அவரின் இறுதி வணக்கம்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 30,796 
 

முன்னுரை

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது கதைகளுக்காக உருவாக்கிய கற்பனைப் பாத்திரம். அவர் ஒரு தனியார் உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார். சின்னச் சின்ன விஷயங்களையும் உற்று நோக்கும் பண்பு கொண்டவர்.

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் என்று சொன்னால் மிகையாகாது. 1917 ஆம் ஆண்டு “The Strand Magazine” என்னும் ஆங்கில இதழில் வெளியான ஒரு சிறுகதை இது. ராணுவத்தில் பணி புரியும் போது உளவாளியாகச் செயல்பட்டுத் தன் நாட்டில் இருந்து திருடப்படும் ராணுவ மர்மச் செய்திகளை எப்படித் தடுக்கிறார் என்பது பற்றிய சிறு கதை.

அவரின் இறுதி வணக்கம்

அன்று ஆகஸ்ட் இரண்டாம் தேதி இரவு ஒன்பது மணி இருக்கும். உலக வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான ஆகஸ்ட் மாதமாக அமைந்து விட்டது. கடவுளின் சாபம் மிகவும் கனமாக இந்தக் கேடு கெட்ட உலகின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று ஒருவர் ஏற்கெனவே நினைத்திருக்கக் கூடும். ஏனெனில் அங்கே சகிக்க முடியாத முணுமுணுப்பும் ஒரு குழப்பமான எதிர்பார்ப்பு நிறைந்த உணர்ச்சிகளும் புழுக்கமான அமைதியான அந்தக் காற்றில் நிறைந்திருந்தன. கதிரவன் மறைந்து வெகு நேரம் ஆகி இருந்தது. தூர மேற்கில் ஆழமான ஒரு வெட்டுக் காயத்தில் இருந்து செங்குருதி மிகவும் வழிந்தோடுவது போல் கீழே தெரிந்தது. மேலே மீன்களும் பளிச்சிட்டன. கீழே கப்பல்களின் விளக்குகளும் விரிகுடாவில் மினுக்கிக் கொண்டிருந்தன. புகழ் பெற்ற இரு ஜெர்மானியர்கள் தோட்டத்து நடை பாதையில் கல்லால் வேயப்பட்டிருந்த கைப்பிடிச்சுவரின் அருகில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களின் பின்னால் நீண்ட கீழிறங்கிய பெரிய வீடு இருந்தது. அவர்கள் சுண்ணாம்புப் பாறைகளால் ஆன பள்ளத்தாக்கின் அடியில் இருந்த விரிந்து பரந்த கடற்கரையை நோக்கினார்கள். அங்குதான் நான்கு ஆண்டுகளுக்கு முன் வான் போர்க் அலைந்து திரியும் கழுகு போல் நிலை குத்தி இருந்தான். அவர்கள் இருவரும் தங்கள் தலைகள் நெருங்கும் அளவு ஒட்டியபடி நின்று கொண்டு அடிக் குரலில் ரகசியமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். புகைந்து கொண்டிருந்த அவர்களின் சுருட்டுகளுக்குக் கீழிருந்து ஒரு வேண்டாத நண்பனின் எரியும் கண்கள் கீழே இருளை நோக்கிக் கொண்டிருந்தன.

வான் போர்க் ஒரு அதிசயிக்கத்தக்க மனிதன். கைஸரின் விசுவாசிகளிலேயே இவன் திறமைக்கு ஈடு கொடுக்கும் வல்லமை யாருக்கும் கிடையாது. அவனது திறமைகளைக் கண்டுதான் அவனுக்கு முதலில் ஆங்கிலப் பணி வழங்கப்பட்டது. அனைத்திலும் அதி முக்கியமான பணி அது. அவன் அந்த வேலையை எடுத்த நேரத்தில் இருந்து உலகில் உண்மையைப் புரிந்து கொண்ட ஒரு ஆறு பேருக்காவது அவனது திறமைகள் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்தது. அதில் ஒருவன் தற்போது அவனது கூட்டாளியான பரோன் வான் ஹெர்லிங். அந்தப் பணியின் முதன்மைக் காரியதரிசி. அந்த நாட்டுப்புறத் தெருவை அடைத்துக் கொண்டு அவரது 100 குதிரைத் திறன் கொண்ட பென்ஸ் ஊர்தி நின்று கொண்டிருந்தது. தனது முதலாளியைத் தூக்கிக் கொண்டு லண்டன் பறப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தது.

“நடக்கும் விஷயங்களைக் கவனித்தால் நீ இன்னும் ஒரே வாரத்தில் பெர்லின் திரும்பி விடுவாய் என்று எண்ணுகிறேன்” என்றார் காரியதரிசி. “அங்கு வந்ததும், எனதருமை வான் போர்க், உனக்குக் கிடைக்கும் வரவேற்பு கண்டு நீ மிகுந்த ஆச்சரியம் கொள்வாய் என்றே நினைக்கிறேன். இந்த நாட்டின் உயரிய இடத்தில் நீ செய்த வேலைக்குக் கிடைத்த மரியாதையைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.” அவர் ஒரு பருத்த மனிதர் அந்தக் காரியதரிசி. ஆழ அகல உயரமானவர். அவரது மெதுவான கனமான பேச்சுக்கள்தான் அவரது அரசியல் வாழ்க்கையின் முதலீடு.

வான் போர்க் சிரித்தான்.

“அவர்களை ஏமாற்றுவது ஒன்றும் அவ்வளவு கடினம் அல்ல.” என்றான். “அவர்களைப் போல் பணிவான எளிமையான மனிதர்களைக் காண முடியாது.”

“அதைப் பற்றி எனக்குத் தெரியாது” என்று அவர் மிகவும் யோசித்தபடி கூறினார். “அவர்களுக்கு வினோதமான ஆற்றல் உள்ளது. அதையும் ஒருவன் கவனிக்கத்தான் வேண்டும். மேலோட்டமான அந்த எளிமைதான் புதிய மனிதர்களை எளிதில் ஏமாற்றி விடும் பொறி போன்றதாகும். ஒருவனுக்கு அவர்களைப் பார்த்ததும் முதலில் தோன்றுவது அவர்கள் மென்மையானவர்கள் என்றுதான். அதன் பின் சட்டென்று அவர்களின் கடுமையான மறு பக்கத்தைக் காணும் போது எதிர்ப்புறம் உள்ள எல்லையைத் தொட்டு விட்டதாகத் தோன்றும். அப்பொழுது உண்மைக்குப் பழக்கப்பட்டே ஆக வேண்டும். உதாரணமாக அவர்கள் தனிப்பட்ட கூட்டம் நடத்துவார்கள். அதை நிச்சயம் கவனித்தே ஆக வேண்டும்.

“அப்படி என்றால் அவர்கள் விழிப்போடு இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?” வான் போர்க் அடிபட்டவனைப் போல் சலித்துக் கொண்டான்.

“ஆங்கிலேயர்கள் பற்றிய ஒரு தவறான எண்ணம்தான் எல்லாவிதமான வினோதமான வடிவங்களிலும் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக நானே செய்த ஒரு மிகப்பெரிய தவறைப் பற்றிச் சொல்கிறேன். என் தவறுகளைப் பற்றி நான் பேசுவது ஒன்றும் தவறாகி விடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் என்னுடன் நீ வேலை செய்வதால் என் பல்வேறு வெற்றிகள் பற்றியும் அறிந்திருப்பாய். நான் அப்பொழுதுதான் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். மேலவை அமைச்சரின் கிராமத்து வீட்டில் வார இறுதியில் ஒரு சிறு கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். உரையாடல்கள் முழுவதும் மிகவும் மேம்போக்காக இருந்தன”

வான் போர்க் ஆமோதித்தான். “ஆம், நானும் சென்றிருக்கிறேன்.” என்று வெறுமையாகச் சொன்னான்.

“அதேதான். நான் எப்பொழுதும் போல பெர்லினுக்கு அங்கு நடந்த விஷயங்கள் பற்றித் தகவல் அனுப்பி விட்டேன். எதிர்பாராதவிதமாக நமது நாட்டின் நல்ல அதிபதி இது போன்ற விஷயங்களைக் கண்டு கொள்பவர் அல்லர். அதனால் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி ஏற்கெனவே தெரியும் என்று ஒரு குறிப்பு அனுப்பினார். இதை நான்தான் செய்தேன் என்று கண்டுபிடிக்க வெகு நேரம் ஆகி விடவில்லை. அது எனக்கு எந்த மாதிரியான பின் விளைவுகள் கொடுத்தது என்பது பற்றி நீ நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது. நமது விருந்தாளியாக அன்று வந்திருந்த ஆங்கில அதிகாரிகள் பற்றி எதுவும் நயமாகச் சொல்லி விட முடியாது. அந்த மனக்கசப்புகள் மாற எனக்கு இரண்டு ஆண்டுகள் முழுமையாக ஆனது. இப்பொழுது நீ இருக்கும் தோரணையைப் பார்த்தால்–”

“இல்லை, இல்லை. தோரணை என்று சொல்லாதீர்கள். அது செயற்கையானது. நான் பிறந்ததில் இருந்தே நல்ல விளையாட்டு வீரன். அது எனக்கு மிகவும் பிடிக்கும்”

“அப்படி என்றால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீ அவர்களுக்கு எதிராக உலாப் படகைச் செலுத்து, அவர்களுடன் வேட்டையாடு, போலோ விளையாடு, ஒவ்வொரு விளையாட்டிலும் அவர்களுக்கு நிகராக நில், உனது ஒருங்கு உனக்கு ஒலிம்பிக்கில் பரிசுகளை வாங்கித் தரும். நீ உன் கீழிருக்கும் அதிகாரிகளுடன் குத்துச் சண்டை விளையாடுவதும் எனக்குத் தெரியும். அதனால் என்ன பலன்? யாரும் உன்னைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. நீ ஒரு ‘நல்ல விளையாட்டு வீரன்’, ‘நல்ல ஜெர்மன் குடி மகன்’ இரவு நேரங்களில் அனைத்து விடுதிகளுக்கும் சென்று நன்றாகக் குடித்துக் கும்மாளமிடும், யாரைப் பற்றியும் கவலைப்படாத ஒரு இளைஞன். எல்லா நேரத்திலும் இந்த உன்னுடைய அமைதியான கிராமத்து வீடுதான் இங்கிலாந்தின் பாதிக் குறும்புகளுக்கு மையமாக இருக்கிறது. உனது விளையாட்டுத்தனங்கள்தான் ஐரோப்பாவிலேயே ஒரு மிகச் சிறந்த புத்திக் கூர்மையான உளவாளியாக மாற்றி இருக்கிறது. அபாரம், எனதருமை வான் போர்க், அபாரம்.”

“நீங்கள் என்னை மட்டையாக மடக்கி விட்டீர்கள் பரோன். ஆனால் நிச்சயமாக என்னால் சொல்ல முடியும் நான்கு ஆண்டுகள் இந்த நாட்டில் செலவளித்தது ஒன்றும் மோசம் போய் விடவில்லை என்று. நான் சேகரித்ததை உங்களுக்குக் காட்டவே இல்லை அல்லவா. இங்கே வந்து பாருங்கள்”

படிக்கும் அறையின் கதவு நேரே மொட்டை மாடிக்குச் சென்றது. வான் போர்க் அழுத்தித் திறந்து முன்னே சென்று ஒரு மின் விளக்கின் விசையை அழுத்தினான். அதன் பின் தன் பின்னால் வந்த பருமனான உடம்பை உள்ளே விட்டுக் கதவைச் சாத்தினான். பின்னல் இடப்பட்டிருந்த சாளரத்தின் கனமான திரையைச் சரி செய்தான். இந்த முன்னெச்சரிக்கைகள் எல்லாம் செய்த பின்பே அவன் தனது வெய்யிலால் கறுத்த கழுகு போன்ற முகத்தை அவர் பக்கம் திருப்பினான்.

“எனது ஆவணங்கள் சிலவற்றைக் காணவில்லை. எனது மனைவி நேற்றுத் துப்புரவு செய்யும்போது தேவை இல்லாத சிலவற்றை எடுத்துச் சென்று விட்டாள். அதனால் தூதரகப் பாதுகாப்பு கோர வேண்டும் மற்றவற்றைக் காப்பதற்கு.”

“தனிப்பட்ட முறையில் உன் பெயர் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. உனக்கோ உன் உடமைகளுக்கோ எந்தவிதத் தொந்திரவு வராது. இருந்தாலும் நாம் போக வேண்டி இராத சூழலும் வரலாம். இங்கிலாந்து பிரான்சைக் கை கழுவி விட்டு விட வாய்ப்பும் உள்ளது. அவர்களுக்கு நடுவில் எந்தவித ஒப்பந்தமும் இல்லை என்பது நமக்கு உறுதியாகத் தெரியும்.”

“பின் பெல்ஜியம்”

“ஆம், பெல்ஜியமும்தான்”

வான் போர்க் தலையசைத்தான். “அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. நிச்சயம் எதோ ஒரு உடன்படிக்கை இருக்கிறது. அவர்களால் அந்த ஏமாற்றத்தில் இருந்து வெளியில் வரவே முடியாது”

“அவர்கள் நிச்சயம் நிம்மதியாக இருக்கலாம்”

“ஆனால் அவர்களின் மரியாதை?”

“நாம் ஒரு பயன் சார்ந்து வாழும் காலத்தில் இருக்கிறோம், எனதருமை அதிகாரி அவர்களே. மரியாதை என்பதெல்லாம் பழங்காலச் சொல். இருப்பினும் இங்கிலாந்து இன்னும் தயாராகவில்லை. அது நினைத்துப் பார்க்க இயலாத விசயம். நாம் கொடுத்த போர் வரியான ஐந்து கோடியும் கூட அவர்களை உறக்கத்தில் இருந்து எழுப்ப முடியவில்லை. வெளியில் இருந்து பார்க்கும் ஒருவனுக்கு நாம் கிட்டத்தட்ட டைம்ஸ் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் விளம்பரம் செய்தது போல் தெளிவாய் இருந்திருக்கும். இங்கும் அங்கும் ஒரு சிலர் ஒரு கேள்வியை கவனிக்கிறார்கள். அதற்கான விடை கண்டுபிடிப்பது என் வேலை. இங்கும் அங்கும் சில எரிச்சல்களும் இருக்கின்றன. அதைச் சமன்படுத்துவதும் என் வேலைதான். ஆனால் முக்கியமான விசயங்களைப் பொறுத்தவரையில் ஒன்று என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். ஆயுதங்கள் சேகரிப்பது, நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல், வெடி மருந்துகளுக்கான ஏற்பாடுகள் இவை அனைத்தும் ஒன்று கூடத் தயாராகவில்லை. அப்படி இருக்கையில் இங்கிலாந்து எப்படி உள்ளே வரும். மேலும் அவர்களது உள் நாட்டில் பூதாகரமாக அயர்லாந்துக் கலவரத்தையும் கிளறி விட்டிருக்கிறோம். சாளரங்களை உடைக்கும் கோபமான கூட்டங்கள், கடவுளுக்கே வெளிச்சம் இன்னும் என்னென்ன அவர்களை உள் நாட்டிலேயே கவனத்தைத் திசை திருப்ப.”

“அவர்கள் தங்களது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்”

“ஆஹ், அது மற்றோரு விசயம். எதிர்காலத்தில் இங்கிலாந்து பற்றி நமக்குத் தெளிவான திட்டங்கள் இருக்கும் என்று நம்புகிறேன். அதன் பின் உனது செய்திகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எண்ணுகிறேன். இன்றோ நாளையோ நாம் திரு.ஜான் புல் அவர்களைச் சந்திக்க இருக்கிறோம். அவர் இன்றே சரியென்றாலும் நாம் தயாராகவே இருக்கிறோம். நாளை என்றால் இன்னும் அதிகமாகவே தயார்தான். அவர்கள் கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு போரிடுவதுதான் புத்திசாலித்தனம் என்று எண்ணுகிறேன். இருந்தாலும் அது அவர்களது முடிவு. இந்த வாரம் அவர்களின் தலை விதியை நிர்ணயிக்கும் வாரம். ஆனால், நீ உனது ஆவணங்கள் பற்றிச் சொன்னாய் அல்லவா?” அவர் ஒரு சாய் நாற்காலியில் அவரது அகன்ற சொட்டையில் விளக்கு வெளிச்சம் பளீரிட அமர்ந்தார், மெதுவாகத் தனது சுருட்டை ஊதியபடி.

கருவாலி மரங்களால் செய்யப்பட்ட, பெரிய, நூல்கள் அடுக்கி வைக்கப்பட்ட அந்த அறையில் ஒரு பெரிய திரை மூலையில் தொங்கிக் கொண்டிருந்தது. அதை இழுக்கும்போது ஒரு பெரிய பித்தளையால் செய்யப்பட்ட பெட்டகத்தை வெளிப்படுத்தியது. வான் போர்க் தனது கடிகாரத்தில் இருந்த ஒரு சிறிய திறவு கோலை எடுத்துக் கொஞ்சம் பிரயாசைப்பட்டு அதன் பெரிய கதவுகளைத் திறந்தான்.

“பாருங்கள்!” என்றான், தள்ளி நின்று கையாட்டியபடி.

திறந்த பெட்டகத்தின் மேல் விளக்கின் வெளிச்சம் மின்னியது. அந்தத் தூதரக அதிகாரி மிகவும் ஆழ்ந்த ஆர்வத்தோடு அதில் இடப்பட்டிருந்த வரிசையான துளைகளை நோக்கினார். ஒவ்வொரு துளையின் மேலும் எழுதப்பட்டிருந்தது. அவரது கண்கள் ஒவ்வொன்றாய்ப் பார்வை இட்டபோது நீண்ட வரிசையான சொற்களைப் படித்துக் கொண்டே வந்தார். “ஃபோர்ட்கள்”, “துறைமுகப் பாதுகாப்புகள்”, “வானூர்திகள்”, “அயர்லாந்து”, “எகிப்து”, “போர்ட்ஸ்மௌத் கோட்டைகள்”, “கால்வாய்”, “ரோஸித்” இன்னும் எக்கச்சக்கமாய். ஒவ்வொரு சிறு அறையிலும் ஏகப்பட்ட ஆவணங்களும் திட்டங்களும் குவிந்திருந்தன.

“அபாரம்!” என்றார் அந்தக் காரியதரிசி. தனது சுருட்டைக் கீழே வைத்து விட்டு மெதுவாகத் தனது பருமனான கைகளைத் தட்டினார்.

“அதுவும் இந்த நான்கு ஆண்டுகளிலேயே, பரோன். மொடாக் குடிகாரனான உலகம் சுற்றும் வாலிபனான எனக்கு இது ஒன்றும் மோசமான விசயம் இல்லை. ஆனால் எனது சேகரிப்பிலேயே சிறந்த ஒன்று வந்து கொண்டே இருக்கிறது. அதற்கும் ஓரிடம் ஒதுக்கி வைத்து விட்டேன்.” என்று “நாவாய்க் குறியீடுகள்” என்று எழுதப்பட்ட சிற்றறையைக் காண்பித்தான்.

“ஆனால் அதில் ஏற்கெனவே நிறைய ஆவணங்கள் இருக்கிறதே?”

“அதெல்லாம் காலாவதி ஆகி விட்டன. தேவையற்றது. நிர்வாகக் குழுவிற்கு எப்படியோ தகவல் கசிந்து விட்டது. அதனால் எல்லாக் குறியீடுகளையும் மாற்றி விட்டார்கள். அது பேரிடி, பரோன். எனது நடவடிக்கைகளிலேயே மிகவும் மோசமானது. எனது காசோலை மற்றும் நல்ல மனிதன் அல்டமோண்ட் இருப்பதால் அனைத்தும் நல்லவிதமாகவே இன்றிரவு முடியும்.”

பரோன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்து ஏமாற்ற உணர்வோடு கணைத்தான்.

“சரி. என்னால் இதற்கு மேல் இங்கு இருக்க முடியாது. கார்ல்டன் மாடியில் தற்போது எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது என்று நீ நம்பலாம். அதனால் அனைவரும் தத்தமது வேலைகளைத் தொடரலாம். உனது முற்றுகைச் செய்தியை எப்படியாவது கொண்டு போகலாம் என்று நினைத்தேன். அல்டமோண்ட் நேரம் எதுவும் குறிப்பிடவில்லையா?”

வான் போர்க் ஒரு தந்தியை நகட்டினான்.

“நிச்சயம் இன்றிரவு வருவான் தீப்பொறி கிளப்பிகளோடு”

“தீப்பொறி கிளப்பிகளா?”

“அவன் ஒரு விசைப்பொறி வல்லுநர் போல் தெரிகிறது. எனது வண்டி நிறுத்துமிடமும் நிரம்பி வழிகிறது. எங்களது சங்கேதக் குறியீடுகளில் அனைத்தும் உதிரி பாகங்கள் போலவே பெயரிடப்படுகின்றன. அவன் வெப்பக் கதிர் பரப்பி என்று சொன்னால் போர்க்கப்பல் என்று பொருள். எண்ணெய் எக்கி என்று சொன்னால் விரைவுப் போர்க்கப்பல் என்று பொருள். தீப்பொறி கிளப்பி என்பது கப்பற்படையின் குறியீடுகள்.”

“போர்ட்ஸ்மௌத்தில் நண்பகலில்” என்றார் காரியதரிசி அதைப் படித்து. “நீ அவனுக்கு என்ன கொடுக்கப் போகிறாய் என்று தெரிந்து கொள்ளலாமா?”

“ஐந்நூறு பவுண்டுகள் இந்த வேலைக்காகக் கொடுக்கப் போகிறேன். இது போகச் சம்பளமும் உண்டு.”

“பேராசை கொண்ட திருடன். அவர்கள் நமக்குப் பயன் படுகிறார்கள். அந்த துரோகிகள், இருந்தாலும் இந்தக் குருதிப் பணம் கொஞ்சம் அதிகம்தான்.”

“எனக்கு எந்தவிதப் பிரச்சினையும் கிடையாது. அவன் அருமையான வேலைக்காரன். நான் அவனுக்கு நல்ல சம்பளம் கொடுத்தால் பொருளைக் கச்சிதமாகக் கொடுத்து விடுவான், அவன் மொழியிலேயே சொல்வதென்றால். இன்னும் சொல்லப் போனால் அவன் துரோகி கிடையாது. நமது பெரும்பான்மையான ஜெர்மானியக் குப்பைகள் எல்லாம் இங்கிலாந்திடம் ஒரு சமாதானப் புறா போலத்தான் செயல்படுவார்கள். ஆனால் அவன்தான் கோபம் கொண்ட உண்மையான அயர்லாந்து அமெரிக்கக்காரன்.”

“ஓஹ், அயர்லாந்து அமெரிக்கக்காரனா?”

“அவன் பேசுவதை நீங்கள் கேட்டால் நிச்சயம் சந்தேகம் கொள்ள மாட்டீர்கள். சில நேரங்களில் அவன் பேசுவது எனக்கே புரியாது. அவன் அரசனின் ஆங்கிலத்தின் மேலும் ஆங்கில அரசனின் மேலும் போர்ப் பிரகடனம் செய்து விட்டான் போல் தெரிகிறது. நீங்கள் நிச்சயம் சென்றுதான் ஆக வேண்டுமா? எந்நேரமும் அவன் வந்து விடலாம்”

“இல்லை. மன்னிக்கவும். ஏற்கெனவே எனக்குத் தாமதமாகி விட்டது. நாங்கள் உன்னை அதிகாலை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். யார்க் பிரபுவின் படிக்கட்டுகளுக்கு மேல் உள்ள அந்தச் சிறிய கதவில் இருந்து உனக்கு அந்தக் குறியீட்டு நூல் கிடைத்து விட்டால், இங்கிலாந்தில் உன் பதிவேட்டில் வெற்றிகரமானதொரு முடிவைப் போட்டுக் கொள்ளலாம். என்ன, டோகே!” அவர் அழுத்தமாக மூடி இடப்பட்டிருந்த புழுதி படிந்திருந்த கண்ணாடிக் குடுவையைக் காண்பித்தார். அதனருகில் வெள்ளித் தட்டின் மேல் இரு நீண்ட கண்ணாடிக் குவளைகள் கவிழ்ந்து இருந்தன.

“நீங்கள் கிளம்பு முன் ஒரு குவளை அருந்தி விட்டுச் செல்லலாமே”

“இல்லை, பரவாயில்லை. இப்பொழுதே வெற்றி பெற்றது போல் தோன்றுகிறது”

“அல்டமோண்ட்டிற்குக் கொடி முந்திரி மது வகைகள் என்றால் நிறைய பிடிக்கும். எனது டோகேவில் மயங்கி விட்டான். அவன் மிகுந்த உணர்ச்சி வயப்படுகிற ஆள். சின்னச் சின்ன விசயங்களில் கூட அவனுக்குச் சிரிப்பு மூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நான் அவனைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.” அவர்கள் மீண்டும் மொட்டை மாடிக்குச் சென்றனர். அங்கிருந்து மாடியின் விளிம்பிற்கு வந்து விட்டனர். அப்பொழுது பரோனின் வாகன ஓட்டியின் சிறு அசைவில் அந்தப் பெரிய வண்டி குலுங்கியது. “அதுதான் ஹாவிச்சின் ஒளி என்று நினைக்கிறேன்.” என்றார் காரியதரிசி தனது புழுதி படிந்த மேலங்கியை எடுத்துக் கொண்டே. “இன்னும் எல்லாமே ஆடாமல் அமைதியாகவே தோன்றுகிறது. இந்த வாரத்திற்குள் மேலும் சில வெளிச்சங்கள் தெரியலாம். அதன் பின் இங்கிலாந்துக் கடற்கரையின் அமைதி குறையும்! வானமும் கூட இவ்வளவு அமைதியாய் இராது, செப்பெலின் உறுதி கொடுத்த செய்திகள் எல்லாம் உண்மையாய் இருந்தால். கேட்க வேண்டும் என்றே நினைத்தேன், யாரது?”

ஒரே ஒரு சாளரத்தின் பின்னால் இருந்து மட்டுமே விளக்கின் ஒளி தெரிந்தது. அங்கே ஒரு விளக்கு, அதன் பின்னால் மேசையில் ஒரு வயதான கிராமத்துப் பெண்மணி தலையில் கிராமத்துத் தொப்பியுடன் அமர்ந்திருந்தாள். அவள் குனிந்து தனது பின்னல் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். எப்பொழுதாவது திரும்பி தனது பெரிய கறுப்புப் பூனையைத் தடவிக் கொடுத்தாள்.

“அது மார்த்தா. என்னிடம் இருக்கும் ஒரே ஒரு வேலைக்காரப் பெண்மணி.”

காரியதரிசி புன்னகைத்தார்.

“அவளும் பிரித்தானியாவின் கையாளாக இருக்கப் போகிறாள்.” என்றார் அவர். “எப்பொழுதும் சொகுசான தனிமையில் தன் வேலையிலேயே மூழ்கி இருப்பதைப் பார்க்கும்போது, அப்படித்தான் தோன்றுகிறது. நன்று, நான் புறப்படுகிறேன், வான் போர்க்.” இறுதியாக ஒரு முறை கையசைத்து விட்டுத் தனது ஊர்தியில் ஏறி அமர்ந்தார். சில மணித் துளிகளில் எல்லாம் அவரது ஊர்தியின் முகப்பு விளக்குகளில் இருந்து இரு ஒளிக் கூம்புகள் இருளைக் கிழித்துப் பாய்ந்தன. அந்த ஆடம்பரமான லிமஸீன் என்னும் ஊர்தியின் மெத்தாசனத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். மனம் முழுவதும் வரப்போகும் ஐரோப்பியக் கலகத்தைப் பற்றிய எண்ணங்களே நிறைந்திருந்தன. அந்தக் கிராமத்துச் சாலையில் வேகமாகச் செல்லும் நேரத்தில் எதிரில் வந்த சிறிய ஃபோர்ட் வண்டியைக் கவனிக்கவில்லை.

வான் போர்க் மெதுவாகத் தனது அறைக்குச் சென்றான். தூரத்தில் வாகனத்தின் இறுதி வெளிச்சமும் மறைந்து கொண்டிருந்தது. அப்பொழுது அவனது வயதான வேலைக்காரப் பெண்மணியும் விளக்கை அணைத்து விட்டு உறங்கி இருந்தாள். இது ஒரு வினோதமான அனுபவமாக இருந்தது. விசாலமான வீட்டின் அமைதியும் இருளும் அவனது குடும்பத்திற்கு மிகவும் பெரிதாகத் தெரிந்தது. அவர்கள் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்று எண்ணும்போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் சமையல் அறையில் உலவும் அந்த ஒரே ஒரு பெண்மணியைத் தவிர இந்த வீடு முழுவதும் தனக்கே சொந்தமாக இருந்தது. அவனது நூல் அறையில் கொஞ்சம் நிறையவே சுத்தப்படுத்த வேண்டி இருந்தது. அவன் தானாகவே அதைச் செய்ய ஆரம்பித்தான், எரிந்து கொண்டிருந்த காகிதங்களின் வெம்மையினால் அவனது அழகான முகம் கருக்க ஆரம்பிக்கும் வரை. மேசைக்கு அருகில் தோலினால் செய்த ஒரு பெட்டி நின்று கொண்டிருந்தது. அதில் அவனது பெட்டகத்தில் இருந்த விலை உயர்ந்த செய்திகளை ஒவ்வொன்றாக முறையாகவும் நேர்த்தியாகவும் அடுக்கி வைத்தான். அவன் ஆரம்பிக்கும் அதே வேளையில் அவனது கூரிய காது தூரத்தில் வந்து கொண்டிருந்த வாகனத்தின் ஒலியைக் கவனித்தது. உடனே அவனது முகம் திருப்திக்கான பாவனையை வெளிப்படுத்தியது. பெட்டியை மூடி விட்டுப் பெட்டகத்தின் கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டு மொட்டை மாடியை நோக்கி விரைந்தான். அவன் வந்த அதே நேரத்தில் அவனது வாயில் கதவின் அருகில் ஒரு வாகனம் வந்து நின்றது. அதில் இருந்து ஒருவன் இறங்கி வேகமாக அவனை நோக்கி நடந்தான். வாகன ஓட்டி பருத்த உடலை உடையவன், வயதானவன், நரைத்த மீசை கொண்டவன், நீண்ட நேரம் ஆகும் என்பவனைப் போல ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.

“சரிதானே!” என்று கேட்டபடியே தனது விருந்தாளியைச் சந்திக்கும் எண்ணத்துடன் அவனை நோக்கி ஓடினான் வான் போர்க் ஆவலுடன்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு பழுப்பு நிற காகிதப் பொட்டலத்தை வெற்றிகரமாக ஆட்டினான் அவன்.

“நீங்கள் இன்றிரவு மகிழ்ச்சியாக எனக்குக் கை கொடுக்கலாம். ஒருவழியாகப் பன்றிக் கறியை வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டேன்.” என்று கத்தினான்.

“குறியீடுகள்”

“தந்தியில் சொன்னது போலவே தான். ஒவ்வொரு விஷயத்தையும் கொண்டு வந்திருக்கிறேன். குறியீடுகள் அனுப்பும் கருவி, விளக்குக் குறியீடு, மார்க்கோனி – அதன் நகல் மட்டுமே, மூலம் கிடைக்கவில்லை. அது மிகவும் அபாயமானது. நிச்சயம் உண்மையானதுதான், நம்பலாம்.” அவன் ஜெர்மானியனின் தோள் பட்டையைத் தட்டிக் கொடுத்தான். அதைப் புரிந்து கொண்டது போல் அவனும் கண்ணசைத்தான்.

“உள்ள வாங்க” என்றான் அவன். “நான் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறேன். இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன். நகல் நிச்சயம் மூலத்தை விடச் சிறந்ததுதான். ஏனெனில் அது தொலைந்தது தெரிந்தால் அவர்கள் அனைத்தையும் உடனே மாற்றி விடுவார்கள். இந்த நகல் உங்களுக்குப் பாதுகாப்பானது போல் தெரிகிறதுதானே?”

அந்த அயர்லாந்து அமெரிக்கக்காரன் படிக்கும் அறையினுள் நுழைந்து நீண்ட கைப்பிடிகள் உள்ள நாற்காலியில் அமர்ந்து தன் நீண்ட கைகளை நெட்டி முறித்தான். அவன் உயரமான மெலிந்த உடல் கொண்ட அறுபது வயது மதிக்கத்தக்க மனிதனாய் இருந்தான். அவனது செதுக்கியது போன்ற உடல் அமைப்புகளும் ஆடு போன்ற குறுந்தாடியும் அவனை சாம் மாமாவின் கேலிச்சித்திரம் போல் காட்டின. பாதி புகைத்த நனைந்த சுருட்டு ஒன்று அவனது உதட்டில் ஓரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அமரும் போதே ஒரு தீக்குச்சியைக் கிழித்து அதைப் பற்ற வைத்தான். “கிளம்பத் தயாராக இருக்கிறாய் போலிருக்கிறது?” என்று அவனைச் சுற்றி நோட்டமிட்டபடியே சொன்னான். “சொல்லுங்க” என்று அழுத்தம் கொடுத்தான். நோட்டமிட்ட கண்கள் விலகிய திரைச் சீலையின் மேல் பார்வை பட்டது. “இதில்தான் எனது காகிதங்களை எல்லாம் வைத்திருக்கிறேன் என்று தயவு செய்து சொல்லி விடாதே”

“ஏன் அப்படி?”

“கடவுளே. இந்த மாதிரி வெட்ட வெளிச்சமான ஒரு பெட்டியிலா வைப்பது? அவர்கள் என்னமோ உன்னை ஒரு ஒற்றன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அமெரிக்கத் திருடன் குவளை திறக்கும் ஆணியைக் கொண்டு எளிதாக அனைத்தையும் கவர்ந்து விடுவான். எனது கடிதங்கள் எல்லாம் இங்குதான் கவனமில்லாமல் அந்தப் பெட்டியில் வைக்கப்படுகிறது என்று தெரிந்த பின்னும் நான் கடிதம் எழுதுவதாக இருந்தால் என்னைவிட முட்டாள் யாரும் இருக்க முடியாது.”

“அந்தப் பெட்டகத்தைத் திறப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமானது இல்லை.” என்று பதில் அளித்தான் வான் போர்க். “எந்தவிதமான உலோகத்தை வைத்தும் அதனை வெட்டி விட முடியாது.”

“ஆனால் அந்தப் பூட்டு?”

“இல்லை, அது இரண்டு சேர்க்கை உள்ள பூட்டு. என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?”

“சொல்லேன் பார்க்கலாம்” என்றான் அந்த அமெரிக்கக்காரன்.

“ஒரு சொல்லும், ஒரு சில எண்களும் தேவை அந்தப் பூட்டு வேலை செய்ய வேண்டும் என்றால்.” அவன் எழுந்து சாவித் துளையினைச் சுற்றி இரண்டு சுழல்கள் கொண்ட தட்டைக் காண்பித்தான். “மேலே இருப்பது எழுத்துக்களுக்கு, உள்ளே இருப்பது எண்களுக்கு”

“நல்லது, இருக்கட்டும்”

“ஆக நீங்கள் நினைத்தது போல் எளிதானது இல்லை அல்லவா? இதை நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் வடிவமைத்தேன். எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் என்ன தெரிவு செய்தேன் என்று தெரியுமா?”

“நிச்சயம் எனக்குத் தெரியாது”

“ஆகஸ்ட் என்பதுதான் சொல், 1914 என்பது எண்கள். இப்போது பாருங்கள்.”

அந்த அமெரிக்காகாரனது முகத்தில் ஆச்சர்யமும் புகழ்ச்சியும் தோன்றின.

“அருமை, மிகவும் புத்திசாலித்தனமானது. மிகவும் நுணுக்கமான தேர்வுதான்”

“ஆம், சில பேர் எண்களை வேண்டுமானால் யூகித்து விடலாம். நான் நாளைக் காலை மூடி விடுவேன்.”

“நல்லது, நீ எனக்கும் ஒரு உதவி செய்ய வேண்டும். எனக்கும் இந்தச் சபிக்கப்பட்ட கிராமத்தில் தன்னந்தனியாகத் தங்க விருப்பம் இல்லை. இன்னும் ஒரு வாரமோ இல்லை அதற்கும் முன்பாகவோ ஜான் புல் தனது பின்னங்கால் பிடரியில் பட ஓடிக் கொண்டிருப்பான். நான் அவனை நீரின் மேலிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.”

“ஆனால் நீ அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவன் ஆச்சே?”

“ஆம், ஜாக் ஜேம்ஸ் கூடத்தான் அமெரிக்காக்காரன். ஆனால் அவன் போர்ட்லாண்டில் தான் இருக்கிறான். நீ ஒரு அமெரிக்கக்காரன் என்று ஒரு இங்கிலாந்து காவல் காரனிடம் சொல்வதால் எந்தவிதப் பலனும் இல்லை. இங்கிருப்பது இங்கிலாந்துச் சட்டம் ஒழுங்குதான். ஜாக் ஜேம்ஸ் பற்றிச் சொன்னதும்தான் நினைவுக்கு வருகிறது. நீ உனது ஆட்களைப் பாதுகாப்பதற்கு எதுவுமே செய்வதில்லை போல் தெரிகிறதே”

“அப்படின்னா என்ன அர்த்தம்” என்று கூர்மையாகக் கேட்டான் வான் போர்க்.

“நன்று. நீதான் அவர்களது முதலாளி. இல்லையா? அவர்கள் விழுந்து விடாமல் தடுப்பதுதான் உனது வேலை. அனால் அவர்கள் விழுந்து கிடக்கிறார்கள். ஆனால் எப்பொழுது நீ கைதூக்கி விடாய் போகிறாய்? இந்த ஜேம்ஸ்–”

“அது ஜேம்ஸின் தவறு. உங்களுக்கே தெரியும். அவன் இந்த வேலையில் யார் சொல்வதையும் கேட்பதில்லை.”

“ஜேம்ஸ் அகம்பாவம் பிடித்தவன். ஒத்துக் கொள்கிறேன். அப்புறம் ஹோல்லிஸ் இருக்கிறான்”

“ஹோல்லிஸ் ஒரு பைத்தியம்.”

“இறுதியில் அவன் குழம்பித்தான் போய் விட்டான்.

அவனைச் சுற்றிலும் நூறு பேர் இருந்து கொண்டு காவல் துறையிடம் போட்டுக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கும் போது காலையில் இருந்து இரவு வரை ஒரு மனிதன் இப்படிப்பட்ட சூழலில் வேலை செய்தால் அவனுக்குப் பைத்தியம் பிடிக்காமல் என்ன செய்யும். இப்பொழுது ஸ்டைனர்–”

“அவனுக்கு என்னாச்சு”

“அவனை அவர்கள் பிடித்து விட்டார்கள். அவ்வளவுதான். அவனது வீட்டை நேற்றிரவு சோதனை செய்தார்கள். அவனும் அவனது காகிதங்களும் போர்ட்ஸ்மௌத் சிறையில் இருக்கின்றன. நீ போய் விடுவாய். ஆனால் அவன்தான் மாட்டிக் கொண்டான். உயிர் பிழைத்தால் அதிசயம்தான். அதனால்தான் நீ கிளம்பியவுடன் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறேன்.”

வான் போர்க் வலிமையான தாங்கிக் கொள்ளும் இதயம் படைத்தவன்தான். அனால் இந்தச் செய்தி கேட்டு அவன் மிகவும் உடைந்துதான் போய் விட்டான் என்பது தெளிவாகவே தெரிந்தது.

“ஸ்டைனரை எப்படிப் பிடித்தார்கள்?” என்று முணுமுணுத்தான். “அது மிகப் பெரிய இடிதான் இப்பொழுது”

“ஆம், நீயும் மயிரிழையில் தப்பி இருக்கிறாய். ஏனெனில் அவர்கள் என்னை நெருங்கி விட்டார்கள்.”

“நீ பொய் சொல்கிறாய்”

“நான் சொல்வது உண்மை. பிராட்டன் வழியில் இருக்கும் எனது வீட்டின் உரிமையாளரிடம் சிலர் வந்து விசாரணை செய்து விட்டுச் சென்றிருக்கின்றனர். அதைக் கேட்டவுடன் காலி செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்தேன். ஆனால் எனக்கு என்ன தெரிய வேண்டும் என்றால், காவல் துறைக்கு எப்படி இந்தச் செய்திகள் எல்லாம் தெரிகிறது என்றுதான். நான் உன்னிடம் சேர்ந்த பின் ஸ்டைனர் உன் கையை விட்டுச் சென்ற ஐந்தாவது மனிதன். நான் தப்பிக்கவில்லை என்றால் ஆறாவது மனிதன் யார் என்றும் சொல்ல முடியும். எப்படி இதையெல்லாம் விளக்குவாய். ஒவ்வொருவராய் விட்டு விட உனக்கே அவமானமாய்த் தோன்றவில்லையா?”

வான் போர்க்கின் முகம் குருதிச் சிவப்பாய் மாறியது.

“எவ்வளவு தைரியம் இருந்தால் நீ என்னிடம் இப்படிப் பேசுவாய்?”

“தைரியம் இல்லை என்றால் நான் உன்னிடம் வேலை செய்து கொண்டிருக்க மாட்டேன். ஆனால் என் மனதில் தோன்றியதை நான் மறைக்காமல் சொல்லி விடுவேன். நான் கேள்விப் பட்டவரையில் உங்கள் ஜெர்மன் அரசியல்வாதிகள் தங்களுக்கு வேலை முடிந்த பின் கழற்றி விடுவதற்குக் கவலைப்படுவதில்லை.”

வான் போர்க் சட்டென்று எழுந்தான்.

“நான் எனது ஆட்களையே கைவிட்டு விட்டேன் என்று தைரியமாக என்னைக் குற்றம் சாட்டுகிறாயா?”

“எனக்கும் அதில் உடன்பாடு இல்லை. ஆனால் எதோ ஒரு இடத்தில் ஒரு துரோகி இருக்கிறான். அதைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு உன்னிடம்தான் இருக்கிறது. இருந்தாலும் நான் இனிமேல் எந்தவிதச் சந்தர்ப்பமும் கொடுக்க விரும்பவில்லை. எனக்கு ஹோலன்ட் இருக்கிறது, எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு நல்லது”

வான் போர்க் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

“நாம் நீண்ட நாட்களாய் நட்புறவோடு இருந்து வந்திருக்கிறோம். இப்பொழுது வெற்றிக்கு மிக அருகில் இருக்கும்போது சண்டை இடுவதில் பொருள் இல்லை.” என்றான் அவன். “நீ மிக அருமையான வேலைகள் செய்திருக்கிறாய். மிகவும் அபாயமான சூழல்களில் இருந்திருக்கிறாய். அதை எல்லாம் என்னால் மறக்க முடியாது. நிச்சயம் நீ ஹோலன்ட் செல்லலாம். ராட்டர்டாமில் இருந்து நியூ யார்க்கிற்குக் கப்பல் கிடைக்கும். வேறெதுவும் பாதுகாப்பாக இருக்காது. நான் அந்தப் புத்தகத்தை எடுத்து மற்றவைகளுடன் அடுக்கி வைத்து விடுகிறேன்”

அந்த அமெரிக்கக்காரன் தனது கையில் ஒரு பொட்டலத்தை வைத்திருந்தான். ஆனால் அதைக் கொடுப்பதற்கு எந்தவித முயற்சியும் செய்யவில்லை.

“பணம் எங்கே?”

“என்ன கேட்டாய்?”

“துட்டு. வெகுமதி. அந்த 500 பவுண்டுகள். இறுதியில் துப்பாக்கி வைத்திருந்தவன் மிகவும் மோசமாக நடந்து கொண்டான். அவனைச் சரிக்கட்ட மேற்கொண்டு 100 டாலர் அழ வேண்டியதாய்ப் போய் விட்டது. இல்லை என்றால் உனக்கும் எனக்கும் மிகவும் கேடு கெட்டுப் போயிருக்கும். ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டான். நிச்சயம் அதில் உறுதியாய் இருந்தான். ஆனால் இறுதியாய்க் கொடுத்த 100 டாலர் நன்றாக வேலை செய்தது. முதலில் இருந்து கடைசி வரை எனக்கு 200 பவுண்டுகள் செலவாகி விட்டது. அதனால் எனக்கு லாபமில்லாமல் நான் இதைத் தர மாட்டேன்.”

வான் போர்க் வெறுப்பைக் காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தான். “எனது நேர்மையைப் பற்றி நீ மிகவும் தப்புக் கணக்கு போட்டு விட்டாய்.” என்றான். “அந்தப் புத்தகத்தை ஒப்படைக்கும் முன் உனக்குப் பணம் தேவை அல்லவா?”

“ஆமாம், இதெல்லாம் ஒரு வியாபாரம்தானே”

“நல்லது. இதோ.” என்று சொல்லி விட்டு மேசையில் அமர்ந்து ஒரு காசோலையில் கிறுக்கி விட்டு அதைக் கிழித்தான். ஆனாலும் அதை அவன் அவனிடம் கொடுக்கவில்லை. “விஷயம் இப்படி இருக்கும் போது நீ என்னை எவ்வளவு தூரம் நம்புகிறாயோ அதே போல்தான் நானும் உன்னை நம்ப வேண்டி இருக்கிறது. புரிகிறதா உனக்கு” என்றான். திரும்பி அந்த அமெரிக்கக்காரனைப் பார்த்தான். “மேசையில் காசோலை இருக்கிறது. நீ பணத்தைத் தொடுமுன் பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் உரிமை எனக்கிருக்கிறது.”

அமெரிக்காக்காரன் ஒரு வார்த்தையும் பேசாமல் உடனே அதைக் கொடுத்து விட்டான். வான் போர்க் அதைச் சுற்றி இருந்த கயிறை அவிழ்த்தான். இரண்டு காகித உரைகளை நீக்கினான். அதன் உள்ளே இருந்த சிறிய நீல நிற புத்தகத்தைப் பார்த்து அமைதியாக ஆச்சர்யத்தில் உறைந்து நின்றான். அதன் முகப்பில் தங்க நிற எழுத்துக்களில் தேனீ வளர்ப்பு பற்றிய நடைமுறைக் கையேடு என்று அச்சிடப்பட்டிருந்தது. ஒரே ஒரு முறைதான் அந்த உளவாளிகளின் தலைவன் அந்த வினோதமான சம்பந்தமில்லாத புத்தகத்தைப் பார்வை இட்டான். அதன் பின் அவன் பின்னங் கழுத்தில் இரும்புக் கம்பி ஒன்று அழுத்தியது. அவனது இறுகிய முகத்தின் முன் குளோரோபார்ம் தடவிய பஞ்சு ஒன்று நீட்டப்பட்டது.

“இன்னொரு குவளை, வாட்சன்.” என்றார் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் உயர்தர டோகே மதுவைக் கையில் ஏந்தியபடியே. பருமானாய் இருந்த வாகன ஓட்டி இப்பொழுது மேசையில் அமர்ந்திருந்தார். தனது குவளையை மிக ஆவலோடு நீட்டினார்.

“அது மிகவும் அருமையான மது, ஹோல்ம்ஸ்”

“மிகவும் குறிப்பிடத்தக்க மது. மெத்தாசனத்தில் இருக்கும் நமது நண்பர் அது ஸ்சோன்ப்ரன் மாளிகையில் உள்ள பிரான்ஸ் ஜொஸ்பின்னின் சிறப்பு மிகுந்த நிலவறையில் தயாரிக்கப்பட்டது என்பதற்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். சாளரக் கதவைத் திறக்க நான் உங்களைத் தொந்தரவு செய்யலாமா. குளோரோபார்மின் ஆவி நமது சுவையைக் கெடுத்து விடக் கூடாது அல்லவா?”

பெட்டகம் திறந்தே இருந்தது. அதன் முன் நின்று கொண்டு ஒவ்வொரு ஆவணமாக எடுத்து வேகமாகச் சரி பார்த்து வான் போர்க்கின் பெட்டியில் நேர்த்தியாக அடுக்கினார்.

மெத்தாசனத்தில் வான் போர்க் குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருந்தான். அவன் கால்களும் கைகளும் கட்டப்பட்டிருந்தன.

“நாம் துரிதப்படுத்த வேண்டிய தேவையே இல்லை, வாட்சன். நமக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை. அழைப்பு மணியை தயவு செய்து தொட முடியுமா உங்களால்? இந்த வீட்டில் வேறு யாரும் இல்லை. மார்த்தா என்ற வயதான பெண்ணைத் தவிர. அவள் தன் வேலையைக் கச்சிதமாகச் செய்து விட்டாள். இந்த வேலையைக் கையில் எடுக்கும் போதே நான் அவளிடம் இங்குள்ள நிலைமை பற்றித் தெரிந்து கொண்டேன். ஆஹ், மார்த்தா, எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என்று தெரிந்தால் உனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.”

வாயிற்கதவு வழியாக சிரித்தபடியே அந்தப் பெண்மணி வந்தாள். திரு.ஹோல்ம்ஸைப் பார்த்து வேகமான ஒரு புன்னகையை வீசினாள். ஆனால் மெத்தாசனத்தில் இருந்த உருவத்தைப் பார்த்துச் சிறிது அதிர்ந்தாள்.

“பரவாயில்லை, மார்த்தா. அவன் ஒன்றும் அடிபடவே இல்லை.”

“நல்லது திரு.ஹோல்ம்ஸ். அவன் மிகவும் நல்ல முதலாளியாகத்தான் இருந்தான். அவனது மனைவியுடன் ஜெர்மனி செல்லத்தான் சொல்லி இருந்தான். ஆனால் அது உங்கள் திட்டத்திற்கு எந்தவிதத்திலும் உதவி இருக்காது. இல்லையா?”

“ஆமாம், நிச்சயமாக, மார்த்தா. நீ இங்கிருக்கும் வரை எனது மனது நிம்மதியாக இருந்தது. உனது சைகைக்காக இன்றிரவு நாங்கள் சிறிது நேரம் காத்திருந்தோம்.”

“ஆமாம், அது காரியதரிசி.”

“தெரியும். அவரது வாகனம் எங்களைத் தாண்டித்தான் சென்றது.”

“அவர் இங்கிருந்து கிளம்ப மாட்டார் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அவரை நீங்கள் சந்தித்தால் அது உங்கள் திட்டத்தைப் பாதிக்கும் என்று நினைத்தேன்.”

“இல்லை, உண்மைதான். ஒரு அரை மணி நேரம்தான் காத்திருந்தோம். அதற்குள் உங்கள் விளக்கு அணைக்கப்பட்ட சைகை கிடைத்ததும் கடற்கரை தெளிவானது என்று புரிந்து கொண்டோம். நீங்கள் நாளைக் காலை லண்டனில் என்னை வந்து பாருங்கள், மார்த்தா, கிளாரிட்ஜ் உணவகத்தில்.”

“மிக்க சரி”

“நீங்கள் கிளம்புவதற்கு எல்லாம் தயாராக இருக்கிறது என்று நினைக்கிறேன்”

“ஆமாம். அவன் இன்று ஏழு கடிதங்கள் அனுப்பினான். எப்பொழுதும் போல அனைத்து முகவரிகளையும் சேகரித்து வைத்திருக்கிறேன்.”

“மகிழ்ச்சி, மார்த்தா. நான் நாளை அவைகளைப் பார்க்கிறேன். இந்தக் காகிதங்கள்” என்று அவர் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே மார்த்தா சென்று விட்டாள். “அவ்வளவு மதிப்பு மிக்கதானது இல்லை. இதில் இருக்கும் செய்திகள் எல்லாம் எப்பொழுதோ ஜெர்மன் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்த மூல ஆவணங்களைப் பாதுகாப்பாக எல்லை கடந்து எடுத்துச் செல்ல முடியாது.”

“அப்படி என்றால் அவைகளால் எந்தவிதப் பயனுமில்லை”

“அப்படி எல்லாம் என்னால் சொல்லிவிட முடியாது, வாட்சன். நமது மக்களுக்கு எது தெரியப்படுத்தப்பட்டது எது தெரியப்படுத்தப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதற்காகவாவது உதவும் அல்லவா. இதில் பெரும்பகுதி நான் கொடுத்ததுதான். சொல்லவே தேவை இல்லை அவைகள் அனைத்தும் நம்பகத் தன்மை இல்லாதது என்று. ஒரு ஜெர்மன் கப்பல் கண்ணிவெடிக்களத் திட்டத்தில் கூறியது போல் சொலேன்ட்டில் பயணம் செய்தால் நான் இருக்கப்போகும் இன்னும் கொஞ்ச காலமும் மகிழ்ச்சியாகக் கழியும். ஆனால் நீங்கள், வாட்சன்”–தான் செய்து கொண்டிருந்த வேலையைப் பாதியில் நிறுத்தி விட்டுத் தனது பழம்பெரும் நண்பரைத் தோளைத் தொட்டுத் தூக்கினார்.–“நான் உங்களை எப்போதும் வெளிச்சத்தில் பார்க்கவே இல்லை. இத்துணை ஆண்டுகளாக எப்படி இருந்தீர்கள். எப்பொழுதும் போல மகிழ்ச்சியாகவே இருக்கிறீர்கள்”

“நான் இருபது ஆண்டுகள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன், ஹோல்ம்ஸ். ஹர்விச்சில் வாகனத்தோடு வந்து சந்திப்போம் என்ற உங்களது தந்தி கண்டு நான் மகிழாத நாட்களே இல்லை. ஆனால், நீங்கள், ஹோல்ம்ஸ், மிகவும் குறைவாகவே மாறி இருக்கிறீர்கள். அந்தக் கொடுமையான தாடியைத் தவிர.”

“இதுதான் நமது நாட்டுக்காக நாம் செய்யும் சிறு சிறு தியாகங்கள், வாட்சன். என்று சொல்லிக்கொண்டே தனது தாடியைத் தடவி விட்டுக் கொண்டார். “நாளை ஒரு கொடூரமான ஞாபகங்களை மட்டுமே மிச்சம் வைத்து விட்டுப் போகும். முடி வெட்டி மற்ற பிற சீர் திருத்தங்கள் செய்து நான் மீண்டும் பழையபடி கிளாரிட்ஜ் உணவகத்திற்கு வந்து விடுவேன். என்ன சொன்னீர்கள் வாட்சன். ஆம் எனது நன்றாக இருந்த ஆங்கிலம் இந்த அமெரிக்க வேலையால் பாழ் பட்டு விட்டது.”

“ஆனால் நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள், ஹோல்ம்ஸ். உங்களது தேனீக்கள் மற்றும் புத்தகங்களுக்கு நடுவில் தெற்கு டௌனில் இருக்கும் சிறு வயல் வெளியில் தனிமையில் வாழ்வதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.”

“அதேதான் வாட்சன், எனது ஓய்வு நேரத்தில் விளைந்த நன்மை இதுதான். எனது பிந்தைய காலத்தின் அற்புதப் படைப்பு!” மேசையில் இருந்த அந்த நூலின் தலைப்பு முழுவதையும் வாசித்தார். தேனீ வளர்ப்பு பற்றிய நடைமுறைக் கையேடு, ராணித் தேனீயைத் தனிமைப்படுத்துவது பற்றிய சில விளக்கங்களுடன். “இதை நான் தனியாளாகச் செய்தேன். பலமான சிந்தனைகள் நிறைந்த இரவுகள் மற்றும் வேலைப்பளு மிகுந்த பகல் பொழுதுகளின் பலனால் விளைந்த நன்மை இது. வேலை செய்து கொண்டிருக்கும் சிறு தேனிக் குழுக்களைக் கவனித்தேன் ஒரு காலத்தில் லண்டனின் குற்றக் குழுக்களைக் கவனித்தது போல.”

“ஆனால் மீண்டும் பணியில் சேர்ந்தது எப்படி?”

“ஆஹ், அதை நினைத்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. அயலகத் துறை மந்திரியை நான் சமாளித்து விட்டேன். ஆனால் பிரதமரே எனது எளிமையான வீட்டிற்கு வந்து நின்றால்–! உண்மை என்னவெனில், வாட்சன், இந்த மெத்தாசனத்தில் இருக்கும் இந்த மனிதன் நமது மக்களுக்குப் பெரும் சவாலாக இருந்தான். அவன் ஒரு தனிப் பிறவி. நிறைய விஷயங்கள் தவறாகப் போய்க் கொண்டிருந்தன. எதனால் தவறானது என்று யாருக்குமே தெரியவில்லை. சில உளவாளிகள் மேல் சந்தேகம் இருந்தது, சிலரைப் பிடித்தோம். ஆனால் மர்மமான வலிமையான மைய விசை ஒன்று இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தன. அதைக் கண்டுபிடிப்பது மிகவும் அத்தியாவசியமாக இருந்தது. நான் இதைக் கவனிக்க வேண்டும் என்று மிகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதற்கு எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது, வாட்சன். ஆனால் அதில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் எனது புனிதப் பயணத்தை சிகாகோவில் ஆரம்பித்தேன், பஃபல்லோவில் உள்ள அயர்லாந்து கமுக்கச் சமூகத்தில் பட்டம் பெற்று ஸ்கிபாரீன் காவல் துறைக்கு மிகவும் மோசமான பிரச்சினைகள் கொடுத்து, உதவி உளவாளியான வான் போர்க்கின் கண்களில் பட்டு அவனால் சரியானவன் என்று பரிந்துரைக்கப்பட்டேன் என்று சொன்னால் இந்த விஷயம் எவ்வளவு சிக்கலானது என்று நீங்களே முடிவு கட்டிக் கொள்ளலாம். அதில் இருந்து அவன் என்னை மிக ஆழமாக நம்பத் தொடங்கி விட்டான். அவனது பெரும்பாலான திட்டங்கள் மெதுவாகத் தவறாகச் செல்வதையோ இல்லை அவனது உளவாளிகள் ஐந்து பேர் சிறைக்குச் சென்றதையோ அது தடுத்து நிறுத்தவில்லை. நான் அவர்களைக் கவனித்தேன். கனிந்து வரும் வேளையில் பறித்தேன். நன்று, நீங்களும் மோசமில்லை என்று நம்புகிறேன்.”

இறுதியாகச் சொன்ன குறிப்பு வான் போர்க்கிற்கானது. பலவிதமான பெருமூச்சுகள் மற்றும் விழித்தல்களுக்கு நடுவில் அவன் ஹோல்ம்ஸ் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அதன் பின் ஜெர்மன் மொழியில் கெட்ட வார்த்தைகளில் வறுத்தெடுக்க ஆரம்பித்தான். அவனது முகம் தீவிரமான உணர்ச்சிகளால் கோணலானது. ஹோல்ம்ஸ் அந்த ஆவணங்களைத் துரிதமாக ஆய்வு செய்து கொண்டிருந்தார் தனது கைதி கத்திக் கொண்டிருக்கும் வேளையில்.

“நாராசமாக இருந்தாலும் ஜெர்மன் மொழிதான் அனைத்து மொழிகளைக் காட்டிலும் சொல் திறம் கொண்ட மொழி.” வான் போர்க் முற்றிலும் களைப்படைந்த நிலையில் அவர் குறிப்பிட்டார். ஒரு நகலின் ஓரத்தைக் கவனித்த போது “ஹெலோ! ஹெலோ!” என்றார். பின் அதைப் பெட்டியினுள் வைத்து விட்டார். “இது இன்னொரு பறவையைக் கூண்டிலடைக்க உதவும். இவன் மீது ரொம்ப நாளாய் நான் கண் வைத்திருந்த போதும் இவனது முதலாளி இப்படிப்பட்ட தில்லாலங்கடியாய் இருப்பான் என்று எனக்குத் தெரியாது. வான் போர்க் நீ பல விஷயங்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.”

மிகுந்த பிரயாசைப்பட்டு கைதி மெத்தாசனத்தில் எழுந்து அமர்ந்தான். தன்னைக் கைது செய்தவனை ஆச்சர்யமும் வெறுப்பும் கலந்த ஒரு பார்வை பார்த்தான்.

“உன்னை எப்படியும் பழி வாங்குவேன், அல்டமோண்ட்!” அவன் மிக மெதுவாக ஆனால் தீர்க்கமாகச் சொன்னான். “எனது வாழ்நாள் முழுவதும் கழிந்தாலும் பரவாயில்லை, உன்னை விட மாட்டேன்!”

“அருமையான பழைய பாடல்.” என்றார் ஹோல்ம்ஸ். “கடந்த காலங்களில் எத்தணை முறை இதை நான் கேட்டிருக்கிறேன். இறந்து போன பேராசிரியர் மோரியார்ட்டியின் பிடித்தமான பாடலும் இதேதான். படைத்தலைவர் செபாஸ்டியன் மோரன் அவர்களும் இப்படித்தான் புலம்புவார். இருந்தும் இதோ நான் இருக்கிறேன், தெற்கு டௌனில் தேனீக்கள் வளர்த்துக் கொண்டு”

“நாசமாய்ப் போ. துரோகி!” என்று கத்தினான் அந்த ஜெர்மன் கட்டுக்களை அவிழ்க்க முயற்சி செய்து கொண்டும் கண்களில் கொலை வெறியோடும்.

“இல்லை, இல்லை. இது ஒன்றும் அவ்வளவு மோசமானது இல்லை.” என்று சிரித்தபடியே சொன்னார் ஹோல்ம்ஸ். “என் பேச்சிலேயே உனக்குப் புரிந்திருக்கும் சிகாகோவின் திரு.அல்டமோண்ட் என்பவர் உண்மையில் இல்லை என்று. நான் அவனைப் பயன்படுத்திக் கொண்டேன், அவன் போய் விட்டான்.”

“அப்படி என்றால் நீ யார்?”

“நான் யார் என்பது இப்பொழுது தேவை இல்லாத விஷயம். ஆனால் உனக்கு அவ்வளவு ஆர்வம் இருப்பதால் சொல்கிறேன் உனது குடும்ப உறுப்பினர்களைக் காண்பது இது ஒன்றும் முதன் முறை அல்ல. நான் ஜெர்மனியில் இதற்கு முன் பல முறை வர்த்தகம் செய்திருக்கிறேன். அதனால் என் பெயர் உனக்குப் பரிச்சயமாகத்தான் இருக்கும்.”

“எனக்கு நிச்சயம் தெரிந்தே ஆக வேண்டும்” என்று அந்த ஜெர்மன் இறுக்கமாகச் சொன்னான்.

“உனது சகோதரன் ஹேன்றிச் அரச தூதுவனாக இருந்த போது ஐரீன் எட்லர் மற்றும் இறந்து போன பொஹீமியாவின் அரசரையும் பிரித்தது நான்தான். வான் அண்ட் ஸு க்ராபின்ஸ்டைனை அனைவரையும் அழிக்கும் எண்ணம் கொண்ட க்ளோப்மன் கொலை செய்வதில் இருந்தும் நான்தான் காப்பாற்றினேன். அவன் உனது தாயின் அண்ணனும் கூட. நான்தான் –”

வான் போர்க் ஆச்சர்யத்தில் எழுந்து அமர்ந்தான்.

“ஒரே ஒருவன்தான் இருக்க முடியும்”

“அதேதான்” என்றார் ஹோல்ம்ஸ்.

முனகலோடு வான் போர்க் மெத்தாசனத்தில் விழுந்தான். “இருந்தும் பெரும்பாலான செய்திகள் உன்னிடம் இருந்துதானே வந்தன.” என்று கதறினான். “இதனால் என்ன பலன். ஐயோ நான் என்ன காரியம் செய்து விட்டேன். நான் செத்தேன்.”

“நிச்சயம் அது சிறிய நம்பிக்கைத் துரோகம்தான்.” என்றார் ஹோல்ம்ஸ். “அவை அனைத்தும் கொஞ்சம் சரி பார்க்கப்பட வேண்டியவைதான். ஆனால் உனக்கு அதற்கு நேரமில்லை. உங்கள் படைத்தலைவர் தான் எதிர்பார்த்ததை விட பெரிய புதிய துப்பாக்கிகளைக் காண்பார். மேலும் கப்பல் கொஞ்சம் வேகமானதும் கூட.”

ஏமாற்றத்தில் தன் கழுத்தைத் தானே இறுக்கிக் கொண்டான் வான் போர்க்.

“இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அதெல்லாம் தேவையான நேரத்தில் வெளி வரும். ஆனால் உன்னிடம் ஒரு அரிதான குணாதிசயம் இருக்கிறது, வேறு பல ஜெர்மன் நாட்டுக்காரர்களிடம் இல்லாதது திரு. வான் போர்க். நீ ஒரு விளையாட்டு வீரன். சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதே. நீ பல பேரைத் தோற்கடித்திருக்கிறாய். இப்பொழுது உன்னையே நீ தோற்கடித்து விட்டாய். என்ன இருந்தாலும் உனது நாட்டிற்கு உன்னால் முடிந்ததைச் செய்து விட்டாய். அதே போல் நான் எனது தாய் நாட்டிற்குச் செய்து விட்டேன். எது இதில் மிகவும் இயல்பானது. மேலும்” என்று அடுக்கினார் அன்பு இல்லாமல் இல்லை. தன் கையை படுத்திருந்த அவனது தோள்பட்டையில் அழுத்தியவாறு “ஒரு இழிவான எதிரியிடம் மண்டி இடுவதை விட இது சிறந்ததே. இந்த ஆவணங்கள் எல்லாம் தயாராகி விட்டன, வாட்சன். கைதியைத் தூக்கக் கொஞ்சம் உதவி செய்தீர்கள் என்றால் உடனே நாம் லண்டன் கிளம்பி விடலாம்.”

வான் போர்க்கை நகர்த்துவது அவ்வளவு எளிதாக இல்லை. ஏனெனில் அவன் மிகவும் வலிமையாகவும் எதற்கும் துணிந்தவனாகவும் இருந்தான். இறுதியில் அவனது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு இரு நண்பர்களும் மெதுவாக அவனைத் தோட்டத்தின் பாதையில் நடத்திக் கொண்டு சென்றனர். சில மணி நேரங்களுக்கு முன்தான் புகழ் பெற்ற அதிகாரி ஒருவர் அவனை அதே இடத்தில் நின்று பாராட்டிச் சென்றார். இறுதியில் ஒரு சண்டைக்குப் பின் அவனை மிச்சமிருந்த வண்டியின் ஆசனத்தில் ஏற்றினார்கள். கைகளும் கால்களும் இன்னும் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தன. அவனது மதிப்பு மிகுந்த பெட்டியும் அவனருகே வைக்கப்பட்டது.

“நீ சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வாய் என்று நம்புகிறேன்” என்றார் ஹோல்ம்ஸ் இறுதிக் கட்ட நடவடிக்கை எடுக்கும்போது. “நான் ஒரு சுருட்டைப் பற்ற வைத்து உன் உதட்டில் வைத்தால் உரிமை எடுத்துக் கொள்கிறேன் என்று கோபித்துக் கொள்வாயா?”

ஆனால் அந்த கோபக்கார ஜெர்மனிடம் எல்லா ஏற்பாடுகளும் வீணாகிப் போய் விட்டன.

“நீங்கள் உணர்வீர்கள் என்று எண்ணுகிறேன்” என்றான் அவன். “உங்களது அரசு உங்களை இந்த நடவடிக்கையில் ஆதரித்தால் அது ஒரு போருக்கான ஆயத்தம்”

“உனது அரசுக்கும் இந்த நடவடிக்கைக்கும் என்ன பொருள்” என்று அந்தப் பெட்டியை தட்டிக் கொண்டே கேட்டார்.

“நீ ஒரு தனி மனிதன். என்னைக் கைது செய்ய உன்னிடம் எந்தவித ஆவணமும் இல்லை. இந்த முழு விவகாரமும் சட்டத்திற்குப் புறம்பானது அதிகப்பிரசங்கித்தனமானது.”

“நிச்சயமாக” என்றார் ஹோல்ம்ஸ்.

“ஒரு ஜெர்மன் நாட்டுக்குடிமகனைக் கடத்தியது”

“அவனது அந்தரங்க ஆவணங்களைத் திருடியது”

“உங்களுக்குச் சூழ்நிலை புரிகிறது என்று நினைக்கிறேன். உனக்கும் உனது கூட்டாளிக்கும். நான் இந்தக் கிராமத்தைக் கடக்கும் போது உதவி வேண்டிக் கத்தினால் என்ன ஆகும் தெரியுமா?”

“எனதருமை நண்பனே! முட்டாள்தனமாக எதுவும் செய்தால் இந்த கிராமத்து விடுதிக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரையும் பெரிதாக்கி விடும்படி ‘அந்தரத்தில் ஊசலாடும் ஜெர்மன்’ என்ற வாசகம் பொருந்திய கம்பத்தில் கட்டி வைத்து விடுவோம். எப்படி வசதி. இந்த ஆங்கிலேயன் பொறுமையானவன். ஆனால் தற்போது அவனது கோபம் சீண்டப்பட்டு விட்டது. இதற்கும் மேல் விளையாடாதே. வேண்டாம். திரு.வான் போர்க், நீங்கள் எங்களுடன் அமைதியான முறையில் ஸ்காட்லாந்து யார்டுக்கு வர வேண்டும். அதன் பின் நீ உனது நண்பன் பரோன் வான் ஹெர்லிங்கை அழைக்கலாம். அவர் ஏற்பாடு செய்த தூதுவர்களுக்கான பெரிய அறையில் இப்பொழுதாவது உன்னைத் தங்க வைக்க முடியாதா என்று பார்க்கலாம். வாட்சன், உங்களைப் பொறுத்தவரை நீங்கள் உங்களது பழைய வேலையில் சேர்ந்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் லண்டன் உங்களுக்கு வெகு தூரம் இல்லை. இந்த மொட்டை மாடியில் சிறிது நேரம் என்னுடன் நில்லுங்கள். இதுதான் நாம் பேசப்போகும் அமைதியான இறுதிப் பேச்சாகவும் இருக்கலாம்.”

அந்த இரு நண்பர்களும் மிகவும் நெருக்கமாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் பழைய நினைவுகளில் மூழ்கியபடி. அவர்களது கைதி தனது கட்டுக்களை அவிழ்க்கப் போரடிக் கொண்டிருந்தான். வாகனத்திற்குச் சென்ற பின் ஹோல்ம்ஸ் நிலவு ஒளிரும் கடலைக் காட்டியபடி தன் தலையை அசைத்தார்.

“கிழக்கில் இருந்து ஒரு காற்று வருகிறது, வாட்சன்!” என்றார்.

“அப்படி இருக்க வாய்ப்பில்லை, ஹோல்ம்ஸ். இன்னும் வெம்மையாகத்தான் இருக்கிறது”

“நல்லா சொன்னீங்க, வாட்சன். கால மாற்றத்தில் நீங்கள் மட்டும் அப்படியே இருக்கிறீர்கள். கிழக்கு காற்று வந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அது இங்கிலாந்தில் எப்பொழுதும் வீசியதில்லை. அப்பொழுது குளிராகவும் கடுமையாகவும் இருக்கும். நம்மைப் போன்ற பல பேர் அதைத் தாங்குவதே கடினம். இருந்தாலும் அது கடவுளின் சொந்தக் காற்று. புயல் கடந்த பின் கதிரின் ஒளியில் ஒரு சிறந்த தூய்மையான வலிமையான கரை தெரியும். வாகனத்தை இயக்குங்கள், வாட்சன். நாம் ஏற்கெனவே கிளம்பி இருக்க வேண்டும். என்னிடம் 500 பவுண்டுக்கான காசோலை உள்ளது. அதை யாரும் தடுக்கும் முன் பணத்தை எடுக்க வேண்டும்”

அருஞ்சொற்கள்

உலாப்படகு – Yacht

சிற்றறை – Compartment

தீப்பொறி கிளப்பி – Spark plug

குறியீடுகள் – Sign

சைகை – Signal

வெப்பக் கதிர் பரப்பி – Radiator

விரைவுப் போர்க்கப்பல் – Cruiser

டோகே – Sweet white wine of Hungary

மெத்தாசனம் – Cushion seat/Sofa

சாம் மாமா – Uncle Sam

நிலவறை – Cellar

கமுக்கச் சமூகம் – Secret society

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *