காதலென்பது காவியமானல்

0
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,509 
 

கழுத்தில் சுற்றியிருந்த மப்ளர் கொஞ்சம் இறுக்கவே அதைத் தளைர்த்தியவாறு நடந்து கொண்டிருந்தான் சங்கர். உடலைச் சுற்றி இறுகிப் பின்னியிருந்த கோர்ட், தலையை நெற்றிவரை மறைத்துக் கொண்டிருந்த குளிர்த் தொப்பி, கைவிரல்களை காப்பாற்றிக் கொண்டிருந்த கையுறை, காலிலிருந்த பூட்ஸ் என்று குளிரிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள அவன் அணிந்திருந்த கவசங்கள் பல.

இத்தனை கவசங்களுக்கிடையிலும் கொஞ்சமாய் வெளியே தெரிந்த மூக்கின் நுனி, காதின் ஓரங்கள் இன்னும் இருக்கின்றனவா? இல்லையா? என்று உறுதி செய்வது போல தொட்டுப் பார்த்துக் கொண்டான். ஆமாம் குளிரின் தாக்கத்தினால் அவை விரைத்துப் போயிருந்தன. அப்போது மாலை நான்கு மணிதான் இருக்கும், ஆனாலும் லண்டன் தெருக்களை அந்த விண்டர் காலத்து இருள் அப்படியே கவ்விப் பிடித்திருந்தது.

“சே, என்ன ஊரடா இது “. அரைக்கை சேர்ட்டுடன் சைக்கிளில் அழகாய்ப் பவனி வந்து கொண்டிருந்த அவனது தாய்நாட்டை விட்டு புலம் பெயர வைத்தது அவனது விதியா? காலத்தின் விளையாட்டால் விளைந்த வினையை எண்ணி நொந்தவாறே நடந்து கொண்டிருந்தான். சரியாக ஆறுமணிக்கு அவன் அந்த பெட்ரோல் பங்கில் வேலைக்கு நின்றாக வேண்டும். இன்று மனேஜரே பகல் ஷிப்ட் செய்து கொண்டிருப்பதால் ஜந்து நிமிடம் தாமதமானாலும் அவனுக்கு அர்ச்சனைதான்.

அவனது வேலைத்தளத்தை அடைய இன்னும் அரைமணி நேரமாவது எடுக்கும். பஸ்சில் சென்றால் பதினைந்து நிமிடங்களில் செல்லக்கூடிய இடத்துக்கு அவன் நடந்து நாற்பது நிமிடங்களில் செல்வான். அவனுடன் ஒன்றாக வேலைபார்க்கும் மற்றைய நண்பர்கள் அவனைக் கேலி செய்வதுண்டு.

ஆனால் அவனுக்கு தான் ஈழத்தை விட்டு வெளியேறும்போது தனது தந்தை சொன்ன இறுதி வார்த்தைகள் நேற்றுக் கேட்டததைப் போல காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. “சங்கர், நீ உன் தாய்மண்ணைத் துறந்து புலம் பெயரும் காரணத்தை மறந்து விடாதே. காலமும், சூழலும் உன்னை அந்நாட்டு வாழ்க்கை முறைக்கு மாற்றி விடக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆனால் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை மறந்து விடாதே. அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து அல்லாடும் உயிர்களுக்கு உதவும் வழிகளைத் தேடு ” ஆமாம் இந்த் அற்புத வார்த்தைகளைச் சொன்ன அப்பா மறைந்து ஒரு வருடமாகிறது.

அவருடைய இறுதிச் சடங்குகளைப் பற்றிய விபரங்களைக்கூட அவனது தம்பி பிரபு தொலைபேசியில் கூறியதைக் கண்ணீருடன் கேட்கக்கூடிய நிலையில் மட்டுமே அவன் இருந்தான்.

“என்ன சங்கர் எங்கே லேட்டாகி விடுமோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன், விரைவாக ஷிஃப்ட் ஜ டேக் ஓவர் பண்ணிக்கொள் ” என்ற அவனது மனேஜரின் குரலைக் கேட்டதும் தான் அவனையுமறியாமல் தான் வேலைத்தளத்துக்குள் நுழைந்து விட்டோம் என்பதை சங்கர் உணர்ந்தான்.

அவனது மனேஜர் குமாரும் ஈழத்தைச் சேர்ந்தவன் தான். பல வருடங்களுக்கு முன்னர் கல்வி கற்பதற்காக லண்டன் வந்தவன், இங்கேயே பிரிட்டிஷ் பிரஜையான ஒரு ஜரோப்பிய பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து இப்போ அவன் வேலைபார்த்த பெட்ரோல் பங்கிலேயே மனேஜராக பணிபுரிகிறான். அவனைக் கெடுபிடியானவன் என்று சொல்ல முடியாது இருந்தாலும், தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்னும் லட்சிய வேட்கை கொண்டவன், அதனால் கம்பெனி விதிகளை மிகவும் கடுமையாகக் கடைபிடிப்பவன். இது சங்கரோடு பணிபுரியும் மற்றையோருக்கு கெடிபிடி, அதிகார போதை போன்று தோற்றமளித்தாலும் சங்கருக்கு அவனது புரிந்திருந்தது.

இருக்கும். அந்த பெட்ரோல் நிலையத்தில் இரண்டு காஷ் டில்கள் (cash till) இருந்தது. அவனோடு மற்றைய காஷியராக ஒரு ஆபிரிக்க இளைஞன் பணிபுரிந்தான்.

பரபரப்பாக கஸ்டர்மர்கள் வந்து போய் கொஞ்சம் ஓய்ந்திருந்த வேளை, மணி மதியம் தாண்டி 2.30, ஒரு சிவப்பு நிறக்கார் மிகவும் பெரிய சத்தத்துடன் உள்ளே நுழைந்தது. அந்தக் காரின் முன் சக்கரம் ஒன்றிற்கு காற்றுப் போயிருந்ததால் அது அத்தகைய சத்ததை எழுப்பியது.

கார் நின்றதும் கதவு திறந்தது, அப்போ ! அழகிய மஞ்சள் வர்ணத்தில் சுடிதார் அணிந்த ஒரு இளம் ஆசியப்பெண் இறங்கினாள். அவளைப் பார்த்த சங்கரின் கண்கள் அப்படியே குத்திட்டு நின்றன, அவனது பார்வையை அந்த அழகிய வதனத்தில் இருந்து அகற்ற முடியவில்லை.

சுமார் 21 வயதிருக்கும், அவளது வாகுவான உடற்கட்டு அந்த மஞ்சள் நிற சுடிதாருக்காகவே வார்க்கப்பட்டதோ என்னும் ஆச்சரியப்படும் அளவிர்கு அந்தச் சுடிதார் அவளது உடலோடு ஓத்துப் போனது. அலையலையாய் பாயும் கூந்தல்.

விண்டர் காலமாக இருந்ததாலும் ஆத்வன் தனது கதிர்களை அழகாய்ப் பாய்ச்சிக் கொண்டிருந்தான். உள்ளே இருந்து பார்க்கும் போது அழகிய இளமால போன்று இருந்தாலும், கதவைத் திரந்து வெளியே போனதும் வெடவென்று உடலை நடுக்கும் குளிர். இது இயற்கை மனிதனிடமிருந்து கற்றுக் கொண்ட ஏமாற்று வித்தை போலும்.

குளிரிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள காரின் பின் சீட்டிலிருந்த தனது கோர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு, பரிதாபமான பார்வையுடன் பெற்றோல் நிலையக் கடையின் கதைவைத் திறந்து உள்ளே நுழைந்தாள் அந்தப்பாவை.

கேள்விக்குறியுடன் அவளை நோக்கின இரண்டு ஜோடிக்கண்கள், அதிலே ஒரு ஜோடிக்குச் சொந்தக்காரனான சங்கரின் மனதை அந்தப் பூவையின் வதனம் என்னமோ பண்ணியது.

“எனது காரின் வீலுக்கு காற்றுப் போய்விட்டது, அவசரமாக ஒரு இடத்துக்குப் போக வேண்டியுள்ளது, ஏதாவது ஹெல்ப் கிடைக்குமா?” என்று ஆங்கிலத்தில் ஆனால் அழாக்குறையாகக் கேட்டாள் அந்நங்கை.

வெளியே உடலை நடுக்கும் குளிரைப்பற்றி நன்றாய்த் தெரிந்ததாலோ என்னவோ அந்த ஆபிரிக்க இளைஞன் மெதுவாக தனது பார்வையை தனது வேலையின் பால் திருப்பினான், அதைப்புரிந்து கொண்ட சங்கர் ” கொஞ்சநேரம் நீ கஸ்டர்மர்சைக் கவனித்துக் கொண்டால் நான் சென்று பார்க்கிறேன்” என்று அந்த ஆபிரிக்க இளைஞனைப் பார்த்துச் சொன்னான்.

அவனும் தப்பித்தேன், பிழைத்தேன் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினான்.

தனது கோர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு அவளுடன் புறப்பட்ட சங்கரைப் பார்த்து நன்றி கலந்த புன்னகையுடன் ” தாங்ஸ் ” என்றாள் அந்தப் பெண்.

அப்போதுதான் அவள் சங்கரை நன்றாகப் பார்த்தாள். பொதுவான நிறம், கருகருவென்று வளர்ந்த முடி அழகாக பக்கவாரியாக வாரி விடப்பட்டிருந்தது. சிறிய மீசையுடன் ஒட்டி வைத்தாற்போன்ற குறுந்தாடி, மிகவும் ஆடம்பரமான உடைகளாக இல்லாவிட்டாலும், ஸ்மார்ட் ஆன உடைகள்.

காரின் அருகே வந்ததும் தான் அந்த ஆப்ரிக்க இளைஞனின் புத்தி சாதுர்யம் சங்கருக்குப் புரிந்தது, ஆமாம் அவனது முகத்தைச் சுள்ளென்று தாக்கிய அந்தக் குளிர்த்தாக்கத்தினால் ஏற்பட்ட ஞானம் அது.

ஆனாலும் நிலவே நேரில் வந்து உதவி கேட்கும் போது உதவுவது அவனது பாக்கியமல்லவா? என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.

” உன்னால் முடியுமா?” கொஞ்சம் அக்கறையுடனும், பயத்துடனும் வினவினால் அந்தப்பெண்.

” நோ ப்ராப்ளம் ” என்று சொல்லிக் கொண்டே விறுவென்று காரியத்தில் இறங்கினான் சங்கர். அவனது நெருங்கிய நண்பன் சுரேஷின் காருக்கு அவனுடன் சேர்ந்து பல சமயங்களில் வீலை மாற்றியது இப்போ அவனுக்கு கைகொடுத்தது.

குளிரினால் கைவிரைத்ததையும் பொருட்படுத்தாது ஒருவாறு சக்கரத்தை மாற்றி விட்டு, “வெகுசீக்கிரத்தில் இந்தச் சக்கரத்தை திருத்தி எடுத்துக் கொள்ளுங்கள் ” என்றவாறு சக்கரத்தை பூட்டில் வைத்து விட்டுத் திரும்பிய சங்கரை மிகவும் நன்றியுடன் பார்த்தன அந்தப் பூவையின் விழிகள்.

“தாங்க்யு வெரி மச், ஜ ஆம் பிருந்தா ” என்றவளைப் பார்த்து

“நான் சங்கர் ” என்றான் சங்கர்

” உனது தாய்நாடு எது? ” என்ற கேள்வியைத் தொடர்ந்து வந்த அவனது பதிலைக் கேட்டதும் அவளது முகமும் ஆச்சரியத்தால் மலர்ந்தது, பின் கொஞ்சம் பிள்ளைத் தமிழில்

” என்னோட பேரண்ட்ஸ்ம் யாழ்ப்பாணம் தான், ஆனா நான் பிறந்தது யு கே யில் ” என்றாள் பிருந்தா

” ஓ அப்படியா ” என்ற சங்கரின் வதனத்தில் ஒரு மகிழ்ச்சி கலந்த புன்முறுவல் பூத்தது.

அதன் பின்பு வழமையான பை சொல்லி விட்டு அந்த நிலவு லண்டன் என்னும் மேகமூட்டம் நிறைந்த வானுக்குள் மறைந்து கொண்டது.

அன்றிரவு சங்கருக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அவனது ரூம் மேட் சந்திரன் ” டேய் சங்கர், ஏண்டா என்ன ப்ராப்ளம், படுத்தவுடனே குறட்டை விடுவாயே ! வேலையில ஏதாவது பிரச்சனையா? ” என்றான்.

” இல்லேடா ஏதோ நினைவுகள் ” என்றவன் வலுக்கட்டாயமாக தூக்கத்தை இழுத்து வந்து கண்களுக்குள் புகுத்திக் கொண்டான்.

இப்படியே வாரங்கள் இரண்டு ஓடி விட்டன, சங்கரின் மனதில் கொழுந்து விட்டெரிந்த பிருந்தாவின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக நீறு பூத்த நெருப்பாக மாறிக் கொண்டிருந்தது.

அன்று சங்கருக்கு லீவு, ஷாப்பிங் செய்வது அவனது முறை என்பதால் ஷாப்பிங் சென்டருக்குள் சென்று சாமான்களை அள்ளி ஷாப்பிங் ட்ராலியில் போட்டுக் கொண்டே வந்தான், காய்கறி செக்ஷனுக்குள் நுழைந்து வெங்காய மூட்டையைத் தூக்கியவன் திரும்பும்போது யாருடனோ மோதவும், திரும்பி “சாரி” என்றவனின் கண்களின் முன்னே மீண்டும் நிலவு வந்து குதித்தது.

ஆமாம் அவன் முன்னால் பிருந்தா நின்று கொண்டிருந்தாள். சுடிதார் விடுதலை பெற்றுச் சென்று ஜீன்ஸ் அவளுடலைத் தழுவிக் கொண்டிருந்தது.

” ஓ நீங்களா ? ஹவ் ஆர் யூ ? ” என்றாள்

” பரவாயில்லை, நீங்கள் எப்படி …. இங்கே … ஷாப்பிங் … ” தயங்கித் தயங்கி வந்தது சங்கரின் வார்த்தைகள்.

“ஓ” அதுவா நான் இங்கே பக்கத்திலேதன் இருக்கிறேன். ஒரு ப்ரண்டோட இருக்கிறேன், என்னோட பேரண்ட்ஸ் பேர்மிங்காம்ல இருக்காங்க, இன்னைக்கு குக்கிங் என்னோட டர்ன், அதுதான்….. ” என்றாள் பிருந்தா.

ஆ அங்கேயும் இதே கேஸா என எண்ணிய சங்கரின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“என்ன சிரிக்கிறீங்க ?” என்றாள் பிருந்தா

“இல்லே இன்னைக்கு ரெண்டு பேருமே ஷாப்பிங் செய்யாவிட்டா ரெண்டு பேரோட ப்ரெண்ட்ஸ¤மே பட்டினி ” என்றான் சங்கர் மீண்டும் சிரிப்புடன்.

தானும் ஒரு அழகிய புன்னகையை வீசி விட்டு ஓரக் கண்களால் சங்கரை பார்த்தபடியே,

“அப்போ ஒண்ணு செய்வோமே! ரெண்டு பேருமே நம்மோட ப்ரண்ட்ஸ்க்கு போன் போட்டு இன்னைக்கு நாம் வெளியே சாப்பிடப் போறோம்னு சொல்லிடுவோமே !” என்றாள் பிருந்தா

கொஞ்சம் திகைப்புடன் நோக்கிய சங்கரைப் பார்த்து திரும்பவும் பிருந்தா,

“அன்னைக்கு நீங்க செஞ்ச ஹெல்ப்க்காக உங்களுக்கு ட்ரீட் குடுக்க ஆசைப்படுகிறேன் உங்களுக்கு ஒப்ஜெக்ஷன் இல்லேண்ணா …. ” தயங்கினாள்

கரும்பு தின்னக் கூலி வேணுமா?, தூரத்தேயிருந்து ரசிச்சுக்கிட்டிருந்த நிலவு தானா இறங்கி வந்து உன் வீட்டு முற்றத்திலே காய்கிறேன் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவனுக்கு.

அந்த இந்திய உணவகத்தில் அன்று கூட்டம் அதிகமாக இருக்கவில்லை. ரெஸ்டாரெண்டுகளுக்கே உரிய அந்த அழுது வடியும் விளக்குகளின் மத்தியில் இருந்து இருவரும் பேசியபடியே உணவருந்திக் கொண்டிருந்தனர்.

சங்கர் புலம் பெயர வேண்டி வந்த காரணத்தைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினாள் பிருந்தா. பிருந்தா கம்பியூட்டர் என்ஜினியரிங் படித்து முடித்து நல்ல சம்பளத்தில் வேலை பார்ப்பதை அறிந்த சங்கரின் மனம் ஏதோ எட்டாப்பழத்துக்கு ஆசைப்படுவது போன்ற உணர்ச்சிக்கு உள்ளாகியது.

இருவரும் மனம் திறந்து பேசினார்கள். தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நேரம் போவதே தெரியாமல் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

“ஓ சங்கர் இட் இஸ் டூ லேட், நாளைக்கு கலையில வேலைக்கு கிளம்பியாகணும், புறப்படுவோமா ? ” என்றாள் பிருந்தா.

வெயிட்டரிடம் பில்லுக்குச் சைகை காட்டினான் சங்கர், பிலைக் கொண்டு வந்ததும் அதைத் திரந்து பார்த்து விட்டு தனது பாக்கெட்டில் கையைத் திணித்தான், அப்போது அவ்னது கையை மிருதுவான கரங்கள் தடுத்தன,

“நோ சங்கர் இது என்னோட விருந்து ஐ வில் பே ” என்றாள் பிருந்தா.

தனது நிதி நிலமை தெரிந்ததாலும், அவளின் வற்புறுத்தலினாலும் அவளின் வழியிலேயே விட்டு விட்டான் சங்கர்.

“வீ வில் மீட் எகெய்ன் ” என்று சொல்லி விட்டு அவனைத் தனது காரில் அவனது வீட்டின் முன்னால் இறக்கி விட்டு விட்டுச் சென்றாள் பிருந்தா.

உள்ளே சென்றதும் கேள்விக்கணைகளால் துளைத்தான் சுரேஷ், வேறு வழியின்றி சகலதையும் அப்படியே ஒப்புவித்தான் சங்கர்.

“ஆக மொத்தம் மச்சான் காதல் வலையில் விழுந்து விட்டார், இனியென்ன கொள்கையெல்லாம் காற்றிலே பறக்கும் நூலறுந்த பட்டம் தான் ” என்றான் சுரேஷ் ஏளனத்துடன்.

கட்டிலில் படுத்து உருண்டு கொண்டிருந்த சங்கரின் மனதில் ஆயிரம் எண்ணங்கள், அவளை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, ஆமா நான் அவளைக் காதலிக்கிறேன். அந்த நினைவு வந்ததுமே அவனது நெஞ்சில் வேறொரு நினைவு முள்ளாகக் குத்தியது.

வசதியாகப் பிறந்து வசதியாக வாழ்பவள் பிருந்தா, கைநிறையச் சம்பாதிக்கிறாள். அவளுக்கோ எந்த விதமான பொறுப்புக்களோ குடும்பச் சுமையோ இல்லை, ஆனால் தன்னுடைய நிலை……

யூனிவர்சிட்டியில் படிக்கும் தம்பி, கலியாணத்துக்காக தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அக்கா, இவர்களை வைத்துக் கொண்டு ஏக்கங்களை மட்டும்ம் சுமந்து கொண்டு வாழும் அம்மா. இத்தனை பெரிய சுமைகளையும் காதல் என்னும் பெயரினால் அந்த துள்ளித்திரியும் இளம் மானின் கழுத்தில் மாட்டிவிடலாமா ? துள்ளித்திரியும் மான் துவண்டு விடாதா?

நினைவுகளின் சுழலில் சிக்கி கரையேற முடியாமல் தவித்ததினால் வந்த களைப்பினால் விழிகளை உறக்கம் தழுவியது. சங்கரைப் போலவே பிருந்தாவும் கட்டிலில் புரண்டு கொண்டு தானிருந்தாள். அவளயுமறியாமல் சங்கரின் முகம் அவள் இதயத்தில் நிழலாய்ப் படிந்து விட்டது. இத்தனை காலமும் அவளது வாழ்க்கையில் எத்தனையோ இளைஞர்களைக் கடந்திருக்கிறார்கள் ஆனால் அவர்கள் ஒருவரும் அவள் இதயத்தில் இதுவரை மீட்டியிராத ராகத்தை சங்கர் மீட்டி விட்டான்.

இதுதான் காதலா? என்ன தான் காதல் வயப்பட்டு விட்டேனா ? தன்னுடைய சந்திப்பையும் அதைத் தொடர்ந்தி இன்றைய மாலையின் நிகழ்வுகளையும் அவள் தோழி ஷெலியிடம் சொன்ன போது

“திஸ் இஸ் டெவினிட்லி லவ் (இது நிச்சயமாகக் காதல் தான்) ” என்றே சொல்லி விட்டாள்.

சங்கரை அடுத்த தடவை சந்திக்கும் போது தனது காதலை வெளிப்படுத்தி விட்டால் அவன் நிச்சயம் தனது காதலையும் வெளிப்படுத்தி விடுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

ஆனால் அது சுயநலமா? என்னும் கேள்வி அவள் மனதை ஒருபுறம் அரித்துக் கொண்டிருந்தது. சங்கரை நான் காதலிக்கிறேன், ஆனால் அவன் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுவே எனது ஆசை. அவனை நான் மணந்து கொள்வதன் மூலம் அந்தச் சந்தோஷத்தை அவனுக்கு நான் கொடுக்க முடியுமா?

அவன் தனது பொறுப்புகளை நிரைவேற்றும் போது பொறுமையாக அதற்கு ஒத்துழைப்புக் கொடுப்பது என்னால் முடிந்த காரியமா? எனது பெற்றோரின் கெளரவம் பார்க்கும் மனப்பான்மை அவனை தாழ்வு நிலைக்குத் தள்ளி விடாதா? அவன் காதலிக்கும் பெண்ணை மணந்து கொள்வான் ஆனால் மகிழ்ச்சியாக வாழும் சூழல் அவனுக்குக் கிடைக்குமா?

எது யதார்த்தம் ?

நினைவுச் சுழலுக்குள் சிக்கி நீச்சலடித்த களைப்பு நித்திராதேவியின் பிடிகளுக்குள் அவளையும் அமுக்கியது.

ஒருவாரம் கழிந்து கபேயில் இருவரும் சந்தித்து காப்பி அருந்திக் கொண்டிருக்கும் வேளை,

“பிருந்தா, எமது உறவு நட்பு என்னும் நிலையைத் தாண்டிக் காதலினுள் விழுந்து விடுமோ என அஞ்சுகிறேன், ஏனெனில் எனக்காக ஊரில் ஒரு பெண் காத்திருக்கிறாள் ” பல்லைக் கடித்தவாறு பொங்கும் கண்னீரை அடக்கிக் கொண்டு பச்சைப் பொய்யை அவிழ்த்து விட்டான் சங்கர்.

” கண்களில் துளிர்க்கும் நீரைச் சுண்டி விட்டவாறு ” ஹேய் சங்கர், எத்தனை ஒற்றுமை பார்த்தாயா? நானும் இதைத்தான் உன்னிடம் சொல்ல எண்ணினேன் எனக்காக என் பெற்றோர் ஒரு பையனைப் பார்த்து அறிமுகம் செய்து விட்டார்கள், எனக்கும் பிடித்தி விட்டது…” மீண்டும் கண்னீரை மறைப்பதற்காக மறுபுறம் திரும்பிக் கொண்டே கூறினாள் பிருந்தா?

“பிருந்தா பரவாயில்லையே நாம் எப்போது நல்ல நண்பர்கள் தானே, எனக்கு உன் திருமணத்துக்கு அழைப்பிதழ் கிடைக்குமல்லவா? ” மீண்டும் ஒரு மந்தகாசப் புன்னகை

“நிச்சயமாக, அதே போல உனக்கும் என்ன உதவி வேண்டுமானாலும், பைனான்ஸ் உட்பட இந்தத் தொழி இருப்பதை மறந்து விடாதே” என்றாள் பிருந்தா.

இருவரும் பிரிந்து எதிர்த் திசைகளில் நடந்தார்கள், ஆனால் அவர்கள் இதயங்கள் மட்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருந்ததால் மிகவும் சிரமப்பட்டு விடுபட்டுக் கொண்டிருந்தன.

கண்ணீரைக் கைகளால் சுண்டு விட்டுக் கொண்டே நடந்தன அந்த மகத்தான உள்ளங்கள். கதலென்பது காவியமவதற்கு அவை நிச்சயம் திருமணத்தில் முடிய வேண்டும் என்பது கட்டாயமல்ல, காதலின் வெற்றி காதலர்களின் தன்னலமற்ற அன்பிலேயே தங்கியுள்ளது.

– சத்தி சக்திதாசன் [sathnel.sakthithasan@bt.com] (மே 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *