சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 16,293 
 

‘சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனத்தில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது.

வயது இருபத்திரண்டு; பெண் குழந்தை. வீட்டில் வரன் பார்க்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். ஜாதகம், பூர்வீகம், குலம் கோத்திரம், பதவி, சம்பளம் இத்யாதி இந்த முயற்சிகளும் அதன் பின்னிருந்த பரிவும் கவலையும் அவளுக்கு ஒருவிதத்தில் பிடித்துத்தான் இருந்தது. என்றாலும், இது சம்பந்தமாக அவள் இளம் மனத்திலும் சில அபிப்பிராயங்களும் கொள்கைகளும் இருக்கக் கூடுமென்றோ, அவற்றுக்கு ஒரு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றோ தன் பெற்றோர் சிறிதும் நினைக்காதது அவளுக்குச் சற்று எரிச்சலையும் அளித்தது. அதே சமயத்தில் இது சம்பந்தமாகத் தன்னை அவர்கள் விசாரித்தால் தன்னால் தீர்மானமான, துல்லியமானதொரு பதிலைச் சொல்ல முடியுமாவென்று சந்தேகமாகவும் இருந்தது.பெரியோர் களுடைய கருத்துக்கள் எவ்வளவுக்கெவ்வளவு திடமான கனபரிமாணங்களும் உண்மையின் தீவிரமும் உடையதாக இருந்தனவோ, அவ்வளவுக்கவ்வளவு அவளுடைய கருத்துக்கள் அவளுக்கே புரியாததொரு புதிராகவும், பிறர் கேட்டால் சிரிப்பார்களோவென்ற பயத்தை மூட்டுபவை யாகவும் இருந்தன.

அவன் சிவப்பாக இருந்தான். அவளுடைய கனவுகளில் இடம் பெற்றிருந்த இளைஞன், சிவப்பென்றால் ஆங்காரச் சிவப்பு இல்லை; மட்டான, பதவிசான சிவப்பு. அவன் உயரமாக இருந்தான் – நீலாவைவிட ஓரிரு அங்குலங்கள் உயர மாக, அவள் செளகரியமாக தன் முகத்தை அவன் மார்பில் பதித்துக் கொள்ளக் கூடிய உயரம். வெட்கத்தில் தாழ்ந்திருக்கும் அவள் பார்வை சற்றே நிமிரும் சமயங்களில் அவளை உவகையிலும், சிலிர்ப்பிலும் ஆழ்த்தும் உயரம். கடைசியாக, ஆனால் முக்கியமாக, அவனுக்கு மீசையோ, தாடியோ இருக்கவில்லல் மழுமழுவென்று ஒட்ட க்ஷவரம் செய்யப்பட்ட சுத்தமான ‘மாசு மறுவற்ற’ முகம் அவனுடையது. அந்த இளைஞனுடன் அவள் தன் கனவுகளில் தனக்கு மிகவும் பரிச்சயமான இடங்களிலும், தான் பார்த்தேயிராத பல புதிய இடங்களிலும், மீண்டும் மீண்டும் அலைந்து திரிவாள். ஜோடியாக அவர்கள் பார்த்து மகிழ்ந்த பேச்சுக்கள்தான் எத்தனை! ஆனால் அந்தக் கனவு இளைஞன் எவ்வளவுக் கெவ்வளவு அருகில் இருப்பதாகத் தோன்றினானோ, அவ்வளவுக்கவ்வளவு எட்டாத் தொலைவில் இருப்பதாகவும் தோன்றினான். எவ்வளவுக்கெவ்வளவு அவனைப் பற்றித் தெரியுமென்று தோன்றியதோ, அவ்வளவுக்கவ்வளவு அவனைப் பற்றித் தெரியாதென்றும் தோன்றியது. ஓயாமல் அலைபாயும் நீர்ப்பரப்பில் கோணல் மாணலாக நெளியும் ஒரு பிம்பம் அவன்; வேகமாகச் சென்று மறைந்துவிட்ட பஸ் ஜன்னலில் பார்த்த முகம் – அவள் அவனைப் பார்க்கவும் செய்தாள்; பார்க்கவுமில்லை.

நீலா ஒரு சர்க்கார் ஆபீசில் வேலை பார்த்து வந்தாள் – குமாஸ்தாவாக. அவளுடைய ஆபீசில் நிறைய இளைஞர்கள் இருந்தார்கள். ஏன், அவளுடைய செக்‌ஷனிலேயே ஒருவன் இருந்தான். எல்லாம் – அவள் பார்வையில் படு சாதாரணமாக ‘சீப்’ ஃபெல்லோஸ். அவளைப் போன்ற ஓர் அரிய ரத்தினத்தைப் புரிந்து கொள்ளவோ, அதன் அருமை அறிந்து போற்றிப் பாதுகாக்கவோ லாயக்கில்லாதவர்கள். இந்த மட்டரகமான கும்பலிலிருந்து அவளுக்கு விடுதலை அளிப்பதற்கென்று அவதாரம் எடுத்திருப்பவன்தான் அவளுடைய கனவு இளைஞன்.

“ஓ, என் அன்புக்குரியவனே, எங்கிருக்கிறாய் நீ? நான் கேட்கும் பாடல்களைக் கேட்டுக் கொண்டு, படிக்கும் பத்திரிக்கைகளைப் படித்துக் கொண்டு, பார்க்கும் திரைப் படங்களைப் பார்த்துக் கொண்டு, நடக்கும் சாலைகளில் நடந்து கொண்டு, கவனிக்கும் போஸ்டர்களைக் கவனித்துக் கொண்டு, பயணம் செய்யும் டாக்ஸிகளிலும், ஆட்டோ ரிக்க்ஷக்களிலும் பயணம் செய்து கொண்டு, ஏறியிறங்கும் படிக்கட்டுகளில் ஏறியிறங்கி, உபயோகிக்கும் ஹேர் ஆயிலையும், டூத் பேஸ்டையும் உபயோகித்துக் கொண்டு, அருந்தும் பானங்களை அருந்திக் கொண்டு, என்னைத் தாக்கும் ஓசைகள், மணங்களினால் தாக்கப்பட்டு, சிலிர்க்க வைக்கும் காட்சிகளைக்கண்டு சிலிர்ப்பில் ஆழ்ந்து, வியர்க்க வைக்கும் வெயிலில் வியர்த்துக் கொண்டு, விசிறும் தென்றலினால் விசிறப்பட்டு, நனைக்கும் மழையிலும் நிலவொளியிலும் நனைந்து கொண்டு, பீடித்திருக்கும் இதே கனவுகளினால் பீடிக்கப்பட்டவனாய்- எங்கிருக்கிறாய் நீ? வா, வந்துவிடு-ப்ளீஸ்! என்னை ஆட்கொள், என்னைக் காப்பாற்று-என்னைச் சுற்றியிருக்கும் இந்த மனிதர் களிடமிருந்து, இந்த இடங்களிலிருந்து, இந்தப் பொருள்களிலிருந்து, என்னிடமிருந்தே…’

ஆர்ப்பரிக்கும் எண்ண அலைகள்; திமிறித் துள்ளும் உள்ளம்.

தினசரி காலையில் பஸ் ஸ்டாண்டில், ஒரு நீண்ட க்யூவின் மிகச் சிறிய பகுதியாய்த் தன்னை ஆக்கிக் கொள்ளும் கணத்தில், அவளுடைய இதயத்தை ஒரு விவரிக்க முடியாத சோகமும், தவிப்பும், கவ்விக் கொள்ளும்- ‘இதோ மீண்டும் இன்னொரு நாள் நான் பஸ் ஸ்டாண்டில் வந்து நிற்கிறேன்; பஸ்ஸில் ஏறி ஆபீஸ் போகிறேன்-சலித்துப் போன இதே பழைய முகங்களுடன்’ என்று அவள் நினைத்துக் கொள்வாள். சாலையில் படபடவென விரையும் கார்கள், ஸ்கூட்டர்கள், இவற்றை அவளுடைய பார்வை ஆற்றாமையுடன் துரத்தும்; துழாவும். பஸ்ஸில் செல்லும்போது பஸ்ஸை ஓவர் டேக் செய்து கொண்டு செல்லும் வாகனங்களையும் இந்த வாகனங்களுக்குள் அமர்ந்திருக்கும் மனிதர்களையும் அவளுடைய பார்வை நீவும்; அணைக்கும். இந்தக் கார்கள் ஸ்கூட்டர்கள், அதோ அந்த போர்ட்டிகோக்கள், பார்கிங் லாட்கள், அடுக்கு மாடிக் கட்டிடங்கள், ஜன்னல்கள்-இவை உள்ள உலகம் தான் கனவு இளைஞன் வசித்த உலகம்-பஸ் கியூக்களுக்கும், டிபன் பாக்ஸுகளுக்கும் அப்பாற்பட்ட உலகம். நீண்ட கியூக்களில், கூட்டமான பஸ்களில், நிரந்தரமாகச் சிறையாகிப் போன அவளை, அவன் எப்படித்தான் கண்டு கொள்ளப் போகிறானோவென்று அவள் பெருமூச் செறிவாள். அவள் கையிலிருந்த நேற்று ஆபீஸ் கிளப்பிலிருந்து எடுத்து வந்திருந்த-பத்திரிகையின் பின்னட்டையில், சிகரெட் விளம்பரத்தில், தன்னைப் போன்ற பெண்ணொருத்தியை ஒரு கையால் அணைத்தவாறு, இன்னொரு கையில் சிகரெட்டை ஓயிலாகப் பிடித்திருக்கும் இளைஞன் கூட ஓரளவு கனவு இளைஞனின் சாயலுள்ளவன்தான். சிகரெட், ஷேவிங் லோஷன், ஹேர் ஆயில் விளம்பரங்களில் இடம் பெரும் இந்த இளைஞர்கள் கூடவெல்லாம் அவள் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! இவர்கள் கனவு இளைஞனின் நண்பர்களாகத்தான் இருப்பார்கள். அவனுடைய விலாசம் இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

பிறகு ஆபீஸ், கையிலிருந்த பத்திரிகையைக் குப்புசாமியின் மேஜைமீது வைத்து விட்டு, அட்டென்டன்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்திட்டுவிட்டு, அவள் தன் இடத்தில் உட்காருவாள். செக் ஷனில் வேலை செய்யும் சிலர் ஏற்கனவே வந்திருப்பார்கள். மற்றவர்களும் ஒவ்வொருவராக வந்து உட்காருவார்கள். வேலை தொடங்கும். இரவெல்லாம் நிசப்தமாக, நிச்சலனமாக இருந்த அந்த அறை, திரை தூக்கப்பட்ட நாடக மேடை போலக் குபுக்கென்று உயிர் பெற்று விழித்துக் கொள்ளும்-குரல்கள், ஓசைகள், அசைவுகள்-நிற்கும், நடக்கும், உட்காரும் மனிதர்கள். இவர்களை இணைக்கும் சில பொதுவான அசேதனப் பொருள்கள். படபடவெனப் பொரிந்து தள்ளும் டைப்ரைட்டர்கள்; சரசரக்கும், மொடமொடக்கும் காகிதங்கள்; இக்காகிதங்களின் மேல் தம் நீல உதிரத்தை எழுத்து வடிவங்களாக உகுத்தவாறு தாவும், ஊரும், தள்ளாடும் பேனாக்கள்; ‘க்ர்ரிங்க்…க்ர்ரிங்க்’ எனத் தன் இருத்தலையும் ஹோதாவையும் அடிக்கடி கர்வத்துடன் பறைசாற்றும் தொலைபேசி; ‘பொத் பொத்’ தென்று வைக்கப்படும், திறக்கப் படும் ரிஜிஸ்தர்கள்; டபால் டபாலென்று திறக்கப்படும், மூடப்படும் இழுப்பறைகள், அலமாரிகள்; தரையுடன் உராயும் நாற்காலிக் கால்கள், காற்றில் சுவரில் உராயும் ஒரு காலண்டர், ஒரு தேசப்படம், ஒன்றோடொன்று உராயும், மோதும் இணையும், இணையாத ஒலிகள்….

ஒரே விதமான ஓசைகளின் மத்தியில், ஒரே விதமான மனிதர்களின் மத்தியில், ஒரே விதமான வேலையைச் செய்து கொண்டு சே! இதில் பிரமாதமான, கெடுபிடியும் அவசரமும் வேறே. “மிஸ் நீலா! டெபுடேஷன் ஃபைல் கடைசியாக யார் பெயருக்கு மார்க் செய்யப்பட்டிருக்கிறது?” “மிஸ் நீலா! ஆர்.வி. கோபாலன் டிரான்ஸ்பர் ஆர்டர் டிஸ்பாச்சுக்குப் போய் விட்டதா? “மிஸ் நீலா! பி.என். (பென்ஷன்) தலைப்பில் புதிய ஃபைல் திறக்க அடுத்த நம்பர் என்ன?” கேள்விகள், கேள்விகள், கேள்விகள். அவர்கள் தன்னைக் கேட்காதபோது, அவள் தன்னையே கேட்டுக் கொள்வாள்- மிஸ் நீலா! உனக்கு ஏன் பைத்தியம் பிடிக்கவில்லை?- மிஸ் நீலா! நீ எதற்காக இந்த அறையில், இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாய்?- மிஸ் நீலா! உனக்கும் இந்த மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம்?

விதம் விதமான மனிதர்கள். வெவ்வேறு ருசிகளும் போக்குகளும், சாயல்களும், பாவனைகளும் உள்ள மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட மட்டத்தில், குறிப்பிட்ட வட்டத்தில் சுழலும் மனிதர்கள். சலிப்பூட்டும் மனிதர்கள்!

அந்த செக்க்ஷனில் இருந்தவர்களிலேயே வயதானவர் தண்டபாணி. நெற்றியில் விபூதி, வாயில் புகையிலை. முகத்தில் எப்போதும் ஒரு கடுகடுப்பு. பெண்கள் வேலைக்கு வருவதைப் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லாத காரணத்தால், நீலா என்ற பெண்ணொருத்தி அந்த செக்க்ஷனில் வேலை செய்வதை உணர்ந்ததாகவே அவர் காட்டிக் கொள்வதில்லை. செக்க்ஷனில் உள்ள மற்றவர்கள் ஒரு பெண் இருக்கிறாளேயென்று கூறத் தயங்கும் சொற்களை, அலசத் தயங்கும் ‘டாபிக்’குகளை அவர் வெகு அலட்சியமாக கூறுவார். அலசுவார்; வேண்டுமென்று தன்னை அதிர வைக்கும் நோக்கத்துடனேயே அவர் அப்படிப் பேசுவதாக நீலாவுக்குத் தோன்றும்.

குப்புசாமி இன்னொரு ரகம். செக் ஷனில் ‘பத்திரிகை கிளப்’ அவர்தான் நடத்தி வந்தார். அவரே கிட்டத்தட்ட ஒரு பத்திரிகை மாதிரிதான்; சதா ‘மாட்டர்’ தேடி அலையும் பத்திரிகை பியூன் பராங்குசத்தின் சம்சாரத்துக்குக் கால் நோவென்றால் அதற்குப் பரிகாரமென்னவென்று… ஹைஸ்கூல் படிப்பை முடித்துவிட்ட கணபதிராமனின் மகன் மேற்கொண்டு என்ன செய்யக் கூடுமென்று – அமெச்சூர் நடிகரான சீனிவாசன் எந்த மேநாட்டு நடிகர்களைப் பின்பற்றலாமென்று- அடிக்கடி லேட்டாக வரும் கேசவன் தன் தினசரி அட்டவணையை எப்படியெல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாமென்று-அவர் ஒவ்வொருவருக்கும் வலிய ஆலோசனை வழங்குவார். நீலாவிடமும் அவர் பேசுவார். “இன்றைக்கு என்ன சீக்கிரமா வந்துட்டே போலிருக்கே!” என்கிற ரீதியில் அவர் அவளிடம் வெகு சௌஜன்யத்துடன் பேச முற்படும்போது அவளுக்கு எரிச்சல்தான் வரும். தண்டபாணி ஓர் அமுக்கு என்றால், குப்புசாமி ஓர் அதிகப் பிரசங்கி.

கணபதிராமன், சீனிவாசன், கேசவன், பராங்குசம்- இவர்களையும் கூட ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்துக்காக அவள் வெறுத்தாள். கணபதிராமன், சதா அவளுடைய வேலையில் ஏதாவது தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும், சின்னப்பாப்பாவின் கையை பிடித்து ‘அ’ எழுதச் சொல்லித் தருவதைப் போல ஒவ்வொரு விஷயத்தையும் ஆதியோடந்தம் சொல்லித் தர முற்படுவதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. சீனிவாசன், “மிஸ் நீலா!” என்று உத்திரவிடும்போதெல்லாம், “இஃப் யூ டோண்ட் மைண்ட்”, “கைண்ட்லி” என்ற சொற்களைப் பயன்படுத்துவது மரியாதையாகத் தோன்றாமல், ஒரு நாசூக்கான ஏளனமாகவே தோன்றியது. கேசவனுடைய பெரிய மனுஷத் தோரணையும், யாரையும் லட்சியம் செய்யாத (அவள் உட்பட) அலட்சியப் போக்கும் அவளுக்கு அவன்பால் வெறுப்பை ஏற்படுத்தின. பியூன் பராங்குசத்தைப் பொறுத்தவரையில் ரிஜிஸ்தர் களையும் ஃபைல்களையும் பல சமயங்களில் அவன் அனாவசியமான் வேகத்துடன், ஓசையுடன் தன் மேஜை மீது எறிவதாக அவளுக்குப்பட்டது. சில சமயங்களில் அவள் வராந்தாவில் நடந்து செல்லும் போது, வேறு பியூன்களிடம் தன்னைப் பற்றி மட்டமாக ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருப்பதாகப் பட்டது.

செக்க்ஷனில் இருந்த யாரையுமே அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவளுக்கு மிக அதிகமாகப் பிடிக்காத ஆசாமி கேசவன்தான். செக்க்ஷனில் உள்ள மற்றவர்கள் அவனை ஒரு செல்லப் பிள்ளைபோல நடத்துவதும், அவளுக்கு மீறி அவனைத் தூக்கிவைத்துப் பேசுவதும் அவளுக்குப் பொறுப்பதில்லை. இவர்கள் கொடுக்கும் இடத்தினால்தான் ‘இதற்கு’ திமிர் அதிகமாகிறது என்று அவள் நினைப்பாள்.

— லக்கி ஃபெல்லோ சார், நோ கமிட்மெண்ட்ஸ், நோ வொர்ரீஸ்.

— ஒரு மாசத்திற்கு எவ்வளவு படம் பார்ப்பாய் நீ, கேசவன் ?

— தனியாகப் பார்ப்பாயா, அல்லது ஸ்வீட் கம்பெனி ஏதாவது ?

— இந்த காலத்துப் பசங்களெல்லாம் பரவாயில்லை சார். இவங்க வயசிலே நாம் இருந்தபோது என்ன என்ஜாய் பண்ணியிருப்போம், சொல்லுங்கோ ?

அவனுடைய இளமைக்கும் சுயேட்சைத் தன்மைக்கும் அவர்கள் அளிக்கும் அஞ்சலி. தம் இறந்த கால உருவத்தை அவன் வடிவத்தில் மீண்டும் உருவகப்படுத்தி பார்த்து மகிழும் முயற்சி. அவளுக்குச் சில சமயங்களில் பொறாமையாகக் கூட இருக்கும். தனக்குக் கிடைக்காத ஒரு விசே ஷக் கவனிப்பும் ஸ்தானமும் அவனுக்குக் கிடைத்திருப்பது அவள் நெஞ்சை உறுத்தும். இது போன்ற சமயங்களில் இந்தப் பொறாமையும் உறுத்தலும் வெளியே தெரிந்து விடாமல் அவள் மிகச் சிரமப்பட்டுத் தன் முகத்தையும் பாவனைகளையும் அலட்சியமாக வைத்துக் கொள்வாள்-எனக்கொன்றும் இதொன்றும் லட்சியமில்லை என்பது போல.

ஒரு நாள் மாலை குப்புசாமி கேசவனிடம் பேசிக் கொண்டிருந்தப்போது அவள் இப்படிதான் மூஞ்சியை அலட்சியமாக வைத்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு எந்த மாதிரி வைஃப் வரணுமென்று ஆசைப்படுகிறாய்? ” என்று குப்புசாமி கேட்டார்.

“எந்த மாதிரியென்றால்? ”

“அழகானவளாகவா? ”

“அழகானவளாக வரணுமென்று யாருக்குத்தான் ஆசை யிருக்காது ”

“ரொம்ப அழகாயிருந்தாலும் அப்புறம் மானேஜ் பண்றது கஷ்டம்.”

கேசவன் கடகடவென்று சிரித்தான். “எனக்கு இதிலே உங்களளவு அனுபவம் இல்லே சார்” என்றான். இப்படி அவன் சொன்னபோது தன் பக்கம் அவன் பார்வை திரும்பியது போல நீலாவுக்குத் தோன்றியது. இதை ருசுப்படுத்திக் கொள்ள அவன் பக்கம் திரும்பவும் தயக்கமாக இருந்தது.

அன்று வீட்டுக்குச் சென்றதும், அவள் முதல் வேலையாகத் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். கேசவன் பார்வை விழுந்த தன் மாலை நேரத்து முகம் எப்படியிருந்ததென்று தெரிந்து கொள்வதற்காக. அது களைத்திருந்தது. வியர்த்திருந்தது. சற்றே புழுதி படிந்திருந்தது. துடிப்பும் பிரகாசமும் இன்றி மந்தமாக இருந்தது.

இதுதான் அவளுடைய முகம், அவளுடைய அழகென்று கேசவன் தீர்மானித்து விட்டானோ? இந்த எண்ணம் தோன்றிய மறுகணமே, சேச்சே, இவன் பார்க்கும்போது என் முகம் எப்படியிருந்தாலென்ன, இவன் என்னைப் பற்றி என்ன நினைத்தாலென்ன, என்றும் நினைத்தாள். அவனைப் பற்றி மறக்க முயன்றாள்.

ஆனால், மறுநாள் காலை ஆபிசுக்குக் கிளம்பும்போது வழக்கத்தைவிட அதிகச்சிரத்தையுடனும் பிரயாசையுடனும் அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். ‘அவனுக்காக அல்ல, அவன் மூலம் தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காக’ என்று அவள் சொல்லிக்கொண்டாள். ‘அவனுடைய அலட்சியத்தைப் பிளந்து அவனைச் சலனப்படுத்துவதற்காக, அவனுடைய கவனத்தைக் கவர்ந்து அதன் மூலம் என் வெற்றியை ஸ்தாபிப்பதற்காக’- இந்தப் போக்கிரித்தனமான எண்ணம் அவள் முகத்தில் ஒரு புன்னகையை எழுப்பியது. அன்று பஸ்ஸில் செல்லும் வழியெல்லாம் அவள் முகத்தில் ‘பளிச் பளிச்’சென்று புன்னகை ரேகைகள் தோன்றி மறைந்த வண்ணம் இருந்தன.

அவள் செக்‌ஷனுக்குள் நுழையும்போது கேசவனின் நாற்காலி காலியாக இருந்தது. அட்டெண்டன்ஸ் மார்க் பண்ணி விட்டுத் தன் இடத்தில் வந்து உட்காரும்போது, ‘இன்று ஒருவேளை மட்டம் போட்டு விட்டானோ?’ என்று நினைத்தாள்.

ஆனால், அவன் மட்டம் போடவில்லை. பத்தே முக்கால் மணிக்கு வந்தான். தாமதமாக வந்த குற்ற உணர்வினால் பீடிக்கப்பட்டவனாய், அவசர அவசரமாக ஃபைல் கட்டுகளைப் பிரித்து, வேலையைத் துவக்கினான்.

நீலா கைகளை உயர்த்தித் தலையில் வைத்திருந்த பூச்சரத்தைச் சரிபாத்துக் கொண்டாள். ‘கிளிங்க்…கிளிங்க்’ என்று வளையல்கள் குலுங்கின. அவன் நிமிரவில்லை. கையிலிருந்த பென்சிலைத் தரையில் நழுவ விட்டுவிட்டு மேஜைக்கு முன்புறம் போய் உருண்டு விழுந்துள்ள அதை எடுக்கும் சாக்கில் அவள் இடத்தை விட்டு எழுந்தாள்–சரக், சரக்-குனிந்து பென்சிலைப் பொறுக்கினாள்–கிளிங்க்- கிளிங்க்–ஊஹும், அவன் நிமிரவேயில்லை. அவளுக்கு எரிச்சலாக வந்தது. இன்று திடீரென அவன் கவனத்தைக் கவருவது அவளுக்கு ஒரு முக்கியமான விஷயமாக-கௌரவப் பிரச்னையாக ஆகிவிட்டிருந்தது. அடுத்தபடியாக ஒரு ரிஜிச்தரை வேண்டுமானால் கீழே போடலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோதுதான், சீனிவாசன் அவளைக் கூப்பிட்டார்.

“மிஸ் நீலா! இஃப் யூ டோண்ட் மைண்ட்-ஒரு லெட்டர் கம்பேர் செய்யணும்”.

அவள் இடத்திலிருந்து எழுந்தாள். கேசவனின் மேஜைக்கு மிக அருகில் உரசினாற்போல புடவை சலசலக்க, வளையல் சப்திக்க, பவுடர் மணக்க, (இன்று கொஞ்சம் பவுடர் அதிகமாகவே பூசிக் கொண்டிருந்தாள்) நடந்து சென்று அவள், சீனிவாசனின் மேஜையை அடைந்தாள். கேசவனின் பேனா சற்று நின்றது. அவன் நிமிர்ந்து தன்னைப் பார்ப்பதை அவள் உணர்ந்தாள். ‘பாரு, நன்றாய்ப் பாரு’ என்று நினைத்தவாறு, அவள், சீனிவாசனருகில் இருந்த காலி நாற்காலியில் அமர்ந்து அவரிடமிருந்து கடித நகலை வாங்கிப் படிக்கத் தொடங்கினாள். அவர் டைப் செய்யப்பட்ட ஒரிஜினிலை வைத்துக் கொண்டு சரி பார்க்கத் தொடங்கினார். தான் படிக்கிறோம் என்பதை நன்கு உணர்ந்தவளாய் அவள் படித்தாள். அவளுடைய அழகிய குரலும் உச்சரிப்பும் இந்த வறட்டு ஆபீஸ் கடிதத்தைப் படிப்பதில் செலவாகிக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டம்தான். ஆனால் கேசவன் கேட்டுக் கொண்டிருக்கின்றான்-இந்த நினைவு அவளுக்கு ஒரு போதையையும் உந்துதலையும் அளித்தது. கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் தன் இடத்தில் வந்து உட்கார்ந்ததும், கேசவன் திசையில் அவள் பார்வையைச் செலுத்தினாள்; குபுக்கென்று அவன் பார்வை அவளை விட்டு அகலுவதைக் கண்டுபிடித்தாள். அப்படியானால் இவ்வளவு நேரமாக அவன் அவளைத்தான் கவனித்துக் கொண்டிருந்தானா? அவளுக்குக் கர்வம் தாங்கவில்லை. அன்று அவள் தேவைக்கதிகமாகவே செக்‌ஷனில் அங்குமிங்கும் நடமாடினாள்; கேசவனின் பார்வை அடிக்கடி தன் திசையில் இழுபடுவதைத் திருப்தியுடன் கவனித்தாள்-கப்பம் கட்டாமல் ஏய்த்து வந்த அண்டை நாட்டுச் சிற்றரசன் ஒருவனுக்குத் தன் பலத்தை நிரூபித்த திருப்தி. இன்னும் பெரிய அரசர்களின் மேல் போர் தொடுக்க முஸ்தீப்பாக அவள் ஈடுபட்ட ஒரு சிறு பலப் பரீட்சையில் வெற்றி.

அன்று மாலை ஒரு கனாட் பிளேஸ் கஃபேயில் நண்பர்களுடன் அமர்ந்து காபி அருந்தும்போதும், பிறகு ஒரு 70 மி.மீ. சினிமாத் தியேட்டரில் பானாவிஷன் பிம்பங்களை ஸ்டீரியோஃபோனிக் ஒலிப்பின்னணியில் காணும்போதும், கேசவனின் மனத்தில் திடீர் திடீரென்று நீலாவின் உருவம் தோன்றிக் கொண்டிருந்தது. “இன்று இவள் ரொம்பவும் அலட்டிக் கொல்வது போலிருந்ததே-என்னிடம் ஏதேதோ தெரிவிக்க முயலுவது போலிருந்ததே-என் பிரமைதானோ?” என்று அவன் நினைத்தான். ஒரு வேளை இவளுக்கு என்மேல் காதல்…கீதல்…?

இந்த எண்னம் அவன் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது. ஒரு பெருந்தன்மையான, கருணை நிரம்பிய புன்னகை-’பாவம், பேதை!’ என்பதைப் போல. “இவள் குற்றமில்லை. நான் ரொம்ப ‘அட்ராக்டிவ்’வாக இருக்கிறேன். தட் இஸ் தி டிரபிள்…’ என்று அவன் நினைத்தான். திடீரென்று அவளுடைய இங்கிலீஷ் உச்சரிப்பு நினைவு வரவே, அவனுடைய புன்னகை அதிகமாகியது. ‘ஸில்லி ப்ரனஸ்ஸியேஷன்!’ என்று நினைத்தான். திரையில் ஆட்ரி ஹெப்பர்ன் அழகாக குழந்தைத் தனமாகச் சிரித்தாள். கேசவனுக்கு அப்படியே அவளைக் ‘கிஸ்’ பண்ண வேண்டும்போல் இருந்தது. சினிமாவிலிருந்து வெளியே வந்து சிகரெட்டை உறிஞ்சிப் புகையை ஊதித் தள்ளியபோது அவன் கேசவனாக இல்லை. இந்த நாட்டில் இல்லை. பீடர் ஒடுலாக மாறி, நியூயார்க் வீதியில் நடந்து கொண்டிருந்தான். ஆட்ரி ஹெப்பர்னின் சாயலை எதிரே வந்த பெண்களின் முகங்களில் தேடிக் கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் பிரியமான நடிகை ஆட்ரி ஹெப்பர்ன்தான். அதற்கு அடுத்தபடி சோபியா லாரென்; பிறகு, ஷெர்லி மக்லெயின்…

அவனுடைய வாழ்க்கைத் துணைவியின் இலட்சிய உருவகம் இந்தப் பிரியமான நடிகைகளின் சாயல்களில் இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று சிதறிக் கிடந்தது. புடவை, டூத் பேஸ்ட் விளம்பரங்களில் சிரிக்கும் வனிதைகளில் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. கனாட் பிளேஸ் வராந்தாக்களில் காணும் சில முகங்கள், சில நடைகள், சில சிரிப்புகள், சில அபிநயங்கள் இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. இந்த வெவ்வேறு துணுக்குகளைச் சேர்த்துப் பார்த்தால், அவன் விரும்பியவள் எப்படிப்பட்டவளாக இருப்பாளென்று ஒருவேளை புலப்படக்கூடும். ஆனால், அவன் இதுவரை இந்த முயற்சியில் ஈடுபடவில்லை. தன்னுடைய நிச்சயமின்மையே அவனுக்குப் பிடித்திருந்தது. அந்தந்தக் கணத்தில் ஆங்காங்கே எதிர்ப்படும் அழகுகளில் சுவாதீனமாக லயித்து ஈடுபட அனுமதித்த அவ்னுடைய சுயேச்சைத் தன்மை அவனுக்குப் பிடித்திருந்தது. ஒரு குறிப்பிட்ட பிம்பத்துக்கு அடிமையாகித் தன் பார்வைக்கும் இலக்குகளுக்கும் எல்லைகள் வகுத்துவிட அவனுக்கு விருப்பமில்லை.

‘காதலென்பது வாழ்நாள் சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்…
முழுவதும் ஒருவன் ஈடுபடும் இடையறாத தேடல்’ என்னும் ரொமாண்டிக் ஐடியா அவனுக்குப் பிடித்திருந்தத். அவனுடைய பெற்றோருக்கு வேண்டுமானால் பாட்டுப்பாடத் தெரிந்த, தோசையரைக்கத் தெரிந்த, எவளாவது ஒருத்தி வந்தால் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை வெறும் மோர்க் குழம்பும் தோசையும் அல்ல; சீமந்தமும் தாலாட்டும் அல்ல… இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. மேம்பட்டது. இந்த மேம்பட்ட சிகரங்களை அவன் எட்ட முடியாமலே போகலாம்-அது வேறு விஷயம். ஆனால் இவற்றை எட்டக்கூடிய சுதந்திரத்தை அவன் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்; இது மிகவும் அவசியம்.

‘மிஸ் நீலா! என்னை நீங்கள் காதலிக்கும் பட்சத்தில், பாவம், உங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீகள்!’ என்று அவன் நினைத்தான்.

மறு நாளிலிருந்து மறைத்துக் கொள்ளப்பட்ட ஆர்வத்துடனும் பரபரப்புடனும் அவர்கள் ஒருவரையொருவர் கவனிக்கத் தொடங்கினார்கள். கண்காணிக்கத் தொடங்கினார்கள். ‘கேசவன் தன் அழகை ரசிக்கிறானோ?’ என்று நீலா கவனித்தாள். ‘இந்தப் பெண் என்னை பக்தியுடன் பார்க்கிறதோ?’ என்று கேசவன் கவனித்தான். இருவருமே தாம் கவனிப்பது எதிராளிக்குத் தெரியாதென்றும் தாம் மட்டும் எதிராளியைப் பாதித்து விட்டதாகவும் நம்பினார்கள். இந்த நம்பிக்கையில் குதூகலமும் பெருமையும் அடைந்தார்கள். வெற்றியின் பெருமை; வெற்றியின் கர்வம். நீலாவிடம் எத்தனை விதமான நிறங்களில், எத்தனை விதமான டிஸைஙளில் புடவைகள் இருந்தனவென்பதைக் கேசவன் முதன் முதலாகக் கண்டுபிடித்தான். அவள் காதுகளைத் தலை மயிருக்குள் ஒளித்துக் கொள்ளும் விதம், வயிற்றுப் பாகம் மறையும் படியாகப் புடவைத் தலைப்பை இடுப்பில் நட்டுக் கொண்டு பிறகு தோளில் படர விட்டிருந்த நாசுக்கு, அவள் பேச்சிலிருந்த ஒரு இலேசான மழலை, அவள் விழிகளிலும் பாவனைகளிலும் கரைந்து விடாமல் தேங்கிக் கிடந்த ஒரு குழந்தைத் தனமும் பேதைமையும் இவற்றையெல்லாம் அவன் நுணுக்கமாகக் கவனிக்கத் தொடங்கினான்.

தன் கவனத்தைக் கவர நீலா ரொம்பவும் பிரயாசைப்படுகிறாளென்று கேசவன் நினைத்தான். ஆனால் ’நானா கவனிப்பவன்’ என்று அவளைக் கவனித்துக் கொண்டே அவன் நினைத்தான்.

‘ஒரு நாளில் கிட்டத்தட்ட ஐம்பது அல்லது அறுபது தடவையாவது கேசவன் என் பக்கம் பார்க்கிறான்’ என்று நீலா நினைத்தாள். தன் அழகுக்கும், கவர்ச்சிக்கும் ஓர் எளிய பக்தன் அளித்த சிறு காணிக்கையாக இதை அவள் திரஸ்கரிக்காமல் ஏற்றுக் கொண்டாள்; தன்னுடைய கனவு இளைஞனை அவள் சந்திக்கும்போது, இந்தக் குட்டி பக்தனைப் பற்றி அவனிடம் சொல்லிச் சிரிப்பாள் அவள். கேசவன் அவளைப் பார்க்கப் பார்க்க, கனவு இளைஞனைப் பற்றிய அவளுடைய நம்பிக்கைகளும் ஆசைகளும் மேன்மேலும் உறுதிப்பட்டன. அவளுடைய அழகின் வல்லமையும், சாத்தியக் கூறுகளும் தெளிவாயின. மறுமுறை பார்க்கத் தூண்டும், பிரமிக்க வைக்கும், உருவம் அவளுடையது; வடிவம் அவளுடையது. கனவு இளைஞன் அவளை நிச்சயம் தவற விடப் போவதில்லை. எத்தகைய அதிர்ஷ்டசாலி அவன்!

செக்‌ஷனில் இருந்த மற்றவர்கள் மீது அவளுக்கிருந்த கோபம்கூட இப்போது குறையத் தொடங்கியது. ஏனென்றால் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போதெல்லாம்-ஏதாவது ஒரு காரியமாக அவர்களை நோக்கி நடக்கும் போதெல்லாம்-அவள் உண்மையில் கேசவனுக் காகத்தான் பேசினாள்; கேசவனுக்காகவே நடந்தாள். அவளைச் சுற்றியிருந்த உலகத்தின் உண்மைகள் திடீரென்று மறைந்து விட்டிருந்தன. கனவு இளைஞனுக்காகப் போற்றி வந்த அவளுடைய உலகமாகிவிட்டிருந்தன.

கேசவனுடைய கண்களிலும் உலகம் மாறித்தான் போயிருந்தது. திடீரென்று
தன்னுடைய முக்கியத்துவத்தை பிரத்தியேகத் தன்மையை-அவன் உணர்ந்தான். காலரியில் உட்கார்ந்து கைதட்டும் பெயரற்ற பலருள் ஒருவனாக-ஒரு நடிகையின் பல உபாசகர்களுள் ஒருவனாக-நடைபாதைகளில் மிகுந்து செல்லும் அழகிகளின் பார்வைத் தெளிப்புகளையும் வர்ணச் சிதறல்களையும் பொறுக்கிச் சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்…

சேர்க்கும் பலவீனர்களுள் ஒருவனாக இருந்தவன், திடீரென்று இந்தக் கும்பல்களிலிருந்து தான் விலகி விட்டதை உணர்ந்தான். தன் ஒருவனுடைய ரசனைக்காகவும் பாராட்டுக்காகவும் மட்டுமே ஒரு அழகு தினந்தோறும் மலருவதை உணர்ந்தான். அவனுக்காகவே எழுப்பப்படும் கவிதை; வரையப்படும் ஓவியம்; இசைக்கப்படும் இசை; அவனுக்காக மட்டுமே ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு, டைரெக்ட் செய்யப்பட்டு, திரையிடப்படும் ஒரு படம் எவ்வளவு அபூர்வமான, கர்வப்பட வேண்டிய விஷயம்! சில சமயங்களில் அவனுக்கு உற்சாகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியாதென்று தோன்றியது. சாலையில் எதிர்ப்படும் முன்பின் அறியாதவர்களையெல்லாம் நிறுத்தி, விஷயத்தைச் சொல்ல வேண்டும் போல இருந்தது. அடுக்குமாடிக் கட்டிடத்தின் உச்சியில் பொய் நின்று கொண்டு, மேகங்களிடம் தன் ரகசியத்தைப் பீற்றிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அவன் தனியானவன்; வேறுபட்டவன்; வேறு யாருக்குமே கிடைக்காத ஒரு வாய்ப்பையும் , கௌரவத்தையும் அதன் மதிப்பு எப்படியிருந்தாலும் பெற்றவன்.

கேசவன் கவலைப்படத் தொடங்கினான்.

கவலைகளற்ற சுதந்திரப் பட்சி என்று செக்க்ஷனில் உள்ள மற்றவர்களால் கருதப்பட்டவன், திடீரென்று தன் விருப்பமின்றியே ஓர் அதிசயமான சிறையில் அடைபட்டு விட்டதை உணர்ந்தான்; கரைகளற்ற நீர்ப் பரப்பில், அலைகளின் போக்குக்கேற்ப அலைந்து திரிந்த படமாக இருந்தவன், திடீரென்று ஒரு கரையருகில் ஒரு முனையில் தான் கட்டப்பட்டுவிட்டதை உணர்ந்தான். இந்த மாறுதலை அவனால் முழுமனதாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் இதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் முடியவில்லை! ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, இது மகத்தான தோல்வியாகவும், வீழ்ச்சியாகவும் தோன்றியது. ஆனால்

ஆனால், இந்த தோல்வியில் ஒரு கவர்ச்சியும் இருந்தது. ஒரு மர்மமான ஆழமும் அழகும் இருந்தன. அந்தத் தோல்வியை நேருக்கு நேர் சந்திக்கவும் பயந்து கொண்டு, வந்த வழியே திரும்பிச் செல்லவும் மனம் வராமல், அவன் குழம்பினான்; தவித்தான்.

ஒரு நாள் சினிமாத் தியேட்டரில் சிநேகிதிகளுடன் வந்திருந்த நீலவைப் பார்த்து அவன் சிரித்தான்; அவளும் சிரித்தாள். அவனுக்குத் தைரியம் வந்தது. செக்‌ஷனில் சிரிப்புக்கான சந்தர்ப்பங்கள் வரும்போதெல்லாம், வேடிக்கைப் பேச்சுக்களும் கலகலப்பும் ஏற்படும் போதெல்லாம், அவர்களுடைய பார்வைகள் ஒன்றை யொன்று நாடின. அவர்களுடைய புன்னகைகள் மோதிக் கொண்டன. மின்சார அலைபோல ஒன்று அவர்களிடையே எப்போதும் ஓடிக் கொண்டேயிருந்தது.

அவள் பார்வைக்கு ஒரு அர்த்தம்தான் இருக்க முடியும். அவள் புன்னகைக்கு ஒரு அர்த்தம்தான் இருக்க முடியும். ஆனாலும் அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. பிறகு, அவன் நினைத்தான்-இவள் ஏற்கனவே முடிவு செய்து விட்டபிறகு, நான் ஏன் வீணாக யோசிக்க வேண்டும்? எனக்கும் சேர்த்து இவள் முடிவு செய்ததாக இருக்கட்டும். இவளுக்கு நான் ஏன் ஏமாற்ற்த்தை அளிக்க வேண்டும்? ஒரு பெண்ணின் மனத் திருப்தியைவிட என் அழகின் தேடல்தானா பெரிது? ஓர் உடைந்த இதயத்தின் பாவத்தை மனச் சாட்சியில் சுமந்து கொண்டு குற்றஞ்சாட்டும் இரு விழிகளை நினைவில் சுமந்து கொண்டு, எந்த அழகை என்னால் ரசிக்க முடியும்? எதில்தான் முழுமனதாக லயித்து ஈடுபட முடியும்? நான் நன்றாக மாட்டிக் கொண்டு விட்டேன். காலியாக, நிர்மலமாக இருந்த என் மனத்தை ஒரு குறிப்பிட்ட பிம்பம் பூதாகரமாக அடைத்துக் கொண்டுவிட்டது-இனி செய்வதற்கு ஒன்றுதான் இருக்கிறது-

ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது; கேசவன் முடிவுக்கு வந்துவிட்டான்.

ஒருநாள் மாலை நீலா ஆபீசை விட்டுக் குளம்பும்போது கேசவனும் கூடவே கிளம்பினான். அவள் முகம் சுளிக்காதது அவனுக்குத் தெம்பை அளித்தது.

“வீட்டுக்கா?” என்றான். அசட்டுக் கேள்விதான்.

“ஆமாம்”.

“எங்கேயாவது போய்க் காபி சாப்பிடுவோமே?”

அவள் இதை எதிர்பார்க்கவில்லையென்று தெரிந்தது. முகத்தில் குப்பென்று நிறம் ஏறியது. சமாளித்துக் கொண்டு, “இல்லை; நான் வருவதற்கில்லை” என்றாள்.

“ஏன்?”

“ஒரு வேலை இருக்கிறது”.

“நான் நம்பவில்லை”.

அவள் பதில் பேசாமல் நடந்தாள். கேசவனுக்குத் தாளவில்லை. இவ்வளவு நாள் யோசித்து யோசித்து சே! இதற்குத்தானா?

“ப்ளீஸ்!” என்று அவன் உணர்ச்சி வசப்பட்டவனாய் அவள் கையைப் பிடித்தான். அவ்வளவுதான்; வெடுக்கென்ற உதறலுடன் தன் கையி விடுவித்துக் கொண்டு, அவனை நோக்கி, ஒரு முறை முறைத்துவிட்டு, அவள் சரசரவென்று வேகமாக நடந்தாள்.

கேசவன் அவள் நடந்து செல்வதைப் பார்த்தவாறு நின்றான்.

“சீ! என்ன துணிச்சல்!” பஸ் ஸ்டாண்டில் நிற்கும்போது, உடை மாற்றிக் கொண்டு கையில் பத்திரிகையுடன் அமரும்போது, அவளுக்குக் கேசவன் மேல் கோபம் கோபமாக வந்தது. இடியட்! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன்! எப்படிப்பட்டவளென்று நினைக்கிறான் இவன் அவளை? காப்பி சாப்பிட வேண்டுமாம், அதுவும் இவனுடன். என்ன ஆசை? என்ன… கொழுப்பு! கையை வேறு பிடித்து-

சே! நல்லதுக்கு காலமில்லை. அவளைச் சுற்றிலும் இறுக்கமும் வறட்சியும் இல்லாமல் சற்றே சந்தோஷத் தென்றல் வீசட்டுமென்று- அழகின் ஒளிக் கற்றைகள் இருண்ட இடங்களிலெல்லாம் பாயட்டுமென்று அவள் சுயநலமின்றிச் சிரித்துப் பேசினால், இப்படியா ஒருவன் தப்பர்த்தம் செய்து கொள்வான்? முட்டாள்தனமாக நடந்து கொள்வான்!

தன் குட்டி பக்தனை அவள் சிறிதும் மன்னிக்கத் தயாராயில்லை;

அவனுக்காகவென்று அவள் வகுத்திருந்த சில எல்லைகளை அவன் மீறிவிட்டதாக அவள் நினைத்தாள். நடைவாசலில் நின்று கொண்டிருக்க வேண்டியவன், கர்ப்பக் கிருகத்துக்குள் திபுதிபுவென்று நுழைந்திருக்கக் கூடாதென்று நினைத்தாள். பரிசுத்தமான மனத்துடன் அவள் தன் ஜன்னல்களைத்த் திறந்து வைத்தாள் என்பதற்காக, அவன் உரிமையுடன் ஜன்னலைத் தாண்டி உட்புறம் குதிக்க முயற்சித்திருக்கக் கூடாதென்று நினைத்தாள். எல்லாமே கேசவனின் குற்றத்தையும் அவளுடைய குற்றமின்மையையும் ருசுப்படுத்தும் ஸ்தாபிக்கும், எண்ணங்கள்.

அவன்தான் குற்றவாளி; அவளுடைய நல்ல எண்ணங்களைத் தவறாகப் புரிந்து கொண்ட குற்றவாளி.

‘இனி இவனிடம் பேசவே கூடாது’ என்று மறுநாள் அபீசுக்குக் கிளம்பும்போது அவள் முடிவு செய்தாள்.

அன்று கேசவன் ஆபீசுக்கு வரவில்லை.

‘ஹும்! பச்சாதாபப்படுகிறானாக்கும்; அல்லது தன்காலி நாற்காலியின் மூலம் அதிருப்தியைத் தெரிவிக்கிறானாக்கும்- என் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறானாக்கும்!’ என்று அவள் அலட்சியமாக நினைத்தாள். அவனைப் பற்றி எதுவும் நினைக்காமல் அவனால் பாதிக்கப்படாமல், இயல்பாக இருக்க முயன்றாள். ஆனால் நினைவுகளை யாரால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்; வேண்டும் வேண்டாம் என்று பாகுபாடு செய்து பொறுக்க முடியும்? அவன் திசையில் எண்ணங்கள் பாய்வதை அவன் உருவம் மனதில் தோன்றித் தோன்றி மறைவதை, அவளால் தவிர்க்க முடியவில்லை.

மாலையில் வீட்டில் உட்கார்ந்து, கேசவனைத் தள்ளுபடி செய்யக் கூடிய காரணங்களை அவள் தேடிப் பார்த்தாள். செக்‌ஷனில் வேலை செய்யும் பலருள் ஒருவனாக அவனை அசட்டையாகக் கருதி வந்த தன் பழைய மனநிலையை மீண்டும் உருவாக்கிக் கொள்ள முயன்றாள். ஆனால், அதில் அவளால் வெற்றி பெற முடியவில்லை. கேசவனை ஒரு தனி மனிதனாக, குறிப்பிட்ட சில இயல்புகளும் ருசிகளும் போக்குகளும் உள்ளவனாக, எல்லாவற்றுக்கும் மேலாக, அவளிடம் சிரத்தை கொண்ட ஒருவனாக, பேச்சுக்கள், பார்வைகள் மூலமாக அவளுடைய மனம் ஒரு விதமாக உருவகப்படுத்தி வைத்திருந்தது. இந்த உருவத்தை அவளால் சிதைக்கவோ அழிக்கவோ முடியவில்லை. முகமற்ற, பெயரற்ற, உருவற்ற, ஜனத்திரளில் ஒருவனாக-அவளை எந்த விதத்திலும் பாதிக்காதவனாக-அவனை மீண்டும் தூக்கியெறிய முடியவில்லை.

‘அவனும் இப்போது என்னைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருப்பானோ?’ இருக்கலாம்; யார் கண்டது? என்ன விசித்திரமான தப்ப முடியாத விஷயம் இது! அவள் அனுமதியின்றி, அவளுக்குத் தெரியாமல், இந்த கணத்தில் அவளை அறிந்த பலர் அவளைப் பற்றிப் பலவிதமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நினைவுகளைப் பற்றி அவளால் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. அவற்றை ஒடுக்கவோ மாற்றவோ முடியாது; அவற்றிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள முடியாது.

என்ன நினைத்துக் கொண்டிருப்பான் கேசவன்? அவள் கர்வம் பிடித்தவள் என்றா? இரக்கமற்றவள் என்றா? எப்படியாவது நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் ஆனால்-ஆனால் ஒரு வேளை அவன் ரொம்ப வருத்தப்படுகிறானோ? தன் தவறுக்காகத் தன்னையே கடிந்து கொண்டு கழிவிரக்கத்தில் உழலுகிறானோ? இந்தக் கற்பனை அவளுக்கு ஒரு பயத்தையும் சங்கடத்தையும் அளித்தது. ‘யாரோ என்னைப் பற்றி ஏதோ நினைத்துக் கொண்டு அவஸ்தைப்பட்டால் அதற்கு நானா பொறுப்பாளி? என்று சமாதானம் செய்து கொள்ள முயன்றாள். ரேடியோவில் கேட்ட காதல் பாடலிலும், பத்திரிகை விளம்பரத்திலிருந்த இளைஞன் முகத்திலும், தன் மனத்தை ஈடுபடுத்தி, கற்பனைகளைத் திசை திருப்பிவிட முயற்சித்தாள். ஆனால், திடீரென்று இவையெல்லாம் உயிரற்றதாக, அர்த்தமற்றதாக, வெறும் போலியாக, அவளுக்குத் தோன்றின. உயிரும் இயக்கமும் உள்ள ஓர் உண்மையாக அவள் பார்த்திருந்த-அவளுடன் பேசியிருந்த-கேசவனைச் சுற்றியே மீண்டும் மீண்டும் இந்த மனம்.

மறுநாள் கேசவன் ஆபீசுக்கு வந்தான். ஆனால் அவன் கேசவனாக இல்லை. கலகலப்பாக இல்லை. சுற்றுமுற்றும் பார்க்காமல், சிரிக்காமல், காரியமே கண்ணாக இருந்தான்.

நீல அவனுடைய மாறுதல்களைக் கவனித்தவளாய், ஆனால், அதைக் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளாதவளாய், அமர்ந்திருந்தாள். கேசவன் வாய்ப்புக் கிடைக்கும்போது, அவளிடம், ‘ஐ ஆம் ஸாரி’ என்று மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப் போகிறானென்று அவள் எதிர்பார்த்தாள்…. ஆனால், கேசவன் ஒரு நாள் லீவில் தன்னைக் கடுமையாக ஆத்ம சோதனை செய்து கொண்டு, பெண்கள், அவர்களுடைய பார்வைகள், சிரிப்புக்கள், இவற்றின் அர்த்தங்கள் ஆகியவற்றிலெல்லாம் முற்றும் நம்பிக்கையிழந்த ஒரு விரக்தி நிலை அடைந்திருந்தான் என்பது அவளுக்குத் தெரியவில்லை.

அன்று லஞ்ச் டயத்துக்குப் பிறகு சில நிமிடங்களுக்குச் செக்‌ஷனில் அவளும் அவனும் மட்டும்தான் தனியாக இருந்தார்கள். அப்போது கேசவன் தன்னிடம் பேசப் போகிறானென்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவன் பேசவில்லை. அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் கூட இப்படிப் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. ஆனால், கேசவன் எந்தச் சந்தர்ப்பத்தையுமே உபயோகித்துக் கொள்ளவில்லை.

‘ரொம்பக் கோபம் போலிருக்கு!’ என்று அவள் நினைத்தாள். அவனுடைய விலகிய போக்கும் உஷ்ணமும்-ஆபீஸ் வேலை விஷயமாக அவளிடம் பேச வேண்டி வரும்போது வெகு மரியாதையுடன் முகத்தைப் பார்க்காமல் பேசிவிட்டு நகருதலும்-அவளுக்கு ரசமாகவும் வேடிக்கையாகவும் இருந்தன. அதே சமயத்தில் இந்தக் கோபத்தின் பின்னிருந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் ஊகித்துணரும்போது அவளுக்கு அவன் மேல் இரக்கமாகவும் இருந்தது. ‘சுத்தப் பைத்தியம்’ என்று அவள் நினைத்தாள். அவள் நிலை அவனுக்கு ஏன் புரிய மாட்டேனென்கிறது? அவள் ஒரு பெண்-விளைவுகளைப் பற்றி, சுற்றியுள்ள சமூகத்தின் பார்வையையும் பேச்சுக்களையும் பற்றி யோசிக்க வேண்டியவள். எவனோ கூப்பிட்டானென்று உடனே காபி சாப்பிடப் போக, இதென்ன சினிமாவா, டிராமாவா?

இப்படியாக, அவன் காப்பி சாப்பிடக் கூப்பிட்டதே தப்பு என்கிற ரீதியில் யோசித்துக் கொண்டிருந்தவள், அவன் அப்படிச் செய்தது சரியாக இருந்தாலும் கூடதான் ஏன் அதை ஏற்றுக் கொண்டிருக்க முடியாது என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டு, தன் செய்கை சரிதானென்று ஸ்தாபித்துக் கொள்ள முயன்றாள். இருந்தாலும் மனதின் அரிப்பையும் குடைவையும் அவளால் தடுக்க இயலவில்லை. ஒரு வேளை அந்தச் சந்தர்ப்பத்தில் அவள் வேறு வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்கலாமோ? இன்னும் சிறிது பிரியமாக நடந்து கொண்டிருக்கலாமோ? அவனைப் புண்படுத்தாமலும், அதே சமயத்தில் தன்னைப் பந்தப்படுத்திக் கொள்ளாமலும், சாதுரியமாக நிலைமையைச் சமாளித் திருக்கலாமோ?

அவள்தான் இப்படியெல்லாம் ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தாளே தவிர, அவன் அவளைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை… அவள் பக்கம் பார்ப்பதையே அவன் நிறுத்திவிட்டான். ஏன், சீட்டில் உட்காரும் நேரத்தையே அவன் கூடியவரை குறைத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தான். அவனுடைய அலட்சியம் அவளுடைய இராத்தூக்கத்தைக் கெடுத்துவிடவில்லை. ஆனாலும் ஒரு சூன்ய உணர்வு அவளை அவ்வப்போது பிடித்து உலுக்கத்தான் செய்தது. அவளுக்குள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த ஏதோ ஒரு பல்ப் ஃப்யூஸ் ஆனதைப் போல இருந்தது. அந்த பல்ப் இல்லாமலும் அவள் இயங்கக்கூடும். இருந்தாலும் வித்தியாசம் இருக்கத்தான் செய்தது, குறை தெரியத்தான் செய்தது.

அழகுபடுத்திக் கொள்வதிலும், அலங்கரித்துக் கொள்வதிலும், முன் போல ஆர்வமும் உற்சாகமும் காட்ட அவளால் முடியவில்லை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியாக அவை தோன்றின. கனவு இளைஞனை மண்டியிடச் செய்யும் தேஜஸ் வாய்ந்ததாகத் தோன்றிய தன் அழகின் மேல் முன்போல் அவளால் நம்பிக்கை வைக்க முடியவில்லை. அதன் கவர்ச்சியையும் வல்லமையையும் பற்றித் தீர்மானமாகவும் இறுமாப்பாகவும் இருக்க முடியவில்லை. எதை அஸ்திவாரமாகத் கொண்டு அவள் தடபுடலாக மாளிகை கட்டினாளோ, அந்த அஸ்திவாரமே இப்போது சந்தேகத்துக்குரியதாக மாறி விட்டிருந்தது. இவ்வளவு சீக்கிரம் புறக்கணிக்கக் கூடிய சக்தியா அவள் சக்தி? பைத்தியம் பிடிக்கச் செய்யும், நிரந்தரமான, விடுபட முடியாத, போதையிலாழ்த்தும் அழகு இல்லையா அவளுடைய அழகு? கேசவன் அவளைப் பார்த்து மயங்கியது கூடத் தற்செயலாக நிகழ்ந்ததுதானா? அல்லது அவன் மயங்கியதாக நினைத்தது கூட அவள் பிரமைதானா? தன்னை மறந்து ஒரு நிலையில் – ஒரு திடீர் உந்துதலில் – அவன் அவளை நெருங்கி வர, இவள் பைத்தியம் போல அந்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டாளா? இனி இது போன்ற வாய்ப்புகள் அவள் வாழ்வில் நேருமோ, நேராதோ? அப்பாவும் அம்மாவும் ஜோஸ்யர்களும் தேர்ந்தெடுக்கும் யாரோ ஒரு – என்ன பயங்கரம்.

‘நான் முட்டாள், படு முட்டாள்’ என்று அவள் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். கேசவன் மீசை வைத்திருந்தான். அதனாலென்ன? சுமாரான நிறம்தான். அதனாலென்ன? அவன் கேசவன் – அவளுக்கும் பரிச்சயமானவன் – மோசமான டைப் என்று சொல்ல முடியாதவன்.

‘ஹும்! இந்தப் பெண்கள்!’ – காலையில் பஸ்ஸில் ஆபீஸை நெருங்கிக் கொண்டிருந்த கேசவன் அனுபவப்பூர்வமாகவும் கரை கண்டவனாகவும் புன்னகை செய்து கொண்டான். இவர்களுக்குக் கவனிக்கப்படவும் வேண்டும்; கவனிக்கப்படவும் கூடாது. சலுகைகள் எடுத்துக் கொள்ளப்படவும் வேண்டும்; எடுத்துக் கொள்ளப்படவும் கூடாது. காற்றடிக்கவும் வேண்டும், புடவை பறக்கவும் கூடாது.

இந்தப் பெண்களே ஸ்திரபுத்தியற்றவர்கள்; மோசக் காரிகள் – பிச்சஸ் – இவர்களை நம்பவே கூடாது’ என்று நினைத்தவனாய், அவன் செக் ஷனுக்குள் நுழைந்தான். தண்டபாணி உரத்த குரலில் சீனிவாசனிடம் ஏதோ உரக்க வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். கணபதிராமன் தம் குறை எதையோ குப்புசாமியிடம் சொல்லி அழுது கொண்டிருந்தார். நீலா-

கேசவன் அசட்டையாக அவள் பக்கம் பார்த்தான். திடுக்கிட்டான். அதே புடவை அணிந்திருந்தாள் அவள். அன்று அவன் காபி சாப்பிடக் கூப்பிட்டபோது அனிந்திருந்த அதே புடவை. அவன் அவள் முகத்தைப் பார்த்தான். அவள் பார்வையில் கூத்தாடிய விஷமத்தையும் உல்லாசத்தையும் கவனித்தான். பிறகு உதட்டைக் கடித்துக் கொண்டே பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். இல்லை, மறுபடியும் ஏமாறத் தயாராயில்லை அவன்.

அட்டென்டன்ஸ் மார்க் பண்ணிவிட்டு அவன் தன் இடத்தில் போய் உட்கார்ந்தான். ஃபைல் ஒன்றைப் பிரித்தான். ‘கிளிங்க்…கிளிங்க்’ என்ற வளையலோசை – அவன் நிமிரவில்லை. ‘பெரிய மகாராணி’ என்று நினைத்தான். இவள் இஷ்டப்படி, போடும் விதிகளின்படி நான் விளையாட வேண்டும் போலிருக்கிறது. அவள் அவன் கவனத்தைக் கவர முயற்சிப்பதும், அவன் இதை மௌனமாக எதிர்பதுமாகச் சில நிமிடங்கள் ஊர்ந்தன. திடீரென்று பியூன் பராங்குசம் கையில் இரு காபி தம்ளர்களுடன் செக் ஷனுக்குள் நுழைந்தான். ஒரு தம்ளரை நீலாவின் மேஜை மேல் வைத்தான். இன்னொன்றைக் கேசவன் மேஜை மீது வைக்குமாறு அவள் ஜாடை காட்டவும், பராங்குசம் அப்படியே செய்தான்.

கேசவன் நிமிர்ந்தான் – “என்னப்பா இது?”

“நான்தான் வாங்கி வரச் சொன்னேன்” என்றாள் நீலா, புன்னகையுடன், “யூ லைக் காபி, நோ?”

கேசவன் திணறிப் போனான். இப்படி ஒரு சந்தர்ப்பத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. இப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டுமென்று கணக்குப் போட்டிருக்கவில்லை. உஷ்ணமாக ஏதாவது சொல்ல வேண்டும் போல் இருந்தது.

“காப்பி சாப்பிடுங்க சார். ஆறிப் போயிடும்” என்றான் பராங்குசம்.

அவன் குடிக்கப் போவதை எதிர் பார்த்து நீலா தம்ளரைக் கையில் எடுத்து அவனுடன் சேர்ந்து குடிப்பதற்காகக் காத்திருந்தாள். அவள் விழிகளிலிருந்த நிச்சயமும் நம்பிக்கையும்! கேசவன் தான் தோற்றுவிட்டதை உணர்ந்தான். காபியை அருந்தத் தொடங்கினான். அவளிடம் ஏதேதோ கோபப்பட வேண்டும். விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும் என்று அவன் விஸ்தாரமாக யோசித்து வைத்திருந்தான். ஆனால் இப்போது எல்லாமே அனாவசியமானதாக, அர்த்தமற்றதாகத் தோன்றின. அவள் அருகில், சுமுகமான நிலையில் இருப்பதே போதுமென்று தோன்றியது.

“காபிக்காகத் தாங்க்ஸ்” என்றான் அவன்.

“குடித்ததற்காகத் தாங்ஸ்” என்றாள் அவள். அதற்கு மேலும் ஏதாவது சொல்ல வேண்டுமென்று துடித்தவளாய், ஆனால், தவறாக எதையும் சொல்லிட கூடாதேயென்று தயங்கியவளாய் அவள் ஒரு புன்னகை மட்டும் செய்தாள். அவனும் பதிலுக்குப் புன்னகை செய்தான்.

ஒருவரையொருவர் ஜெயிக்க நினைத்தார்கள்,ஒருவரிடம் ஒருவர் தோற்றுப் போய் உட்கார்ந்திருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்

  1. இந்த கதையை மீண்டும் மீண்டும் வாசித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் புன்சிரிப்புடனே வாசிக்க வைக்கிறது.

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *