பித்துக்குளி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 13,966 
 

மாவேலிக் கரை என்றால் மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் குவிகின்றன. இயற்கை அன்னைதன் எழில்களை எல்லாம் அந்த மேற்கு மலை மறைவிலே கொட்டிக் குதூகலித்து விளையாடுகிறாள். வாலிபனுக்குக் காதல் தோன்றும். கவிஞனுக்குக் கனவு தோன்றும். அறிவில் முதியவனுக்குச் சாந்தி தோன்றும் அந்த இடத்திலே.

சுற்றிலும் காயல் நீலவானைத் தழுவியது. அதன் ஓரத்திலே கமுக மரங்களைக் குழைந்து தழுவின காதற் கொடிகள் – மிளகுதான். அந்த மிளகுக் கொடி… உள்ளத்தையும் உடலையும் ரகஸ்யமற்று அர்ப்பணம் செய்யும் கங்கையின் களங்கமற்ற அன்பு மாதிரி…

காயலுக்கு வட பக்கத்தில் வடசேரி. அதில் வல்லியத் தம்பிரான் என்றால் பழைய அரச வம்சம். மலை நாட்டு வீரம் முதலிய இழந்த இலக்ஷியங்கள் எல்லாம் நினைவிற்கு வரும். அவருக்கு ஒரு மகள் சகுந்தலா. காளிதாசன் கனவில் கண்ட சாகுந்தலை இவளைப் போல்தான் இருந்திருக்க முடியும். இயற்கையின் மடியில் வளர்ந்த குயில். பழைய படாடோ பத்தின் அம்சமான வல்லியத் தம்பிரானுக்கு உயிர். சமஸ்தான சம்பந்தத்தில் தமது இழந்த சிறப்புகளைப் பெறவிருந்தார். அவளுடைய ரகஸிய நாடிகளை அவர் அறிவாரா?…

மாவேலிக்கரைக்கும் வடசேரிக்கும் இடையில் காயல் ஒரு மைல்தான்.

மாவேலிக்கரையில் நீரருகில் ஒரு பிறையிடம் தம்பிரானைச் சேர்ந்ததுதான். அங்கே மார்த்தாண்டவர்மன் என்ற வாலிபன். ஓலைச்சுவடி, விவசாயம் இதுதான் அவனுடைய பொழுதுபோக்கு, வாழ்க்கை இலட்சியம்.

அன்று இரவு சற்று மழை தூறிக்கொண்டிருந்தது.

ஓங்கி வளர்ந்த தென்னங்கீற்றுகளிலிருந்து சொட்டுச் சொட்டென்று நீர்த்துளிகள்.

நாளைக்குச் சகுந்தலா புருஷன் வீடு சென்றுவிடுவாள்.

இன்றாவது கடைசி முறை காண…

இருளிலே படகு வரும் சப்தம்.

மார்த்தாண்டவர்மன் ஒரு மூலையில் மணையில் உட்கார்ந்திருக்கிறான்.

இருட்டு.

அவள் வந்தாள். தீபத்தை ஏற்றினாள்.

மூலையிலிருந்த கரியடுப்பில் பாலைக் காய்ச்சினாள்.

அதைக் கையில் எடுத்துக்கொண்டு அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

மார்த்தாண்ட வர்மன் நினைவற்றவன்போல் இருந்தான்.

பால் கிண்ணம் அவனது வாயண்டை வந்தது. குழந்தை மாதிரி அருந்தினான்.

பிறகும்…?

மௌனந்தான்.

மெதுவாக அவன் கால்களை எடுத்து இடையில் சுற்றிக் கொண்டாள்…

அவளது மழையில் நனைந்த உடலை மறைத்த கேசத்தை ஒதுக்கி அவனது சிரத்தை தோள் மீது மெதுவாக சாய்த்தாள். அவனது உஷ்ணமான கன்னங்கள்… அவள் கழுத்திலிருந்து முகம்வரை செக்கச் சிவப்பாக மாறியது…

மெதுவாக அணைத்த அவன் கரத்துடன் அவன் மடியில் கண்ணை மூடிய வண்ணம் படுத்தாள்.

என்ன நம்பிக்கை! அவள் கடைக்கண்ணில் சுடர்விட்ட இரண்டு துளிகள் எதை நினைத்தனவோ!

ஆமா… சகுந்தலா… என்னுடைய… சகுந்தலா… அவள் என்னுடையவள்… அவள் கழுத்து, அந்தப் பிளவுபட்ட கேசம் எவ்வளவு அழகாக… இப்படியே என் பக்கத்தில்… எப்பொழுதுமே… ஆமாம். எப்பொழுதுமே… அதை அவள் கழுத்தில் அப்படியே சுற்றினால்…

அவனது கரங்கள் இருகூறாகப் பிளந்து கிடந்த சிகையை அவள் கழுத்தில் சுற்றுகின்றன, இறுக்குகின்றன.

“ஆமாம்! என்னுடையவள்!” என்ற வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வருகின்றன.

அவள் கண்கள் மூடியபடிதான்… அதரத்திலும் அந்தப் புன்சிரிப்பு. அந்தத் தழுவல், அவனைத் தன்னுள் அழுத்திய கை இன்னும் அவனை இழுப்பது மாதிரி அழுத்துகின்றது… அந்த நிலையில்…

அவ்வளவுதான்.

அந்த இரண்டு துளிகள் என்ன நினைத்தனவோ?

அன்று அவனை அணைத்த வண்ணமே இரவு கழிகிறது.

அவள் எப்படி விலகுவாள்? உயிர் இருந்தால்தானே.

அன்று இரவு அவள் விலகவில்லை.

அவன் மனதில் காதலின் வெறி! ஐக்கிய வெறி!…

அவள் எப்படி நீங்குவாள்?

அன்று இரவு அவள் நீங்கவில்லை!

உயிர் இருந்தால்தானே!

– மணிக்கொடி, 30-09-1934, புதிய ஒளி, முதற் பதிப்பு: டிசம்பர் 1953, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

0 thoughts on “பித்துக்குளி

  1. Excellent stories that reinforces Authour’s deep understanding of the social fabric of his times and cultural mores that get intertwined with various characters as the story unfolds. Beautiful
    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *