ஞாயிறு மறையும் முன்…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 10,061 
 

தன்னுடைய நண்பன் நிரோஜன் திருநாவுக்கரசினுடைய பாடலைக் கேட்டவுடன் கணனியைத் திறந்தான், சுதன். உள்ளத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டான்.

எனக்குள் உறைந்த என்னுயிரே!

உன் தைரியத்திற்கு இம்மடல் பாடம் நடத்துகின்றது. பல்கலைக்கழகத்தில் நீ கற்கும் பாடங்கள் மனதின் பண்புகளை உனக்குக் கற்றுத்தரும் பாடங்களாய் இருக்க முடியாது. ஏக்கம் கொண்ட மனம் நீண்ட காலம் தாக்குப் பிடிப்பதில்லை. பால் கெட்டால் திரைந்துவிடும். நெய் கெட்டால் வயிற்றைப் பிரட்டும். நட்புக் கெட்டால் எல்லாமே தலைகீழாகிவிடும். பேயோடு பழகினும் பிரிவதரிதே. உன்னோடு பழகிய நான் உன்னைப் பிரிவது எப்படி? என் விழிகள் உன்னையே அதிகம் படம் பிடித்துள்ளன. ஏனெனில், நேரிலும் நிழற்படத்திலும் உன்னைத்தானே என் கருமணிகள் அதிகம் நேசிக்கின்றன. அதனால், ஏக்கத்தில் கூட என் கண்கள் கண்ணீரைச் சேகரித்ததில்லை. ஏனெனில் நீ நனைந்து குளிரடைவதை அவை விரும்பியதில்லை!

ஒன்று சேர்ந்த அன்பு எங்களது. பாகப்பிரிவினை அதற்கில்லை. என்னோடு நீயிருக்கும் பொழுதுகள் உன் பெற்றோர் மற்றோர் உன் நினைவை விட்டு மறைந்த பொழுதுகள். மாற்றானை நீ மணம் முடிக்க என் மூச்சுக் காற்றே முன் நின்று உன்னைத் தடுத்துவிடும் என்பதை அறியாதவன் நான் இல்லை. நீ கணனிக்குள் அகப்பட்ட கவிதை அல்ல. என் மனதுக்குள் எழுதப்பட்ட கவிதை.

பல்கலைக்கழகத்தில் நீ கற்று பதவி வகித்துப் பெறும் பலனை விடப் பல மடங்கு உன்னை என் இதயத்திலும் செல்வாக்கிலும் உயரத்தில் வைத்திருக்க முடியும். அந்தஸ்தில் குறைந்தவன் நான் இல்லை. சாதியில் சரிந்தவன், நானில்லை. உன்னை விட என்னால் கல்வியால் உயர முடியவில்லை. ஆனால், உன்னை விட என்னால் உழைப்பால் உயர முடியும். உன்னையும் என்னையும் இணைத்த அந்தக் காதலுக்குத் தடையென்ன வென்று என் மூளைக்கெட்டியவரை அறிய முடியாதவனாய் உள்ளேன்.

“நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்!
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்!
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்!
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க.”

– என்று சென்ற நூற்றாண்டில் பாரதி புலம்பியும் இந்த நூற்றாண்டும் தொடர்கிறது காதலுக்கு சிவப்புக்கொடி. காதலுக்காகக் காதலர்கள் உயிர் துறந்த கதை கேள்விப்பட்டிருக்கின்றேன். எந்தப் பெற்றோராவது இறந்து விடுவோம்…! இறந்து விடுவோம்…!! என்று நச்சரித்ததைத் தவிர, எங்காவது இறந்த செய்தி கேள்விப்பட்டிருக்கின்றாயா?

“நம்புபவனுக்கு எல்லாம் கைகூடும்” என்று பைபிள் கூறுகின்றது. ”நம்பிக்கை தான் நிஜங்களை உருவாக்குகிறது” என்று வில்லியம் ஜேம்ஸ் கூறியுள்ளார். பிரியமுள்ள பெற்றோர் உன் பிரிவைத் தாங்கார். பொறுத்தது பொன்னான நேரம். போதும் உன் அமைதி. நம்பிக்கையில் நாள் குறிப்போம். வருடங்கள் பல கடந்தும் வாழுகின்ற எம் காதல், வதுவை காணாது முடிவுறாது. நான் உரைத்த வார்த்தைகள் எல்லாம் நானாய் உரைத்தவை அன்று. எனக்குள் இருக்கும் நீயுரைக்கும் வார்த்தை என்பதை உணர்வாய்.

திங்கள் பெண்ணாள் செவ்வாய் மலர்ந்து
புதனன்று சந்திக்க வருஞ்செய்தி சொல்லாயோ?
பூத்திருக்கும் புதுமலர் புனைந்தெடுத்து மாலையாக்கி
மங்கலநாண் மகிழ்ந்தேத்த, வியாழனன்று நாள் குறித்து
வெள்ளிக்கொலுசிட்டு வதுவைவினை முடித்து
சனியன்று சடங்கு வைக்கும் செய்தி சொல்ல
ஞாயிறு மறையுமுன் வந்துவிட மாட்டாயோ
நாமிணையும் நற்செய்தி நம்பெற்றோர் செவிநுழைய.
உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவன்
சித்திரத்து ரோஜாவைச் சிறைப்பிடித்த
உன் இதயக் காவலன்.
கணனி மூலம் அக்கடிதம் அவள் கண்களுக்குச் சமர்ப்பணம் ஆகியதும் நிம்மதிப் பெருமூச்சுடன் காதல் தேவதைக்கு உள்ளத்து நன்றியைப் புன்சிரிப்புடன் உதிர்த்துவிட்டபடி படுக்கையில் சாய்ந்தான், சுதன்.

குறிப்பு: பெற்றோர்களே! பூக்கள் மலரவேண்டும். மொட்டோடு கருகிவிடத் தீப்பந்தமாகாதீர்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *