திருமணத்துக்கு முன் – திருமணத்துக்குப் பின்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 13,734 
 

தி.மு. : காதலி கடிதத்தில்

உங்களை முதன் முதலில் பார்த்தபோது அது இளம் பச்சையா கரும் பச்சையா என்று தெரியவில்லை. எனக்கு எல்லாமே புதியதாகவும், இளமையானதாகவும், அதிகாலை பனித்துளியைப்போல் பிரெஷ்ஷாகவும், தெரிந்தது. என் கண்களை இமைக்க முடியாமல் போனதற்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது யாராவது என்னிடம் கேட்டிருந்தால் இமைகள் இமைப்பதற்காக படைக்கப்பட்டது என்று யார் கூறியது என்று சண்டைக்குப் போயிருப்பேன். இன்னமும் அந்த சட்டையை வைத்திருக்கிறீர்களா? உங்களை ஒரு முறை அந்த சட்டையுடன் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. எனக்குத் தெரியும் அதை நீங்கள் பத்திரமாக வைத்திருப்பீர்கள் என்று. எனக்காக ஒரு முறை அதை அணிந்து கொண்டு வர வேண்டும். உங்களிடம் நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இனிமேல் நான் எனக்குப் பிடித்த ரன்பீர்கபூரின் திரைப்படங்களைப் பார்க்கப் போவதில்லை. அவ்வளவுதான் சொல்வேன். புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.

காதலன் (புலம்பல்)

ஐயோ அந்த சட்டை மூன்று இடங்களில் தேய்ந்து கிழிந்து விட்டதே, மேலும் 2 பச்சை நிற பட்டன்கள் வேறு அறுந்து விட்டதே. அதை ஒட்டுபோட்டு தைக்கக் கூடிய அளவிற்கு பொறுமைசாலியும், தைரியசாலியுமான ஒரு டெய்லர் கடைக்காரனை இந்த ஊரில் நான் எங்கு போய் தேடுவேன். கடவுளே, இதை நான் செய்யவில்லை என்றால் தன் மேல் அவனுக்கு காதல் இல்லையோ என்று சந்தேகப்படுவாளே. சென்ற மாதம் பக்கத்து வீட்டு அக்கா வடகம் காயவைத்து விட்டு காக்கா விரட்டுவதற்கு ஒரு பழைய கரித்துணியை கேட்ட போது, பைக் துடைத்துக் கொண்டிருந்த அந்த கருமை நிற சாரி, சாரி பச்சை நிற சட்டையை வல்வில் ஓரியைப் போல் (கடையெழு வள்ளல்களுள் ஒருவர்) தயங்காமல் எடுத்துக் கொடுத்தோமே. அந்த சட்டையை மீண்டும் கொடுங்கள் என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு போய் கேட்பது.பிச்சைக்காரனுக்கு கூட அப்படியொரு நினைப்பு வராதே.

இவளுக்கு அந்த சட்டைதான் பிடிக்க வேண்டுமா? வேறு வண்ணங்கள் எல்லாம் பிடிக்கக் கூடாதா? நல்லவேளை அன்று நான் அணிந்திருந்த ஜீன்சைப் பற்றி அவள் ஒன்றும் வாய் திறக்கவில்லை . அதை ஒரு பைத்தியம் பிடித்த பிச்சைக்காரன் குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து அணிந்து கொண்டு திரிகிறான். அவன் யாரையோ வெகு நாட்களாக கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருக்கிறான். கடவுளே அது நானாக மாற சத்தியமாக விரும்பவில்லை.

இருந்தாலும் அந்த சட்டையை எப்படியாவது திரும்பப் பெற்றாக வேண்டுமே, போத்தீஸ் கடைக்குச்சென்று நூறு ரூபாய் லஞ்சம் கொடுத்தாவது அதே போன்றதொரு சட்டையை திரும்பப் பெற வேண்டும். அல்லது அதே போன்றதொரு சட்டையை வாங்கித் தருபவருக்கு ஆயிரம் பொற்காசுகள்……சீ……..ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தினசரியில் விளம்பரம் கொடுக்க வேண்டும்.

(அல்லது)

இந்தத் தெருவில் உள்ள அனைத்து வீட்டு மாடிகளிலும் உள்ள கொடிகளில் உலர்வதற்காக போடப்பட்டிருக்கும் துணிகளை கவனிக்க வேண்டும். எங்கேனும் ஒரு பச்சை நிற சட்டை தொங்கவிடப்பட்டிருக்குமேயானால் நான் ஒரு திருடனாகவும் மாறத் தயங்கமாட்டேன் என்பதை மட்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.பி. : மனைவி

ஒரு சட்டையை தேய்க்காமல் போட்டுப் போனால் உயிர் போய்விடும் என்று இதுவரை நான் கேள்விப்பட்டதேயில்லை. மேலும் உங்கள் தாத்தா பிர்லாவோ, அம்பானியோ இல்லை என்பதை ஒவ்வொரு மணித்துளியும் நீங்கள் நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அதென்ன கசங்கிப் போன சட்டையை போட மாட்டேன் என்று பிடிவாதம். பக்கத்து வீட்டு கலாவின் புருஷன் எல்லாம் கசங்கிய சட்டையை போட்டுக் கொண்டு அலுவலகம் சென்று வருவதில்லையா?. உங்களுக்கு மட்டும் என்ன வந்து விட்டதாம். ஒரு நல்ல விஷயத்தை எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்ள வேண்டும் சுட்டிக் காட்டுகிறேன் என்று கோபம் கொள்ளக் கூடாது. சட்டையை தேய்த்து போடாமல் சென்றால்தான், நாம் ஒன்றும் பணக்காரர்கள் இல்லை என்பது எப்பொழுதும் நியாபகத்தில் இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் ஒரு சட்டைப் பட்டன் அறுந்து போனதற்காக மறியல் போராட்டம் நடத்தக் கூடிய அளவிற்கு கோபப்படுவது உங்களுக்கு பொருத்தமானது அல்ல. அதற்கெல்லாம் அரசாங்க வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்தக் கொண்டு உங்களுக்கு எதற்கு இத்தகைய வேஷம் எல்லாம் என்று கேட்டால் உங்களுக்கு கோபம் வேறு வருமோ? உங்களுக்கு அந்த சட்டையை துவைத்து தருகிறேன் என்ற காரணத்தால் காலமெல்லாம் என்னிடம் நன்றியுடன் நடந்து கொள்வதைப் பற்றி யோசிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

ஒரு பச்சை நிற சட்டை வெளிர்நீல நிறமாக மாறிப்போனால்தான் என்ன? நிறம் மாறிப்போனதற்காக சந்தோஷப்பட வேண்டியதுதானே. அதைவிட்டுவிட்டு வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கும் பழக்கத்தை எங்கிருந்து கற்றீர்கள். அந்த சட்டையை பயன்படுத்தி ஒரே ஒரு முறை கிரைண்டர் துடைத்தேன். அது தவறா……. இல்லை தவறா என்று கேட்கிறேன். கிரைண்டர் துடைப்பதற்கென்று தனியாக துணியா வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள்…..ம்ம்ம்……… பதில் சொல்லுங்கள். ஊர், உலகத்தில் போய்ப் பாருங்கள், சட்டையே இல்லாமல் எத்தனை பேர் திரிகிறார்கள் என்று.

மனதில் நீங்கள் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு சமையல் செய்து கொடுத்து, துவைத்துப் போட்டு, உங்கள் குழந்தையை பார;த்துக் கொள்ளும் மிஷின் என்று நினைத்தீர்களா என்ன. நான் என்ன சம்பளம் வாங்காத வேலைக்காரியா உங்களுக்கு. ஒரு பெண்ணை இவ்வளவுதான் வதைப்பது என்று வறைமுறையே இல்லையா உங்களுக்கு. தினசரி சட்டையை கழற்றி வைப்பது போல் மனசாட்சியையும் கழற்றி வைத்துவிட்டு பேசும் ஆண்வர்க்கம்தானே நீங்களும். வேறு எப்படி பேசுவீர்கள்.

(கண்ணீருடன்)

பெண்ணாக பிறந்தாலே இப்படித்தான். பிறந்த போதே இறந்திருந்தாள் இவ்வளவு துன்பங்களும் வந்திருக்காது. எல்லாம் என் நேரம். எத்தனையோ மாப்பிள்ளைகள் வந்தார்கள். அனைவரையும் தூக்கி எறிந்துவிட்டு, காதலித்து திருமணம்செய்து கொண்டதற்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.

கணவன்: பகவத் கீதை மேல் கைவைத்து எடுத்துக்கொண்ட சத்தியங்கள்

1. இனிமேல் என் சட்டையில் பட்டன் இல்லையென்றால் என் அலுவலகத்தில் வெறித்தனமாக வேலை செய்வது போல் காட்டிக்கொண்டு,வெட்டியாக சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் உயரதிகாரியின் சட்டையை கொத்தாக பிடித்து, முகத்துக்கு நேராக இழுத்து “ஏனய்யா என் சட்டையில் பட்டன் இல்லை” என்று லூசுத்தனமாக கேட்டாலும் கேட்பேனே தவிர, என் மனைவியிடம் மட்டும் அப்படியொரு கேள்வியை கேட்க மாட்டேன்.

2. இனிமேல் எனக்கு பச்சை நிறமே பிடிக்கப் போவதில்லை. வெளிர் நீல நிறம் தான் பிடிக்கும். யாராவது என்னிடம் பச்சை நிறத்தைப் பற்றி பேசினால், கடுமையான கோபத்துக்கு ஆளாகி விடுவது என்று முடிவெடுத்துவிட்டேன். பச்சை நிறமெல்லாம் ஒரு நிறமா? உலகில் அதைவிட அசிங்கமான நிறம் இல்லவேயில்லை. இனிமேல் வெளிர்நீல நிறம்தான் என்னுடைய பேவரைட் கலர். (பச்சைத் தண்ணீரை கூட குடிக்கலாமா? வேண்டாமா? என்கிற யோசனை பரிசீலனையில் இருக்கிறது)

3. அந்த மாவு அரைக்கும் இயந்திரத்தை துடைப்பது அப்படியென்ன சவாலான விஷயமா என்ன? அதில் மாவை அறைத்தாலும் அறைக்காவிட்டாலும், ஒருநாளைக்கு 2 முறை நானே துடைத்துக் கொடுத்து விடலாம் என்றிருக்கிறேன். அதையும் நான் அணியும் சட்டையில்தான் துடைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறேன். அப்படியே துடைத்து துடைத்து எல்லா சட்டையும் வெளிர் நிறமாக மாறிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

4. பக்கத்து வீட்டு கலா புருஷனிடம் மாதம் மாதம் 500 ரூபாய் கொடுத்து விடலாம் என்றிருக்கிறேன். அவர்தான் இனிமேல் எனக்கு டியூசன் மாஸ்டர். அவரிடமிருந்து வாழ்வில் பல நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது தலையாய கடமையாகும். அவர் எனக்கு வாழ்வின் ரகசியங்களை சொல்லிக்கொடுக்கும் போது தலையில் கொட்டினாலோ, பிரம்பால் அடித்தாலோ கூட வாயிலிருந்து விரலைக் கூட எடுக்கக் கூடாது என்கிற எனது முடிவு சிறப்பான பலனை அளிக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் அதிகாலை வேளையில் பல் துலக்காமல் நேரத்தை சேமிக்கிறார் என்கிற விஷயம்தான் என்னை நிலைகுலைய வைக்கிறது. அதை மட்டும் பின்பற்றுவதிலிருந்து எனக்கு விலக்கு அளிக்குமாறு கெஞ்சிக்கேட்டுக்கொள்ள வேண்டும்.

தி.மு. : காதலி

இனிமேல் பைக்கில் வேகமாக செல்லாதீர்கள். உங்களுக்கு என்ன முதல் பரிசா தரப் போகிறார்கள். வண்டியில் 30க்கு மேல் வேகமாகச் சென்றால் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என முகத்தில் அறைந்தாற் போல் கூறிவிடுவேன். பின் என் மேல் வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை. ஏதாவது ஆங்கிலப் படத்தைப் பார்க்க வேண்டியது. அதில் வரும் ஹீரோவைப் போல் தன்னை கற்பனை செய்து கொண்டு, வண்டியில் வேகமாகச் செல்ல வேண்டியது. யாராவது ஒரு கோடி ரூபாய் தருகிறேன் வண்டியை வேகமாக ஓட்டு என்று கூறினால், அதற்கு வேறு ஆளைப் பார்த்துக் கொள் என்று சொல்ல வேண்டுமே தவிர, வேகமாக செல்வதை பற்றி யோசித்து கூட பார்க்கக் கூடாது.

சென்னை அண்ணா சாலையில் தான் நூறு அடிக்கு ஒரு சிக்னல் வைத்திருக்கிறார்களே, அதை மதிக்காமல் சென்றால் என்ன அர்த்தம். இனிமேல் அவ்வாறு சென்றால் நானே காவல்துறை அலுவலகம் சென்று புகார் அளித்து விடுவேன். நான் மட்டும் முதலமைச்சராக இருந்தால் இளைஞர்கள் அனைவரும் சைக்கிளில்தான் செல்ல வேண்டும் என்று ஒரு அவசரச் சட்டத்தை பிரகடனப்படுத்தி, அதை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவேன். உங்களிடம் நான் கேட்கும் இந்தக் கேள்வியை எந்தவித ஈகோவும் இல்லாமல், ஒரு ஜென்டில்மேனைப் போல, திறந்த மனதுடன் யோசிக்க வேண்டும். கேள்வி இதுதான். நீங்கள் ஏன் ஒருசைக்கிள் வாங்கக் கூடாது?….

அதனால் ஏற்படும் நன்மைகளை நான் பட்டியலிட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கப் போவதில்லை என்றாலும் அதை நான் செய்யத்தான் போகிறேன். 1. உடல் எடை அதிகரிக்காது. 2. புகை வெளிப்படாது என்பதால் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கூடிய மனிதர் என்கிற நற்பெயர் உங்களுக்கு ஏற்படும். 3. சுகர், பிளட்பிரஷ்ஷர் போன்ற வியாதிகள் தொந்தரவில்லாமல் உடல் நலன் பேணிப்பாதுகாக்கப்படும். 4. பெரிதாக எந்தவொரு விபத்தும் ஏற்படப் போவதில்லை. 5. அதனால் நான் நிம்மதியாக உறங்குவேன்.

தி.பி : மனைவி

என்னிடம் 5 கேள்விகள் உள்ளன. அதற்கு பதில் அளிக்க வேண்டியது உங்கள் கடமை. கடமையிலிருந்து தவறுவது ஒரு நல்ல கணவனுக்கு அழகில்லை என்பதை இப்பொழுதே சொல்லிக் கொள்கிறேன்.

1. உங்கள் அப்பா என்ன கட்டை வண்டி செய்து விற்கும் வியாபாரம் செய்து வந்தாரா?
2. நீங்கள் ஓட்டும் டூவீலரின் முன்னாள் 2 மாடுகள் பூட்டி ஓட்டவில்லை என என் தலையில் அடித்து சத்தியம் செய்து கூற முடியுமா?
3. உங்கள் டூவீலர் பெட்ரோலில்தான் ஓடுகிறது என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இல்லை மூலிகைப் பெட்ரோலை ரகசியமாக தயாரித்து ஓட்டி வருகிறீர்களா?
4. டூவீலருக்கென ஒரு மரியாதை இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?
5. உங்கள் வண்டியில் எதற்காக ஸ்பீட் மீட்டர் வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அதை கழற்றி, காயிலாங்கடையில் போட்டுவிட்டு கால் கிலோ பேரிச்சம்பளம் வாங்கி வாருங்கள். நான் இப்பொழுது பேரிச்சம்பளம் சாப்பிட்டேயாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

போனஸ் கேள்வி

உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?

என் தோழி கலா என்னைப் பார்த்து மிகக்கேவலமாக பேசுகிறாள். உன் கணவர் ஓட்டிச் செல்லும் கட்டை வண்டி வெளிநாட்டில் செய்யப்பட்டதா? உள்நாட்டுத் தயாரிப்பா என்று. சற்று வேகமாகச் சென்றால் என்ன உயிரா போய்விடும். ஏன் என்னை அசிங்கப்படுத்துகிறீர்கள், கலாவின் கணவர் 70க்கு குறைவான வேகத்தில் வண்டியை ஓட்டுவதில்லை. நீங்கள் மட்டும் ஏன் 25லேயே ஓட்டிச் செல்கிறீர்கள். ஏன் வேகமுள் 26க்குச்சென்றால் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக உங்களை தூக்குக் கயிற்றுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்கிற பயமா? உங்கள் வண்டியில் ஆக்சிலேட்டர் என்ற ஒரு பகுதி இருப்பதையும், அதற்கு என்று ஒருமரியாதை இருப்பதையும், அதற்கு மதிப்பு கொடுத்து அதை பயன்படுத்த வேண்டும் என்பதையும் மனமாற ஏற்றுக்கொண்டு. அதை எந்தவித ஹெசிடேஷனும் இல்லாமல் பயன்படுத்துமாறு மிகத்தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.

சரஸ்வதிநகர் தெருவின் கடைசி வளைவில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரன் நீங்கள் வண்டியில் போகும்போது மட்டும் ஏளனமாக சிரிப்பதை நான் கவனித்திருக்கிறேன். இந்த விஷயம் என் தோழி கலாவிற்கு தெரிவிதற்கு முன்னால் உங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவளுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்துவிட்டால்………….. அவ்வளவுதான்………….இரவோடு இரவாக ஸ்கிரிப்ட் எழுதி, இயக்கி, இசையமைத்து, தெருத்தெருவாகச் சென்று திரைப்படமாக ஓட்டிவிடுவாள். பின் நான் வெளியில் தலைகாட்ட முடியாது. என் தன்மானத்தை காப்பாற்றுவதில் உங்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை ஒவ்வொரு நிமிடமும் நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். என்னை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன் என்று என் தந்தையிடம் உள்ளங்கையில் அடித்து சத்தியம் செய்தீர்களே, நியாபகம் இருக்கிறதா. இல்லை அதுவும் மறந்து விட்டதா? பொய் சத்தியம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா? அந்நியன் படத்தில் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்த டி.வி.டியை மீண்டும் ஒரு முறை போட்டுப் பாருங்கள்.

———————————

தி.பி. : கணவன் : கடவுளே அடுத்த ஜென்மத்தில் நான் எல்லாம் வல்ல அந்த காலாவின் புருஷனாக பிறக்க வேண்டும்…….
——————————-

தி.மு. : காதலி

சிக்ஸ் பேக்ஸ் வைக்கிறேன் என்று நாளொன்றுக்கு ஒருவேளைதான் உணவு உண்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அல்சர் என்கிற ஒரு வியாதி இந்த உலகத்தில் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லையென்றால் தெரிந்து கொள்ளுங்கள். அது சரியாக சாப்பிடாதவர்களுக்கு தோன்றும் வியாதி. இல்லை ஒரு வேளை உணவு உண்பவன்தான் யோகி மற்றவன் எல்லாம் ரோகி என்று நீங்கள் கூறுவீர்களேயானால், நானும் இனிமேல் யோகியைப்போல் ஆகிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்து விடுவேன். என்னால் பசியை தாங்க முடியாது என்று என் அம்மா கூறிவந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாதவர்கள், கவலைப்படாத போது நான் மட்டும் ஏன் கவலைப்பட வேண்டும். மேலும் அல்சர் என்கிற வியாதியைப் பற்றி அனுபவப்பூர்வமாக நானும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் ஒரு ஹாலிவுட் நடிகரைப் போல் 6 பேக்ஸ் வைத்துக் கொள்ள ஆசைப்படும் போது, நான் ஏன் ஒரு பாலிவுட் நடிகையைப் போல் ஸ்லிம்மாக இருக்க ஆசைப்படக்கூடாது. ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயம் இருக்க முடியாது அல்லவா?

சரி சமாதான நடவடிக்கையில் உங்களுக்கு விருப்பம் உண்டென்றால் நானே என் கையால் சமைத்து எடுத்து வந்துள்ள உணவை ஒரு மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை இப்பொழுதே சாப்பிட்டாக வேண்டும். என்னடா இவள் 8 அடுக்கு டிபன் பாக்சை எடுத்து வந்து பயமுறுத்துகிறாள் என்று பயப்பட வேண்டாம். ஒரு மணி நேரத்தில் முடியவில்லை என்றால் 2 மணி நேரம் எடுத்துக்கொள்வதைப் பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை. நான் சமைத்த உணவை பிடிக்கவில்லை என்று கூறக்கூடிய அளவுக்கு உங்கள் மனதில் தைரியம் இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு பருக்கை சாதம் மீதமிருந்தாலும் என் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை, உங்கள் ஆழ் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு, எட்டடுக்கு டிபன் பாக்சின் மீது கை வைக்கும்மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மற்றொரு முக்கியமான விஷயம் நாளை, சரவணா பாத்திரக்கடைக்குச் சென்று 10 அடுக்கு டிபன்பாக்ஸ் ஒன்றை வாங்கலாம் என்கிற முடிவில் இருக்கிறேன். அதில் நான் சமைத்த உணவை எடுத்து வரவேண்டும். அதை நீங்கள் உண்ண வேண்டும். அதுதான் என் ஆசை.

———————————–
தி.பி. : மனைவி

4 வயது குழந்தை பிங்கி : அம்மா மௌண்டன்னா என்னம்மா?

அம்மா : மௌண்டன்னா மலைன்னு அர்த்தம்டா கண்ணா

பிங்கி : மலைன்னா என்ன, அது எப்படி இருக்கும்.

அம்மா : உங்க அப்பா படுத்திருக்கும் போது அவர் தொப்பையை பார்த்தால் எப்படி இருக்‍குமோ அப்படி இருக்கும்
============
மற்றொரு நாள் :

இரவு நேரத்தில் திருமதி செல்வம் டி.வி. சீரியல் ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில்

மனைவி : ஏங்க இப்படி வயிற்றால டி.வி.யை மறைச்சுக்கிட்டீங்கன்னா நான் எப்படி சீரியல் பாக்குறது.

==============

மற்றொரு நாள் :

கலாவுடன் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது

கலா : உன் புருஷனால, என் புருஷனைப் போல், நின்றுகொண்டு கால் கட்டை விரலைப் பார்க்க முடியுமா? ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ………….. ஹைய்யோ………. என்னால முடியலையே………….. நான் என்ன செய்வேன்.
==============
மற்றொரு நாள் : ஞாயிற்றுக் கிழமை மதிய வேளையில்

அம்மா: பிங்கிக் கண்ணா சறுக்கி விளையாடுறதா இருந்தா பார்க்‍குல போய் விளையாடு, அப்பாவோட வயித்துல விளையாடாத.

பிங்கி : மம்மி, பார்க்குல சரியாவே சருக்க மாட்டேங்குது. அப்பாவோட வயிறுதான் நல்லா சறுக்குது.
=================
மற்றொரு நாள் :

ஒரு திருமண வீட்டில் வயதான பெண்மணி ஒருவர் தனது மூக்கு கண்ணாடியை தூக்கி விட்டுக்கொண்டு உற்று பார்த்தபடி

பெண்மணி : கல்யாணத்துக்கு அப்புறம் கர்ப்பமானது நீயா, உன் பொண்டாட்டியான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.
==============
மற்றொரு நாள் : –

பிங்கி அப்பாவின் வயிற்றுப் பகுதியை இந்தப் பக்கமும், அந்தப்பக்கமுமாக தாண்டிக் குதித்தபடி

பிங்கி : அப்பா ஸ்கூல்ல நான் தான் ஹைஜம்ப்ல பஸ்ட் பிரைஸ்
===============
மற்றொரு நாள் : பக்கத்து வீட்டுக் கலா

கலா : ஐயோ உங்க நண்பன் குறட்டை விட ஆரம்பிச்சுட்டான், பஞ்சை தூக்கி எங்க போட்டீங்க

கலா புருஷன் : பஞ்சு தீந்து போச்சு

கலா : போய்யா வீணாப் போன புருஷா, பக்கத்து வீட்டு, பிரியா புருஷன பாரு, வீட்ல ஏ.சி. வச்சிருக்காரு. நீயும்தான் இருக்கியே வெட்டித்தனமா…

Print Friendly, PDF & Email

2 thoughts on “திருமணத்துக்கு முன் – திருமணத்துக்குப் பின்

  1. ஹாஹாஹாஹாஹாஹா கதை பிரமாதம் …. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *