காயத்ரி என்கிற திலோத்தமா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 22,490 
 

”சுப்ரமணி… ஆர்த்தோ வார்டுல டாக்டர் சத்யாகிட்ட மூணு கால்சியம் வயல் கொடுத்துட்டு வாங்க. அப்பிடியே ஸ்டாஃப் காயத்ரிகிட்ட டி.என்.எஸ். எத்தனை தேவைப்படுதுனு கேளுங்க…”

எலும்புமுறிவு சிகிச்சைப் பிரிவு வார்டுக்கு சுப்ரமணி சென்றபோது, அங்கு டாக்டர் சத்யா இல்லை. காயத்ரியிடம் ஊசி மருந்து பாட்டிலைக் கொடுத்துவிட்டு, ”இன்னைக்கு ஆஃப்தானே ஒனக்கு… சாயங்காலம் சினிமாவுக்குப் போவோமா?” என்று கேட்டான். காயத்ரி என்றதும் சிவப்பாக ஒல்லியாக பெரிய கண்களுடன் கன்னத்தில் மச்சம் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டால், நீங்கள் நிறைய விஜய் படங்கள் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். சுப்ரமணியின் காயத்ரி, கொஞ்சம் மாநிறம்… சற்றே பூசிய உடம்பு… உயரமும் இல்லை; குள்ளமும் இல்லை. சுப்ரமணியிடம் கேட்டால், ‘ஆனால், அது ஒரு குறையில்லை’ என்று பாடுவான். சுப்ரமணி நன்றாகப் பாடுவான். அவன் பாட்டில் விழுந்தவள்தான் காயத்ரி.

காயத்ரி என்கிற திலோத்தமா

பைக் விரைந்துகொண்டிருந்தது. எதிர்க்காற்றில் கலைந்த கூந்தலை காதோரமாக ஒதுக்கியபடி அமர்ந்திருந்த காயத்ரியின் மூச்சுக்காற்று, சுப்ரமணியின் கழுத்தைச் சுட்டது. அவன் தோளைப் பற்றியிருந்த காயத்ரியின் ஒரு கையில் அவ்வப்போது அழுத்தம் கூடியது; குறைந்தது. ”எனக்கு லாஸ்ட் பஸ் ஒம்போதரைக்கு… அதுக்குள்ள படம் முடிஞ்சிடும்ல” என்றாள். ”இன்னும் படமே ஆரம்பிக்கல… அதுக்குள்ளே எண்டு கார்டா?” என்ற சுப்ரமணி, வெள்ளையில் கறுப்புப் பட்டை டிசைனில் டி-ஷர்ட் அணிந்திருந்தான்.

”ஒயிட் அண்ட் ஒயிட்லயே பார்த்துட்டு, இப்ப டி-ஷர்ட்ல பார்க்குறப்ப வேற மாதிரி இருக்கீங்க!”

”வேற மாதிரின்னா?”

”ம்… அஜித் மாதிரி…” என்று சிரித்தாள் காயத்ரி.

லட்சுமி தியேட்டர் வெண்திரையில், ‘ஆசை’ படத்தில் அஜித், சுவலட்சுமியுடன் ஆடிக்கொண்டிருந்தார். ‘ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்துக் கேளடியோ… திலோத்தமா’ காயத்ரியின் அருகில் அமர்ந்திருந்த சுப்ரமணி, திரையிலிருந்து விரிந்த வெளிச்சத்தில் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பாடலின் இடையில், ”நீங்கதான் அஜித்தாம்… நான்தான் சுவலட்சுமியாம். இந்த ஐஸ் மலையில ஓடி ஓடி வெளையாடலாமா?” என்று சுப்ரமணியின் காதுக்குள் கேட்டுவிட்டு, திரும்பி திரையில் லயித்தாள்!

இரண்டு வருடக் காதல். காயத்ரியின் செவிலிப் பயிற்சியின் கடைசி வருடம்தான் சுப்ரமணி அவளைக் கவனிக்கத் தொடங்கினான். நண்பன் இளங்கோவிடம், ‘ஒரு ஃபிகரை எப்பிடி கரெக்ட் பண்றதுடா?’ என்று கேட்டபோது, ‘சிரிக்கச் சிரிக்கப் பேசணும்டா…’ என்றான். சுப்ரமணி, பேரழகன் அல்ல. வாரம் ஒருமுறை பீர், அவ்வப்போது சிகரெட் என்ற சராசரியன். ஆனாலும், சுப்ரமணியை எல்லோருக்கும் பிடிக்க, ஒரு காரணம் இருந்தது. அவனைச் சுற்றிலும் எப்போதும் மிதந்துகொண்டிருக்கும் சிரிப்பு. அதனாலேயே மருத்துவமனையில் அவனைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். பக்கத்துக் கிராமத்தில் இருந்து செவிலிப் பயிற்சிக்கு வந்து செல்லும் காயத்ரிக்கு நிரந்தரமாக ஒரு சோகம் இருந்தது. துயரப் பனியைத் துடைக்கும் சூரியனாக, சுப்ரமணியின் சிரிப்பைச் சந்தித்தாள் காயத்ரி. அந்தக் காந்தம் இந்த இரும்புத்துண்டை இப்படித்தான் இழுத்துக்கொண்டது.

வியாழக்கிழமை, ரத்தக்கொதிப்புக்கான மாத்திரைகள் தரும் தினம். பக்கத்துக் கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கள் வர, கூட்டம் ஆஸ்பத்திரியைத் திணறடிக்கும். சுப்ரமணி, உபரியாகக் கொஞ்சம் டென்ஷனைக் கடன் வாங்கி உழைத்துக் கொண்டிருந்தான். நீட்டப்படும் கோடு போட்ட நோட்டுகள் வாங்கி மாத்திரைகளைப் படித்து எடுத்துக் கொடுத்து, அடுத்த நோட்டு வாங்கி… என்று போய்க்கொண்டிருக்கும்போதுதான் காயத்ரி அவனிடம் சந்தேகம் கேட்டாள்.

கேராமைசின் இன்ஜெக்ஷனுக்கும் தான் போடும் கையெழுத்துக்கும் அதிக வித்தியாசம் காட்டாத டாக்டர் குணாதான், காயத்ரியின் சந்தேகத்துக்குக் காரணமாக இருந்தார். டாக்டர் எழுதித் தந்த சீட்டில் இருந்த மருந்துகுறித்த தன் சந்தேகத்தை சுப்ரமணியிடம், ”இது ஜி.எம். இன்ஜெக்ஷனா?” என்று கேட்டாள். சட்டென்று திரும்பி, ”அங்க யார்கிட்டயாவது கேளுங்க” என்ற சுப்ரமணியின் குரலில் இருந்த எரிச்சல் காயத்ரியைச் சுட்டது.

மதியத்துக்கு மேல் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனான் சுப்ரமணி. காயத்ரியை நோக்கிய கணம் அவளின் முக வாட்டத்தைக் கவனித்தவன், ”என்னாச்சு? டல்லா இருக்கீங்க!” என்று கேட்டான். ”ஒண்ணுமில்லியே” என்றவளிடம், ”இல்லை… ஏதோ இருக்கு. ஏதாச்சும் இருந்தாத்தான் இப்பிடி இருப்பீங்க நீங்க” என்றான்.

”மனசு கொஞ்சம் சரியில்ல!”

”அட… எனக்கும் அப்பிடித்தான்!”

”ஏன்… ஒங்களுக்கென்ன?”

”கொஞ்சம்தான் சரியில்ல. மத்தபடி நல்லாத்தான் இருக்கேன்!”

”ஹய்யோ… மொக்க போடாதீங்க!”

”சரி… இனிமே சிரிக்கலாமே.”

மெதுவாகப் புன்னகைத்த காயத்ரி, ”காலையில என்ன அவ்ளோ டென்ஷன்?” என்று கேட்டாள். அப்போதுதான் சுப்ரமணிக்குள் அந்தச் சிடுசிடு சம்பவம் நினைவுக்கு வந்தது. கூடவே, நண்பன் சொன்ன அந்த வேதவாக்கும்… ‘ஃபிகரை கரெக்ட் பண்ணணும்னா சிரிக்கச் சிரிக்கப் பேசணும்டா!’ உடனே ஸ்பார்க் அடித்துச் சொன்னான்…

”கொடுக்குறது பி.பி. மாத்திரை இல்லையா… அதான் மாத்திரை கொடுத்த எனக்கும் பி.பி. அதிகமாகிடுச்சு!”

வாய்விட்டுச் சிரித்த காயத்ரியின் அன்றைய கனவில், சுப்ரமணி வந்து அவளுக்கு முத்தம் தந்தான்.

காயத்ரி என்கிற திலோத்தமா2

அவ்வளவுதான். நீட்டி முழக்கிச் சொல்ல எதுவும் இல்லை. மருந்து வாசனையுடன் இருவருக்குமான காதல் மிக ஆரோக்கியமாக வளர்ந்து வந்தது. காயத்ரி சிரிப்பதற்காகவே சுப்ரமணி பேசினான். சுப்ரமணி எது சொன்னாலும் காயத்ரி சிரித்தாள். ஆஸ்பத்திரி, சினிமா தியேட்டர், ஆற்றுப்பாலம், படகுத்துறை… என அவர்கள் பேசினார்கள்; சிரித்தார்கள். டிக்கெட் கிடைத்த இடைவெளியில் சினிமாவுக்குப் போனார்கள். காயத்ரியின் பிறந்த நாளுக்கு சிவப்பு கலர் சுடிதார் ஒன்றை சுப்ரமணி பரிசாகத் தந்தபோது, அவளின் கண்களில் தர்மசங்கடமான மிரட்சியைச் சந்தித்தான்.

”எனக்கென்னமோ இதெல்லாம் ரொம்ப அதிகம்னு தோணுது!”

”இல்ல காயத்ரி… ரொம்பக் கம்மிதான். ரிடக்ஷன்ல எடுத்தது!”

”ப்ச்… நான் அதைச் சொல்லல. இதெல்லாம் ஒரு ஆம்பள எடுத்துக்கொடுத்து ஒரு பொண்ணு வாங்கிக்கிறானா, ஏதாவது ஒரு காரணம் இருக்கணும்!”

”ஏன்… நமக்குள்ள ஒரு காரணமும் இல்லியா?”

”எனக்கென்னமோ இது சரியாப் படலை. மனசுக்குள்ள தப்பாவே தோணுது. இருந்தாலும் வாங்கிக்கிறேன். ரொம்ப தேங்க்ஸ்!”

”தேங்க்ஸ் மட்டும்தானா?” என்று விளக்கெண்ணெய் சிரிப்பு சிரித்த சுப்ரமணியின் கன்னத்தில் விழுந்தது அந்த முத்தம். காயத்ரி கொடுத்த முதல் முத்தம். கள் குடித்த குரங்கு, இரை உண்ட மலை பாம்பு, எந்த உதாரணமும் சுப்ரமணிக்குப் போதவில்லை. முதன்முதலாக தன்னை ஓர் ஆம்பளையாக உணர்ந்தான். இந்த ஜென்மத்தில் இந்த வாசனை தன்னைவிட்டு விலகாது என்று உணர்ந்தவனாக மேகத்தில் மிதந்துகொண்டிருந்தவனுக்கு, மாலை அதிர்ச்சி காத்திருந்தது.

மதியத்துடன் டியூட்டி முடிந்து காயத்ரி வீட்டுக்குச் சென்றுவிட, சாயங்காலம் ஐந்து மணிக்கு காயத்ரிக்கு போன் செய்தபோது ‘சுவிட்ச் ஆஃப்!’ சுப்ரமணி, தன் வீட்டுக்குச் சென்று ஏழு மணிக்கு போன் செய்தபோதும் ‘சுவிட்ச் ஆஃப்!’. முத்த சந்தோஷத்தின் இருப்பு, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுபோல் இருந்தது சுப்ரமணிக்கு. சாப்பிட்டுப் படுக்கும் முன்னும் சுவிட்ச் ஆஃப்!

விளக்கைப் போட்டுக்கொண்டு பாரதியின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்தவன் மனம் பாரதியிடம் இல்லை. பன்னிரண்டு மணிக்கு பாத்ரூம் செல்வதுபோல் சென்று அங்கிருந்தபடியே போன் செய்தான். ‘நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும் நபர், உங்களை முற்றிலும் தவிர்க்கிறார். நீங்கள் விடிய விடிய தூங்காமல் அந்த பாத்ரூமிலேயே கிடந்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை’ என்றொரு பெண் குரல் கேட்டது. அது, அச்சுஅசலாக காயத்ரியின் குரலாகவே சுப்ரமணிக்குத் தோன்றியது.

இரவு முழுவதும் தூங்கவில்லை. இரவு முடிந்த பின்னும் தூங்காமல் சிவந்த கண்கள், கலங்கிய நெஞ்சுடன் வேலைக்குச் சென்றான் சுப்ரமணி. அங்கே காயத்ரியும் சிவந்த கண்கள், கலங்கிய முகத்துடன் வேலைக்கு வந்திருந்தாள்.அவளின் சோர்வு உடனே அவனைத் தாக்கியது. மன ஆத்திரம் சட்டென்று வடிய, கிடைத்த இடைவெளியில் ”என்னாச்சு” என்றான். ”மதியம் பேசுவோம்” என்றாள் எந்தவித உயிர்ப்பும் இன்றி.

ஆஸ்பத்திரியில் இருந்த வாதாமரம் தன் பெரிய இலைகளால் பெரிய நிழலைத் தந்தபடிஇருக்க, அங்கிருந்த சிமென்ட் கட்டையில் அமர்ந்திருந்தனர் இருவரும். நீண்ட பெருமூச்சைத் தொடர்ந்து, ”நேத்து ஈவ்னிங் என்னைப் பொண்ணு பார்க்க வந்திருந்தாங்க” என்றாள் காயத்ரி. சுப்ரமணி, அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

”என்ன ஒரு ரியாக்ஷனையும் காணும்?”

”ம்… சொல்லு” என்றான் இறுக்கமாக.

”அடுத்த வாரம் நிச்சயதார்த்தம். கல்யாணத்துக்கு நாள் குறிக்கப்போறாங்க…”

”சரி… நீ என்ன சொன்னே?”

”நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்குறீங்க. அவரு உடுமலைப்பேட்டையில இன்ஜினீயரா இருக்காரு!”

”அப்போ ஒனக்கும் ஓ.கே.வா?”

”ம்… வீட்ல சம்மதம் சொல்லிட்டேன்!”

சட்டென்று அமர்ந்த இடத்தைவிட்டு எழுந்து அகன்றான் சுப்ரமணி.

அதன் பின்னான நாட்களில் சுப்ரமணியிடம் கேட்காமலே அவனுக்கு தாடி வளர்ந்தது. கண்களில் சோகம் பதுக்கிவைத்துக்கொண்டு அலைந்தான். செயற்கையான சிரிப்பு சிரித்தான். காயத்ரியும் அவனிடம் எதுவும் பேசவில்லை. ஆனால், திருமணம் நிச்சயமான பிறகு, காயத் ரியின் அழகு நாளுக்குநாள் கூடிக்கொண்டே இருந்ததைப் போல இருந்தது சுப்ரமணிக்கு.

‘திருமணம் நிச்சயமான
பெண்ணின்
கன்னத்திலும் நகங்களிலும்
ரோஸ் நிறம் வளர்கிறது’

என்று ‘கவிதை’ எழுதி கிழித்துப் போட்டான். ஒரு காதலனின் கோடி கற்பனைகள், நிச்சயிக்கப்பட்ட ஒரு திருமணத்தால் சிதைவதா? சுப்ரமணி திரும்பிய திசையில் தெரிந்த சுவரெல்லாம், ‘உன்னை மட்டும் நான் கைவிட்டுவிட்டேன்’ என்ற யேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்திருந்தார்கள்.

அன்று ஸ்டாஃப் ரூமில் தனித்திருந்த சுப்ரமணியிடம் கல்யாணப் பத்திரிகைகள் சிலவற்றோடு, பெயர்கள் எழுதிய பட்டியலும் தந்து, ”நம்ம ஹாஸ்பிட்டல்ல வேலை பார்க்கிறவங்க லிஸ்ட் இது. கொஞ்சம் பேர் சரிபார்த்து எழுதித் தர்றீங்களா?” என்று கேட்டாள் காயத்ரி.

”என்னைப் பாத்தா ஒனக்குக் கிண்டலா இருக்கா? ஒன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கே?” முதன்முறையாக சுப்ரமணியின் கோப முகம் பார்த்தாள் காயத்ரி.

”ஏன்… என்னாச்சு? எனக்குக் கல்யாணம்னா ஒங்களுக்குச் சந்தோஷம் இல்லையா? பத்து நாளாவே நீங்க சரியில்ல. ஏதோ காதல்ல தோல்வி அடைஞ்சா மாதிரி தாடி வளர்த்துக்கிட்டு, சரியா பேசாம, சிரிக்காம… என்னாச்சு ஒங்களுக்கு?” மிகச் சாதாரணமாகக் கேட்ட காயத்ரியைப் புருவம் சுருக்கிப் புரியாமல் பார்த்தான்.

”நீ சந்தோஷமாத்தான் இருக்கியா?” – குரல் கரகரத்தது சுப்ரமணிக்கு.

”பின்னே… இதுல நான் கவலைப்படுறதுக்கு எதுவுமே இல்லியே!”

”ஒரு நிமிஷம் என்னை நெனச்சிப் பாத்தியா?” சட்டென்று சூழல் மறந்து சத்தமாகச் சிரித்தாள் காயத்ரி.

”ஹலோ… என்னங்க ஏதோ காவியக் காதலன் மாதிரி டயலாக்கெல்லாம் விடுறீங்க? கொஞ்சம் சீரியஸாப் பேசுங்க. நமக்குள்ள இருந்தது காதலா? நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நூறு வருஷம் ஒண்ணா வாழப்போற மாதிரி அபத்தமா கனவெல்லாம் கண்டீங்களா என்ன? ஒங்க ரசனைக்கு செட் ஆகாத, உங்களை எந்த விதத்திலும் புரிஞ்சுக்காத மனைவியோட நீங்க இருக்கீங்க. வீட்டுக்கு மூத்த பொண்ணு, குடிகார அப்பா, குடும்பத்துல எல்லாப் பொறுப்பையும் தலையில சொமந்து அழுதுட்டு இருக்கிற எனக்கு, ஒரு வடிகால் தேவைப்பட்டுச்சு. உங்க சிரிப்பு புடிச்சிருந்தது; உங்க பேச்சு என் துக்கத்தை மறக்க வெச்சுது. ஊரைவிட்டு 30 கிலோமீட்டர் தள்ளி இருக்கிற இந்த ஆஸ்பத்திரியில வேலை பார்க்குற எனக்கும் உங்களுக்கும் இடையில இருந்தது காதல் இல்லைங்க. இப்படி ஒரு பொண்டாட்டி கெடச்சிருந்தா, நம்ம வாழ்க்கை எவ்ளோ நல்லா இருந்துருக்கும்னு நீங்க நெனச்ச பொண்ணு நான். அவ்ளோதான்! நான் ஒங்களோட பேசுனது, பழகினது, சிரிச்சது, சினிமாவுக்கு வந்தது எல்லாமே, என்னைக்கும் ஒங்களோட ஒண்ணா வாழ முடியாதுங்கிற எண்ணத்தை மனசுல வெச்சுக்கிட்டுதான். இதுல நான் ஒங்க மனைவிக்கு எந்தத் துரோகமும் பண்ணலே. அவங்களை டைவர்ஸ் பண்ணிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கங்கனு சொல்லவும் இல்லை. அவங்களுக்குத் தெரியாம ஒங்ககூட நான் குடும்பம் நடத்தவும் இல்ல. எனக்கு ஒங்க சிரிப்பும் நீங்க சொல்ற கவிதைகளும் ஆறுதல் தந்துச்சு. ஒங்ககூட இருக்கிறப்ப நான் என் கஷ்டங்களைத் தற்காலிகமா மறந்திருந்தேன். அவ்ளோதான்!

பிறந்த நாள் அன்னைக்கி காலையில, நான் வீட்ல இருந்து கௌம்பும்போதே சொல்லிட்டாங்க, சாயங்காலம் மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்றதா… ஒங்க சுடிதார் பரிசை நான் வாங்கிக்கிட்டது, நீங்க மனசு கஷ்டப்படக் கூடாதுனுதான். அந்த முத்தம், திருப்பி நான் ஒங்களுக்குத் தந்த பரிசு. என்னால கட்டுப்படுத்த முடியாத அன்போட வெளிப்பாடு. அது நான் ஒங்களுக்கு தந்த முதல் முத்தம் இல்லை… கடைசி முத்தம். அது கடைசி முத்தம்னு நீங்க உணராமப்போனது அந்த முத்தத்தோட துரதிர்ஷ்டம்!”

சட்டென்று திரும்பிக்கொண்ட காயத்ரியின் குரல், அதற்குப் பின் தழுதழுத்ததை சுப்ரமணியால் உணர முடிந்தது.

”நீங்க ரொம்ப நல்லவருங்க. இவ்ளோ நாள் பழக்கத்துல தப்பான ஒரு பார்வையோ, தொடுதலோ ஒங்ககிட்ட இல்ல. உங்க மனைவி ரொம்பக் கொடுத்துவெச்சவங்க!”

மறுபடியும் சுப்ரமணியின் முகம் பார்த்துத் திரும்பியவள், ”ஒடனே இந்தப் பொம்பளைங்களே இப்பிடித்தான்னு புலம்ப ஆரம்பிச்சுடாதீங்க. என் வாழ்க்கையில நான் பேசிப் பழகி முத்தம் கொடுத்த ஒரே ஆம்பளை நீங்கதான். என் வாழ்க்கையில அந்த இன்ஜினீயர்தான் புருஷன். நான் ஒங்களை மறக்க ஆரம்பிச்சு 20 நாள் ஆகுது. இந்தாங்க… இது உங்களுக்கு என்னோட கல்யாணப் பத்திரிகை. கல்யாணத்துக்கு அவசியம் வந்து மொய் வெச்சிட்டு விருந்து சாப்பிட்டுப் போங்க. அப்பதான் நீங்க என்னை மறக்குறதுக்கும் வெறுக்கிறதுக்கும் வசதியா இருக்கும்” – மேஜையில் கல்யாண பத்திரிகையை வைத்துவிட்டு திரும்பி நடந்து சென்று மறைந்தாள் காயத்ரி.

உடுமலைப்பேட்டையில் சுப்ரமணி இறங்கியபோது அதிகாலை ஆறு மணி. குளிர், காற்றில் ஊசியாக விசிறிக்கொண்டிருந்தது. காயத்ரிக்குத் திருமணம் நடக்கும் மண்டபத்தை நெருங்க நெருங்க வாசலில் இருந்த ஸ்பீக்கரில், ‘ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்துக் கேளடியோ… திலோத்தமா’ என்று பாடலின் டெசிபல் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகியது. கூந்தலை புல்தரையில் விரித்துப் படுத்திருந்த காயத்ரியின் நெஞ்சில் காதை வைத்து அந்த உடுமலைப்பேட்டை இன்ஜினீயர் எதையோ கேட்டுக்கொண்டிருந்தது சுப்ரமணியின் மனக் கண்களில் தெரிந்தது. அப்படியே திரும்பி நடக்கத் தொடங்கினான்.

பேருந்தில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் தென்பட்ட ஆற்றில், கையில் வைத்திருந்த பரிசு பார்சலைத் தூக்கி எறிந்தான். பாலத்தைப் பேருந்து கடக்கும்வரை அந்தப் பார்சல் மூழ்காமல் மிதந்துகொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தான். பேருந்து கடந்த பின்னும் அந்தப் பார்சல் மூழ்காமல் மிதந்துகொண்டு இருந்தது!

– அக்டோபர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *