காதலை வென்ற காதல்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,147 
 

நம் கதாநாயகி சுபா, பி.ஈ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, ஒரு ஐ.டி., கம்பெனியில் சேர்ந்து, தற்போது, டீம் லீடராக இருப்பவள். ஐந்தரை அடியில், ஐம்பது கிலோ எடையில், கோதுமை நிறத்தில், எப்போது பார்த்தாலும், அப்போது செய்த முந்திரி கேக் போல் இருப்பவள். ஆங்கிலமும், தமிழும் அளவாக கலந்து பேசி, யாரையும் தன்பால் இழுப்பவள். படிக்கும் காலம் தொட்டே, ஆண்கள் சட்டென்று வீழ்ந்தாலும், தன் நிதானம், ப்ளஸ் அன்பான கண்டிப்பால், எவரையும் நெருங்க விடாமல் ஜாக்கிரதையாக இருப்பவள்.
ஆனால், இப்போது, உடன் பணிபுரியும் தீபக் மட்டும், சுபாவை சற்று உரசிப் பார்க்கிறான். இத்தனைக்கும் அவன், இவளிடம் பேசியது சில தடவைகள் மட்டுமே. இவளின் பல நடவடிக்கைகள் போலவே, அவனுடைய செயல்களும் ஒத்திருப்பது, சுபாவுக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
எந்த தேவையில்லாத எண்ணங்களையும் நுழைய விடாமல், திறமையாகத் தன் வாழ்க்கையை ஓட்டி வந்த சுபாவின் மனதில், அந்த தீபக் பேசிய வார்த்தைகள், எப்படியோ வாடகையின்றி குடி கொண்டன.
காதலை வென்ற காதல்!சென்ற வருடத்தில் ஒரு நாள், சுபா டியூட்டி முடித்து, தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய முடியாமல் தவித்தபோது, “எக்ஸ்க்யூஸ் மீ… மே ஐ ஹெல்ப் யூ?’ என்று கேட்டான் தீபக். அப்போது, சுபாவின் டீம் லீடர் அவன் தான். தயங்கியபடி தலையாட்டிய சுபாவிடமிருந்து ஸ்கூட்டரை வாங்கி, பெட்ரோல் இருக்கிறதா என்று, “செக்’ செய்தான்.
சந்தேகம் வரவே, தன் பைக்கிலிருந்து ட்யூப் வழியாக, ஒரு பாலிதின் கவரில் பெட்ரோல் எடுத்து, சுபாவின் ஸ்கூட்டருக்கு மாற்றினான். அப்போது சுபாவின் ஸ்கூட்டர் கர்ஜித்தது.
“ரொம்ப நன்றி தீபக்… ரிசர்வ் வரும் போதே, உஷாரா இருந்திருக்கணும்…’ என்று சுபா சொல்ல, முதன் முறையாக வேலையை தவிர்த்த அவளது இந்த கனிவான பேச்சு, நன்றியாக வெளிப்பட, தீபக் அப்போது சொன்னான்…
“வெல்கம் சுபா… இதுக்காக, ஆறு மாசமா காத்துக்கிட்டிருக்கி@றன். உங்க நன்றிக்கு பதிலா, நான் உங்க ஸ்கூட்டருக்குத்தான் நன்றி சொல்லணும்…’ சொல்லிவிட்டு, அர்த்தத்தோடு பார்த்தான். முதலில் சுபாவுக்குப் புரியவில்லை. “எதுக்கு ஆறு மாதம் காத்திருந்தானாம்… எதுக்கு ஸ்கூட்டருக்கு நன்றி சொல்லணுமாம்?’
“ஸ்கூட்டருக்கு நன்றியா?’ கருப்பு, வெள்ளைப் பூக்கள் விரியக் கேட்டாள் சுபா.
“எஸ்… மக்கர் öŒ#ததுக்கு…’
இப்போது புரிந்தது சுபாவுக்கு… ஓ… இந்த சாக்கில் உதவி செய்து, அதற்கு சுபா நன்றி சொல்லியது, அவனுக்கு சந்தோஷம் போல.
கூடவே, இன்னொன்றையும் சொன்னான்… “இந்த ஸ்கூட்டருக்கு மட்டும் மனசுன்னு ஒண்ணு இருந்திருந்தா, அது பெட்ரோல் இல்லாம கூட, உங்களுக்காக ஓடியிருக்கும். ஓ.கே., ஜஸ்ட் ஜோக் சுபா…’ சொல்லிவிட்டு நகர்ந்தான்.
இப்போது தெளிவானாள் சுபா. பொதுவாக இளைஞர்கள், பெண்களை புகழ்ந்து பேசும் பாணிதான் இது என்று உணர்ந்தாள். அதை வளர்க்க விரும்பவில்லை. இது தொடர்ந்தால், எங்கு போய் முடியும் என்பது தெரியாததா என்ன!
இதை புரிந்தே சுபா, தன்னிடம் யாரையும் நெருங்க விட்டதில்லை. அதே நேரம், அவளுக்கும் அந்த பருவத்தின் தாக்கம் இருக்கத்தான் செய்தது.
அந்த எண்ணக் கோட்டையில், ஒரே ஒரு செங்கல் உடைந்தது போல, தீபக்கின் அடுத்த நடவடிக்கை அமைந்தது. முதல் சம்பவம் நடந்து ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகியிருக்கும்.
மற்றொரு நாள், ஆபீஸ் கேன்டீனில், சிறிது கூட்டமாக இருந்தது. கையில் சாம்பார் சாதத்துடன் கூட்டத்திலிருந்து விடுபட்ட தீபக், தூரத்தில் நின்ற சுபாவிடம், “என்ன சுபா… லஞ்ச் அவர் முடியப் போகுது, கூட்டமா வேற இருக்கே? ஒண்ணு செய்யுங்க… இந்த சாப்பாட்டை வாங்கிக்கங்க… உங்களுக்கு மீட்டிங் வேற இருக்கு…’ என்று, தானாக அமைந்த சந்தர்ப்பத்தில், உண்மையாகக் கூறினான்.
சில நொடிகள் யோசித்தாள் சுபா. மீட்டிங்கிற்கு, பத்து நிமிடமே இருந்தது. “இவனிடமிருந்து வாங்கலாமா… ஆனால், ஒன்று உறுதி. இதனால் தொடர்ந்து வந்து வழிய மாட்டான்!’
“நன்றி தீபக்… என் டோக்கன் வாங்கிக்கங்க…’ என்று, தன் டோக்கனைக் கொடுத்து, சாம்பார் சாதத்தை வாங்கிக் கொண்டாள்.
கூடவே சொன்னாள், “இப்ப நீங்க இந்த சாம்பார் சாதத்துக்கு தான் நன்றி சொல்வீங்க…’ அவன் சொல்வதற்கு முன், அதை தானே சொல்லி, முந்திக் கொண்டாள்.
“இல்ல… இப்ப நன்றி உங்களுக்கு. ஏன்னா, என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு…’ சொல்லிவிட்டு நடந்தான் சிரிப்போடு.
இது நடந்து சில மாதங்கள் ஆகியிருக்கும். தொடர்ந்து சில நாட்கள் தீபக் ஆபீஸ் வரவில்லை. அப்போதும், சுபாவின் எண்ணக் கோட்டையில் சில செங்கற்கள் உடையத் தொடங்கின.
ஆம், “தீபக் வராதது ஏன்?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள். அதற்குள், அவளும், டீம் லீடர் ஆகியிருந்தாள். முன்பு போல ஒரே டீமில் இருந்திருந்தால், ஏன் என்று விசாரித்திருக்கலாம், இப்படி யோசிப்பதே தவறு என்று சுபா தனக்குள் தடை போட்டாலும், “தீபக்கிற்கு என்னவாயிற்று?’ என்ற சிந்தனை, ஒரே இடத்தில் நின்றது. அதை தவிர்க்க தவிர்க்க, மீண்டும் மீண்டும் அதுதான் சிந்தனைக்கு வந்தது.
தன் மனம் ஏன் அவனைப் பற்றி அறிய முற்படுகிறது என்று, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுதான் அந்தக் காதல் சாத்தானோ?
சுபா பிடிவாதமாக, தன் மனதை வேறு வழியில் திருப்பினாள். அவளுக்குத் தன் தந்தையின் ஞாபகம் வந்தது. அவர் பெயர் வெங்கடேசன். அவர்கள் வாழ்க்கையில் பெரிய திருப்பம், சுபா பிறக்கும் போது ஏற்பட்டது. ஆம், அவளது அம்மா, தன் நினைவாக சுபாவை, தன் கணவரின் கையில் கொடுத்த அடுத்த நொடி இறந்து போனாள்.
மனைவி இறந்து போனாலும், சுபாவிற்காக புது வாழ்க்கையை தொடர்ந்தார். மனதில் எந்த சலனமும் இல்லாமல், சுபாவை தன் கண்ணாக வளர்த்தார்; ஒரு தாயுமாக இருந்தார். அப்படிப்பட்ட அப்பாதான் தனக்கும் ஒரு துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பொறுப்பான கடமை கலந்த சந்தோஷத்தை, தன் அப்பாவிற்கே தர வேண்டும் என்பதில், உறுதியாக இருந்தாள் சுபா.
சில நாட்கள் கடந்திருக்கும். அந்த மூன்றாவது சம்பவம் நடந்தது.
“ஹலோ சுபா…’ திடீரென்று எதிரில் நின்றான் தீபக்.
“ஹலோ…’ பதிலுக்கு சொன்ன சுபா, “ஏன் இவ்வளவு நாளா வரல?’ என்று கேட்க நினைத்து, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“சுபா… ஒரு ஹெல்ப். நான் உங்க அப்பாவ மீட் பண்ணனுமே…’ சிரித்தபடி கேட்டான். ஆச்சரியமானாள் சுபா.
“ஒய்?’
“எஸ்… உங்கள நான் இந்த ஆபீஸ்ல கிட்டதட்ட ரெண்டு வருஷமா பாக்கறேன். இனிமேலும், எனக்கு பொறுமை இல்ல. ரொம்ப, ரொம்ப ரிசர்வ்ட் டைப் நீங்க. அதனால், உங்ககிட்ட நேரிடையா என் எண்ணங்கள சொல்றது, சரிவராதுன்னு தோணிச்சு…
“போன வாரம் பூரா, என்னை அழைச்சிகிட்டு, என் பேரன்ட்ஸ், பொண்ணு பார்க்க கிளம்பிட்டாங்க… நானும் எனக்கு விருப்பம் இல்லாட்டா கூட, அவங்களுக்காக கூட போய், “நோ, நோ’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். இப்ப எனக்குள்ள தனிப்பட்ட விருப்பத்த சொல்றதுக்கு, சரியான ஆள் உங்க அப்பாதான்… காரணம், அவரோட பொண்ண நான் விரும்புறேன்.
“அவரும், அவர் பெண்ணிடம் கலந்து பேசி, ஓ.கே.,ன்னா நான் என்னோட பெற்@றாரை, கன்வின்ஸ் பண்ணுவேன், இல்ல நெகடிவ்வா இருந்தா, ஏமாற்றம் இருக்கும்; பட் வருத்தமிருக்காது. அப்பறம் என் பெற்@றார் விருப்பப்படி விட்டுடுவேன்…’ தெளிவாக சொல்லி, பதிலுக்குக் காத்திருந்தான்.
சற்று திடுக்கிட்டுதான் போனாள் சுபா.
இதில் மறுத்தால், அதாவது தந்தையைப் பார்க்கத் தேவையில்லை என்று சொன்னால், அதிலிருந்தே, அவளின் விருப்பமின்மையை அவன் தெரிந்து கொள்வான். சரி என்றால், அதிலும் அவள் விருப்பத்தை புரிந்து கொள்வான்.
ஆனாலும், அவன் காதலை, பெருந்தன்மையாக தெரிவித்த விதம் அவளுக்குப் பிடித்திருந்தது. இக்கட்டான நிலைக்கு தள்ளப் பட்டாள்.
“என்ன சொல்வது… அப்பா பார்க்கும் ஒருவனை விட, இவனையே அப்பா செலக்ட் செய்தால், அதுவும் நன்றாகத்தானே இருக்கும்…’
“எங்கப்பாவை பார்க்கலாமா, வேண்டாமான்னு நாளைக்குச் சொல்றேன். ஒன்டே வெயிட் பண்ணுங்க…’ என்று சுபா சொல்ல, புரிந்து கொண்டான் தீபக். அந்த ஒரு நாள், சுபாவுக்குத்தான் என்பது, அவனுக்குப் புரிந்தது. சிரித்தபடி அகன்றான்.
அவன் சென்றதிலிருந்து, சுபாவிற்கு வேலையே ஓடவில்லை. “கொஞ்சம் பிடி கொடுத்து விட்டோமோ… அவன்பால் ஈர்ப்பு உள்ளதை சொல்லாமல், சொல்லி விட்டோமோ… ஏன் என்னால் உடனே மறுக்க முடியவில்லை… எனக்கு இணையாக தீபக்கை வைத்துப் பார்த்து விட்டோமோ… ஓ… இதுதான் அந்த காதல் சாத்தானின் ஆரம்ப லீலையோ?’
ஒரு புறம் இவ்வாறு தோன்றினாலும், மறுபுறம் ஒரு சமாதானமும் அவள் மனதில் தோன்றியது… “நீயாக யாரையும் முனைந்து காதலிக்கவில்லையே… இப்பவும் கூட, அப்பா சம்மதித்தால்தான், உனக்கு ஓ.கே., என்கிறாய். தீபக், அப்பாவைப் பார்ப்பதில், என்ன தவறு இருக்க முடியும்?’
அன்று ஆபீஸ் முடிந்து, வீட்டிற்குள் நுழைந்த போது, வெங்கடேசனும் உற்சாகமாக இருந்தார். வழக்கம் போல இரவு உணவு முடிந்து, மொட்டை மாடியில், சுபாவும், வெங்கடேசனும் அமர்ந்திருக்க, தீபக் மேட்டரை சொல்லலாமா, வேண்டாமா அல்லது சொல்வது என்றால், எப்படி ஆரம்பிப்பது என்ற சிந்தனையில் அவள் இருக்க, அப்பா, தன் மகளின் தலையை இதமாக தடவி, “”சுபா… உன்கிட்ட ஒரு விஷயத்த இன்னிக்கு சொல்லணும்மா… அதுக்கு முன்னாடி, நீ, எனக்கு ஒரு தாயா, பிரெண்டா, அப்பறம் ஒரு மகளா, அதுக்கு ஒரு முடிவு சொல்லணும்மா என்ன?” பீடிகையோடு கேட்டார்.
புரியாமல் பார்த்தாள் சுபா.
“”என்னப்பா… ஆரம்பமே பலமா இருக்கு. எதுவாயிருந்தாலும், உங்க முடிவு நியாயமா, நல்லதா தாம்பா இருக்கும், சொல்லுங்கப்பா?” தான் சொல்லப் போகும் தீபக் விஷயத்தை ஒத்தி வைத்து விட்டு, அப்பாவின் வார்த்தைகளை கேட்க ஆரம்பித்தாள்.
“”சுபா… நீ, எனக்கு ஒரே செல்லமான, நான் வளர்த்த, நல்லபடியா வளர்ந்த பொண்ணும்மா… இந்த காலத்துல, இந்த சென்னைல ஆணும், பெண்ணும் சகஜமா பழகுற நிலையில கூட, ஒரு சின்ன தடுமாற்றம் இல்லாம, உனக்கும், உன் மேல யாருக்கும் எந்த வித வித்தியாசமான எண்ணம் கூட வராம, வேலைக்குப் போய் பழகிட்டு வர்ற ஒரு அற்புதமான பொண்ணும்மா நீ… நீ, எனக்கு பொண்ணா பிறக்க, நான் கொடுத்து வச்சிருக்கணும் சுபா…
“”ஆனா, நான் சொல்ல வர்ற விஷயம் வேறம்மா, இப்ப உனக்கு கல்யாண வயசு. அதனால, நான் ஒரு நல்ல பையன பார்த்து வச்சிருக்கேன். அது கூட உனக்கு பிடிச்சிருந்தாதாம்மா… அது உறுதி. அந்த நல்ல காரியம், நல்ல படியா முடிஞ்சப்பறம், எனக்கொரு ஆசை வந்திருக்கு. அத சொல்ல தயக்கமா இருக்கு சுபா…” இடையில் நிறுத்திவிட்டு, சுபாவைப் பார்த்தார் வெங்கடேசன்.
புன் முறுவல் பூத்தாள் சுபா .
“இந்த ஆரம்பமே, தீபக் பற்றிய எண்ணத்திற்கு தடையோ? சரி, அப்பா சொல்றத முழுதும் கேட்கலாம்…’ என்று.
“”பரவால்ல சொல்லுங்கப்பா,” என்றாள்.
வெங்கடேசன் தொடர்ந்தார்.
“”கொஞ்ச நாளா, நான் வாரக் கடைசில, வெளில ஒரு காலேஜ் பிரண்ட பார்த்துட்டு வர்றேன்னு சொல்வேனே தெரியுமா… அது, நீ நெனக்கிற மாதிரி ஆண் இல்ல சுபா, ஒரு பெண்!”
உண்மையிலேயே அதிர்ந்தாள் சுபா.
“அப்பாவுக்கு பெண் நட்பா?’
அப்பாவோ தொடர்ந்தார், “”எஸ்… அவ பேரு சாருலதா. காலேஜ்ல என் குரூப். நல்ல திறமைசாலி, படிப்பாளியும் கூட. அவளுக்கு அப்ப என் மேல ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனா, அவ அத சொல்லல. அவ நடவடிக்கையிலேயே, அது எனக்கு புரியும்…
“”அப்ப எனக்கு அதுக்கெல்லாம் தைரியம் கிடையாது சுபா… அப்பா, அம்மா, குடும்பம்ன்னு. நான் ஒரு வீட்டுப் பறவையா இருந்தேன். அதுக்காக அவள வெறுத்தேன்னு சொல்ல முடியாது. விருப்பம் இருந்து, அது சரி வராதுன்னு ஒதுங்கினேன்னு தான் சொல்ல முடியும்.
“”பாவம் அவ ஒரு பெண்… அவளாள மட்டும், என்ன செய்ய முடியும்… அது காத@லா, கத்திரிக்காயோ; உண்மையோ, பொய்யோ… அப்படியே மறைஞ்சு போச்சு. ஆனா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, எதேத்சையா, சாருலதாவ ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல பார்த்தேன். அவளும் என்னை தெரிஞ்சிக்கிட்டா…
“”இதுல ஒரு ஒத்துமை. என்னைப் போலவே அவளும் ஒரு விடோ, ஒரே ஒரு பையன். எம்.இ., படிச்சிட்டு, நல்ல வேலைல இருக்கானாம். சாருலதா திருவான்மியூர்ல, ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம் நடத்தறாளாம்.
“”இத அப்பவே உன்கிட்ட சொல்லணும்ன்னு தோணிச்சு… ஆனா, நீ கிண்டல் பண்ணுவேன்னு சொல்லல. இப்ப மட்டும் ஏன் சொல்றேன்னா… போன வாரம், அவ ஹோமுக்கு போயிருந்தேன். அப்ப அந்த பையன பார்த்தேன். நல்ல அழகு, நல்லா பேசினான், அப்ப சாருலதா திடீர்ன்னு, “ஏன் வெங்கடேசன், உங்க பொண்ணுக்கும், எம் பையனுக்கும் கல்யாணம் முடிச்சிட்டா, நீங்க இங்க வந்து சர்வீஸ் பண்ணலாமே…’ன்னு கேட்டா…
“”அப்பதான் நானும் யோசிச்சேன்… “யாரோ ஒரு புது பையன பார்க்கறதவிட, இவனையே ஏன், மாப்பிள்ளையாக்கிக் கொள்ளக் கூடாது…’ன்னு. இந்த கல்யாணம் முடிஞ்சா, நான் உன் கூடவே கம்ளீட்டா இருக்க முடியும் சுபா. அதான் இந்த ஐடியா நல்லதா தோணிச்சு… அதுக்காக நான் பழைய நெனப்புல, சாருலதாவுக்காக இப்படி யோசிக்கிறேன்னு நினைக்காத… என் மனசுல, உங்கம்மாவ தவிர, வேறு யாருக்கும் மனைவிங்கிற அந்தஸ்து கிடையாது…
“”ஆனா, இப்ப… உன் திருமணத்துக்கப்பறம், நான் தனியா இருக்கறத விட, இந்த சாருலதா கூட ஒரு சர்வீஸ் பண்றதுல, சந்தோஷம் இருக்கும்ன்னு தோணுது… இந்த உணர்வு சரியா, தப்பான்னு நீ தான் தீர்மானிக்கணும். இதுல உன் முடிவுதான் ரொம்ப முக்கியம்.”
தன் மகளிடம் மனதைத் திறந்து கொட்டிவிட்டு காத்திருந்தார். அப்பாவின் எதிர்பாராத இந்த வேண்டுகோளினால், சற்று நிலை தடுமாறித்தான் போயிருந்தாள் அவள்.
இப்போது தன்னிலையும், அப்பாவின் நிலையும் ஒன்று போலவே தோன்றியது. மகள் சம்மதத்துடன் அப்பா, தன் பழைய காதல் தோழியுடன் வாழ்வை, உடல் சாராமல் தொடர ஆசைப்படுகிறார்.
மகள், அப்பா சம்மதத்துடன், இல்வாழ்க்கையை, ஆசை துளிர் விடும் நிலைக்கு, ஆட்பட்டவனோடு தொடங்க ஆசைப்படுகிறாள்.
இதில், அப்பா முந்திக் கொண்டு விட்டார்.
இனி, “நான் தீபக் பற்றி எப்படி கேட்பது… கேட்டால், அதில் அப்பாவின் ஆசையைவிட, என் சுயநலம் தானே வெளிப்படும்?’
சாருலதாவை சந்திக்கா விட்டால், அப்பா இந்த வேண்டுகோளை வைத்திருப்பாரா? தன் தாய் மறைந்த பிறகு, தன்னை கண்ணாக வளர்த்த தன் அப்பாவிற்கு, தன் எதிர்கால கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுத்து, அவரது வேண்டுகோளை ஏற்று, அவருக்கு ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தையும் அளிக்க முற்பட்டாள் சுபா.
எனவே, “தீபக் பற்றி மூச்சு விடக் கூடாது, அப்பாவின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்…’ என்ற எண்ணத்துடன், தன் மனதில் தீபக் மீது துளிர்த்த, அந்த சிறு துளி காதலையும் மறந்து விட வேண்டும் என்று, முடிவு செய்தாள் சுபா.
“”அப்பா, உங்க எந்த முடிவும் தப்பா போகாதுப்பா… எனக்கு என்ன தேவையோ, அத நீங்க செய்ங்க… உங்க விருப்பமும் நியாயம்தான். அந்த சாருலதா மேடத்துகிட்ட ஓ.கே., சொல்லிடுங்க,” மகிழ்ச்சியோடு, தன் முடிவைச் சொன்னாள்.
அவள் அப்பா, ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்தார்.
மறுநாள் தீபக்கிடம் காதலின் இயல்பான பொய் ஒன்றைச் சொன்னாள். “”சாரி தீபக் நீங்க அப்பாவை பார்க்க வேண்டிய அவசியமில்லை”
சற்று அதிர்ந்தாலும், தீபக் அதை பெருந்தன்மை@யாடு ஏற்றுக் கொண்டு அகன்றான்.
ஆனால், சுபாவுக்கு மட்டும் உள் மனது சற்று வலித்தது.

– கீதா சீனிவாசன் (மார்ச் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *