காதல் தாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 9,603 
 

அடுத்த சில கணங்களில் என்னை விசாரிப்பார்கள்.

புதிய விசாரணைக் குழுவின் மூத்தவர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். படிக்கப்படாத அறிக்கை ஒன்று அவர்கள் கையில் படபடத்துக் கொண்டிருந்தது. இந்த முறையாவது அறிக்கை எதிர்பார்த்தபடி அமையுமா? என் பெயரின் களங்கம் நீங்கி என்னைப் பழையபடி பயணங்களுக்கு அனுப்புவார்களா? நானும் படபடத்தேன். விசாரணை தொடங்கியது.

“றாவுக்கு வெற்றி!” என்றார் மூத்தவர். பிறகு என்னிடம், “விசாரணைக்கு வருக. குழுவில் அனைவருமே புதியவர்கள். உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்கள் செயல் போற்றத்தக்கது என்ற என் தனிப்பட்ட கருத்தை நான் தெரிவித்தாலும், இங்கே பொதுவில் உங்களை இன்னும் குற்றவாளியாகவே கருதி விசாரிக்கிறோம். விசாரணையின் முடிவு.. இந்த அறிக்கையாவது.. உங்களுக்குச் சாதகமாக அமையட்டும் என்ற வாழ்த்துடன் தொடங்குகிறோம்” என்றார். “நாங்கள் புதியவர்கள் என்பதாலும் சம்பவம் நிகழ்ந்து நீண்டகாலம் கடந்திருப்பதாலும், பூவில் நடந்தவற்றை ஒரு முறை விளக்கமாகச் சொல்லுங்களேன்?”.

விவரத்தை அறிந்து கொள்வதை விட, கதை கேட்கும் ஆர்வம் அவர் குரலில் வெளிப்பட்டது.

“றாவுக்கு வெற்றி!” என்ற நான், பயண விவரங்களை, அதாவது கதையை, சொல்லத் தொடங்கினேன்.

பூவில் வந்திறங்கியதும் என்னால் திகைப்பை அடக்க முடியவில்லை. திகைப்பா அல்லது குழப்பமா என்று கூடப் புரியவில்லை. புதுமையாக இருந்தது.

பூப் பயணத்துக்கு முன் சில உணர்வணுக்கள் திணிக்கப்பட்டு வந்தேன் என்றாலும் இது புதுமையாகவே இருந்தது. பழமையும் புதுமையே என்று மூத்தவர் சொன்னது நினைவுக்கு வந்தது. நான் இறங்கிய இடமும் நேரமும் எனக்குள் அடையாளமாகப் பதிவாகி என் அதிகாரிகளுக்கும் சென்றது. எல்லாமே விசித்திரமாகப் பட்டது.

எனக்களிக்கப்பட்ட விவரங்களைச் சரிபார்த்தேன். கண்ணாடிக் கட்டிடம். சரி. கண்காணிக்க வேண்டியவர்கள்.. அதோ.. தெரிகிறார்கள். சரி. ஆண், பெண் என்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிந்தன. சரி. என்னை எப்படி அடையாளம் காட்டுவது? எப்படி அறிமுகம் செய்து கொள்வது? ‘அன்பர்களே, வணக்கம். நான் றாவின் பிரஜை. உங்கள் இருவரையும் கடத்திச் செல்ல வந்திருக்கிறேன், தயவுசெய்து என்னுடன் வருகிறீர்களா’ என்றா? திகைத்தேன்.

வந்த விவரத்தைச் சொல்ல வேண்டும். அதற்கு முன் என்னை அடையாளம் காட்ட வழி தேட வேண்டும். என்ன இது..? எங்கோ போகிறார்களே? எதிலோ ஏறி அமர்கிறார்களே? ஆ! நினைவுக்கு வந்தது. கார்! பூப் பயணம் செய்வேன், அங்கு காரைக் காண்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. கனவிலும் நினைக்காதவை வேறு எவை என்பதைப் பட்டியலிட இப்போது நேரமில்லை. ஒரு பூப்பேச்சுக்குச் சொன்னேன். இணையுலகில் கனவுகள் கிடையாது. காரில் கிளம்பிப் போகிறார்களே? தொடர வேண்டும். அவர்களைப் பின் தொடரும் பொழுது என் அடையாளம் பற்றிச் சிந்திக்கலாம். என் அடையாளத்தைக் கண்டு பூவாசிகள் பயப்படக்கூடாது என்று மூத்தவர் சொல்லியிருக்கிறார். கவனமாக இருக்க வேண்டும். எத்தனை விதமான கார்கள்! விரைந்து அவர்களுடைய காரிலேயே தொற்றிக் கொண்டேன்.

திடீரென்று ஆண் பாடத் தொடங்கினான்.

பாடும் பொழுதும் பின்னரும் ஒருவரையொருவர் நெருங்கி அடிக்கடித் தொட்டுக் கொண்டார்கள். சிரித்தார்கள்.

இதுதான் மூத்தவர் சொன்ன மவா? இப்படித் தொட்டுச் சிரித்தால் ம வந்துவிடுமா? மூத்தவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அவர்கள் பாடிய வரிகளைப் பொருளரில் ஓட்டினேன். புரிந்து கொள்ள சற்று நேரமானாலும் சுவையாக இருந்தது. இளசு. வழக்கில் இல்லாத சொல்.

அத்தனை நெருங்கித் தொட்டுச் சிரித்துப் பேசிப் பாடியவர்கள், பிரிந்துத் தனித்தனி இடத்துக்குப் போனது குழப்பமாக இருந்தது.

யாரைத் தொடர்வது, யாரை விடுவது? பெண்ணைத் தொடர முடிவு செய்தேன்.

பெண் வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கே இன்னும் சிலர் காத்திருந்தார்கள். ஒரு பெண்ணும் ஆணும் மூத்தவர்கள் போலவே இருந்தார்கள். மூத்த பெண் அலறத் தொடங்கினார். அவரது குரலில் பலகோடி ஜூல் சக்தி இருந்தது. “எங்கேடி போய் வரே? யார் கூட சுத்திட்டு வரே? மானம் போவுது. இப்படி பஜாரியாட்டம் ஊர் சுத்துறியே? அதும் மோடார் வண்டில ஊரெல்லாம் பாக்குறாப்புல? யாரவன்.. எனக்கு இப்பத் தெரிஞ்சாவணும்..” என்று சினந்தார்.

பெண் நிதானமாக, “என்னோட காதலர்.. என்னம்மா இது.. வீட்டு வாசல்ல வச்சு இப்படி கூப்பாடு போடுறே? உள்ளே வந்து விவரம் சொல்றேன்..” என்றாள்.

காதலர். ஆ! அந்தச் சொல். தேடி வந்தச் சொல். என் இலக்கு சரிதான். இவளிடம் காதல் இருக்கிறது என்று எனக்குக் கிடைத்த தகவல் சரியே. உடனே தீர்மானச் செய்தி நினைத்தனுப்பினேன்.

நான் சற்றும் எதிர்பாராத விதமாக பெண்ணைக் கன்னத்தில் அடித்தார் மூத்த பெண். இதென்ன.. அடித்துக் கொள்கிறார்களே? வியந்த போது மூபெண் தன்னையே பல இடங்களில் அடித்துக் கொண்டார். அவர் கண்களில் திரவம் கொட்டியதைப் பார்த்து அதிர்ந்தேன். கண்ணீர்! சிலிர்த்தேன். பயண முன்னேற்பாட்டின் போது மூத்தவர் சொன்னது சரிதான்! எதற்கு அஞ்சினாலும் பூப் பெண்களின் கண்ணீருக்கு மட்டும் அஞ்சக்கூடாது. அதைப் பார்க்காமல் இருப்பதே நல்லது. கண்ணீரினால் எதையும் சாதித்துக் கொள்வார்கள் பூப் பெண்கள்.. என வரிசையாக நினைவுக்கு வந்தன. இந்தப் மூபெண் என்ன சாதிக்கப் போகிறார் என்று பார்க்க விரும்பினேன்.

அதற்குள் மூஆண் குறுக்கே வந்து அனைவரையும் உள்ளே செல்லுமாறு பணித்தார். நானும் தொடர்ந்தேன். “.. உள்ளே போகலாம் வா” என்று பெண்ணை இன்னொரு பெயர் சொல்லி அழைத்தார் மூஆண்.

ஒருவருக்கு இத்தனை பெயர்களா? இனிப் பெண்ணை லா என்று அழைக்கப் போகிறேன்.

லா உள்ளே போனதும் வீட்டுக் கதவை அடைத்த மூஆண், “இதோ பாரும்மா.. எனக்கு நீ காதலிக்கிறதுல ஒரு ஆட்சேபணையும் இல்லே.. உங்கம்மா ரெண்டு நாளுல சரியாயிடுவா. ஆனா அந்தப் பையனை எங்களுக்குப் பிடிக்கணும், அது முக்கியம். அந்தப் பையன் பொறுப்பானவனா என்னானு நாங்க தான் தீர்மானிப்போம்.. சம்மதமா?” என்றார்.

லா முகத்தில் ம. “அப்பா! உங்களுக்கு அவரைப் பிடிக்கும்பா. ரொம்ப நல்லவர்பா” என்றாள்.

“அப்ப ஒண்ணு செய். உன்னோட பொறந்த நாள் வருதுல்ல? பார்டிக்கு வரச்சொல்லு, பாத்துக்குவோம்” என்றார் மூஆண். மூபெண் அமைதியானதுடன் இல்லாமல் அவர் முகத்திலும் ம! பூ வாசிகளுக்கு ம சுலபமாக வருகிறது.

மறுநாள் லாவைப் பின் தொடர்ந்தேன். காலையில் தெருவோரமாக இருந்த ஒரு கடைக்குள் சென்று கறுப்பு நிற குழாய் ஒன்றுக்குள் ஏதோ பேசினாள். “அவசியம் வாங்க. உங்களோட பேசணும். வீட்டுக்குத் தெரிஞ்சு போயிடுச்சு!” என்றாள். பிறகு மாலை வரை வீட்டை விட்டு நகரவில்லை. மாலையானதும் கிளம்பினாள். “அம்மா.. பார்க்கு வரைக்கும் போயிட்டு வரேன்.. அவர் கூடப் பேசப்போறேன்” என்று கிளம்பினாள். நானும்.

நீண்ட நேரம் தனியாக உட்கார்ந்து சலித்துக் கொண்டிருந்தாள் லா. சற்றுப் பொறுத்து லாவின் ஆண் வந்தான்.

லா அவனை அழைத்த பெயர் எனக்குப் புரியவேயில்லை. இனி அவனை ஜே என்று அழைக்கப் போகிறேன்.

இருவரும் பேசினார்கள், பாடினார்கள். லா ஜேயிடம் விவரம் எல்லாம் சொன்னாள். “அடுத்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்துருங்க. அப்பா உங்களைப் பிடிச்சிருந்தா நம்ம காதலுக்கு ஓகே சொல்றதா சொல்லியிருக்காரு”.

“நிச்சயமா.. நல்லதா போச்சு” என்று அவன் அவள் முகத்தில் உரசினான். அவளும். இருவர் முகத்திலும் ம! விசித்திரம்.

பூவில் ம எத்தனை மலிந்து கிடக்கிறது! நம் சமூகத்தில் மவுக்கு ஏன் இத்தனை போ? பூவிலிருந்து பிரிந்து வந்த நாம் எங்கேயோ மவின் அணுவைத் தவறவிட்டிருக்கிறோம் என்று செய்தி எண்ணினேன்.

என் பயணக் குறிப்புகளை வரிசைப்படுத்தி அனுப்பினேன். காதல் விவகாரம் சமூகத்துக்குப் பிடித்திருந்தது. லாவை அவசியம் கடத்தி வர ஆணை வந்து சேர்ந்தது. காதல் முனைப்பாக இருக்கும் பொழுதே ஷ்கில் பிடிக்கவேண்டும் என்று செய்தி வந்தது. நிச்சயம். ஜேயையும் சேர்த்துக் கடத்தி ஷ்கில் பிடித்து வந்தால் எனக்கு மூன்று லீக்கள் கிடைக்கும் என்றும் செய்தி வந்தது. ஒரு லீ கிடைக்குமென்றால் நான் கொ கூடச் செய்வேன். மூன்று லீயா! மூன்று லீக்கள் கிடைப்பதாக இருந்தால் லா என்ன, ஜே, இன்னும் அவர்கள் வீட்டு மூக்கள் அத்தனை பேரையும் கடத்தி ஷ்கில் பிடிப்பேனே? பூவில் ஒரு காதல் விடாமல் அத்தனையும் பிடிப்பேனே? சுறுசுறுப்பானேன்.

அவர்கள் பாடியதை நினைவியில் மீட்டேன். உன் இளமைக்குத் துணையாகத் தனியாக வந்தேன். நைஸ். இதயங்கள் சிறிசு, எண்ணங்கள் பெரிசு. அட! இதைக் குறித்துக் கொள்ள வேண்டும். மூத்தவருக்கு இது போன்ற வரிவித்தைகள் பிடிக்கும்.

அன்பார்ந்த லா மற்றும் ஜே, உங்கள் இருவரின் இதயங்களையும் எண்ணங்களையும் அணுவலைகளாக உறிந்து எடுத்தப் பிறகும் இப்படிப் பாடிக் கொண்டு திரிவீர்களா? யோசித்த போது என்னையறியாமல் புன்னகைத்தேன்.

வலிக்காது, உத்தரவாதம் தருகிறேன். உங்கள் இருவரையும் இணையுலக எல்லைக்குக் கடத்திச் சென்று ஷ்கில் பூட்டுவேன். பிறகு இறகால் தொட்டது போல் ஒரு வருடல். உணர்வுகளும் எண்ணமும் றாவின் மையத்துக்குப் போனதும் உங்களை மீண்டும் இங்கேயே கொண்டு வந்து விடுவேன். முடிந்தால் தொடர்ந்துப் பாடித் திரியலாம். காதல் அன்பு பாசம் போன்ற உங்கள் உணர்வுகளின் சாரம் இணையுலகுக்குத் தேவையாக இருக்கிறதே, என்ன செய்ய? எல்லாம் உங்களால் வந்த வினை.

லாவின் பிறந்த நாளுக்கு நிறைய பூவாசிகள் வந்திருந்தார்கள். ஜே இன்னும் வரவில்லை. “வருவார்பா!” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள் லா.

வந்திருந்தவர்களில் ஒரு ஆண், லாவைப் பார்த்த பார்வையில் காதல் இருந்தது. அடிக்கடி மூஆணுடன் பேசுகிறானே? அவரும் தலையை அசைக்கிறாரே?

ஜே எங்கே? சுற்றுமுற்றும் பார்த்தேன். எதிரே சிகரெட் பிடித்தபடி ஒருவர் அமர்ந்திருந்தார். ஏனோ அவரைக் கண்டதும் குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு ஓடின. பெயர் ரங்காச்சாரியாம். பூவில் எல்லாமே பலமாத்திரை ஒலிகளாக இருப்பது வியக்க வைக்கிறது. எப்படி இவர்களுக்கு நேரம் கிடைக்கிறது? இணையுலகில் எல்லாமே ஒன்றிரு மாத்திரை ஒலிகள் தாம். அதற்கே எங்களுக்கு நேரமில்லை. என் பெயர் வ். அவ்வளவு தான். என்னைப் பற்றிய விவரங்கள் மைய நினைவியில் உள்ளன. வ் என்றதும் என்னைப் பற்றிய விவரங்களை எண்ணமுடியும். போதுமே? பூவில் நிறைய அவகாசமிருக்கிறது அனைவருக்கும்.

மீண்டும் அவனருகே வந்த மூஆண் அவன் தோளைத் தொட்டு, “இன்னிக்கு சொல்லிடறேன், கவலைப்படாதே” என்றார். என்னவென்று நான் பிசைந்து கொண்டிருக்கையில் அவராகவே சொன்னார். “யாரையோ காதலிக்கிறாளாம். வரச்சொல்லியிருக்கேன். ஜஸ்ட் எ லுக். சும்மா அவளை திருப்திப் படுத்த, தட்ஸ் ஆல். இல்லின்னா இந்த பர்த்டே பார்டி வேணாம்னிருப்பா. நீ தான் மாப்பிளைனு இன்னிக்குப் பார்ட்டி முடிஞ்சதும் சொல்லிடறேன் ரகு. நீ தான் எங்க வீட்டு மாப்பிள்ளை” என்றார்.

அப்படியா? திருப்பம் பிடித்திருந்தது. லாவின் காதல் உணர்வை உறிஞ்சுவது சுலபம் போலிருக்கிறதே? ரகு! பெயரும் பிடித்திருந்தது. சுருக்க வேண்டியதில்லை, ஒரு மாத்திரை போனால் போகிறது. துடிப்பாக இருந்தான். அடிக்கடி கண்ணாடியைக் கழற்றி மாட்டிக் கொண்டிருந்தான்.

கணங்களில் ஜே உள்ளே நுழைந்தான். லா ஓடிச்சென்று ஜேயை குடும்பத்துக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

“பார்டியை தொடங்கிறலாம்” என்று மூஆண் சொல்ல, எல்லோரும் பாடினார்கள். ஆடினார்கள்.

ஜேயும் லாவும் ஆடியதைப் பார்த்துக் கொண்டிருந்த ரகு முகத்தில் இப்போது காதலைக் காணவில்லை. சுளித்துக் கொண்டிருந்தான்.

இன்றைக்கு எப்படியாவது இருவரிடமும் அறிமுகம் செய்து கொண்டாக வேண்டும். கடத்திக் கொண்டு போவதை இவர்கள் ஏற்கும்படி எப்படிச் சொல்வது என்று திகைத்துக் கொண்டிருந்த போது ரகுவைப் பார்த்தேன். எனக்குள் ஒரு திட்டம் உருவானது.

என் உள்ளியக்கக் குறிகள் வேகமாகச் செயல்பட, நான் ரகுவுள் புகத் தயாரானேன். ரகுவின் வடிவில் ஜேயுடன் பேசிவிடுவது என்று தீர்மானித்தேன்.

ரகு கண்ணாடியைக் கழற்றிய ஒரு தருணத்தில் அவனுள் புகுந்தேன். அவையில் எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தாரகள். ‘கூடு பாய்வது சாதாரணம்.. இதற்கு கைதட்ட வேண்டாம்’ என்று சொல்ல நினைத்து கைதட்டல் எனக்கல்ல என்று புரிந்து அடங்கினேன்.

மூஆண் ஏதோ சொல்லத் தொடங்கியிருந்தார். “இன்னிக்கு என் பெண்ணுடைய பிறந்த நாள் மட்டுமல்ல. அவளுடைய திருமண நிச்சய நாளும் கூட” என்றார். லா ஜேயின் கைகளை அழுந்தப் பிடித்துக் கொண்டாள். மூஆண் தொடர்ந்தார், “மீட் மை சன் இன் லா ரகு. எங்க வீட்டு மாப்பிள்ளை” என்று ரகுவாகிய என் தோள்மேல் கை போட்டார். எல்லோரும் கை தட்டினர். விழித்தேன். “அப்பா!” என்று கோபமாக குரல் கொடுத்துவிட்டு லா அங்கிருந்து அகன்றாள். ஜே என்னருகே வந்து, “வாழ்த்துக்கள்!” என்றான். நானும் பதிலுக்கு “வாழ்த்துக்கள்” என்றேன். பதில் சொல்லாமல் ஜே வெளியேறினான்.

விருந்தினர்கள் ஒவ்வொருவராகக் கிளம்ப, ரகுவாகிய நானும் மூஆணும் மட்டும் இருந்தோம்.

“ஏம்பா ரகு, ஒரு மாதிரி இருக்கியே?” என்றார் மூஆண்.

விழித்தேன்.

“கோவமா ஓடிட்டானு பாக்குறியா? டோந்ட் வொரி. எல்லாம் சரியாயிடும். பத்து நாள் அந்தப் பையனை நினைச்சுட்டிருப்பா. தானா சரியாயிடும்”

எனக்கு விவரம் மெள்ள விளங்கத் தொடங்கியது. ரகுவுடன் பேசிக்கொண்டிருக்கிறார். இது தோதாக இருக்கும் போலிருக்கிறதே? “கவலையில்லை. நானே லாகிட்டே பேசுறேன்” என்றேன்.

“லாவா? யாருப்பா?”

சுதாரித்தேன். “உங்க பொண்ணு தான் சார். நானே அவளோட பேசி சரி பண்ணுறேன்!”

“வெரிகுட். தட்ஸ் மை பாய். லா.. நல்லாருக்குப்பா. அதுக்குள்ளே செல்லப் பெயரா?” என்றபடி என்னைத் தட்டிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றார்.

லாவின் அறைக்கதவைத் தட்டினேன். திறந்தவள் என்னைப் பார்த்தப் பார்வையில் காதல் இல்லை. “என்ன?” என்றாள்.

நான் புன்னகைத்தேன். “உன்னோட கொஞ்சம் பேசணும்” என்றேன்.

“அவசியமில்லே. ஐ டோந்ட் லைக் யூ. உங்களை என்னால் கல்யாணம் செஞ்சுக்க முடியாது. என்னுடைய காதலுக்கு குறுக்கே நிக்காதீங்க” என்றாள்.

காதல்! மறுபடி அந்தச் சொல்! சிலிர்த்தேன். “உன்னோட காதல் ரொம்ப முக்கியம்னு நானும் நினைக்கிறேன். அதனால தான் உன்னோட பேசணும்” என்றேன்.

குழப்பத்தோடு பார்த்தாள். “என்ன சொல்றீங்க?”

“முதலில் ஜேயைப் பார்த்துப் பேசி என்னை அறிமுகம் செஞ்சுக்குறேன். உங்க ரெண்டு பேருக்கும் நான் ஒரு விருந்தும், அதுக்குப் பிறகு ஒரு பரிசும் கொடுக்க நினைக்கிறேன். தயங்காம என்னோட வரணும். உங்க காதலை நான் ரொம்ப மதிக்கிறேன்”

“யாரு ஜே?”

சொன்னேன். சிரித்தாள். லாவின் முகத்தில் பழைய ம! “ரொம்ப நன்றி ரகு! உங்களைப் புரிஞ்சுக்காம பேசிட்டேன்.. வாங்க.. இப்பவே ஜேயைப் பாத்து விவரத்தை சொல்லணும்” என்றாள். நான் பதில் சொல்வதற்குள் காணாமல் போனாள்.

லா அகன்றதும் சற்று நிதானித்து அவளைப் பின் தொடர்ந்தேன். எப்படியும் ஜேயை சந்திப்பாள். முடிந்தால் அங்கேயே அவர்களுடன் அறிமுகம் செய்து கொள்ள நினைத்தேன். நான் வந்த நோக்கத்தை எடுத்துச் சொல்லத் தீர்மானித்தேன்.

முன்னர் பார்த்த இடத்தில் ஜே கோபமாக உட்கார்ந்திருந்தான். லா அவனருகே சென்று ஏதோ சொல்லி அமைதிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இருவரிடையே காதல் திரும்பிவிட்டதன் அடையாளமாகச் சிரித்துப் பேசினார்கள். தொட்டுக் கொண்டார்கள். பாடினார்கள்.

காதல் இல்லாவிட்டால் எனக்கு இங்கே என்ன வேலை? காதல் திரும்பியதில் எனக்கு ஒரு வித நிறைவு தோன்றியது. அதிர்ந்தேன். முதல் முறையாக அனுபவித்த உணர்வு. ம!

அறிமுகம் செய்து கொண்டு, “உங்களை ஜே என்றே கூப்பிடுகிறேனே?” என்றேன்.

“யூ ஆர் எ ஜெந்டில்மேன் ரகு” என்ற ஜே, என் கைகளைக் குலுக்கினான். “எங்க காதலுக்குக் குறுக்கே நிப்பீங்கனு நெனச்சேன்.. கௌரவமா ஒதுங்கிட்டிங்க”

“எங்கே போறோம்?” என்றாள் லா.

“மிதக்கும் ரெஸ்டராந்ட்” என்றேன்.

மூவரும் ஏரிக்கரையோரமாக நடந்தோம். போட்கிளப் வாசலில் வார இறுதிப் பார்ட்டி ஒன்றுக்கான அறிக்கை. போட்கிளப் தாண்டி வளைந்த வழியில் அடர்ந்திருந்த பூச்செடிகளைப் பார்த்து “எவ்வளவு அழகா இருக்கு!” என்றாள் லா. “உன்னை விடவா?” என்றான் ஜே. லாவின் முகத்தில் தோன்றி மறைந்த பாவங்களைப் புரிந்து கொள்ள முயன்றுத் தோற்றேன்.

“நான் ரகு இல்லை. என் பெயர் வ்” என்றேன்.

“எதுக்குங்க.. ரகுவே நல்லாருக்கு. அது என்ன வ்? நாய் குறைக்கிற மாதிரி ஒரு பேரு?” என்றான் ஜே.

“நான் றா அதாவது இணையுலகப் பிரஜை. உங்களுக்கு எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்த எதிர்கால வாசி” என்றேன்.

ஏரியின் நடுவே கம்பீரமாக இருந்த மிதக்கும் ரெஸ்டராந்ட்டைப் பார்த்து நின்றான் ஜே. “நாம எப்போ இங்கே வந்தோம் சொல்லு?” என்றான் லாவிடம்.

“பூ-இணையுலகக் காலப்பட்டியில் குதித்து இங்கே வந்தேன்” என்றேன்.

“எங்கிட்டயே கேக்குறீங்களா? நம்ம காதல் முதல் வருடாந்திரத்துக்கு வந்தோம்.. நானா மறப்பேன்?” என்றாள் லா.

“அதோ அந்த போட் தானே வாடகைக்கு எடுத்தோம்?”

பூ வாசிகளிடம் ஒரு தொல்லை. ஒரு கூட்டத்தில் நாம் ஒருவருடன் பேச முனைகிறோம். அந்தக் கணத்தில் அதுவரைக் காத்திருந்தவர் போல் அவர் இன்னொருவருடன் பேசுவார். ஜேயும் லாவும் என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் தொடர்ந்தேன். “எங்க மூதாதையர்னு சொல்லணும்னா பூவாசிகளைத் தான் சொல்லணும். ஏதோ ஒரு காலகட்டத்துல உணர்ச்சிக் கொந்தளிப்புல உங்க உடம்புல இயற்கையா ஓடுற சக்தி, தன்னிச்சையா வெடிச்சு ஸ்பாந்டேனியஸ் எக்சிட்… ஒட்டு மொத்தமா நீங்க எல்லாரும்…”

“ரெஸ்டராந்ட் வந்துடுச்சு பாருங்க” என்றாள் லா.

உள்ளே நுழைந்து தனிமையானப் பகுதியைக் கேட்டு இடம் பிடித்து அமர்ந்தோம். சாப்பிட்டுக் கொண்டே பேசினோம்.

“சாரி ரகு.. நீங்க என்னவோ சொல்லிட்டிருந்தீங்க.. நாங்க எங்க நினைவுகள்ள இருந்துட்டோம்.. ஆமா..நீங்க எந்த ஊர்லந்து வந்ததா சொன்னீங்க?” என்றான் ஜே.

“றா. பல நூற்றாண்டு கடந்த எதிர்கால இணையுலகத்துலந்து வந்திருக்கேன்”

“கொம்பு எதுவும் காணோமே?”

“றாவில் வளர்ச்சிச் சிக்கல் இருப்பதனால் எங்க அடிப்படையை மாத்தத் தீர்மானிச்சோம். இரண்டு தலைமுறைக்கு முந்தைய றா வாசிகள் தான் முதலில் கண்டுபிடிச்சாங்க”

“என்ன கண்டுபிடிச்சாங்க?”

“இன்றைய றா வாசிகளின் வளர்ச்சியை ஒடுக்குவது எங்க மூதாதையர்களான உங்க கிட்டே இருந்து வந்த உணர்வலைகள் என்று. உங்க உணர்வுகள், உங்களை முன்னேற விடாமத் தடுக்குது. ஒரு கட்டுக்குள்ளயே சுத்த வைக்குது. அப்படியே வளர்ந்து வந்த நீங்க இணையுலகம் வந்தப் பிறகும் அந்த அலைவரிசையிலேயே இருந்தீங்க. உங்களுக்குப் பிறகு வந்த றா தலைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமா பரிணாமம் மாறினாலும், அடிப்படை சிக்கல் தொடருது”

“அடடே! அப்புறம்?”

“அதனால இந்தத் தலைமுறை றா வாசிகள் ஒரு தீர்மானத்துக்கு வந்தோம். எங்களுக்கு அடுத்த தலைமுறைகள் செழிக்க வேண்டி நாங்க சில தியாகங்கள் செய்யத் தீர்மானித்தோம். நீங்க சில தியாகங்கள் செய்ய வேண்டும் என்றும் தீர்மானமாச்சு”

“பலே.. இந்த மாங்காய் இஞ்சிச் சட்னி எப்படி இருக்கு பாருங்க.. என்ன தீர்மானம் போட்டீங்க?”

“பூ வாசிகளோட டிஎன்ஏவை மாத்திடணும்”

“ஓஹோ”

“உங்க கிட்டே இருக்குற காதல், அன்பு, பாசம் போன்ற உணர்வுகளை ஒட்டு மொத்தமாக எடுத்து உறிஞ்சி அழிச்சிட்டா, நீங்க இணையுலகம் வரப்போ வேறே பிரஜைகளா வருவீங்க.. எங்களுக்கு சிக்கல் இருக்காது..”

“ஏன் சார்.. அதுக்கு பதிலா கோபம், ஆத்திரம் உணர்வுகளை எடுத்து அழிக்க வேண்டியது தானே?”

“காதல் அன்பு பாசம் உணர்வுகளை அழிச்சா கோபம் தானா அழிஞ்சுரும்”

“காதல் மாதிரி ஆக்க உணர்வுகளை வளர்த்தாலும் கோப உணர்வுகள் அழியுமே?” என்றாள் லா.

“ஆனால் உங்க சட்ட சமூக வழக்கங்களும் கட்டுப்பாடுகளும் ஆக்க உணர்வை முடுக்கி அழிவு உணர்வைத் தானே தூண்டுது? அதனால் நீங்க மாறவே மாட்டீங்க”

“மாற்றம் மெள்ளத்தானே வரும்?”

“உங்க வீட்டுல, உங்க பெற்றோரே, உங்க காதலை ஆதரிக்கவில்லை இல்லையா?”

“அடேங்கப்பா! உங்களைப் போல எத்தனை பேர் கிளம்பியிருக்காங்க?

“என்னைப் போல இன்னும் சில றா வாசிகள் வந்திருக்காங்க.. என்னுடைய பொறுப்பு, காதல் உணர்வுகளை அழிப்பது”

“ஏன்?”

“காதல் தீது. அதனால. உங்க ரெண்டு பேரையும் இணையுலக எல்லைக்கு அழைத்துப் போய் அங்கே உணர்வை உறிஞ்சும் அலையந்திரம் உபயோகிச்சு காதலை அழிச்சிடலாம். நான் வந்த காரணம் அதுதான். நீங்க என் கூட தயவுசெய்து வரணும்”

அதற்குள் வெயிடர் சீட்டு கொண்டு வைக்க, நான் பணம் கொடுத்தேன்.

“விருந்துக்கு ரொம்ப தேங்க்ஸ் ரகு” என்றார்கள். வெளியேறி ஏரிக்கரை வழியே திரும்ப நடந்தோம்.

“நீங்க மட்டும் ரகுன்னு தெரியாம இருந்துச்சுன்னா, கீழ்பாக்கக் கேஸ்னு உத்தரவாதமா சொல்லலாம்” என்று உரக்கச் சிரித்தான் ஜே. “என்ன இமேஜினேஷன் சார்! பயமா இருக்குனு கூட சொல்வேன்.. ஆமா இந்த உறிஞ்சுற எந்திரம்.. அதுக்கு எத்தனை நாக்கு?”. லாவும் சிரித்தாள். “சரியான தமாஷ் நீங்க ரகு!”

நான் விழித்தேன். நான் சொன்னது இவர்களுக்குப் புரியவில்லையா? அல்லது உடன்பட மறுக்கிறார்களா? “நான் சொன்னது உண்மை. உங்க காதல் உணர்வுகளை உறிஞ்சு எடுக்கத்தான் வந்தேன். சீக்கிரம் வாங்க. இன்னும் என் பட்டியல்ல பல பேர் இருக்காங்க. அதுக்காகத் தான் ஏரிக்கரைக்கு வரச்சொன்னேன். நீரின் சூழலிலே இணையுலகம் சுலபமாகத் தாவ முடியும். உங்க உடம்புல பாதிக்கு மேலே தண்ணி இருக்குறது அதனால தான்..” என்று ஜேயையும் லாவையும் பின் கழுத்தில் கை வைத்து அழுத்தினேன். பின் தலையின் கீழே அழுத்தும் பொழுது பூ வாசிகளின் உயிர்த்துடிப்பைக் கட்டி இணையுலகப் பயணம் செய்ய வைக்கலாம். தற்காலிகக் கூடு மாற்றம்.

ஜே முரண்டு பிடித்தான். “யோவ்!” என்றான். “”என்னய்யா இது? ஏதோ லூசாட்டம் சொல்லிட்டே போறேனு பாத்தா, இப்போ ஓவரா மேலயே கை வைக்குறே? எதுக்குயா கழுத்தைப் பிடிக்கிறே?”

“மன்னிக்கணும் ஜே. சொல்றேன். உங்க மூளைல செரிபெல்லம் கிட்டே.. சர்கில் ஆப் விலிஸ்… மூளைக்கான ரத்த ஓட்டப் பாதை..அங்கிருந்து..”

“கையை எடுயா!” என்று என்னை உதறித்தள்ள முனைந்தான். என் பிடியின் வலு அவனுக்குப் புரியவில்லை. அதற்குள் லா துவண்டு விட்டதால் இணையுலகப் பயணத்துக்கு தயார் நிலையில் இருந்தாள். விபரீதம். ஜேயை அரைகுறை நிலையில் உதறித்தள்ளி லாவுடன் பயணித்தேன்.

எல்லையில் காத்திருந்த ஜீக்களின் உதவியுடன் ஷ்கைப் பூட்டினேன். வருடல். ‘காதல் உணர்வுகள் அகன்றன’ என்ற ஜீ, “ஒரு கணம்” என்றது. “பூ வாசியின் அலைவரிசையை ரிகேல் செய்து பார்க்கும் பொழுது அவருடைய உணர்வுகள் அப்படியே இருக்கின்றன. குறையவே இல்லை” என்றது.

“அதெப்படி சாத்தியம்? ஷ்க் வேலை செய்கிறதா?”

“செய்கிறது. ஆனால் காதல் உணர்வு மறுபடியும் நிரம்பியிருக்க வேண்டும். இது புது விவரம். மேயிடம் தெரிவிக்க வேண்டும்”

“மறுபடியும் உறிந்து பாருங்கள்”

மறுபடியும் உறிந்த பின் ஜீ “அதே நிலை” என்றது.

நான்: மறுபடியும். மறுபடியும். மறுபடியும்.

ஜீ: அதே நிலை. அதே நிலை. அதே நிலை.

நான்: இப்போது என்ன செய்வது?

ஜீ: இவரை மீண்டும் பூவுக்கு எடுத்துச் செல்லுங்கள். மேயுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இது எதிர்பாராத திருப்பம்.

லாவுடன் திரும்பினேன். மீண்டும் ஏரிக்கரைக்குப் போகக் கூடாதென்று அலைக்கோணங்களை மாற்றியமைத்தேன். லாவின் வீட்டருகே பூ தொட்டோம். விழித்தாள். “என்ன ஆச்சு?” என்றாள். விவரம் சொன்னேன்.

“அவருக்கு என்ன ஆச்சு?”

சொன்னேன். “ஜேயை ஏரிக்கரையிலேயே எறிந்து வந்தேன் லா. இப்போதைக்கு நீ என்னுடன் இருக்க வேண்டும். ஜேயைப் பார்க்க அனுமதிக்க முடியாது”

ஆத்திரப்பட்டாள். “துரோகி! உன்னை நம்பினேன் பார்! எங்கப்பா இன்னேரம் தேடிக்கிட்டிருப்பாரு”

“மன்னிக்கணும் லா. திருமணத்துல விருப்பம் இல்லாம நீ பம்பாய் போறதா சீட்டு எழுதி வச்சுட்டு வந்தேன். உங்க வீட்டுல உன்னை பம்பாய்ல தேடிட்டு இருப்பாங்க”

“இரக்கமே இல்லாத அரக்கன் நீ. நாங்க உனக்கு என்ன தீங்கு செஞ்சோம்?”

“ஒரு தீங்கும் செய்யவில்லை எனக்கு. ஆனா எங்க இனமே உங்க உணர்வுகளாலே..”

“போதும் நிறுத்து உன்னோட பினாத்தலை. எங்களுக்கு இருக்குற ஆயிரம் ஆயிரம் தினசரிப் பிரச்சினைகள்ள எப்பவாவது யாருக்காவது கிடைக்கிற அற்ப நிறைவு காதல். அதிலயும் ஆயிரத்துல ஒரு காதல் நிறைவா முடியுது. காதல் தோல்வியடைஞ்சு துன்பப் படுறவங்க தான் அதிகம். உடம்பு வலிக்கு குணம் உண்டு. மனவலிக்குக் கிடையாது.. தயவுசெய்து என்னை அவர் கிட்டே கூட்டிட்டுப் போ.. உன்னைக் கும்பிட்டுக் கேக்குறேன்” என்றவள் சற்று எதிர்பாராத விதமாக அழத்தொடங்கினாள்.

ஏரிக்கரைக்கு விரைந்தோம். காய்ந்த சிறகு போல தரையில் படுத்துக் கிடந்தான் ஜே. ஏதோ பாடிப் புலம்பிக்கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் லா தீவிரமாக அழத்தொடங்கினாள். ஜேயைக் கட்டிப் பிடித்து “என்னைப் பாருங்க” என்று புலம்பினாள். எனக்குப் புரியவில்லை. காதல் உணர்வுகளை அழிக்க முடியாதா? அப்படியென்றால் எங்கள் கதி?

லா என் கால்களைப் பிடித்துக் கெஞ்சினாள். “ரகு.. எதுனா செய்யுங்க. ப்லீஸ். இதுனால உங்களுக்கு என்ன லாபம்? எதிர்கால மனிதர்னு சொல்றீங்க.. இதுதான் உங்க நாகரீகமா? உலகம் வளந்து நாங்க எல்லாம் இப்படித் தான் மாறுவோமா? எங்களுடையது ரொம்ப சாதாரணமான உலகம். இங்கே கிடைக்கிற இந்த அல்ப சந்தோஷம் எங்களுக்குப் போதும். காலையில் எழுந்து ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்து சந்தோசமா சிரிச்சா அதுவே பெரிய நிறைவு. அது தான் எங்களுக்கு வேணும்.. ப்லீஸ் ரகு.. டூ சம்திங்.. இரண்டு நாளா ஏரிக்கரையில புழுவா புரண்டுகிட்டு இருக்காரு.. வளந்த சமுதாயத்துலந்து வரீங்க.. உங்களுக்கு சாதாரண நாகரீகம் கூட இல்லையா?”

எனக்குள் ஏதோ பொறித்தது. உணர்வா? நடுங்கினேன். ஒரு வேளை பூ வாசிகள் அதிகம் காதலித்தால் அந்த நிறைவினாலும் அவர்கள் அலைவரிசை மாறுமோ? லா முன்பு சொன்னது போல நிறைவேறாத காதலின் துயர அலைவரிசை தான் றா வாசிகளைப் பாதிக்கிறதோ? அல்லது அழுகையில் நழுவி விழுந்தேனா?

மூத்தவர் இதை அனுமதிக்கப் போவதில்லை. “ஒரு சோதனை செய்ய அனுமதிக்கணும்” என்றேன். லா விழித்தாள். “ஜேயை பழைய நிலைக்குக் கொண்டு வரேன். அதற்குப் பிறகு உங்க காதல் உண்மையிலேயே உங்களுக்கு ம கொடுக்குதானு தெரியணும்” என்றேன்.

“என்ன செய்யணும்?”

போட்கிளப்பில் பார்ட்டி அறிவிப்பைப் பார்த்தேன். “வாங்க உள்ளே போவோம்” என்றேன். ஜேயின் கழுத்து நரம்பை மீண்டும் அழுத்தினேன். அவன் சில நொடிகளில் தன்னிலைக்கு வந்தான். நடந்த விவரங்களைச் சொன்னேன். மன்னிப்பு கேட்டேன். “வாங்க.. முதல்ல உங்க விடுதலையைக் கொண்டாடுவோம்” என்று போட்கிளப்புள் நுழைந்தோம். “லெட் மி சேஞ்ச்” என்று ஒதுங்கினார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஜேயும் லாவும் பிறருடன் ஆடிப்பாடினார்கள். இன்றைய உலகம் நாளை வராது என்றார்கள். அவர்கள் உணர்ந்து பாடியது புரிந்தது. அவர்கள் முகத்தின் ம என்னை உடனடியாகப் பாதித்தது.

என் வரம்புக்கு மீறிய உரிமையும் சுதந்திரமும் எடுத்துக் கொண்டேன். ‘காதல் உணர்வுகளை அழிப்பதில்லை, அழிக்கக்கூடாது’ என்ற தீர்மானத்துக்கு வந்தேன். அனைத்து றாக்களுக்கும் செய்தி எண்ணினேன். மூத்தவரிடம் என் காரணத்தை எண்ணியனுப்பினேன். ‘பூ வாசிகளிடையே காதல் வழக்கம் அதிகமானால் நாளடைவில் முன்னேற்றம் வரும். மாற்றத்தைக் கொண்டு வரும். அடுத்த தலைமுறையோ அதற்கடுத்த தலைமுறையோ.. நம்மிலும் வளர்ச்சி வட்டம் வந்து விடலாம். அதைவிட்டுப் பின்னோக்கிச் சென்று காதல் உணர்வுகளை அழிப்பதால், கால மற்றும் உளநிலை மாற்றங்கள் நாம் எதிர்பாராதபடி அமையலாம்’ என்று திட்டமாகச் செய்தி எண்ணினேன்.

லா வீட்டுக்குத் திரும்பியதும் அவள் பெற்றோர் முகத்தில் பரவியிருந்த மவின் அதிர்வு என்னளவில் பாதித்தது. லாவின் தந்தையுடன் பேசிவிட்டு ரகுவுக்கு விடை கொடுத்தேன். அகன்றேன்.

“அப்பா!” என்று ஓடிய லாவை அணைத்துக் கொண்டார். “வேண்டாம்மா.. நீ உன் விருப்பம் போலவே கல்யாணம் செஞ்சுக்க.. அந்த ரகுவுக்கு மூளை சரியில்லைனு தோணுதுமா.. என்னவோ எதிர்கால ஞானினு சொல்றான் சோனிப்பய. நட் கேஸ்”.

லாவின் முகத்தில் ஒளி.

அடுத்த வாரத்தில் லா-ஜே திருமணம். நிச்சயம் என்னை நினைத்துக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன். அவர்கள் தேநிலவு என்று எங்கோ கிளம்ப, நான் றா திரும்பினேன்.

வந்தக் கணத்தில் கைதானேன். விசாரணைக் குழுவால் என் முடிவை ஏற்கவோ மறுக்கவோ முடியவில்லை. ‘காதல் போன்ற ஆக்க உணர்வுகள் பூவில் வளர்ந்தால், அது றா வாசிகளின் அடுத்த தலைமுறைகளின் வளர்ச்சியில் புலப்படும்’ என்ற என் கருத்தை சோதிக்க முடிவு செய்தார்கள். பதினைந்துத் தலைமுறைகளுக்கு என்னைச் சிறை வைத்தார்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு விசாரணை.

சென்ற பதினான்குத் தலைமுறைகளாக பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. பூ வாசிகளிடையே காதல் பரவவில்லை என்பதே இதன் பொருள்.

இது பதினைந்தாவது தலைமுறைக்கான விசாரணைக் குழு. தீவிர முன்னேற்றத்துக்கான அறிகுறி ஏதேனும் தென்பட்டால் என்னைத் தொடர்ந்து சிறையில் வைப்பார்கள். இல்லையெனில் வேறு தண்டனை கிடைக்கலாம்.

விசாரணை முடிவுக்குத் தயாரானேன். முதல் முறையாகக் காதல் தீதோ என்று எண்ணினேன். பூ வாசிகளிடையே காதல் வளர்ந்திருக்குமா?

– 2012/02/22

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *