நித்யா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 13,290 
 

கடற்கரையில் நித்யாவின் பெயரை எழுதி,எழுதி அழித்துக் கொண்டிருந்தேன். நல்லக்
காதல் கள்ளக் காதல் என நிரம்பி வழிந்தது. சில ஜோடிகள் அமர இடமில்லாமல்
தேடிக்கொண்டிருந்தனர். கடலலைகள் நூற்றாண்டுகளின் கடமையை சிறு சலசலப்போடு
செய்துக் கொண்டிருந்தது. கடலின் நடுவே ஒழி பிரகாசமாக வீசிக் கொண்டிருந்தது.

நித்யா, என் வாழ்வை அர்த்தப்படுத்தியவள். என் வாழ்க்கை எந்த காலக்
கட்டத்திலும் நி.மு நி.பி என்றே பிரித்துக் கூறுவேன். என் நரம்பிலும்
ரத்தத்திலும் அவள் பெயர் கலந்துள்ளது. அவள் தன் சித்தி வேணியின் வீட்டில் தான்
இவள் தங்கியிருந்தாள். வேணிக்கு இரண்டு மகள்கள் அதில் சங்கீதா மூத்தவள்
காயத்ரி இளையவள். சங்கீதா ஒரு கல்லூரியில் E.E.E படித்துக் கொண்டிருந்தாள்.
காயத்ரி பத்தாம் வகுப்பு. நித்யாவின் சம்பாத்தியம் இவர்களுடைய படிப்பிற்கு
மிகவும் உதவியாய் இருந்தது. இதனாலேயே வேணிக்கு நித்யாவை ரொம்ப பிடிக்கும்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நித்யாவுக்கே முதலிடம் கொடுப்பாள். இந்த
முதலிடம் காரணமாக சங்கீதாவுக்கும் நித்யாவுக்கும் அடிக்கடி சண்டை வரும்.
சங்கீதா எப்போதும் அவளோடு பொறாமை கொண்டே காணப்படுவாள். சாப்பாட்டில் வைக்கும்
பொரியலுக்கு கூட சண்டை வரும். இவர்களிருவருக்கும் நேரெதிர் மனம் கொண்டவள்
காயத்ரி தாமரை இலை தண்ணீரைப் போலவே எல்லா நேரங்களிலும் இருப்பாள். யாரோடும்
ஒத்தே போக மாட்டாள். அப்படியே அவளுடைய அப்பாவை போல்.

நித்யாவின் பெற்றோர்கள் கருத்து வேறுபாடுகளின் காரணமாக பிரிந்து
வாழ்கிறார்கள். நித்யாவுக்கு கூட பிறந்த தம்பி ஒருவன் உண்டு. அவன் தன
தந்தையோடு வாழ்ந்து வருகிறான். நித்யாவும் நானும் ஒரு கார்மேண்டில் டைலராக
வேலை செய்து வந்தோம். அங்கு கூலியின் அடிப்படையில் தான் எல்லோருக்கும் வேலை.
ஒரு ஷர்ட் தைத்தால் பதினைந்து ருபாய் கிடைக்கும் ஒரு நாளைக்கு இருபது ஷர்ட் என
கணக்கு போட்டு வேலை செய்வோம். ஒவ்வொரு இரண்டு மிஷினுக்கும் ஒரு உதவி ஆள்
உண்டு. நித்யா எனக்கும் பிரகாஷுக்கும் உதவியாளராக இருந்தாள். பிரகாஷ்
எப்போதுமே ஆட்டமும் கொண்டாட்டமுமாகவே இருப்பவன். சிறிது ஓய்வு கிடைத்தாலும்
ஏதாவது படத்திற்கு சென்றுவிடுவான். தனியாக அல்ல; யாராவது ஒரு பெண்ணை துணைக்கு
அழைத்துக் கொள்வான். எங்கள் நிறுவனத்தில் அவனுடன் படத்திற்கு செல்வதற்காகவே
சில பெண்கள் இருந்தார்கள். ஆனால், நானோ அவனுக்கு நேர்மாறானவன். சில
மணிநேரங்களை கூட வீணடிக்க பிடிக்காது. ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க
ஆரம்பித்து விடுவேன். எப்போதும் இரண்டு புத்தகங்கள் என் கையில் இருந்துகொண்டே
இருக்கும். உலக தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை தேடித் தேடி படிப்பேன். அதனாலோ
என்னவோ அவர்களை படித்துவிட்டு அமைதியாய் இருக்க முடியாது. அவர்களுடைய
பெருமைகளை பற்றி ஏதாவது பேசிக் கொண்டிருப்பேன். யாரும் நான் பேசுவதை காது
கொடுத்து கூட கேட்க மாட்டார்கள். எதோ வேற்று கிரக ஜீவராசியை பார்ப்பது போல
பார்ப்பார்கள். நித்யா, அந்த விஷியத்தில் வித்தியாசமானவள் நான் எதை பேசினாலும்
விரும்பி கேட்பாள். இவளுடைய கேட்கும் ஆர்வத்திலிருந்து தான் எனக்கு எழுதும்
ஆர்வம் அதிகரித்தது.

பெரும்பாலும் நித்யா யாரிடமும் உதவி கேட்க மாட்டாள். தன்னால் முடிந்த மட்டும்
எல்லா பிரச்சனைகளையும் அவளே சமாளிப்பாள். அவளால் முடியாத பட்சத்திற்கு
மற்றவர்களை நாடுவாள். முதல் முறையாக என்னிடம் ஒரு உதவியை கேட்டாள். ஒரு முறை
அவளுடைய பெற்றோரை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அவளுடைய அம்மா தனியாக
கஷ்டப்படுவதாகவும் அவளுடைய தம்பி அம்மாவோடு இருந்தால் நன்றாக இருக்கும். நீ
எனக்காக என் தம்பிகிட்ட பேசி அவனை அம்மாகிட்ட விட்டுட்டு வருகிறாயா? என
கேட்டாள். சரி, என ஒப்புக் கொண்டு ஒரு ஞாயிற்று கிழமை அவனை பார்க்க சென்றேன்.

வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தான். வந்த என்னை ‘வாங்க’ என வரவேற்றான். கோழி
எடுத்து குழம்பு வைத்திருந்தான். இருவரும் சாப்பிட்டுவிட்டு தென்னந்
தோப்பிற்கு சென்றோம். அங்கே, மரத்திலிருந்து கள் இறக்கி கொண்டிருந்தார்கள்.
எதார்த்தமாக கேட்பதுபோல் அவனிடம் கேட்டேன்.

தம்பீ, இங்க நீயே சமைச்சி கஷ்டப்படுவதற்கு உன் அம்மா கூட பொய் இருந்தால் அவங்க
இந்த வேலையெல்லாம் பாத்துக்குவாங்கில்ல. அதற்கு அவன் கூறினான்.

நான் முதலில் அம்மா கூட தான் இருந்தேன். அம்மா எப்போது பார்த்தாலும் சண்டை
போட்டுகிட்டே இருக்கும். ஒரு தடவை துணி துவைக்கும் பொது பேன்ட் பாக்கெட்ல
சிகரெட் இருந்துருக்கு. அதுக்கு ஆரம்பிச்சது பாரு சண்ட… நீயும் உங்கப்பன
மாதிரியே ஆக போறியா? நான் பெத்ததும் சரியில்ல..! அதை பெத்ததும் சரியில்ல.

என்னால் அப்போது நகைக்காமல் இருக்க முடியவில்லை. மேலும் தொடர்ந்தான்.

இதெல்லாம் சும்மா சாதாரன விஷயம் ஃப்ரண்ட் ஒருத்தன் பைக் வாங்குனதுக்கு ட்ரீட்
வெச்சான். செம சரக்கு அன்னிக்கு. புல்லா அடிச்சு மட்டையாகிட்டேன். அதுக்கும்
இதே மாதிரிதான் சண்ட போடா ஆரம்பிச்சிருச்சு. எப்போ பார்த்தாலும் அதையே தான்
பேசிகிட்டு இருக்கும். வீட்டுக்கு யாராவது வந்துட்டா போதும் அவங்ககிட்டயும்
இதையே தான் பேசிகிட்டு இருக்கும். ஊருக்குள்ள நான் மட்டுமா தண்ணி அடிக்குறேன்.
எட்டாவது படிக்குற பையனெல்லாம் பீர் அடிக்குறான். நான் என்ன அவ்வளவு பெரிய
தப்பா பண்ணிட்டேன். இங்க அந்த மாதிரி தொல்லை எதுவும் இல்லை. எப்போவாவது அப்பா
சரக்கடிச்சுட்டு கடை முன்னாடி கிடப்பார். அவரை பொய் தூக்கிட்டு வரணும்.
இனிமேல் அந்த பிரச்சனையும் வராதுன்னு நினைக்கிறேன். சரக்கடிக்கறதா இருந்தா
ஒழுங்கா வீட்ல வாங்கி அடிசுக்கொன்னு கறாரா சொல்லிட்டேன். இது போன்ற காரங்களை
கூறி அம்மாவின் வீட்டிற்கு வர மறுத்துவிட்டான். இவன் கூறிய மறுப்புக் காரணத்தை
நித்யாவிடம் அப்படியே கூறினேன்.

அவன்கிட்ட பேசி மனசை மாத்தி அம்மாகிட்ட விட்டுட்டு வான்னு சொன்னதுக்கு நீ என்ன
செஞ்சுட்டு வந்திருக்கே ? நீ எல்லோரையும் போல கிடையாது நிறைய புத்தகம்
படிக்குற எல்லோருக்கு நல்லது, கேட்டது பற்றி எடுத்து சொல்றேன்னு தானே உன்னை
அனுப்பினேன். அனால், அவன்கூட சேர்ந்து நீயும் குடிச்சிட்டு வந்திருக்க,
இனிமேல் என்கிட்ட பேசாதே. நித்யா முதல் முறையாக என்னிடம் கோபித்துக் கொண்டாள்.
அன்று நான் கள்ளு மட்டும் தான் குடித்தேன். அவளுக்கு எப்படி தெரிந்ததென்று
இந்தும் எனக்கு புரியவில்லை.

ஊடல்! அந்த வார்த்தையின் முழு அர்த்தத்தையும் அனுபவித்த நாட்கள் அது.
முரட்டுத் தனமான புத்தகங்களை படித்து இறுகி போயிருந்த என் இதயம் கரைய துவங்கிய
காலம் அது. நான் நானாக அல்லாமல் அவளின் கடைவிழி பார்வைக்கும், இதழோர
புன்னகைக்கும் ஏங்கி தவித்த தருணங்கள் அது. இருவரும் ஒரே நிறுவனத்தில்
பணிபுரிவதால் இந்த ஊடலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போனது. வம்பிற்கு
அவளிடம் பேசுவேன், வீம்பிற்கு என்னை விட்டு விலகிச் செல்வாள். நித்யாவின் இந்த
விசித்திர நடவடிக்கை என்னை குழம்பச் செய்தது. வெகு நாட்களாகவே என்னிடம்
பேசுவதை தவிர்த்து வந்தாள். அவளுடைய கோபம் இவ்வளவு நாட்களாய் தாக்கு
பிடிக்காது அதிக பட்சம் இரண்டு மணிநேரம் தான் பேசாமல் இருப்பாள். நான் என்ன
அவ்வளவு பெரிய துரோகமா செய்து விட்டேன் கள்ளு குடிக்கறது தப்பா?

இந்த ஊடலின் காரணமாக மனதில் ஏற்பட்ட மாற்றத்தை அவளிடம் விளக்கிட ஒரு கடிதம்
எழுதினேன். ஒரு ஆதங்க மனநிலையில் எழுத ஆரம்பித்த அந்த கடிதம் எழுத,எழுத காதல்
கடிதமாக மாறியிருந்தது. கடிதத்தை எழுதியவுடன் மீள்வாசிப்பு செய்த பிறகுதான்
எனக்கே என் காதல் விளங்கியது. நித்யாவிற்கு அடிக்கடி காதல் கடிதம் வரும்.
எல்லா கடிதங்களையும் வாங்கி வைத்துக் கொள்வாள் விபரீதமாக ஏதும் செய்து
விடமாட்டாள். கடிதம் கொடுத்தவர்களை எப்படியாவது மூளைச் சலவை செய்து அவர்கள்
வாயாலேயே தோழி என்றோ சகோதரி என்றோ அழைக்க வைத்துவிடுவாள். அது போல எனக்கு
நடந்து விடாமலிருக்க ஒரு நல்ல தருணத்தில் என் காதலை வெளிப்படுத்த
காத்திருந்தேன்.

இன்னும் சில நிமிடங்களில் நித்யா வந்து விடுவாள். அவளிடம் என் காதலை கூறிவிட
போகிறேன். என் காதலை தாங்கிய கடிதம் சட்டை பையில் பாதுகாப்பாக இருந்தது. அதை
தொட்டுப் பார்த்துக் கொண்டேன். கடலின் நடுவே வீசிக்கொண்டிருந்த ஒளி கரையத்
துவங்கியது.

ரொம்ப நேரமா காத்திருக்கியா? குரல் கேட்டு தலை நிமிர்ந்தேன் நித்யா நின்று
கொண்டிருந்தாள்.

அமாம், நான் வந்து அரை மணிநேரம் ஆச்சு. நித்யா என் அருகே மணலில் அமர்ந்தாள்.
மெளனமாக அலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். காற்றில் அவள் கூந்தல்
கலந்து கொண்டிருந்தது. சில நிமிட மௌனத்திற்கு பிறகு அவளை பார்த்து கேட்டேன்.

நித்யா, நீ ஏன் அப்படி செய்தாய் ?

பார்க்கும் போதெல்லாம் இதே கேள்வியை ஏன் கேட்குற. அதை செஞ்ச எனக்கே சலிச்சு
போச்சு. நடந்ததை எல்லாம் இப்ப நினைச்சு பார்த்தால் வெட்கமா தான் இருக்கு.
அதுக்காக, நடந்ததையே நினைச்சுகிட்டு இருந்தா உன்னை மாதிரி தான் குழப்பத்தோட
சுத்திகிட்டு இருக்கணும். லேசாக புன்னகைத்தாள் அதில் கலந்திருந்தது கேலியா
இல்லை ஏக்கமா என தெரியவில்லை.

நித்யா, உன்கிட்ட ஒரு விசியம் சொல்லணும். இப்படி ஒரு சூழ்நிலையில சொல்லுவேன்னு
கற்பனை கூட செஞ்சு பார்க்கவில்லை.

என்னடா சொல்லு… ஆச்சர்யமாக என்னை நோக்கினாள்.

நான் உன்னை காதலிக்கிறேன். நான் கள்ளு குடிச்சதுக்கு கோவப்பட்டு பேசாம
இருந்தியே அந்த சமயத்திலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். அனால், உன்கிட்ட இதை
பற்றி பேசுறதுக்கு முன்னால என்னென்னமோ நடந்துருச்சு. எல்லாம் விதி. எனக்கு
தொண்டையில் எதோ செய்தது. வார்த்தைகள் தடுமாறியது. எந்த ஒரு சலனமுமின்றி அவள்
அலைகளையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் சில நிமிடங்கள் மௌனம்
தொடர்ந்தது.

இங்க பாரு நரேன், நான் முன்பு மாதிரி சோகமாக இருப்பதோ மத்தவங்களுக்கு
புத்திமதி சொல்றதோ கிடையாது. நீ ஏன் சூன்யம் புடிச்ச மாதிரி இருக்கேன்னு
எனக்கு ஒரு குழப்பம் இருந்தது. இப்பதான் எல்லாம் புரியுது. என்னை உன்னுடய
காதலியாக நினைத்தால் உன்னால நிம்மதியா இருக்க முடியாது. என்னை உன் கூட வேலை
செய்த ஒரு சராசரி பொண்ணாவே நினைச்சுக்கோ அப்பத்தான் நான் இறந்து போன சோகத்துல
இருந்து உன்னால மீண்டுவர முடியும்.

சரி, நான் வந்து ரொம்ப நேரமாச்சு நான் கிளம்புறேன். உடம்ப பாத்துக்கோ.

சரியோ தப்போ எந்த முடிவாக இருந்தாலும் சீக்கிரமா எடு. என்ன மாதிரி வாழ்க்கையை
கொட்ட விட்டுட்டு இருக்காதே. அடுத்த வருஷம் இதே நேரத்துக்கு வந்திடு.

bye… கூறிவிட்டு, கடலை நோக்கி நடந்தாள். கரையை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த
அலைகளின் மீதேறி கடலில் கலந்தாள்.

நான் எழுத்து பின் புரத்திலிருந்த மண்ணை தட்டி விட்டு வீட்டிற்கு கிளம்பினேன்.
நித்யா இறந்து இதோடு இரண்டு வருடங்களாகிறது. அவள் தற்கொலை செய்துகொண்டாள்.
நித்யா கடைசிவரை என்னிடம் பேசாமலேயே இறந்துவிட்டாள். அவள் இறந்த சில
மாதங்களுக்கு எனக்கு பிரம்மை பிடித்தது போலவே இருந்தது. எதனால் இறந்தால் என
யோசித்து யோசித்து எனக்கு மூளையே கலங்கிவிட்டது. ஒரு கட்டத்தில் அவள் இறந்ததன்
காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன். அவள், என்னோடு வேலை செய்த ஒருவனை
காதலித்திருக்கிறாள். அவன், கடற்கரை, பூங்கா, தியேட்டர் என தன் காதலை வெகு
இயல்பாக நிரூபித்துள்ளான். இவளும் அவன் மீது பைத்தியமாக இருந்திருக்கிறாள்.
அந்த அன்பிற்குரிய காதலனுக்கு நித்யா என்னோடு பழகுவது பிடிக்கவில்லை. அதனால்
தான் ஒரு பைசாவிற்கும் பெறாத காரணத்தை கொண்டு என்னிடம் பேசாமல்
இருந்திருக்கிறாள். அவன் எல்லா பெண்களையும் போல பயன்படுத்தி விட்டு வீசுவதை
போல அவளையும் வீசிவிட்டான். நித்யாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளை
புடவையும் மின்விசிறியும் ஏற்றுக்கொண்டது. நித்யாவை ஏமாற்றிய அந்த புண்ணியவான்
வேறு யாரும் இல்லை. எங்கள் நிறுவனத்தில் ப்ளே பாய் பெயர் வாங்கியவன். அங்கே,
அவனோடு ஊர் சுற்றுவதற்கு எப்போதும் சில பெண்கள் இருப்பார்கள் அதில் நித்யாவும்
ஒருத்தியாக இருப்பாள் என சத்தியமாக எதிர்ப் பார்க்கவில்லை. நித்யாவின் இயல்பை
கண்டு அவனால் அவளிடம் நெருங்க முடியாது என நினைத்திருந்தேன். இப்போது
புரிகிறது அவளிடம் இருந்தது இயல்பு இல்லை இயலாமை.

தற்சமயத்தில் தான் அவனுக்கு திருமணம் நடந்து. அவன் மனைவியை பார்க்கும்
போதெல்லாம் எனக்கு நித்யாவின் நினைவே வரும் இன்னும் அவனோடு பழகி வந்தால்
தேவையில்லாத குழப்பங்கள் நேரிடும். அதனால், நித்யாவின் கள்ளுக்குடி கோபத்தை
போல் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்காக சண்டை போட்டுக்கொண்டு அவனுடன் பழகுவதை
நிறுத்திவிட்டேன். நித்யா இறந்த இந்த இரண்டு வருடங்களில் எங்கள் நட்பு
வட்டத்தில் எல்லாமே மாறிவிட்டது. எல்லோரும் அவரவர் வாழ்கையை வாழ
ஆரம்பித்துவிட்டார்கள். நித்யா தான் எனது வாழ்க்கையாக இருந்ததால் என்ன
செய்வதென்று தெரியாமல் ஏது செய்வதென்றும் புரியாமல் உலாவி வருகிறேன்.

– 2 செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *