கைக்கிளை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 14,607 
 

உண்மையில் இது ஒரு பேய்க் கதை என்றபோதும், 40 வயதாகிற நாவலிஸ்ட் ஒருத்தன் கடைசி வாய்ப்பாகக் காதலுற்ற கதை என்பதாகவும் இதைச் சொல்லலாம். சனியன் 40 வயசு வரைக்குமா காதலித்துத் தொலைக்கவில்லை என்று கேட்கிற அவசரக்குடுக்கைகள் சற்று வாளா விருங்கள். நல்ல தமிழ் வாத்தியார் வாய்த்திருந்தால், இந்தக் கதையின் தலைப்பே உங்களுக்கு அவனுடைய முந்தைய காதல் கதைகளின் லட்சணத்தை விளக்கியிருக்கும். மற்றவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். கைக்கிளை என்பதாக தமிழ் இலக்கியத்தில் ஒரு திணையே உண்டு. (திணை என்றால் என்ன என்று கேட்கிற சோலியெல்லாம்வேண்டாம். எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டு இருப்பதற்கு இதுவென்ன சிறுகதையா இல்லை, நாவலா?) கைக்கிளை என்பது டி.ராஜேந்தர் பாஷையில் சொன்னால், ஒருதலைராகம். அதாவது, தலைவன் – தலைவி ஆகிய இருவரில், ஒருவர் மட்டுமே காதலித்து, மற்றவர் பிரதர் அல்லது சிஸ்டர் என்று அழைத்துத் தொலைத்தால், அதுதான் நல்ல முத்தின கைக்கிளை. நல்ல காலம், நம்ம கதை அந்த அளவுக்கு மோசமாகப் போய்விடவில்லை. சரி, கதைக்கு வந்து தொலைப்போம்…

சாதாரணமாக, காதலிக்காகவோ, மனைவிக்காகவோ, மாதாவுக்காகவோ, மாரியம்மாளுக்காகவோ குடியை நிறுத்துவார்கள் என்பதாக நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், தன்னைக் காதலிக்காத ஒரு பெண்ணுக்காகக் குடியை நிறுத்தினான் பாவப்பட்ட ஷங்கர். யாராவது காதல் தோல்விக்காகக் குடியை நிறுத்துவார்களா என்று அவனது நண்பர்கள் பலரும் பரிகாசம் செய்தபோது, ஷங்கர் தன் நிலையை அந்த நாசமாய்ப் போனவர்களுக்கு விளக்கினான். குடிப் பழக்கம் இல்லாத ஒருவன் ஒரு பெண்ணால் வஞ்சிக்கப்பட்டால், (வஞ்சகம்… ஆஹா, எத்தனை ரம்மியமாக வருகிறது பாருங்கள்) குடிக்க ஆரம்பிக்கிறான், குடிப் பழக்கம் உள்ள ஒருவனின் காதல் மறுக்கப்பட்டால், அவன் பெருங்குடிகாரன் ஆகிறான். ஆனால் ஷங்கரோ, ஏற்கெனவே மாபெரும் குடிகாரன். அவன் வேறு என்னதான் செய்ய முடியும், குடியை நிறுத்துவதைத் தவிர?

இது அவன் அவர்களுக்கு அளித்த விளக்கமே தவிர, உண்மை அது மட்டுமல்ல.

குடி அவனுக்கு அளித்த மாபெரும் கொடைகளில், கண்களின் கீழே தொங்கும் இரண்டு பைகளும் அடக்கம். அது அவனது முகத்துக்கு ஒருவித சோகமான பாவத்தை வழங்கி இருந்தது. அப்படி எல்லாம் எவ்விதமான பையும் தொங்காதபோதும் உள்ளார்ந்த சோகம் சொட்டும் முகம் ஒன்றை ஷங்கர் ஒருநாள் எதிர்கொண்டான். அந்த முகம் நிரந்திரா என்கிற பெண்ணுக்குச் சொந்தமானது.

அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே அந்தச் சோகம் அவனுக்குள் ஊடுருவ ஆரம்பித்துவிட்ட வகையில், அவளை அவன் உள்ளூர நேசிக்க ஆரம்பித்துவிட்டான் என்பதாகவே தெரிகிறது. அதற்கு ஏற்றாற்போல நிரந்திரா தன் சோகக் கதையை, சந்தித்த முதல் நாளே அவனிடம் சொல்லிவிட்டாள். அவளது சோகக் கதை பின்வருமாறு…

நிரந்திரா கல்லூரிக் காலத்தில் காதலித்த இளைஞன், ஒரு நள்ளிரவில் கையில் வைத்திருந்த செல்போனுக்காகக் கத்தியால் குத்தப்பட்டான். காலை வரை யாரும் பார்க்காத காரணத்தால் ரத்தம் முழுக்க வடிந்து பிணமாகக் கிடந்தான். இதில் நிரந்திராவின் பிரத்யேக சோகம் என்னவென்றால், அவன் அவளிடம் பேசுவதற்காகத்தான் வீட்டில் இருந்து செல் போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்திருந்தான் என்பதோடு, கத்திக்குத்துக்கு முந்தின கணம் வரைக்கும் அவளோடு பேசிக்கொண்டுதான் இருந்தான். அப்போது அவர் கள் இருவருக்கும் இடையே சிறு ஊடல் கலந்த உரையாடல் நிகழ்ந்துகொண்டு இருந்த வகையில், நிரந்திரா கடைசியாக அவனிடம், தங்கள் கல்யாணம் நடக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறதா… இல்லையா என்று கேட்டாள். பிறகு சொல்கிறேன் என்று அவசரமாக அவன் போனை கட் செய்தான். அன்றிரவு முழுவதும் அவள் பெரும் அவஸ்தையில் இருந்தாள். பின்தொடர்ந்த நான்கு பேர் அருகில் நெருங்கி கத்தியைக் காட்டிய வகையில்தான் அவன் அவ்வாறு செய்தான் என்பதை அடுத்த நாள்தான் அவள் யூகித்து அறிந்துகொண்டாள். எவ்வித உரிமையும் இல்லாமல், அவனது வீட்டில் கிடத்தியிருந்த சடலத்தைப் பிரமை பிடித்தவளைப் போலப் பார்த்திருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி இருந்தாள் அவள்.

இந்தக் கதைதான் நிரந்திராவின் மீதான காதலை ஷங்கரின் மனத்தில் பேரளவும் பெருக்கி இருந்தது. இந்தக் கதையில் படிந்திருந்த அழுத்தமான சோகமே நிரந்திராவின் நிரந்தரமான சோக பாவத்துக்கு உத்தரவாதம் என்பதை அவன் பெரிதும் விரும் பினான். சோகமான பெண்ணுக்கு ஆறுதல் சொல்வதைவிடவும் வேறு ரஸமான காதல் சம்பவம் இருக்க முடியுமா என்பதாக நினைத்தான். அவளுடைய சோகத்தில் தனக்கும் ஒரு பங்கு இருப்பதாக அவளிடம் அவன் பகிரங்கமாகத் தெரிவிக்கத் தொடங்கினான். சாதாரணமாகவே, மற்றவர்களின் சோகம்தான் தன்னைப் பேரதிகமும் கவர்வதாகவும் அதன் காரணத்தைத்தான் தன் வாழ்வின் பெரும் பொழுதுகளில் தேடிக்கொண்டு அலைவதாகவும் அவளிடம் தெரிவித்தான். அவளுக்கு எதுவும் நேராமல் பாதுகாப்பதே தன் கடமை என்பதை அவளிடம் சூசகமாக அவன் தெரிவித்தபோது, அவள் அதைத் தன் வழக்கமான பாவனையில் மறுத்தாள்.

அதைத் தொடர்ந்து அவள் சொன்னாள், என்னுடைய கார்டியன் ஏஞ்சல் இருக்கும்போது எனக்குஎன்ன கவலை என்பதாக. ஷங்கர் தமிழ் மீடிய ஆசாமி என்பதனால் இதைக் கேட்டு பேய் முழி முழித்தான். இதனால் நிரந்திரா அவனுக்கு ஒரு சிறு விளக்கத்தை அளிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டாள். இறந்துபோன அவளது காதலனான ராம், எப்போதும் தன்னோடு துணை இருப்ப தாகத் தான் நம்புவதாகச் சொன்னாள். தனக்கு எவ்விதமான துன்பம் நேர்ந்தாலும் ‘ஸேவ் மி ராம்’ என்று ராமின் பழைய இ-மெயில் விலாசத்துக்கு ஒரு மின்னஞ்சலோ அல்லது பழைய செல்போன் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்ஸோ அனுப்புவது தன் வழக்கம் என்று சொன்னாள். உயிருடன் இருப்பவனை விட்டுவிட்டு, இறந்துபோனவனைத் துணைக்கு அழைப்பது எவ்விதத்தில் நியாயமானது என்கிற கேள்வியை அவளிடம் கேட்க விரும்பினான் ஷங்கர். இப்படிக் கேட்பதால், அவள் தன்னைவிட்டு விலகிவிடுவாள் என்பதையும் அறிந்துஇருந்தான்.

ஆனால், அவனுக்கான பதில் அடுத்த வாரமே கிடைத்தது. அந்த வாரம் பூராவும் தூக்கம் இல்லாமல் பெரும் களைப்படைந்து இருந்த ஷங்கரிடம், நிரந்திரா ஓர் ஆச்சர்யமான செய்தியைத் தெரிவித்தாள். அதாவது, இறந்துபோன அவளது காதலனின் இ-மெயில் ஐடியில் இருந்து அவளுக்கு இப்பே£துஎல்லாம் பதில் மெயில்கள் வருகின்றன.

அவன் இறந்துபோய் சில காலம் அவள்தான் அவனது இ-மெயிலை நிர்வகித்து வந்ததாகவும், அப்போதெல்லாம் அவனே அனுப்பியது போல தனக்குத்தானே இவ்விதம் அனுப்பிக்கொள்ளும் பழக்கம் கொஞ்ச காலம் இருந்தது என்பதாகவும் அவள் தெரிவித்தாள். ஆனால், இப்போது வருகிற மெயில்கள் அவள் அனுப்பியவை அல்ல. அவை அவனிடம் இருந்தே வருகின்றன என்பதாகவே அவள் சொன்னாள்.

ஷங்கருக்கு இதைக் கேட்டதும் முதுகுத் தண்டு சில்லிட்டது (ஒருத்தருக்காவது முதுகுத்தண்டு சில்லிடாவிட்டால் இது எப்படி ஒரு பேய்க் கதையாக முடியும்?). குடிகாரனைக் குழப்புவதற்கு இது போதாதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கதையில் பேய் நுழைந்திருக்கிற வேளையில் விளையாடிக்கொண்டு இருப்பது தவறு.

ஷங்கர் அந்தத் தகவல்கள் என்ன சொல்கின்றன என்று அவளிடம் கேட்டான். இதுவரைக்கும் இரண்டு மெயில்கள்தான் வந்திருக்கின்றன. அவை வழக்கமான விசாரிப்புகளேயன்றி வேறல்ல என்பதாக நிரந்திரா தெரிவித்தாள்.

அதாவது, அந்த மெயில்களைப் பொறுத்தவரை ராம் இறந்துபோன சுவடே இல்லை என்பதாகவும், ஏதோ நாளைக்கே நேரில் வந்து அவளைப் பார்த்துவிடப் போகிறவன் அனுப்புகிற மெயில்களைப்போல அவை இருப்பதாகவும் தெரிவித்தாள்.

அந்த மெயில்கள் ஏற்கெனவே எழுதப்பட்டவையாக இருக்கலாம் எனத் தான் நம்புவதாக ஷங்கர் சொன்னான். மரணத்துக்குப் பிறகும் நாம் விரும்புபவர்களுக்கு மெயில் அனுப்பும் வசதி இப்போது வந்துவிட்டதே என்று நினைவுபடுத்தவும் அவன் தயங்கவில்லை. ஆனால், அந்த வசதி வருவதற்கு முன்பே அவன் இறந்துவிட்டான் என்பதை அவள் அப்போது ஆணித்தரமாகத் தெரிவித்தாள்.

சரி, உருப்படியாக ஏதாவது செய்தி வருகிற வரைக்கும், அதாவது, அடுத்த மெயில் வரைக்குமாவது காத்திருக்கலாம் என்பதாக அவர்கள் முடிவெடுத்தார்கள்.

அடுத்த மெயிலில் அவளை வழக்கமாகச் சந்திக்கும் இடத்துக்கு வரச் சொல்லி இருந்தான் ராம். ஷங்கர் அவளை அங்கே போக வேண்டாம் என்று தடுத்துப் பார்த்தான். அவள் அதை ஒப்புக்கொள்ளாதபோது, வேறு வழி இல்லாமல் அவனும் அவளோடு போனான். ஆனால், ராமும் வரவில்லை, சாமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து நிரந்திரா, ஷங்கரை அங்கிருந்து சென்றுவிடும்படி கேட்டுக்கொண்டாள். நீண்ட நேரம் தனிமையில் அங்கே உட்கார்ந்திருந்தாள்.

ஏன் வரவில்லை என்று அவள் அனுப்பிய மெயிலுக்கு நான் அங்கேதானே இருந்தேன் என்று பதில் வந்தது. இதைத் தொடர்ந்து, அவன் மெயிலில் தெரிவிக்கிற இடங்களில் எல்லாம் போய்க் காத்திருக்க ஆரம்பித்தாள். அந்த இடங்கள் ஒவ்வொன்றும் அவர்கள் ஏற்கெனவே சந்தித்த இடங்களாகவே இருந்தன. ஆனால், அவனையோ ஒருபோதும் பார்க்க முடியவில்லை.

ஏனென்று கேள்வி அனுப்பினால், நான் உன்னைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன் என்று பதில் அனுப்பினான் அவன். நானும் உன்னோடு வந்துவிடட்டுமா என்று நிரந்திரா அவனிடம் கேட்டாள். அதற்கான பதிலை அவள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள். சாதாரணமாக ஒரு மெயில் அனுப்பினால், அடுத்த நாள்தான் பதில் வந்துகொண்டு இருந்தது. ஷங்கர்கூட, ரொம்ப தூரத்தில் இருக்கிறான் அல்லவா, ஒரு நாள் டிலே கூடவா ஆகாது என்று அவளிடம் கேட்டுவைத்து, அவளது சிறு கோபத்தைக் கிளறிய வகையில் வாயைப் பொத்திக்கொண்டு இருந்தான். சாதாரணமாக தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் ப்ரவுஸிங் சென்டரை உபயோகிக்கும் பழக்கமுள்ள நிரந்திரா, அந்த மெயிலுக்கான பதிலைப் படிக்க அடுத்த நாள் ஷங்கரின் அலுவலகத்துக்கே நேரில் வந்தாள்.
தான் ஒருவேளை இன்று இரவு இறந்துபோய்விடக்கூடும் என்பதாக அவள் ஷங்கரிடம் முன்னதாகத் தெரிவித்தாள். அதற்கு கண்டிப்பாக ராம் இன்று அனுமதி அளித்திருப்பான் என்று சொன்னாள். அதைத் தொடர்ந்து அவளது இ-மெயில் இன்பாக்ஸைத் திறந்து பார்த்தாள். ராம் பதில் அனுப்பியிருந்தான். அவள் இங்கே வர வேண்டிய நேரம் வரும்போது தானே தெரிவிப்பதாகவும் அதற்கு முன் அவனைப் போன்ற ஒருத்தனை அவள் தேர்ந்தெடுத்துக்கொள்வாள் என்பதாகவும் அதில் இருந்ததை ஷங்கரும் படித்தான்.

நிரந்திரா கொஞ்ச நேரம் அழுதுகொண்டு இருந்தாள். ராம் உயிரோடு இருந்திருந்தால், அவனை அவள் கல்யாணம் செய்துகொள்வது சாத்தியமாகி இருக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்ததாக அப்போது தெரிவித்தாள். இரண்டு குடும்பங்களும் ஏற்காத அந்தத் திருமணத்தைத் தாங்கள் செய்துகொள்ளத் தயாராக இருந்தோமா என்பதை அவளால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ராமும் அதற்கான பதிலைச் சொல்லாமலே இறந்துபோயிருந்தான் என்பதனால் இப்போது அவன் சொல்வதுதான் அதற்கான பதிலா என்று அவள் வியந்தாள்.

இரண்டொரு நாட்கள் கழித்து நிரந்திரா மீண்டும் ஷங்கரைப் பார்க்க வந்தாள். தன்னைப் போன்ற ஒருவனை அவள் தேர்ந்தெடுப்பாள் என்கிற ராமின் வார்த்தைகள் அவளை ரொம்பவும் பாதித்துவிட்டதாக ஷங்கரிடம் தெரிவித்தாள். தான் அவ்விதமாக ஒரு முடிவை எடுத்துவிடக்கூடுமோ என்று இப்போது அஞ்சுவதாக அழுதுகொண்டே சொன்னாள். ஷங்கர் சற்றுநேரம் அவளை அழவிட்டுவிட்டு வெளியே போனான். அவளுக்குப் பிடித்த மசாலா பிஸ்கட் மற்றும் மாம்பழக் குளிர்பானம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு மீண்டு வந்தபோது, அவள் மிகுந்த தெளிவாக இருந்தாள்.

தான் யோசித்துப்பார்த்த வகையில் ராமிடம் இருந்த ஒருசில குணாதிசயங்கள் ஷங்கரிடம் இருப்பதாக அவள் தெரிவித்தாள். ஆனால், அவனோ தனக்கொரு மென்ட்டார் என்பதாகவே எண்ணக்கூடிய அளவுக்கு வயதில் மூத்தவனாக இருக்கிறான் என்பதாகச் சொன்னாள். அதை ஷங்கரும் ஆமோதித்தான். தனக்குச் சரியான வயதில் கல்யாணமாகி இருந்தால், நிரந்திராவைவிட ஐந்து வயதே குறைவாக ஒரு மகள் இருந்திருக்கக்கூடும் என்பதை அவனும் ஒப்புக்கொண்டான்.

என்றபோதும் அவனது மனம் துள்ள ஆரம்பித்திருந்தது. இத்தனை நாட்கள் தான்பட்டகஷ்டத்துக் கெல்லாம் பலன் கிடைத்துவிட்டது என்பதாக அவன் நினைத்தான்.

நிரந்திராவின் இ-மெயிலில் நுழைவதற்கு அவன் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல என்பதை அவன் மட்டுமே அறிவான். இதற்காக அவன் அவளிடம் இருந்து பல்வேறு செய்திகளை அவளறியாமலே கேட்டுப் பெற்றிருந்தான். ராம் மற்றும் நிரந்திராவின் முழுப் பெயர், செல்லப் பெயர்கள், வீட்டில் இருப்பவர்களின் பெயர்கள், வீடுகளின் பெயர்கள், வளர்ப்பு மிருகங்கள் இருந்தால் அவற்றின் பெயர்கள், குலதெய்வங்கள் மற்றும் இஷ்ட தெய்வங்களின் திருநாமங்கள், உற்ற நண்பர்களின், உறவினர்களின் பெயர்கள், குறிப்பாகக் குழந்தைகளின் பெயர்கள், இருவரின் சாதி மற்றும் உப சாதிகளின் விரிவாக்கப் பெயர்கள், கோத்திரம் அல்லது கூட்டம் இருப்பின் அவற்றின் பெயர்கள், இஷ்ட மலர்கள், நிறங்கள், பட்டப் பெயர்கள், நாளைக்கு பிள்ளை பிறந்தால் வைக்க விரும்பும் பெயர்கள், பிறந்த தேதிகள், பிடித்த சினிமா, நடிகை மற்றும் நடிகர், பார்க்க விரும்பும் இடம், சந்திக்க விரும்பும் நபர், வாங்க விரும்பும் கார் அல்லது பொருள்…

இப்படிச் சேகரித்த விவரங்களை இரவு பகலாக முன்னும் பின்னுமாக புரட்டிப் போட்டு, ஒருவகையாக அவளது பாஸ்வேர்ட் என்ன என்பதை அவன் கண்டுபிடித்திருந்தான். உண்மையில் அதிக சிரமம் வைக்காமல் அவள் வைத்திருந்த பாஸ்வேர்ட் அவளது செல்லப் பெயராகவே இருந்த வகையில் இதைப் போய் இத்தனை நாள் தேடினோமே என்று தனக்குள் வெட்கிப்போயிருந்தான் அவன்.

அவளது மெயிலுக்குள் அவனுக்குக் கிடைத்தான் ராம். அவன் அனுப்பி இருந்த மெயில்களைத் தனி ஃபோல்டரில் போட்டுவைத்திருந்த வகையில் நிரந்திரா ஷங்கருக்குப் பேருதவி புரிந்திருந்தாள். ராமின் மெயில்களைப் படித்தவகையில், அவன் எப்படி எழுதுவான் என்பதைக் காப்பியடிக்கக்கூடவா ஓர் எழுத்தாளனால் முடியாது?

அடுத்த கட்டமாக ராமின் பாஸ்வேர்டைக் கண்டுபிடிக்க வேண்டும். அது இன்னும் சுலபமாக இருந்தது. நிரந்திரா ராம் என்பதன் சுருக்கமாக ழி மி ஸி கி வி நிராம் அல்லது நிறம் என்பதாக இருந்தது அது.

நிரந்திரா இப்போது ஷங்கரிடம் தன் மனத்தைத் திறந்து பேச ஆரம்பித்தாள். ராமுக்குப் பிறகு தன்னை அதிக அளவுக்குத் தெரிந்துவைத்திருப்பதும் சரி, அவள் நலத்தில் அதிக அக்கறைகொண்டு இருப்பதும் சரி, அது ஷங்கர்மட்டும்தான் என்பதாகவே அவள் நம்புகிறாள் என்பதாகச் சொன்னாள்.

ராமிடம் இருந்து முதலில் மெயில்கள் வர ஆரம்பித்தபோது, தான் ஒருவிதமான பரவச நிலையை அடைந்துவிட்டு இருந்ததாகச் சொன்னாள். இதனால், அந்த மெயில்களைக் குறித்து தான் எவ்விதமான ஐயமும்கொண்டு இருக்கவில்லை என்பதாகக் குறிப்பிட்டாள்.

ஆனால், தொடர்ந்து அந்த மெயில்களின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்காமல் இருப்பது சாத்தியமே இல்லை என்பதனால், சைபர் க்ரைமில் இது குறித்துப் புகார் செய்து தர இயலுமா என்று அவள் ஷங்கரிடம் கேட்டாள். ஷங்கர் தனக்கும் அவ்விதமான சந்தேகம் இருப்பதாகவும் அவளது நம்பிக்கையைக் குலைக்க வேண்டாமே என்றுதான், தான் அதை வெளியே சொல்லாது இருந்ததாகவும் தெரிவித்தான். அவள் விரும்பினால் சைபர் க்ரைமில் புகார் செய்யத் தானும் கூட வருவதாகத் தெரிவித்தான். ஏனென்றால், அவன் ஒருபோதும் தன் சொந்த கம்ப்யூட்டரில் இருந்து அவளுக்கான பதில்களை அனுப்பியிருக்கவில்லை. அருகில் இருந்த ராமின் சொந்த ஊருக்குப் போய்த்தான் ஒவ்வொருமுறையும் பதில் அனுப்பிக்கொண்டு இருந்தான்.

நிரந்திரா அவன் சொன்னதைக் கேட்டதும் மிகுந்த துக்கம்அடைந்தவளைப்போலக் காணப்பட்டாள். ஷங்கர் அகப்பட்டுக்கொண்டோமோ என்று பயந்தான். இதனால், அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் அவள் தன்னைச் சந்தேகிக்கிறாளா என்று கேட்டான். அதற்கு அவள் சொன்ன பதில் எதிர்மறையாக இருந்தது.

யாரையும் சந்தேகப்படுவதற்குப் பதிலாக, அந்த மெயில்கள் ஏன் ராம் அனுப்பியவையாகவே இருக்கக் கூடாது என்று கண்களில் நீர் சுரக்க ஷங்கரிடம் தெரிவித்தாள். அதைத் தொடர்ந்து அடுத்த நாள் வருவதாகவும் போலீஸில் புகார் செய்யலாம் என்றும் தெரிவித்தாள்.

அன்று இரவு முழுக்க, தான் மாட்டிக்கொள்ளும்படியாக ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று ஆராய்வதில் ஷங்கருக்கு அளவுக்கு அதிகமாகவே குடிக்க வேண்டியிருந்தது. ஒருவழியாக அவன் உறங்கிப்போனான்.

மறுநாள் நிரந்திரா வரவில்லை. அவள் வீட்டில் இருந்து அவள் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு செய்தி மட்டும் வந்தது. ஷங்கர் தன் ஒட்டுமொத்த வாழ்வில் தான் அடையும் கடைசி அதிர்ச்சி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்தான். அவள் ஏன் இறந்தாள் என்கிற கேள்விக்கு அவனிடம் பதில் ஏதும் இல்லை. முடிவில், அவளது இ-மெயிலை ஹேக் செய்தது தான்தான் என்பதை அவள் கண்டுபிடித்திருக்க வேண்டும் என்பதாகவே அவனுக்குத் தோன்றியது. ஆனால், அவள் அதற்காகத் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

அவள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் தொடங்கியிருந்த காதலனை மீண்டும் உயிர்ப்பித்ததுதான் தான் செய்த தவறு என்பதாகவே அவனுக்குத் தோன்றியது.

இதனால் அவளது இறுதி அஞ்சலிக்குப் போவதற்குக்கூட அவன் அஞ்சினான். அன்று முழுக்கக் குடித்துக்கொண்டு இருந்த அவன், அர்த்த ராத்திரியில் தன் செல்போனின் எஸ்.எம்.எஸ். அறிவிப்பின் மெல்லிய ஒலிக்கே வழக்கத்துக்கு மாறாக விழித்துக் கொண்டான்.

அரை மயக்கத்தில் அதை எடுத்துப்பார்த்த அவனது நடுமுதுகில் சில்லென்று ஒரு மின்னல் ஓடியது. ஏனென்றால், அந்தக் குறுந் தகவல் நிரந்திராவின் எண்ணில் இருந்து வந்திருந்தது. அதில், ‘என் மின்னஞ்சலைத் திற’ என்று ஒரு கட்டளை இருந்தது.

ஷங்கர் நடுங்கும் கரங்களால் தன் லேப்டாப்பைத் திறந்தான். நிரந்திராவின் மின்னஞ்சலின் கடவுச் சொல் ஒரு கணம் மறந்து பின் நினைவுக்கு வந்தது. ழி மி ஜி பி ஹி நித்து! அவளது இன்பாக்ஸில் புதிதாக எந்த மின்னஞ்சலும் வந்திருக்கவில்லை. ஆனால், கடைசியாக வந்திருந்த மின்னஞ்சல் முந்தைய நாள்தான் ராமிடம் இருந்து வந்திருந்தது.

தான் அனுப்பியிராத அந்த மின்னஞ்சலை ஷங்கர் குலைநடுங்கத் திறந்தான். அதில் கீழ்க்கண்ட வாசகம் இருந்தது.

நித்தூ! நீ வரவேண்டிய நாள் வந்துவிட்டது!

– நவம்பர், 2009

Print Friendly, PDF & Email

1 thought on “கைக்கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *