தாய்லாந்துக் காதல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 23,480 
 

மொபைலில் வைத்த அலாரம் அடித்ததால் தூக்கம் கலையவே, மொபைலில் மணி பார்த்து, இன்னும் நேரம் இருக்கிறது என்ற எண்ணத்தோடு அலாரத்தை நிறுத்திவிட்டு, மறுபடியும் அவன் தூக்கத்தை மீட்க முனைந்தான். காலையில் விடிவதற்கு முன்னர் அல்லது விடியும்போது எழுவது அவனுக்குப் பிடிக்காது. ஊரில் இருந்தபோதுகூட காலை 8 மணிக்குத்தான் எழுவான். அவனை எழுப்ப எவரும் இல்லை. அம்மாவும் அப்பாவும் போட்டி போட்டுக்கொண்டு அவனைத் தாலாட்டுவார்கள். ‘பிள்ளையே இல்லை’ என சோதிடர்களும், ‘பிள்ளை பிறக்க வாய்ப்பு இல்லை’ என வைத்தியர்களும் முடிவுரை எழுத, அந்த முடிவுரைக்கே முடிவுரை எழுதியதுபோல் அவன் பிறந்தான். அவனுக்குப் பிறகு எவரும் பிறக்கவில்லை. அவன் பிறந்ததும் எந்த எழுத்தில் பெயர்வைப்பது என, தாத்தா சோதிடரிடமும் ஐயர்களிடமும் ஓடித் திரிய, ‘யாரும் எழுத்து தர வேண்டியது இல்லை. நானே பெயர் வைக்கிறேன். எங்களின் நீண்ட நாள் ஏக்கத்தைத் தணிக்க வந்ததால், தணிகைராஜன்’ என்றார் அப்பா; தாத்தாவும் ‘நல்ல பெயர்’ என்றார்.

கதவை எவரோ தட்டும் சத்தம், அவனுக்குக் கனவில் கேட்பதுபோல் இருந்தது. கனவா இருக்கும் என இருந்தபோது, ‘ராஜா… ராஜா…’ என்ற சத்தமும், கதவு தட்டும் சத்தமும் கேட்டன. குரல் பீட்டருடையதுதான் என அவனின் உணர்வு அடையாளம் கண்டதுமே படுக்கையைவிட்டு வேகமாக எழுந்தான். ஓடிப்போய் கதவைத் திறந்தான். வெளியே பீட்டர் நின்றிருந்தான்.

ஒரு வாரத்துக்கு முன்னர் ‘சிட்னி ஏர்போர்ட்டுக்குப் போக வேண்டும்’ என பீட்டர் சொன்னது, அவனுக்கு ஞாபகத்தில் நின்றது. பீட்டர், ஆஸ்திரேலிய வெள்ளைக்காரன். சுருக்கமாகச் சொன்னால் ‘ஆஸி’. எதிர்வீட்டில்தான் குடியிருக்கிறான். ராஜா வேலை செய்கிற ஃபேக்டரியில், பீட்டர் மெக்கானிக். பீட்டருக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன. ஆனால், ஐந்து வருடங்களுக்கு முன் அவனது, மனைவி அவனை டிவோர்ஸ் செய்துவிட்டாள். ‘டிவோர்ஸ் வேண்டாம்’ என மனைவியின் காலைப் பிடித்து அழுதிருக்கிறான். ஆனால், அவள் கேட்கவில்லை. குடியிருந்த சொந்த வீடு அவளுக்கும் பிள்ளைகளுக்கும் போக, பீட்டர் தனிக்கட்டையாக வாடகை வீட்டுக்கு வந்தான். அவனுக்கு அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததும் ராஜாதான்.

தாய்லாந்துக் காதல்கை நிறைய சம்பாதித்தாலும் தனித்துப்போன பீட்டர், ஞாயிறு பகல் ராஜா வீட்டுக்கு வந்து அழுதுவிட்டு பியர் குடிப்பான். அவனால் ராஜாவும் பியர் குடித்தான். குடிக்கிற பியர் போத்தல்களை வாங்கி வருவது பீட்டர்தான். அதற்குப் பதிலாக ராஜா கோழிக்கறி சமைத்துப் போடுவான். கொஞ்சம் காரத்தோடு சாப்பிட பீட்டருக்குப் பிடிக்கும். பியர் குடிக்கும்போதெல்லாம் தன் புராணத்தைக் கொட்டுவான் பீட்டர்.

சின்னப்பிள்ளையாக இருந்தபோது கட்டிலில் படுக்கவைத்து அம்மாவும் அப்பாவும் சொன்ன புராணக்கதைகளைக் கேட்டுப் பழகிய ராஜாவுக்கு, பீட்டரின் சுயபுராணம் கேட்க சுவையாக இருந்தது.

‘பள்ளிப் படிப்பை பத்தாம் வகுப்போடு விட்ட பீட்டர், ஃபேக்டரியில் வேலைக்குச் சேர்ந்து, முதல் சம்பளத்தை வாங்கிக்கொண்டு பப்பில் சந்தோஷத்தில் பியர் குடித்துக்கொண்டிருந்தான். அப்போது ‘ஹாய்’ என வந்த அவள், ஒயின் குடித்தாள். அவனையே பார்த்தாள். பிறகு, அவன் கையைத் தொட்டாள். போகும்போது அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு ‘சனிக்கிழமை, கிளப்பில் சந்திப்போம்’ எனச் சொல்லிட்டுப் போனாள்.

கிளப்பில் சந்தித்தார்கள்; பேசினார்கள்; சேர்ந்து நடனம் ஆடினார்கள். ஓர் ஆண்டுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டனர். உலகமே அவள்தான் என வாழ்ந்தான் பீட்டர். அவள் பெயருக்கே வீட்டை வாங்கினான். இரண்டு பிள்ளைகள் பிறந்தன. அவளுக்கு 35 வயதானபோது, 12 வருடத் திருமண வாழ்க்கை முறிந்தது. அவள் ‘டிவோர்ஸ் வேண்டும்’ என்றாள். பிரிந்தார்கள். அவன் பெயரில் இருந்த 2,000 டாலரைத் தவிர, எல்லாமே போய்விட்டன. காரைக்கூட வாங்கிக்கொண்டாள்.’ பீட்டரின் கண்களில் முத்துக்களாக நீர்த்துளிகள் உருண்டன.

”என் வாழ்க்கை வேடிக்கையானது. நான் பிறந்தது ஒரு வீட்டில்; வளர்ந்தது ஒரு வீட்டில்; திருமணம் ஆகி வாழ்ந்தது ஒரு வீட்டில்; இப்போது டிவோர்ஸாகி வாழ்வது ஒரு வீட்டில். எனக்கு நிரந்தர வீடு இல்லை…” என்ற பீட்டர் மிக உருக்கமாக, ”இந்த நாட்டில் மூன்று w – க்களை நம்ப மாட்டேன்; நீயும் நம்பாதே… WORK, WEATHER, WOMAN . இந்த மூன்றும் அடிக்கடி மாறும்” என்றான்.

விடுமுறையில் ஒருநாள், பீட்டர் தாய்லாந்து போய் வந்தான். அங்கு மூன்று வாரங்கள் இருந்துவிட்டு திரும்பிய அவன் மாறிப்போனான். டிவோர்ஸ் ஆனதை மறந்தான். அழகான தாய்லாந்துப் பெண் ஒருத்தியின் போட்டோவைக் காட்டினான். அழகாக இருந்தாள்; இளம் வயது. பீட்டருக்கும் அவளுக்கும் இடைவெளி 20 வயது இருக்கலாம்.

பீட்டர் வெள்ளமாகச் சொன்னான்… ”அவளை நான் காதலிக்கிறேன். அவளும் என்னைக் காதலிக்கிறாள். திருமணம் செய்யவும் விரும்புகிறாள்.”

தாய்லாந்து போன மூன்று வாரங்களில் காதலா?! ராஜாவால் நம்ப முடியவில்லை. ஆனால், பள்ளியில் இலக்கியம் படித்தபோது கம்பன் ‘அண்ணலும் நோக்கினான்… அவளும் நோக்கினாள்’ என ராமனுக்கும் சீதைக்கும் பார்த்த கணமே காதல் வந்ததாகச் சொன்னதை நம்பினோமே! இங்கு மூன்று வாரக் காலத்தில் இந்தப் பீட்டருக்குக் காதல் வராதா?

”அவளுக்குப் பணம் கொடுத்தாயா?”

”இல்லை…” என்றான் பீட்டர்.

‘அப்படியானால் இது எப்படி?’ என எண்ணினான். அதுகுறித்து பீட்டரிடம் எதுவும் கேட்கவில்லை. பிறகு இன்டர்நெட் மூலம் தகவலைக் கண்டான். தாய்லாந்தில் ஏழ்மையும் வறுமையும் பெண்களைத் தாக்குகின்றன. கிராமத்தில் பிறக்கும் அழகான பெண் பிள்ளைகளை வயதுக்கு வந்ததும் வறுமையின் காரணமாக சில ஆயிரம் டாலருக்கு பேங்காக் ஏஜென்ட்களிடம் தற்காலிகமாக விற்பார்கள். அவர்கள் ஐந்து ஆண்டுகள் விபசாரத்தில் இருந்து பணத்தைத் தேடிக்கொண்டு கிராமத்துக்குப் போவார்களாம். பிறகு, அவர்களுக்குத் திருமணம் நடக்கும். இது ஒரு வகை. இன்னொரு வகை… தாய்லாந்துக்கு வரும் வயதான வெள்ளைக்காரர்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்களோ வேறு நாட்டுக்குப் போவார்கள். அங்கு இருந்து குடும்பத்துக்குப் பணம் அனுப்புவார்கள்.

”அவளைத் திருமணம் செய்யப்போகிறாயா?”

”ஆம்!”

ராஜா, எதுவும் பேசாது மௌனமாக பீட்டரையே பார்த்தான். அந்தப் பார்வை, ஒரு கேள்வியாக மாறி அவனைக் குடைந்திருக்கலாம்.

”45 வயதான என்னை, எந்த வெள்ளைக்காரியும் கட்டிக்க மாட்டாள். அப்படியும் கட்ட வேண்டுமானால், பணம், அழகு எல்லாம் இருக்க வேண்டும். அழகுகூடத் தேவை இல்லை. பணம்தான் தேவை. என்னிடம் நிறையப் பணம் இல்லை. நான் இங்கு திருமணம் செய்ய முடியாது. என்னை மணக்க தாய்லாந்து கேர்ள்ஸ் தயாராக இருக்கிறார்கள். என் வாழ்க்கையை நான்தான் பார்க்க வேண்டும்” என்றான் பீட்டர்.

”உன் பிள்ளைகள்?”

”அவர்கள் அம்மா பேச்சைக் கேட்டு, என்னை மனிதனாக மதிப்பதும் இல்லை; என்னோடு பேசுவதும் இல்லை. இந்த நாட்டுச் சட்டம் (கெட்ட வார்த்தையில் திட்டினான்) பெண்களுக்குத்தான் சாதகமாக இருக்கிறது.

தாய்லாந்துக் காதல்2அவன் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை… பீட்டரின் மனைவி, அவனை ஏன் விவாகரத்து செய்தாள் எனவும் தெரியவில்லை. ராஜாவைப் பொறுத்தவரையில், அவன் மோசமானவனாகத் தெரியவில்லை. ஆனால், அவன் யார் என்பது அவனோடு வாழ்ந்தவளுக்குத் தெரியும். தாய்லாந்து போய் வந்த பிறகு, பீட்டர் பழைய நினைவுகளை உதிர்த்து புதிய மனிதன் ஆனான். விவாகரத்து செய்த மனைவியைப் பற்றி பேசுவதைக் குறைத்தான். தாய்லாந்தில் இருந்து காதலி வரும் நாளை எதிர்பார்த்து நின்றான். அவளுக்கு விசா கிடைக்க, பல மாதங்கள் ஆகிவிட்டன. இதனிடையே மூன்று தடவை தாய்லாந்து போய் காதலியைப் பார்த்துவிட்டு வந்தான்.

காலை நேர சாலை நெருக்கடியில் கார் ஓட்டிப்போவது, ராஜாவுக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால், பீட்டர் அவனை சாலை நெருக்கடியில் சிக்கவைக்காமல், சந்துபொந்துகளில் குறுக்குத் தெருக்களில் காரை ஓட்டவைத்தான். காலை 9 மணிக்கு சிட்னி விமான நிலையத்துக்குப் போய் நின்றார்கள். ஆளுக்கு ஒரு ‘டேக்வே’ காபியை வாங்கிக்கொண்டு காத்திருந்தார்கள். ராஜா காபியை மெள்ள மெள்ள உறிஞ்சிக்கொண்டே விமான நிலையத்தின் உள்ளே இருந்து வெளியே வருபவர்களைப் பார்த்தான். உலகில் உள்ள பல நாடுகளும் சிட்னிக்கு வந்ததைப்போல், பல்லின மக்களும் வெளியே வந்தார்கள். சீனர்கள் அதிகமாக வருவதுபோல் தெரிந்தது. ஆஸி வெள்ளையர்கள் சிலரே வந்தார்கள். அவர்கள்கூட அரைக்கால் சட்டை, டி-ஷர்ட், காலில் சிலிப்பர் சகிதமாக வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் பழைய காட்சி ராஜா நெஞ்சில் மின்னலாக வெட்டி மறைய, தனக்குள் சிரித்துக்கொண்டான்.

பீட்டர், ”ஏன் சிரிக்கிறாய்?” என்றான்.

”சிட்னிக்கு முதன்முதலில் வந்தபோது கோட்சூட்டுமாக வந்து இறங்கியதை நினைத்தேன்… சிரித்தேன்.”

அதைக் கேட்ட பீட்டர், ”கல்யாணத்துக்கு போட்ட என் கோட் பெட்டியில் தூங்குது” என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தான்.

11 மணி வாக்கில் தாய்லாந்துப் பெண் ஒருத்தி, டிராலியைத் தள்ளிக்கொண்டு வந்தாள். பீட்டர் உற்சாக மிகுதியில் அவளை

எதிர்கொள்ள, ராஜாவைத் தாண்டிப்போய் நின்றான். அவனால் நம்ப முடியவில்லை. அவள் அழகானவள். சின்ன வயது. கண்ணதாசன் எழுதியதுபோல் தாய்லாந்துக் கிளி. அவன் தாய்லாந்துப் பெண்களை முதன்முதலில் எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில்தான் பார்த்திருக்கிறான். பிறகு, சிட்னியில் ஹேப்பிங் சென்டரில் தாய்லாந்துப் பெண்களைப்போல் பலரைப் பார்த்திருக்கிறான். ஆனால் அவர்கள் தாய்லாந்தா, கம்போடியாவா, கொரியாவா எனத் தெரியவில்லை. ஆனால், இன்றுதான் நேருக்கு நேர் மிக அருகில் தாய்லாந்துப் பெண் ஒருத்தியைப் பார்க்கிறான். கறுப்புத் தலைமுடி. அளவான நெற்றி, கிளி மூக்கை நினைவுபடுத்தும் மூக்கு, வில்லாக வளைந்த புருவங்கள், வேலையொத்த கண்கள்.

பீட்டர், அவளை நெருங்கிக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான். இருவரும் புன்னகை பூத்த மௌனத்தில் கண்களால் பேசிக்கொண்டார்கள்.

டிராலியைத் தள்ளிக்கொண்டு வந்த பீட்டர், ராஜா அருகே வந்து நின்று அவனைப் பார்த்து, ”மாலி… மீட் மை ஃப்ரெண்ட் ராஜா” என்றான்.

ராஜா உடனே அவளின் கையைக் குலுக்க கையை நீட்டியபோது, அவள் இரு கைகளைக் கூப்பி அவனுக்கு தாய்லாந்து மொழியில்

”ஏ ருன் ஸோவட்” (நிஷீஷீபீ விஷீக்ஷீஸீவீஸீரீ) என்றாள். ராஜாவுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. ஆனால், அதை வெளிக்காட்டாமல் சிரித்தான்.

அவர்கள் இருவரும் காரின் பின் ஸீட்டில் நெருக்கமாக இருக்க, ராஜா காரை ஓட்டினான். அவன் உள்ளத்தை, தாய்லாந்துப் பெண்ணின் அழகு என்னவோ செய்தது.

ஒரு வாரம் பீட்டர் வேலைக்குப் போகவில்லை. விடுமுறை போட்டிருந்தான். விடுமுறையில், ஒவ்வொரு நாளும் சிட்னியில் ஒவ்வோர் இடத்துக்கும் பீட்டர் அவளை அழைத்துப்போனான். ஒரு வாரத்துக்குப் பிறகு ராஜாவை டின்னருக்கு அழைத்தான் பீட்டர். ‘என்ன வாங்கிக்கொண்டுபோவது?’ என யோசித்த ராஜா, லேடீஸ் பேக்கையும் பியர் போத்தல்களையும் வாங்கிச் சென்றான். லேடீஸ் பேக்கை தாய்லாந்துப் பெண்ணிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கிக்கொண்டு ‘தேங்க் யூ’ எனப் புன்னகைத்தாள். அவளின் புன்னகையும் இனிமையான குரலும் ராஜாவை மயக்கின. பியர் போத்தலைக் கண்டதும் பிரகாசமான முகத்தோடு அதன் மூடியை கையாலேயே திருகித் திறந்து சியர்ஸ் செய்து குடித்தான்; ராஜாவும் குடித்தான். பிறகு, தாய்லாந்துப் பெண் சமைத்த தாய்லாந்து உணவைச் சாப்பிட்டான். சிப்ஸும் ஸ்டேக்கும் சொசைஸும் சாப்பிடும் பீட்டர், ஐஸ்மின் சோறையும் கிரீன் கறியையும் ஒரு பிடி பிடித்தான். பதிலுக்கு ராஜா தன் வீட்டில் விருந்துவைத்தான். கோழிக்கறி, பிரியாணி செய்தான். சாப்பிட்டுவிட்டு ‘வெரி நைஸ்’ என்ற அந்தத் தாய்லாந்துப் பெண், அவன் கையைக் குலுக்கிவிட்டுப் போனாள். அவன் அதை எதிர்பார்க்கவே இல்லை.

ஒருநாள் ”மாலி… கார் ஓட்டிப் பழக, எல் பிளேட் வாங்கிவிட்டாள். நீ உன் காரில் ஓட்டிப் பழக்கு. 120 மணி நேரம் ஓட்டினால்தான் டிரைவிங் டெஸ்ட் எடுக்கலாம். பெட்ரோல் காசு தருகிறேன்” என்றான் பீட்டர்.

அவன் மறுக்கவில்லை. தாய்லாந்துப் பெண்ணோடு நெருங்கிப் பழக ஒரு சந்தர்ப்பம் வருகிறது என நினைத்தான்.

சரி என ஒப்புக்கொண்டான். அவள் கார் ஓட்டவந்தபோது எல்லாம், ராஜா அவளை ஏதோ ஒரு காரணத்துக்காகத் தொட்டுப் பேசினான். கையைத் தொட்டான்; தோளைத் தொட்டான்; ஆனால், அவற்றை அவள் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கு இடையே அவளோடு பழகுவதற்காக, வேண்டுமென்றே பீட்டரைக் கூப்பிட்டு விருந்துபோட்டான். விருந்தில் பீட்டரை அதிகமாகக் குடிக்கவைத்துவிட்டு, அவன் கொஞ்சமாகக் குடித்தான். போதையில் தள்ளாடிய பீட்டரை கைத்தாங்கலாக அழைத்துப்போய் படுக்கையில் படுக்கவைத்துவிட்டு, அவளோடு ரொம்ப நேரம் பேசிவிட்டு வந்தான்.

சில மாதங்களுக்குப் பிறகு, தொடைகள் தெரிய கட்டையான கால்சட்டை உடுத்திக்கொண்டு தாய்லாந்துப் பெண் பீட்டரோடு போனாள். ஒருநாள் கார் ஓட்டிப் பழக, அதே கால்சட்டையில் அவள் வந்தாள். காரில் உட்கார்ந்து பெல்ட்டைப் போட்டு காரை ஓட்டியபோது, வெளியே தெரிந்த தொடைகள் ராஜாவை ஆட்டிப்படைத்தன. அவளுக்குத் தெரியாமல் அவளின் தொடைகளை ரசித்தான்.

ஒருநாள் உறவினர் ஒருத்தரின் சாவுக்காக மெல்போர்ன் போனான் பீட்டர். ‘திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகும், அவளைப் பார்த்துக்கொள்’ என்றான். மனதுக்குள் எதையோ நினைத்த ராஜா, அதை வெளிக்காட்டாமல் ”டோன்ட் ஒர்ரி” என்றான்.

பீட்டர் மெல்போர்ன் போன அன்று வேலைக்கு லீவு போட்டுவிட்டு, லாம்ப் பிரியாணி சமைத்து எடுத்துக்கொண்டு தாய்லாந்துப் பெண்ணைப் பார்க்கப் போனான் ராஜா. அவள் எந்த எண்ணமும் இல்லாமல் அவனை வரவேற்றாள். பிரியாணியைப் பார்த்து அதன் வாசனையை முகர்ந்து ”வெரி நைஸ்” என்றாள்.

அவன் அவளையே பார்த்தான். அழகாக உடுத்தியிருந்தாள். அவளின் விழிகளில் ஒரு காந்தம் ஏறியிருந்தது.

”யூ லுக் வெரி பியூட்டிஃபுல்” என்றான்.

அவள் ”தேங்க் யூ” என்றவள், ”யூ லைக் பியர்?” என்றாள்.

அவள் அப்படிக் கேட்பாள் என அவன் எதிர்பார்க்கவில்லை..

”யெஸ்!”

உள்ளே போன அவள், ஃபிரிட்ஜைத் திறந்து ஒரு பியர் போத்தலை எடுத்து, அதைத் திறந்து கிளாஸோடு வந்து, அதில் லாகவமாக பியரை ஊற்றினாள். அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான் ராஜா.

”உனக்கு எப்படி பியர் ஊற்றத் தெரியும்… நீயும் பியர் குடிப்பாயா?”

அவள் புன்னகைத்தாள். ”நான் பியர் குடிக்க மாட்டேன். பியரை ஊற்றக் கற்றுக்கொண்டது நான் வேலை செய்த ஹோட்டலில். அங்கு ஐந்து வருடங்களாக வேலை செய்தேன். பீட்டரைப் பார்த்தது அங்குதான்…” என, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னாள்.

பியரைக் குடித்த அவன் மறுபடியும், ”யூ லுக் வெரி நைஸ்… யங் ஏஜ்” என மறைமுக அர்த்தத்தில் பேசினான்.

அதைக் கேட்ட அவள், ராஜாவின் பேச்சைத் தவறாக எடுக்காமல் புன்னகைத்தாள். அவனோ தன்னிலை மயங்கி எழுந்து, அவள் அருகே போய் திடீரென அவளைக் கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான். பலாத்கார முத்தம். ஆனால், அவள் அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கன்னத்தில் படிந்த எச்சிலைத் துடைத்தாள். அப்போது அவன் சொன்னான் ”யூ ய்ங் கேர்ள்… பீட்டர் ஓல்டு மேன்.”

அதைக் கேட்ட அவள் சற்றுக் கோபமாக, ”பீட்டர் வயதானவன்தான். அது தெரிந்துதான் அவனைத் திருமணம் செய்தேன். பீட்டரால் என் குடும்பம் வாழ்கிறது; என் தம்பி படிக்கிறான்; அவனுக்குத் துரோகம் செய்ய மாட்டேன். தாய்லாந்துப் பெண்கள் என்றால், தப்பான எண்ணம் பலருக்கு உண்டு. அது உனக்கும் உண்டு என்பதுதான் வேதனையானது” என்றாள் அறைகுறை ஆங்கிலத்தில்.

சில நிமிடம் மௌனம் நிலவியது. மெள்ளமாக நடந்த அவன், அவளை நிமிர்ந்து பார்க்காமல் கெஞ்சும் குரலில் சொன்னான்… ”தயவுசெய்து பீட்டரிடம் எதையும் சொல்லிவிடாதே…”

அவன் மனதுக்குள் பயம் எழுந்தது, ‘பீட்டரிடம் நடந்ததைச் சொன்னால்?’

அப்போது அவள் சொன்னாள்… ”உங்களுக்கு நேரம் இருந்தால், நாளை கார் பழகலாமே!”

அவனோ அவளைப் பார்க்கத் துணிவு இல்லாமல் தலையை அசைத்தவாறு வெளியே போனான்.

– ஜூன் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *