கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 26,622 
 

தென்மாவட்ட கல்லூரிஒன்றில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, ஒரு வருடம் ஊருக்குள்ளேயே சுத்திச் சுத்தி வந்து விவசாயம் பார்த்தேன். தாக்குப்பிடிக்க முடியவில்லை. சென்னைக்கு வந்துவிட்டேன். நண்பனின் உதவியால், பெரும்பான்மையானவர்கள் போல, படித்த படிப்புக்கு துளியும் சம்பந்தமில்லாத வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகப்போகிறது.

சிங்காரச் சென்னையின் நவ நாகரிகப் பெண்கள், தங்கள் காதலர்களுடன் இருசக்கர வாகனத்தில் ஓருடலாக விரைந்து செல்லும் காட்சிகள், பலரைப் போல் என்னையும் ஏங்க வைக்கத்தான் செய்தன. குடும்ப சூழ்நிலை, வருமானம்… இதெல்லாம் முன்னே வந்து, ‘ராஜா, இது உனக்குச் சரிப்பட்டு வராதுப்பா!’ என்று எச்சரித்தன.

வேலைப்பளு நாளுக்கு நாள் அதிகரித்தது. போட்டிக்கு பலர் தினமும் தயாராகி வருவதால், ‘எப்படியும் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுவான்’ என்று சம்பளத்தைக் கூட்டாமல்… பளுவை மட்டும் கூட்டிக்கொண்டே போனது நான் வேலை பார்த்த நிறுவனம்.

இரண்டு மாதத்துக்கு முன்பு, ‘மாதாந்திர இலக்கை எப்படி முடிக்கப் போகிறோம்’ என்ற மன அழுத்தத்துடன் சாலையைக் கடந்தபோது, விரைந்து வந்த ஒரு ஸ்கூட்டி… என்னை இடித்துத் தள்ளியது. தவறு என்னுடையதுதான். ஆனால், மாதக்கடைசி. அதற்குச் சாதகமாக ஸ்கூட்டியில் அந்த பெண் ‘லி’ போர்டு மாட்டிஇருந்தாள்.

வண்டியை நிறுத்திவிட்டு, என்னருகில் அவள் வர, நான் திட்ட ஆரம்பித்தேன். எதையும் காதில் வாங்காமல் ”ஸாரி சார்… எழுந்திரிங்க” என்று தூக்கினாள். ”வண்டியில உக்காருங்க ஹாஸ்பிட்டல் போகலாம்” என்று அழைத்துச் சென்று… காலில் நான்கு தையல், மாத்திரை, மருந்துகளுடன் நான் தங்கி இருக்கும் மேன்ஷன் வாசலில் இறக்கிவிட்டு, ”இனிமேலாவது ரோட்டுல பார்த்துப் போங்க” என்றாள்.

குற்ற உணர்ச்சியில்… ‘ஸாரி சொல்வதா, நன்றி சொல்வதா’ என்று தெரியாமல் தலையாட்டிவிட்டு அறைக்குச் சென்ற நான், எதேச்சையாக ஜன்னல் வழியாக பார்த்தபோது… கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பெண் இன்னும் செல்லவில்லை. தெருமுக்கு கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தாள். ஒரு பெண், இப்படி தனியாக நின்று டீ சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. அவள் கிளம்பும்வரை பார்த்துக் கொண்டிருந்தேன். ‘பெயர் கேட்டிருக்கலாமோ…’ என்று தோன்றியது.

மாத்திரை கவரை எடுக்கும்போது… மாத்திரை சீட்டு, ஹாஸ்பிட்டல் ரெஜிஸ்ட்ரேஷன் கார்டு எதிலும் ‘ஹரி’ என்ற என் பெயர் இல்லை. ‘ரமேஷ்’ என்றிருந்தது. ‘கவர் மாறிவிட்டதோ’ என்று பதறியபோது, ரெஜிஸ்ட்ரேஷன் கார்டில் பேஷன்ட் பெயருக்குக் கீழே, ‘சாய். ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல், நேரு ஸ்டேடியம், சென்னை’ என்ற முகவரியும், ஒரு மொபைல் நம்பரும் இருந்தது. போன் போட்டால், பெண் குரல்!

”ரமேஷ் இருக்காங்களா?”

”அப்படி யாரும் இல்லீங்க… உங்களுக்கு என்ன நம்பர் வேணும்?”

”அதில்லீங்க… ஹாஸ்பிட்டல்ல மருந்து மாறிடுச்சு” என்று உளறலாக நான் சொல்லி முடிப்பதற்குள்,

”ஓ… நீங்களா சார்! நான் ப்ரீத்தி பேசுறேன். போன உடனே உங்களுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டாங்க… நான்தான் பேர் தெரியாம ரமேஷ்னு குடுத்தேன்…”.

”ரொம்ப நன்றிங்க” என்று நான் சொல்ல, ”பரவாயில்லீங்க சார். உடம்ப பாத்துக்கங்க…” என்று வைத்து விட்டாள். ஏனோ அவள் நம்பரை பதிவு செய்து கொண்டேன்.

எப்படியும் இரண்டு நாளாவது லீவு போட வேண்டியிருக்கும். அலுவலகத்தின் மாதாந்திர இலக்கு, கால் வலியை மறக்கடித்து, பெரும் வலியோடு தூங்க வைத்தது.

காலையில் மாத்திரை போடப் போகும்போது ப்ரீத்தியின் ஞாபகம். சிறிது யோசனைக்குப் பிறகு, ‘குட் மார்னிங்’ என்று மெசேஜ் அனுப்பினேன். பதில் வரவில்லை. ‘அனுப்பியிருக்கக் கூடாதோ’ என்று தோன்றியது. மாத்திரை போட்டுவிட்டு, செய்தித்தாளை வரி விடாமல் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேரம் கழித்து, ‘ஸாரி சார்… நான் பிராக்டீஸ்ல இருந்தேன்…’ என்று காரணம் சொல்லி, நலம் விசாரித்து மெசேஜ் பண்ணியிருந்தாள்.

எனக்கு மெசேஜை தொடர வேண்டும் போல் இருந்தது…

‘என்ன பிராக்டீஸ்?’

‘பேஸ்கட் பால்.’

‘நீங்க பேஸ்கட்பால் பிளேயரா?’

”ஆமாம் சார், காலேஜுக்கு டைம் ஆயிடுச்சு, டேக் கேர்…”

காலை, மாலை என ஒரு வாரம் சம்பிரதாய மெசேஜ் பரிமாற்றங்களுக்குப் பிறகு… குடும்பச் சூழல், நண்பர்கள், பிடித்தது, பிடிக்காதது என்று பகிர்ந்து கொண்டோம். ‘சார்’ மாறி, ‘ஹரி’ மாறி, ‘ப்ரீத்தி’ மாறி ஒரு மாதத்துக்குள் ‘லூசு’ என்று அழைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தோம்.

அன்று ஒருநாள் மதியத்துக்கு மேல் ப்ரீத்தியிடம் இருந்து எந்த மெசேஜும் வரவில்லை. எப்போதும் இவ்வளவு நேரத்துக்கு… குறைந்தது, பத்தாவது வந்திருக்கும். பதற்றமாக இருந்தது. இரவு பத்து மணிக்கு மேல் அது நடுக்கமாக மாறியது. பல யோசனைக்குப் பின் போனில், ”எங்க இருக்கப்பா… ஒண்ணும் பிரச்னை இல்லையே…” என்றேன்.

”கிரவுண்ட்ல இருந்தேன்” என்றாள்.

”கூட யாரு இருக்கா..?”

”யாரும் இல்லடா… தனியாத்தான்.”

ஹாஸ்டலுக்கும், பேஸ்கட்பால் கிரவுண்டுக்கும் தூரம் என்று ஒருமுறை சொல்லியிருப்பது நினைவுக்கு வரவே… ”லூசா நீ… மொதல்ல ரூமுக்கு போ” என்றேன். குரலில் இருந்த பதற்றம் உணர்ந்திருப்பாள்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து ரூமுக்கு சென்று விட்டதாக மெசேஜ் வந்தது. சில நொடிகள் விட்டு வந்த மெசேஜ்…

‘அவ்ளோ பாசமாடா..?’

‘கோவம்…’

‘அப்படியே கோவத்தோட ஒரு டீ வாங்கித்தாடா…’

‘டீயா?’

‘ஆமாடா லூசு… டீதான். எனக்கு ரொம்ப சந்தோஷம் வந்தா… உடனே டீ சாப்பிடணும் போல இருக்கும்..!’

‘சரி, நாளைக்கு வாங்கித் தர்றேன்.’

‘நாளைக்குனா… ரெண்டு டீ.’

‘சரி.’

காலையில் அவள் ஹாஸ்டல் அருகே சென்றேன். அங்கு நின்றிருந்த பெண்கள் கூட்டத்துக்குள் என் கண்கள் அவளைக் கண்டன. தோழிகளை அனுப்பிவிட்டு வந்தாள். எதிரேயுள்ள டீக்கடைக்குச் சென்றோம். சொன்னது போல் இரண்டு டீ குடித்தாள். விடைபெற்று மேன்ஷனுக்கு வந்தபோது, நண்பன் தண்ணியடித்துக் கொண்டிருந்தான். எனக்கும் சேர்த்து வாங்கி வைத்திருந்தான்.

‘சாப்டியா’ என்று மெசேஜ் வந்தது. ‘இல்லடா. ரொம்ப நாளாச்சு… கொஞ்சம் டிரிங்க்ஸ் சாப்பிடுறேன்’ என்று பதில் அனுப்பினேன். ‘நல்லா உடம்பை கெடுத்துக்கப்பா. என்ன பிராண்ட்னு சொல்லு நானே வாங்கிட்டு வர்றேன்’ என்றாள். என்னவோபோல் இருந்தது. அதற்கு மேல் குடிக்க முடியவில்லை. நண்பன் நான் குடிக்காததைப் பார்த்து ”ஓ.கே. ஓ.கே..!” என்று உளற ஆரம்பித்தான்.

இந்த மாதம் சம்பளத்தில் அவளுக்கு ஒரு பேஸ்கட்பால் வாங்கினேன். ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்ததும் மெசேஜ் அனுப்பினேன், பதில் இல்லை. போன் பண்ணினேன், எடுக்கவில்லை. மீண்டும் பதற்றமும் நடுக்கமும் சேர்ந்து கொண்டது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால், மதியமே ஆரம்பித்திருந்தான் நண்பன். இப்போதெல்லாம் என்னை குடிக்கக் கூப்பிடுவதில்லை. போனை சார்ஜரில் போட்டுவிட்டு, மன அசதியில் அப்படியே தூங்கிப் போனேன். மெசேஜ் வந்த சத்தம் என் மூளைக்கு உறைக்கும் முன், நண்பன் எடுத்து படித்துக் கொண்டிருந்தான். கோபம் தலைக்கேறி கன்னபின்னாவென்று திட்டிவிட்டு, போனைப் பறித்து மெசேஜ் பார்த்தேன். ‘ஸாரிடா… பீரியட்ஸ் பெய்ன். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதான் சைலன்ட்ல போட்டு படுத்திட்டேன்… ஸாரி’

– என்ன பதில் அனுப்புவது என்பது குழப்பமாக இருந்தது.

”டேய்… இதெல்லாமா ஃப்ரெண்டுக்கு மெசேஜா அனுப்புவாங்க..? ஏண்டா ஏமாத்துறீங்க..? உண்மையச் சொன்னா சந்தோஷத்துல ரெண்டு பெக் சேத்துப் போடுவேன்ல!” என்று நக்கலடித்தான் நண்பன் டாஸ்மாக் உபயத்தில்!

குழப்பமாக இருந்தது. ‘நாம அப்படியெல்லாம் எதுவும் நெனைக்கல… ஒருவேள அவ… ச்சீ ஏன் இப்படி யோசிக்கிறோம்’ என்று குற்ற உணர்ச்சி குடைந்தது. நீண்ட யோசனை, குழப்பத்துக்குப் பிறகு, ‘டேய் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்… பார்க்க வரலாமா…’ என்று மெசேஜ் அனுப்பினேன். ‘இப்படி பர்மிஷன் கேட்டு வர்றதா இருந்தா வராத…’ என்று பதில் வந்தது.

பேஸ்கட்பாலுடன் குழப்பத்தையும் எடுத்துக்கொண்டு சென்றேன். கிரவுண்டில் சோர்வாக அமர்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் சோர்வை மறைத்து, ”என்னது கையில..?” என்று பேஸ்கட்பாலைப் பார்த்து கேட்டாள். ”உனக்குத்தான்” என்று கவரைப் பிரித்துக் கொடுத்தேன்.

”என்னமோ பேசணும்னுதான சொன்ன… கொடுக்கணும்னு சொல்லலயே..?”

”பெய்ன் இருக்காடா?”

– தயங்கிக் கேட்டேன்.

”பரவாயில்லப்பா…”

நான் அமைதியாக இருந்தேன்.

”வீட்ல எதும் பிரச்னையா..?”

இல்லையென தலையசைத்தேன்.

”அப்புறம்… நேத்து ஏதும் தண்ணியடிச்சியா?”

”இல்லப்பா…” – தயங்கினேன்.

‘வேற என்ன..?’ என்பது போல் பார்த்தாள்.

”இல்ல… என் ரூம்மேட் இருக்கான்ல…”

”அவர்கூட எதும் பிரச்னையா… வாயத் தொறந்து சொல்லேண்டா.”

”இல்ல… அவன், நாம ரெண்டுபேரும்…”

– அவளை பார்க்க முடியவில்லை, தலை குனிந்திருந்தேன்.

அவள் எனது தாடையைத் தூக்கி தீர்க்கமாகப் பார்த்தாள். என்னால் அவளைப் பார்க்க முடியவில்லை. நீண்டநேரம் பார்த்தவள், ” ‘நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா?’னு கேட்டாரா..? ம்..? லூசு… நாளையில இருந்து கழுத்துல போர்டு மாட்டிக்கலாமா… நாங்க ஃப்ரெண்ட்ஸ்தான்னு..? கிளம்பு. நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்டா…” என்று என் குழப்பத்தை தூக்கி எறிந்துவிட்டு, கூடைப்பந்துடன் சென்றாள்.

சிறிது தூரம் சென்றவளை ”யேய் லூசு…” என்றேன். திரும்பினாள். ”ஒரு டீ வாங்கிக் கொடு லூசு!” என்றேன்!

– நவம்பர் 2010

Print Friendly, PDF & Email

8 thoughts on “லூசுப் பெண்ணே…

  1. நல்ல கதை படிக்கும் போதே ஒரு சீனாக சிறு கதையாக பண்ணலாமான்னு தோனுச்சு (சர்ட் பிலிம்)

  2. சார் கதை சூப்பர் சார்.. வித்யாசமாக அதே நேரத்தில் எதார்த்தமாகவும் இருந்தது..

  3. காதலே ஒரு குழப்பமான,நிலையில் இருந்து ,தெளிவான நிலைக்கு வருவது than

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *