தரை தேடிப் பறத்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 11,226 
 

கருமேகங்களுக்குள் நுழைந்து நுழைந்து தேடியும்,என்னைத் தன் போக்கில் இழுத்துச்சென்ற, ரெக்கைகள் மிக நீளமாக இருக்கும் அந்தக் கருஞ்சிகப்பு வண்ணப் பறவையைக் காணவில்லை. தன் ரெக்கை விரித்தலின் நிழலிலேயே என்னைப் பின் தொடர்ந்து பறக்கச் சொல்லும் அப்பறவையோடு நான் எப்போதிலிருந்து உடனிருக்கிறேன் என்பது ஞாபகத்தில் இல்லை. ஆனால் அதனோடு இருக்கும் காலத்திலிருந்தே என் ரெக்கைகள் குட்டையாகவே இருக்கின்றன. என் வெண் ரெக்கைகள் வளர வளர கருஞ்சிவப்பு பறவை வெட்டி காற்றில் உதிர்த்துக் கொண்டிருக்கிறது. மிகக் குறுகிய எல்லைக்குள் பறக்க ஏதுவாக மட்டுமே என் ரெக்கைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறன. வான் அண்டத்தில் ஒரு எல்லையை வகுத்து நீ இதற்குள் தான் பறக்கவேண்டும். இந்த எல்லைகளைத் தாண்டிப் போகக்கூடாது என எச்சரிக்கை விடுத்து எங்கயோ பறந்து சென்று திரும்பி வரும் அந்தக் கருஞ்சிகப்புப் பறவை. அப்படி அது சென்று திரும்பி வரும்போதெல்லாம் அதன் அலகுகளில் எனக்கான இரை இருக்கும். ஏதேனும் ஒரு மேகத்தில் வைத்து அந்த இரையை உண்பேன். கூடு கட்டுதல் பறவையின் சோம்பேறித்தனம் என கருஞ்சிகப்பு பறவை எனக்கு கற்பித்திருந்தது. எனக்கென்று ஒரு கூடு இல்லை. நான் அதனோடு இணைந்து பறத்தலைத் தவிர வேறு ஏதும் அறியாததாக இருந்தேன். பறந்து பறந்து என் சிறகுகள் சோர்ந்து போகும் போது கருஞ்சிகப்பு பறவை என்னை தன் சிறகுகளுக்குள் பொதிந்து மூடி..எங்கோ அழைத்துச் செல்லும்.அந்தப் பயணம் முழுவதும் என் கண்களுக்கு இருளின் நிறம் மட்டுமே பரிட்சயமாகி இருக்கும்.பிறகு கருஞ்சிகப்பு பறவை தன் பறத்தலை ஓரிடத்தில் நிறுத்தி தூங்கும். அதன் பிறகும் தன் சிறகு கூட்டிலிருந்து என்னை விடுவிப்பதில்லை. அதன் ரெக்கைக்குள் இறுக்க மூடி என்னையும் தூங்கச் சொல்லும். அப்போதெல்லாம் என் மூச்சு அழுந்திக்கொண்டிருக்கும். மூச்சடைந்து குறுகி ஓய்வெடுப்பதைவிட சிறகுகள் ஓய இடைவிடாது பறந்ததலே மேல் என்று தோன்றும். மீண்டும் இருள் விலகி வெளிச்சம் வரும் போது நாங்கள் மேகக் கூட்டத்திற்குள் மிதந்து கொண்டிருப்போம். அப்போது என் மூச்சு சீராக இயங்கும். .

என் பறத்தல் எப்போதும் நிர்பந்தங்களின் எல்லைகளுக்கு உட்பட்டே நிகழ்ந்து கொண்டிருந்தது. நான் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டும், அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்துமே பறந்து கொண்டிருந்தேன். என் சிறகுகள் ஓய்ந்து போயின. வான் எல்லையை கடந்து எதையும் நான் அறியாது இருந்தேன். என்னை தன் வெளிகளை விட்டு விலகிச் செல்லாமல் கண்காணிப்பதிலேயே கருஞ்சிவப்பு பறவை தன் தூக்கம் இழந்தது. எப்போதாவது நான் அதன் வெளியே துறந்து பறக்க எத்தனித்தால் என் சிறகுகள் இன்னும் குட்டையாக்கப்படும். சில சமயங்களில் அதன் கோபம் அதிகரித்தால் என் சிறகுகள் வன்மத்தோடு பிடுங்கப்படும்.
அப்போதும் என் சிறகிலிருந்து தெறிக்கும் ரத்தம் வெண் மேகங்களில் சிதறிப் பறக்கும். அந்த வலி அறிந்து என் பறத்தலை குறுக்கியே வைத்திருந்தேன். கருஞ்சிகப்பு பறவை மீண்டும் மீண்டும் என்னைத் தனியே விட்டுவிட்டு இரை தேடப்போகும். காலநேரம் இல்லாமல் என் பொழுதுகள் வெறும் பறத்தலிலும், அது கொண்டு வரும் இரைக்கான காத்திருத்தலிலும் கழிந்தன. எனக்கான உணவை நானே தேடிக்கொள்ள ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை.

ஆயினும் அதன் மீதான நேசத்துடன் பறந்து பறந்து சிறகுவிரித்தேன். இந்த பறத்தலில் தரை இறங்காமல் போனாலும் பரவாயில்லை. அதனோடு சேர்ந்து பறக்கும் பொழுதுகளில், அந்தரம் மிக அழகாக தெரிந்தது. வலி பழகிப் போனது. என் தரை தொடா பறத்தல் எல்லையற்றது என்ற கர்வத்தில் இருந்தேன். ஒரு நாள்…அதனை பின்தொடர முடியாததொரு பொழுதில் திசையறியாத என்னை தனியே விட்டுவிட்டுப் போய் விட்டது. நான் இளைப்பார இடம் தேடித் தேடி அலைந்தேன். என் ரெக்கைகளுக்கு தரையின் தூரம் தெரியவில்லை. பூமியின் எல்லைக்கெட்டாத தொலைவில் அது என்னைத் தொலைத்துவிட்டு சென்றுவிட்டது. பூமி மிக மிக தொலைவில் இருக்குமெனத் தோன்றியது. என் கால்கள் வலியில் சுழன்றது. பறக்க இயலாமல் போனால் அது பறவை இல்லை என அது எனக்கு கற்றுக் கொடுத்திருந்தது. அதன் பொருட்டே தரை இறங்கப் பயப்பட்டேன். என் வானில் அதுவன்றி வேறெந்த பறவையையும் நான் அதற்கு முன்
அறிந்திருக்கவில்லை..தனித்த ஒற்றைப் பறத்தல் எனக்கு அயர்ச்சியூட்டியது. இரையின்றி வெறும் காற்றாய் பறந்தது என் உயிர். என் வெள்ளைச் சிறகுகள்
பொசுங்கிப் போகும் அளவிற்கு நான் தாகத்தோடு செத்து விழுவது என்ற முடிவோடு தீராத தவிப்போடு காற்றின் வேகத்தைவிட சுழன்றடித்துப் பறந்தேன்.

என் தேடல் வீண் போகவில்லை. தூரகருமேகங்களுக்கு மத்தியில் அது நுழைவதை பார்த்துவிட்டேன். மிச்சமிருந்த என் உயிரை ஒன்று திரட்டி நான் என் கருஞ்சிகப்பு பறவையை நோக்கிப் பறந்தேன். கரு மேகங்களிலிருந்து சில மஞ்சள் இறகுகள் விழுந்தன.கருஞ்சிகப்பு பறவை என் பார்வை தவிர்த்து பறக்க முயன்றது. நான் அதன் பறத்தலின் பாதையில் வழி மறித்து நின்றேன்.’’இளைப்பாறுதலை என் சிறகுகள் யாசிக்கின்றன. என் இரைப்பை வெறும் காற்றால் நிரம்பி இருக்கிறது.என்னை அழைத்துச் செல்.உன் வழி காட்டுதல்களின்றி எனக்குப் பாதைகள் இல்லை. வானம் மட்டுமே அறிந்த என்னால் தரை தொட முடியவில்லை .என் சிறகுகளை,என் வாழ்வை,மிச்சமிருக்கும் என் கனவுகளை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.என்னை தூக்கிச்செல்’ என்றேன்.

என் உயிர் காக்கும் பொருட்டு கருஞ்சிவப்பு பறவையின் நீள ரெக்கைகளை பிடித்துக்கொள்ள முயற்சித்தேன். என்னை உதறித் தள்ளிய அது
‘இனி உன் பாதைகளை நீயே வகுத்துக் கொள்.என் எல்லைகளை கடந்து போ..நான் உன்னை வெறுக்கிறேன்.உன் மீதான பற்றுதல் என்பது கடந்த காலம்.போய் வா’ என்றது. ஏன் இத்தனை வெறுப்பு..என்னை கடந்து போவதற்கான காரணம் என்ன. உன் சொல்படிதானே ரெக்கைகளை குட்டையாக்கி வலியோடு பறந்துகொண்டிருக்கிறேன். என் மீதான் குறை என்ன’ என்று கேட்டேன். ‘.வெண்மையை நான் வெறுக்கிறேன் இப்போதெல்லாம் எனக்கு மஞ்சள் நிறம்தான் பிடித்ததாக இருக்கிறது. இன்னும் சொல்வதானால் வெண்மை என்பது ஒரு நிறமே அல்ல..’என்றது. உலகத்திலே தனக்கு பிடித்த நிறம் வெள்ளை நிறம் என்றும். தனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே வெள்ளை மிகப்பெரும் மயக்கத்தைக் கொடுக்கும். உன் நிறத்திற்காகவே உன்னைச் சில முரட்டு பறவைகள் கபளிகரம் செய்துவிடும்.உன்னைப் பாதுகாக்கவே எப்போதும் உன்னை என் சிறகுக்குள்ளே வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தது. இப்போதோ என் வண்ணத்த்தை பொருளற்றதாக்கி, தன் சிறகுக்குள் மஞ்சள் வண்ணப் பறவையைத் தூக்கிக் கொண்டு என் பார்வையை கடந்து வெகு தூரம் சென்று மறைந்தது. ஒன்று மட்டும் எனக்கு அப்போது புரிந்தது. கருஞ்சிவப்பு பறவைக்கு, ஒரு நாள் மஞ்சள் பறவையும் நிறமற்றதாகிவிடும். மஞ்சள் பறவையும் என்னைப் போல மொன்னையாக்கப்பட்ட சிறகுடன் தனித்து திரியும்.

இனி என் வாழ்வில் கருஞ்சிகப்பு பறவை இல்லை என்று நான் உணர்ந்தபோது வானம் நீல நிறம் கொண்டிருந்தது. என் தனித்த இலக்கற்ற பறத்தல் அப்போது துவங்கியது. எல்லைகளைக் கடந்து நான் கண்களை மூடியபடி பறக்கத் துவங்கினேன். திசைகள் அறியா என் சிறகுகள் தரையைத் தேடித் தேடிக் களைத்தன. நீண்ட பறத்தலுக்குப் பிறகு.. என் பார்வை தூரத்தில் நீளமான நீலச்சிறகுள்ள பெயர் தெரியாத பறவை ஓன்று பறந்து கொண்டிருந்தது. என் கடந்தகால பறத்தலில் ஒரு போதும் சக பறவைகளைப் பார்க்க நான் அனுமதிக்கப்பட்டதே இல்லை. அந்த நீலப் பறவை என் அருகே வந்தது.’ ரொம்ப நேரமாகப் பார்க்கிறேன்.ஏன் அலைந்து கொண்டிருக்கிறாய்’ என்றது’. ‘நான் தரை தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன். என் ரெக்கைகள் முழுவதுமாக உதிர்ந்து என் உடல் கூடாகும் வரை
பறப்பேன்’ என்றேன். ‘என்ன பைத்தியக்காரத்தனம் இலக்கற்று,திசையற்று பறந்து கொண்டிருந்தால் ஒரு நாளும் தரை தொட முடியாது’ என்று உனக்குத் தெரியாதா என்றது அந்த நீலப் பறவை. நான் மௌனமானேன். ‘நீ தரை பார்த்ததே இல்லையா’. ‘இல்லை’ என்றேன். ’உனக்கு தாகமே எடுக்காதா?தண்ணீர் வேண்டாமா? ‘இரையை எப்படிக் கண்டடைவாய்’ என்றது. ‘எல்லாம் கருஞ்சிவப்பு பறவை தரும்’ என்றேன். ‘இப்போ அது எங்கே’. ‘என்னை அநாதரவாக விட்டுச் சென்று விட்டது’. ‘உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது’ என்று கூறிய நீலப்பறவை. ‘பறவையின் சுதந்திரமே அது தனித்து உணவு தேடுவதும், தன் வீட்டை தானே கட்டிக்கொள்வதும்தான். வானம் என்பது பறவையின் பயண வெளி. பறத்தலில் சுதந்திரம். அது வாழ்விடம் அல்ல.நீ தரை தொட வேண்டும். காற்றை உந்தித் தள்ளி தரையிலிருந்து வானம் தொடும் பறத்தல் சாகசமானது. அதேபோல் வானியிலிருந்து தரை தொடுவது காற்றில் மிதக்கும் பேரானந்தம். சமதளத்தில் பறப்பது பறத்தலே அல்ல’ என்றது நீலச்சிறகு பறவை.

’வானம் அளவிற்கு பூமியும் அழகு. பூமியின் அழகைப் பார்க்கவேண்டுமென்றால், நீ தரை தொட வேண்டும்.தரை தொடாத பறத்தல் முற்றுப் புள்ளியற்றது. தரை தொடாத வான் பறத்தலில் நீ பார்த்தது என்ன.நீ அடைந்தது என்ன.’.நீலப் பறவை இந்த கேள்விகளை என் முன் வைத்தது.‘வெண் மேகம் பார்த்திருக்கிறேன், மழை பார்த்திருக்கிறேன். சிலபொழுது வானவில்,நீல ஆகாயம்,எப்போதாவது செவ்வானம்,கரும் இருள்.அதிகாலை மஞ்சள் வானம்.’.நான் சொல்லச் சொல்ல நீலப் பறவை சிரித்தது. ‘சுருக்கமாகச் சொல் வானும், வான் சார்ந்தவையும் பார்த்திருக்கிறாய்.மழை அறிந்த நீ, மழை தரும் மண் வாசம் அறிந்திருக்கிறாயா?மழை தரும் பசுமை அறிந்திருக்கிறாயா?மழை தரும் பூக்கள் அதன் வாசம்.காட்டருவி,அதன் சங்கீத இசை’ நீலப் பறவை நான் அறியா பல அழகியலை எனக்கு சொல்லிக்கொண்டிருந்தது. அதன் ஒவ்வொரு வர்த்தைகளுக்குள்ளும் ஒரு புன்னகை இருந்தது.நீ தரை இறங்கியாகவேண்டும் என அது கட்டளை இடவில்லை. தரை இறங்கவில்லைஎன்றால் உனக்கு வாழ்க்கை இல்லை என அச்சுறுத்தவில்லை.தரை இறங்கும்
பயத்தை போக்கியது. பூமி பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது.

சிறகுகள் இருப்பது மேலே மேலே பரப்பதற்குதானே தவிர தரை இறங்குவதற்கு இல்லை என்றே நான் கற்பிக்கப் பட்டிருந்தேன்.
என் தவறான கற்பிதங்களை நீலப் பறவை எனக்கு புரிய வைத்தது.நான் நீலப் பறவையோடு தரை இறங்க எத்தனித்தேன். தரை நோக்கி நான் பறக்கும் முதல் பறத்தல். உயரப் பறத்தலும், சரிசமமாகப் பறத்தலுமே அறிந்த என் சிறகுகள் முதல் முறையாக கீழ் நோக்கி பறக்கத்துவங்கியது.

தாளப் பறத்தல் என்னுள் ஏதோ செய்தது. அடி வயிற்றில் ஒரு பயப்பந்து சுழன்றது. ஆனால் அது சுகமாக இருந்தது. என் தடுமாற்றத்தை அறிந்த நீலப் பறவை தன் வேகத்தை குறைத்து என் வேகத்திற்கு வந்து எனக்கு வழிகாட்டியது.

மிகப் பெரிய அடர்ந்த காட்டில் ஓடுகிற காட்டாற்றின் கரையில் தரை இறங்கினோம். நீலங்களும்,நீலம் சார்ந்த நிறங்களும் பழகிய.. என் விழிகளுக்கு காட்டின் பசுமை புதியதாக இருந்தது.காட்டு மரப்பூக்களின் நறுமணங்கள், மண் வாசம், நான் அறிந்திராத வித விதமான வண்ணங்கள்.தரை இறங்கிய என் கால்கள் தரை தொடவில்லை.எனக்கே எனக்கான வெளிகளில்..எனக்கே எனக்கான இசை உலகில்..என் சுதந்திரத்தின் முதல் புள்ளியில் நான் காலடி எடுத்து வைத்தது போல இருந்தது.குயிலின் பாடல், மயில்களின் நாட்டியம்,சில்வண்டுகளின் ரீங்காரம், அருவிச்சத்தம், இத்தனைக்கும் மத்தியில் என்னை தரை இறக்கிவிட்டு..’விரும்பியபடி வாழ்..உன் சுதந்திரம் உன் சிறகுக்குள் இருக்கிறது. நடக்க நினைத்தால் நட, பறக்க நினைத்தால் பற’ என்றது.

நான் அதன் முன்னே என் சிறகுகளை விரித்து நின்றேன். நீலப்பறவை என்னை வினோதமாகப் பார்த்தது.’என்ன’ என்றது. ‘என் சிறகுகளை வெட்டிக்கொள்’ என்றேன்.புரியாமல் பார்த்தது அந்த நீலப்பறவை. ‘என் வாழ்வியலை இதற்கு முன் தீர்மானித்த பறவை,வளர வளர என் சிறகுகளை வெட்டிக் கொண்டே இருந்தது. இப்போது நீ எனக்கான வாழ்விடத்தை அடையாளம் காட்டி இருக்கிறாய் நீயும் என் சிறகுகளை வெட்டிக் கொள்’ என்றேன். அது மௌனமாக புன்னகைத்தது. ரெக்கைகள் வெட்டப்படுவதன் வலி நானும் அறிந்திருக்கிறேன். தீராத துயரமாய் வலி தொடர்ந்த போது நான் என் சிறகுகளை காப்பாற்றிக் கொண்டேன். கூடு கட்டுவதும், உணவு தேடுவதும், விரும்பும் இடத்தில் பறப்பதும் வாய்க்கப்பெற்றிருப்பது இயற்கை பறவைகளுக்கு தந்த சுதந்திரம். இனி ஒருபோதும் யாரும் உன் சிறகுகளை வெட்ட அனுமதிக்காதே.

நாங்கள் நடந்த பாதையெங்கும் சிறகுகள் உதிர்ந்து கிடந்தன. என் சிறகுகளைப் போல் யாரோ ஒரு பறவையின் சிறகுகளை வெட்டி எரிந்திருக்கிறார்கள் என்ற அச்சம் என்னுள் எழுந்தது. ‘தரையிலும் சிறகுகள் வெட்டப்படுமா’ என்று அச்சத்தோடு கேட்டேன். உன் உரிமையையும், சுதந்திரத்தையும் நீ அறியாமல் இருந்தால் வான், பூமி என்று இல்லை பேரண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் உன் சிறகுகள் வெட்டப்படலாம். ஆனால் இவை வெட்டப்பட்ட சிறகுகள் அல்ல. உதிர்ந்த சிறகுகள். சிறகுகள் உதிர்ப்பது பறவைகளின் சுதந்திரம்’எனச் சொன்னது நீலப் பறவை
.
கருஞ்சிகப்புப் பறவை அன்பை ஒரு அச்சுறுத்தலாகவே என்னிடம் காட்டியிருக்கிறது.என் சிரம் வருடி,என்னை மடியில் கிடத்தி ஒரு ஆறுதல் மொழிகளை என் செவிகளுக்குள் மாயச் சொற்களாய் ஒலிக்கச் செய்து என் மயக்கத்தினூடகவே என் சிறகுகளை வெட்டி எறிந்திருக்கிறது.சொற்களின் சூட்சுமம் அறியாத என் பேதைமை அதன் வார்த்தைகளை நம்பியிருக்கிறது. ‘சிறகுதிர்த்தல் பறவையின் சுதந்திரம்’. நீலப் பறவையின் சொற்கள் என் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.விலாப்புறம் இருந்த என் வெட்டப்பட்ட சிறகுகளைப் பார்த்தேன். இந்த சிறகுகள் வளரும் வரை பூமியில் இருக்க வேண்டும். வளர்ந்த சிறகுகளை
சுதந்திரமாக உதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உன் சுதந்திர வாழ்வினை தீர்மானித்துக்கொள் என்று என்னிடமிருந்து விடைபெற்ற
நீலப் பறவையிடம் வெண்மை என்பது நிறமில்லையா? எனக் கேட்டேன்.

‘எல்லா நிறங்களின் மூலமும் வெண்மைதான். வெண்மை கலப்பில்லாமல் எந்த நிறமும் உலகில் இல்லை. வெண்மை வெறும் நிறமல்ல..அது அழகின்
பொருள். சுதந்திரத்தின் முழுவடிவம். அருவி,நிலா,வெண்மேகம்,பூக்கள்,
தேவதை சிறகுகள்,எல்லாமே வெண்மைதான்’ என்றது. என் சிறகுகள் வெண்மைதான் என்றேன். ‘ஆம் அது தேவதையின் சிறகுகள்’ என்றது நீலப் பறவை. மெல்லிய காற்று வீசியது.நீலப் பறவை தன் நீள் சிறகுகளை விரித்தது. அதன் சிறகுகளுக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் போல இருந்தது.நான் அதை நீலப் பறவையிடம் சொன்னேன். நீலப் பறவை சிரித்தது.’வாழ்கை எதற்குள்ளும் ஒளிந்து கொள்வதல்ல.அது ஏகாந்தமாய் பறப்பது. சுயமாய் இருப்பது. இரை தேடப் பழகு.. கூடு கட்டப் பழகு..பறவையாய் வாழப்பழகு’ என்று சொல்லி தன் நீல நிறச் சிறகொன்றை உதிர்த்து பறந்தது.

நான் பூமியில் என் கால்களை அழுந்தப்பதித்து நடக்கத் துவங்கினேன். கட்டளைகளுக்குக் கட்டுப்படாத என் காலடிச்சுவடுகளை எனக்கு மிகவும் பிடித்தது .நான் நீண்ட தூரம் நடந்தேன். இயற்கையின் வனப்புகள் என்னை மயக்கமூட்டின. கானகத்தின் நடுவில் இருந்த ஒரு மரத்தில் கனி பறித்தேன்.அது இதுவரை நான் ருசித்தறியாத சுவையோடிருந்தது. இதற்கு முன் இரை என்பது கருஞ்சிகப்பு பறவை அலகில் கொண்டு வரும் சுவையறியா, ரசனையற்ற இரையாவே இருந்தது. முதல் முறையாக நானே என் இறையை தேடிக் கொண்ட சந்தோசத்தில் சிறகுகளை பட படவென அடித்துக் கொண்டேன். வெட்டப்பட்ட சிறகுகள் இல்லையா? அது கொஞ்சம்தான் விரிந்தது. என் சிறகுகள் வளரும். என் ரெக்கைகளை அகல விரித்து பூமியில் என் நிழல் பட நான் ஏகாந்தமாய் பறப்பேன். இயல்பாய் சிறகு உதிர்ப்பேன். உதிர்ந்த என் வெண் சிறகுகள் புன்னகை மாறாத ஒரு குழந்தையின் விளையாட்டுப் பெட்டகத்தில் பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும். அந்தக் குழந்தையின் புன்னகை வ்ழியாக என் சுதந்திரம் வெளியெங்கும் நிரம்பி வழியும்.

(‘தி சண்டே இந்தியன்’ இதழில் வெளிவந்த சிறுகதை)
சந்திரா: http://katrilalayumsiraku.blogspot.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *