பெயரிடப்படாத சம்பவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 9,127 
 

தெருவிளக்கினடியில் அவன் நின்றிருந்தான். தினந்தோறும் அதிகாலையில் நிற்பதால் அவனுக்குப் பூச்சிகளின் சப்தமும் பனியும் இருட்டும் பழகியிருந்தன. வெள்ளை நிறக் கால்பந்தும் முகந்துடைத்துக்கொள்வதற்கெனச் சிறிய ஆரஞ்சு நிறத்துண்டும் விளையாடும்பொழுது அணிந்துகொள்வதற்கென மாற்று உடையும் கையில் வைத்திருந்தான். தெருவிளக்கின் வெளிச்சம் அவனைச் சுற்றிப் படர்ந்திருந்தது. இன்னமும் சிறிது நேரத்தில் விளக்குகள் அணைந்துவிடும். பிறகு வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கோலமிடப் பெண்கள் வரத் தொடங்குவார்கள். அவ்வீதியிலுள்ள பெண்களுக்கு அவனைத் தெரியும். எட்டு வருடங்களுக்கு மேலாக அவ்வீதியில் அவனது பெற்றோர்களுடன் வசித்திருக்கிறான். அந்தக் காலத்தில்தான் செல்லியின் வீட்டிலுள்ளவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. செல்லியின் தம்பி தம்புவுடன் கால்பந்து விளையாட மைதானத்திற்குச் செல்வான். தம்புவுடனான அவனது பழக்கம் இப்போதும் தொடர்ந்திருந்தது.

தம்புவின் வீட்டில் யாரும் எழுந்திருக்கவில்லை. முதலில் செல்லிதான் எழுந்துகொள்வாள். வாசல் தெளித்துக் கோலமிடுவாள். கோலமிட்டு முடிகின்ற நேரத்தில் தம்பு வெளியே வருவான். “தெருமுக்கில் நிற்காதே” என்று செல்லி தம்புவிடம் எத்தனையோ முறை சொல்லி அலுத்துக்கொண்டாள். “தெருமுக்கில் நிற்காதே” எனக் கோபமாகத் திட்டிகூட விட்டாள். தம்புவிடம், “ஜித்துப்பயலோடு இனிமேல் விளையாடாதே. ஜித்து வீட்டுக்கு வந்தாதான் நீ மைதானத்திற்குப் போகணும்” என்றாள். தம்பு ஒன்றும் அக்காவின் சொல்லிற்குப் பணிந்து செல்பவனல்ல. வழக்கம் போல ஜித்துவும் தம்புவும் கால்பந்து விளையாடச் சென்றுவிட்டார்கள்.

செல்லியின் வீட்டில் விளக்கு எரிந்தது. தூக்கம் கலைந்து எழுந்து விட்டார்கள். ஜித்து அவர்களுடன் இரவு நேரத்தில் உறங்கியிருக்கிறான். ஜித்துவின் பெற்றோர்கள் வெளியூர் திருமணத்திற்குச் சென்றபோது செல்லியின் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார்கள். ஜித்துவின் அம்மாவும் அப்பாவும் இரண்டு தினங்கள் கழித்துத்தான் வந்தார்கள். தம்புவும் ஜித்துவும் அருகருகே உறங்குவதும் அமர்ந்து சாப்பிடுவதுமாக இருந்தார்கள். தம்புவின் அப்பா அவர்களை டிராக்டரில் ஏற்றி வயலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்களது வயல் மலையடிவாரத்திற்குப் பக்கத்தில் இருந்தது. வயலிலிருந்தபடியே பெரிய பெரிய பாறைகளைப் பார்க்கலாம். அன்று உழத் தொடங்கியிருந்தார்கள். ஈரமாக மண் பிரித்து டிராக்டர் டயர்களில் அப்பிக்கொண்டது. டிராக்டரின் சப்தத்தில் கத்திப் பேச வேண்டுமென்பதாலும் வயலில் உட்கார முடியாததாலும் தூரத்திலிருந்த பாறையின் மேல் உட்கார்ந்து கொண்டார்கள். மூவரும் பாறையிலிருந்த புறாக்களை விரட்டினார்கள். உழுத வயலில் பறவைகளின் கண்களுக்குப் புழுக்களும் பூச்சிகளும் தெரிந்துவிட்டன. தின்று முடியும் புறாக்கள் எங்கும் செல்லாது.

அருகாமையிலிருக்கும் கல்மரத்திற்கு செல்லி அழைத்துச் சென்றதை ஜித்துவால் மறக்க முடியவில்லை. பெரிய வன்னிமரம். சின்ன இலைகள் நெருக்கமாகப் படர்ந்திருந்தன. மரத்தின்கீழ் லிங்க வடிவக் கல்மரத்தில் பிணைந்தோ இல்லை கல்லில் மரம் பிணைந்தோ உருவாகியிருந்தது. வயல் வைத்திருப்போர் வணங்கி பூஜித்து வந்தார்கள். மரத்தின் பின் பத்துப் பதினைந்து பேர் நின்றிருந்தால்கூடத் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு எதுவும் தெரியாது.

கல் மரத்தின் வேரில் மரக் காளான் பூத்திருந்தது. ஜித்துவும் தம்புவும் பிய்த்தெடுத்து வைத்துக் கொண்டார்கள். கெட்டியான காளான் காம்புகளற்று மரத்தின்மேல் பட்டையோடு பட்டையாகப் படர்ந்திருந்தது. பிய்த்ததும் அதிலிருந்து மஞ்சள் வர்ணத்தில் நீர் வடியத் தொடங்கியது. பிசின் போல கைவிரல்களில் ஒட்டிக் கொண்டது. இருவரும் கைகளை உதறிக்கொண்டனர். செல்லி சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவளது பாவாடையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு தாவணியை இழுத்து விட்டபடி கல்மர நிழலில் உட்கார்ந்து கொண்டாள். அவள் சிரிக்கச் சிரிக்கப் பயந்தவனாகக் கையில் வைத்திருந்த காளானைத் தூக்கி எறிந்தான் தம்பு. தூரத்தில் சருகுகளின் மேல் சப்தமாக விழுந்தது அது. ஜித்துவின் கையில் சிறிய காளான் இருந்தது. அதை அவளுக்குத் தந்தான். செல்லியும் வாங்கிக்கொண்டாள். கல்மரத்திற்குச் சிறிது தள்ளி உன்னிப்பூக்கள் பூத்திருந்தன. “பிடுங்கி வரலாமா” என்று தம்பு கேட்டான். செல்லி, “வேண்டாம்” என்று சொன்னாள்.

தம்புவும் ஜித்துவும் வன்னிமர இலைகளினூடே தெரியும் வெளிச்சத்தை வேடிக்கை பார்த்தனர். ஜித்துவால் அவளருகே சகஜமாக உட்கார முடியவில்லை. கூச்சத்தைவிட ஏதோ ஒன்று அவனை மௌனமாக்கி இறுக்கமடையச் செய்திருந்தது. சற்று நேரத்தில் அழுதுவிடுபவன் போலவோ இல்லை வேறெங்காவது ஓடிப்போய் ஒளிந்துகொண்டு விடுபவன் போலவோ தவித்துக்கொண்டிருந் தான். தம்பு தன் அக்காளிடம் ஏதேதோ பேசியபடி சிரித்துக் கொண்டிருந்தான். மரத்தின் மேலிருந்த புறாக்களைத் தவிர வேறு யாரும் அவ்விடத்தில் இல்லை. டிராக்டர் வட்டமடித்துத் திரும்பியதும் மொத்தமாக எழுந்து பறந்த சில புறாக்கள் வழி தவறியதுபோல வயலுக்குச் செல்லாமல் மரத்தின் பக்கமாக வந்தமர்ந்தன.

செல்லி புறாக்களை விரட்டியபடி ஆரஞ்சும் மஞ்சளுமாகப் பூத்திருந்த உன்னிப்பூக்களைப் பறிக்கச்சென்றாள். பூவோடு கருநிறப் பழங்களை உதிர்த்து பாவாடையில் சேகரித்துக் கொண்டாள். பழங்கள் நசுங்கிவிடக் கூடாது என்று மெதுவாக நடந்து வந்தாள். அவர்களின் ஊடே அமர்ந்து கொண்டு தரையில் பரப்பிவிட்டாள். உன்னிப்பழங்கள் உருண்டோடின. தம்பு வேகமாகப் பிடிக்கப் போய் நசுங்கிவிட்டன. தம்புவிற்குப் பழம் பிடிக்கும். நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டுமென எழுந்து ஆசையாக உன்னிச் செடிப்பக்கம் சென்றான். அவன் போன பிறகு உன்னிப் பூக்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஜித்துவை இழுத்து அணைத்தவளாக உதடுகளில் முத்தமிட்டாள் செல்லி.

ஜித்து அதற்குப் பிறகு இரண்டு முறை வீடுமாறிவிட்டான். இருந்தும் தம்புவைப் பார்ப்பதற்குத் தினமும் வருகிறான். ஒருமுறைகூட செல்லி அவனிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவனை வீட்டிற்குள் அழைப்பதென்றாலும்கூட, தம்புவிடம் சொல்லித்தான் வரவழைக்கிறாள். அவள் ஜித்துவையும் கல் மரத்தையும் பிற்பகல் நேரத்திலிட்ட முத்தத்தையும் மறந்துவிட்டவள் போல இருந்தாள். ஆனால் ஜித்து எதையும் மறக்க முடியாமல், இந்த அதிகாலை மார்கழிப் பனியைச் சுவாசித்தபடி செல்லியை அவளுக்குத் தெரியாமல் பார்க்க வேண்டுமென்பதற்காகக் காத்திருக்கிறான். செல்லி தினமும் காலை நேரத்தில் ஜித்து தன்னைப் பார்க்கிறான் என்பதைத் தெரிந்திருக்கிறாளா என்பது புரியாததாகத்தான் இருந்தது. செல்லி இல்லாமலிருந்தால் தம்புவுடன் கல்மரத்து வயல் பக்கம் சென்றிருக்கிறான். பிற்பகல் நேரமும் புறாக்களும் அவனைக் கொதிப்படையச் செய்த போது, ஆத்திரத்துடன் கால்பந்தை உதைப்பான். கால்கள் பலம் பெற வேண்டி பயிற்சிகொள்ளும்போது, தன்னை ஆசுவாசப்படுத்தியபடி நிதானம் கொள்வான். அவனுக்கு உப்பு சுவையான உதடும் எச்சில் வாடையும் ஞாபகத்திலிருந்தது அழிக்க முடியாதவையாக இருந்தன.

செல்லியின் வீட்டருகே இருந்த அங்கு தாத்தா தன் வீட்டைத் திறந்து வெளியே வந்தார். அதிகாலையிலிருந்து கைப்பிள்ளைகளுக்கு மந்திரித்து தாயத்துக் கட்டிவிடுவார். நோயுற்ற பிள்ளைகள் அங்கு தாத்தாவின் மந்திரத்தால் குணமாகி வீட்டிற்குப் போனார்கள். தாத்தா செம்பிலிருந்து நீரை உள்ளங்கையில் ஊற்றிப் பிள்ளைகளின் முகத்தில் அடித்துவிடுவார். தோள் துண்டில் மந்திரித்துவிடுவதற்காகத்தான் கூட்டம் அதிகம். வயதானவர்கள்கூட வரிசையில் நின்று காத்திருப்பார்கள். நோய்களுடனும் வலிகளுடனும் காத்திருப்பவர்கள், தங்களை மறந்து வேதனையில் புலம்பிக்கொண்டிருப்பார்கள். குழந்தைகளின் அழுகையும் கூட்டத்தினரின் சப்தமும் சிறிது நேரத்தில் தொடங்கிவிடும். அங்கு தாத்தா தோள் துண்டில் மந்திரித்தபடியே ஜித்துவைப் பார்ப்பார். ஜித்துவிற்கு அவரின் மேல் பயமிருந்தது. அந்தத் தெருவிலிருந்தபோது, தாத்தா நோயும் வலியும் ஏதுமற்ற தனக்கு ஏதேனும் நோய்களையும் வலிகளையும் உண்டாக்கிவிடுவாரோ என்று பயந்தான். அப்போதிருந்த பயம் இன்றுவரை தொடர்ந்திருந்தது. தாத்தாவின் முணுமுணுக்கும் வாயை ஜித்து பார்க்கவே மாட்டான். மந்திரத்தால் தன்மேல் ஏதாவது ஒன்றை ஏவிவிட்டு விடுவார் என்று நினைத்தான். தம்புவிற்கு அந்தப் பயமே இல்லை.

தம்புவும் தாத்தாவிடமிருந்து மந்திரத்தைக் கற்றுக்கொள்ளப் போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தான். தாத்தாவைப் போல உதடுகளை அசைப்பதும் கைக் குட்டையை வைத்துக்கொண்டு மந்திரித்துவிடுவதுமாக இருந்தான். ஜித்துவிற்குப் பயம். வயலிலிருந்து வந்தபிறகு மேலும் பயம் கூடி விட்டது. தாத்தாதான் தனக்கு ஏதோ நோயை, வலியை, பேய் பிசாசை ஏவிவிட்டார் என்று பயந்தான். செல்லியைப் பார்க்கும்போதெல்லாம் அவன் கொதிப்படைந்தான். கால்பந்து விளையாடச் செல்லுவதற்குத் தம்புவின் வீட்டு வாசலில் காத்திருந்தபோது செல்லி வாசலில் கோலமிட்டுக்கொண்டிருந்தாள். அழுத்தமான வளைவுகளும் அளவான நேர்கோடுகளும் கூடிய சாதாரணமான கோலம்தான். கோலத்தைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது. திடீரெனச் செடியில் இலை முளைத்ததுபோல, கோலத்தின் நான்கு பக்கமும் சிறு இலை நீட்டிக்கொண்டு வந்தது.

செல்லி கோலமிட்டு முடிந்து ஜித்துவைக் கடந்து வீட்டிற்குள் சென்றாள். தற்செயலானது போலவும் திட்டமிட்டதுபோலவும் வாசலில் நின்றிருந்தவனின் மேல் உரசிவிட்டுச் சென்றாள். ஏற்கனவே உப்பின் சுவை கூடிய உதடுகளின் அவஸ்தையில் கொதிப்படைந்து கொண்டிருந்தவனை அருகாமையில் செல்லி தனது முழு உடலின் மூலம் தீண்டிவிட்டுச் சென்றது, வேறொரு மனநிலைக்கு அழைத்துச் சென்றது. செல்லி அவனைக் கடந்து சென்றதும் தீ சுட்ட வேதனை மாதிரியான அவஸ்தைக்குட்பட்டவன் வாசலை விட்டுக் கீழே இறங்கினான். திரும்பிப் பார்த்தபோது, அங்கு தாத்தா அவனைக் கவனித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவனை என்பதைவிட அவர்களை என்றுகூடச் சொல்லலாம். கோலத்தில் இலைகள் இழைத்தபோதிலிருந்து நோட்ட மிட்டுக் கொண்டிருந்ததுபோல, ஜித்துவைப் பார்த்த பார்வையில் குளிர் காய்ச்சலே வந்துவிட்டது. அவரது பார்வை சற்று முன்பிருந்த அத்தனை சந்தேகங்களையும் பறித்துக் கொண்டு கண்ணால் மந்திரித்து விட்டு நோயை உண்டாக்குவது போலிருந்தது.

செல்லியுடன் பேசிக்கொள்வதற்குப் பலமுறை தனிமையான இடமும் சந்தர்ப்பங்களும் அமைந்தன. எது குறித்துப் பேச ஆரம்பிப்பதெனப் பதற்றம் கொண்டவனாகப் பேசாமலேயே, அவளின் அந்தரங்கங்களைத் துளையிட்டுப் பார்ப்பது மாதிரி பார்த்துவிட்டு நகர்ந்தான். ஜித்து கற்பனையாகவே, செல்லியின் உடல் மேடுகளையும் வளைவுகளையும் பள்ளங்களையும் வர்ணங்கள் தந்து வெளிச்சமிட்டுக் கொண்டான். கற்பனையின் சுவை வியாதிபோல் நீடித்தது.

தம்பு வாசலிற்கு வந்து நிற்கும் நேரம்தான். ஏன் தாமதமாகிறதெனப் புரியாதவனாக வீட்டைப் பார்த் தான். தெருவிளக்குகள் அணையத் தொடங்கின. அங்கு தாத்தா புகையிலையை மடித்து வாயில் இட்டுக் கொள்வது தெரிந்தது. அவரது கண்கள்கூட, அந்தக் காலை வெளிச் சத்தில் தெரிந்தன. கத்தியின் கூர்முனைபோல, ஜித்து பலமுறை முயன்றிருக்கிறான். செல்லியை விட்டு மனம் விலகிவிடுமெனில் எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்துவிடலாமென நினைத்தான். சுயபோகம் செய்வதும் அதற்குப் பிந்தைய மன வருத்தங்களும் சுய இன்பத்தால் உண்டாகும் பக்க விளைவும் அவனைப் பிசாசுபோலத் துரத்தின. அங்கு தாத்தாதான் அந்தப் பிசாசை ஏவிவிடுகிறார் எனப் பயந்தான்.

செல்லி வாசலுக்கு வந்து நின்றாள். ஜித்துவின் கற்பனையின் சேகரத்திலுள்ள வர்ணங்கள் அசைவு கொள்ளத் தொடங்கின. வர்ணங்கள் பலவும் குழம்பி நிலைபெற்றுச் சித்திரங்களாயின. செல்லி என்ற ஜித்துவின் மனத்திலிருக்கும் சித்திரம் அவனாகவே உண்டாக்கிய இருள் சூழ்ந்துகொண்டிருக்கும் அனுபவமற்ற பிரதேசம் வெளிச்சமிட்டுப் பார்க்க முடியாத பகுதிகள் இப்பொழுதில் கோலமிடத் தெருவில் உட்காரும் செல்லியுடன் இணைந்துபோனது. இணைந்து போகும் கணம் சொப்பணஸ்கலிதத்தின் வேதனையும் நிம்மதியுமான உணர்வும் கொண்டது. செல்லி இந்தக் காலைப் பொழுதிலேயே இந்தத் தெருவிலேயே நாம் இருக்கக் கூடாதா? உன் கோலத்தில் ஏதாவது பகுதியில் என்னை ஒளித்துவைத்து விட்டுச் செல்லக் கூடாதா?

செல்லி இன்று பெரிய கோலமிட முனைந்துகொண்டிருக்கிறாள். எத்தனை புள்ளி என்று தெரியவில்லை. ஊடுபுள்ளியிடத் திரும்புகிறாள்.

செல்லி நீ வரையும் கோலத்தில் என்னை ஏதாவது ஒரு இடத்தில் ஒளித்து வைத்துவிடுகிறாயா? அங்கு தாத்தா மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்கிறார். அவர் மந்திரத்தால் கோலப்புள்ளியாகவோ இலைகளாகவோ சிறு மீன்களாகவோ மாறி நிரந்தரமாகக் கோலத்தில் இருக்க முடியாதா? அவர் முன்னிருக்கும் சிறுமியின் வலியும் வேதனையும் என் பக்கம் என்னிடம் வந்து சேர்கிறதுபோல உள்ளது செல்லி, பயமாக இருக்கிறது. இன்று சரியாகப் பந்தாட முடியுமா எனத் தெரியவில்லை. நேற்றிரவு மைதானத்தில் அதிகாலைப் பனிப்புகைப் படலத்தைப் போல, ஒரு கனவு. சுயஇன்பம் கூடாதென்ற கட்டுப்பாடும் அங்கு தாத்தாவின் மந்திரங்களின் பயமும் ஒருசேர என் படுக்கையில் கிடக்கிறேன். மீறி என்னுள்ளிலிருந்து ஏதோ ஒன்று வெளியேறி கால் பெருவிரல் வழியாக ஏதோ ஒன்று உடலில் புகுந்து கொள்வதுபோல் உடல் சூடேறுகிறது. கோல்கீப்பர் பவுன்தாஸ் முகத்தை நினைவுகூரும் தருணம் திரைப்படத்தின் காட்சி மாறும் நொடியில் செல்லி நீ வந்துவிடுகிறாய். எனது கற்பனையின் விரல்களும் கண்களும் நூற்றுக்கணக்கான விஷயங்களையும் காட்சிகளையும் மாறிமாறிக் கொண்டு வருகிறது. பெருவிரல் வழியாக அங்கு தாத்தா தான் மந்திரத்தின் மூலம் உன்னை எனது உடலில் புகுத்து விடுகிறார்போல, மந்திரத்தின் முணு முணுப்பான சத்தமும் தாத்தாவின் உதட்டசையும் அவ்விரல் போக வேகத்தின் ஊடே கலக்கிறது. நீ என் கண்களின் காட்சியிலிருந்து விலகிவிடுகிறாய். இல்லை உன்னை என் கண்கள் காட்சிப்படுத்தத் தவறிவிடுகின்றன. அவ்விரலிலிருந்து மீள முடியாதவனாக இப்போது நிற்கிறேன்.

செல்லியின் கோலமிடும் கைகளும் விரல்களும் அன்று காலை, உற்சாகம் கூடி வளைவுகளையும் கோடுகளையும் புள்ளிகளிலிருந்து உருவாக்கிக்கொண்டிருந்தன. பெரிய கோலம் அவளுக்குக் கைகூடிவிட்டது. அந்தக் கோலத்திலிருக்கும் எஞ்சிய புள்ளிகள் தங்களது இணைப்பிற்கெனக் காத்திருக்கின்றன. துரதிருஷ்டவசமாக அந்தப் புள்ளிகளில் ஒன்று கோலத்தில் இணைப்பாகாமல் போய்விட்டால் என்னாவது என்று ஜித்துவிற்குப் பதற்றம் உண்டானது. கூடவே சற்று சந்தோஷமும். மைதானத்தில் நண்பர்களுடன் பேச்சுவாக்கில் சுய இன்பத்தின் பின்விளைவுகளைப் பற்றிய உரையாடலில் கண்பார்வை மங்கலும் விரல் நடுக்கமும் ஏற்படும் என்ற பேச்சு தகவலாகப் பரிமாறப்பட்டது. அன்றிலிருந்து ஜித்துவிற்குக் கண்பார்வை துல்லியமாகப் புலப்படுவது போலவும் சில நேரங்களில் தூரங்களிலும் பல நேரங்களில் அருகிலும் பார்வை கலங்கல் ஏற்படுவதுபோலவும் தோன்றியது. அங்கு தாத்தாவின் மந்திர உதடுகளின் உச்சரிப்பு தனது விரலில் ஏறி நிரந்தரமாகக் குடி கொண்டுவிட்டதென்ற நம்பிக்கையும் பயமும் சற்றுக் கூடுதலாக அதன் பின்பு நிரந்தரமாக அவனிடம் இருந்தன. அவனிடமிருந்து செல்லியின் கற்பனையான சித்திரங்களைப் போல மனத்தில் அது சேகரமாகி விட்டது.

அங்கு தாத்தாவின் முன் நின்றிருந்த சிறுமி, தனது தாயுடன் சென்ற பிறகு வேறொருவர் நின்றார். கூட்டம் வரத் தொடங்கியது. ஆட்களின் நடமாட்டத்தைப் போல, பறவைகளும் நாய்களும் தெருக்களினூடே நிறைந்தன. குறிப்பாகக் காகங்கள், காகங்களின் இரைச்சல், தகரங்களின் மேல் அமரும்போதும் பறக்க எழும்போதும் எழும் சத்தம் கூசியது. நாய்கள் அவனை அடையாளம் கண்டுகொண்டன. கடைவீதியில் கடைகளில் இரும்புக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. ஆட்டை இழுத்துக்கொண்டு ஜித்துவைக் கடந்து போனார்கள் சிலர். மைதானத்திற்குச் செல்பவர்கள் அவனைப் பார்த்துக்கொண்டே நடந்தார்கள். ஆட்டின் சத்தமும் சிமிண்ட் தரையில் கத்தியை மணலிட்டுத் தேய்க்கும் சத்தமும் இணைந்து கேட்டன. ஏன் தம்பு இன்னமும் வரவில்லையென ஜித்து கவலையடைந்தான். தம்பு வரும் நேரம் கடந்துவிட்டது. தம்புவும் ஜித்துவும் தெருவை விட்டுப் போகும்போதுதான் இருவருக்கும் எதிரே ஆட்டுடன் கறிக்கடைக்காரன் வருவான். என்றுமே சிமிண்ட் தரையில் தேய்க்கும் சத்தத்தை ஜித்து கேட்டதில்லை. இன்றுதான் கேட்கிறான். காகங்கள், பிய்த்துப் போடும் பழைய தோசை துண்டுக்கும் இட்லிக்கும் கூடியபோது வெயில் முகத்தில் சூடாக இறங்கியது. வானம் முழுவதும் தெளியத் தொடங்கியது.

ஜித்து, தம்புவின் வீட்டின் வாசலில் நின்றான். செல்லி வரைந்த கோலத்தைப் பார்த்தான். எப்போதும் வரைவதைவிடச் சற்றுப் பெரியது. புள்ளிகள் இணைந்து இணைந்து வெளியான உருவத்தை முதல் பார்வையில் உணர முடியவில்லை. ஜித்துவிற்கு அந்தக் கோலத்தில் ஏதாவது இடமிருக்கிறதா? எங்காவது ஒளிந்துகொண்டு செல்லியினருகே இருக்கமாட்டோமா எனக் கோலத்தை உற்று நோக்கினான்.

வாசலிலிருந்து படியேறி வீட்டிற்குள் சென்றாள், முன்னறையில் யாருமில்லை. சமையலறையில், குண்டு பல்பின் மஞ்சள் வெளிச்சம் சில்வர் பாத்திரங்களின் மேல் விழுந்து கண்களுக்குப் பார்ப்பதற்கு எரிச்சலாக இருந்தது. யாருமில்லாத அமைதி. தம்புவை அழைக்கலாமா வேண்டாமா என யோசித்த நொடிப்பொழுதில் ஜில்லென்ற பனிக்கட்டி மாதிரியான தொடுதலை உணர்ந்தான். உணர்ந்து முடியும் முன்பே உப்புசுவை கூடிய உதடுகள் சூடான காற்றுடன், அவனது உதடுகளில் பொருந்திச் சுவைப்பதை உணர்ந்தான். இரண்டு மூன்று நொடிகளுக்கு மேல் நீடிக்கவில்லை. பொருந்தியதும் விலகியதும் பனிக்கட்டி மாதிரி தொடுகையும் விலகிவிட்டது. செல்லியுடன் அவன் நின்றிருந்த இடத்தைப் பார்த்தான். நெல் மூடைகளும் வேறுசில பொருட்களும் அடுக்கிவைக்கப் பட்டிருந்த அறை. அந்த இருட்டு அறையை விட்டு அவள் சென்ற பிறகு, உடலில் உப்புச் சுவையும் பனிக்கட்டிக் குளிரும் இருந்தன.

அந்த அறையில் ஏற்கனவே ஒருமுறை அவளுடன் நெருக்கமாக இருந்தது இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. வயலிலிருந்து திரும்பிய பிறகு அவளால் உடல் கிளர்ச்சியடைவது எதனால் என அறியாமல் இருந்த சமயம். இன்னொரு முறை முத்தம் பெற வேண்டியோ முத்தமிட வேண்டியோ அவளைத் தொடர்ந்து கண்காணித்த நேரம். இருட்டு அறைக்குள் நுழைந்ததும் பின் தொடர்ந்தவன் மூடைகளின் மேலேறி கைத் தராசை எடுக்க அவர் முயன்றுகொண்டிருந்ததைப் பார்த்தான். செல்லிக்குக் கை எட்டவில்லை. அவனை அங்கு கண்டதும் கீழே இறங்கி, அவனைத் தராசை எடுத்துத் தரச் சொன்னாள். கட்டியிருந்த கைலியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு மூடைகளின் மேல் மாடிப்படியில் ஏறிச்செல்வது போலச் சென்றான்.

கைத் தராசை எடுத்துத் தந்ததும் வாங்கிக்கொள்வதற்கு முன் அதே ஜில்லென்ற பனிக்கட்டி மாதிரியான கைகளில் ஜித்துவின் தொடையைத் தடவிவிட்டுக் கிள்ளினாள். பிறகு கைத் தராசை வாங்கிக்கொண்டு அறையை விட்டுப் போய்விட்டாள். தனது தொடையில் அவளது உள்ளங்கைப் படர்ந்ததும் உயிரே போய்விடுவது போலத் தன்னிலிருந்து ஸ்கலிதம் வெளியேறுவதை உணர்ந்தான். அந்த அறையிலேயே சிறிது நேரம் கதவடைத்துக் கண் சொருகிக்கிடந்தான். தெளிந்து அறையை விட்டு வெளியே வந்த போது ஒன்றுமறியாதவள் போல வீட்டிற்குள் நடமாடிக் கொண்டிருந்தாள் செல்லி.

இன்றைய காலை நேர முத்தம் தனது முதன்முதலான ஸ்கலிதத்தை நினைவுகொள்ளச் செய்ததை உணர்ந்தான். இயற்கையாகவும் செயற்கையாகவும் தனக்கு ஏற்பட்ட ஸ்கலிதங்களை ஞாபகத்தின் சேகரிப்பில் வைத்திருக்காமல் கழற்றி விட்டதுபோல ஏன் முதன்முதலான அச்செயலைத் தன்னிலிருந்து அகற்ற முடியவில்லை என இப்போது யோசித்தான்.

தன் கீழ் உதடு தானாகச் சுய உணர்வு கொண்டதுபோல வழக்கமான இயல்பான நிலைமைக்கு வருவதை உணர்ந்தவனாக தம்புவைத் தேடினான். தம்பு கழிப்பறையில் இருந்தான். தம்பு உள்ளிருந்துகொண்டே காத்திருக்கச் சொன்னான். குழாயில் நீர் வடியும் சத்தமும் அதைத் தொடர்ந்து இரும்பு வாளி நகரும் சத்தமும் கேட்டன.

செல்லியை இன்று தான் முத்தமிட வேண்டுமென முயன்றான். அவள் எந்த அறையில் இருக்கிறாளெனத் தேடினான். தன்னிடம் மூர்க்கமாக இருந்து, பிறகு உடனடியாக சாந்தமானவளாக மாறிவிடுகிறாளே என அவஸ்தையுற்றான். வீட்டிற்குள்ளே குருவிகள் வரத் தொடங்கிவிட்டன. காகங்கள் வாசல்படியில் அமர்ந்து கரைந்தன. செல்லி எந்த அறையிலிருக்கிறாளென அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. திடீரெனச் சற்று முன் நிகழ்ந்ததுபோல, எங்கிருந்தாவது வந்து தன்னை இழுத்துக் கொண்டு சென்று திரும்பவும் முத்த மிடவோ அணைக்கவோ கூடுமென்ற கற்பனை அவனுள் படர்ந்தது.

செல்லி தம்ளரில் பால் ஆற்றிக் கொண்டு அவன் முன்பாக நின்றாள். பால் தம்பளரை நீட்டி “குடிமா ஜித்து” என்றாள். அவன் வாங்க மறுத்தான். அன்று வீட்டில் யாருமில்லையென்பதைத் தெரிந்து கொண்டான். அப்பாவும் அம்மாவும் வயலுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னாள். “வீட்டுக்குள்ள வர வைச்சுட்டேன் பாத்தீயா” என்று தம்ளரை கைகளில் பிடிக்கச் செய்தாள். தம்ளரை வாங்காமல், செல்லியை கட்டிக்கொண்டான்.

அவள் ஜித்துவை உதறி விலக்கிய போது தம்ளர் கீழே விழுந்தது. இருவரும் பேசாமல் நின்றனர். தெருவில் வயதானவரின் நோவு கூடிய புலம்பல் தெளிவாகக் கேட்டது. அங்கு தாத்தா அவரைச் சாந்தப்படுத்த முயன்றுகொண்டிருப்பதும் பதிலுக்கு வயதானவரை அழைத்து வந்தவர்கள் நோவின் புரியாத தன்மையை விளக்கிக் கொண்டிருப்பதுமாகப் பேசிக் கொண்டனர். ஜித்து தன்னுள் கொப்புளம் கொப்புளமாகக் குமிழ்ந்துகொண்டிருக்கும் உணர்ச்சிகளை அடக்க முடியாதவனாக மேலும் செல்லியை அணைத்தான். அவள் ஏனோ ஜித்துவின் கன்னத்தில் அறைந்து அவனது உணர்வுக் குமிழ்களைச் சிதறச்செய்தாள். கன்னத்தில் அறைந்து தள்ளிவிட்டபோது இரண்டு சப்தங்கள் அவனது காதுகளை வந்தடைந்தன. தம்பு கழிப்பறைக் கதவைத் திறப்பதையும் செல்லி அவனை ஆபாசமான வார்த்தைகளில் திட்டுவதையும் ஒரே நேரத்தில் கேட்டான். பிறகு அவன் வாசலிற்கு வந்து நின்றுகொண்டான்.

அங்கு தாத்தா தனது உதடுகளில் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே கத்தியின் கூர்மையான பார்வையால் தைத்துவிடுவதுபோல ஜித்துவைப் பார்த்தார். குறிப்பாகப் பெருவிரலைப் பார்ப்பதுபோல அவனுக்குத் தோன்றியது. கால்களில் பால் சிந்திய தடம் இருந்ததை அப்போதுதான் பார்த்தான். தம்பு உடைமாற்றிக்கொண்டுவந்தான். ஜித்து அவனிடம் இன்று வயலுக்குச் செல்லலாமா என்று கேட்டான். சரி என்றான் தம்பு. ஜித்துவின் மனத்தில் வயலும் கொக்குகளும் சில பெயர் தெரியாத பறவைகளும் உன்னிப்பூக்களும் செல்லியின் உப்புச் சுவை கூடிய முத்தமும் வந்து சென்றன. இருவரும் தெருவில் இறங்கி நடந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *