மழை நண்பன்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 26,541 
 

மழை எப்போது நிற்கும்? பிரியாவுக்குச் சொல்ல முடியாத சங்கடம். வாசலில் நின்றபடி வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த மழையில் எப்படிப் போவது? சத்யாவிடம் சொன்னால் கோபித்துக்கொள்வான். ‘ஏன் நான் வரலையா? நீயெல்லாம் அவ்ளோதான்!’ என்பான்.

”15 நாள் இம்ப்ளிமென்ட் புரொகிராம். பெங்களூர் வர்றேன். உன் அட்ரஸ் சொல்லு” – மாலை வேளை ஒன்றில் அலைபேசியில் அழைத்தான்.

”முதல்ல உன் ஆபீஸ் எங்கேனு சொல்லு!”

”பெலந்தூர்ல!”

”அய்யோ நான் ஒயிட் ஃபீல்ட்ல இருக்கேன். அது ரொம்பத் தூரம். நீ அட்ரஸ் கண்டுபிடிக்கிறது கஷ்டம். ஒரு காமன் பிளேஸ்ல மீட் பண்ணலாமா?”

பெங்களூர் வந்ததும் சத்யா திரும்பவும் அழைத்தான். ”வர்ற சனி, ஞாயிறு மீட் பண்ணலாமா பிரியா?”

”இந்த வாரம் வேணாம். ஊருக்குப் போறேன். அடுத்த சனிக்கிழமை விதான் சௌதா வந்துடு… சரியா?”

”அடுத்த சனிக்கிழமை ராத்திரி எனக்கு டிரெயின். அதனால மிஸ் பண்ணாம வந்துடு!” – அலைபேசியை வைத்தான்.

திருமணமாகி எட்டு வருடங்கள் கழித்து, யாரோடும் தொடர்புகள் இன்றி இருக்கும் பிரியாவின் அலைபேசி எண்ணை, சத்யா கண்டுபிடித்தது ஆச்சரியம்தான்.

மழை நண்பன்ஒருநாள் புது எண் ஒன்றில் இருந்து அழைப்பு.

”நான் சத்யா பேசுறேன்!”

திக்குமுக்காடித்தான் போனாள் பிரியா.

”சத்யா, எப்படிடா இருக்கே? எங்கே இருக்கே? எப்படி இந்த நம்பரைக் கண்டுபிடிச்சே?”

”நீ இருக்கியா… இல்ல செத்தியானு

தெரிஞ்சுக்கணும்ல. அதான் கண்டுபிடிச்சேன்!”

”கோபப்படாதடா ப்ளீஸ்… எப்படி இருக்க?”

”உன் அம்மாவை நேத்து ராத்திரி பார்த்தேன். அவங்கதான் உன் நம்பரைக் கொடுத்தாங்க. எப்படா விடியும்… உன்கிட்ட பேசலாம்னு காத்துட்டு இருந்தேன்!”

”சரி… எப்படி இருக்க… அதைச் சொல்லுடா!”

”நல்லா இருக்கேன். சென்னையிலதான் இருக்கேன். நீ எப்ப பெங்களூர் வந்த?

நீ சென்னையில இருப்பேனு நினைச்சுட்டு எவ்ளோ நாளாத் தேடிட்டு இருந்தேன் தெரியுமா? உங்க அம்மா, அப்பா சென்னைக்கு ஷிஃப்ட் ஆனதும் தெரியாது. எதுவுமே சொல்லலை நீ… ஏன்?”

”இல்லடா… அங்க ஆறு மாசம்தான் இருந்தேன். அப்புறம் பெங்களூர் வந்துட்டேன்!”

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மாலினி, நிம்மி, கலை என ஒவ்வொருவரிடம் இருந்தும் அழைப்புகள், கோபங்கள், வசவுகள் எனக் கழிந்தன பொழுதுகள்.

”ஏற்கெனவே வீட்டை ரொம்ப ஒழுங்காக் கவனிச்சுட்டு இருக்க… பத்தாததுக்கு டைம் பாஸ் பண்ண உருப்படி இல்லாத நாலைஞ்சு போன் கால் வேற..!” – கணவன் சிடுசிடுத்தான். தொடங்கிவிட்டது. இந்த வார்த்தைகள் இனி அவன் வாயில் ஒரு வருடத்துக்குப் புரளும். இதற்கு இடையில்தான் சத்யாவிடம் இருந்து அழைப்பு.

மழை சற்றுக் குறைந்தது. யோசிக்காமல் கதவைப் பூட்டிக்கொண்டு வீதியில் இறங்கினாள். ஒரு கையால் குடையையும், மறு கையால் சேலை நுனி சாலையின் ஈரத்தில் படாதவாறு நாசூக்காகப் பிடித்தபடியும் நடந்தாள்.

‘துணி ஊறவெச்சு ரெண்டு நாளாகுது இன்னும் தோய்க்காம இருக்கு… மழை எப்போ நிக்கிறது… துணி எப்போ தோய்க்கிறது?’ – தூரத்தில் தமிழ்க் குரல் ஒன்று அங்கலாய்த்தது.

வழியில் வந்த ஆட்டோவை மறித்தாள். ”விதான் சௌதா!” என்றதும், உட்காரச் சொல்லி தலையை உள்பக்கமாகக் காண்பித்தார் ஆட்டோ ஓட்டுநர்.

சிறிது நேரம் கழித்து சத்யாவுக்கு போன் செய்தாள். ”சத்யா… இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன். நீ விதான் சௌதாவுக்கு எதுத்தாப்ல இருக்கிற ஹை கோர்ட்ல நில்லு!”

அவள் விதான் சௌதாவில் இறங்கும்போது மழை இல்லை. அதுவே அவளுக்கு மகிழ்ச்சி. சொன்னது போலவே சத்யா நின்றிருந்தான். பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் வெட்கம் கலந்த சந்தோஷச் சிரிப்பு இருவர் முகத்திலும்.

அவன் தோள்பட்டையை அடித்து, ”எப்படிடா இருக்க..? எவ்ளோ வருஷமாச்சு பார்த்து!”

”ம்ம்ம்… பார்த்தா தெரியல. நீகூடத்தான் கொஞ்சம் குண்டாயிட்ட!”

அவள் சிரித்துக்கொண்டே, ”சரி வா…

மழை நண்பன்2ஒரு வாக் போயிட்டே பேசலாம்!” என்றாள். கோர்ட் அருகே முழுவதும் மரங்கள் அடர்ந்த பெரிய பரப்புக்குச் சென்றார்கள்.

விடுமுறை தினம் என்பதால் நிறைய மனிதர்கள் குடும்பமாகவும் ஜோடிகளாகவும் தனியாகவும் சிதறியிருந்தார்கள்.

”நீ எப்படா சென்னைக்கு வந்த?”

”சென்னைக்கு வந்து அஞ்சு வருஷமாச்சு. வந்ததும் உன்னைத்தான் விசாரிச்சேன். யாருக்குமே தெரியலை. உன் அம்மாவை மட்டும் அன்னைக்குப் பார்க்கலைன்னா, இன்னைக்கு உன்னைப் பார்த்திருக்க முடியாது. ஏன் எங்ககூட சுத்தமா டச்ல இல்லாமப்போயிட்ட பிரியா?”

”இல்லடா… இங்க வந்ததும் உங்க நம்பர் எல்லாம் மிஸ் ஆயிடுச்சு. அவ்ளோதான். மத்தபடி பேசக் கூடாதுனுலாம் இல்லை!”

”ஏன் பொய் சொல்ற..? எங்க திருச்சி வீட்டு நம்பர் தெரியாதுனு சொல்லு பார்க்கலாம்!”

பிரியா அமைதியானாள்.

”நீ நினைக்கற மாதிரி எல்லாம் இல்ல சத்யா. சரி… நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை?”

”ஏன்… இன்னும் கொஞ்ச நாள் இந்த லைஃபை என்ஜாய் பண்ணலாம்னு ஐடியா… அதான். சரி… நீ ஃபேஸ்புக்ல இருக்கியா? என்ன ஐ.டி-ல இருக்க? அதுல தேடினப்பவும் நீ சிக்கலை. மெயில் ஐ.டி. கொடு!”

”இல்லடா, நான் எதுலயும் அக்கவுன்ட் வெச்சுக்கலை!”

”பிரியா… நீயா பேசுற! அப்பவே அல்ட்டி மேட்டா திங்க் பண்ணுவ. என்ன ஆச்சு? ஏன் எதுலயும் அக்கவுன்ட் வெச்சுக்கலை?”

”பிடிக்கலை… அதான். சசி வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?”

”எல்லாரும் நல்லா இருக்காங்க. நீ நிறைய மாறிட்ட பிரியா. எப்பவும் லொடலொடனு பேசுவ. இப்ப ஒரே வரியில பேச்சை முடிச்சுடுற. கல்யாணம் ஆனவுடனே பொண்ணுங்க மாறணும்னு எதுவும் இருக்கா பிரியா?”

”எல்லா மாற்றங்களையும் நாம விரும்பி ஏத்துக்கிறது இல்லையே சத்யா!”

”ஏன் எந்த வேலைக்கும் போகலை?”

”வந்ததுல இருந்தே ‘ஏன்… எதுக்கு?’னு குடைச்சல் கேள்விகளாக் கேட்டுட்டே இருக்க சத்யா. இரிட்டேட்டிங்கா இருக்குடா!”

”நீயும்தான் பட்டும் படாமப் பேசுற. எனக்கு இந்த பிரியாவைப் பிடிக்கவே இல்லை!” – குரலில் காரம் தெறித்தது.

”நீ கேக்கிற கேள்வி எல்லாம் எனக்கு எரிச்சலா இருக்கு. அதான் அப்படிப் பதில் சொன்னேன்!”

”கடமைக்குனு பதில் சொல்லவேண்டியது அவசியம் இல்லை பிரியா. ராஜாஜி நகர்ல இருந்துட்டு ஒயிட் ஃபீல்டுனு பொய் சொல்ற. அன்னைக்கே உன் அம்மாகிட்ட அட்ரஸ் வாங்கிட்டேன். சும்மாதான் உன்கிட்ட விசாரிச்சேன். எங்கே உன் வீட்டுக்கு வந்துடுவேன்னுதானே பொய் சொன்னே? என் கூடலாம் உனக்குப் பேசப் பிடிக்கலைதானே? உன் முகத்தையாவது பார்க்கலாமேனுதான் வரச் சொன்னேன். சரி, நான் கிளம்புறேன்!” – கோபப்பட்டு நடக்கத் தொடங்கினான் சத்யா.

பிரியாவின் கண்களில் நீர் திரண்டது. சற்று உரத்த குரலில், ”சத்யா… நாம சண்டை போட்டு எவ்ளோ வருஷமாச்சுல்ல?” என்றாள்.

அவன் சிரித்தபடி திரும்பி வந்தான். இருவரும் அருகில் இருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தனர்.

”என்ன ஆச்சு? உனக்கு என்னைச் சின்ன வயசுல இருந்தே தெரியும். நாம எவ்ளோ விஷயம் ஷேர் பண்ணியிருக்கோம். உன்கிட்ட என்னமோ பிரச்னை. இல்லைன்னா நீ இப்படி இருக்க மாட்ட!”

”இல்லடா… இவ்ளோ வருஷம் கழிச்சு இப்பதான் பார்த்திருக்கோம். எதுக்கு எடுத்ததும் அதைப் பத்திச் சொல்லணும்னுதான் விட்டுட்டேன். கல்யாணத்துக்குப் பிறகு நிறையப் பிரச்னை சத்யா. எல்லாத்துக்கும், ‘ஏன்… எதுக்கு?’னு ஒரு முட்டுக்கட்டை. வேலைக்கும் போகக் கூடாதாம். ‘நீயா… நானா?’ங்கிற ஈகோ. நிறைய மிஸ்அண்டர்ஸ்டேண்டிங்ஸ். டைவர்ஸ் வரைக்கும் போயிடுச்சு. அப்புறம் வீட்ல எல்லாரும் அறிவுரை சொன்னாங்க. எல்லாம் எனக்கு மட்டும்தான்! ‘உனக்கு அப்புறம் வீட்ல ரெண்டு தங்கச்சிக இருக்காங்க… பார்த்துக்கோ’னு அப்பா ஒரு வரியில் சொல்லிட்டுப் போயிட்டார். இங்க குடும்பம்கிறது ஒரு ஒப்பந்த உறவுமுறைனு அப்புறம்தான் புரிஞ்சது.

அவரும், ‘எனக்கு நீ எப்படி இருக்கணும்னு தோணுதோ… அப்படித்தான் நீ இருக்கணும். நான் எப்படி இருக்கணும்னு நீ சொல்றியோ, நானும் அப்படி மாறிடுறேன்’னு சொல்றார். கல்யாணம் ஆன பிறகு ஏன் ஆளாளுக்கு இயல்பை மாத்திக்கணும்னு எனக்குப் புரியலை. ஆனா, என்னை மட்டும் நான் மாத்திக்கிட்டேன். இப்ப எந்தப் பிரச்னையும் இல்ல. ஆனா சத்யா… என் ஸ்பேஸ் அப்படியேதான் இருக்கு. அதை நான் இன்னும் வாழவே இல்லை!” – கண்களில் நீர் வழிந்தது.

”பிரியா ப்ளீஸ் அழாத. ஸாரி… உன்னைத் தப்பா நினைச்சுட்டேன். இப்ப சந்தோஷமா இருக்கியா?”

”தினமும் சண்டை இல்லாம வாழ்றதே ஒரு சந்தோஷம்தானே. அந்தச் சந்தோஷ வாழ்க்கை இப்ப இருக்கு சத்யா!”

இருவரும் சில நொடிகள் எதுவும் பேசவில்லை. ஒரு புறா தத்தித் தத்தி நடந்து கீழே கிடந்த பருக்கையை மெள்ள அலகால் கொத்திவிட்டு இருவரையும் தலையைத் திருப்பிப் பார்த்தது.

”சத்யா… மொளகா பஜ்ஜி ஞாபகம் இருக்கா?” – பேச்சைத் திசை திருப்பினாள்.

அவன் சிரித்தபடி, ”மறக்க முடியுமா? யார் மொளகா பஜ்ஜி சாப்பிட்டதும் காரம் தாங்காம முதல்ல தண்ணி குடிக்கிறாங்களோ அவங்க தோத்தாங்குளி. அடுத்த நாள் ட்ரீட் தரணும். நான் ஜெயிக்கணும்னு உன் வாய்ல நான் தண்ணி ஊத்த வருவேன். நீ ஜெயிக்கணும்னு என் வாய்ல நீ தண்ணி ஊத்த வருவ. கண்ல கண்ணீரும் கையில தண்ணீருமா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் முழுக்கச் சுத்துவோமே!”

”ரமணி அண்ணன் கடையிலதானே பஜ்ஜி வாங்குவோம். இப்ப வரைக்கும் அந்தக் காரம் வேற எங்கேயும் சாப்பிட்டது இல்லை. மொளகா பஜ்ஜி சாப்பிடறப்போ எல்லாம் உன்னைத்தான் நினைச்சுக்குவேன். இப்ப அந்த அண்ணா எங்க இருக்கார் சத்யா?”

”திருச்சியிலதான் இருக்கார். போன மாசம்கூடப் பார்த்தேன். உன்னை விசாரிச்சார்!”

மழை நண்பன்3”நீ, நான், மாலினி, ராம்… எல்லாம் அந்த மாம்பலம் சாலையில நின்னுட்டு மணிக்கணக்காப் பேசுவோமே… லவ்லி டேஸ்!”

”பிரியா, உன் பின்னாடி சுத்தினானே மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட் ஒருத்தன். நீகூட ‘லூஸு டாக்டர்’னு பேர் வெச்சியே. அவன் என்ன ஆனான் தெரியுமா?”

”தெரியலைப்பா. எனக்கு எப்படித் தெரியும்? ஆனா, அவன் என்கிட்ட புரபோஸ் பண்ணப்போ, நானும் மாலினியும் அவனைச் செமத்தியாக் கலாய்ச்சுட்டோம்… பாவம்!”

சின்ன இடைவேளைக்குப் பிறகு பின் ஏதோ ஞாபகம் வந்தவளாக… ”சத்யா, உனக்கு ஒரு கோல்டன் ஃபாரின் பேனா கொடுத்தேனே… அதை வெச்சிருக்கியா?”

சத்யா, தன் சட்டை பாக்கெட்டில் இருந்த அந்தப் பேனாவைக் காண்பித்தான்.

”உன் ஞாபகமா இன்னும் வெச்சிருக்கேன் பார்த்துக்கோ!”

பிரியா, பகபகவெனச் சிரித்தாள். ”ஹய்யோ சத்யா… இது என்னுது இல்லை. அந்த லூஸு டாக்டரோடது. மாலினி, அவன் வீட்டு மாடியிலதானே தங்கியிருந்தா. அவன் எப்பவும் கீழே இருக்கிற டார்க் ரூம்லதான் படிப்பானாம். ஒருநாள் சும்மா கீழே போய்ப் பார்க்கலாம்னு நான் அவளைக் கூப்பிட்டேன். அங்கே ஒரே இருட்டா இருந்துச்சு. கதவு திறந்த கொஞ்சூண்டு வெளிச்சத்துல ஒரு டேபிள் மேல ஒரு நோட்டும் இந்தப் பேனாவும் இருந்துச்சு. ‘ஹேய்… இந்த பேக்கு ஃபாரின் பேனாகூட வெச்சிருக்குடி. இதை எடுத்துக்குவோம்’னு சொல்லி எடுத்துக்கிட்டேன். அப்புறம் அந்த ரூம்ல வேற என்னலாம் இருக்குனு இருட்டுல உத்துப் பார்த்தா, மூலையில இருந்த கட்டில்ல ஓர் உருவம். அது அவன்தான். படிச்சிட்டு அங்கேயே படுத்திருந்திருக்கான். நாங்க முதல்ல அவனைப் பார்க்கவே இல்லை. அப்புறம் விழுந்தடிச்சு ஓடி வந்துட்டோம். அப்புறம் அவனைப் பார்த்தப்பக்கூட, அவன் அந்தப் பேனாவைப் பத்திக் கேட்கவே இல்லை. அந்தப் பேனாவைத்தான் உனக்குக் குடுத்தேன்!”

”இதை ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை?”

”என்னமோ சொல்லலை. மாலினிதான் சொல்ல வேணாம்னு சொன்னா. அப்புறம் சத்யா… நான் லஞ்ச் கொண்டுவந்திருக்கேன். நானே பண்ணது. எப்படி உன்னை பனிஷ் பண்றேன்னு பார்த்தியா?” என்றபடி கைப்பையில் இருந்து இரண்டு டிபன்பாக்ஸ்களை எடுத்தாள். இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

வெயில் மெதுவாக எட்டிப் பார்த்தது. சாப்பிட்டபடியே பிரியா தொடர்ந்தாள். ”சத்யா… நம்ம ஹெச்.ஓ.டி. டேபிள் மேல, கலை ஒரு லவ் லெட்டர் எழுதிவெச்சாளே… ஞாபகம் இருக்கா?”

”ஓ… அன்னைக்குத்தான் அவர் முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிஞ்சதே. அடுத்த நாள், ‘ஸாரி… லெட்டர் மாத்தி உங்களுக்குக் குடுத்துட்டேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் புரொஃபஸர் சக்தி சார்கிட்ட குடுத்துடுங்க…ப்ளீஸ்’னு இன்னொரு லெட்டர் வெச்சாளே… அன்னைக்கு அவர் முகத்தைப் பார்க்கணுமே!” – சொல்லிவிட்டுச் சத்தமாகச் சிரித்தான்.

”பிரியா… நீ யாரோ சொன்னாங்கனு காந்தி, நேரு சாப்பிட்ட ஹோட்டல்ல வெண்ணை தோசை நல்லா இருக்கும்னு ஹைதர் கால ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போனியே..! ‘இது காந்தி சாப்பிட்ட இலையா… இவ்ளோ பழசா இருக்கு?’னு ராம், சர்வர்கிட்ட கேட்டானே… டேபிள்ல இருந்து டம்ளர் வரைக்கும் அவ்ளோ அழுக்கு. வெளில வந்ததும் உன்னை ஆளாளுக்கு ரவுண்டு கட்டினோமே!”

சத்யா சொல்லச் சொல்ல, பிரியா விழுந்து விழுந்து சிரித்தாள். பிறகு, அவளே தொடர்ந்தாள்…

”அது மட்டுமா… வீக் எண்ட்ல மலைக்கோட்டை, கடைவீதி, ஊர்வசி தியேட்டர்னு சுத்துவோம். ராம் பிறந்த நாள்ல நாம பண்ண அலப்பறை சான்ஸே இல்ல. இப்ப ராம் எங்க இருக்கான்?”

”யு.எஸ்-ல இருக்கான். ரெண்டு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கு. அப்பப்போ ஸ்கைப்ல பேசிக்குவோம்!”

”ஐ மிஸ் யூ ஆல் சத்யா!” – அப்போது சத்யாவுக்கு பிரியாவின் கைகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் யோசித்தான்.

”நான் அடிக்கடி உங்களை எல்லாம் நினைப்பேன். நீங்க எல்லாரும் என்னைத் திட்டியிருப்பீங்கனு தெரியும்!” என்று பிரியா சிரித்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் இருவரும் எழுந்து சிறிது தூரம் நடந்தனர். பழைய கதைகளைப் பேசிப் பேசிச் சிரித்தனர். மீண்டும் மேகமூட்டம் பரவ ஆரம்பித்தது.

”சத்யா, நேரம் போனதே தெரியலை. நாலரை மணி ஆகப்போகுது. உனக்கு எத்தனை மணிக்கு டிரெயின்?”

”எட்டு மணிக்கு பிரியா. ஃப்ரெண்ட் ரூமுக்கு போய் அவனையும் கூட்டிட்டுப் போகணும்!”

”அப்ப நீ கிளம்பு. இல்லைனா டிராஃபிக்ல லேட் ஆயிடும்!”

”ம்ம்ம்… உனக்கு லேட் ஆச்சா?”

”ஆமாடா! அவர் ஏழு மணிக்கு வந்திடுவார். சிட்டி மார்க்கெட் போறேன்னு பொய் சொல்லிட்டுத்தான் வந்தேன். உண்மையைச் சொன்னா, இப்ப எதுவும் சொல்ல மாட்டார். அப்புறம் குத்திக் காமிப்பார். அதான்!”

சத்யா, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ஏதோ சொல்ல வந்த பிரியா, அமைதியாகி முகத்தில் புன்னகை தேக்கி சத்யாவைப் பார்த்தாள்.

”நான் கிளம்புறேன் சத்யா. டேக் கேர்!” என்று கை கொடுத்தாள். அவள் கைகளைப் பற்றிக் குலுக்கிக்கொண்டே, ”பிரியா… காலையில பார்த்த இறுக்கம் இப்ப உன்கிட்ட இல்லை!” என்றான்.

”ஆமாடா… ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கேன்!”

”அதான் ஃப்ரெண்ட்ஷிப் பிரியா!” என்று சொல்லிவிட்டு விலகி நடந்தான். சற்றுத் தூரம் சென்றதும் திரும்பி பிரியாவைப் பார்த்துச் சிரித்தான். மீண்டும் நடக்கத் தொடங்கினான்.

அவன், புள்ளியாக மறையும் வரை பிரியா பார்த்துக்கொண்டே இருந்தாள்!

– ஆகஸ்ட் 2015

Print Friendly, PDF & Email

1 thought on “மழை நண்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *