நாம் நாமாகவே இருப்போம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 17,129 
 

என் பெயர் திவ்யா. நான் சாதாரண திவ்யா இல்லை. அழகி திவ்யா.

பார்ப்பதற்கு செக்கச் செவேலென்று வளப்பமாக இருப்பேன்.

என்னுடைய எண்ணங்கள் நிஜமான சுதந்திரமானவை. நான் எனக்காக மட்டுமே வாழ்கிறேன். எந்தச் சமூக மதிப்பீட்டு அளவைகளிலும் எனக்கு மரியாதை கிடையாது. எனக்கு கவலைகள் இல்லை. ஆசைகளின் எதிர்பார்ப்பு இல்லை. மனதில் ஒன்றும், வெளியில் ஒன்றுமாய் என்கிற பொய்மை, நான் அறியாத இயல். மனதில் பட்டதை பேசுவேன், செய்வேன்.

எனக்கு வயது இருபத்திரண்டு. இருபது வயது வரையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அம்மா, அப்பாவுடன் இருந்தேன். அங்கு தமிழ் எழுத, படிக்க நன்றாகக் கற்றுக்கொண்டேன். ஹியூமன் சைக்காலஜி படித்தேன். பிறகு நான் வயசுப் பையங்களுடன் ரொம்ப சுத்துவதாகச் சொல்லி, என்னை காபந்து பண்ணுவதாக நினைத்து, பெங்களூரின் சதாசிவநகரில் இருக்கும் என் தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

இன்னும் எனக்கு திருமணமாகவில்லை. எனினும் பாலுறவு அனுபவிக்கிற கிளர்ச்சி என் உடற் திசுக்களில் பொங்கும்போது, அந்தக் கிளர்ச்சிக்கு உடன்பட்டு அதை நிறைவேற்றிக் கொள்வேன். இவ்விஷயத்தில் கற்பு என்கிற மாயை எனக்கு கிடையாது. இது தப்பு அது ரைட்டு என்கிற பம்மாத்து என்னிடம் எடுபடாது.

எனக்கு பிடித்த விஷயம் என் பெட்ரூமில் சோனி 55 இஞ்ச் டிவியில் எம்.டிவி பீட்ஸ் ஹெச்டி சேனலைப் போட்டு இடுப்பை ஒடித்து ஆடுவதுதான். தவிர அவ்வப்போது தாத்தாவுடன் பென்ஸ்காரில் ஏறி, செயின்ட்மார்க்ஸ் ரோடில் இருக்கும் பெளரிங் கிளப் செல்வது. அங்கு தாத்தா பிலியர்ட்ஸ் விளையாடும்போது, நான் நிறைய ட்ராட்பீர் குடிப்பேன். வீட்டுக்கு வந்து மொட்டைமாடியில் தாத்தாவுக்கு தெரியாமல் இண்டியாகிங்ஸ் புகைப்பேன்.

இப்படி இருந்தபோதுதான் என்னுடைய அத்தைமகன் பட்டாபிராமன் கும்பகோணத்திலிருந்து பெங்களூருக்கு வேலை கிடைத்து வந்தான். அவன் பிஈ கம்ப்யூட்டர்சயின்ஸ். ஒரு ஐடி கம்பெனியில் சேர்ந்தான். தாத்தா பாட்டிக்கு, மகனின் மகள் பேத்தியும்; பெண் வயித்துப் பேரனும் அவர்களுடன் வந்து இருப்பதில் ஏக சந்தோஷம்.

மாடியில் அவனுக்கு ஒரு பெரிய அறை ஒதுக்கப்பட்டது. டிரைவருடன் ஒருகார் அலாட் செய்யப்பட்டது. பட்டாபி ரொம்ப மடியாக இருந்தான். சந்தியாவந்தனம் செய்வான். பரிசேஷனம் செய்யாமல் ஒரு பருக்கையைக்கூட வாயில் போடமாட்டான். வெள்ளிக்கிழமைகளில் ஷேவ் செய்தாலோ, தலைமயிரை வெட்டிக்கொண்டாலோ மஹாபாவம் என்பான். நானோ மாதத்தின் ‘அந்த’ நாட்களிலும் சமையல் அறையில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரை, ஒரு சொட்டு உள்ளங்கையில் விட்டு, உப்பு போதுமா என்று நக்கிப் பார்க்கிறவள்.

பிரா அணியாமல் காற்றோட்டமாக வீட்டில் அடிக்கடி முண்டா பனியன், ஷாட்ஸ் அணியும் என்னுடைய தோற்றத்தைப் பார்த்து பட்டாபி கலவரமடைவான். நான் நேரில் வந்தால் தலையைக் குனிவான். என்னுடைய இந்தச் சுதந்திரத் தன்மையை நிச்சலனமாக எதிர்நோக்க முடியாத பட்டாபியின் இயலாமையே, என்னைப் பொறுத்தவரையில் ஓர் ஒழுங்கீனம். கன்வென்ஷனில் வாழ்க்கை பேதலிக்கிற குற்ற மனப்பான்மை அவனுடையது.

சுதந்திரமான பெண்களின் முன்னிலையில் ஆண் வர்க்கம் உணர்கிற கோழைத்தனம் இது. நவீன இளைஞர்களே மீளமுடியாத இந்தத் தன்மைகளிலிருந்து, கும்பகோணத்து ஆச்சார வார்ப்பான இந்த பட்டாபி மட்டும் எப்படி மீள முடியும்?

அன்று வீட்டின் முகவரிக்கு, பட்டாபிக்கு ஒரு கடிதம் வந்தது. அனுப்புனர் அலமேலு என்று இருந்தது. நான் கடிதத்தை பிரித்து படித்துப் பார்த்தேன். அனைத்தும் காதல் வரிகள். எனக்கு ஏராளமான ஆச்சரியம். பட்டாபிக்கு கும்பகோணத்தில் ஒரு காதலியா?

எனக்கு அவன்மீது பயங்கர மரியாதை ஏற்பட்டது. அவனையே நினைத்து அர்ச்சனை செய்ய ஒரு பூ காத்திருக்கிறது. அந்தப் பூ என்னை மாதிரி குல்மொஹராக இல்லாமல் இருக்கலாம். அது ஒரு குக்கிராமத்து அரளிப் பூவாகவே இருக்கலாம். ஸோ வாட்? பூக்கள் பூக்களே..!

அலமேலு எழுதிய கடிதத்தை பலதடவை படித்தேன். மிகவும் ஆனந்தப்பட்டேன். நிறைய சந்தோஷப்பட்டேன். இது என் இயல்பு.

ஆண்-பெண் இடையே, தயக்க பாவனைகள் அற்ற சுதந்திரமான சினேகப் பரிவர்த்தனைகள் நிகழ்வதில் ஒரு கருணைமிக்க பரிவு என்னுள் எப்போதும் வியாபித்துக் கொண்டிருக்கும்.

அன்று மாலை பட்டாபி வீட்டிற்கு வந்ததும் நான் அவனை புதிதாகப் பார்த்தேன். அம்மாஞ்சியாக இருப்பினும், அவன் நல்ல அழகுதான். அவனை கட்டிப்பிடித்து வாழ்த்தி அலமேலுவின் கடிதத்தை கொடுத்தேன். அலமேலு எப்படி இருப்பாள்? என்ன செய்கிறாள்? என்றெல்லாம் கேட்டேன். பாட்டி, “என்னிடம் சொல்லுடா, அவளையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்கிறேன்” என்று கல்யாணப் பேச்சையே ஆரம்பித்து விட்டாள். “நேரம் வரும்போது கண்டிப்பாக சொல்கிறேன் பாட்டி, இப்போது அவசரமில்லை” என்று அடக்கமாகப் பதில் சொல்லிவிட்டான்.

அதன் பிறகு அந்த அலமேலு அடிக்கடி கடிதம் எழுதினாள். நானும் அவைகளை படித்தேன். அவர்கள் காதலுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று பட்டாபியிடம் உறுதியளித்தேன்.

இவனை நினைத்து நினைத்து உருகும் ஒரு பெண் விஷயத்தில், அலட்டிக்கொள்ளாத, அமைதியான அவன் பண்பு மீது எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. பெண் என்றதும் ஜொள் விடவில்லை என் அத்தை மகன். அவன் நிதானமானவன். ஒழுக்கசீலன்.

தீபாவளி விரைவில் வருகிறது….அப்போதுதான் பட்டாபி கும்பகோணம் சென்று அலமேலுவை பார்ப்பானாம். ஊருக்குச் செல்வதற்குமுன், அவனுடைய அழுக்கான ஷர்ட், பேண்ட்களை எடுத்துச்செல்ல லாண்டரிகாரனை ஞாயிறு வரச்சொன்னான். ஆனால் அவன் திங்கள் அன்று காலை பத்து மணிக்குதான் வந்தான். பட்டாபி ஆபீஸ் சென்றிருந்தான். எனினும், நான் அவனுடைய துணிகளை எடுத்து லாண்டரிகாரனிடம் கொடுத்தேன்.

துணிகளை செக் செய்தபோது, ஏதோ ஒரு பேன்ட்டின் பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்றை லாண்டரிக்காரன் எடுத்து என்னிடம் கொடுத்தான்.

அதன் உறையில் அலமேலுவின் அழகிய கையெழுத்து. ‘ஓஹோ, லெட்டரை வீட்டிற்கு எழுதினால், நான் பிரித்து படித்து விடுகிறேன் என்பதற்காக அவனுடைய அலுவலக முகவரிக்கு எழுதி இருக்கிறாள்….சரியான கள்ளி.’

உறையில் இருந்த கடிதத்தை உருவி எடுத்துப் படித்தேன்.

மச்சி, உன் மாமா பெண் திவ்யா இப்ப எப்டி இருக்கா? இப்போது அவள் உனக்கு மிகவும் மரியாதைகாட்டி உன்னை ஒரு பெரிய மனிதன்போல் நடத்துவதாகச் சொன்னாய். எல்லாம் உன் திட்டத்தின் வெற்றிதான். அலமேலு என்கிற பெயரில் உனக்கு ஒரு காதலி இருப்பதாகவும், அவள் உன்னையே நினைத்து உருகுவதாகவும், பக்கம் பக்கமாக நான் எழுதிய கடிதங்கள்தான், உனக்கும் ஒருத்தி இருக்கிறாள் என்று நினைத்து ஏமாந்து, உன் மாமாவின் பெண் உன்னை ஒரு ஆண்மகனாக மதித்து நடத்துகிறாள் என்பது எனக்கும புரிகிறது. மற்றவை நீ இங்கு தீபாவளிக்கு நேரில் வரும்போது ….நண்பன் கார்த்திக்.

பி.கு.: மச்சி இன்னும் வேலை கிடைக்கல….ஒரேவறட்சி. பாலன்ஸ் இல்ல. ஒரு இருநூறு ரூபாய்க்கு உடனே சார்ஜ் போடு.

படித்ததும் நான் நிலை குலைந்தேன். ஏமாற்றுக்காரன்…அத்தனையும் பொய்… வஞ்சகம், கேவலமான மோசடி. சுக்கலாக அந்தக் கடிதத்தை கிழித்து எறிந்தேன். பட்டாபியின் இந்தக் கபட நாடகத்தை பகிங்கரப்படுத்தி, அவனை அவமானப்படுத்த நான் துடித்தேன்.

நான் ஏமாற்றப்பட்ட அவமானம் என்னை வதைத்தது. மதியம் சாப்பிடாமல் படுக்கையில் புரண்டேன். நான் சைக்காலஜி படித்தவள். நிறைய நிதானமாக யோசித்தேன். சட்டென்று எனக்குள் புதிய சிந்தனைகள்…. பட்டாபி ஏன் இந்த நாடகம் ஆடினான்? உண்மை புரிந்து மனம் கனிந்தது. அவனின் நிஜமனம் தெரிந்தது.

பரபரவென படுக்கையில் இருந்து எழுந்து, ஒரு பெரிய வெள்ளைத்தாளை எடுத்து பட்டாபிக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

என் பைத்தியக்காரப் பட்டாபி, உன்னை உனக்குத் தெரியவில்லையா? உன் மனதின் எல்லாப் பரிமாணங்களையும் உன்னால் ஊன்றிப் பார்க்க முடியவில்லையா? பார்க்கமுடிய வேண்டும் பட்டாபி…

அலமேலு என்று ஒரு காதலி உனக்கு இருக்கிறாள் என்கிற பொய்யை நீ என்னிடம் ஸ்தாபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னிடம் ஏன் இந்தப் பொய் நாடகம்? நான் கற்புகெட்ட பெண். இந்த ஒழுக்கங்கெட்ட பெண்ணின் அங்கீகாரம் உனக்கு ஏன்?

இதற்கான பதிலை இப்போது நான் சொல்கிறேன் பட்டாபி. என்னை நீ அமோகமாக அங்கீகரித்து வைத்திருக்கிறாய். என்னால் நீ மிகவும் கவரப் பட்டிருக்கிறாய். என் மனதில், உன்னைப்பற்றிய ஒரு இமேஜைப் பதிக்க காத்திருக்கிறாய். என்னை நினைத்து நினைத்து உனக்குள்ளேயே ஓர் உணர்வுச் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். அந்த உணர்வுச் சுகத்தின் உருவகம்தான் அலமேலு…

அப்படி ஒருத்தி உனக்காக உருகி உருகிக் காத்திருக்கிறாள் என்ற தோற்றத்தைக் காட்டி, என்னை ஆச்சரியப்படுத்தி, அந்தப் பிரமிப்பில் உன்பால் என்னை காதல் வசப்படுத்த நீ நடத்தியதுதான் இந்த அலமேலு நாடகம். சூட்சுமமான துயர அவலம் மிக்க நாடகம். இந்த நாடகத்தின் மூலக்கருத்து உனக்கே தெரியாமல் இருக்கலாம். இப்போது புரிந்துகொள் –

நான் உனக்குத் தேவை. இந்தத் தேவை காதலாகவும் இருக்கலாம் அல்லது உடல் இச்சையாகவும் இருக்கலாம்.

என்ன வேண்டும் உனக்கு? என் காதலா? அல்லது என்சரீர ஒத்தாசையா? எதுவாக இருந்தாலும் சரி… என்னை உனக்குத்தர நான் தயார். உண்மைகளில் எனக்கு வெட்கமில்லை, அச்சமில்லை. நடந்தவைகளை மறந்துவிடு பட்டாபி. நாம் நமக்காக மட்டுமே வாழ்வோம். யதார்த்தங்களை அச்சமின்றி வாழ்ந்து தீர்த்துவிடு. வெட்கப்படாமல் உனக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானித்து என்னிடம் சொல்.

யாரிடமும் உன் நாடகத்தை வெளிப்படுத்தாமல், உன் உணர்வுகளைச் சிறிதும் அவமதிக்காமல் உன் கெளரவத்தை நான் கண்டிப்பாக காப்பாற்றுவேன். உன்னை நான் காயப்படுத்த மாட்டேன். அதுதான் என்னுடைய குணச்சித்திரம். வா பட்டாபி, பயப்படாமல் வா.

உன் திவ்யா.

கடிதத்துடன் அவன் வரவுக்கு காத்திருந்தேன்.

மாலை ஏழு மணிக்கு பட்டாபி வீட்டுக்கு வந்தான்.

“பட்டாபி, என்னால் சில சமயம் கோர்வையாகப் பேசமுடியாது. அதனால் நீ இந்தக் கடிதத்தை படித்துப்பார். உன் விருப்பம் சொல். நான் என் பெட்ரூமில் காத்திருப்பேன்.”

பெட்ரூமில் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தேன்.

அடுத்த கால் மணிநேரத்தில் பட்டாபி வந்தான். என் பெட்ரூம் கதவைச் சாத்தினான்.

என்னைக் கட்டிப்பிடித்து ஓவென அழுதான். நான் அவன் அழுது ஓயும்வரை காத்திருந்தேன்.

பின்பு கர்சீப்பால் முகத்தை துடைத்துக்கொண்டு, “நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன் திவ்யா.” என்றான்.

“நான் கெட்ட பொண்ணு பட்டாபி…என்னைவிட உனக்கு ரொம்ப நல்ல பொண்ணு கிடைக்கும்….உணர்ச்சி வசப்படாமல் யோசி. யு நீட் மி பிஸிகலி, நோ ப்ராப்ளம் டேக் மீ…. ஸ்கின் டு ஸ்கின் நோ ஸின்.”

“நோ திவ்யா ஐம் வெரி சீரியஸ்….”

கலிபோர்னியாவுக்கும், கும்பகோணத்திற்கும் நானும் பட்டாபியும் அன்று இரவே ஸ்கைப்பில் தொடர்பு கொண்டு, நாங்கள் கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுவதைச் சொல்ல, அடுத்த வாரமே என் அத்தை மகன் பட்டாபியை பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் அமர்க்களமாக பெங்களூரில் திருமணம் செய்து செய்துகொண்டேன்.

உடனடியாக வந்த தீபாவளி எனக்கு தலை தீபாவளியாக அமைந்தது. அதை கலிபோர்னியாவில், என் வீட்டில் கொண்டாடினோம்.

Print Friendly, PDF & Email

1 thought on “நாம் நாமாகவே இருப்போம்

  1. Dear Writer,

    How do you write such a story?

    Your imagination comes from every angle.

    Regards….
    Kannan
    7061901800

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *