வலியில்லாத காதல் இல்லை!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 20,902 
 

இன்றைய அலுவலக வேலைகள் மூன்று மணிக்கே முடிந்துவிட்டது… வழக்கமாக ஆறை தாண்டியும் ஜவ்வாக இழுக்கும் பணிகள், இவ்வளவு விரைவாக முடிவது எப்போதாவது நிகழும் ‘மெடிக்கல் மிராக்கில்’கள்தான்… பசி வயிற்றை பிடுங்கினாலும், கேண்டின் பக்கம் செல்ல பிடிக்கவில்லை… ஈக்கள் குடித்து மீந்துபோன காபியை பேதம் பார்க்காமல் குடிக்க மனம் ஒப்பவில்லை… எப்படியும் நான்கு மணிக்கு வீட்டிற்கு சென்றுவிடலாம், அம்மா கையால் காபியை ஹாயாக சோபாவில் அமர்ந்தபடி ரசித்துக்குடிக்கலாம்… 3.10க்கு வாகன நிறுத்துமிடத்தை அடைந்துவிட்டேன்… எப்போதும் பாரதிராஜா படத்து நாயகியைப்போல தலையை சாய்த்து ஏக்கத்தோடு என்னை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் என் பல்சர் பைக், இன்றைக்கு என் வரவை பார்த்ததும் முருங்கைக்காய் சாப்பிட்ட முறுக்கோடு சிலிர்த்து நின்றது… மெல்ல அதன் தலையை தட்டி, வண்டியை கிளப்பினேன்…

இவ்வளவு விரைவாக வீட்டிற்கு போவதில் அப்படி என்ன சந்தோஷம்?… ரெஸ்ட் எடுக்கலாம், நண்பர்களோடு வெளியே சுற்றலாம், பேஸ்புக்கில் காதலன் தேடலாம்… ஆனால், இது எல்லாவற்றையும்விட ‘அதிக ட்ராபிக்கில்
சிக்கிக்கொள்ளாமல் வீட்டிற்கு செல்லலாம்!’ என்கிற நிம்மதிதான் பிரதான காரணம்… சீறிப்பாய்ந்த பல்சரை, சிக்னலின் சிவப்பு விளக்கால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி நிற்கவைத்தேன்… 88, 87, 86 நொடிகள் நகர்ந்தது..

ஹெல்மெட்டை கழற்றி, வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டேன்… அப்போதுதான் பைக்கின் முன்புறத்தை கவனித்தேன்… அடச்ச!.. என்ன இது வெள்ளையா?…

காக்காவேதான், கருமம்… இன்னைக்கு அமாவாசை வேறா, எங்கயோ வடையும் பாயாசமும் சாப்பிட்ட காக்கை ஒன்னு என் பல்சரை கழிவறை ஆக்கிருச்சு…

முதல்ல உலகத்துல இருக்குற காக்கா எல்லாத்தையும் சுட்டுத்தள்ளனும்… ஏனோ ஒரு காக்கையின் செயலுக்காக, ஒரு இனத்தையே அழிக்க இந்த மனசு சட்டென துணிந்துவிடுகிறது!…

எதைவைத்து துடைக்கலாம்?… கைக்கு வாகாக ஒன்றும் கிடைக்கவில்லை, நொடிகளும் 43, 42 குறைந்துகொண்டே வந்தது… சரியாக அந்த நேரத்தில் இளைஞன் ஒருவன் விளம்பர நோட்டிஸ்’களை ட்ராபிக்கில் நின்றவர்களிடம் விநியோகித்துக்கொண்டிருந்தான்… எப்போதும் அத்தகைய நோட்டிஸ்களை உதாசினப்படுத்தும் நான், இன்றுமட்டும் விரும்பி அதை வாங்கிக்கொண்டேன்…

ஆச்சர்யத்தோடுதான் என்னை ஏறிட்டுப்பார்த்தான் அந்த இளைஞன்… அவன் அங்கிருந்து நகர்ந்ததும் அவசர அவசரமாக காக்கையின் எச்சத்தை அதில் துடைத்து, கசக்கி எறிய முனைந்தேன்… அப்போதுதான், அந்த காகிதத்தை எதேச்சையாக கவனித்தேன்… அதில் மேலாக தெரிந்த பெயர், என்னை உள்ளே பிரித்துப்பார்க்க தூண்டியது…

“வளவன் உணவகம்… இனிதே ஆரம்பம்!” ஏதோ ஒரு உணவக விளம்பரம், ஆனால் என் கவனத்தை ஈர்த்தது அந்த விளம்பரம் அல்ல, அந்த பெயர் மட்டும்தான்…

வளவன்… மறக்கக்கூடிய பெயரா அது? மனதை விட்டு மறையக்கூடிய பெயரா அது?…

நான் பதினொன்றாம் வகுப்பு படித்தபோது, பன்னிரண்டாம் வகுப்பு படித்த வளவனைப்பற்றி சிறு வர்ணனையை ஒரு நான்கு வரிகளில் சொல்லிவிடுகிறேன்…

பெயருக்கேற்ப வளமான உடலமைப்பை கொண்டிருப்பவன்… எப்போதும் துறுதுறுக்கும் அந்த கண்களுக்கு மேலே, வில்லாக வளைந்திருந்த புருவங்கள் மட்டுமே ஆயிரம் சங்கதிகள் பேசும்… `நடவு நட்ட வயலில் அரும்பியிருக்கும் பயிரை போல உதடுகளுக்கு மேலே, வாலிபத்தின் வயதை கணக்கிட வைத்த மீசையை அவன் வலது கை எப்போதும் முறுக்கிக்கொண்டே இருக்கும்… செம்பவள மேனியும், கட்டான உடற்கட்டும் அந்த அழகின் மேன்மையை செம்மையாகவே பறைசாற்றும்…

நான்கு வரிகளில் அவனைப்பற்றி இவ்வளவுதானே கூறமுடியும், சுருக்கமாக சொல்வதனால் “அழகன்!” என்று நான்கே எழுத்துகளில் கூட வளவனை வர்ணிக்க முடியும்…

நண்பன் ஒருவன் மூலம் சயின்ஸ் கைடு வாங்க வளவன் வீட்டிற்கு போனதுதான் வளவனுடனான என் முதல் சந்திப்பு… அங்கு தலையணையில் தலைசாய்த்து, ஒருக்களித்து திருவரங்கநாதனை போல அவன் படுத்திருந்த காட்சி, இப்போதும் பசுமை மாறாமல் கண்களில் நிழலாடுகிறது…

என் பின்னால் நின்ற கார் பலமான ஹாரன் ஒலியெழுப்பிய பின்புதான், சிக்னலின் பச்சையை கவனித்தேன்… “கனவு காண்றதுன்னா வீட்ல போய் காணுடா @##$%$ டேய்!” மூன்று வண்டிகளுக்கு பின்னால் நின்ற ஆட்டோக்காரர்தான் கத்தினார்… அவசரமாக வண்டியை கிளப்பி, தடுமாற்றத்தோடு பயணத்தை தொடர்ந்தேன்…

ஹ்ம்ம்… வளவனின் நினைவுகள் வண்டியின் வேகத்தைவிட சற்று அதிகமான வேகத்தில் மனதில் பயணித்தது…

முதல்முறை பார்த்தபோதே வளவனின் மீது ஒரு இனம்புரியாத ஒட்டுதல்… அதை முதல் காதலென்றுதான் இதுவரை நினைத்திருக்கிறேன்… அந்த குழப்பத்திற்கு வலிமையான காரணமும் உண்டு… பெரும்பாலும் முதல் காதல் என்பது, ‘அது காதல்தான்!’ என்று உணர்வதற்கு முன்பே உதிர்ந்துவிடுவதுமுண்டு… அதனை இனக்கவர்ச்சி, ஈர்ப்பு என்றல்லாம் சொன்னாலும் கூட, வாழ்க்கையில் காதல் என்றதும் மனதுக்கு தோன்றும் முதல் நினைவே முதல் காதலைப்பற்றியதாகத்தான் இருக்கும்…

வளவன் மீது மட்டுமல்லாது, அவன் வீட்டு சூழலின் மீதும்கூட எனக்கொரு அலாதியான ப்ரியம் உண்டு… வாசற்படியில் தலைவைத்து படுத்திருக்கும் செவளை நாய், திண்ணையில் மாட்டப்பட்டிருந்த முருகன் படத்திற்கு பின்னாலிருந்த சிட்டுக்குருவி கூடு, முற்றத்தில் ஒரு ஓரத்தில் சாந்து சட்டியில் முட்டைகள் மீதேறி அமர்ந்து அடைகாத்துக்கொண்டிருந்த அடைக்கோழி என்று வளவனை தாண்டியும் ரசிக்க அந்த வீட்டில் நிறையவே இருந்தது… அந்த வீட்டின் மீதான ஈர்ப்புதான், ஒருகட்டத்தில் வளவன் மீதான காதலாக உருமாறியதோ? என்று தோன்றுவதுண்டு… தினமும் இருமுறையாவது அங்கு சென்றுவிடும் அளவிற்கு வெகுசீக்கிரமாகவே அவன் வீட்டில் ஐக்கியமாகிவிட்டேன்…

அறிவியல் புத்தகம் வாயிலாக தொடங்கிய சந்திப்பு, ஒருகட்டத்தில் பாடப்புத்தகங்களை தாண்டியும் எங்கள் இருவரையும் நிறைய பேசவைத்தது…

வளவன் இலக்கியம், வரலாறுன்னு நிறைய படிப்பான், அதைப்பற்றி நிறைய பேசுவான்… விடிய விடிய அவன் பேசியதை “ஹ்ம்ம்” கொட்டிக்கொண்டிருந்த இரவுகள் நிறைய… அப்படி ‘ஹ்ம்ம்’கொட்டத்தான் அவன் அதுவரை ஆள் தேடிக்கொண்டிருந்தானோ என்னவோ, என்னை விட்டு விலகவே மாட்டான்…

பொன்னியின் செல்வன் நாவலை அவன் விவரிக்கும் அழகிற்கே, காலமும் அவனுடனேயே இருந்துவிடலாம் என்று தோணும்… நந்தினியும், வந்தியத்தேவனும் அந்த தெருவில் நடந்துகொண்டிருப்பதாக உணரும் அளவிற்கு, அவன் விவரிப்புகள் ஆழமாக விரியும்… ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், பாலகுமாரன், சுஜாதா என ஒரு தனி உலகிற்கு என்னை மட்டும் அழைத்துசென்று, அங்கு சிலநேரங்களில் டூயட் கூட பாடுவான்…

சினிமா முதல் உறவினர் சீமந்தம் வரை நானும் அவனுடன் செல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பான், அந்த எதிர்பார்ப்புகள் எனக்கும் பிடித்திருந்தது…

“என்னடா கங்காரு மட்டும் வந்திருக்கு, குட்டியக்காணும்!”

“உன் முத ராத்திரிக்காவது தனியா போவியா, இல்ல அதுக்கும் செந்திலு கூட வரணுமா?” என்று எங்கள் நண்பர்கள் சிலர்கூட இருவரின் நெருக்கத்தையும் கேலி பேசுவார்கள், அதை ஒரு துரும்பாகக்கூட மதிக்காமல் கடந்து செல்வான் வளவன்…

இவ்வளவு நெருக்கமும், ஒட்டுதலும், அன்யோன்யமும் ஒரே நிமிடத்தில் அர்த்தமற்று போனதாக உணரவைத்த தருணத்துக்கு சொந்தக்காரி வித்யா…

“நான் வித்யாவ லவ் பண்றேண்டா செந்திலு!” இப்படித்தான் அன்றொருநாள் பேச்சை தொடங்கினான்…

“எந்த வித்யா?” எந்த வித்யாவாக இருந்தாலும் என் மனம் ஏற்கப்போவதில்லை என்றாலும், குறைந்தபட்சம் குட்டையைக்குழப்ப வழிதேடலாம் என்பதால் அப்படிக்கேட்டேன்…

“உன்கூட பள்ளிக்கூடத்துல படிக்கிறாளே, அவதான்” வளவனுக்கு வெட்கப்படக்கூட தெரியும் என்பதை அப்போதுதான் கவனித்தேன்..

“அய்யய்ய அவளா?… எனக்கு சுத்தமா பிடிக்கலடா அவள… உன் பர்சனாலிட்டிக்கு அவ சரிவர மாட்டா” முகத்தை கோணலாக்கியபடி சொன்னேன்…

“உனக்கு எதுக்குடா புடிக்கணும்? எனக்கு பிடிச்சிருக்கு… அவ பச்சைக்கலர் தாவணி போட்டுக்கிட்டு அன்னிக்கு கல்யாணத்துக்கு வந்தா பாரு, அப்பவே விழுந்துட்டேன்… நின்னா, படுத்தா, தூங்குனா எல்லாமும் அவளாத்தான்
தெரியுறா… அவ வானத்துலேந்து எனக்காக குதிச்ச தேவதைடா…” என்று சொல்லிக்கொண்டே இருக்க, எனக்கு அந்த வர்ணனைகளை காதுகொடுத்து கேட்கமுடியவில்லை….

சட்டென எழுந்து, “சரி வளவா, நான் கிளம்புறேன்… அம்மா எங்கயோ போவணும்னு சீக்கிரம் வரசொன்னாக”என சொல்லிவிட்டு கிளம்பினேன்…

“டேய் டேய்… இருடா…” என் கையைபிடித்து இழுத்து, அவனருகே அமரவைத்து,

“என் லவ்க்கு நீ ஒரு முக்கியமான உதவி பண்ணனும்!” சொல்லிக்கொண்டே என் கைகளை அவன் கைகளால் இறுக்க பிடித்துக்கொண்டான்…

அவன் கேட்டு நான் மறுப்பதென்பது இயலாத காரியம், என்றாலும் காதலனின் இன்னொரு காதலுக்கு உதவிசெய்வதா? “சீக்கிரம் சொல்லு, நான் போவனும்”

“வித்யாகிட்ட அவளோட நான் தனியா பேசணும்னு சொல்லணும்… அவளோட பேசிட்டா, எப்டியும் மடக்கிடலாம்… ப்ளீஸ்டா, இதை செஞ்சே ஆகணும் நீ” குழைந்து குறுகினான்…

மறுக்கவில்லை, மறுத்தால் இவன் வேறு வழியை யோசிப்பான்… அதேநேரத்தில் வித்யாவிடம் இதைப்பற்றி சொல்லவுமில்லை… இருவரையும் இயன்ற அளவிற்கு நேரடியாக சந்தித்துக்கொள்ள முடியாதபடி சில மாதங்களை கடத்தினேன்…

ஆனாலும், எங்கோ கோவிலில் இருவரும் பார்த்து, பேசி, காதலை சொல்லி, அது வீட்டுக்கு தெரிந்து பிரச்சினையாகி…. நிறையவே நடந்துவிட்டது…

பிரச்சினை பெரிதாகி, காதல் பிரச்சினை, ஊருக்குள் சாதிக்கலவரமாகும் சூழலும் உண்டானது… பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு கூட எழுதவிடாமல், வளவனை அவன் பெற்றோர் எங்கோ உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டனர்…

இதெல்லாம் நடந்து, இன்றோடு வருடங்கள் எட்டு ஆகிவிட்டது…

ஏனோ என் மனம் அழுத்துவதாக தோன்றியது, கைகள் உணர்வற்று போனது…. பைக்கை ஒரு பெட்டிக்கடை அருகே நிறுத்தினேன்… தண்ணீர் பாக்கெட் ஒன்று வாங்கி, முகத்தில் ஓங்கி இறைத்துக்கொண்டேன்… கொஞ்சம் தண்ணீரையும் குடித்துவிட்டு, பைக்கில் சாய்ந்தபடி நின்றேன்…

பள்ளிக்கூட இளைஞன் ஒருவன் ‘கிங்க்ஸ்’ வாங்கிக்கொண்டு, அதை லாவகமாக பற்றவைத்தவாறு மரத்திற்கு பின்பு நின்று புகையால் சக்கரம் சுழற்றினான்…

அந்த புகை வாசனை மீண்டும் என்னை வளவனை நோக்கி இழுத்து சென்றது…

வளவன் ஒரு ‘புகை’யாளி, என்று சொல்லும் அளவிற்கு எப்போதும் சிகரெட்டும் கையுமாக வாழ்ந்தவன்… அவன் அந்த சிகரெட்டை பிடிக்கும் விதமே ஒரு தனி அழகுதான்… நடுவிரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையே அந்த சுருட்டியை லாவகமாக பிடித்து, அவ்வப்போது அதில் உண்டாகும் சாம்பலை தட்ட கட்டைவிரலை சொடுக்கியபடியே ஊதும்போது, அவன் வாயிலிருந்து வெளிவரும் சக்கரங்களை எண்ணிக்கொண்டு இருப்பதுகூட ஒரு சுகம்தான்.. அதுவும் அவன் சிகரெட்டை மற்றவர்கள் போல உதடுகளின் நடுப்பகுதியில் பொருத்திக்கொள்ளமாட்டான், வலது அல்லது இடது மூலையில்தான் பொருத்திக்கொள்வான்…

“தொடர்ந்து நடு உதட்டுல புடிச்சா, உதடு கறுத்துப்போயிடும்டா… அதனாலதான்…” என்று அதற்கு லாஜிக் வேறு சொல்லிக்கொள்வான்…

“இது ஒரு போதைதானேடா? விட்டுடலாம்ல?” என்று அட்வைஸ் செய்தால், அன்றைக்கு முழுவதும் நம் தலையை பிய்த்து குழம்பும் அளவிற்கு தத்துவம் பேசுவான்…

“வாழ்க்கைல எல்லாமே போதைதான்டா?.. போதைன்னா என்ன?, அதீத பிடிப்பு…இலக்கிய ஆர்வம் ஒரு போதைதான், காதல் கூட போதைதான், தினமும் நாம பேசலைன்னா கஷ்டமா இருக்கே, அந்த ஒட்டுதல் கூட போதைதான்… இப்புடிப்பட்ட பிடிப்புகள் இல்லைன்னா வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்காதுடா…” என்று என்னைஅவன் வசப்படுத்தும் அளவிற்கு திசைமாற்றி குழப்பிவிடுவான்….

அலைபேசி அடித்தது… அலுவலக நண்பர்கள்தான்.. படத்திற்கு போவதாக பேசிக்கொண்டார்கள், என்னையும் அழைக்கத்தான் இந்த அழைப்பு… மறுத்தாலும், காரணம் கேட்டு இம்சிப்பார்கள்… அழைப்பை துண்டித்து, அலைபேசியை அணைத்துவிட்டேன்…

மரத்திற்கு பின்புநின்ற இளைஞன், புகைபிடித்துவிட்டு ஒரு ஹால்ஸ் போட்டுக்கொண்டான்… என்னை கடக்கும்போது, லேசான புன்முறுவலை உதிர்த்துவிட்டு நகர்ந்தான்… வெகுநேரமாக அவனை நான் கவனித்ததற்காக அந்த நேசப்பார்வை ஒரு பரிசாக இருக்கலாம்…

படபடப்பு குறைந்திருப்பதாக உணர்ந்தேன்… இனி கிளம்பலாம்… பைக் மீண்டும் அளவான வேகத்தில் பயணித்தது..

ஏழு வருடங்களுக்கு பிறகு, கடந்த வருடம்தான் வளவனை எதேச்சையாக மணப்பாறையில் பார்த்தேன்… அலுவலக விஷயமாக சென்றபோது, உணவக வாசல் ஒன்றிலிருந்த பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிக்கொண்டிருந்தான்…

“செந்திலுதானே நீ?” என்று அவனாகவே என்னை அடையாளம் கண்டு அருகில் வந்தான்… வளவனா இது?… அடக்கொடுமையே!… ஏன் இப்புடி ஆகிட்டான்?… தேகம் சுருங்கி, கண்கள் உள்ளே போய், பரட்டை தலையோடு, கூடுதலாக தொப்பை வேறு…

“வளவன்தானே?” என்று எனது அதிர்ச்சியை அவனிடம் வெளிக்காட்டுவிட்டேன்…

“ஆமாண்டா… மறந்துட்டியா?”

“மறக்குறதா?… ஏண்டா இப்புடி ஆகிட்ட?” என் ஆற்றாமையையும் பதிவுசெய்தேன்…

“ஏண்டா எனக்கென்ன?… ஓஹ் இத சொல்றியா? கல்யாணம் , பிள்ளை குட்டின்னு ஆகிடுச்சுல்ல…” தன் தொப்பையை தடவிக்கொண்டே இயல்பாக சொன்னான்…

திருமணம் ஆகிட்டதால, தன்னோட தோற்றத்தைப்பற்றி அக்கறை இருக்காதா என்ன?…

ஒருவேளை எனக்கு திருமணம் ஆகாததால், அந்த லாஜிக் புரியவில்லையோ?… இந்த சமூகம் இப்படியல்லாம் கூட நம்பிக்கைகளை கட்டவிழ்த்துவிடுகிறது…

“சரி அதவிடு, நல்லா இருக்கியா?…”இயல்பான பரஸ்பர விசாரிப்புகள் கால் மணி நேரங்கள் நீண்டது…

பேசிக்கொண்டிருக்கும்போதே சிகரெட்டைகூட பற்றவைத்தான்… ஆனால், வழக்கமாக புகைபிடிப்பவர்களை போல, நடு உதட்டில் வைத்து… இனி கறுத்துப்போக அவன் உதட்டில் இடம் மிச்சமிருந்தால்தானே அவன் கவலைப்பட… ஏற்கனவே கறுத்து, வெடித்து…. ஏனோ எனக்கு காலத்தின் மீதுதான் கோபம் வந்தது… இதுவும் கூட நடந்து ஓராண்டு முடிந்துவிட்டது… ஏனோ இந்த சந்திப்பிற்கு பிறகுதான், வளவனை பற்றிய நினைவுகள் அடிக்கடி உண்டாகிறது…

ஒருவழியாக வீட்டை அடைந்துவிட்டேன்… கதவை திறந்து உள்ளே நுழையும்போதே, அம்மாவின் கேள்விக்கணைகள் ‘சர் சர்’ என என்னை தாக்கியது… எதையும் பொருட்படுத்தாமல் சோபாவில் அமர்ந்தேன்…

“என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?… காபி சாப்பிடுறியா?… போய் முகத்த கழுவிட்டு வந்து உக்காரு, முகமெல்லாம் பிசுபிசுப்பா இருக்கு பாரு…”

அப்பப்பா எவ்வளவு கேள்விகள், கட்டளைகள்…

“ஐயோ.. கொஞ்சம் சும்மா இருங்கம்மா… தலை வலிக்குது” கொஞ்சம் சத்தமாகவே சொன்னேன்…

“ஆமா… உன் ஆபிஸ் டெண்ஷன காட்டுறதுக்கு நான்தான் ஆளு பாரு…”

பொய்க்கோபம் கொண்டவாறு சமையலறை சென்றுவிட்டார், அங்கும் போய் எனக்கு காபிதான் போட்டுக்கொண்டிருப்பார்…

கடந்த வருட வளவனுடனான சந்திப்பில்கூட, இருவரும் ஒரு கடையில் காபி குடித்தோம்…

“இங்க வடை நல்லா இருக்கும் செந்திலு, சாப்பிடு” சொல்லிவிட்டு வடையை எடுத்து என் கையில் கொடுத்து, எண்ணையை துடைக்க ஒரு தினசரி பேப்பரையும் கொடுத்தான்…

அவனும் தனக்கொன்று எடுத்துக்கொண்டு வடையின் எண்ணையை அந்த நாளிதழில் ஒற்றியபடி சில நொடிகள் அப்படியே நின்றான்… எனக்கு ஒன்றும் புரியவில்லை… நன்றாக அவனை கவனித்தேன், எண்ணையை ஒற்றிய காகிதத்தில் ஏதோ ஒரு பள்ளிக்கூடத்தின் விளம்பரம்… “வித்யாமந்திர் பள்ளி, மாநில அளவில் சாதனை!” என்ற வாக்கியத்திலுள்ள, ‘வித்யா’வை மட்டும் தன் ஆட்காட்டி விரலால் வருடிக்கொண்டு நின்றான்…

“வளவா…. ஏய்..” அவன் தோளை உலுக்கியபிறகுதான் கவனித்தான்…

“இன்னும் நீ வித்யாவ மறக்கலையா?” மெல்ல கேட்டேன்…

“மறக்குறதா?… எப்டிடா முடியும்?.. செத்தாலும் முடியாது…”

“ஏய் உனக்கு இப்ப கல்யாணம் ஆச்சுடா, இன்னும் நினச்சுகிட்டு இருக்குறியா?”

“அதனால என்னடா?… என் மனைவி மேல எனக்கு அவ்வளவு பிரியம் உண்டு, காதலும் உண்டு… நமக்கு ஆயிரம் காதல் வாழ்க்கைல வரலாம்டா… ஆனாலும், அந்த மொதக்காதல் இருக்கு பாரு, சாவுற வரைக்கும் மனசைவிட்டு போவாதுடா”

சொல்லும்போதே அவன் கண்கள் கலங்கியிருந்தது, எனக்கும் கூட…

சில நிமிட மௌனத்திற்கு பிறகு நானே தொடங்கினேன், “சரி, வடைய சாப்பிடுடா…ஆறிடப்போவுது!”..

“இல்லடா… பிடிக்கல… என்னமோ அந்த காதலைப்பத்தி நெனச்சாலே தொண்டை அடச்சுக்குது, எதையும் சாப்பிட முடியுறதில்ல.. முதல் காதல், பசி தூக்கம் எல்லாத்தையும் மறக்கடிக்கிற பசுமையான நினைவுகள்டா” என்றான்…

நான் சொன்னபடியே அம்மா காபியை ஆற்றிக்கொண்டு என்னருகே வைத்தார்… அதை கண்டுகொள்ளாமல் அறைக்குள் சென்று, அப்படியே படுக்கையில் கவிழ்ந்தேன்…

“ஏய் தலை வலிக்குதுன்னு சொன்ன, காபியை குடிச்சுட்டு படு… மாத்திரை எதாச்சும் போட்டுக்கோ…” சொல்லிக்கொண்டே இருந்தார்…

“முதல் காதல், பசி தூக்கம் எல்லாத்தையும் மறக்கடிக்குற பசுமையான நினைவுகள்”னு நிஜத்தை அம்மாகிட்ட சொல்ல நினைத்தாலும், சூழல் கருதி,

“வேணாம்மா… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும், என்னைய தனியா விடுங்க!” என்று மட்டும் சொல்லிவிட்டு கண்களை இறுக்க மூடிக்கொண்டேன், கண்ணீர் மட்டும் விழியோரம் கசிந்துகொண்டே இருந்தது…

Print Friendly, PDF & Email

1 thought on “வலியில்லாத காதல் இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *