நெய் விட்ட தோசையில் ஒரு நினைவு முகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 15,260 
 

பிறந்து இறக்கும் வரை கோடிக்கான முகங்களைப் பார்த்தாலும் அபூர்வமாய் ஒரு சில முகங்களே நினைவில் நிற்கும் முகுந்தனைப் பொறுத்தவரை அப்படிச் சிரஞ்சீவியாக அவன் மனதிலும் உயிரிலும் உணர்விலும் சாகாவரம் பெற்ற ஓர் ஒளித் தேவதையாகச் சிம்மாசனம் இட்டு வீற்ருக்கிற உஷாவுக்கு நிகராக இன்னொரு பெண்ணை அவன் தன் வாழ்நாளில் கண்டதேயில்லை கட்டின மனைவி கூட அந்தளவுக்கு அவன் மனதைக் கவர்ந்ததில்லை

பலன்களையே எதிர்பாராமல் களங்கமற்று அனாதையாய் இருந்த தன் மீது அவள் காட்டிய மிகவும் பரந்த அளவிலான பேரன்புக்கு முன்னால் அதை ஈடு செய்கிற அளவுக்கு எந்த மனிதருடைய அன்பும் எடுபடாமல் போனதை வாழ்க்கையைக் கழிக்கிற ஒவ்வொரு சமயமும் அவன் நிதர்ஸனமாகவே உணர்ந்து மனம் சலித்துப் போயிருந்தான்

உஷா அவனுடைய தாய் மாமன் மகள். .அவளுடைய அப்பா துரைசிங்கம் ஸ்டேட்டில் துரை மாதிரி பெரும் பதவியிலிருந்தவர். ஓய்வு பெற்ற பிறகு டவுன் வாழ்க்கையையே விரும்பியதால் பறங்கித் தெருவில் சொந்த வீடு வாங்கிக் குடியிருந்தார் அவருக்கு உஷாவோடு ஐந்து பிள்ளைகள் அவள் மட்டும் தான் பெண் பிள்ளை. மற்றவர்கள் ஆண்கள் முகுந்தன் அங்கு சமையல் வேலைக்குப் போனது அவன் மனிதத்தையே புடம் போட்டுப் பார்ப்பதற்கென்றே உறவின் புனிதமிழந்த ஒரு நிலை சரிந்த கருந்தீட்டு வாழ்கையனுபவமாய் அதை அவன் எதிர் கொள்ள நேர்ந்தது. அவன் ஊரில் இருந்த போது அவனுக்கு அம்மாவே எல்லாம். தந்தை முகம் கூட அவனுக்கு ஞாபகம் இல்லை/ முறையாக அம்மா அவரோடு குடும்பம் நடத்தி அவள் தன்னைப் பெற்றுப் போடாத குற்றம் காரணமாகவே மாமா வீட்டில் வந்து ஒரு சமையல்காரனாகத் தான் கஷ்டப்பட நேர்ந்திருப்பதாக அவன் மனம் குமுறுவான்

உண்மையில் அது அம்மாவின் குற்றமல்ல. அவள் பிறந்து வளர்ந்த வீட்டுச் சூழ்நிலை அப்படி வறுமையினால் வாடும் போது சீரிய ஒழுக்க நெறிகளின் வரம்பு உடைந்து தான் போகும். யாரோ சாமியாராம். பெயருக்குத் தான் அந்தச் சாமி வேடம் அவர் அவர்கள் வீட்டிற்குத் தண்டலுக்கு வரும் போதெல்லாம் அவர்களுடைய மிகவும் சிறிய அந்த மண் வீட்டில் சில நாட்கள் தங்கி விட்டுத் தான் போவார் அப்படித் தங்க நேர்ந்த சமயங்களில் யதேச்சையாகவே அவரின் சாமிவேடம் களைந்து ஆசை தீர அவருள் மூண்டு பற்றியெரிந்த காம நெருப்பின் பலனாகவே முகுந்தனின் இந்தக் கேவலப் பிறப்பு.. பிறகு அவர் என்னவானாரோ தெரியாது. அம்மாவின் முகம் தான் அவனுக்கு ஞாபகம்.. அவன் பத்து வயதுச் சிறுவனாயிருந்த போதே அவனை அனாதையாக்கி விட்டுக் கசம் வந்து அவள் இறந்த சமயம் தென்னை மரத்தில் ஏறி நின்று அவன் வாய் விட்டு அழுத போது அவனைக் கீழே இறக்கி அவளுக்கான இறுதிச் சடங்கைச் செய்து முடித்த மாமா கையோடு அவனை நகரத்துக்கே அழைத்து வந்து விட்டார்

அங்கு வரும் போது படிப்பைத் தொடர வேண்டுமென்பதே அவனின் கனவாக இருந்தது. அம்மாவுடன் ஊரில் இருந்த போது காலையில் பழஞ்சோறு சாப்பிட்டு விட்டுத்தான் அவன் பள்ளிக்கூடம் போவான். சில சமயம் அது கூடக் கிடையாது பாவம் அம்மா தான் என்ன செய்வாள்? அவனை வளர்த்து ஆளாக்க அவள் படுகிற கஷ்டங்களைப் பார்த்து தான் படித்து வந்தால் தான் தங்களுக்கு விமோசனம் கிடைக்குமென்று அவன் நம்பினானே.

அம்மா பாதியில் கண்ணை மூடியதால் அவன் கண்ட கனவும் நிறைவேறவில்லை.. மாமா அவன் படித்து முன்னேற வேண்டுமென்ற அந்த நல்ல எண்ணத்துடனேயே அவனைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்த போதிலும், மாமியின் தலையீட்டால் அது நடக்காமல் போனதில் அவனுக்கு வாழ்க்கை மீது இருந்த நம்பிக்கையே அடியோடு மறைந்து போனது

மாமி முதற் கொண்டு அந்த வீட்டிலுள்ள அனைவரும் அவனை ஒரு வேலைக்காரனாகவே பார்த்தார்கள் மாமா அதற்கு விதி விலக்கு அவனோடு கொண்ட மிக ஆழமான உறவின் புனிதம் பற்றி அவர் எடுத்துச் சொல்லியும் அவரிடம் அடி பணிய மறுக்கிற மாமியின் முரண்படுகின்ற கட்டறுந்த போக்கினால் அது எடுபடவில்லை

அங்கு அவன் ஒரு வேலைக்காரனாகவே பிரகடனப்படுத்தப்பட்டான்.. மாமியின் கொடி கட்டிப் பறக்கும் அதிகார தோரணையால் சமையலறையே அவனின் நிரந்தர இருப்பிடமானது.. மாமியின் வழிநடத்தலில் அவன் சமையலை ஒரு கலையாகவே கற்று வந்தான்.. அதையும் விட இலக்கியம் போன்ற கலைகள் மீதும் அவனுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.. அவன் ஓய்வு நேரங்களில் படிப்பதற்கென்றே மாமா நிறையத் தமிழ் புத்தகங்களெல்லாம் கொண்டு வந்து கொடுப்பார். அவற்றைப் படித்துப் படித்தே அவன் ஒரு சிந்தனையாளனாக மாறி விட்டதில் அவனை விடக் கூடுதல் மகிழ்ச்சி வெள்ளம் உஷா மனதில் தான். அவளுக்கு அவன் மீது தான் எவ்வளவு அக்கறை

மாமா பரம சாது. .மாமியிடம் மட்டுமல்ல, எல்லோரிடமும் பணிந்து போகின்ற சாந்த சுபாவம் அவரின் பிறவிப் பெருமை. அதனால் தான் முகுந்தனை நல்லபடி ஆதரித்து அவனை வாழ்விக்கிற கடமையை மறந்து மாமிக்கு அவர் அடிபணிய வேண்டியதாயிற்று. இதன் காரணமாகவோ என்னவோ அந்த வயதிலேயே உஷாவுக்கு அவன் மீது ஒரு தனி ஈர்ப்பு அதைக் காதலென்று அனுமானிக்கிற அளவுக்கு அவன் ஒன்றும் அறிவில் தரம் குறைந்தவனல்ல.

அது காதலை விட மிகவும் ஆழமான ஒரு பேரன்பு. அவள் ஒடிசலான மெல்லிய உடம்போடு கண்கள் களை கொண்டு பிரகாசிக்கும் ஒரு அமானுஷ்ய தேவதை போல் அம்மா அறியாத தருணங்களில் அவனைத் தரிசனம் காண அவனின் நித்திய சாம்ராச்சியமான அந்த அடுக்களைக்குள் வரும் போது, ஒரு நாள் அவளை அப்படியொரு நிலையில் எதிர் கொள்ளும் திராணியின்றி வெட்கித்து அவன் தலை குனிந்து மெளனித்து நிற்பதைப் பார்த்து விட்டு அவள் கை கொட்டிச் சிரித்தவாறே கேட்டாள்”

“என்னடா நான் உன்னைப் பாக்க வாறது நீ நினைப்பது போல் இது அதுவல்ல ஏனோ தெரியேலை அப்பாவை விட ஒரு படி மேலே உன்னை நான் நேசிக்கிறன். உன்னை இப்படிப் பார்க்கேக்கை என் நெஞ்சிலை இரத்தம் வழியுது. நீயும் மனிசன் தானே என்று அம்மா நினைச்சிருந்தால் என்ரை அண்ணன்மார் போலை நீயும் கனவான் வீட்டுப் பிள்ளை மாதிரி படிக்கிறதுக்கு கல்லூரி போக உனக்கு ஒரு சுதந்திரம் கிடைச்சிருக்கும் இப்படி அடுப்பிலை வெந்து நீ சாகிறதைப் பார்த்துக் கொண்டு என்னாலை இருக்க முடியேலை இப்ப நான் கல்லூரி போற நேரம்”அவள் வேம்படி மகளிர் கல்லூரியிலே படிக்கிறாள் வெள்ளைக் கவுண் தான் அந்தக் காலத்தில் அவளுடைய சீருடையாக இருந்தது. அவளுக்கு மிகவும் நீண்ட தலை முடி ஜடை போட்டு இரண்டாக மடித்துக் கட்டினாலும் இடுப்பு வரை தொங்கும். அதன் நடுவே ஒளி விட்டு அவள் சிரிக்கும் போது கண்களும் சிரிப்பது ஒரு காட்சி லயமாக மனதை வருடிக் கொண்டு போவது அவனுக்கு ஒரு சுகமான அனுபவம். அவள் சொன்னதைக் கேட்டு விட்டு அவன் சொன்னான்

“அது தான் தெரியுதே வெள்ளைக் கவுனோடு உங்களைப் பாக்கிற போது சரஸ்வதியையே பாக்கிற மாதிரி நான் மெய் சிலிர்த்துப் போறன். இப்ப எதுக்கு வந்தனீங்கள்? மாமி கண்டால் வில்லங்கமாய் போய் விடும். எனக்குத் தான் அடி விடும். போங்கோ உஷா என்னைத் தேடி இப்படிப் பாக்க வாறதை இன்றோடு விட்டிடுங்கோ”

“அடி செருப்பாலை நான் ஒன்றும் உன்னைப் போலை பயந்தாங்கொள்ளியல்ல அம்மா பார்த்தால் அதுக்குப் பதில் சொல்லி உன்னைக் காப்பாத்துற வழி எனக்குத் தெரியும் .இப்ப நான் வந்தது உனக்கு ஒரு பரிசு தரத்தான் எங்கை கையை நீட்டு”

“என்னது இவ்வளவு பெரிய பார்சல்?

“திறந்து தான் பாரேன்”

“அட நெய் தோசை அதுவும் உங்கடை பார்சல் அம்மா கட்டித் தந்திருக்கிறா எனக்குத் தந்திட்டு எதைச் சாப்பிடப் போறியள்?

“கண்டீனிலை வேண்டிச் சாப்பிட்டுக் கொள்ளுறன் உன்னை நினைச்சால் பாவமா இருக்கு அது தான் இந்த நெய்த் தோசை ஒரு நாளும் நீ இதைச் சாப்பிடதில்லைத் தானே ஏன் இது உனக்குக் கசக்குதா?”

“இல்லை நான் அப்படி நினைக்கேலை. உங்கடை கையாலை வாங்குகிறதுக்கு நான் கொடுத்து வைச்சிருக்க வேணும், ஆனால் இப்படி நான் வாங்கித் தின்னுறது என்னை நம்பி வீட்டுக்குள்ளை விட்ட மாமாவைச் சங்கடப்படுத்துமேயென்று தான் எனக்கு யோசனையாக இருக்கு ‘

“அதைப் பிறகு பாப்பம் நான் அதைச் சரி செய்கிறன் இப்ப இதைப் பிடி”

அதன் பிறகு அங்கு அவள் நிற்கவில்லை. அவள் மனதில் நிறைந்திருந்த அன்புக்கு அடையாளமாக அந்த நெய் ஓழுகும் தோசை அவன் கையில் நெய் மணக்குதோ இல்லையோ அதையும் தாண்டி என்றும் மறக்கவே முடியாத ஒரு சிரஞ்சீவி ஞாபக தேவதையாக அதுவல்ல அவள். ஆம் அவளுக்கு அவன் மீது அன்பு காட்ட வேண்டுமென்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவர்கள் வாழ்க்கை முறை வேறு. மேல் மட்டச் சுக போக வாழ்க்கையனுபவங்களையே வாழ்ந்து கழிக்கிற அவர்களுக்கு நடுவே ஒரு கருந்தீட்டு நிழலாகவே இருளில் மறைந்து இருக்கிற அவனையே வெளிச்சம் காண வைத்து மனம் குளிர்விக்கிற மாதிரித் தனக்கு நெய்த் தோசை வழங்கிக் கெளரவித்து விட்டுப் போகின்ற அவளின் ஈடு இணையற்ற பேரன்பு மறக்கவே முடியாத ஒரு சகாப்த காவியமாகத் தான் உயிரோடு இருக்கும் வரை தனக்குள் கறையகற்றுகின்ற ஒரு தேவ வரம் போலத் தன்னைக் கட்டிக் காப்பாற்றுமென்று மெய் சிலிர்த்து அவன் நினைவு கூர்ந்தான்

மாமாவின் மறைவுக்குப் பின் அவன் அங்கு வேலைக்காரனாகவே தொடர்ந்து பணியாற்ற விரும்பாமல் சுதந்திரமாக முடிவு எடுக்கத் தெரிந்த ஒரு வீர இளைஞனாய் அங்கிருந்து வெளியேறித் தன் கிராமத்துக்கே வந்து விட்டான் அவன் அந்தக் காலத்து எ ஸ் ஸி கூடப் படிக்க முடியாமல் போனதால் குறைந்த சம்பளம் வாங்கும் ஒரு கிளார்க்காய்க் கூட அவனால் வர முடியவில்லை. சுன்னாகத்திலுள்ள ஒரு கூல் பாரில் மிகவும் தரம் குறைந்த விற்பனையாளனாகவே அவனால் பணியாற்ற முடிந்தது. ஒன்றவிட்ட அக்கா ருக்மணி வீட்டிலிருந்து தான் தினமும் அவன் வேலைக்குப் போய் வருவான் அதிகாலை ஏழு மணிக்கே போய்க் கடையைத் திறப்பது கூட அவன் தான். முதலாளி சதாசிவத்திற்கு அவன் மீது நல்ல நம்பிக்கை இருந்தது. பார்த்தால் எதிலும் பங்கமுறாத ஒரு கர்ம யோகி மாதிரி அந்தக் கிராமத்துக் குச்சொழுங்கையில் ஒரு நிறைந்த ஆதர்ஸக் களையோடு நடை பவனியாக அவன் போய் வருவான். ஏழாலையிலிருந்து சுன்னாகத்துக்கு நீண்ட தூரம் நடக்க வேண்டும், அது அவனுக்குப் பழகி விட்டது ஒரு சையிக்கிள் இருந்தால் அந்தச் சிரமம் இருக்காது அதை வாங்குகிற அளவுக்கு தான் இன்னும் முன்னேறவில்லையென்பதில் அவனுக்குச் சிறு மனக் குறை கூட இருந்ததில்லை. எது வந்தாலும் கலங்காத ஸ்திர புத்தி அவனுக்கு இயல்பானது.. சின்ன வயதில் மாமாவின் அனுசரணையோடு நிறைய இலக்கியப் புத்தகங்கள் வாசித்து வந்ததால் மேடையேறிக் கணீரென்று பேசக் கூடிய அளவுக்கு ஆழமான சிந்தனைத் திறன் கொண்ட ஓர் இலட்சியவாதியாகவே அவன் மாறிவிட்டிருந்தான்

ஞாயிறு வந்தால் அவனுக்கு விடுமுறை. ஏழாலை முத்தமிழ் மன்றத்தில் அன்றைய தினம் மாலை ஐந்து மணிக்கு நடைபெற இருந்த ஒரு தமிழ் விழாவில் அவனையும் பேசக் கூப்பிட்டிருந்தார்கள். இளம் பெண்களையே ஆகர்ஷிக்கும் அளவுக்கு உணர்ச்சிகரமான உயிர்த் துடிப்போடு அவன் பேச்சு மேடையில் களை கட்டி நிற்கும் அவனைக் காதலிப்பதற்கென்றே பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு காத்திருந்த காலமும் ஒன்று இருந்தது

அவர்களையெல்லாம் புறம் தள்ளி விட்டுத் தோசைக்கே ஒரு காவிய நாயகியாகத் தன் மனதில் மிகவும் களை கொண்ட ஒரு தேவதையாகக் குடியேறி விட்ட உஷாவை மனம் மறவாமல் நினைக்கிற தருணங்களே ஒரு நித்திய வாழ்க்கை யோகம் போல அவனுள் ஊறிப் போய் இருந்தது உண்மையில் அது வெறும் உடல் கவர்ச்சியாய்த் தோன்றுகின்ற காதலை விட ஒரு புனிதமான தெய்வீக அனுபவம்.. உஷாவின் கிடைத்தற்கரிய அந்த மகத்தான அன்பு நிறைவான ஆளுகைக்கு முன்னால் காதல் காற்றடிக்கும் பக்கமெல்லாம் எடுபட்டு ஓடும் இந்தச் சாதரண பெண்கள் குறித்து மயங்கி மனம் விடுமளவுக்குத் தான் ஒன்றும் முட்டாளில்லையென்று அவன் நினைப்பதுண்டு

அந்த நினைவு மாறாத உயிர் ஒளி கொண்ட தடங்களுடனேயே அன்று அவன் பேசுவதற்கென மேடையேறிய போது கரகோஷம் வானைப் பிளந்தது தான் ஒரு சமையல்காரனாக இருந்தவன் என்ற நினைவே அப்போது அவனுக்கு மறந்து விட்டது கேவலம் இந்தச் சமையல்காரனாக இருந்தவனிடம் இவர்களெல்லாம் கற்றுக் கொள்ளும்படியாக கற்றுத் தேறிய ஒரு வேதமே இருக்கிறதென்பதை யார் தான் நம்புவர்?

எனினும் நம்பித் தான் ஆக வேண்டிய நிலைமை அங்கல்ல கனல் பறக்கும் அவன் பேச்சில். எத்துணை அழகான வாழ்க்கைத் தத்துவத்தையே புடம் போட்டுக் காட்டுகிற அவன் பேச்சின் உயிர் ஜொலிக்கும் மையப் பொருள் அப்போது உஷாவைப் பற்றியதாகவே இருந்தது

அவர்கள் அந்தப் பார்வையாளர்கள் நினைத்திருக்கக் கூடும் இவன் என்ன சொல்கிறான்? கேவலம் ஒரு பெண்ணைப் பற்றி மனம் கூசாமல் பேசுகிறானே?அதற்கு இதுவா தருணம்? காதலும் கத்தரிக்காயும் அவர்கள் நினைத்ததை ஒரு சிலர் வாய் விட்டுக் கேட்கவும் செய்தார்கள்

“நிறுத்து ! உன் காதல் கதை இஞ்சை வேண்டாம்”

“ஐயோ நீங்கள் நினைக்கிற மாதிரி அதைச் சொல்கிற அளவுக்கு நான் ஒன்றும் புத்தி குறைஞ்சவனில்லை எனக்குக் காதலென்றால் என்னெண்டே தெரியாது நான் சொல்லுறது அதை விடப் புனிதம். உடல் தாண்டி வருவது. அப்ப விதி செய்த சதியாலை அடுப்புக் கரி குளிச்ச ஒரு வேலைக்காரனாக நான் இருந்த போது நடந்த ஒரு தெய்வீக அனுபவம் இது வெறும் தோசை தான். நானே அவர்களுக்காகத் தயாரித்துச் சுட்டுக் குடுத்த நெய்த் தோசை அதைத் தானம் வழங்க ஆருக்கு மனம் வரும்? சொல்லுங்கோ நீங்கள் சொல்ல மாட்டியள் ஏனென்றால் அப்படியொரு அன்பு நிழல் நிழல் கூட உங்கள் கண்களுக்குள் வெளிச்சமானதில்லை இப்ப நான் அன்பைப் பற்றிப் பேசுறேனென்றால் அதுக்கு இது தான் காரணம் உஷா என்னிலை காட்டிய அந்த மேலான அன்பு வெறும் ஒரு சாதனையல்ல சரித்திரம்” என்றான் உணர்ச்சி முட்டிய மனம் நிறைந்த சந்தோஷ வெள்ளத்தோடு. அந்த வெள்ளத்தின் கரையில் நின்று ஒன்றுமே பிடிபாடாமல் போன மனம் அடைபட்ட மயக்கத்தில் பிறகு அவர்களுக்குப் பேச வரவில்லை. அந்த பேச்சு நின்ற மெளனத்திரை விழுந்து தான் கூறிய அன்பு வேதம் தேடி உணர்வுத் திறனறியும் மனிதர்களற்று மறை பொருளாகவே மறைந்து போன பெருஞ் சோகம் தன்னையே காவு கொள்வது போல் பிறகு அவனும் பேச வராமல் மேடையை விட்டுக் கீழிறங்கிப் போய் வெகு நேரமானது

அந்தக் கிராமத்து மண்ணில் காலடி வைத்த பிறகு அவன் வாழ்வில் நிறைய மாற்றங்கள். உஷாவின் மேலான அந்தத் தெய்வீக அன்பு கிடைத்த பிறகு பெண்கள் மீதான பாலியல் கவர்ச்சியென்பது அவனைப் பொறுத்த வரை விடுபட்டுப் போன ஒரு வாழ்க்கை நிகழ்வாகவே அதைப் பற்றி அவன் கனவில் கூட நினைப்பதில்லை. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் உஷாவையே நேர் விழியாக நின்று தரிசனம் காண்கின்ற உள் ஜோதியான பிரகாசத்தில் அவர்கள் முகமே அவன் கண்களில் நிழல் தட்டி மறைந்து போகும் .அவனின் தளும்பிச் சரிந்து போகாத வைரம் ஏறிய மனக் கூட்டையே திறந்து பார்த்து விட்ட அக விழிப்போடு ஒரு தினம் அக்கா ருக்மணி அவனிடம் கேட்டாள்

“நீ எத்தனை நாளைக்கு இந்தச் சாமியார் வேடத்தோடு இருப்பதாக உத்தேசம்? சொல்லடா நீ கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னால் தான் நான் பெண் பாக்க முடியும்”

“அக்கா! எனக்குக் கல்யாணம் குறித்து நிறையக் கருத்துச் சந்தேகங்கள் இருக்கு வாழ்க்கையில் எதுக்கு வீண் சுமைகள் என்று யோசனை வருகுது. அக்கா வாழ்க்கையோடு மோதி அடிபட்ட பெருஞ் சோகம் எனக்குள்ளே இருக்கு அது நெருப்பாய் மூண்டு என்னை எரிக்கிற போதெல்லாம் எனக்குள்ளே இன்னும் சாகாமல் மிஞ்சி நிக்கிற ஓரே நினைவு அதுக்கு ஓர் ஒளி முகம் ஆர் தெரியுமே? என்னாலை மறக்கவே முடியாமல் இருக்கிற உஷா முகம் தான் அது அவளின் அன்பு மட்டுமே எந்தப் பெண்ணைப் பாத்தாலும் எனக்குள்ளே ஒரு பிரவாகமாய் பெருக்கெடுத்து ஓடும். கல்யாணமென்ற விலங்கை மாட்டி ஒரு பெண்ணை நான் உங்கடை ஆசைக்கு மணக்க நேர்ந்தால் எல்லாமே சரிஞ்சு போய் விடும் அந்தத் தப்பைச் செய்திட்டு நான் வருந்த வேணுமென்று நீங்கள் நினைச்சால் நான் சொல்ல என்ன இருக்கு? நல்லாய்ச் செய்யுங்கோ”

“தம்பி நான் அப்படி நினைப்பேனா? என்ரை காலத்துக்குப் பிறகு உனக்குத் துணை வேண்டுமே. தனியாக இருந்து நீ கஷ்டப்படக் கூடாதென்பதற்காகத் தான் இதை நான் கேக்கிறன் சம்மதம் சொல்லு”

“சரியக்கா”

அவன் கல்யாணத்துக்குச் சம்மதித்து அது நடந்தேறினாலும் வாழ்க்கை என்னவோ மறை பொருளாகத் தான் இருந்தது. வந்த மனைவியோடு ஒட்டுறவாடி இயல்பாக இருப்பதென்பது அவனை பொறுத்த வரை இரண்டாம் பட்சமாகவே இருந்தது .இரவில் கூட உடல் தீண்டிச் சுகம் பெறுகிற கட்டங்கள் மிக அரிதாகவே நடந்தேறும். சலனங்களற்ற தனிமைப் போக்கில் இரவில் கூட விழித்திருந்து ஒரு சிந்தனைவாதியாய் இலட்சியவாதியாய் அவளைப் புறந்தள்ளி மறந்து விடுவதென்பது அவனைப் பொறுத்தவரை ஒரு நிஜம் விழித்துக் கொண்ட சத்திய நிகழ்வாக ஒப்பேறினாலும் உடலுக்கு இரை தேடி நிற்கிற அவளுக்கு அது ஏமாற்றத்தையே அளிக்கும். ஒளி முகம் பார்த்து நிற்கும் அவனையே இருளில் கவிழ்த்துச் சரிக்கிற வெறியோடு படுக்கையை விட்டு ஓடி வந்து அவள் விளக்கு அணைக்கும் போது எதற்கு இது என்ற நினைவு நெருப்பில் தானே கருகி ஒழிந்து போன மாதிரி ஜடப் போக்கில் அவன் அசைவுகள் இருக்கும்

அந்த அசைவில் பூரண திருப்தி கண்டு குளிர் காய்கிற அவளை எண்ணி வெறுப்புத் தோன்றுகிற போதெல்லாம் இன்னும் அதிகமாகவே உஷாவையே பற்றிக் கொண்டு வழிபாட்டுத் தவம் செய்கிற நினைப்போடு மெய்யுருகி அவன் தன்னை மறந்து ஆனந்தக் கண்ணீர் வடிப்பதை இருளில் ஸ்பரிசத்தால் உணர்ந்தறிந்து விட்டு அது பிடிபடாத மயக்கம் தலைக்கேற அவன் கன்னத்தை வருடியவாறே அவள் கேட்பாள்.

“என்ன அழுறியளே?

அதைக் கேட்டு விட்டு வேடிக்கை போல ஆனால் மனம் நொந்து அவன் கூறுவான் சிலேடையாகக் கேட்பான்

“உன்ரை அன்பை நினைச்சால் நான் வேறு என்ன செய்கிறது ?

அப்போது உணர்வு சங்கமம் நிறைவான ஒரு காரியசித்தியாய் நடந்தேறிய பிற்பாடு அவன் ஏன் இதைக் கேட்கிறான் என்று பிடிபடாமல் அவள் குழம்புவதைப் பார்த்து விட்டு அவன் கூறுவான்

”வேண்டாம் திலகா உனக்கு இது தான் அன்பு என்று நான் சொல்ல வரேலை நீ எப்படி யோசிக்கிறாயோ அப்படியே அதைத் தீர்மானித்து முடிவெடுக்கிற உரிமையும் உனக்கிருக்கு, ஆனால் என்ரை மனசிலே நீ நினைக்கிற மாதிரி இல்லை. இந்த அன்பு அதை ஒரு மனிதனிடத்தில் முழுமையான எதிலும் பங்கமுறாத தெய்வீக உணர்வோடு இனம் கண்டு என்னை இழந்து விட்ட நிலையிலே அதிலேயே கரைஞ்சு மெய்மறந்து போகிற தருணமே என்னை இன்னும் உயிர்ப்பித்துக் கொண்டிருப்பதாய் நான் நம்புறன் அதை ஆர் என்று சொல்லி உன்னைச் சங்கடப்படுத்த நான் விரும்பேலை அது எனக்குள்ளேயே மறை பொருளாய் இருந்து மறைஞ்சு போகட்டும்” என்று தீர்க்கமான குரலில் உஷாவையே மனதில் அசை போட்டு நினைவு கூர்ந்தவாறு அவன் கூறுவதைக் கேட்டு அவன் வேதமாகச் சொல்கின்ற அந்த மறை பொருள் காவியத்தின் அர்த்தம் பிடிபடாமல் அவள் உள்ளூர மனம் நிலையழிந்து குழம்பி நிற்பதே வழக்கமாகிப் போனாலும் அவன் வாய் திறந்து ஒரு வார்த்தை கூடச் சொல்லி அறியான் உயிர் வழியிலான அந்தத் தேவதையின் முகமறிந்த பெருமைகள் பற்றி அதைச் சொன்னாலும் அவளின் இருள் விழுங்கி நிற்கிற ஊனக் கண்களுக்குப் பிடிபடாத மயக்கத்தில் வாழ்க்கையெனும் கோட்டை தகர்ந்து கூடப் போகலாம். இப்படிக் கோட்டையைத் தகர்ப்பதற்கல்ல நானும் என் மனமும் என்று அவன் மிகவும் பெருந்தன்மையோடு நினைவு கூர்ந்து களை கொண்டு நிற்பதைப் பார்த்து விட்டு அவள் நம்புவாள் இப்படியொரு உயர் நிலை புருஷனை அடைய நான் கொடுத்து வைத்தவள் தான் என்று அவள் கண்கள் சிரிக்கும் போது அவனும் மனதைத் தொடாத அந்தக் காட்சி நிழல் கண்டு களை வடிந்து அவனும் சிரிப்பது போலப் படும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *