நீலா ஆகாஷ்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 11,514 
 

பாரீஸில் மூன்று வருடங்கள் கட்டிடக்கலையில் ஆர்கிடெக்சர் படித்துவிட்டு சென்னை வந்த ஆகாஷுக்கு, நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

முதலில் சென்னையிலும், கோயமுத்தூரிலும் ஏகப்பட்ட வீடுகளுக்கு ஆர்கிடெக்சராக வாய்ப்பு கிடைத்தது. அவனது வித்தியாசமான பிரெஞ்சுக் கட்டிடக் கலையில் சொக்கிப்போன பல முரட்டுப் பணக்காரர்கள் நான் நீ என போட்டிபோட்டுக்கொண்டு வாய்ப்புகள் வழங்கினர்.

ஒரு பில்டிங் கட்டப்படும் மொத்தத் தொகையில் ஐந்து பர்சன்ட் என சார்ஜ் செய்துகொண்டிருந்த ஆகாஷ் தற்போது எட்டு பர்சன்ட் என தன் ரேட்டை உயர்த்தினாலும் அவனுக்கு டிமாண்ட் குறைவில்லை.

தற்போது அவனுக்கு பெரிய பெரிய வீடுகள் தவிர, அவனது கற்பனை வளமுள்ள கட்டிடக்கலையின் சிறப்பை மெச்சி ஷாப்பிங் மால்களும், ஷாப்பிங் செண்டர்களும் அவனை நம்பி ஒப்படைக்கப் படுகின்றன.

ஆகாஷுக்கு வயது முப்பது. சிவந்த நிறத்தில் அழகாக இருப்பான். ஒரு சோபிஸ்டிகேட்டட் லுக். இன்னமும் திருமணமாகவில்லை. அவனது பெற்றோர்கள் ஊட்டியின் காஸ்ட்லி இடமான டபுள் பங்க் ரோடில் வசிக்கின்றனர். எஸ்டேட் பணத்தில் கொழிக்கும் பரம்பரை பணக்காரர்கள்.

ஆகாஷுக்கு எப்போதும் ஆர்கிடெக்சர் பற்றிய நினைப்புதான். அது சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்த்து; அதுபற்றிய புத்தகங்களையும்தான் படித்துக் கொண்டிருப்பான். ரொமான்டிக் மூடு இருந்தால் பியானோ வாசிப்பான். ஒரு சிறிய கெட்ட பழக்கமும் கிடையாது.

ஆகாஷின் ஆர்கிடெக்சர் புகழ் அதிகரிக்க அதிகரிக்க, அவனைப் புகழ்ந்து ஆர்கிடெக்சர் சம்பந்தப்பட்ட பல பத்திரிகைகள் எழுதின. சில பத்திரிகைகள் அவனை அட்டையில் பிரசுரித்து அவனது பேட்டிகளை ஆர்வமுடன் வெளியிட்டன.

அப்போதுதான் அவன் நீலாவைச் சந்தித்தான். நீலா பி.ஈ ஆர்கிடெக்சர் படித்துவிட்டு கோயமுத்தூரில் சில வீடுகளைக் கட்ட ஆரம்பித்திருந்தாள். ஆகாஷ் கோயமுத்தூர் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அவனைத் தேடி வந்து சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவனைப்பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாள்.

ஆகாஷுக்கு நீலாவைப் பார்த்தவுடனே மிகவும் பிடித்துவிட்டது. அவளின் ஆசைக்காக அவள் ஆரக்கிடெக்ட் செய்த கட்டிடங்களை அவளுடன் சென்று பார்த்தான். இருவரும் தொழில் ரீதியாக நிறைய பேசினார்கள்… பழகினார்கள். அடிக்கடி தொடர்பில் இருந்தார்கள்.

முதன்முறையாக நீலா அவனை ஒருமுறை தன் வீட்டிற்கு டின்னருக்கு அழைத்தாள். அவன் ஆர்வமுடன் சென்றான். அங்கு தன் கணவர் நரேனை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். நரேன் பி.ஈ படித்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டிருந்தான். நீலா ஏற்கனவே திருமணமானவள் என்பது தெரியவந்ததும் ஆகாஷுக்கு ஏனோ மனதில் ஒரு ஏமாற்றம் பரவியது.

எனினும் தொழில் ரீதியாக அவளின் அருகாமை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு கட்டத்தில் அவளுக்கு இவனும், இவனுக்கு அவளும் நிறைய ஆலோசனைகள் வழங்கினர்.

நீலாவின் அமைதியான அழகும், புத்திசாலித்தனமும், கஸ்டமர்களிடம் நயமாகவும், சாமர்த்தியமாக பேசும் திறனும் ஆகாஷுக்கு ரொம்பவே பிடித்துப்போக, நீலாவை தன்னுடைய தொழிலில் பார்ட்னராக சேர்த்துக்கொண்டான்.

இவர்கள் மூலமாக நரேனின் ரியல் எஸ்டேட் தொழிலும் நன்கு விருத்தியடைந்தது.

நீலா ஆகாஷ் என்கிற பெயர் ஆர்கிடெக்சர் உலகில் கொடிகட்டிப் பறந்தது.

இருவரும் தொழில் நிமித்தமாக அடிக்கடி டெல்லி, மும்பை, சிங்கப்பூர், மலேசியா என பறந்தனர். தனித் தனி அறைகளில் தங்கினர்.

அவர்களின் ஆரோக்கியமான நட்பு இரண்டு வருடங்களாகத் தொடர்ந்தது.

அன்று மாலை இருவரும் சிங்கப்பூர் லீ மெரிடியன் ஹோட்டல் காபி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது.

ஆகாஷையே சற்றுநேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த நீலா திடீரென்று, “ஏன் நீங்கள் இன்னும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை?” என்று கேட்டாள்.

“என்னுடைய முதல் மனைவி ஆர்கிடெக்சர் நீலா…அதில் ஈடுபாடுடைய ஒருத்தி எனக்கு கிடைத்தால் அவளை இரண்டாந்தாரமாக பண்ணிக்கொள்ள ஆசைதான்.”

“பி ப்ராங்க் ஆகாஷ். நாம் தொழில் ரீதியாக பார்ட்னராகவும், தவிர நல்ல நட்புடனும் பழகுகிறோம்….வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு சேர்ந்து பறக்கிறோம். ஆனால் இந்த இரண்டு வருடங்களில் நீங்கள் ஒரே ஒருமுறைகூட என்னை வேறு கண்ணோட்டத்தோடு பார்த்ததில்லை, பேசியதில்லை….அது எப்படி? நான் அழகாக இல்லையா?”

“யு வான்ட் மி டு பி ப்ராங்க்… ரைட்?”

“எஸ் ஆகாஷ்….ப்ரெட்டி மச் ப்ராங்க், இன்பாக்ட் நான்தான் இந்த டாப்பிக்கையே ஆரம்பித்தேன்…”

“சம் டைம்ஸ் வி மீட் ரைட் பீப்பிள் இன் த ராங் டைம் நீலா….நான் உன்னைப் பார்க்கும்போதே உனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. நரேன் மிகவும் அதிர்ஷடசாலி. அதன் பிறகு ஒரு நாகரீகமான இடைவெளியை நான் கடைபிடித்தே ஆக வேண்டிய கட்டாயம் எனக்கு. தொழில்ரீதியாகவும் நீ எனக்கு அவசியமானவள்; அத்தியாவசியமானவள். மற்றபடி உன்னை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் நீலா. என்னுடைய தனிமையான இரவுகளில் எத்தனையோமுறை என்னை நீ பாடாய் படுத்தியிருக்கிறாய் நீலா. ஒரு அழகிய பெண்ணின் அருகாமை மிகவும் சோதனையானது நீலா…”

நீலாவின் மொபைல் அடிக்க அந்த டாப்பிக் அத்துடன் நின்றது. அது ஆகாஷுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை மதியம். சென்னையில் நீலாவின் வீடு….

ஆகாஷ் பற்றிப் பெருமையாக நீலா நரேனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“எப்பப் பார்த்தாலும் ஆகாஷ், ஆகாஷ் அவனுடைய புகழ்தான் உன்னிடம் கொடி கட்டிப் பறக்கிறது…. நீ பேசாம அவனையே கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கலாம்…”

“ஆர் யு சீரியஸ் நரேன்?”

“எஸ் ஒய் நாட்? இப்பவும் ஒண்னும் கெட்டுப்போகல…ஹி இஸ் அ ப்ரெட்டி டீசன்ட் கை…..அண்ட் ஆல்சோ யுவர் சேம் புரோபஷன்.”

“தேங்க்ஸ் நரேன்….யு ஆர் அ டீசண்ட் பர்சன் வித் பிராட் அவுட்லுக்.”

“நீ ஆகாஷிடம் பேசிப்பாரு…. உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம் நீல். அவன் சம்மதித்தால் நானே முன்னின்று உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறேன். ஐ வில் ட்ரைவ் திஸ் மாரேஜ்.”

ஒருவாரம் நீலா தீவிரமாக யோசித்தாள்….

ஆகாஷின் அருகாமையும், அன்பும், தொழில் சம்பந்தப்பட்ட நெருக்கமும் அவளை அவன்பால் மிகவும் ஈர்த்தன. அவன் தன் வாழ்க்கைக்கு மிக முக்கியமாகப் பட்டது.

ஆனால் நரேனின் நிலை?

“இந்த மனசு உனக்கு எப்படி சாத்தியம் நரேன்?”

“உன்மேல் என்னுடைய காதல் அன்கண்டிஷனல் நீலா….உனக்கு பிடிக்கும் எல்லாமே எனக்கும் பிடிக்கும்….. இது ஒருவிதமான புரிதலுடன் கூடிய விட்டுக்கொடுத்தல். அன்பு வெளிப்பாட்டின் இன்னொரு புறம்…”

“உனக்கு பெரிய மனசு இருந்தாலும், இந்தச் சமூகம் இதை ஏற்றுக்கொள்ளது நரேன்.”

“நீலா வி ஆர் ஸ்டிங்கிங் ரிச்….ரிச் பீப்பிள் சமூகத்தைப்பற்றி கவலைப் படவேண்டாம். தவிர, இது நீ, நான், ஆகாஷ் சம்பந்தப்பட்ட பர்சனல் மேட்டர். இந்தியச் சமூகத்தில் பெரும்பாலோர் வம்பு பேசுபவர்கள்….மற்றவர்கள் மரமண்டைகள். மரமண்டைகளுக்கு இந்த உறவின் அவசியம் புரியாது. அதனால் நீ இதைப்பற்றி கவலைப்படாதே. ஆகாஷிடம் பேசிப்பாரு.”

“ஓ காட்….தேங்க்யூ நரேன்.”

நரேனை கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு தன் பென்ஸ் காரில் ஏறி ஆகாஷைப் பார்க்க விரைந்தாள்.

ஆகாஷ் வீட்டில் பியானோ வாசித்துக் கொண்டிருந்தான்.

நீலாவைப் பார்த்ததும் வாசிப்பதை நிறுத்தினான்.

“ஆகாஷ் நீங்க சரின்னா நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். இனி இருபத்திநாலுமணி நேரமும் நாம ஒண்ணா இருக்கலாம். ஆர்க்கிடெக்ட் பற்றி நிறைய விவாதிக்கலாம்….நரேன் நம்ம கல்யாணத்துக்கு முழு சம்மதம் சொல்லிட்டாரு.”

ஆகாஷ் அழகாக சிரித்தபடி தன் சம்மதத்தையும், சந்தோஷத்தையும் வெளிப்படுத்தும் விதமாக பியானோவில் தன் விரல்களை பெரிதாக இசைத்தான்.

பிறகு பியானோவை நிறுத்திவிட்டு எழுந்துநின்று, நீலாவை அன்புடன் அணைத்துக்கொண்டான்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “நீலா ஆகாஷ்

  1. கலாச்சார சீரழிவு கதையாக கொண்டுபோய் முடித்து விட்டீர்கள்???

    அப்போ கண்ணன் கண்ணனே………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *