மூளையால் யோசி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 11,865 
 

இன்றைக்கு அவர்கள் வகுப்புக்கு வரும்போது ஒட்டிக்கொண்டு வந்தார்கள். சமந்தாவும் ஒலேக்கும் காதலர்கள் என்ற விசயம் எனக்கு பல நாட்களாகத் தெரியும். எப்பொழுது அவர்கள் பிரிவார்கள் என்று காத்துக்கொண்டிருந்த பெண்களில் நானும் ஒருத்தி. ஏனென்றால் ஒலேக் அத்தனை அழகாக இருப்பான். அவன் உக்கிரேய்ன் நாட்டுக்காரன். உயரமாக நீலக் கண்களுடன் முடி நெற்றியில் விழுந்து புரள புத்தகப் பையை ஒரு தோளில் தொங்கவிட்டபடி, அப்பொழுதுதான் தூங்கி எழுந்ததுபோல ஆடி அசைந்து வருவான். எங்கள் வகுப்பில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் படித்தார்கள். பலர் அகதிகளாக கனடாவுக்கு வந்தவர்கள். ஆனால் சமந்தா கனடியப் பெண். அவள் யாரையும் காதலிக்கலாம். ஒலேக் இந்த நாட்டுக்கு அகதியாக வந்தவன். அவனை எங்களுக்கு விட்டுத் தந்திருக்கலாம். ஆனால் அவர்கள் காதல் இப்போதைக்கு முறிவதாகத் தெரியவில்லை. சமந்தாவுக்கு இது மூன்றாவது காதல். ஒலேக்குக்கு எத்தனையாவதோ தெரியாது. அவன் வந்து ஒரு வருடம்தான் ஆகிறது.

* * *

கனடாவின் பகல் ஒளி சேமிப்பு நேரம் என்னை குழப்பிவிடும். இன்று இரவு முடியமுன்னரே காலை தொடங்கிவிட்டது. அம்மா நித்திரை கலையாமல் எழும்பியபோதே ஆரம்பித்துவிட்டார். அவரிடம் நேற்று முடிக்காத புத்திமதி நிறைய மிச்சம் இருந்தது. ’மூளையால் யோசி’ என்றார். ஒரு பெண்ணுக்கு காரியம் ஆகவேண்டுமானால் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று மூளையைப் பாவித்து பெறுவது; மற்றது அவள் உடலில் வேறு ஒன்றை உபயோகித்து காரியத்தை முடிப்பது. அந்த வேறு அங்கம் எதுவென்று அம்மா சொன்னது கிடையாது. ’நேற்றையப்போல இன்றைக்கும் பிந்தி வராதே. நான் வரமுன்னர் வீட்டைத் துப்புரவாக்கு. பிளேட்டுகளைக் கழுவி வை. நான் வேலையால் வந்ததும் சமைப்பேன். நீ வீட்டுப் பாடத்தை செய்யலாம்’ என்றார்.

அம்மாவை பார்க்க சில வேளை எனக்கு பாவமாய் இருக்கும். அம்மா கனடாவுக்கு குடிபெயர்ந்த ஒரு வருடத்தில் நான் பிறந்துவிட்டேன். எனக்கு ஐந்து வயது நடந்தபோது அம்மா விவாகரத்து பெற்றார். அப்பா சம்பாதித்து வாங்கிய இரண்டு அறை வீடு அம்மாவுக்கு கிடைத்தது. அப்பாவின் பேச்சை நான் எப்ப எடுத்தாலும் அம்மாவுக்கு கோபம் வந்துவிடும். அப்பா இன்னொரு பொம்பிளையுடன் போனதுதான் காரணம்.

அப்பாவை எனக்கு ஞாபகம் இருக்கிறது. என்னை தூக்கி தூக்கி எறிந்து பிடிப்பார். அவர் படுத்திருக்க அவர் நெஞ்சில் இருந்து விளையாடுவேன். ஒருநாள் பார்க்கில் ஊஞ்சல் நெற்றியில் இடித்து துளி ரத்தம் சொட்ட அப்பா என்னை துக்கிக்கொண்டு ஓடினார். அந்தக் காட்சியும் என் மனதில் நிற்கிறது. அடுத்த நினைவு சாப்பாட்டு மேசையில் நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் சண்டை மூண்டுவிட்டது. அப்பா அம்மாவின் தலைமயிரைப் பிடித்து இழுத்து கத்தினார். நான் பயந்து அழுதேன். பக்கத்து வீட்டுக்காரர் தொலைபேசியில் பொலீஸை அழைக்க அவர்கள் வந்து அப்பாவை கூட்டிச் சென்றார்கள். அதன் பின்னர் அப்பா வரவில்லை. அம்மா வீட்டிலே இருந்த அப்பாவின் படங்களையெல்லாம் அகற்றிவிட்டார். நான் டயரி அட்டையில் அவருடைய படத்தை ஒட்டி வைத்திருக்கிறேன். அது அம்மாவுக்கு தெரியாது. அப்பா வீட்டை விட்டுப்போய் பத்து வருடம் கழிந்தாலும் அவர் முகத்தை அப்படித்தான் நினைவு வைத்திருக்கிறேன்.

* * *

இத்தனை மாதங்களில் இன்றுதான் முதல் முறை ஒலேக் என்னுடன் பேசினான்.. மற்ற மாணவிகள் பொறாமையோடு திரும்பிப் பார்த்தார்கள். ‘ஆன்’ என்று கூப்பிட்டான். (என்னுடைய பெயர் அனசூயா. நம்பமுடிகிறதா? அம்மா இந்தப் பெயரை எங்கே கிண்டி எடுத்தாரோ தெரியாது. வகுப்பில் என்னை ’ஆன்’ என்றே அழைத்தார்கள்.) நான் முதலில் சமந்தாவைப் பார்த்தேன். அவள் கண்கள் எரிந்துகொண்டு இருந்தன. ’ஓ, உன்னுடைய பெயர் ஒலேக் அல்லவா? நீ எங்கள் வகுப்பில்தானே படிக்கிறாய்?’ என்றேன். ‘என்னை கேலி செய்கிறாய். ஆன், நீதான் எங்கள் வகுப்பில் கெட்டிக்காரி. எனக்கு எப்பொழுது isotope பற்றி சொல்லிக்கொடுக்கப் போகிறாய்?’ என்றான். ‘நீ எனக்கு என்ன தருவாய் என்பதைப் பொறுத்தது’ என்றேன். இன்னும் கொஞ்சநேரம் அவனுடன் பேசியிருக்கலாம். வகுப்பு மணி அடித்துவிட்டது.

* * *

இன்று காலை அம்மா கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார். என்ன என்று கேட்கக்கூடாது. கேட்டால் புலம்பலை ஆரம்பித்துவிடுவார். அவராகவே சொல்லத் தொடங்கினார். ‘எங்கள் பழைய மனேஜர் போய்விட்டான். இப்ப புதிதாய் ஓருத்தன் வந்திருக்கிறான். இவன் வந்த நாளிலிருந்து என்னை வேலையிலிருந்து நீக்கப் போவதாக பயமூட்டுகிறான். இவனுடைய தொல்லை தாங்க முடியாமல் இருக்கிறது. எனக்கு வேலைக்கு போக விருப்பமில்லை. போகாவிட்டால் இரண்டு பேரும் ரோட்டில்தான் நிற்கவேணும்.’ பள்ளிக்கூடம் புறப்பட்டபோது எனக்கு என்ன தோன்றியதோ நான் விருந்துகளுக்கு மட்டுமே அணியும் குதி உயர்ந்த திறம் தோல் பூட்ஸை அம்மாவுக்கு கடன் கொடுத்தேன். அம்மா அதில் ஏறி நின்றபோது உயரமாகவும் அழகாகவும் தெரிந்தார். அப்படியே அன்று அலுவலகத்துக்கு போகப்போவதாகச் சொன்னார். திடீரென்று என்னைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தார். நினைத்துப் பார்த்தபோது பல வருடங்களுக்குப் பிறகு அம்மா எனக்கு முத்தம் கொடுத்தது நினைவுக்கு வந்தது. திரும்பி பாராமல் பள்ளிக்கு ஓடினேன்.

பள்ளிக்கூடத்தில் எனக்கு நல்ல நாளா கெட்ட நாளா என்பது தீர்மானமாகத் தெரியவில்லை. வகுப்பில் என்னுடைய சிநேகிதிகள் என்னைக் கண்டதும் பேச்சை நிறுத்தினார்கள். அது என்னை அமைதியில்லாமல் ஆக்கி மனம் சோர்ந்துவிட்டது. ராணுவ வீரர்கள் அணிவகுப்பின்போது தலையை திருப்பி ஒரே திசையில் பார்ப்பதுபோல ஒலேக் என்னை பார்த்துக்கொண்டே வரிசையில் நடந்தான். நாள் முடிவுக்கு வரும்வரைக்கும் அவன் பார்த்தது என்னை உற்சாகப்பட வைத்தது.

* * *

இன்றைக்கு பள்ளிக்கூடத்தில் நடந்ததைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஒலேக் கறுப்புக் கண்ணாடி அணிந்து வந்திருந்தான். என்னுடைய இரண்டு உருவங்கள் கண்ணாடியில் தெரிந்தன. அவன் அருகில் நெருங்கும்போது என்னை நானே அணுகுவதுபோல பட்டது. ’கண்ணாடியை கழற்று’ என்றேன். மறுத்துவிட்டான். அவன் சொன்னான் பழைய காலத்தில் சீனாவில் போர்வீரர்கள் நெஞ்சிலே கண்ணாடியை கட்டியிருப்பார்களாம். போரின்போது வீரனை வாளால் வெட்ட வரும் எதிரி தன் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வெட்டாமல் மனதை மாற்றிக்கொள்வானாம். ‘நான் உன்னைக் கொல்லப் போகிறேன் என்று நினைக்கிறாயா?’ என்றேன். ‘நீ அதைத்தானே தினம் தினம் செய்கிறாய்’ என்றான் அவன்.

இடைவேளையின்போது பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தை பார்த்த நாங்கள் திகைத்துப்போய் நின்றோம். 300 – 400 கனடிய வாத்துக்கள் ’ங்காஅக், ங்காஅக்’ என்று சத்தமிட்டபடி மைதானத்தை நிறைத்து நின்றன. செப்டம்பர் மாதம் பிறந்துவிட்டதால் தெற்கு நோக்கி புலம் பெயர்ந்தவை மைதானத்தில் இறங்கி ஓய்வெடுத்தன. புற்களைத் தின்பதும் பூச்சிகளைப் பிடிப்பதுமாக ஒரே கவனத்தில் இருந்த அவற்றினூடே நடந்தபோது வழிவிட்டனவே ஒழிய பறக்கவில்லை. நான் நடுவில் போய் நின்றதும் என்னை வாத்துகள் சூழ்ந்துவிட்டன. ஒலேக் என்னையும் வாத்துகளையும் செல்போனில் படம்பிடித்தான். தன்னிடம் கனடிய வாத்து பதித்த ஒரு டொலர் நாணயம் இருப்பதாகச் சொன்னதை நான் நம்பவில்லை. கனடாவின் 100வது ஆண்டின்போது விசேடமாக வெளியிட்ட நாணயத்தை அடுத்தநாள் எனக்கு கொண்டுவந்து காட்டுவதாகச் சொன்னான். செய்தாலும் செய்வான்.

* * *

இன்றைக்கு என் வாழ்க்கையில் துக்கமான நாள். நான் பஸ் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தபோது ரோட்டின் எதிர்ப் பக்கத்தை பார்த்து திடுக்கிட்டேன். என்னுடைய அப்பாவை பல வருடங்களுக்குப் பின்னர் பார்த்தேன். ஒரு கிழிந்த கோட்டை அணிந்துகொண்டு ஏதோ காசை தேடுவதுபோல குனிந்து தரையைப் பார்த்தபடி நடந்தார். பார்ப்பதற்கு பிச்சைக்காரனைப்போலவே இருந்த அவருடைய தோற்றம் என்னை என்னவோ செய்தது. அவருக்கு வேலை போய்விட்டது என்று அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அப்பா உழைத்து கட்டிய வீட்டில்தான் நாங்கள் வசதியாக வசித்தோம். என்னிடம் பத்து டொலர் இருந்தது. ரோட்டைக் கடந்து அந்தப் பக்கம் போய் அப்பாவிடம் அதை கொடுத்துவர எண்ணினேன். எதிர்பாராத சமயத்தில் கட்டிப்பிடித்து ஒரு முத்தமும் கொடுக்கலாம். அப்போது அவர் முகம் எப்படியிருக்கும். ஆனால் தயக்கமாக இருந்தது. அந்த நேரம் பஸ் வர அதில் ஏறி விட்டேன். வீடு வந்த பின்னர் அப்பாவின் படத்தை வெகுநேரம் பார்த்தேன். அம்மாவிடம் சொல்லவில்லை.

* * *

இன்றைக்கு வகுப்பில் ஒரே கொண்டாட்டம். எங்கள் எங்கள் நாட்டு தேசிய கீதங்களைப் பாடச்சொன்னார் ஆசிரியர். நான் இங்கே பிறந்தவள் ஆனால் பலர் வேறு வேறு நாட்டில் பிறந்தவர்கள். கனடியர்கள் அவர்கள் கீதத்தை ஒன்றாகப் பாடினார்கள். யப்பானிய மாணவன் அவர்கள் கீதத்தை பாடினான். நாங்கள் நிமிர்ந்து உட்கார்ந்து கேட்க ஆரம்பித்தபோது முடிந்துவிட்டது. உலத்திலேயே சிறியது யப்பான் தேசிய கீதம்தான். நல்ல காலமாக வகுப்பில் உருகே நாட்டிலிருந்து ஒருவரும் இல்லை. உலகத்திலேயே ஆக நீளமானது அவர்களுடைய கீதம்தான். அதி இனிமையானது உக்கிரேனியன் தேசிய கீதம். ஒலேக் ராகம்போட்டு பாடினான். அவன் பாடாமல் சும்மா வாயை ஆட்டினாலும் அது அழகாகத்தானிருக்கும். இலங்கை தேசிய கீதத்தை நானும் சாவித்திரியும் சேர்ந்து பாடுவதாக திட்டமிட்டு ’மன்மதராசா, மன்மதராசா’ என்று முதல் இரண்டு வரிகளைப் பாடினோம். நிறைய அகதிகளை உருவாக்கும் ஒரு நாட்டின் தேசியகீதம்போலவே அது ஒலித்தது. ஒருவருமே கண்டுபிடிக்கவில்லை. ஆனால் கைதட்டினார்கள்.

* * *

இன்று காலை அம்மா என்னை கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். நான் ஒப்பனை செய்ததையும், காது மயிரை சுருட்டி விட்டதையும் உதட்டுச் சாயத்தை ஒளித்து புத்தகப் பையில் வைத்ததையும் எப்படித்தான் ஊகித்தாரோ தெரியாது. ’வரவர உன் சோடிப்பு சரியாயில்லை. நீ படிக்கப் போகிறாயா அல்லது வேறு எதற்கோ போகிறாயா? மூளையால் யோசி. அதை மறக்காதே’ என்றார். என்னை வியப்படைய வைப்பதே அம்மாவின் வேலையாகிவிட்டது.

சமந்தா வேகமாக நடந்து வந்தாள். நான் பக்கத்தில் நின்ற சாவித்திரியை தோளால் இடித்து சொன்னேன். ’இப்ப பார் சமந்தா புத்தகத்தை கீழே போடுவாள்’ என்று. அப்படியே போட்டாள். குனிந்து கீழே கைகள் புத்தகத்தை தேடி அலைந்தபோது கோடுபோட்ட அவளுடைய ஸ்கேர்ட் மேலே போனது. பெண்களைக்கூட பொறாமைப்படவைக்கும் உருண்டையான அவளுடைய பின்பக்கம் ஒலேக் நின்ற திசையில் நீண்டது. புத்தகத்தை தடவி எடுத்தபோது கடைக்கண்ணால் ஒலேக்கை தேடினாள். பிறகு என்னைப் பார்த்தாள். அவளுடைய அதே கண்களால் எப்படி ஒரே சமயத்தில் இத்தனை பிரியத்தையும் பகையையும் காட்டமுடிகிறது என்பது தெரியவில்லை.

* * *

இன்று நடந்த சம்பவத்தை என்னால் இருபது வருடம் சென்றாலும் மறக்க முடியாது. பள்ளிக்கூடத்திலிருந்து பாதியில் புறப்பட்டபோது என் வீட்டுக்கு தானும் வரவேண்டும் என்று சொன்னான் ஒலேக். ஐஸரோப் பற்றி விளக்கமாகப் படிக்கவேண்டுமாம். வீட்டுக்கு வந்து நான் திறப்பை போட்டு கதவைத் திறந்ததும் ’இது என்ன மணம்?’ என்றான். எனக்கு வெட்கமாய்ப் போய்விட்டது. மூன்று நாட்களுக்கு முன்னர் அம்மா சமைத்த கறியின் மணம். இவனை நேரே நிலவறைக்கு கூட்டிச் சென்று குழல் விளக்கைப் போட்டேன். அது ஒரு நிமிடம் கழித்து எரிந்தது. புத்தகப்பையை எறிந்துவிட்டு சோபாவில் கால்களை நீட்டி படுத்துக்கொண்டு ஏதாவது குடிப்பதற்கு கேட்டான். வந்து ஒரு நிமிடம்தான் ஆகிறது முழுவீடும் அவனுக்கு சொந்தமாகிவிட்டது. நான் மேலே போய் கடவுளை வேண்டிக்கொண்டு குளிர்பெட்டியை திறந்து பார்த்தேன். நல்லகாலமாக பாதி கடித்த அப்பிளுக்கு பின்னல் ஒரு கோக் டின் இருந்தது. அதை எடுத்து வந்து அடக்கமான மனைவிபோல நீட்டினேன். அவன் ஒற்றை விரலால் திறந்து விலை உயர்ந்த மதுவகையை குடிப்பது போல மிடறு மிடறாக குடித்தான். அந்த நேரம் நான் அம்மா சாரி உடுத்து பொட்டு வைத்து நிற்கும் படங்களை எல்லாம் அவசரமாக அகற்றினேன்.

’புத்தகத்தை எடு’ என்றேன். அவன் நீலக் கண்கள் என் உடம்பிலே அசையாமல் குத்திக்கொண்டு நின்றன. அவன் கண்கள் தேடிய அங்கம்தான் அம்மா குறிப்பாகச் சொன்னதாக இருக்குமோ என்று பட்டது. மருத்துவருடைய அறையில் பேப்பர் கவுன் அணிந்து நிற்பதுபோல எனக்கு கூச்சமாகவிருந்தது. அதைக் காட்டாமல் 28ம் பக்கத்தை திறந்து ’ஐஸரோப் என்றால் ஒரே தனிமம், ஒரே குணாதிசயம். ஆனால் வெவ்வேறு எடை’ என்று ஆரம்பித்தேன். அவன் என் தோள்மூட்டில் முகத்தை வைத்து மணக்கத் தொடங்கினான். நான் ஒரு கையால் புத்தகத்தை பிடித்துக்கொண்டு மறுகையால் அவனைத் தள்ளினேன். அவன் செல்போனை எடுத்து கறுப்பு வெள்ளை வாத்துகளுக்கு நடுவில் நானும் கறுப்பு வெள்ளை பள்ளிக்கூடச் சீருடையில் நிற்கும் படத்தை காட்டினான். ’நீ கொழுத்த வாத்துபோல தெரிகிறாய்’ என்று சிரித்தான். செல்போனை பக்கவாட்டில் திருப்ப படமும் திரும்பியது. நான் அழகாகத்தான் இருந்தேன்.

சோபாவில் நிறைய இடம் இருந்தது. அவன் இடமில்லாததுபோல என்னை நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். பக்கெட்டில் கையைவிட்டு ‘நான் மறக்கவில்லை, பார். உனக்கு காட்டக் கொண்டுவந்தேன்’ என்று கனடிய வாத்து பதித்த ஒரு டொலர் நாணயத்தை வெளியே எடுத்தான். அபூர்வமான நாணயம் அது; விலைமதிப்பானது என்று எனக்குத் தெரியும். மறு பக்கத்தை திருப்பி பார்த்தேன். எலிஸபெத் மகாராணி. ‘உன்னுடையதா?’ என்றேன். ‘நாணயம் சேகரிப்பது எனக்குப் பிடிக்கும்’ என்றான். ’வேறு என்ன பிடிக்கும்?’ ’உன் கல்லுத் தொங்கட்டான் பிடிக்கும்.’ அவன் வாய் என் காதை நெருங்கியது. சாப்பிடப்போவதுபோல தொங்கட்டானை வாயினால் கவ்வினான். ’என்ன செய்கிறாய்? என்ன செய்கிறாய்?’ அவன் என் தோள்மூட்டுகளை திருக ஆரம்பித்தான். பயத்துடன் ’நீ என்னைத் திறக்கப் போகிறாயா?’ என்றேன்.

எந்த நேரத்தில் அந்த வார்த்தையை சொன்னேனோ தெரியாது. யாரோ சாவித் துவாரத்தில் திறப்பை நுழைத்து கதவை திறக்கும் சத்தம். அம்மா வருவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது. திருடனாக இருக்கலாம். இருதயம் காதுக்குள் அடித்தது. நான் மெதுவாக இரண்டு படி ஏறி எட்டிப்பார்த்தேன். அது அம்மாதான். ஓர் ஆண் உருவம் சத்தமில்லாமல் படிகளில் ஏறி மேலே சென்றது. ’யார்’ என்று ஒலேக் ரகஸ்யக் குரலில் கேட்டான். ’மடையா அது அம்மா. நீ புறப்படு, புறப்படு. நிலவறை யன்னல் வழியாகப் போ’ என்று மன்றாடினேன்.

முதலில் புத்தகப் பையை எடுத்து யன்னல் வழியாக எறிந்தான். அம்மா மேலே சிரிக்கும் சத்தம் கேட்டது. ’ஏன் உன் அம்மா சிரிக்கிறார்?’ என்றான். ’நீ போ. அவர் அப்படித்தான். என்னுடன் சிரிப்பதே இல்லை. தனியாக இருக்கும்போது பழக்கம் விட்டுப் போகாமல் இருக்க அப்படி பயிற்சிசெய்வார்.’ தலையையும் கால்களையும் ஒரே சமயத்தில் நுழைத்து யன்னல் வழியாக குதித்தான். பின்னர் ’கோக், கோக்’ என்று கத்தினான். பாதி குடித்த கோக்கை யன்னல் வழியாக நீட்டினேன். புத்தகப்பையை ஒரு தோளில் தொங்கவிட்டபடி, கோக்கை உறிஞ்சிக்கொண்டு ’போபஸன்யா’ என்று கைகாட்டிவிட்டு சோம்பலாக நடந்துபோனான். உக்கிரேய்ன் மொழியில் ‘போய் வருகிறேன்’ என்று அர்த்தம். எனக்கென்னவோ அவன் திரும்பி என்னிடம் வருவான் என்று தோன்றவில்லை.

என்னுடைய கம்புயூட்டரின் கடவு வார்த்தை அவன் பெயர் என்பதுகூட அவனுக்கு தெரியாது. உலகத்தின் முடிவு என் நெஞ்சில் தொடங்கிவிட்டதுபோல உணர்ந்தேன். என் தலைக்கு மேலே இரண்டு விதமான காலடி ஓசைகள் வந்தன. அம்மாவின் சிரிப்பு மீண்டும் கேட்டது. இது வேறுவிதமான சிரிப்பு. திடீரென்று ஒரு கெட்ட எண்ணம் வந்தது. அம்மாவும் நானும் ஒரு தனிமத்தின் இரண்டு ஐஸரோப்கள். ஒரே குணாதிசயம். வெவ்வேறு எடை. சற்றுமுன் ஒலேக் சோபாவில் எங்கே படுத்திருந்தானோ அதே இடத்தில் அவன் மாதிரி படுத்துக்கொண்டு முகட்டைப் பார்த்தேன். நான் மூளையால் யோசிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.

– 2012-03-22

Print Friendly, PDF & Email

1 thought on “மூளையால் யோசி

  1. நேரான ஆனால் ஆழமான , சிறப்பான ஒன்று (கதை? அதற்கும் மேலே )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *