சோலையின் சுயநல காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 19,245 
 

அரசு மருத்துவக்கல்லூரி!

கல்லூரி விடுதி அறையில் சோலை தன் காதலியின் வீட்டாரைப்பற்றி கோபத்தில் வார்த்தைகளை கொட்டிக்கொண்டிருக்கிறான். அவன் நண்பன் அன்வர் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கிறான், மூன்றாவது ஆண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் சோலயிடம் ஊருக்கு போகவில்லையா என்று கேட்டதற்குத்தான் இந்த கோபம், வெளியே மாணவர்கள் மூட்டை முடிச்சுகளை கட்டி ஊருக்கு கிளம்புவதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.அன்வர் இவனை விட்டுச்செல்ல தயங்கினான், நீ என்ன செய்யப்போகிறாய்? இந்த விடுமுறையை இங்கேயே கழித்துவிட விரும்புகிறாயா?

ஆம் நீ வேண்டுமானால் உன் ஊருக்கு சென்று வா.. எனக்கு போக விருப்பமில்லை, உன் தங்கை, தம்பி,அப்பா,அம்மா, இவர்களெல்லாம் உன்னை எதிர்பார்க்கமாட்டார்களா?

அதற்கு பதில் தர தயாரில்லாமல் இருந்தான் சோலை!.பெருமூச்சுடன் கிளம்பினான் அன்வர்.

சோலை தன் தாய்மாமன் மனைவியின் அக்கா மகளின் மீதுதான் பைத்தியமாய் உள்ளான்.அந்தப்பெண்ணை இவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்பொழுது அந்தப்பெண் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள், இவனிடம் அந்தப்பெண்ணின் அப்பா தினமும் சைக்கிளில் பள்ளிக்கு ஏற்றிக்கொண்டு போய் பின் வீடு சேர்க்கும் வேலையை கொடுத்திருந்தார். அவன் மிக பொறுப்புடன் அந்த வேலையை செய்தது மட்டுமல்ல, அந்தப்பெண்ணின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் தனக்கு பங்கு உண்டு என நினைக்க தொடங்கிவிட்டான், இவன் மெடிக்கலில் இடம் கிடைத்தவுடன் அதை அவர்கள் வீட்டுக்கு தகவல் தெரிவிக்க சென்ற போது அவனை வீட்டுக்குள்ளேயே அனுமதிக்கவில்லை, சரி..சரி.. நல்லா படிக்கற வேலையப்பாரு என்று அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.அதற்குப்பின் இவர்கள் குடும்பத்துடனான உறவுகளிடமிருந்து மெல்ல விலக ஆரம்பித்தனர்.

அவர்கள் ஊர் சாதாரணமான கிராமம், சோலை அப்பாவுக்கு ஒண்ணரை ஏக்கர் தோட்டம் மட்டுமே இருந்தது, இந்த தோட்டத்தில் விளையும் விளைச்சலில்தான் இவனோடு ஒரு தம்பி,தங்கை,அப்பா,அம்மா,ஆத்தா, என அனைவரும் வாழவேண்டும்.

இதில், இவன் ஸ்காலர்சிப் பணத்தில் படித்தாலும் பிற செலவுகளுக்கு,இவர்கள் அனைவரும் அரை பட்டினி கிடக்கவேண்டும், முதலாண்டு முடிந்து வீட்டுக்கு வந்தபொழுது அந்தபெண் வெளி ஊரில் படிப்பதாக கேள்விப்பட்டான், அவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என கிள்ம்பும்போது அப்பா அவனை வேண்டாமென்று தடுத்தார், சோலை அவ்ங்க முன்ன மாதிரி இல்லடா!. அவ்ங்க வசதியானவங்க கூடத்தான் பழகுவாங்கலாம் அப்படீன்னு அவ்ங்க வீட்டம்மா உங்க அம்மாகிட்ட மூஞ்சிக்கு நேரா சொல்லிடுச்சு அந்த பொண்ணை கூட பெரிய படிப்பு படிக்க வெளி ஊருக்கு அனுப்பிச்சுட்டாங்க, அது மட்டும் எப்பவாவது பார்த்தா நல்லாயிருக்கீங்களா மாமா அப்படீன்னு கேட்கும், அதுக்கே அவங்கப்பா மூஞ்சிய தூக்குவாரு. உன்னய நம்பித்தான் உன் தம்பி, தங்கச்சி இருக்குது நல்ல கருத்தா படிச்சு நல்லபடியா நீ வந்தா, நம்ம குடும்பமும் முன்னுக்கு வரும்.அவன் எதுவும் பேசாமல் முகம் இறுகிப்போய் இருப்பான்.அத்தோடு சரி எந்த விடுமுறையிலும் அவன் வீடு செல்லவில்லை.
இவன் தினமும் வயிரெரிந்து அவர்களை திட்டுவதை அவன் நண்பன் அன்வர் மெளனமாகப் பார்ப்பான்.

ஆயிற்று ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்பொழுது சோலையும், அன்வரும், டாக்டர்கள், பிரியாவிடை பெற்று அனைவரும் சென்றுவிட்டனர்.

சோலை விரும்பியோ விரும்பாமலோ, அவன் ஊருக்கு கிளம்பியாகவேண்டும், அன்வர் எங்கோ கிளம்பிச்சென்றவன் தான் வந்தவுடன் கிளம்பினால் போதும் என சொல்லிவிட்டு சென்றுள்ளான்.

அன்வர் வந்துவிட்டான், கையில் ஒரு பொ¢ய பார்சலுடன், வந்தவன் அதை அவன் கையில் வைத்தான், இதை திறந்து பார் என்றான்.திறந்து பார்த்தவன் இந்த ஐந்து வருடங்களாக தூக்கத்தை தொலைத்த அந்த பெண், மருத்துவருக்குரிய ஸ்டெதஸ்கோப், இரத்த அழுத்தமானி, காய்ச்சலை காண்பதற்கு தெர்மா மீட்டர் போன்றவைகளை அழகாக அடுக்கி வைத்து வாழ்த்துச்சொல்லி தன் பெயரை எழுதியிருந்தாள். இதைப்பார்த்த சோலைக்கு, இரத்தநாள்ங்கள் கொத்தித்தன, “நான் டாக்டரானவுடனே காக்கா புடிக்க ஆரம்பிச்சுட்டாங்க” கோபத்தில் கையில் வைத்திருந்த பார்சலை தூக்கி எறிந்தான்.இதைப் பார்த்த அன்வர் மெல்ல அருகில் வந்து நீ ஒரு “சுய நலம் பிடித்த மனிதன்” என்றான். எப்படிச்சொல்கிறாய்? உறுமினான் சோலை,

இந்த ஐந்து வருசம் அந்தப்பெண்ணைப்பத்தியும், அவங்க குடும்பத்தப்பத்தியும் தான் பேசுனயே தவிர என்னைக்காச்சும் உன் தம்பி, தங்கச்சி எப்படி படிக்கிறாங்க? நம்ம அப்பா எப்படி குடும்பத்த நடத்தறாரு, வீட்டில எல்லாரும் சந்தோசமா இருக்காங்களா? இப்படி என்னைக்காச்சும் கவலப்பட்டிருக்கியா? முட்டாள்.. நீ படிச்சு டாக்டராயிட்டயின்னா எப்படி? அந்தப்பொண்ணோட அப்பா உன் செலவுக்கு மாச மாசம் படி அளந்தாரு!, உங்க அப்பாகிட்ட அதைப்பத்தி உங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு, எதுக்கு?உன்னைய மாப்பிள்ளையாக்கிக்கணும்னா? இல்லை, அவங்க ஊருக்கு ஒரு டாக்டர் வேணும்னுதான்,

நீ உன் தம்பி, தங்கைகளை நினைக்கல ஆனா அந்தப்பொண்ணோட குடும்பம் நினைச்சது அதனால முடிஞ்ச உதவிய அவங்க உன் குடும்பத்துக்கு செஞ்சாங்க, உங்கிட்ட எதுவும் சொல்லக்கூடாது அப்படீன்னும், சொல்லியிருக்காங்க எப்படியாவ்து உங்க ஊருக்கு ஒரு டாக்டர் வரணும்னுதான்.

கடைசியா ஒரு கேள்வி நீங்க விரும்பிட்டீங்கன்னா உடனே உன்னைய உள்ளே விட்டு அவங்க பொண்ணோட பேச அனுமதிக்கனுமா? நல்லா இருக்குதய்யா நியாயம், அவங்களுக்குன்னு ஒரு கெளவரவம் கிடையாதா? இப்பக்கூட உனக்கு பொண்ணு தர அவங்களுக்கு விருப்பம்தான். ஆனா இப்ப சொன்னியே ஒரு வார்த்தை “டாக்டாராயிட்டா காக்காபிடிக்க வந்துடுவாங்கன்னு’ இந்த வார்த்தை வரக்கூடாது அப்படீன்னுதான் நினைக்கிறாங்க, நீ உண்மையிலேயே அந்தப்பொண்ணுதான் வேணும்னு நினைச்சியின்னா உன் குடும்பம், உன் சொந்தக்காரங்க எல்லாத்தையும் கூட்டிட்டு போய் எங்களுக்கு உங்க பொண்ணை குடுங்க ! அப்படீன்னு கேளுங்க, அதுதான அவங்களுக்கு மா¢யாதை, நாளைக்கு டாக்டர் மாப்பிள்ளைன்னுடனே புடிச்சு அமுத்திட்டான்னு உங்க சொந்தக்காரங்க பேச மாட்டாங்கள்ள!

எனக்கு அந்தப்பொண்ணோட குடும்பத்தை நல்லாத்தொ¢யும் ஆனா உனகிட்ட சொல்லவேண்டாம்னு ஆரம்பத்துலயே சொல்லிட்டாங்க, ஏன்னா நானும் அவங்க எதிர்பார்க்கற மாதிரி நீ உங்க ஊர் டாக்டராகனும் அப்படீன்னுதான்!.

சோலை அவன் வீசி எறிந்த பொருட்களை பொறுக்கி எடுத்துக்கொண்டிருந்தான்

இப்பொழுது டாக்டர் சோலை அந்த ஊர் மட்டுமல்ல அதைச்சுற்றியுள்ள அனைத்துகிராமங்களுக்கும் ராசியான, மனிதாபமான டாக்டர் என்று பேர். அவன் மனைவி யார் என்று உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை! ஆனால் அவர்களுக்கு மணியான இரண்டு குழந்தைகள் உண்டு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *