‘செல்’லாத காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 12,912 
 

செல்போன் கடையைத் திறந்து தூசி தட்டி ஒழுங்கு செய்தான் குமார். பாக்கெட்டில் இருந்த சீப்பை எடுத்துத் தலை சீவி, கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டான். இன்று மஞ்சு கட்டாயம் வருவாள். முழுப் பெயர் மஞ்சுளாதேவி. நேற்று மாலை கடைக்கு வந்தாள். தினமும் நேரம் தவறாமல் அந்த வழியாகத்தான் ரொம்ப நாளாகப் போய்க்கொண்டு இருக்கிறாள். காதோடு ஒட்டியபடி இருக்கும் செல்போனில் கிசுகிசுத்தவாறே கடந்துவிடுவாள்.

நேற்று வந்தவள், ”பேசிக்கொண்டு இருக்கும்போதே லைன் கட்டாகிவிடுகிறது” என்று கையில் இருந்த செல்போனைக் காண்பித்தாள். அவன் மேலோட்டமாகப் பார்த்தான். சிம்பிள் மேட்டர்தான்… செல்லைப் பிரித்து சிம்மைக் கழற்றி, துடைத்து சிறிய காகிதத் துண்டை சிம்முக்குப் பின் வைத்து, செல்லை மூடி மஞ்சுளாவிடம் கொடுத்தான். அவள் பேரைக் கேட்டான்.

”மஞ்சுளா” என்றாள்.

செல் நம்பரைக் கேட்டான்.

”எதுக்கு” என்றாள்.

”சும்மா, டெஸ்ட் பண்ணிப் பார்க்கத்தான்” என்றான். அவளும் நம்பர் கொடுத்தாள். ஒரு மிஸ்டு கால் கொடுத்தான். ”எதாவது பிரச்னைன்னா நாளைக்கு வாங்க!” என்றான்.

இதிலென்ன கதை இருக்கு பாசு என்கிறீர்களா… இனிமேதான் எல்லாமே!

வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் குமாருக்கு மஞ்சுளாவின் நினைப்புதான். பேரைச் செல்லமாகச் சொல்லிப் பார்த்துக்கொண்டான். அடுத்த நாள் காலையில் இருப்பதிலேயே நல்ல டிரெஸ் அணிந்தான். காத்திருந்தான்… காத்திருக்கும் நேரத்தில்தான் மஞ்சுளா தேவி ‘மஞ்சு’ ஆனது!

மணி பதினொன்றை நெருங்கிவிட்டது. அவள் வரவில்லை. போன் செய்து பார்க்கலாமா என நினைத்தான். கொஞ்சம் ஓவரோ எனத் தோன்றியது. ‘பரவாயில்லை… இதுவும் கஸ்டமர் சர்வீஸ்தானே’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். நேற்று மிஸ்டு கால் கொடுத்து நம்பரை அறிந்துகொண்ட தனது புத்திசாலித்தனத்தைப் பாராட்டிக்கொண்டான். மஞ்சுவின் நம்பரைத் தயக்கத்துடன் போட்டு, உடனே கட் செய்தான். சற்று நேரம் காத்திருந்தான். எந்தப் பதிலும் இல்லை. மீண்டும் தொடர்புகொண்டான்… காத்திருந்தான். எதிர்முனையில் ‘நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்’ என்று வந்தது.

அடுத்து சில கஸ்டமர்களைப் பார்த்து அனுப்பிவைத்தான்.

திடீரென்று ‘ஒரு எஸ்.எம்.எஸ். கொடுத்துவைப்போமே’ என்று பொறி தட்டியது. முதல் செய்தி ஜென்டிலாக இருக்கட்டுமே என்று, ‘ஹலோ குட் டே’ என்று அனுப்பினான். பதற்றத்துடன் காத்திருந்தான்.

மஞ்சு செல்லில் இருந்து ரிப்ளை ‘ஹா… ய்ய்யீ’ என்றது.

‘அட!’ என ஆர்வத்துடன், யோசித்து ‘என்ன சாப்டீங்க?’ என்று அனுப்பினான்.

lr r!

ஓஹோ… லெமன் ரைஸா? ungalukku enna kalar pidikkum?

re ye!

ரெட், யெல்லோவா? குனிந்து தன் டிரெஸ்ஸைப் பார்த்துக்கொண்டான். நல்லவேளை ரெட் டி-ஷர்ட்.

yenakkum athuthaan pidikkum!

அனுப்பிவிட்டுக் கொஞ்சநேரம் சும்மா இருந் தான். 10 நிமிடங்களுக்கு மேல் ஆகி ‘அவ்ளோதானா’ என நினைத்தபோது வந்தது ரிப்ளை.

some text missing

‘ச்சே… மஞ்சு செல்லம் ஏதோ அனுப்ப நினைத்திருக்கிறாள். நம்ம பேஸிக் மாடல் போன்ல அட்வான்ஸ் டைப் மெசேஜ் தெரியலை. செல்லை மாத்தணும். N சீரீஸ் போக வேண்டியதுதான்!’ என சமாதானம் சொல்லிக்கொண்டவன், ennai pidichirukka? என அனுப்பிவிட்டுத் தவிப்புடன் உட்கார்ந்திருந்தான்.

அவள் ரிப்ளை: s… y… yaah!

தன்னையே நம்பாமல் மகிழ்ச்சிக் களிப்பில் மிதந்தான்… ‘நல்லவேளை… செல்போன் கடை வேலையை விட்டுவிட்டு செக்யூரிட்டி சர்வீஸ் எதிலாவது சேரலாம்’ என்ற முடிவை தள்ளிப் போட்டது இந்த தேவதைக்காகத்தான் இருக்குமோ. ‘எல்லாமே கூடி வருகிறது’ என நினைத்துக்கொண்டான்.

அடுத்த மெசேஜுக்குத் தவித்தான்… யோசித்தான். கவிதையா எதாவது அனுப்பலாம் என்று யோசித்தால், புத்தகங்களில் படித்த கவிதை எதுவும் அவசரத்துக்கு ஞாபகத்துக்கு வரவில்லை. நேரா விஷயத்துக்கு வந்துடுவோம்னு,

‘indru maalai santhikkalaamaa?’ என அனுப்பினான்.

laaa mmmn எனப் பதில் வந்தது.

உடனே இவன் yenge என அனுப்பினான்.

amm kvl…6… 2… 7… எனப் பதில்.

‘ஆ அம்மன் கோயில்… இன்று புதன் கிழமை என்பதால் கோயிலில் கூட்டம் இருக்காது!’ – மஞ்சுவின் புத்திசாலித்தனத்தை மனதுக்குள் மெச்சிக்கொண்டான். ‘ஆறிலிருந்து ஏழா… ஓ.கே. கடையை அடைச்சிட்டுப் போய்விட வேண்டியதுதான்!’

திடீரென ‘காதலிப்பது இவ்வளவு ஈஸியா?’ என்று தோன்றியது. சந்தேகத்தை அடுத்த நொடியே ஒதுக்கினான். மீண்டும் சந்தேகம் வந்தது யாராவது வேண்டும் என்றே கலாய்க்கிறார்களா?

kandippaa amman koovilil kaaththiruppeen என அனுப்பினான்.

g… p… s… என வந்தது.

‘ஓ! காட் பிராமிஸ்!’ உடனே கடை ஷட்டரை இழுத்துவிட்டான். பூட்டைப் போட்டான். பக்கத்துக் கடை, எதிர்க் கடையில் இருந்து எல்லாம் இவனையே திகைப்புடன் பார்க்க… இவன் பார்வையில் எதுவுமே படவில்லை. உலகத்திலேயே தானும் மஞ்சு வும் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டான். ரெட் யெல்லோ காம்பினே ஷனில் டிரெஸ் செய்து கொண்டவன், பலமுறை கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டான். அம்மா கேட்டாள்… ‘என்னடா கடைக்குப் போகலையா?’

இவன் காதில் ஏதாவது விழுந்தால்தானே!

5.30-க்கே சைக்கிளில் கிளம்பி அம்மன் கோயில் சேர்ந்தான். அம்மனிடம் வேண்டிக்கொண்டான். தட்டில் 5 ரூபாய் போட்டான். விபூதி, குங்குமத்தைப் பக்தியுடன் இட்டுக்கொண்டான். அங்கிருந்த ஒரு கல்லின் மேல் உட்கார்ந்துகொண்டான்… காத்திருந்தான்… காத்திருந்தான்…

கொட்டுகொட்டு என்று உட்கார்ந்திருந்தான். நேரம் ஆக ஆகப் பயம் வந்தது. மஞ்சு ஏமாற்றிவிடுவாளோ எனத் தோன்றியது. பூசாரி கோயில் கேட்டைப் பூட்டிவிட்டு பூட்டை இழுத்துப் பார்த்த படியே, ‘கிளம்பவில்லையா’ என்பது போல் பார்த்தார். இவனுக்கு அழுகையாக வந்தது. மஞ்சு ஏமாற்றிவிட்டாள் என முடிவு செய்தான்.

மஞ்சுவின் செல்லுக்கு கால் போட்டான். எதிர் முனையில் ‘நீங்கள் தொடர்புகொண்ட எண் தற்போது அணைத்துவைக்கப்பட்டு இருக்கிறது’ என்ற நீண்ட குரலோசையைப் புறக்கணித்தான். ‘சே… நாளைக்கு அவளை நேரில் பார்த்து நல்லா கேட்கணும்’ எனக் கோபத்துடன் நரம்புகள் தெறிக்க சைக்கிளை வேகமாக மிதித்து வீடு வந்து சேர்ந்தான்.

காலையில் கடைக்குப் போகாமல் படுக்கையிலேயே கிடந்தான். மதியம் அம்மாதான் அவனை எழுப்பி கடைக்கு அனுப்பிவைத்தாள். ரெட், யெல்லோ கலர் உடைகளைத் தவிர்த்தான். இன்னும் மஞ்சு மீது கோபம் அடங்கவில்லை அவனுக்கு. கடையைத் திறந்து டேபிள், சேர், ஷோகேஸ் எல்லாம் துடைத்துவிட்டு, சேரில் உட்கார்ந்துகொண்டான். பாக்கெட்டிலிருந்து செல்லை எடுத்து வெளியேவைத்தான். ‘எதற்கும் ஒரு முறை முயற்சி பண்ணிப் பார்க்கலாமா?’ என தன்னையே கேட்டுக் கொண்டவன், மஞ்சுவின் நம்பரைப் போட்டான். ‘நீங்கள் தொடர்புகொண்ட எண் தற்போது அணைத்துவைக்கப்பட்டு இருக்கிறது’ என்று அதே குரல் கேட்டது.

அங்கு ஏதோ பழகிய வாசனை அடிப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தால் மஞ்சுவும் அவளது தோழியும் செல்போனுடன் நின்றுகொண்டு இருந் தார்கள். சட்டென கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டே, ‘என்ன வேண்டும்’ என்று இருவருக்கும் பொதுவாகக் கேட்டான்.

”சார்! இது திரும்ப ரிப்பேர் ஆகிவிட்டது” என்று மஞ்சுவின் தோழிதான் பேசினாள். ‘ஏன் இவள் பேச மாட்டாளாமா?’ என தனக்குள்ளே கேட்டுக்கொண்டான். செல்போனின் கேஸ் உடைந்து விரிசல் விட்டிருந்தது. உயரத்திலிருந்து விழுந்திருக்க வேண்டும்.

”எப்படி ஆச்சு?” குரலைக் கடுமையாக்கிக் கொண்டு கேட்டான்.

இதற்கும் அவள் தோழிதான் பதில் சொன்னாள். ”நேத்திக்கு மதியம் நாங்க லஞ்ச் சாப்பிட்டு அங்கிருந்த மேடை மேல செல்போனை வெச்சுட்டு கை கழுவிட்டுப் பார்த்தா, இவளோட செல்போனை ஒரு குரங்கு தூக்கிட்டு ஓடிடுச்சு. பயத்துல நாங்க கத்தினோம். அதுவும் பயந்து பக்கத்து மரத்து மேல ஏறி உட்கார்ந்துடுச்சு. ஆபீஸ் ஸ்டாஃப்களும் என்ன என்னவோ ஐடியா சொன்னாங்க. எங்க பாஸ் ஆஞ்சநேயர் பக்தர். அதனால ஒரு அளவோடுதான் செய்ய முடிஞ்சது.

அந்த நேரம் பார்த்து மொபைல்ல மெசேஜ் டோன் அடிச்சுட்டே இருக்கவும் குரங்கு பயத்துல பட்டனைத் தாறுமாறா அழுத்திட்டே இருந்துச்சு. ஒருவழியா பேட்டரில சார்ஜ் டவுன் ஆனதும் போன் தானா ஆஃப் ஆயிடுச்சு. குரங்குக்கும் அது மேல இன்ட்ரஸ்ட் போயிடுச்சு போல. ‘எல்லோரும் வீட்டுக்குப் போங்க’ங்கிற மாதிரி போனைத் தூக்கி கீழே போட்டுடுச்சு. அதான்!” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

இவனுக்குப் பகீரென்று இருந்தது. ‘ச்சே! நாம குரங்குக்குதான் மெசேஜ் அனுப்பி இருந்தோமா? ஐயோ! வெளியில சொன்னா மானம் போயிடுமே!’

செல்போன் கேஸை மாற்றிக் கொடுத்தான். பணத்தை வாங்கிக்கொண்டான். அவர்களைப் பார்ப்பதற்கே வெட்கப்பட்டான்.

இரவு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தூங்கப் போகும் வரை யாரையும் பார்ப்பதற்கே அவனுக்குக் கூச்சமாக இருந்தது. அவஸ்தையாக வெட்கப்பட்டுக்கொண்டு இருந்தான். ஒருபுறம் உள்ளுக்குள் சிரிப்பும் பொங்கிக்கொண்டு வந்தது.

தூக்கம் வராமல் புரண்டு படுத்துக்கொண்டு இருந்தவனுக்கு ஒரு மெசேஜ் வந்தது… மஞ்சுவின் செல்லில் இருந்துதான்!

ithukku perthaan m.ms-aa?

அவனுக்குக் கேள்வியும் புரிந்தது… மஞ்சுவின் எண்ணமும் புரிந்தது!

– செப்டம்பர், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *