காதலை சற்று தள்ளி வைப்போம்

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 19,195 
 

சென்னை மெரீனா. கதிரவன் மறைந்து இரண்டு மணி நேரம் ஆகியும் சூடு குறையாத அந்தி நேரம். கூட்டம் கூட்டமாய் மக்கள் கரையோரம் உட்காரவும், இளஞ்சோடிகள் படகு ஓரம் இடம் கிடைக்கவும் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். அனைவரையும் ஓரக்கண்ணால் பார்த்து தனக்கு வயது முடிந்து போனதற்கு வருத்தப்பட்டு பெருமூச்சு விட்டு நடந்து கொண்டிருக்கும் ஒரு சில பெரியவர்கள், இந்த கூட்டங்களை கோலங்கள் போட்டு இணைப்பது போல ஓடி ஆடி கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர்கள்.

இவைகள் எதையும் இலட்சியம் செய்யாதவாறு ஒரு ஓரத்தில் தன் விரலால் மணலை கிளறியவாறு உட்கார்ந்திருந்தாள் சுகந்தி. அலுவலகம் விட்டு நேரே கண்ணனை சந்திப்பதற்காக இங்கு வந்து அரை மணி நேரமாகிறது. தன்னுடைய கைபேசியில் அவனுக்காக இங்கு காத்திருக்கிறேன் என்று சொல்லி வந்தவள். கண்ணன் அவள் காத்திருப்பதாக சொன்னவுடன் அரை மணி நேரம் தாமதமானாலும் வந்து விடுகிறேன், என்று சொன்னதால் மனதில் சலிப்பு தோன்றாமல் காத்திருக்கிறாள். அடிக்கடி சந்திப்பதால் இந்த இடம் கண்ணனுக்கு தெரியும் கண்டிப்பாய் வந்து விடுவான். அவளிடம் ஏதோ சொல்ல வந்து மறந்து போய் திரும்பி செல்லும் கடலலைகளை பார்த்தவாறு கை விரல்கள் மட்டும் தன்னிச்சையாய் மணலில் அலைந்து கொண்டிருக்கிறது.

“க்கும்” என்ற கணைப்பு அவளின் ஆழ் மன ஓட்டத்திலிருந்து நிகழ்காலத்துக்கு வந்து மெல்ல திரும்பினாள், “சாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சு”, இயல்பாய் சொல்லி அருகில் உட்கார்ந்தான் கண்ணன். அவள் மெல்ல நகர்ந்து அவன் நன்றாக உட்கார வசதி செய்து கொடுத்தாள்.

இருவரும் ஒன்றும் பேசாமல் ஐந்து நிமிடம் இருந்தனர். மெல்ல கண்ணன் எதற்கு வரச்சொன்னாய் சகந்தி,உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று தோன்றியது, என்று மெல்ல இழுத்தவள் எனக்கு அடிக்கடி இந்த காதல் நமக்கு இப்பொழுது தேவையா? என தோன்றுகிறது, என்று முடித்தாள். கண்ணன் வியப்புடன் எதனால் உனக்கு இப்படி ஒரு எண்ணம் வர ஆரம்பித்தது?

நாம் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம் என்று சொல்லி பழக ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அதற்குள் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டது போல் எனக்கு களைப்பு தோன்ற ஆரம்பித்து விட்டது. இப்பொழுது நான் வேலை விசயமாகவோ, அல்லது எதற்காகவோ வெளியூர் செல்ல வேண்டும், வெளி நாட்டிலாவது வேலை தேட வேண்டும் என்றாலும் உங்களுடன் காதல் என்ற விலங்கு என் கால்களை கட்டிப்போடுவதாக தோன்றுகிறது.

அனறைக்கு என் மேல் உயிரை வைத்திருப்பதாக சொன்னாயே சுகந்தி கண்ணன் ஒரு வித கவலையுடன் கேட்டான்.இப்பொழுது கூட உங்கள் மீது அன்பில்லை என்று சொல்லவில்லையே.இந்த காதலே எனக்கு இப்பொழுது காலில் கட்டியுள்ள விலங்கு போல இருப்பதாக சொல்பவள் கல்யாணம் என்ற பந்தத்தில் இப்பொழுது சிக்கி கொள்ள வேண்டாம் என்றுதான் யோசிக்கிறேன்.

இப்பொழுது இப்படி பேசும் நீ நாம் கல்லூரியில் படிக்கும் போது என்னைச்சுற்றி வந்தாயே, அப்பொழுதே சொன்னேனே எனக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஒரு வழி செய்யாமல் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது என்று சொன்னதற்கு நீ என்ன சொன்னாய் உங்களுக்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பதாக சொன்னாயே.

ஆம் சொன்னேன் அதற்காக இந்த நான்கு வருடங்கள் காத்திருந்துவிட்டேனே. அந்த வயதில் அப்படி ஒரு எண்ணம் வந்ததற்கு நம் இருவருடைய வயதின் உணர்ச்சியும் காரணமாய் இருந்திருக்கலாம்.இப்பொழுது நினைத்துப்பார்த்தால் இந்த நான்கு வருடங்களில் உங்களுடைய முன்னேற்றத்திற்கும்,என்னுடைய முன்னேற்றத்திற்கும் எத்தனையோ சாதித்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

ஒன்றும் பேசாமல் அமைதியாய் கடலலைகளை பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான் கண்ணன்.”ப்ளீஸ் கண்ணன் நான் ஒன்று கேட்கிறேன் பதில் சொல்லுங்கள். கல்லூரியை விட்டு வெளி வந்த நீங்கள் அதற்கு மேல் உங்களை முன்னேற்றுவதற்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா? கோபித்துக்கொள்ளாமல் பதில் சொல்லுங்கள்.

அதெப்படி வேலை கிடைப்பதற்கே இரண்டு வருடமாகிவிட்டது.இப்பொழுதுதான் கொஞ்சம் சம்பளம் அதிகமாகி இருக்கிறது. போகப்போக பதவி உயர்வு கிடைக்கும் சம்பளம் உயரும். தங்கைகள் இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த இரண்டு வருடங்களில் அவர்களுக்கு திருமணத்தை முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சரி இந்த நான்கு வருடங்களில் நாம் வாரமொருமுறை சந்தித்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.நீங்கள் வீட்டில் இருக்கும்போது என்னை நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா?

என்ன இப்படி கேட்கிறாய் எப்பொழுதும் உன் நினைவுதான்.

தயவு செய்து அறிவு பூர்வமாய் பதில் சொல்லுங்கள். நீங்கள் படிக்கும்போது நல்ல புத்திசாலியாக இருந்தீர்கள். உங்களுடைய அறிவைக்கொண்டு நன்றாக முன்னேறுவீர்கள் என்று நம்பினேன், ஆனால் ஏன் ஒரு வட்டத்துக்குள் முடங்கி சமபளம், வருசமானால் சம்பள உயர்வு என்று முடங்கி விட்டீர்களே,உங்கள் திறமைக்கு வெளி நாடோ, வெளி மாநிலத்திலோ வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு முறை நான் சொன்னதற்கு பார்க்கலாம் என்று சொல்லி விட்டீர்கள்.இதற்கு காரணம் நான் ஆக இருக்கலாமல்லவா”

கண்ணன் யோசித்தான். உண்மைதான் நான் “இவள் என் மீது காதல்” என்று சொல்லி என்னை வசிகரிக்கும் முன் வரை என்னுடைய சிந்தனை எப்படியாவது முன்னேறவேண்டும் என்றே இருந்தது. கூச்சப்படாமல் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தேன். படிக்கும்போதே எத்தனை தேர்வுகளை எழுதிகொண்டிருந்தேன். அதன் பிறகு எல்லா வேலைகளையும் விட்டு விட்டு அப்புறம் ஏன் இரண்டு வருடங்களை வேலை தேடி ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு, அடுத்து இரு வருடங்கள் கிடைத்தவரை சந்தோசம் என்ற மனப்பானமையாய், தலையை பிடித்து உட்கார்ந்து கொண்டான்.

சுகந்தி மெல்ல அவன் தோளை தொட்டு “ரிலாக்ஸ்” கண்ணன் உங்களுடைய முன்னேற்றத்தை தடுத்ததில் என் பங்குதான் அதிகம் என்று என் மனசுக்கு தோன்றி ஒரு வருடமாகிறது. நீங்கள் சாதிக்க கூடியவர்கள், ஆனால் அந்த வயதின் காரணமாக உங்களின் முன்னேற்றத்தை தடுத்துவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சியே என்னை வாட்டி எடுத்தது. நான் ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்கள் என்று நபுகிறேன்.இனிமேல் நம் இருவரையும் விலங்குபோல் இணைத்திருக்கும் இந்த காதல் என்ற பந்தத்தை விட்டு முதலில் வெளி வருவோம். நல்ல நண்பர்களாய் ஒருவருக்கொருவர் அணுசரணையாய் ஒவ்வொருவரின் முன்னேற்றத்தைப்பற்றி ஆலோசிப்போம். வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் கண்டபின் அன்றைக்கு என்ன சூழ்நிலையில் இருக்கிறோமோ அதன்படி முடிவெடுப்போம் என்ன சொல்கிறீர்கள்.நன்கு யோசியுங்கள். யோசிக்க நேரம் கொடுக்க கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள்.

கண்ணன் தலை குனிந்து உட்கார்ந்து பத்து நிமிடங்கள் ஓடியிருக்கும்,நிமிர்ந்தவன் முகத்தில் தெளிவு வந்திருந்த்து. உண்மைதான் சுகந்தி இப்பொழுது இந்த நிமிடத்திலிருந்து நாமாக ஏற்படுத்திக்கொண்ட இந்த கண்ணுக்கு தெரியாத விலங்கை உடைத்து விடுவோம். இனி நான் என்னுடைய வாழ்க்கையை சுதந்திரமாய் சிந்திப்பேன்.எதிர்காலத்தில் நிச்சயம் ஏதாவது சாதிப்பேன்.குரலில் மகிழ்ச்சி தொ¢ந்தது.

சுகந்தி மெல்ல ஒரு கவரை அவனிடம் நீட்டினாள்.முகத்தில் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் வாங்கி பார்த்தவன் கொஞ்சம் முகம் இருளடைந்து பின் பிரகாசமாய் “வாழ்த்துக்கள்” என்று சொன்னான்.

வெளிநாட்டில் வேலை கிடைத்தற்கான அந்த கடிதத்திற்கு இவன் ஏதாவது சொல்வானோ என எதிர் பார்த்த சுகந்தி “வாழ்த்துக்கள்” சொன்னவுடன் ம்கிழ்ச்சி அடைந்தாள்.

உங்களை ஏமாற்றிவிட்டேன் என்ற கோபமா?மெல்லிய குரலில் கேட்டாள். கண்ணன் சி¡¢த்தவாறு இல்லை சுகந்தி என்னைப்பற்றி நான் அறிந்துகொள்ள இன்று எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் ஒன்று உனக்கு வந்த கடிதத்தை பார்த்து ஒரு நிமிடம் வெட்கப்பட்டேன்,இந் நேரம் நானும் எங்கோ போயிருக்கவேண்டியவன் நான்கு வருடங்களை தேவையில்லாமல் கழித்து விட்டேன்.

உங்களால் முடியும் கண்ணன், எதிர்காலத்தில் கண்டிப்பாய் சாதிப்பீர்கள். அடுத்த முறை உங்களை சந்திக்கும்போது நீங்கள் கண்டிப்பாய் எங்கோ போயிருப்பீர்கள்.

அடுத்த முறை உன்னை சந்திக்கும்போது கண்டிப்பாய் சாதித்திருப்பேன், என்று எந்த விகல்பமும் இல்லாமல் கை குலுக்கி விடைபெற்றான் கண்ணன்.

Print Friendly, PDF & Email

5 thoughts on “காதலை சற்று தள்ளி வைப்போம்

  1. அன்புடையீர்,
    வணக்கம். காதலை தள்ளி வைப்போம். சிறுகதை வித்தியாசமான சிந்தனை. அருமை. பாராட்டுக்கள்.

    பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை

  2. அருமை.. வாழ்க்கையில் காதலின் உண்மை மற்றும் எதார்த்தத்தினை அழகாக சொல்லப்பட்டுள்ளது .. என்றும் மறவாத கதையாக அமைந்தது.. ஆசிரியருக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *