பாசத்தைத்தேடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 13,632 
 

கூட்டம் இல்லாத இடமாய் நீண்ட தூரம் நடந்து ஒரு கட்டு மரத்தின் பக்கம் பிரியாவும் பிரபுவும் ஒதுங்கி இருந்தனர். அவர்கள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தது, மற்றவர்களைப்போல் இருளை சாதகமாக்கிகொள்ள அல்ல. அப்படியோரு நல்லவன் பிரபு. அதுதான் அவன் மீது பிரேமை கொள்ள காரணமாயிற்று. பிரியாவிற்கு நல்லதோர் நட்பு நாளடைவில் காதலாயிற்று. கடந்த மூன்று மாதங்களாக அது தொடர்கிறது, தொடர்ந்தாலும் இருவருமே நல்ல குடும்பத்தில் பிறந்ததினால் ஒருவரையொருவர் தொட்டு பேசுவதுகூட கிடையாது.

“எதுக்கு அதைரியப்படுற பிரியா, நம்ம கல்யாணம் நிச்சயம் நடக்கும்”.

“பிரபு, இந்த வார்த்தையை உங்கம்மால்ல சொல்லணும். எனக்கென்னவோ பயமா இருக்கு. என்னைப் பார்த்ததும் உங்கம்மா வேண்டாம்னு சொல்லிடுவாங்களோன்னு பயமாயிருக்கு”.

“ப்ச்,சுததபேத்தல் இது, நான்தான் உன்னை காதலிக்கிறதை முன்பே சொல்லியிருக்கேனே, உன்னை அழைச்சுகிட்டு போறதே ஒரு பார்மாலிட்டி தான். எங்கம்மாவைப்பற்றி உனக்குத் தெரியாது. அவங்க ரொம்ப தங்கமானவங்க. அப்ப…நான் கிளம்பட்டுமா?. மூஞ்சியை சீரீயசா வச்சுக்காம, சிரிச்சுகிட்டு விடை கொடு பார்க்கலாம், கமான்”.

கஷ்டப்பட்டு சிரித்தபடியே, “சீ யூ. வெள்ளிக்கிழமை பார்க்கலாம்” என்றாள். இருவரும் பிரிந்தனர்.

பிரியாவிற்கு ஒரே குழப்பமாக இருந்தது. அந்த அம்மாவுக்கு சம்மதம் என்றால் உடனே நம் தந்தையை தானே பார்க்கணும். அதை விட்டு என்னை ஏன் அழைத்து வரச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு வேளை சினிமாவில் வருவது மாதிரி தன்னை அழைத்து மிரட்டி, பணத்தை கொடுத்து ஒதுங்கி போயிடுன்னு சொல்லவா?. இப்ப போவதா?. வேண்டாமா?.

ஏன் நாமாக கற்பனை பண்ணிக்கொள்ளவேண்டும்?. பிரபு சொன்னதுபோல் அவர்கள் நல்லவர்களாகவும் இருக்கலாமே.

குழப்பத்திலேயே நாள் போனது தெரியவில்லை.

காலிங் பெல் சப்தித்தது.

ஓடிப்போய் பார்த்தாள் பிரியா. பிரபு நின்றிருந்தான்.

“என்ன பிரியா இது, எத்தனை நேரம்தான் காத்திருப்பது?. அதான் வந்துட்டேன். புறப்பட்டு சீக்கிரம்”.

“உங்களுடனேவா?”.

“பயப்படாதே, தெரு முனையிலேயே இறக்கிவிட்டுடுறேன். ஒரு ஐந்து நிமிடம் கழித்து நீ வா. என்ன சரியா?”.

“சரி, புறப்படுங்கள்”.

சொன்னபடியே முனையிலேயே இறக்கிவிட்டு புறப்பட்டான் பிரபு.

அந்த காட்சியை மாடியிலிருந்து பார்த்தாலும், மகன் வருவதற்குள் ஒன்று தெரியாதது மாதிரி அன்னபூரணி அவசரமாக இறங்கி வந்து ஹாலில் உள்ள டி,வியை ஆன் பண்ணிவிட்டு எதிரில்
அமர்ந்துகொண்டாள்.

பிரபு நிலை கொள்ளாமல் உள்ளுக்கும், வெளிக்குமாக அலைந்தது பார்த்து உள்ளுக்குள்ளேயே நகைத்து கொண்டாள் அன்னபூரணி. பிரியா வந்ததும் வாசலிலேயே நிறுத்திவிட்டு உள்ளே ஓடிவந்தான்.

“பிரபு ,என்னப்பா இது, ஏன் எத்தனை பரபரப்பா ஓடிவரே..என்ன விஷயம்?”, நடித்தாள் அன்னபூரணி.

“அம்மா …..வந்து …நான் சொன்னேன்னே, அந்த பிரியா வந்திருக்காம்மா”.

“ஓ, அவளா?. உள்ளே கூப்பிடு”, அலட்சியமாக சொன்னாள்.

”பிரியா, வாவா “, குதுகலத்தோடு கூப்பிட்டான். தலை குனிந்து தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள் பிரியா.

“சும்மா உட்கார், இது நம்ம வீடுதான்”, தன்னையறியாமல் சந்தோசத்தில் கூவினான் பிரபு.

பிரியா எங்கே உட்கார்ந்து விடுவாளோ என்ற பயத்தில் அன்னபூரணி கொஞ்சம் கடுமை காட்டி பேசினாள்.

“பிரபு, நீ சற்று வெளியே இரு,கூப்பிட்டது வரலாம்”, கட்டளை இட்டாள்.

அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அசடு வழிந்தபடியே வெளியே போனான்.

நாம் நினைத்தபடியே தான் நடக்கப்போகிறது. எதற்கும் தைரியமா க இருக்கவேண்டும். நினைத்துக்கொண்டாலும் பிரியாவுக்கு வியர்வை வழிந்தது பயத்தில்.

“என் பையனை உனக்கு எத்தனை நாளா பழக்கம்?”.

“மூன்று மாதமாக”, தணிந்தே வந்தது பதில்.

“ஏன் வேறு பையனே கிடைக்கவில்லையா?”.

அந்த வார்த்தையில் தொனித்த பரிகாசத்தை உணர்ந்ததும், துப்பாக்கி குண்டுகள் போல சீறீக்கொண்டு வந்தன பிரியாவின் வார்த்தைகள்.

“நல்ல மனசை பார்த்து வரதுதான் காதல்”.

“உன் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியுமா?”.

“எங்கள் வீட்டில் சம்மதித்து விட்டார்கள்”.

“அதுக்கு காரணம் இருக்கு. பெரிய இடத்து பையன் என்றால் மறுப்பு சொல்லவா போகிறார்கள்?”.

“போதும் நிறுத்துங்க, நீங்க சொல்ற பணம் எங்கிட்டேயும் இருக்கு. நான் எங்கப்பாவுக்கு ஒரே பெண். என் சொத்துக்காக என்னை மணக்க ஆயிரம் பேர் போட்டி, ஆனால் நான் உங்க மகனை விரும்பறேன். அதற்கு காரணமே நீங்கதான்”.

“நீ என்ன சொல்றே”, அதிர்ந்து போய் கேட்டாள் அன்னபூரணி.

“ஆமாம்மா, ஸ்கூல் படிப்பு முடிச்ச கையோடவே அம்மா போய்ட்டாங்க. அப்பாவோட வேதனை இப்படி அப்படின்னு சொல்ல முடியலே. நான் கூட வேதனையை அடக்கிகிட்டேன். தாய்பாசத்தை
முழுமையா அனுபவிக்காதவள் நான். உங்க மகன் என்னை சந்திக்கும் போதெல்லாம் உங்கள் அன்பையும் பாசத்தையும் பற்றித்தான் பேசுவார். அந்த மாதிரி அன்பையும் பாசத்தையும் வச்சுக்கிட்டிருக்கிற தாய் கிடைக்கிறதுக்கு ஒவ்வொரு மகனு மகளும் எத்தனை தவம் செஞ்சுருக்கனும்னு நினைப்பேன். எனக்கும் அந்த மாதிரி தாய் கிடைக்கணும்னா, இனி அது முடியாது. ஆனால் அந்த மாதிரி ஒரு மாமியார்…மாமியாரும் தாய் மாதிரிதானே, எனக்கு வேணும்னு ஏங்க ஆரம்பித்தேன். எதிர் பார்க்க ஆரம்பித்தேன். அதன் விளைவுதான் நட்போடு பழகின உங்க மகன் கிட்டே காதலை வளர்த்துகிட்டேன். அந்த அதிர்ஷ்டம் எனக்கு இல்லேன்னு இப்ப புரிஞ்சுகிட்டேன். பரவாயில்லே…அந்த நினைவே எனக்குப் போதும், நான் வரேன்”.

அவள் பதில்களினால் எண்ணங்களினால் தன் போலி வேடத்தை கலைந்த அன்ன பூ ரணி, “பிரியா, உன்னை டெஸ்ட் பண்ணத்தான் அப்படி பேசினேன். நீதான் இந்த வீட்டு மருமகள்..பிரபு ..இங்கே வா. மச மசன்னு நிக்காம, இந்த மாதத்திலேயே ஒரு நல்ல நாள் பார்க்கச்சொல்லி நம்ம ஜோசியர் கிட்டே சொல்லு போபோ”.

பிரியா அன்னபூரணி காலிலே விழ, அவளை ஆசிர்வதித்தால் அன்னபூரணி.

“அம்மா, உங்களிடம் மரியாதை குறைவாக பேசி இருந்தால், தயவு செய்து மன்னித்து விடுங்கள்”.

“பிரியா, உன்னை டெஸ்ட் செய்வதாக எண்ணி, நான்தான் கொஞ்சம் அதிகப்படியாகவே பேசிட்டேன். நீதான் என்னை மன்னிக்க….”, குறுக்கிட்டால் பிரியா.

“அம்மா நீங்க பெரியவங்க, அப்படியெல்லாம் சொல்லாதீங்க. உங்களை மாமியாரா அடைஞ்சதுக்கு நான் பெருமை படறேன்”.

“போதும், மாமியாரும் மருமகளும் செம் சைடு கோல் போட்டால் என் பாடுதான் திண்டாட்டம்”, என்று பிரபு ஜோக்கடிக்க மாமியாரும் மருமகளும் அதை ரசித்து கலகலவென் சிரித்தனர்.

பிரபுவின் குதுகளத்தில், பிரத்யேகமாக ஒரு குறுகுறுப்பு துள்ளிக்கொண்டிருந்தது. காதல் பழுத்து, கனியானதால் இருக்கலாம்.

– தின பூமி மங்கையர் பூமி – 28-1-1997

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *