காதல் வந்ததே… காதல் வந்ததே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 28,784 
 

வருடம் 2015

“ச்சே … இத்தனை நடந்தும் சகிச்சுக்கிட்டு போகணும்ன்னு இருக்கறது என்னோட தலையெழுத்தா?” அன்னிக்கி எடுத்த முட்டாள் தனமான முடிவு கண்ணுக்கு தெரியாத தாம்புக்கயிறால் தூணோடு கட்டியிட்டு நகக்கண்ணில் சிறிது கீறிவிட்டதுபோல் ஒன்றும் செய்யமுடியாமல் … உதிரம் சிந்த சிந்த சிறிது சிறிதாக மரணிக்கும் என்நிலை யாருக்கும் வரக்கூடாது..” என்று என் மனம் அனிச்சையாக ஓலமிட்டது.

அந்த ஓலத்தை கலைப்பதுபோல் “என்ன செத்தவன நினைச்சிகிட்டு இருக்கியா? இரு உனக்கு இருக்கு கச்சேரி! உன் நினைப்பே அவனுக்கு இருக்கக்கூடாதுன்னு தானே அவன போட்டு தள்ளினது.” என்று கூறிக்கொண்டு உள்ளே சென்றவன்.. ஊருக்கு உத்தமன்! எனக்கு வாழ்வு பிச்சை போட்ட புண்ணியவான்!! என் கணவன்!!!

என் மரத்து போன மனமும் உடம்பும் இன்றும் வாழ்ந்துக்கொண்டிருப்பது விந்தையே!

“என்ன தேவி உன் வீட்டுக்காரன் ஊருல இருந்து வந்துட்டான் போல” என்று கேட்டபடி என் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றிருந்த என் மூத்தாரின் மனைவியான அக்கா வந்து என் அடுத்து உட்கார்ந்துகொண்டு என்னோடு சேர்ந்து கீரையை ஆயத்தொடங்கினார்.

“ஆமாம் க்கா” என்ற என் குரலே என்நிலையை காட்டிக்கொடுத்தது.

“ம்ம்ம் என்ன சொன்னாலும் இந்த வீட்டு ஆம்பிளைங்களுக்கு புத்தியில்லை…மனசும் இல்லை.” என்று கூறியதை கேட்டபோது எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

“நீயும் நிமிந்து நிக்கணும்” என்று எனக்கு கூறியதை கேட்டபோது

“படிக்க வேண்டிய வயசுல படிப்ப முடிக்காம வீட்டை விட்டு வெளியேறியது முதல் தப்பு!” என்று ஈட்டியால் குட்டியது என் மனசாட்சி.

“எப்படி அக்கா? என்னோட நிலைல இருந்து பாருங்க.” என்று கூறும்போதே என் கண்கள் அருவியாகவும் மூக்கும் தொண்டையும் ஞங்ன என்று பாடத்தொடங்கியது.

அதற்குள் “என்ன அங்க மாநாடு போடறீங்களா. சீக்கிரம் வந்து சாப்பாட போடுங்க” என்று தன் அண்ணனை அழைக்க சென்ற என் கணவனின் குரலே என்னை அச்சுறுத்தியது. இன்னும் சில மணிநேரமே எனக்கு இருக்கிறது…கச்சேரி ஆரம்பிக்க!

மேலே இருந்த எங்கள் பகுதிக்கு வரும்பொழுதே கால்கள் பின்னத்தொடங்கியது. “ஆண்டவா… போன ஜென்மத்துல நான் என்ன பாவம் செஞ்சேன்? ச்சேச்சே…தப்பு தப்பு! இந்த ஜென்மத்துல செஞ்ச பாவத்துக்கு தண்டனையா தான் இந்த ஆளோட என் வாழ்க்கைய முடிச்சி போட்டுட்டன்னு தெரியாம உன்ன வேற கேள்வி கேட்டுகிட்டு இருக்கேன். ம்ம்ம்.. என்ன செய்ய? நான் வேறு யாருகிட்ட போய் என்னன்னு கேக்கமுடியும்?” என்ற என் மனக்குமுறல்களையெல்லாம் நிறுத்த முடியாமல் எங்கள் அறைக்குள் செல்லும் முன் என் பிள்ளைகளின் படுக்கும் அறைக்குள் சென்றேன்.

அங்கு மூத்த மகளை கட்டிக்கொண்டு என் மூன்றாவது மகன் உறங்குவதும், இரண்டாவது மகன் தனிக்கட்டிலில் உறங்குவதும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. “இவர்கள் இரவு விழிக்காமல் இருக்க வேண்டுமே” என்ற என் வேண்டுதல் பலிக்குமா?”

“அப்போவே மேல வந்தவ உள்ள வர வெத்தில பாக்கு வைச்சி கூப்பிடனுமா?” என்ற என் கணவனின் குரலே என்னை நிகழ்வுலகுக்கு மீட்டி குலைநடுங்க வைத்தது.

“நேத்திக்கி நான் இல்லாதப்ப யாரு வந்தா?” என்று கேட்டுக்கொண்டே என் கையை பிடித்து இழுத்து தன் மார்பில் சார்த்திகொண்ட கணவனைப் பார்க்க அருவருத்தது.

“என்ன அப்படி பார்த்தா.. நான் விட்டுடுவேனா? சொல்லு?” என்று என் பதிலுக்கு காத்திருப்பவனிடம் என்ன சொன்னாலும் குதர்க்கமாகவே தோன்றும்.

“யாரும் வரல.” என்றேன்

“அது எப்படி? முன்ன ஓடி போனையே அப்போ கூட இருந்தவன் கூட்டி குடுத்த ஆளுக யாரும் இல்லையா?”

“ச்சே.. என்னை ஏன் சித்திரவதை செய்யறீங்க? எல்லாம் தெரிஞ்சி தானே என்னை கல்யாணம் பண்ணிகிட்டீங்க?” என்று கேட்டேன்.

“பளார்..!” என்ற அடியில் கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்தேன்.

“பிச்சிபுடுவேன் பிச்சி. தத்..தேவடியா. உடம்பு நமச்சல் எடுத்துக்கிட்டு ஒருத்தனை இழுத்துக்கிட்டு ஓடினவ தானே…நீ. உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னோட பொண்டாட்டின்னும் ரெண்டு குழந்தைக்கு தாயாவும் கௌரவமான வாழ்வை உனக்கு தந்த என்னை பார்த்து கேள்வியா கேப்ப? நான் உன்ன சித்திரவதையா பண்ணேன்?” என்று கேட்டுக்கொண்டே காலால் என்னை மேலும் மேலும் எட்டி உதைத்ததில் படக்கூடாத இடத்தில் பட்டு என் உடம்பில் ஒட்டிக்கொண்டு இருந்த சிறிது உயிரும் பிரிந்தது போல் பொறிகலங்கியது. அந்த நேரத்திலும் இவனுக்கு பிறந்த மகளையே தனக்கு பிறந்ததில்லை என்று கூறியது மேலும் என்னை தளர்த்தியது. “ஆண்டவா … என் மகளை காப்பாத்துப்பா… அவளுக்கு ஒரு வழிபிறக்கிற வரைக்கும் என் உசிரு இருக்கணுமே!” என்ற என் வேண்டுதலுடன் மயங்கினேன்.

மறுநாள் மருத்துவமனையில் கண் விழித்த போது, என் அசைவை உணர்ந்து பதைபதைப்புடன் என் அருகில் வந்த அக்காவின் முகத்தை பார்க்க முடியவில்லை.

“ராட்சசன்.. இப்படியா பண்ணுவான். நீ கண்ணு முழிக்கற வரைக்கும் என் உசிரு என்கிட்ட இல்லை.” என்று தழுதழுத்தவரின் பாசம் என் கண்களை குளமாக்கியது. உடன்பிறப்பு இல்லையெனினும் உறவு முறை தந்த சகோதரி!

“ப..பச…ங்க…” அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை.

“அவங்களுக்கு ஒன்னும் தெரியாது. என் பிள்ளைக கூட பள்ளிக்கூடம் போக ஏற்பாடு செஞ்சிட்டேன். ஆனா உன் மக மட்டும் என்ன ஆச்சு அப்படின்னு நச்சிகிட்டே இருந்தது. ஏதோ சொல்லி சமாளிச்சிட்டேன். குடிக்க ஏதாவது தரட்டா?” என்று என் தலையை ஆறுதலாக கோதியபடி கேட்டவரை பார்த்து கை எடுத்து கும்பிட தோன்றியது.

நான் மறுத்தும் என்னை உண்ணவும் குடிக்கவும் செய்து மருந்தின் பிடியில் நான் ஆழும்வரை ஆறுதலாக இருந்தார்.

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது..

“உங்க அம்மா வீட்டுக்கு சொல்லி அனுப்பவா?” என்ற அக்காவை பார்த்தேன்.

“என்ன அப்படி பாக்கற? என்ன இருந்தாலும் உங்க வீட்டு மனுசங்கள பாத்தா தெம்பு வருமேன்னு கேட்டேன்.”

“ம்ச்…அது மனுஷங்களை பார்த்தா தெம்பு வரும். ஆனா…. என்னால இதுக்கு மேல தாங்க தெம்பு இல்லைக்கா…” என்று கூறிவாறு கண் மூடி படுத்தேன்… மேற்கொண்டு பேச்சு போகும் திசையை நிறுத்த.

ஆனால் என் நினைவலைகள் இரண்டு வருடங்கள் பின்னோக்கி சென்றது. அன்றும் இன்றுபோல் உடலாலும் உள்ளத்தாலும் சித்திரவதை அனுபவிக்கப்பட்டு இதைவிட ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுபவிக்கப்பட்டிருந்தேன்.

அம்முறை, மூன்று நாட்களுக்கு பின்னர் கண் விழித்து பார்த்த போது என் பெற்றோரும் உடன் இருந்தனர். என் கணவரின் வீட்டு மனிதர்கள் இல்லாத நேரம் என் அம்மாவிடம்

“அம்மா.. நான் நம்ப வீட்டுக்கே வந்துடறேன். என்னால இங்க இருக்க முடியல..நீங்க கூட்டிக்கிட்டுப் போயிடுங்களேன்” என்றேன்.

“சீ.. வாய மூடு. நீ பண்ணின காரியத்துக்கு சொந்தகாரங்களே உனக்கு வாழ்வு தராதப்ப, நம்ப ஜாதி சனத்துல சேர்ந்த பெரியவங்க பெரிய மனசு பண்ணி உனக்காக முன்ன நின்னு கடவுள் மாதிரி கொண்டுவந்தாங்க உன் புருஷன …உனக்கு பெருந்தன்மையா வாழ்க்கை கொடுத்தா … வாழ துப்பில்லை.” என்றது என் அம்மாவா என்ற அதிர்ச்சியில் வார்த்தைகள் வெளிவராது மலங்க விழிக்க மட்டுமே முடிந்தது.

அம்மாவே பரவாயில்லை என்றது போல் “சோரம்போய் வந்தவள கட்டிகிட்டதுக்கு மாப்பிள்ளைக்கு நீ கோவில் கட்டி கையெடுத்து கும்பிடனும்….ஆனா…அந்த மனுஷன அல்லாடவிடற மாதிரி நடந்துக்கற ..ஆஸ்பத்திரிகாரங்க மாப்பிள்ளைதான் ஏதோ உன்ன கொடுமை பண்ணியிருப்பாரோன்னு சந்தேகப்பட்டு அவர் மேல போலிஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டாங்க. ஏதோ நாங்க அது இதுன்னு சொல்லி சமாளிச்சி அவர் மேலையும் அவர் வீட்டுல இருக்கறவங்க மேலையும் பழி வராத மாதிரி செஞ்சிட்டோம். நீயும் அவர் உன்ன அடிச்சதா சொல்லாத… நாங்க சொன்னமாதிரியே நீயே விழுந்து வெச்ச அப்படின்னு சொல்லு. நீ இனியும் இப்படிதான் இருப்பேன்னு இருந்து மாப்பிள்ளை உன்னை சுருக்கு கயிறு கட்டி கொன்னு போட்டாலும் மாப்பிள்ளை மேல தப்பேயில்லை, என் மவதான் தூக்கு போட்டு நட்டுகிட்டு இருப்பான்னு நானே சாட்சி சொல்லுவேன். இனிமே மருவாதையா அவங்க சொல்லறபடி வாழு. அத விட்டுட்டு திரும்ப எங்க வீட்டுக்கு வரலாம் அப்படிங்கற எண்ணத்தை வளத்துக்காத.” என்ற என் தந்தையின் வார்த்தை என் உடம்பை திரவத்தில் முக்கியதுபோல் இருந்தது.

இவர்கள் உயிர் மாய்த்துக்கொள்ளகூடாது, இச்சமூகத்தில் இவர்கள் தலைநிமிர்ந்து இருக்க வேண்டும், அதோடு இவர்களிடம் இருந்து மணந்தவனின் உயிரை காக்கவேண்டும் என்று தானே அன்று தன மனசாட்சிக்கு எதிராக; தான் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி மணம்முடித்தவனை சிறிது காலத்தில் அவனை விட்டுபிரிந்து பெரியவர்கள் மற்றும் சட்டத்தின் முன் நின்று காதலித்து மணந்தவனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறியது…இதற்கெல்லாம் அர்த்தமில்லாமல் போய்விட்டதே!

“அம்மா… நீயாவது சொல்லும்மா அப்பா கிட்ட..என்னால இங்க கொடுமைய தாங்க முடியாது… எல்லாம் தெரிஞ்சி நீங்க எல்லாம் சேர்ந்துதானேம்மா எனக்கு கல்யாணம் செய்து வைச்சது….”

“பாரு இழந்த கௌரவத்தை உன்னோட இப்பத கல்யாணம் தான் மீட்டு தந்தது. இனியும் முட்டாள்தனமான இல்லாம மாப்பிள்ளை சொல்லறதை கேட்டு நடந்துக்க. நீ முன்ன மாதிரி திரியணும்னு நினைச்சா கௌரவமானவங்க வீட்டுல ஒத்துக்குவாங்களா? நீ ஒழுங்கா நடந்துகிட்டா அவங்களும் ஒழுங்கா நடத்துவாங்க. நீதான் புத்திய மேய விடாம நல்லபடியா நடந்துக்கணும்…” என்ற அவர் கூறிக்கொண்டே சென்றது என்னை பூமியோடு புதைத்தது.

அதன் பின் பிறந்த வீடு என்ற ஒன்று இல்லை, என்னை பொறுத்தவரை! ஊருக்கு வேண்டி சீர் செனத்தி வந்து போகும். இரத்த சொந்தமில்லை எனினும் ஒரே ஜாதி என்ற காரணம் மாமாவுக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே நல்ல உறவை வளர்த்தது.

மருத்துவமனையில் இருந்து வந்ததும் பழையபடி வாழ்க்கை சக்கரம் சுற்றியது.

“என்ன ஆஸ்பத்திரியில சொகுசா இருந்துட்டு வந்திருக்க… சுகவாசியா இருந்ததுக்கு இப்போ என்னை சுகபடுத்து…” என்று என்னை அன்று இரவு நெருங்கிய கணவனிடம் என் உடல் சோர்வால் “என்னால முடியலைங்க…” என்று நான் கூறுவதையே பொருட்படுத்தாமல் “அப்போ அவனா இருந்தா குஜாலாக கூப்பிடும் முன்னாடியே படுத்திருப்பயில்ல… போடற சோத்துக்கும் குடும்ப பொண்ணுங்கற கௌரவத்துக்கும் உனக்கு என் கூட படுக்க கூட முடியாதா?” என்று மூர்க்கத்தனமாக நடந்ததை கற்பழிப்பு என்று சொல்லலாமோ????

இப்படியே வருடங்கள் உருண்டன … என்னை வேசி என்று கூறிக்கொண்டே கற்பழிக்கும் இழிநிலை மட்டும் மாறவில்லை.

என் மக்களுக்கும் என் கடத்த காலமும் நிகழ காலமும் தெரியும்… இந்த அவல நிலையை என்ன சொல்ல? ஏதோ மகளும் இளைய மகனும் ஆறுதலாக நடப்பதே உருண்டோடிய வருடங்களில் என்னை பிடித்து நிறுத்தியது!

மூத்த மகள் வேலைக்கு செல்லத் துடங்கியது கொஞ்சம் ஆறுதல். அவளின் அறிவும், படிப்பில் மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களில் இருந்த சூட்டிகையான திறனும் அவள் படிக்க ஸ்காலர்ஷிப் பெற்றுத்தந்தது. அவள் படிப்பிற்கு வந்த இடையூறுகளையும் தாண்டி வந்தது மன நிறைவை தந்தது. ஏனோ என் கணவனுக்கு அவளை கண்டால் ஆகாது. என் கணவனுக்கு பிறந்த குழந்தை என்றாலும்கூட அவனுக்கு பிறந்ததா என்று அவனின் சொல்லம்புகள் பாய்ந்து குதறியது…

“என்னடி பொட்ட புள்ள உன்ன மாதிரி எப்போ எவன்கூட ஓடப்போறா…மினுக்கி குளுக்கிகிட்டு இருக்கா… இல்ல நீயே கூட்டி குடுக்க போறியா?” என்பது போன்ற கேள்விகளால் இன்னும் குதறிக்கொண்டு இருக்கிறது.

நேரிடையாகவே சிலப்போ மகளிடமே “என்ன நீயும் உடம்பு அரிப்பு எடுத்துகிட்டு யாருகூடயாவது படுக்க போறியா? அப்படி அரிப்பு வந்தா என் கிட்ட சொல்லு நானே கௌரவமா கல்யாணம்கற கருமாதிய பண்ணிவெக்கறேன்” என்பதை கேட்கும்போது நான் கூசி கூனிக்குறுகி போவேன். ஆனால் என் மகள் அசட்டையாக விட்டு சென்றாலும்கூட தனிமையில் வருந்துவது எனக்கு தெரியும்… என் செயல் என் மக்களையும் பாதிக்கும் என்று அப்போது எண்ணும் பக்குவம் எனக்கில்லாமல் போனதை நினைத்து இப்போது நான் என்ன செய்ய?

நான் என்ன வேலை செய்துக்கொண்டு இருந்தாலும் என் மனம் பின்னணி இசைபோல் “ஆண்டவா.. ஒரு நல்லவன் கைல என் மக வாழ்க்கை போய் சேரணும். என்னை மாதிரி சீரழிந்து போகக்கூடாது. அன்னிக்கி எடுத்த தப்பான முடிவு, என்னை நானே நரகத்துல தள்ளிகிட்ட கொடுமைய என்ன சொல்ல?

முதல் தப்பு.. படிக்க வேண்டிய வயசுல படிப்ப முடிக்காம வீட்டை விட்டு வெளியேறியது!

அதைவிட பெரிய தப்பு வீட்டைவிட்டு வெளியேறும்போது இல்லாத பாசம் அம்மா, அப்பா, குடும்ப கெளரவம் இப்படி கண்ணுக்கு தெரியாத கயிற கட்டிக்கிட்டு சுய புத்தி இல்லாம என் பெற்றோருடன் செல்ல தீர்மானித்து எல்லோரும் நிறைஞ்ச சபைல, சட்டத்துக்கு முன்ன சொன்னது!!

நான் இப்படி சொல்லுவேன்னு தெரியாம என்மேல நம்பிக்கை வைச்ச நான் காதலிச்சி மணந்தவன்…நான் சொன்னதை கேட்டு என்னை பார்த்த பார்வை இந்த ஜென்மத்தில் மறக்காது!!! அதுமட்டுமா… என்னை காதலிச்சி கை பிடிச்ச பாவதுக்குகாக அவனோட வாழ்க்கைய முடிச்ச வெறிபிடிச்சவங்க கூட்டதை சேர்ந்தவனை திரும்பவும் கல்யாணம் என்ற சுருக்கு கயிறு கட்டிகிட்டது பெரிய தப்பு!!!!

எல்லாத்தையும் விட இத்தனையும் சகிச்சுக்கிட்டு முதுகெலும்பு இல்லாம ஜீவச்சவமா நடமாடிக்கிட்டு இருக்கறது என்னோட மக்களுக்காகதான்.” என்று இசைத்துக்கொண்டே இருக்கும்.

வருடம் 2035

மகள் வேலைக்கு செல்லத்தொடங்கியதும் தான் நான் சுதந்திரமாக மகளுடனோ இல்லை அக்காவுடனோ அடுத்திருந்த கோவிலுக்கு வரமுடிகிறது. இன்று மகளுடன் கோவிலில் அமர்ந்த போது…

“அம்மா…. நாளைக்கு என்னை பொண்ணு கேட்டு செல்வம் வீட்டுல இருந்து வருவாங்க. செல்வமும் நானும் விரும்பறோம். நான் முன்னமே சொல்ல அப்படின்னு நினைக்காதீங்க.” என்ற என் மகள் சாதனாவை பார்க்க ஒரு பயப்பந்து வந்து என் தொண்டையை அடைத்தது.

“… எல்லாம் தெரிஞ்சும் எப்படி..டி இவ்வளவு தைரியம் வந்தது? உங்க அப்பாருக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்…. ஏன்டி … திரும்பவும் ஆரம்பத்துல இருந்து ஆட்டத்தை ஆரம்பிக்கற….” என்று நான் கலங்கிய போது…

“அம்மா… நான் தெளிவா இருக்கேன். மன்னிச்சிடுங்க இப்படி சொல்லறதுக்கு…நான் உங்கள மாதிரி முட்டாள் தனமா முடிவு எடுக்க மாட்டேன். என்னோட காலேஜ் சீனியர்தான் இந்த செல்வம். காலேஜ்ல படிக்கும்போதே ஈர்ப்பு இருந்தது. அனா முதல சுயமா என் காலுல நான் நிக்கணும் அப்புறம்தான் வாழ்க்கைய பத்தி தீர்மானிக்கணும் அப்படின்னு இருந்தேன், அவரும் அதுக்கு துணையா இருந்தார்.” என்ற என் மகளின் முகத்தில் கண்ட தைரியமும் காதல் தந்த மென்மையும் என்னை ஒன்றும் கூறவிடாமல் தடுத்து!

“கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க….நீங்களே உங்க மனச தொட்டு சொல்லுங்க ம்மா …நீங்க முன்னாடி காதலிச்சி சேர்ந்து வாழ்ந்த மகிழ்ச்சியான நினைவு உங்க மனசுல இருக்கா? அதைவிட அப்போ தப்பான முடிவு எடுத்துட்டோமே அப்படின்னு தானே நீ எப்பவும் நினைச்சிகிட்டு இருக்க?…” என்று கேட்ட என் மகளின் கேள்விக்கு

“………..” மௌனமே என் பதிலாக இருந்தது.

“நீ கவலையே படாத..ம்மா. என்னோட வாழ்க்கைய நான் பாத்துக்கறேன். சொல்லறேன்னு தப்பா நினைக்காதீங்க..எனக்கு அப்பா மேல நம்பிக்கையே இல்லை… அவர் மாதிரி ஆளைதான் எனக்கு மாப்பிள்ளையா கொண்டு வருவார்…மனுஷன கொண்டு வர மாட்டார். அப்பா என்னைப் பத்தி வெச்சி இருக்கற நினைப்பும் கேக்கற கேள்வியும் நம்பள சுத்தியிருக்கும் எல்லோருக்கும் தெரியும். இதை நம்பிகிட்டு பின்னாடி பேசறவங்களும் இருக்காங்க… அப்படி இருக்கும்போது …. நீ அனுபவிக்கற மாதிரி நானும் கொடுமைய அனுபவிக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?”

“………..” என் பதிலானது!

மறுநாள் விடிந்து… “என் மகளின் வாழ்வு விடியுமா? அஸ்தமிக்குமா? என்ற கேள்விகள் ஒருபுறமும்”..” ஆண்டவா நான் அனுபவிக்காத சுகத்தை என் மகள் அனுபவிக்கனும்..நீதான் துனையிருக்கணும்” என்ற பிரார்த்தனை மறுபுறமும் சுற்றி சுழன்றது.

என் மகள் அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை…. செல்வம் வீட்டில் இருந்து வரும்வரை.

சரியாக அவர்கள் வரும்போது மகளும் பளிச்சென்று உடையணிந்து கீழே வந்தாள்.

“வாங்க…வாங்க. உக்காருங்க .. அப்பா மேல இருக்கார் இப்போ வந்துடுவார்.” என்று அவர்களை இருத்தினாள்.

இவர்கள் வந்ததை அறிந்து கீழே வந்த என் கணவரின் முகம் பார்க்க தெம்பிலாமல் நான் சமையலறையில் புகுந்தேன். அவர்கள் உள்ளே வரும்போதே பார்த்துவிட்டு என்னால் என் தலையை மட்டுமே வருமாறு அசைக்க முடிந்தது.

என் மனதில் “மாப்பிள்ளை நல்லா இருக்கார். கூட வந்தவங்க இவர் பண்ணபோற கூத்தை பார்த்து அவங்கள அவமானப்படுத்திட்டார் அப்படின்னு என் பொண்ண வேண்டாம்ன்னு சொல்லிட்டு போகக்கூடாது ஆண்டவா…” என்ற என் எண்ண வலையை அறுத்தெறிந்து, வேறிட்டு நின்றிருந்த என்னையும் முன்னறையில் இருந்து வந்த சத்தம் அங்கு இழுத்துச்சென்றது.

“அடியே ..நீயும் அந்த தே…முண்ட …சிறுக்கிக்கு பொறந்தவ அப்படின்னு நிரூபிச்சிட்ட. உன்ன என்ன பண்ணறேன் பாரு” என்று அடிக்க ஓங்கிய தந்தை என்ற என் கணவனின் கையை பற்றி நிறுத்திய மகளின் உக்கிர முகமே என்னை வரவேற்றது!

“என்ன பண்ணிடுவீங்க? உங்களோட ஆட்டம் எல்லாம் நட்டெலும்பு இல்லாத உங்க ஊமை பொண்டாட்டி கிட்ட மட்டும்தான் செல்லுபடியாகும்…. ஒருவேள எனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா அந்த நிம்மதி அவங்கள நிமிந்து நிக்கவைக்கலாம்!” என்ற என் மகளை சட்டை செய்யாமல்

“அவ்வளவு திமிரா? உன்ன வெளிய விட்டா தானே… போட்டு தள்ள ஒரு நிமிஷம் ஆகாது…” வந்தவர்களை பார்த்து “இந்த சிறுக்கி சொன்னான்னு கல்யாணம், குடும்பம்கற பேருல பொண்ண கூட்டி குடுக்கும் தொழிலுக்கு ஆளு சேர்க்க வந்திருக்கீங்களா? உங்கள…. ” என்று ஆவேசம் கொண்டவரை ஏளனமாக பார்த்து

“பாருங்க உங்கள நேரில் பார்த்து பொண்ணு கேக்க மட்டும் தான் அவங்க வந்திருக்காங்க.. மீறி அவங்கள ஏதாவது பேசினீங்க அவ்வளவு தான்..உங்க மரியாதை போய்டும். நானும் உங்க பொண்ணு தான்..உங்களோட குணம் நல்லாவே தெரியும். அவங்களும் எல்லாம் தெரிஞ்சிதான் வந்திருக்காங்க.” என்று பேசிக்கொண்டு இருந்த மகளை நோக்கி

“பொட்டச்சிக்கு இவ்வளவு திமிரா… அப்பாவ பாத்து எதுத்தா பேசற?… அப்பா இவள விடுங்க நான் பாத்துக்கறேன்” என்ற என் இரண்டாவது வாரிசான மகன் மணி அப்பனுக்கு தப்பாதவனாக வந்தான்

“என்னடா … நீ மட்டும் என்ன ..யாரு வந்தாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது. பாருங்க சட்டபடி யாரும் திருமண விஷயத்துல தலையிட முடியாது. நீங்களா சம்மதிச்சி கல்யாணம் செய்து வைச்சா உங்களுக்கு மரியாதை. இல்லையா எனக்கு கவலை இல்லை நான் அவரை இங்க இருந்து போய் கல்யாணம் செஞ்சிக்குவேன்”

“அப்படி மட்டும் அவன திருட்டு தாலி கட்டிகிட்ட உன் ஆத்தாவ கட்டிகிட்டவன தட்டின மாதிரி இவனையும் போட்டு தள்ளிடுவேன்… ஜாக்கிரதை… யோவ், உனக்கும் சேர்த்துதான் சொல்லறேன்..புரிஞ்சிதா” என் கணவனை எதிர்த்து ஏதோ சொல்ல வந்த மாப்பிள்ளையை கையமர்த்திய என் மகளே

“உங்க புத்தி எப்படி போகும்… அப்படி ஏதாவது தகிடுதத்தம் செய்யலாம் அப்படின்னு நினைக்காதீங்க. இன்னும் நான் யாருன்னு உங்களுக்கு தெரியல.. நானே என் புருஷன் மண்டைய ஒடச்சிட்டு உங்க மேல கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன். அதுக்கு ஆதாரமா நீங்க முன்ன செஞ்ச எல்லா அடாவடித்தனங்களை புட்டு புட்டு வெச்சிடுவேன். முன்ன நீங்க மாட்டாத சட்ட போந்தை எல்லாம் நான் அடைச்சிடுவேன்… பின்ன நான் புகழ்பெற்ற லாயரோட ஜூனியர்… உங்கள மாதிரி ஜென்மங்களுக்கு புத்தி சொல்லவும்..இதோ இங்க மௌனமா உள்ளயே உருகி செத்துகிட்டு இருக்கற என்னோட அம்மா மாதிரியான ஜீவன்களுக்கு விடிவு தரணும்ன்னே இந்த படிப்பு படிச்சது.” என்ற என் மகளின் வார்த்தைகள் எனக்கு தெம்பு தந்தது.

என் கணவர் மகளின் பேச்சில் தன் பேச்சுத்திறனை இழந்து நின்றது எனக்கு நிறைவை தந்தது.

அப்போது உள்ளே நுழைந்த என் கடைசி மகன் அங்கு செல்வம் குடும்பத்தை பார்த்து “வாங்க மாமா. எப்போ வந்தீங்க? நீங்க வரபோறது எனக்கு தெரியாம போச்சு. இல்லைன்னா இங்க இருந்திருப்பேன்” என்று சகஜமான மாப்பிள்ளையோடு பேசியது என் வயிற்றில் பால் வார்த்தது. ஆண்டவா ஒரு மகனையாவது நல்ல ஆண் மகனாக படைத்தாயே.

“அவங்க அப்போவே வந்துட்டாங்க சுரேன். செல்வம், அத்தை.. மாமா நீங்க இந்த வாரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. கல்யாணம் முடியற வரைக்கும் நான் என்னோட வீட்டுலேயே இருக்கேன். அதுதான் நம்ப எல்லோருக்கும் நல்லது. யாரும் உங்கள ஒன்னும் பண்ண முடியாது. எதுக்கும் முன்னாடியே எழுதி வெச்ச கம்ப்ளெயின்ட் ரெஜிஸ்டர் பண்ண சொல்லிடறேன். உங்களுக்கு மரியாதை இல்லாத வீட்டுல நீங்க பச்சை தண்ணிகூட குடிக்க வேண்டாம் அப்படின்னுதான் நான் ஒண்ணுமே தரல. மன்னிச்சிடுங்க” என்று தன் தந்தையையும் மூத்த தம்பியையும் ஒரு ஏளனப்பார்வை பார்த்துக்கொண்டே பேசியதும்,

என் முகத்தை பார்த்து புன்முறுவல் பூத்தது “அம்மா இந்த சமூதாயத்தை பொறுத்தவரை கல்யாணம் ஆகி போகும் வீடு புடுந்த வீடுன்னாலும் அதுவும் உன்னோட வீடுதான். நீ எப்போ வேணும்னாலும் அங்க உன் வீட்டுக்கு வரலாம். அங்க இருக்கறவங்க எல்லோருமே மனுஷங்கதான். எங்க கூடவே கடைசிவரை சேர்ந்து இருக்கலாம்.” என்ற என் மகளை தொடர்ந்த செல்வமும்

“அத்தை,… சாதனா இப்போ சொன்னததான் நானும் சொல்லறேன். அதோட.. நீங்க உங்க பொண்ண பத்தி கவலை படவேண்டாம். அவ என்னோட மனைவின்னு ஆயிட்டா நான் உரிமையா அவளோட நியாயமான எல்லா செயலுக்கும் உறுதுணையா நின்னு அவளோட எண்ணப்படி நல்ல நிலைக்கு கொண்டுவருவேன். அதே நேரம் எங்க குடும்ப வாழ்க்கை சீரும் சிறப்புமா இருக்கும் அப்படின்னு உறுதி தரேன்.” என்று சொன்னது எனக்கு சொர்க்க வாசல் கண்டதுபோல் சந்தோஷத்தை தந்தது.

“மாமா, நீங்களும் புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்” என்று செல்வம் சொல்லும்போது முகத்தை திருப்பிக்கொண்ட என் கணவன் தான் ஒரே நாளில் திருந்தும் ஜென்மம் இல்லை என்று நிரூபித்தார்!

“என்ன அக்கா, மாமா…. அப்படி சொல்லிட்டீங்க. என்கிட்டயும் கொஞ்சம் மனுஷ தன்மை இருக்கு. நான் அம்மாவ பாத்துக்குவேன். ஆனா அவங்க நினைச்சப்போ உங்க கூட வந்து தங்குவாங்க. நான் எல்லாத்தையும் மௌனமா பாத்துகிட்டு..மனசுலையே அக்காவ மாதிரி புழுங்கிகிட்டு இருந்ததுக்கு முடிவா இன்னும் ரெண்டு மாசத்துல ட்ரைனிங் முடிஞ்சதும் பெங்களூரில போட்டுடுவாங்க. அவங்கள நான் எங்க போனாலும் கூடவே கூட்டிக்கிட்டு போய்டுவேன்.

“அக்கா, மாமா..அத்தை…” என்று கூறிக்கொண்டே என்னை பார்த்தபோதே நான் வரவில்லை என்று கண்களால் சொன்னதை புரிந்துக்கொண்டு. “வாங்க … நம்ப வெளிய போய் கல்யாணம் முடிவு பண்ணதுக்கு சாப்பிடலாம். நான் தான் ட்ரீட் தருவேன்” என்று அவர்களை அழைத்துக்கொண்டு சுரேன் சென்றதையும், செல்வதுடன் கைகோர்த்து சென்ற மகளை நிறைவுடன் பார்த்தேன்.

இப்போது புரிந்தது காதல் வந்ததே ….என் மகளின் வாழ்வில் காதல் வந்ததே…காதல் விடியலையும் கொண்டு வந்தே…காதல்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *