ஆலமரத்தின் அடியில்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 17,272 
 

இரவு மணி பத்தரை. பெங்களூர் நகரம் உடம்பை வருடும் குளிரில் மெல்ல உறங்க ஆரம்பித்திருந்தது.

தூக்கம் வராது கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான் திவாகர். வாசலில் எவரோ கார் கதவை அடித்துச் சாத்தும் சத்தத்தை தொடர்ந்து வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தான்.

வெளியே முகத்தில் ஏராளமான பதட்டத்துடன் குமார் நின்றிருந்தான். பெங்களூரின் இரவுக் குளிரிலும் வியர்த்தான்.

“திவா, நான் இப்ப மிகப் பெரிய ஆபத்துல மாட்டியிருக்கேன்… ஒரு கொலை பண்ணிட்டேன். நீதான் என்னை எப்படியாவது காப்பாத்தணும்.”

திவாகர், குமாரை உடனே உள்ளே இழுத்துக் கொண்டான்.

மெல்லிய குரலில், “அடப் பாவி, என்ன நடந்ததுன்னு எல்லாத்தையும் விவரமா சொல்லு.” என்றான்.

குமார் பயத்துடன் தந்தி பாஷையில், “மாயா எட்டு மணிக்கு என் வீட்டுக்கு வந்தா…அப்ப நான் நிறைய குடிச்சிருந்தேன். அவ கர்ப்பமா இருப்பதாகவும், அதனால எங்களோட கல்யாணம் உடனே நடக்கணும்னு அவசரப்பட்டா… அதை தொடர்ந்த வாக்கு வாதத்தில் நான் கோபமாயி என் கைல கிடைச்ச பெரிய பவுடர் டின்னால ஓங்கி அவ நெத்தியில அடிச்சேன், செத்துட்டா திவா. இப்ப பாடிய எப்படி டிஸ்போஸ் பண்றதுன்னு தெரியல, மாயாவை காரின் பின் சீட்டில் கிடத்தியிருக்கேன்.”

“யாராவது இதப் பார்த்திருக்க சான்ஸ் இருக்கா?”

“கண்டிப்பா இல்ல.. ஏன்னா கார் பேஸ்மெண்டில் இருந்ததால வீட்டின் உள் படிகள் வழியாகத்தான் பாடியை தூக்கி வந்து காரினுள் போட்டேன். யாரும் பார்த்திருக்க முடியாது.”

“ஓகே, பதட்டப் படாத குமார், பாடியை உடனே டிஸ்போஸ் பண்ணியாகணும்..” உள்ளே சென்றான். ஓரு பெரிய மண் வெட்டியை எடுத்துக் கொண்டு “கிளம்பு போகலாம்” என்றான்.

வீட்டைப் பூட்டிக் கொண்டு இருவரும் வெளியே வந்தனர். கறுப்பு நிற ஸ்கோடா ராபிட் நின்றிருந்தது.

குமார் காரின் முன் கதவைத் திறந்ததும் உள்ளே பரவிய வெளிச்சத்தில், பின் சீட்டில் கிடத்தப் பட்டிருந்த மாயாவைப் பார்த்தான் திவாகர். ஜீன்ஸ், டி ஷர்ட்டில் பிரமிக்க வைக்கும் அழகில் இருந்தாள். தூங்குவதைப் போல் காணப் பட்டாள்.

குமார் டிரைவர் சீட்டில் அமர, திவாகர் அருகில் அமர்ந்து, மண் வெட்டியை காலுக்கு அடியில் வைத்துக் கொண்டான். கார் கிளம்பியதும், திவாகர் சற்று நிதானமாக யோசித்தான்….

கடந்த ஒரு வருடமாக குமாரும் அவனும் நண்பர்கள். பெங்களூரில் தனியாருக்குச் சொந்தமான சில பெரிய வீடுகளில், போலீஸ் ஆசீர்வாதத்துடன், இரவு நேரங்களில் காபரே நடனம் அரங்கேறும். ஐயாயிரம், பத்தாயிரம் என ஒவ்வொருவரிடமும் வசூலித்து காபரே தவிர, மது, சிகரெட், நான் வெஜ் சாப்பாடு என சகலமும் உண்டு. காபரே பெரும்பாலும் நிர்வாண நடனங்களே. இதைப் பார்ப்பதற்கு இளம் பெண்களும் தன் ஆண் நண்பர்களுடன்
வருவார்கள். பெரும்பாலும் ஐ டி யில் வேலை செய்யும் பெண்கள்.

அப்படி ஒரு நாள் காபரே சென்றிருந்தபோதுதான் குமார் அறிமுகமானான். குமாரின் கொழுத்த பணமும், அதை அவன் கெட்ட காரியங்களில் அள்ளிவிடும் அமர்க்களமும், திவாகரை பிரமிக்க வைத்தன. அப்படிப்பட்ட குமாருக்கு இடுக்கண் வருங்கால், தான் உதவி செய்யப் போவது குறித்து திவாகருக்கு பெருமையாக இருந்தது.

“எப்படிப் போகணும் திவா ?”

“ஓசூர் ரோட்டில போய் லெப்டுல டீவியேஷன் எடுத்தா, சர்ஜாப்பூர் ரோடு வரும், அதுல ஒரு இருபது கிலோ மீட்டர் போனா, கர்னாடகா-தமிழ் நாடு பார்டர். அதைத் தொடர்ந்து வலது பக்கம் சற்றுத் தள்ளி ஒரு பெரிய ஆலமரம் இருக்கு…அதுக்கு அடியில பாடியை புதைச்சுடலாம் குமார்.”

“எப்படி இவ்வளவு சரியா சொல்ற திவா, அடிக்கடி சர்ஜாப்பூர் ரோடுக்கு வருவியா?”

“உன் கிட்ட சொல்றதுக்கு என்ன குமார், ஆறு மாசத்துக்கு முன்னால காபரே ஆட்டக்காரி டீனா திடீர்னு காணாமப் போய் பேப்பரில் பரபரப்பாக அடி பட்டுதே, ஞாபகம் இருக்கா? அந்த டீனா எங்கயும் போகல, நான் தான் அவள கொலை செய்தேன்…இதே ஆலமரத்துக்கு அடியிலதான் அவள புதைச்சேன். பாவம், போலீசால மோப்பம் பிடிக்க முடியல, கேஸை மூடிட்டாங்க.. வி ஆர் செய்லிங் இன் த சேம் போட்.”

அடுத்த இருபது ந்மிடங்ககளில் திவாகர் குறிப்பிட்ட ஆலமரத்துக்கு அடியில் கார் நிறுத்தப் பட்டது. குமாரும், திவாகரும் காரிலிருந்து இறங்கினர்.

கும்மிருட்டு…ஜில்லென்று வீசிய ஊதக் காற்றில் உடம்பு நடுங்கியது. எங்கும் நிசப்தமாக இருந்தது.

இருட்டு கண்களுக்கு சற்று பழகியதும், ஆலமரத்துக்கு அடியில் சென்று நின்ற திவாகர், தன் செல்போன் வெளிச்சத்தில் மரத்தின் வேரிலிருந்து ஒன்று, இரண்டு என ஐந்து தப்படிகள் நடந்து சென்று நின்றான்.

“இங்கதான் டீனாவைப் புதைத்தேன் குமார், சற்று தள்ளி மாயாவைப் புதைக்கலாம். மேலும் ஐந்து தப்படிகள் நடந்து சென்று மண் வெட்டியால் பரபரவென தோண்டினான். முந்தைய நாள் பெய்திருந்த மழையினால் தோண்டுவது சுலபமாக இருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு பெரிய குழி தயாரானது.

குமாரும், திவாகரும் காரை நெருங்கி அதன் பின் கதவைத் திறந்து, திவாகர் மாயாவின் கால்களைப் பற்றி தூக்க, குமார் அவளுடைய தோள்களை தூக்கினான்.

இருவரும் குழியினருகே வந்து மாயாவை குழியில் இறக்க எத்தனிக்கையில். திவாகரின் அடி வயிற்றில் ஓங்கி உதை விழ, அதிர்ந்து போய் பிடியைத் தளர்த்தினான்.

துள்ளி எழுந்த மாயா, குமாரின் பின்னால் சென்று நெருங்கி நின்று கொண்டாள்.

தற்போது குமாரின் கையில் திவாகரை நோக்கி துப்பாக்கி பளபளத்தது.

“ஐயாம் சாரி திவாகர், நான் ஒரு க்ரைம் இன்ஸ்பெக்டர். டீனா கேஸை போலீஸ் மூடிட்டங்கன்னு சொன்னியே, அது தவறு. நான் உன்னை மோப்பம் பிடிச்சு, கடந்த ஒரு வருடமாக உன் கூட நெருங்கிப் பழகி, என் மீது உனக்கு நம்பிக்கை வரச் செய்தேன்…முள்ளை முள்ளால எடுக்கணும்னு சொல்வாங்களே, அது மாதிரி என் காதலி மாயாவை நடிக்கச் சொல்லி உனக்கு வலை விரிச்சேன்..

“நான் எதிர் பார்த்தபடியே டீனாவை நீ கொன்றதையும். நீ அவளை எங்கே புதைத்தாய் என்பதையும் என்னிடம் கக்கி விட்டாய். நீ கக்கியதெல்லாம் என் செல்போனில் பதிவாயிருக்கு… இனி நீ சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.”

அடுத்த கணம், திடீரென்று குமார் கையிலிருந்த துப்பாக்கியை பறித்தாள் மாயா. இருவரிடமிருந்தும் சற்று விலகி நின்றாள்.

துப்பாக்கியை இருவருக்கும் மையமாக குறி வைத்தபடி சொன்னாள். “ஐயாம் சாரி குமார், என்னுடைய ஒரே லட்சியம் இந்த குமாரை கணக்கு தீர்ப்பதுதான். டீனா வேறு யாருமல்ல, என்னுடைய சொந்த அக்கா. என்னை நன்றாக படிக்க வைப்பதற்காகவும், எனக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமையவும், தன் சதைகளை குலுக்கி காபரே ஆடி சம்பாதித்த உத்தமி… அவளை நயவஞ்சகமாக காதல் என்கிற போர்வையில் ஏமாற்றி கொலை செய்த திவாகருடைய போட்டோ என் அக்காவின் டைரியில் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு இவனைத் தேடி அலைந்தேன். என் அக்கா டான்ஸ் ஆடி வந்த வீட்டில் உங்கள் இருவரையும் பார்த்தேன்…சட்டம் இவனை தண்டிப்பதற்கு ரொம்ப நாளாகும், ஒருவேளை தண்டிக்காமலும் போகலாம்.. என்னை மன்னிச்சிடுங்க குமார்.”

திவாகரை நோக்கி துப்பாக்கியைத் திருப்பினாள்.

மாயாவின் இந்தச் செயலை சற்றும் எதிர்பாராத குமார் செய்வதறியாது திகைக்க, துப்பக்கியின் அனைத்து ரவைகளும் திவாகரின் உடலை சல்லடையாகத் துளைத்தன.

மாயா நிதானமாக நடந்து சென்று, டீனா புதைக்கப்பட்ட இடத்தில் மண்டியிட்டு குமுறி அழுதாள். அவள் அழுது முடியும் வரை காத்திருந்த குமார், அவளை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி காரைச் செலுத்தினான்.

அடுத்த நான்கு மணி நேரத்தில் டீனாவின் எலும்புக்கூடும், திவாகரின் சடலமும் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப் பட்டு போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூர் சென்றது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஆலமரத்தின் அடியில்

    1. மிக்க நன்றி திரு சந்திரசேகர். எஸ்.கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *