென்றான்.

மாடியில் சிறிது யோசித்து இடது பக்கம் திரும்பி இரண்டாம் அறைக் கதவைத் தட்டினான். இரண்டொரு நிமிடம் கழித்து அறைக்கதவு திறந்தது.

நல்ல உயரமாக ஹாண்ட்சமான ஒருவன் கதவைத் திறந்து “எஸ்?” என்றான்.

ஆர்யா மெளனமாக தன் ஐடி கார்ட் காட்டினான். அதைப் பார்த்தவன் முகத்தில் ஒரு வித மாற்றமும் இல்லை.

“ ஐ ஹேவ் கம் ஹியர் வித் மை வைஃப் ஆன் பில்க்ரிமேஜ். எனி ப்ராப்ளம்? உங்களுக்கு என் ஐடி வேணுமா? மனைவியைக் கூப்பிடட்டுமா?” என்றான்.

அவனை ஒரு முறை பார்த்து அவன் பின்னால் அறையையும் பார்த்த ஆர்யா, “சாரி பாஃர் தி ட்ரபிள்” என்று சொல்லி, “வாங்க மாணிக்கம்” என்று தடதடவென்று படியிறங்கிச் சென்றான்.

மீண்டும் ஸ்டேஷன்.

“என்ன சார், செல்வம் தப்பா ந்யூஸ் தர மாட்டானே” என்ற மாணிக்கத்திடம் “ இட் ஹாப்பென்ஸ்” என்றான்.

மொபைலை எடுத்து மணி பார்த்தான். மணி காலை நான்கு. மொபைல் வால் பேப்பரில் மல்லிகா சிரித்தாள். ஆனால் ஹோட்டலில் அந்த ஆள் பின்னால் இருந்த டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தெரிந்த மல்லிகா சிரிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. பின் கழுத்தை அழுத்திவிட்டுக் கொண்டான்.

“சார்! டயர்டா இருந்தா வீட்டுக்குப் போங்க. நாங்க பார்த்துக்கறோம்” என்றான் மாணிக்கம்.

வீட்டுக்குப் போகலாம் என்றால் மல்லிகா எப்படியும் இனிமேல் வர மாட்டாள். இன்னொரு மாற்றுச் சாவி பக்கத்து வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறது. அவர்கள் காலை ஆறு மணிக்குத் தான் எழுந்திருப்பார்கள்.

“இல்ல, ஆறு மணிக்கு மேல தான் போகணும். கொஞ்சம் வேலை இருக்கு” என்றான்.

பின் தன் மொபைலில் இருந்த சிம் கார்டை எடுத்துவிட்டு பாக்கெட்டில் பத்திரமாக ஒரு பேப்பரில் சுற்றி வைத்திருந்த இன்னொரு சிம் கார்டை எடுத்துப் போட்டான். செல்லை ஆன் செய்து Cnt Mani என்று பதிந்திருந்த ஒரு நம்பருக்கு போன் செய்தான்.

“ஐயா, சொல்லுங்கய்யா! இந்நேரத்துல கூப்பிட்டிருக்கீய, ஏதும் அர்ஜண்டோ?” என்று மறுமுனையில் இருந்து பவ்யமாகக் கேட்டான் சுப்பிரமணி என்ற காண்ட்ராக்டு கில்லர் மணி

– ஜனவரி 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *