கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 11,429 
 

பாலா தான் முதலில் அவளை நேசித்தான். அவளின் சம்மதம் அறிய ஆவலாய் இருந்தான். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய முரளிக்கு அவளைப் பிடித்துப் போய்விட்டது. தனது கறுப்பு நிறத்தை எண்ணி கழிவிரக்கம் கொண்டான் பாலா. தோற்றமே பெண்களை முதலில் கவர்ந்திழுக்க உதவுகிறது என பத்திரிகைகளில் படித்துள்ளான். தன் உயரத்தை தானே அறியாதது எண்ணி கவலை அடைந்தான்.

‘ஒன்றைப் பெற ஏதாவதொன்றை இழந்து தான் ஆகவேண்டும்’ என்று அப்பா அடிக்கடி சொல்வார். எதிர் வீட்டுத் தாத்தா ‘வளர்க்க நினைக்கிறவன் கையில புறா சி்க்காதுடா’ என்பார்.

அந்தி வேளை.சாலையின் இருபுறங்களிலும் இன்னும் சற்று நேரத்தில் வாடிவிடும் பூக்கள் என்ன பரவசமாய் இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தை சம்ஹாரம் செய்யப் போகின்றது இருட்டு. சிலுசிலுவென்று காற்று மேனியைத் தொட்டுச் செல்கிறது. விவரம் அறியாத பச்சிளம் குழந்தைகள் என்ன குதூகலத்துடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன. திடீரென்று ஒரு துளி நீர் பாலாவின் உதடுகளில் விழுகிறது. தெரு முனையில் கேட்ட ஒப்பாரி சத்தம் பாலாவை திசை திருப்பியது.

‘காதல் ஜோடிகள் இருவருமே தற்கொலை செய்து கொண்டார்களாம். என்ன காதலோ, என்ன எழவோ சின்னஞ் சிறுசுக பெத்தவங்களை நெனச்சி பார்ப்பதே இல்லை. இருபது வருசமா வளர்த்தவங்களை விட நேற்று வந்தவன் பெருசா போயிட்டான். துணிச்சல் உள்ளவன்னா வாழ்ந்து காட்டணும்ல. அதை விட்டுட்டு இரண்டு குடும்பத்தையும் சந்தி சிரிக்க வைச்சிட்டுல போயிட்டாங்க. நமக்கே நெஞ்சை அடைக்குதே, பரிகொடுத்தவங்களுக்கு எப்படி இருக்கும். எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்’ எனப் புலம்பிக் கொண்டு போனார் ஒரு பெரியவர்.

எதனால் பவித்ராவைப் பிடித்திருக்கிறது என தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் பாலா. தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காதவளிடம் பின்னாலே ஏன் மனது அலைகிறது. அழகு ஒருவனை பைத்தியமாக்கும் அல்லது சிகரத்தை அடைவதற்கு உந்துதல் அளிக்கும். அவளுக்கு முள் குத்தினால் அவளை விடவும் ஏன் என் மனது பரிதவிக்கிறது என தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

திருப்பதியில் வரிசையில் நின்று தரிசனம் செய்தால் உண்டாகாத பரவசம், அவளைப் பார்ப்பதால் உண்டாகிறது. அவளின் இருப்பு தான் என்னை இயங்க வைக்கிறது. அவளில்லாத வாழ்வை நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை பாலாவுக்கு.

அப்போது எதிரில் ஒரு குடுகுடுப்பைக்காரன் வந்து கொண்டிருந்தான். பாலாவைப் பார்த்ததும் ‘தம்பி கால வெள்ளத்துல சிக்கிக்கிட்டாரு,பாதி வரைக்கும் வந்துட்டா பின்னால போக முடியாது. மீதியைக் கடக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. பத்திரம் தம்பி வாழ்க்கைப் புதிரை புரிஞ்சிக்கப் பாரு தம்பி’ என்று கத்திவிட்டு நகர்ந்தான்.

விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான் பாலா. என்னென்ன ஞாபகங்களோ வெண் மேகம் போல் வந்து போயின.

பொழுது விடிந்தது. அன்று பவித்ரா வேலை செய்யும் கம்பெனியிலிருந்து இண்டர்வியூக்கு வரச் சொல்லி கடிதம் வந்திருந்தது. இதை முரளியிடம் சொன்ன போது தனக்கும் கடிதம் வந்திருப்பதாகவும், இந்த இண்டர்வியூக்காகத் தான் அமெரிக்காவிலிருந்து வந்திருப்பதாகவும். அந்த வேலைக்கு விண்ணப்பிக்கச் சொன்னவளே பவித்ராதான் என்றும் முரளி பாலாவிடம் விலாவாரியாகச் சொன்னான்.

அந்த நிறுவனம் நடத்தும் இண்டர்வியூக்கு போக வேண்டாம் என்று தான் பாலா முடிவு செய்தான். வீட்டு சூழ்நிலை அவனைக் கலந்து கொள்ள வைத்தது.

அந்த வேலை பாலாவுக்கு கிடைத்ததை ஜீரணிக்க முடியவில்லை பவித்ராவுக்கு. முரளிக்காக எவ்வளவோ சிபாரிசுகளையும், பரிந்துரைகளையும் அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளியிடம் கொடுத்திருந்தாள். இருந்தாலும் அந்த வேலை பாலாவுக்கு போய்விட்டது. பாலா மீது கோபம் கொண்டாள் பவித்ரா.

நிறுவத்தில் வேலைக்குச் சேர்ந்தான் பாலா. அவனுடைய டீம் லீடராக பவித்ரா நியமிக்கப்பட்டிருந்தாள். அவன் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை பவித்ரா.

பவித்ரா கடினமான புராஜெக்ட்டை தந்து இன்ன தேதியன்று முடிக்க வேண்டும் எனவும், தன்னால் இரண்டு நாள் வேலைக்கு வர இயலாது எனவும், அதுவரை பாலா பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என கூறிச் சென்றாள்.

அடுத்த நாள் கணிணியில் வேலை செய்து கொண்டிருந்த போது நெஞ்சடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தான் பாலா. அவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். ஆனால் பவித்ராவோ தன்னை விரும்ப வைக்கவே அவன் அப்படிச் செய்வதாக நினைத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் பணிக்கு வந்த பவித்ரா பாலாவிடம் ‘கஷ்டப்பட்டு வொர்க் பண்றீங்களா, கஷ்டப்பட்டு வொர்க் பண்ற மாறி நடிக்கிறீங்களா?’ எனக் கேட்டாள்.

பாலாவால் பதில் சொல்ல இயலவில்லை. அவள் கோபத்துடன் தன் அலுவலக அறைக்குச் சென்றுவிட்டாள். அப்போது அங்கு வந்த பாலாவின் நண்பன், ஏன் முகம் வாடியுள்ளது எனக் கேட்டான். அதற்கு பாலா பவித்ரா தன்னிடம் கேட்டதையும் தன் சுவாபமே அப்படித் தானே ஏன் என்னை நடிக்கிறீங்களா எனக் கேட்க வேண்டும், என் மனசை கொஞ்ச நேரத்துல உடைச்சி எறிஞ்சிட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது பாலா கண்ணீர் மல்க நிமிர்ந்து பார்த்த போது, பவித்ரா அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவளுடைய கனனங்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *