காதல் பூக்கும் தருணம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 22,135 
 

தோளில் தொங்கிய பை வெகு நேரமாக உறுத்திக் கொண்டிருந்தது. நின்று நின்று கால்கள் கடுத்தன. கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக, செல்வாவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் மதுமிதா. அடையாறு டிப்போவுக்குச் சரியாகப் பத்து மணிக்கு வந்துவிடுவதாக ஃபோனில் செல்வா சொல்லியிருந்தான். மணியைப் பார்த்தவள் அழும் நிலைக்கு வந்து விட்டாள். ஒண்ணரை மணி வெயில் அவள் மென்மையான தேகத்தை சுட்டெரித்தது. கர்சீப்பால் வியர்வையை ஒற்றி எடுத்தாள்.

காதல் பூக்கும் தருணம்

செல்வாவை நம்பி இப்படிக் கிளம்பி வந்தது தவறோ என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள் மது. இதுவரை சொன்ன சொல் தவறாதவன். ஆறு மணிக்கு வருவேன் என்றால் ஐந்து அம்பதுக்கு அங்கு இருப்பான். அவனுடைய மொபைலுக்குப் பலமுறை ஃபோன் செய்தும் எடுக்கப்படாமல் அடித்துக்கொண்டே இருந்தது வேறு பதற்றத்தை அதிகரிக்கச் செய்தது. ஏகப்பட்ட கால்கள். ஒவ்வொரு முறை ஃபோன் அடித்து அடங்குவதற்குள் அவன் ஃபோனை எடுத்துவிட வேண்டுமே எனப் பதைபதைத்து அடங்கினாள். செல்வாவின் ஃபோன் தொடர் அமைதி காத்தது. மதுவின் தொண்டை வறண்டு வயிற்றுக்குள் ஏதோ சங்கடமாய் உணர்ந்தாள். வாட்டர் பாட்டிலில் தண்ணீர் தீர்ந்து போய்விட்டது. இலேசாகத் தலையைச் சுற்றியது. பசி எடுக்க ஆரம்பித்தது. பேசாமல் வீட்டுக்குப் போய் விடலாமா என்று தீவிரமாக நினைத்தாள். ஆனால் செல்வா வந்துவிட்டால் எல்லாமே சரியாகிவிடும்.

இன்னும் அரைமணி நேரம் பார்த்துவிட்டுக் கிளம்பிவிடலாம் என்று முடிவு செய்தாள். தீபாவுக்கு ஃபோன் செய்யலாம் என்று மொபைலை எடுத்தாள். ஆனால் மனம் யாரிடமும் பேசுவதில் விருப்பம் கொள்ளவில்லை. அவன் நினைவாகவே இருந்தது. பக்கத்தில் ஏதாவது கடைக்கோ அல்லது மயிலாப்பூரில் இருக்கும் தோழியின் வீட்டுக்கோ போக நினைத்து முடிவை மாற்றிக் கொண்டாள். செல்வா ஒருவேளை ஃபோனைத் தொலைத்திருந்து நேரில் தன்னைத் தேடி வந்துவிட்டால், இத்தனை நேரம் காத்திருந்தது வீணாகிவிடும்.

வீட்டில் யாருக்கும் தெரியாமல் இதுவரை எந்த விஷயத்தையும் அவள் செய்ததில்லை. அம்மா, அப்பா, தம்பி என்று எல்லோரும் கூடிப் பேசித்தான் ஒவ்வொன்றும் அவர்கள் வீட்டில் நடக்கும். ஆனால் செல்வா வாழ்வில் வந்தவுடன் அனைவரும் ஒரு அடி பின்னால் தள்ளிப் போனது போல் மதுவுக்குத் தோன்றியது. செல்வாவின் மென்மையான பேச்சும், உறுதியான அந்தத் தோள்களும், அழகான சிரிப்பும், சிரிக்கும்போதே அவனுடன் சேர்ந்து உயிர்ப்புடன் சிரிக்கும் அந்தக் கண்களும் அவளுக்குப் பிடித்திருந்தன. இவன்தான் தனக்கு என்று முடிவானபின் அவனை அதிகமாக நேசித்தாள்.

இன்றைக்கு மனம் ஏன் இப்படி நெகிழ்ந்து கரைகிறது? இந்த உணர்வு ஏன் இத்தனை காலமாகத் தன்னிடம் இல்லை? படிப்பு… படிப்பு என்றும், வேலை… வேலை என்றும் ஓடிக் கொண்டிருந்து விட்டபின் கடைசியில் இப்படி ஆகிப்போனதை நினைத்து, தனக்குள் சிரித்துக் கொண்டாள். ஆனால் இந்தச் செல்வா ஏன் இப்படி அவசரப்பட வேண்டும்? இரண்டு நாட்களாக அவனது நச்சரிப்புத் தாங்காமல் கையில் கிடைத்த இரண்டு சுடிதார்களைப் பையில் திணித்து இதோ அவனுக்காக அவன் கூட்டிக் கொண்டு செல்ல இருக்கும் இடத்துக்குக் கிளம்பிவிட்டாள். வருகிறேன் என்றவன் இப்போது ஃபோனைக் கூட எடுக்கவில்லை.

அவனுக்கு என்ன நடந்ததோ, வழியில் அவன் வந்த கார் எங்காவது மோதி பெரும் விபத்தில் சிக்கி நினைவில்லாமல் ஆஸ்பத்திரியில் கிடக்கிறானோ என்றெல்லாம் மனம் பதைத்தது. மனம் மிகவும் பாரமாகி ஏதேதோ நினைவுகள் அழுத்த எதற்கு இந்தத் தேவையில்லாத அவஸ்தை; அவன்தான் சொன்னான் என்றால், தான் இப்படிக் கிளம்பி வந்தது பெரும் தவறு என்று நொடிக்கு நொடி உணர ஆரம்பித்தாள்.

மது தன் மொபைலைப் பார்த்தாள். இரண்டு நாற்பது ஆகியிருந்தது. பசியும், களைப்பும் அதிகமாக, அங்கிருந்து உடனே கிளம்ப முடிவு செய்தாள். ஆட்டோவைப் பிடிக்க ரோட்டை க்ராஸ் செய்கையில் வெகு அருகில் பைக் உறுமும் சத்தம் கேட்டுத் திரும்பினாள். பெரியப்பா மகன் மனோஜ் நின்று கொண்டிருந்தான்.

“என்ன மது? எங்க இந்தப் பக்கம்? கைல என்ன பெரிய பேக்?’
பிடிபட்ட உணர்வில் சங்கடமாக நெறிந்த மது, தடுமாறியபடி “ஒண்ணுமில்லை மனோ… இங்க ஃப்ரெண்டை பார்க்க வந்தேன்’ என்றாள்.

“ப்ரெண்டா யாரு? தீபாவா?’

“இல்லை…’ என்று தலையாட்டிய அவளைச் சுற்று சந்தேகத்துடன் பார்த்த மனோஜ், “ஏன் மது, கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு வாரம்தான் இருக்கு, எதுக்கு இப்படி வெயில்ல அலைஞ்சு உடம்பைக் கெடுத்துக்கறே? உன்னைப் பார்த்தா ரொம்ப டயர்டா இருக்கே… காஃபி சாப்பிடறியா?’

“ம்’ என்றாள்.

அருகில் இருந்த ஹோட்டலில் சென்று இரண்டு காஃபி ஆர்டர் செய்தான். எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையைத் தவிர்த்த மது, தீவிர யோசனையில் இருந்தாள். உள்ளுக்குள் இலேசாகப் பதற்றமாக இருந்தாலும் மனோவிடம் விஷயத்தைச் சொல்லிவிட முடிவு செய்தாள். ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமாக இருந்தது.

“என்ன ஆச்சு மது?’

சற்று அமைதிக்குப் பின், “மனோ… அவர்தான் என்னைப் பார்க்கணும்னு வரச் சொன்னார்.’

“செல்வாவா?’

“ஆமா… ரெண்டு நாள் அவுட்டிங் பெங்களூர் வரை போலாம்னு ப்ளான் பண்ணோம். அதுக்குத்தான் வரச் சொன்னார்.’

“பெங்களூருக்கா? எதுக்கு திடீர்னு? வீட்ல என்ன சொல்லிட்டு வந்தே?’

“ஆபிஸ் டூர்னு சொல்லிட்டு காலைல கிளம்பி வந்தேன்…’

“பொய் சொல்லிட்டு வந்திருக்கே. ம்… அப்படி என்னப்பா கல்யாணத்துக்கு முன்னால உங்களுக்கு அவசரம்?’

“லைஃப்ல எல்லாமே அவருக்கு ஈஸியா கிடைச்சிருச்சாம் மனோ. ஆசைப்பட்ட படிப்பு, பிடிச்ச வேலை, கார், வீடுன்னு அவர் விருப்பப்பட்டதை எல்லாம் உடனே வாங்க முடிஞ்சிருச்சி அவரால. காதல் உட்பட, அவர் என்கிட்ட தன்னோட காதலைச் சொன்னதும் எனக்கும் அவரைப் பிடிச்சுப் போய் சரின்னு சொல்லிட்டேன். அவங்க வீட்லயும் சரி; நம்ம வீட்லயும் சரி; எதிர்ப்பு எதுவும் இல்லை. உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. எல்லாமே ஸ்மூத்தா போயிட்டிருக்கு, தன்னோட லைஃப்ல எந்தவிதமான த்ரில்லும் எதிலேயும் கிடைக்கலைன்னு என்கிட்ட சொன்னார் மனோ. அதனால…’

“அதனால?’

“கொஞ்சம் அவுட் ஆஃப் தி வே போய் பார்க்கலாம்னு ஆசைப்பட்டுட்டாரு மனோ… முதல்ல நான் வரலைன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஏன்னா ஹனிமூனுக்கு கோவாக்குப் போறதுக்கு ப்ளைட் டிக்கெட் கைல வச்சிருக்கிறார். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு சின்ன டூர் போயே ஆகணும். காதலிக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னு பாக்கணும் இன்னும் ஏதேதோ சொன்னாரு மனோ… அவர் பிடிவாதமா கேட்டப்ப என்னால மறுக்க முடியலை. கட்டிக்கப் போறவருதானேன்னு சரின்னு சொன்னேன்.’

“என்ன பைத்தியக்காரத்தனம் இதெல்லாம்மா? லைஃப்ல த்ரில் வேணும்தான். ஆனா இந்த மாதிரி செய்யறது எல்லாம் பைத்தியக்காரத்தனம்.’

“புரியுது மனோ ஆனா… அவரோட ஆசையை என்னால ரிஜெக்ட் பண்ண முடியலை…’

“ஆசைப்படறதுக்கும் அவசரப்படறதுக்கும் வித்தியாசம் இருக்கு மது. இன்னும் ரெண்டே வாரத்துல முறைப்படி நீங்க எங்க போனாலும் யாருக்கும் கவலை இல்லை, உங்களை யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. இதெல்லாம் யோசிக்கலையா நீ?’

“முதல்ல எனக்கும் யோசனையாதான் இருந்தது. ஆனா பேசிப் பேசி என்னை கன்வின்ஸ் பண்ணிட்டாரு. எனக்கும் அந்த த்ரில் நல்லாத்தான் இருக்கும்னு தோணிடுச்சு மனோ. ஆனா தனியா நின்னு யோசிச்சுப் பார்த்தப்ப தெளிவாயிட்டேன். இதெல்லாம் சில்லி த்ரில்; ரெண்டு வாரத்துல என்ன வித்தியாசம் வந்துடப் போகுதுன்னு புரிஞ்சு போச்சு.’

“சரி மது? இப்ப செல்வா எங்க?’

“தெரியலை மனோ காலைலேர்ந்து காத்துட்டு இருக்கேன். என்ன ஆச்சுன்னே தெரியலை. ஃபோனை வேற எடுக்க மாட்டேங்கறாரு…’

“வேற எதாவது அவசர வேலை வந்திருக்கும். இதை டோட்டலா மறந்திருப்பாரு. மே பி சும்மா ஒரு ஜாலிக்காக்க் கூட உன்கிட்ட சொல்லியிருக்கலாம். என்ன நம்ம பொண்டாட்டி நம்ம சொல் பேச்சு கேக்குதா அதோட பொறுமை எப்படின்னு டெஸ்ட் பண்ணி பாத்திருக்கலாம்…’ என்றான் கிண்டலாக.

“அப்படியா சொல்றே?’ என்றாள் குழப்பத்துடன்.

“சும்மா சொன்னேன்… சரி சரி நீ வீட்டுக்குக் கிளம்பு. உன்னை ட்ராப் பண்ணட்டா?’

“வேணாம் நீ கிளம்பு நான் ஆட்டோ பிடிச்சி போயிடறேன்.’
மனோஜ் கிளம்பிச் சென்றதும் மதுவின் மொபைல் அடித்தது. லைனில் செல்வா வந்தான்…

“ஹலோ மது…’ என்றான் பதற்றமாக.

“எங்க போனீங்க? என் ஃபோனை எடுக்கலை? நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா?’ என்றாள் படபடப்பாக.

“என் ஃப்ரெண்ட் ரஞ்சித்தோட அண்ணனுக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்திருச்சி மது. ரொம்ப டென்ஷனா ஃபோன் பண்ணான். உடனே அவங்க வீட்டுக்குப் போய் அவரை மலர் ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து அட்மிட் பண்ணி இருக்கோம். ஐசியூல ட்ரீட்மெண்ட் இன்னும் போயிட்டிருக்கு, இங்க ஹாஸ்பிடல்ல ஃபோனை ஆஃப் பண்ணச் சொல்லிட்டாங்க உன்கிட்ட தகவல் சொல்ல முடியாம நானும் ரொம்ப தவிச்சுப் போயிட்டேன். சாரிடா உன்னை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேன்… நீ இப்ப எங்க இருக்கே?’ என்றான்.

“நீங்க வரலைன்னதும் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குமோன்னு ரொம்ப தவிச்சுப் போயிட்டேன். இப்ப உங்கக் குரலைக் கேட்ட பிறகுதான் மனசுல பாரம் குறைஞ்சிச்சு செல்வா…’

“என்னால இப்ப அங்க உடனே வரமுடியாது மது. ரியலி சாரி… நாம இன்னொரு நாள் இந்த ப்ரோக்ராமை ஃபிக்ஸ் பண்ணிக்கலாம் என்ன?’

“அதைப் பத்தி அப்புறம் போலாம் செல்வா… ஒரு ரெண்டு நிமிஷம் ஃப்ரீயா இருந்தா என்கிட்ட பேசுங்க ப்ளீஸ்.’

“ஹேய் உன்கிட்ட பேசத்தான் ஹாஸ்பிடல்லேர்ந்து வெளியே வந்து ரோட்ல நின்னு பேசிட்டு இருக்கேன். என்னடா உன் குரலே சரியில்லையே ரொம்ப பயந்திட்டியா?’

“இப்ப நான் அனுபவிச்சிட்டு இருக்கற உணர்வை இந்த ஃபீலிங்கை அப்படியே சொல்றதுக்கு வார்த்தையே இல்லை… மைண்ட் முழுக்க நீங்க மட்டும் தான் இருந்தீங்க. உங்களை நான் எந்த அளவுக்கு நேசிக்கிறேன்னு நானே உணர முடிஞ்சுது செல்வா..’

“அப்படியா? வெயிட் பண்ணி கோபத்துல என்னைத் திட்டுவேன்னு பயந்துட்டே ஃபோன் பண்ணேன்…’

“முதல்ல லேசா கோபம் வந்துச்சு. ஆனா நேரம் ஆக ஆகக் கோபம் போய் கவலையும் டென்ஷனும் ஒருவிதமான பயமும் வந்திருச்சு செல்வா. எவ்வளவு நேரம் வேணா வெயிட் பண்ணலாம் ஆனா நீங்க நல்லபடியா வந்தா போதும்னு நினைச்சேன்.’

“அந்த அளவுக்குப் பயந்திட்டியா? என்னப்பா நீ?’

“ஆமா செல்வா. இப்ப எனக்கு உடம்பு முழுக்க வலிக்குது. ஆனா அதையும் மீறி உங்களைப் பார்த்தே ஆகணும்ங்கற தவிப்பும் தேடலும் உங்களுக்கு எதுவும் ஆயிருக்கக் கூடாதுங்கற பதற்றமும் சேர்ந்து ஏதோ ஒருவித மனநிலைக்குள்ள தள்ளிடுச்சு செல்வா… இட்ஸ் ரியலி ட்ரூ… ரொம்ப உண்மையா ரொம்பத் தீவிரமா இந்த உணர்வு இருந்துச்சு. உங்களுக்கான இந்த தவிப்பும் தேடலும் தான் லவ்னு நினைக்கறேன். காதல்ங்கற ஃபீலிங்கை முழுமையா இப்பத்தான் உணர்ந்திருக்கேன் செல்வா.’

“நம்ம ப்ரோக்ராம் கேன்ஸல் ஆனதைப் பத்தி உனக்கு வருத்தமே இல்லையா மது?’

“இல்லை. நீங்க வந்து நாம ப்ளான்படி கிளம்பிப் போயிருந்தா அந்த எக்ஸ்பீரியன்ஸ் வேற மாதிரி இருந்திருக்கும். ஆனா நீங்க வராததால உங்களை மிஸ் பண்ணா எனக்குள்ள எவ்வளவு தவிப்பு ஏற்படுதுன்னு நான் முழுசா உணர்ந்திட்டேன். இந்தக் காதல் உணர்வுக்கு முன்னாடி மத்த எதுவுமே பெரிசு இல்லைன்னு தோணுது. நீங்க வராம போனதுக்கு தேங்க்ஸ்…’

“அப்ப நாம பெங்களூருக்குப் போகப் போறதே இல்லையா?’

“யார் சொன்னது எல்லா ஊருக்கும் போகலாம். கல்யாணத்துக்கு அப்புறம் போலாம்…’

செல்வா சிரித்துவிட்டு ஃபோனை வைக்க, மது ஆட்டோவில் ஏறி, “மலர் ஹாஸ்பிடல் போங்க’ என்றாள்.

– பிப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *