காதல் என்பது காவியமானால்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 19,258 
 

“அன்புள்ள நந்தினி அம்மாவுக்கு…’ என துவங்கிய, அந்த கடிதத்தை, இரண்டாவது முறையாக படிக்க ஆரம்பித்தாள் நந்தினி; கண்கள் கலங்கின. சுயபச்சாதாபத்தில் மனசு சுருங்கியது. தன்மேலேயே எரிச்சலும், கோபமும், “சுறுசுறு’ என்று எழுந்தது.
“ச்சே… எத்தனை மோசமான ஜென்மம் நான். அவர் அத்தனை சொல்லியும் கூட, அதைக் காதிலேயே வாங்கல்லையே… அம்மா, அண்ணன் எல்லாரும் தான், தலைப்பாடா அடிச்சுக்கிட்டாங்க… “அவசரப்படாதே… வேண்டாம்’ன்னு, நான் எங்க கேட்டேன்?
“ஆத்திரம் கண்ணை மறைச்சுது… எனக்கு கர்வம். “நான், கறந்த பால் மாதிரி சுத்தம்… சின்ன சலனத்துக்கு கூட இடம் தராம, மனசை, துடைச்சு வச்ச சிலேட்டு மாறி வைச்சுருக்கேன்… அதே மாதிரி என் புருஷன், பரிசுத்தமானவனா இருக்கணும்”ன்னு நெனச்சது தப்பா?
அம்மா —
காதல் என்பது காவியமானால்...“தப்பு இல்லே நந்தினி… ஆனா, தாலி கட்டிய நிமிஷத்துல இருந்து, இந்த நிமிஷம் வரைக்கும், உனக்கு உண்மையா இருக்கிறவரை, கண்டமேனிக்கு பேசுற பார்… அது தப்பு. ரெண்டு குழந்தைகளோட வருங்காலத்தை நெனச்சு பார்க்காம, நெனச்ச நினைப்புல அம்மா வீட்டுக்கு வந்த பாரு… அது தப்பு. விவாகரத்துதான் முடிவுன்னு நினைச்ச பாரு… அது தப்பு…’
— அம்மாவின் மெல்லிய குரல், அழுத்தமாய் செவியில் அறைந்தது.
அன்பான கணவன், மணிமணியாய் இரட்டை பெண் குழந்தைகள். திகட்டாத எட்டு வருட தாம்பத்யம். எல்லாமே ஜெனிபரை பார்க்கும் வரை, நன்றாகத் தான் போய் கொண்டிருந்தது.
“பார்க்கும் வரை’ என்று கூட சொல்ல முடியாது. பார்த்து பழகிய பின், வீட்டுக்கு வந்திருந்தாளே… அன்று தான், சந்தோஷம் புழக்கடை வழியாக வெளியேற, சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தது. ஜெனிபர் மேல் தப்பு சொல்ல முடியாது; ஹாலில் பெரிதாக மாட்டியிருக்கும் கல்யாண போட்டோவை பார்த்ததுமே, மனசுல வச்சுக்காம, நடு வீட்ல உண்மையை போட்டு உடைச்சா… அவ நல்லவ. கட்டின பொண்டாட்டிகிட்ட உண்மையை மறைத்து, போலியா வாழ்ந்த புருஷன் மேலதான் எரிச்சல் முழுசும். உண்மையை மறைச்சு…
கண்கள் மீண்டும் கடித வரிகளில் மேய்ந்தன. “என்ன நந்தினிம்மா… ஆச்சரியமா இருக்கா… உண்மையாவே, எனக்கு உங்களை அம்மான்னு வாய் நிறைய கூப்பிட பிடிக்கும். அனிக்குட்டியும், வினிக்குட்டியும், உங்களை அம்மான்னு கட்டிக்கறப்போ, எனக்கும் கட்டிக்கத் தோணும். மடியிலே தலை சாய்ச்சுக்க தோணும்…
“திவாகர் உங்ககிட்டே சொல்லி இருப்பார்… நானும், திவாகரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம். ஆனா, ரெண்டு பேர் வீட்டுலயும், சம்மதம் கிடைக்கலை. மதத்தை காரணம் காட்டி, பிரிச்சாங்க. வீட்டு பெரியவங்களை கஷ்டப்படுத்த இஷ்டமில்லாம, ரெண்டு பேருமே, ஒரு புரிதலோடு பிரிஞ்சுட்டோம்.
“நான் என் பெற்றோருடன் டில்லி போயிட்டேன். ரெண்டு பேரும், ஒருத்தரை ஒருத்தர் அதுக்கப்புறம் பார்க்கலை… சந்திக்கக் கூடாதுன்னு, பேசி வச்சு தான் பிரிஞ்சோம். ஆனா… கர்த்தருடைய விருப்பம், வேறு விதமா இருக்குது…
“ஒரு விபத்துலே எங்கப்பா, அம்மா ரெண்டு பேரையுமே ஒரு சேர நான் இழந்துட்டேன். தனிமை ரொம்ப பாரமாக தெரிஞ்சுது. டில்லியில் வேலை பார்த்த கம்பெனியின், சென்னை கிளைக்கு மாற்றல் வாங்கி வந்துட்டேன். தற்செயலாக உங்களை சந்தித்து, உங்க வீட்டுக்கு வந்தப்போ தான், திவாவின் மனைவின்னு தெரிஞ்சுக்கிட்டேன்…
“திவாவும், நீங்களும், குழந்தைகளுமான இந்த சின்ன குடும்பம், எனக்கு ரொம்பவும் பிடிச்சுது… இதை பார்க்கையில் உங்க மூத்த மகளா நான் இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் எழுந்தது அடிமனசில்…
“ஏனோ தெரியலே நந்தினிம்மா… மனசுக்குள்ளே உங்க ரெண்டு பேரையும் அப்பா, அம்மா ஸ்தானத்துலே வச்சுப் பார்த்தப்போ, ரொம்ப சந்தோஷமா இருந்தது…
“அனியும், வினியும், உங்களோட அன்பை அனுபவிக்கிறப்போ, எனக்குள்ளே, எனக்கு கிடைக்காத அந்த தாயன்பின் வலி, பெரிசா தெரிஞ்சுது. இதுக்கு, தாயின் மடி சுகம் கிடைக்காமலேயே வளர்ந்தது தான் காரணமோ, என்னமோ!
“விபத்துலே இறந்து போன என் பெற்றோர், என்னை பெத்தவங்க இல்லை. அம்மாவோட சீராட்டலோ, அப்பாவோட தோள் சாயுதலோ எனக்கு கிடைக்கவே இல்லை.
“என்ன குழப்பறேனா? உண்மைதான் நந்தினிம்மா… நான் பிறந்ததுமே அம்மா இறந்துட்டாங்க. எல்லாரும் சேர்ந்து, அம்மாவோட தங்கையை, எங்கப்பாவுக்கு கட்டி வச்சாங்க…
“என் சின்னம்மா, வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுக்குள்ள, எங்கப்பா திடீர்ன்னு ஹார்ட் அட்டாக்குலே இறந்துட்டார்… சில வருடங்கழித்து, எங்க சின்னம்மா ,வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க… அம்மாவோட அரவணைப்பு கிடைக்காத, சவலைச் செடி மாதிரி, பெரும்பாலும் ஹாஸ்டலில் தான் வளர்ந்தேன்…
“நந்தினிம்மா நீங்க நம்புவீங்களோ, என்னவோ… திவாகரை காதலித்த காலத்தில் கூட, எனக்கு காதல் உணர்வை விட, பாதுகாப்பான உணர்வு தான் தோன்றும். திவாகிட்டே கூட இதை சொல்லியிருக்கேன்…
“அன்னிக்கு நீங்க கூட, “வரன் பாக்கட்டுமா’ன்னு கேட்டீங்களே… “பாருங்க… அப்பா, அம்மா ஸ்தானத்துலே நீங்க ரெண்டு பேரும் நின்று, என்னை மகளா நினைச்சு, எடுத்து நடத்தணும்’ன்னு சொன்னதும், ரெண்டு பேரும் சிரிச்சீங்க… நான் ஏதோ கிண்டலுக்காக சொல்றதா நினைச்சீங்க… இல்@ல… என் அடிமனசு ஆசை தான் அப்படி வெளிப்பட்டது…
“ரகசியமாக, திவாவை அப்பான்னும், உங்களை அம்மான்னும் கூப்பிட்டு பார்த்துக்குவேன். ரொம்ப சந்தோஷமா இருக்கும். அப்புறம் நந்தினிம்மா… நான் இங்கே, மேகலாயாவுக்கு டிரெயினிங் வந்தேனில்லையா… இங்கே சந்தீப்புன்னு ஒருத்தர் என்கிட்டே பேசினார். என்னை, “புரபோஸ்’ பண்ணினார்…
“நான், “எனக்கு, ஒரு சின்ன வயது அப்பா, அம்மா இருக்காங்க. அவங்க சம்மதிச்” ஓ.கே., சொன்னாதான், எனக்கும் ஓ.கே.,’ன்னு சொல்லிட்டேன். “அவங்ககிட்ட பேசுங்க’ன்னு நம்ம வீட்டு முகவரி, மொபைல் நம்பர் எல்லாம் குடுத்துருக்கேன். அவர் உங்களை இந்த வாரத்துலே சந்திப்பார். பேசிப் பாருங்க. உங்க முடிவு எதுவானாலும் மனப்பூர்வமா இந்த மகள் கட்டுப்படுவா. உண்மையா சொல்றேன், இன்னும் ஒரு மாசத்தில், நான் வந்திடுவேன். அனிக்கும், வினிக்கும் என் அன்பு முத்தங்கள். திவா அப்பாவுக்கு என் அன்பு விசாரிப்புகள்.
அன்பு மகள் ஜெனிபர்.’
கடிதம் முடிந்து விட்டது. அது ஏற்றி வைத்து விட்டுப் போன தீ மட்டும், நந்தினியை தகித்தது.
ஜெனிபர், மகள் என்று உரிமை கொண்டாடி, தூய்மையாய் பழகியதை தவறாக புரிந்து கொண்டு, திவாவை வார்த்தைகளால் குதறியெடுத்தது… நந்தினி தவித்தாள். பழைய காதலை இருவருமே மறந்து விட்டு, யதார்த்தமாய் இருக்கின்றனர். நந்தினி தான் அதை தோண்டி எடுத்து, போஸ்ட் மார்ட்டம் செய்து, பேயாட்டாம் ஆடினாள். திவாகர் கீழிறங்கி மென்மையாய் பேச பேச, நந்தினி, குரலை உயர்த்திக் கொண்டே போனாள்…
“அண்ணனும், அம்மாவும் சொல்ல சொல்ல காதில் வாங்காமல் டைவர்ஸ் நோட்டீசை அனுப்பியதும் தான், கொஞ்சம் நிலைப்பட்ட@டன். “நான் சுத்தமானவள், நான் சுத்தமானவள்’ன்னு, ஒரே காட்டுக் கூச்சலாய் கத்தினேனே தவிர, திவாவும், ஜெனிபரும், சுத்தமானவர்கள் தான் என்பதை, ஏன் நினைக்காமலேயே போனேன்.
“ஜெனிபரும், அவரும் எப்போதோ காதலித்தனர் என்பதையே நினைத்தேனே தவிர, திவா என் மீதும், குழந்தைகள் மீதும் வைத்த அன்பை புரிந்து கொள்ள மூர்க்கமாக மறுத்தேனே… ஏன்? ஜெனிபர் மகளாய் பாசம் காட்டி, என்னை எனக்கே அருவருக்கும்படி செய்து விட்டாளே…’ முழங்காலில் தலையை புதைத்துக் கொண்டாள்.
அழுகையில் உடல் குலுங்கியது… அதே நிலையில், எத்தனை நேரமிருந்தாளோ… யாரோ தலையை வருடுவது போல இருந்தது. உடம்பு சிலிர்த்தது. நிமிர்ந்து பார்த்தாள்.
“”தி… தி… திவா…” என்ற பெருங் கதறலுடன், அவன் நெஞ்சில் முட்டி மோதி அழ ஆரம்பித்தாள்.
“”ஜெனிபர்… ஜெனிபர்…” என்று ஏதோ சொல்ல வந்து திணறியவளை, தட்டிக் கொடுத்து, அவளை, தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.
“”சாரி நந்து… நாம முதன் முதலாக சந்திச்ச அன்னிக்கே, நீ ஒரு கன்டிஷன் போட்டே… “நான், என் மனச சுத்தமா கண்ணாடி மாதிரி வச்சிருக்கேன். நீங்க தான் புருஷன்னு உறுதியானதும், உங்க பிம்பம் தான் அதில் விழுந்தது. அதுபோல தான், எனக்கு வர்ற புருஷனும், கறந்த பால் மாதிரி பரிசுத்தமா வேணும்… “யாரையாவது காதலிச்சுருக்கீங்களா? அப்படி இருந்தா, இந்த உறவே வேண்டாம்’ன்னு சொன்னே…
“”அப்போ, உன் தீவிரம் எனக்கு பயத்தை கொடுத்தது… என் காதலை சொல்லணும்ன்னு எனக்கு தோணலே… ஏன்னா, ரெண்டு பக்கமும், பெரியவங்க கல்யாண ஏற்பாட்டுலே ரொம்ப தூரம் வந்துட்டாங்க. அந்த சமயத்துலே இதையும், அதையும் சொல்லி, உன்னைக் குழப்பி, அவங்களையும் கஷ்டப்படுத்தி, அதுவும் முற்றுப்புள்ளி வச்ச காதலுக்கு கமா போட்டு, ஏனிந்த வீண் வேலைன்னு, நானும் இல்லைன்னு தலையாட்டினேன்.
“”ஆனால், உன்னை கை பிடிச்ச பின், ஜெனிபர் ஞாபகத்துக்கே வரலை, இது சத்தியம். கனவில் கூட உனக்கு துரோகம் பண்ணல. திரும்பி வந்த ஜெனிபராலும், என் மனசுலே எந்தவித சலனமும் உருவாகலே… அவ மேல அன்பு இருக்கு… காதல் இல்லே. அவளே சொன்னது போல, வெறும் அன்பைத் தான் காதல்ன்னு நெனச்சோமோ என்னமோ!”
சிறிது நேரம் மவுனமே ஆட்சி செய்தது.
“”நீங்க… நீங்க எப்படி இங்கே?” அவள் திணறி கேட்க, அவளையே குறுகுறுவென பார்த்த திவாகர், “”உன்னைப் பிரிந்து என்னால இருக்க முடியல கண்ணம்மா… அதான், நீ இருக்கும் இடம் தேடி வந்துட் டேன்…” அவன் கூற, உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள் நந்தினி.
அவளை மென்மையாக அணைத்து, “”ஏண்டா… ஏண்டா… ஒண்ணுமேயில்லாத விஷயத்துக்கு உன்னையும் வருத்தி, என்னையும் கஷ்டப்படுத்தி… நந்தும்மா நீ இல்லாம என்னால வாழவே முடியாதுடா… செத்திருவேண்டா… என்னை புரிஞ்சுக்கோ கண்ணம்மா,” என்றவன், தன்னுடைய அணைப்பை மேலும் இறுக்கி, நெற்றியிலும், கண்களிலும் ஆவேசமாய் முத்தமிட்டான்.
அந்த ஸ்பரிசம், நீர் தெளித்த பாலைப் போல, உணர்வுகளை படிய வைத்து, நெகிழ்த்தியது. அவள், அவனுள் தன்னை புதைத்துக் கொண்டாள். மனசு நிர்மலமாக இருந்தது. மனசு போலவே, வெளியில் வானமும், மேகங்களே இல்லாமல், தெளிவாகயிருந்தது. மெல்ல பூத்து வந்தது பூரண நிலவு!

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *