விழுக்காடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 20,531 
 

முன்குறிப்பு:- நான் ஆபிரிக்காவில் ஐ.நா.வுக்காக வேலை செய்தபோது நடந்த கதை இது. ஊரும், பேரும் சம்பவங்களம் முற்றிலும் உண்மையானவை. அதற்கு நான் கொஞ்சம் உப்பு-புளியிட்டு, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து மணம் கூட்டியிருக்கிறேன். வேறொன்றுமில்லை. தயவுசெய்து கதை முடிந்தபிறகே பின்குறிப்பைப் படிக்கவும்.


அவருடைய பெர் ஹென்றிகே லோடா. இத்தாலியர். ஐ.நாவின் பிரதிநிதியாக மேற்கு ஆபிரிக்காவிலுள்ள சியராலியோனுக்கு வந்திருந்தார். நாற்பத்தெட்டு வயதுக்காரர். உயரம் ஐந்தரை அடியும், எடை நூற்றிமுப்பது கிலோவுமாக உருண்டையாக இருப்பார். கண் புருவங்கள் அடர்த்தியாகவும், வசீகரமாகவும் இருக்கும். அவர் நடந்து வருவதும் உருண்டு வருவதும் ஒன்றுபோலத்தான் தோற்றமளிக்கும்.

அநேக வருங்களுக்கு முன்பு அவர் ஓர் இத்தாலியப் பெண்ணை மணந்து பத்து வருடங்கள் வரை வாழ்க்கை நடத்தினார். பிறகு அலுத்துப்போய் அவளை விவாகரத்து செய்து கொண்டார். இப்பொழுது பதினெட்டு வயதில் மகன் ஒருத்தன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அதற்கு பின்பு, அவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மாற்றல் கிடைத்த போது அங்கே அவர் ஒரு பிலிப்பினோ பெண்ணை, அவள் தேங்காய்ப்பாலில் செய்யும் கோழிக்கறியில் மோகித்து, மணந்து கொண்டார். அதுவும் இரண்டு வருடம்தான் நீடித்தது; பிறகு அவளையும் கோழியையும் ரத்து செய்து கொண்டார். இப்பொழுது ‘ரீ பைண்ட்’ செய்த புத்தகம்போல மறுபடியும் தன்னை பிரம்மச்சாரியாக புதுப்பித்துக் கொண்டு ‘மாயப்பொய் பல கூட்டும்’ பெண்களின் சகவாசத்தில் இனிமேல் எதுவரினும் ‘விழுவதே’ இல்லையென்ற திட சங்கல்பத்துடன் வந்திருந்தார். சிய்ராலியோனில் ஒரு பிரம்மச்சாரி தன் கற்பைக் காப்பது எவ்வளவு கடினம் என்ற விஷயத்தை அவருக்குயாரும் அப்போது உபதேசம் செய்திருக்கவில்லை.

அவர் பிரதிநிதியாக வேலை ஏற்பது இதுதான் முதல் தடவை. இதற்கு முன் பலநாடுகளில் அவர் உபபிரதிநிதியாக இருந்திருக்கிறார். நல்ல படிப்பாளி; வேலையில் உலக அளவில் பிரக்கியாதி பெற்றவர். சியரா லியோனுக்கு வரும்போது அவரிடம் ஒரு விசேஷமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்த. அதில் பூரண வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் அவர் முதல் நாளிலிருந்து ஆவேசத்தோடு ஈடுபட்டார்.

உலகத்தின் நூற்றி அறுபத்தியேழு நாடுகளின் சுபிட்ச நிலையை எச்.டி.ஐ முறையில் ஐ.நா கணித்ததில், கனடா முதலாவது நாடாகவும், அமெரிக்கா இரண்டாவதாகவும், ஜப்பான் மூன்றாவதாகவும், சியரா லியோன் நூற்றி அறுபத்தியாறாவதாகவும் வந்திருந்தன. ஒரு நாட்டின் தராதரத்தை எச்.டி.ஐ என்று சொல்லப்படும் மனிதவள மேம்பாட்டு சுட்டெண் (Human Development Index) முறையில் கணிப்பது இந்தக் காலத்திய வழக்கம். இந்தக் கணிப்பில் மனிதனுடைய சராசரி வருமானம், படிப்பறிவு, வாழும் வயது எல்லாம் அடங்கும். சியரா லியோனுடைய சுபிட்ச நிலையை தனது பதவிக் காலத்தில் ஒரு புள்ளியிலும் புள்ளியளவாவது உயர்த்திவிட வேண்டும் என்ற மேலான குறிக்கோளுடன்தான் லோடா அந்த நாட்டின் லூங்கே விமான நிலையத்தில் வந்து தனது வலதுகாலை வைத்து இறங்கியிருந்தார்.

அவருக்கு ஒரு நல்ல வீடு ஓ.ஏ.யூ வில்லேஜில் அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. அது ஒரு பக்கம் ‘சியரா’ மலையைப் பார்த்தபடியும், மறுபக்கம் ‘லம்லி’ கடற்கரையை அணைத்தபடியும் ஒய்யாரமாக இருந்தது. ஒரு ‘மென்டே’ சமையல்காரனையும், ‘புஃல்லா’ காவல்காரனையும், ‘ரிம்னி’ தோட்டக்காரனையும் அவர் ஏற்பாடு செய்துவிட்டார். இந்த இந்த வேலைகளுக்கு இன்ன இன்ன இனத்தவரைத்தான் ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது அங்கே தொன்று தொட்டு வந்த மரபு. ஆனால் ஒரு நல்ல ‘ஹவுஸ் மெய்ட்’ மாத்திரம் அவருக்கு கிடைக்கவில்லை. வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும், அவருடைய ஆடையணிகளை கவனிக்கவும், வேறும் அத்தியாவசிய தேவைகளைப் பார்க்கவும் நம்பிக்கையான ஒரு பெண் வேலையாள் அவருக்கு தேவைப்பட்டது.

இத்துடன் பல பெண்களை அவர் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து பரீட்சித்துப் பார்த்து விட்டார். ஒருவராவது அதில் தேறவில்லை. சியரா லியோனில் இப்படியான வேலைகளுக்கு மிகவும் தேர்ச்சி வாய்ந்த பெண்கள் பலர் அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் விரும்பிய குணாதிசயங்கள் கொண்ட பெண் மட்டும் அவருக்கு எனோ லேசில் கிடைக்கவில்லை.

அப்பொழுதுதான் அவருடைய அலுவலக செயலதிகாரி அமீனாத்துவை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அவள் தேர்வுக்கு வந்தபோது ஊழியர்கள் எல்லோருடைய கண்களும் அவளோடு போய்விட்டன. ‘சலீர், சலீர்’ என்று அவளுடைய பாதங்கள் கேட்காத ஒரு தாளத்துக்கு நடந்துவருவதுபோல இருந்தது. அவள் உடுத்தியிருந்தது சாதாரணமான ஏழை ஆபிரிக்கர்கள் அணியும் ‘லப்பா’ உடைதான். தலைமுடியை சிறுசிறு பின்னல்களாக பின்னி வளையம் வைத்துக் கட்டியிருந்தாள். முதுகை நேராக நிறுத்தி, கால்களை எட்டி வைத்து அவள் நடந்தது கறுப்பு தேவதை ஒன்று வழி தவறி வந்து விட்டது போல இருந்தது.

ஆபிரிக்கப் பெண்களின் அழகைப் பற்றி ஒன்று சொல்லவேண்டும். ‘மெல்ல நட, மெல்ல நட, மேனி என்னவாகும்?’ என்ற கவிதைகளுக்கெல்லாம் அங்கே வேலையில்லை. நிலத்திலே ‘தாம், தாம்’ என்று சத்தம் அதிரத்தான் நடப்பார்கள். சாமத்தியச்சடங்கு நேரத்தில், பூப்பெய்திய பெதும்பைக்கு சேலையுடுத்தி, சோடித்து, நகை நட்டெல்லாம் போட்டு அலங்காரம் செய்து, தலைநிறையப் பூ வைத்து ‘குனியடி’ என்று தாய்மார் தலையிலே குட்டி மணவறைக்கு அனுப்பி வைக்கும் கற்பின் கருவூலங்களை ஆபிரிக்காவில் காண முடியாது. தேர் வடம் போல ‘உருண்டு திரண்டு’ வஜ்ரமாகத்தான் அவர்களுக்கு கைகளும் கால்களும் இருக்கும். முதுகு நிமிர்ந்து, கண்கள் நேராக நோக்கும். பச்சரிசியை குத்தி வறுத்தெடுத்தது போல பொதுநிறத்துக்கும் மேலான ஒரு கறுப்பு. பார்க்கப் பார்க்க தூண்டும் அழகு. அப்படித்தான் இருந்தாள் அமீனாத்து.

ஆனால் அப்பேர்ப்பட்ட ‘ஏரோபிக்ஸ்’ அழகு கூட லோடாவிடம் விலை போகவில்லை. பாவம், போதிய முன் அநுபவம் இல்லையென்று அவளுக்கும் அந்த வேலையை லோடா கொடுக்க மறுத்துவிட்டார். சியரா லியோனின் ஜனத்தொகையில் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் எண்பது வீதத்தில் அமீனாத்துவின் குடும்பமும் அடங்கும். பதினொரு பேர் கொண்ட அவளுடைய குடும்பம் அவள் ஒருத்தியின் உழைப்பையே நம்பியிருந்தது. இரண்டு மாதகாலமாக அவள் இந்த வேலைக்காக அலைந்து கொண்டிருந்தாள். இந்த வேலையும் கிடைக்காவிட்டால் அவள் குடும்பம் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான்.

பிறந்தநாளிலிருந்து இன்றுவரை அவள் கண்டது கஷ்டம்தான். ஒரு மங்கிய விடிவெள்ளியை இன்னமும் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தாள். செக்பீமா என்னும் குக்கிராமத்தில்தான் அவள் பிறந்து வளர்ந்தாள். பரம ஏழையாகப் பிறந்தாலும் அவள் வனப்பில் கோடீசுவரியாக இருந்தாள். அவள் பதின்மூன்று வயதிலேயே பணமுடித்ததற்கான காரணம் அவளுடைய மயக்கும் அழகுதான்.

அறுவடை முடிந்த கையோடு அந்த வருடம் பருவமான பெண் பிள்ளைகளை காட்டில் கொண்டு போய் வைத்து தனிக் குடிசை போட்டு சில ரகஸ்ய சடங்குக செய்வது ஆபிரிக்காவில் வழக்கம். அந்த வருட சடங்குப் பெண்களில் அமீனாத்துவும் ஒருத்தி. சடங்கு முடிந்ததும் ஊர் வழமைப்படி இடுப்பில் மட்டும் லேஞ்சியளவு ஒரு துணியைக் கட்டிக் கொண்டு உடம்பு முழுக்க கசாவா மாவைப் பூசி நிர்வாணமாக ஊரைச் சுற்றியபடி இந்தப் பெண்கள் வரவேண்டும். ஊருக்கு மூத்த பெண்கள் ஆடிக்கொண்டும், அவர்கள் பிரலாபத்தை உரத்து பாடிக் கொண்டும் முன்னே செல்ல ஆண்கள் எல்லாம் ஓடி பெண்ணை யாராவது ஆண்பிள்ளை பார்த்து விட்டால் உடனேயே அந்தப் பெண்ணை அவன் மணம் முடிக்கவேண்டும் என்பது சம்பிரதாயம்.

அவள் ஊர்வலம் வந்த அடுத்த நாளே ம்பாயோ என்பவள் நாலு ஆடுகளை சீதனமாகக் கொடுத்து அவளை மணமுடிக்க வந்து விட்டான். அமீனாத்துவின் தகப்பனார் நாலு ஆடுகளை ஒருமிக்க சேர்த்து அவர் ஆயுசிலேயே பார்த்ததில்லை. அவருடைய மகிழ்ச்சிக்கு கேட்க வேண்டுமா? அப்படித்தான் அவளுடைய இல்வாழ்க்கை திடீரென்று ஆரம்பித்து ஒரு பிள்ளையும் பிறந்தது. ஆனால், யெங்கிமா ஆற்றை கடந்து வேலை தேடிப்போன அவளுடைய புருஷன் மீண்டும் திரும்பி வரவேயில்லை. அமீனாத்துபிள்ளையையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் பெற்றோருடன் வந்து சேர்ந்து கொண்டாள்.

அதற்கு பிறகுதான் ஒரு மதுக்கடையில் நடனமாதுவாக அவள் சேர்ந்தாள். மது குடிக்க வரும் ஆடவர்களுடன் நடனமாடுவதுதான் அவள் வேலை. நடனம் அவளுடைய ரத்தத்தில் ஊறியிருந்தது கிடைக்கும் ‘சம்பாவனை’ அவள் குடும்பத்தை பராமரிக்க போதுமானதாக இருந்தது. அப்பொழுதுதான் அவளுக்கு இரண்டாவது பிள்ளை பிறந்தது. (‘இது எப்படி?’ என்று சமத்காரமான கேள்விகள் எல்லாம் கேட்கக் கூடாது. ‘கற்பு’ பற்றி திருக்குறளையும், சிலப்பதிகாரத்தையும் மேற்கோள் காட்டி வியாக்கியானங்கள் செய்பவர்கள் இல்லாத ஆபிரிக்காவில் அப்படித்தான். இப்படியும் நடக்கும்.)

டொங்கா வைரச் சுரங்கத்தில் வேலை செய்ய நூற்றுக் கணக்கான பேர் அவளுடைய கிராமத்தை விட்டு அள்ளுப்பட்டு போனபோது மதுக்கடை வருமானம் விழுந்தது. அமீனாத்து என்ன செய்வாள்? வறுமையின் கொடுமை தாளாமல் தனது குடும்பத்துடன் தலைநகரமான ‘ப்ரீ ரௌனுக்கு வந்து சேர்ந்தாள். அப்போது அவளுக்கு வயது பத்தொன்பது தான். ஆனால் இங்கே பார்த்தால் இன்னும் மோசம். சிறு பெண்களெல்லாம் நடன மாதுக்களாக போட்டி போட்டுக்கொண்டு ஆடினர். இவளால் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு நேரச் சாப்பாட்டிற்குக்கூட வழியில்லை என்று வந்துவிட்டது. இந்த நேரத்தில் அவள் ஆத்தாமல்போய் கீழிறங்கி வந்து சங்கைகெட்ட ‘ஹவுஸ் மெய்ட்’ வேலைக்கு மனுப்போட்டாள். இப்படியான ஒரு வேலையில் சேர்ந்தாலாவது அவளுடைய தரித்திரம் நிரந்தரமாக தன்னைவிட்டு ஓடிவிடக் கூடும் என்ற அளவில் அப்படிச் செய்து விட்டாள். பசியைத் தீர்ப்பதற்காக இந்த அவமானத்தைக்கூட அவள் தாங்குவதற்கு சித்தமாக இருந்தாள்.

காலையில் காரில் அலுவலகத்துக்கு போகும் போதும், மாலையில் திரும்பும்போதும் அந்தப் பெண் அவர் வீட்டு வாசலிலே பழியாய் கிடப்பதை லோடா அவதானித்தார். கடந்த நாலு நாட்களாக இது நடந்து வந்தது. கடைசியில் ஒருநாள் கார் சாரதியிடம் சொல்லி காரை நிறுத்தி அவளிடம் ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு அவள் “மாஸ்டர், எங்கள் நாட்டு வறுமையைத் தீர்ப்பதற்காக வந்த கடவுள் நீங்கள் என்று பேப்பர்கள் எழுதுகின்றன. நானோ ஒரு முறி ‘கசாவாவுக்கும்’ ஒரு கரண்டி ‘பாம்’ எண்ணெய்க்கும்கூட வழியில்லாத பரம ஏழை. என்னை நம்பி பத்துபேர் பட்டினியுடன் காத்திருக்கிறார்கள். எனக்கு வேலை கிடைத்தால் பதினொரு பேருடைய வறுமை தீரும். மாஸ்டர், எனக்கு இந்த வேலையை ஒருவாரத்திற்கு சம்பளமின்றி தந்து பாருங்கள். அதற்குப்பிறகு உங்கள் முடிவு” என்றாள்.

லோடாவுக்கு அவளுடைய நேர்மை பிடித்துக் கொண்டது. ஏழையென்றாலும் அவள் குழையாமல் நிமிர்ந்து நின்று கண்களைப் பார்த்து பேசியது பிடித்துக் கொண்டது. மிகவும் சொற்பமான ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து, சிக்கனமாகத்தான் சொல்ல வேண்டிய கருத்துக்களை நிதானமாக நிறுத்தி நிறுத்தி சொன்னது பிடித்துக் கொண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய அறிவான கண்களும், ஆர்வமும் துணிச்சலும் அவருக்குமெத்தப் பிடித்துக் கொண்டது.

இப்படித்தான் அமீனாத்து அங்கே வேலைக்கு சேர்ந்தாள். ஒரு வார காலத்தில் வீட்டையே மாற்றி அமைத்து விட்டாள். வீடு எப்பவும் பளிச்சென்று இருந்தது. லோடாவுடைய பழக்க வழக்கங்களை அவதானித்து அதற்கேற்ற மாதிரி அவருடைய உடைகளைப் பேணி அந்தந்த நேரத்துக்கு அணிவதற்கு தகுந்தவற்றை தேர்ந்தெடுத்து வைத்தாள். ஒருமுறை ஒன்றை சொன்னால் ஆணியடித்ததுபோல அவளுடைய மூளையில் அது பதிந்துவிடும். லோடாவுக்கு தான் செய்த முடிவு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. அமீனாத்தும் அவளுடைய நல்லெண்ணத்தை கவர்வதில் முழுமூச்சுடன் செயல்பட்டாள்.

மனைவி இல்லாவிட்டாலும் லோடாவின் வீட்டு நிர்வாகம் இப்படி சீராகப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அலுவலகத்து வேலையில் ஒழுங்கீனங்கள் மலிந்து கிடந்தன. ஒரு அடி ஏறினால் ஒன்பதடி வழுக்கியது. எச்.டி.ஐயை எப்படியும் உயர்த்தி விடவேண்டும் அவர் ஆசையில் மண் விழுந்துவிடும்போல இருந்தது. அவருடைய அபிவிருத்தித் திட்டங்களில் முதன்மையானவை பெண்கள் நலன்பேணும் திட்டங்களும், வறுமை ஒழிப்பு திட்டங்களும்தான். இவையெல்லாம் அரசாங்க ஒத்துழைப்புடன் நடக்க வேண்டியவை. ஆனால் அதிகாரிகளுக்கு இவற்றினால் ஒருவித லாபமும் இல்லையென்றபடியால் கிளித்தட்டு விளையாட்டு போல கோப்புகளை இங்குமங்கும் மாற்றி மாற்றி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் ஒரு பயனும் காணவில்லை.

அதிகாரிகளுடன் ஒயாது சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தால் அங்கே நுளம்புகளுடன் இவருடைய போராட்டம் தொடரும். வீட்டைச் சுற்றி மருந்துகள் அடித்தும், நுளம்பு வலைக்குள் படுத்தும் கூட ஒன்றிரண்டு நுளம்புகள் அவரைப் பிரியமுடன் தேடி வந்துவிடும். சியரா லியோன் நுளம்புகள் மலேரியா மருந்துகளுக்கு பயப்படாதவை. மலேரியா மருந்தை மிகக் கிரமமாக சாப்பிட்டும் அவருக்கு ஒரு நாள் மலேரியா வந்துவிட்டது. இந்தக் காய்ச்சல் முந்திப்பிந்தி லோடாவுக்கு வந்ததில்லை. அங்கே அது எல்லாருக்கும் அடிக்கடி தடிமன் காய்ச்சல்போல வந்து வந்து போகும். இவரைப் போட்டு இது கண்ணும் கருத்துமாகப் பார்த்தாள். மலேரியா மருந்தை நேரம் தவறாமல் கொடுத்தாள். குவினைன் மரப்பட்டைகளையும், தோஃறா’ இலையையும் போட்டு அவித்த குடிநீரை காலையும் மாலையும் அவருக்கு வலுக்கட்டாயமாகப் புகட்டினாள். அவளுடைய கரிசனம் லோடாவின் மனதை நெகிழவைத்தது.

உண்மையான ஊழியத்துக்கு எப்பவும் பயன் உண்டு அல்லவா? லோடா அவளுடைய சம்பளத்தை உயர்த்தினார்; சலுகைகளை அதிகரித்தார். அமீனாத்து உச்சி குளிர்ந்து போனாள். அவளுக்கு தன் எஜமானரிடம் உண்மையான பக்தியும் அசைக்க முடியாத விசுவாசமும் ஏற்பட்டுவிட்டது. ‘லிம்பா’ இனத்துப் பெண்களைப்போல் அவள் இனிமேல் லோடாவுக்காக தன் உயிரையும் கொடுப்பதற்கு தயங்க மாட்டாள்.

லிம்பா இனத்தவர்கள் பொதுவாக அழகுக்கும், விசுவாசத்திற்கும் பேர் போனவர்கள். அதிலும் பெண்கள் முற்றிலும் பழுக்காத நாவல் பழம் போன்ற நிறமும், செதுக்கிய சிலை போன்ற அழகும் கொண்டிருப்பார்கள். முந்திய ஜனாதிபதி பதவியேற்ற சமயம் லிம்பா இனத்தவர் எல்லாம் ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு பதினாறு வயது நிரம்பாத யௌவன அழகியை பரிசாக அளித்தார்களாம். லோடாவும் இந்த லிம்பா அழகியின் உண்மையான சேவையில் மகிழ்ந்து போனார்.

நுளம்பைத் தொடர்ந்து இப்பொழுது ஒரு இலையான் அவர் வாழ்க்கையில் குறுக்கிவிட்டது. சியரா லியோனில் அம்பாரமாகக் காணப்படும் இதற்கு பேர் ‘தும்பு’ இலையான். பார்த்தால் மாட்டு இலையான் போன்று பெரிதாகத் தோன்றும். அது ஈரமாயிருக்கும் துணிமணியில் வந்து நைசாக முட்டை இட்டுவிட்டு போய்விடும். அந்தத் துணியை யாராவது அணிந்தால் அந்த முட்டை சருமத்துக்குள் போய் அங்கேயே பொரித்துவிடும். ஐந்தாறு நாட்களில் ஒரு கொப்புளம் தோன்றி உபாதை கொடுக்கத் தொடங்கும். கொப்புளம் சுண்டைக்காய் அளவு மருமன் ஆனதும் வலியோ தாங்க முடியாமல் போகும். சியரா லியோனுக்கு புதிதாக வருபவர்கள் இந்த தும்பு இலையானிடம் தப்பி போனது கிடையாது.

ஆனால் ஆபிரிக்கர்களுக்கு இது சர்வ சாதாரணம். அவர்கள் ஆயுள் பரியந்தமும் இந்த இலையானுடனேயே குடித்தனம் செய்து பழக்கப்பட்டவர்கள். லோடாவுக்கு இந்த தும்பு இலையான் பற்றிய சரித்திரம் ஒன்றும் தெரியாது. அது ஒருநாள் அவர் நடுமுதுகிலே குடிவந்து பெரிய கொப்புளமாகி நமைச்சல் கொடுக்கத் தொடங்கியது. இவர் ஒருநாள் கண்ணாடியை தன் பின்புறம் வைத்து முதுகைப் பார்ப்பதைக் கண்ட அமீனாத்து திடுக்கிட்டுவிட்டாள். உடனேயே இவருடைய உத்தவைக்கூட எதிர்பாராமல் வாஸ்லைன் கொண்டுவந்து மெதுவாக தடவிவிட்டாள். சிறிது நேரத்தில் நாவல்பழம் போல பழுத்த கொப்புளத்தில் புழு நெளிவது அவள் கண்களுக்கு தெரிந்தது. இரண்டு பெருவிரல்களையும் சேர்த்து நடுமுதுகில் வைத்து அமுக்கியவுடன் குண்டு மணியளவு கொழுத்த புழு ஒன்று வெளியே வந்து விழுந்தது. அவளுக்கு இது சர்வ சாதாரணம். இது போல் ஆயிரம் தடவை இதற்கு முன்பு அவள் இதைச் செய்திருக்கிறாள். லோடாதான் பாவம், கொஞ்ச நேரம் ‘லொடலொடவென்று’ ஆடிப் போய்விட்டார். தாங்க முடியாத முதுகு நோவு கனநேரத்தில் மறைந்துவிட்டது.

அவள் முரட்டுத்தனமாக முதுகிலே அமுக்கிய ஸ்பரிசம் இவர் நெஞ்சிலே போய் இனித்தது. இப்போதெல்லாம் லோடாவுடைய சிந்தனையை அடிக்கடி அமீனாத்து வந்து நிறைக்கத் தொடங்கினாள். ஒரு பதினேழு வயதுப் பெடியனைப்போல அவளுடைய இதயம் அல்லாடியது. இது என்னவென்று அவருக்கு வியப்பாக இருந்தது. ஒருநாள் சனிக்கிழமை பகல் நேரம். அன்று ஹமட்டான் காற்று பலமாக வீசியது. ஆகாயம் முழுவதையும் தூசிப்படலம் மறைத்துவிட்டது. பத்தடி தள்ளி நிற்பவரைக்கூட பார்க்க முடியாதபடி வானம் இருண்டுபோய் கிடந்தது. அவர் வழக்கம்போல கோல்ப் விளையாடப் போகவில்லை. மேற்கத்திய இசையை ஒலிநாடாவில் ஓடவிட்டு சுகமாக ரசித்தபடி ஏதோ எழுத்து வேலையில் ஈடுபட்டிருந்தார்.

அமீனாத்து தன் நீளமான கால்களை எட்டி வைத்துவிட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். இக்கிரிப் பத்தைபோல் அடர்த்தியாய் வளர்ந்திருந்த சுருள்முடியை இரும்பினால் செய்த சிக்குவாங்கியால் ஒட்ட இழுத்து சிறுசிறு பின்னல்களாகப் பின்னி மடித்து லப்பாத் துணியினால் இறுக்கி கட்டியிருந்தாள் அவள்; தென்னம்பாளை வெடித்தது போன்ற அவள் பற்களுக்கு ‘மாட்ச்சாக’ கறுப்பு கழுத்திலே ஒரு வெண்சங்கு மாலை தொங்கியது. தன்னை மறந்து இசைக்கேற்ப மாலை தொங்கியது. தன்னை மறந்து இசைக்கேற்ப தன் உடலை அசைத்தபடி இயங்கிக் கொண்டிருந்தாள். நடனமாது அல்லவா? நடனம் தானாகவே அவளிடம் ஓடி வந்தது.

லோடா அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார். புதுக்கப் புதுக்க அவளைப் பார்ப்பது போலிருந்தது அவருக்கு. ஆபிரிக்க அழகையெல்லாம் மொத்தமாக குத்தகை எடுத்ததுபோல அவள் காணப்பாட்டாள். சிறு பிள்ளைபோல அவள் தன்னைமறந்து ஆடையை ஆரவாரமின்றி அசைத்தாடுவது அழகாக இருந்தது. இவர் அவளுடைய கண்களையே பார்த்தார். அவள் துணுக்குறவும் இல்லை; கீழே பார்க்கவும் இல்லை. திருப்பி இவர் கண்களை நிதானமாகப் பார்த்தாள். நல்லூர் சப்பரம் போல மெள்ள மெள்ள நகர்ந்து இவர் இருக்கைக்கு கிட்ட வந்தாள்; சாவதானமாக இவருடைய மேசையை மறுபடியும் சுத்தம் செய்யத் தொடங்கினாள். அப்பொழுது லோடா எட்டி அவளுடைய கையைப் பிடித்தார். அவள் அப்படியே அவர்மேல் சரிந்தாள்.

அவர்களுடைய திருமணம் ஆடம்பரமின்றி ஒரு கிராமத்து சர்ச்சில் நடைபெற்றது. வெகு நெருங்கிய சினேகிதர்களும், உறவுக்காரர்களும் மட்டுமே வந்திருந்தனர். அமீனாத்துவின் விருப்பத்திற்கிணங்க லோடா கொழுத்த மாடொன்றை அடித்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். ‘ஜொலஃப் ரைஸ”ம்’, புகைபோட்ட ‘பொங்கா’ மீனும், ‘பாம்’ எண்ணெய்க் குழம்பும் அந்த ஊர் முழுக்க மணத்தது. அந்த விருந்தைப் பற்றியே அவர்கள் ஒரு வார காலமாக கதைத்தார்கள். அவளுக்கு அடித்த யோகத்தை நம்ப முடியாதவர்களாக அந்த எளிய கிராமத்து மக்கள் பிரமித்துப் போய் நின்றார்கள். பரம ஏழையான அமீனாத்து தான் ஊதியத்துக்கு வேலை செய்த அதே வீட்டில் இல்லத்தரசியாக பதவியேற்றாள்.

லோடா தன் அந்தஸ்துக்கு ஏற்ப வாழ்வதற்கு அவளை வெகு சீக்கிரமே பழக்கி வைத்தார். அமீனாத்து காரோட்ட பழகிக்கொண்டாள்; இங்கிலாந்திலிருந்து விதவிதமான மேல்நாட்டு உடைகள் தருவித்து அணிந்துகொண்டாள். அவள் அவற்றைப் போட்டபோது கடைந்தெடுத்த கறுப்பு ‘மாடல்’ போல இருந்தாள். சீக்கிரத்திலேயே மீன்குஞ்சு நீத்தப் பழகுவதுபோல வெகு இயற்கையாக அவருடைய சமூக அந்தஸ்துக்கு ஏற்ப அவள் தன்னை உயர்த்திக்கொண்டாள். ஆனாலும் அவள் தனது இல்லத்து வேலைகளை தானே தொடர்ந்து செய்தாள்; ஒரு வேலைக்காரியை வைப்பதற்கு மட்டு ம தீர்ககமாக மறுத்துவிட்டாள்.

லோடாவினுடைய வாழ்க்கையானது இப்படியாக திடீரென்று கந்தர்வலோக வாழ்க்கையாக மாறிவிட்டது. தன் வாழ்நாளிலேயே இவ்வளவு சந்தோஷமாக இருந்தது அவருக்கு ஞாபகமில்லை. கிஷ்கிந்தையிலே சுக்கிரீவன் மாரிகாலம் முடிந்தபின்பும் ராமகாரியத்தை முற்றிலும் மறந்து அந்தப்புர போகத்தில் மூழ்கிக் கிடந்ததுபோல லோடாவும் தன் அலுவலக காரியங்களை அறவே மறந்தார். அவளோ வாலிபத்தின் உச்சியில் இருந்தாள்; இவருடைய ‘பாட்டரியோ’ கடைசி மூச்சில் இருந்தது. அவளுடைன் சுகித்திருப்பதே மோட்சம் என்ற நிலையில் ‘விடுதல் அறியா விருப்பனன் ஆகி’ அவள் காலடியில் உலகத்தை தரிசித்தவர் அலுவலகத்தை தரிசிக்கத் தவறிவிட்டார்.

சியரா லியோனின் எச்.டி.ஐயை அணுவளவேனம் உயர்த்தி விடவேண்டும் என்ற அவருடைய ஆரம்ப காரத்து ஆர்வமெல்லாம் போன இடம் தெரியவில்லை. இவரின் கீழ் வேலை பார்த்த அதிகாரிகள் எல்லாம் சங்கீத சீஸனில் முன்வரிசையில் உட்கார்ந்து சிரக்கம்பம் செய்யும் மகா ரஸ’கர்கள்போல இவர் சொன்னதற்கெல்லாம் தலையை ‘ஆட்டு’ ‘ஆட்டு’ என்று ஆட்டினார்களே ஒழிய காரியத்தில் தொழில்கள் மூலம் கிராமத்துப் பெண்களின் வருவாயை அதிகரிக்கும் அவருடைய சிலாக்கியமான திட்டம் படுதோல்வி அடைந்தது. மூலதனமாக அவர்கள் கொடுத்த உபகரணங்களும், பொருட்களும் கூட திருட்டுப் போயின. குதிரையை தண்­ர் காட்ட இழுத்துப் போகலாம்; குடிக்கப் பண்ண முடியுமா? இப்படியாக லோடா தன் மனதை தானே தேற்றிக் கொண்டார்.

அவருடைய பதவிக்காலம் முடிந்து வேறு நாட்டுக்கு மாற்றல் வந்தபோது லோடா திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். தான் சாதித்தது அவருக்கு பெருமை தருவதாக இல்லை. ஆனாலும், அலுவலகத்தில் செய்ய முடியாததை தன் சொந்த வாழ்க்கையில் சாதித்தது அவருக்கு கொஞ்சம் சமாதானமாக இருந்தது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் தரித்திரத்தில் உத்தரித்த ஒரு பெண்ணுக்கு அவர் வாழ்வு கொடுத்திருந்தார் அல்லவா? அவள் இன்று செல்வத்தில் திளைப்பது மட்டுமில்லாமல் அவருடைய இல்லத்துக்கும் அரசியாகிவிட்டாள். அவருக்கு புன்சிரிப்பு வந்தது. இப்படியான ஓர் அழகி அவர் வீட்டுக்கும், அவருடைய இதயத்துக்கும் ராணியானது அவருடைய அதிர்ஷ்டம்தான். இந்த ஒரு விஷயத்திலாவது சியரா லியோனின் எச்.டி.ஐ சிறிது உயர்ந்திருக்குமல்லவா?

புள்ளி விபரங்களை கரதலப் பாடமாக உய்த்திருந்த லோடா இங்கேதான் ஒரு மிகப்பெரிய தவறு செய்தார். அந்த வருடம் வெளியான எச்.டி.ஐ விபரங்களை சிறிது அவதானித்து நோக்குவாராயின் அவருக்கு தான் செய்த தவறு புரிந்திருக்கும். அவர் அமீனாத்தவை மணம் புரிந்ததினால் உள்ளபடியாக எச்.டி.ஐ. அணுப்பிரமாணமான அளவில் விழுந்துதான் போனது; கூடவில்லை.

காதல் கண்ணை மறைக்கும் என்று சொல்வார்கள் லோடா விஷயத்தில் அது அவர் மூளையையும் மறைத்து விட்டது.

பின்குறிப்பு :- உலகத்து நாடுகளில் தராதரத்தை கணிப்பதற்கு எச்.டி.ஐ முறையை ஐ.நா. கடைபிடிக்கிறது. ஒரு பெண் ஊதியத்துக்கு வேலை செய்யும் போது அவளுடைய ஊழியம் எச்.டி.ஐ கணக்கிலே சேர்க்கப்படுகிறது. அதே பெண் தனக்கு சம்பளம் கொடுக்கும் எஜமானரை மணம் முடித்து அந்த வேலையை சம்பளமின்றி செய்ய நேர்கையில் அவளுடைய உழைப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளப் படுவதில்லை. இதனால் எச்.டி.ஐ விழுக்காடு அடைகிறது. பெண்களுடைய ஊதியமில்லாத உழைப்பை கணக்கிலே சேர்க்காததால் ஏற்படும் முரண்பாட்டை இந்தக் கதை சுட்டிக்காட்டுகிறது என்று சிலம் சொல்லலாம். அதை நம்புவதும் நம்பாததும் உங்கள் பொறுப்பு.

– 1995, வம்ச விருத்தி, மித்ரா வெளியீடு, முதல் பதிப்பு 1996

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *