காதலுக்கு கண் இல்லை

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 12,149 
 

சுசீந்திரம்.

சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பெயர்போனது. தமிழ்நாட்டிலேயே மிக உயரமான ஹனுமார் அங்குதான் உள்ளார்.

அந்த ஊரில் திருமணமான கோகிலா, தான் உண்டாகியிருந்தபோது தினமும் காலையில் குளித்துவிட்டு மடியாக ஆஞ்சநேயரை சுத்தி சுத்தி வந்தாள். அதன் பலனாக அவளுக்கு ஒரு அழகான ஆண்குழந்தை ஹனுமந்த் ஜெயந்தியன்று காலை ஒன்பது நாற்பதுக்கு பிறந்தது. சுகப்பிரசவம்.

மிகவும் பூரித்துப்போன கோகிலாவின் கணவன், உடனே ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போய்விட்டு குங்குமம் ஒட்டிய துளசிப் பிரசாதத்துடன் வீட்டிற்கு ஓடிவந்து குழந்தைக்கு ஹனுமந்த் என்று பெயர் சூட்டினார்.

பின்னர் அந்தப் பெயரையே புண்ணியாஜனத்தன்று குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்தனர்.

வீட்டில் ஆஞ்சநேயர் புகழ்பாடி குழந்தையை கவனத்துடன் வளர்த்தனர். அதன் விளைவாக முட்டி போட்டுத் தவழ்ந்து வீட்டுக் கூடத்தில் விளையாடும்போதுகூட ஆஞ்சநேயர் போல வாயை உப்பி கொழக்கட்டை அடைத்த கன்னம்போல் வைத்துக்கொண்டு வீட்டினுள் வளைய வருவான் ஹனுமந்த்.

“வச்ச பேருக்கு ஏற்ற மாதிரி குழந்தை நடந்துக்கிறான் பாரு” என்று சொந்த பந்தங்கள் விளையாட்டாகக் கூடிநின்று சந்தோஷத்துடன் கும்மியடித்தனர்,

“போனவாரம் தஞ்சாவூர்லேர்ந்து குழந்தையின் மாமா கோகுல் வந்தப்ப வாங்கிவந்த நீளமான ப்ளாஸ்டிக் கிளுகிளுப்பையைக்கூட கதை மாதிரி
ஜோரா தோள்மேல போட்டுக்கிட்டு ஹனுமார் மாதிரி வாயை உப்பி வைத்துக்கொண்டு விளையாடினான்” என்று ரொம்பப் பெருமையாக ஹனுமந்த்தின் அம்மா கல்யாணி பீற்றிக் கொண்டாள்.

குழந்தைக்கு நான்கு வயதாக இருக்கும்போது “ஹனுமந்து மாமாக்கு உம்மாச்சி ஸ்லோகம் சொல்லிக்காமி” என்றால், எந்த உம்மாச்சி என்று கேட்காமல் “புத்திர் பலம் யாஷோதைர்யம்…” என்று ஆஞ்சநேயர் ஸ்லோகம்தான் குழந்தை சொல்லிக் காண்பிப்பான்.

இப்படியாகப் பிறந்ததிலிருந்து அவனுக்கும் ஹனுமாருக்கும் உண்டான நெருக்கமான பந்தம், அவன் ஸ்கூல் படிக்கும்போதும் தொடர்ந்தது. பான்ஸி ட்ரெஸ் காம்ப்பெடிஷன் வந்தால், ஒரு நீளமான தாம்புக் கயிறை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு அதை பின்பக்கம் சிறிது தூரம் வால் விட்டு, தன் வாயைச் சுற்றி சிவப்பு கலரில் பெயிண்ட் அடித்துக்கொண்டு, கன்னத்தை உப் என்று பண்ணிக்கொண்டு ஏராளமான மேக்கப்புடன் காமப்பெடிஷனுக்கு தயாராகி விடுவான் ஹனுமந்த். வருடா வருடம் இதையே செய்து கொண்டிருப்பான். எனினும் அவனுக்கு ஆஞ்சனேயர் வேடம் அலுக்காது.

படிப்பில் எப்போதும் திறமைசாலியாக விளங்கினான். பதினெட்டு வயதில் கல்லூரியில் படித்தபோதும், வாலிப வயதில் அழகு மயில்களைப் பார்க்காது, படிப்பில் மட்டுமே சிறந்த கவனம் செலுத்தி, ஆஞ்சநேயர் பக்தனாகவே தொடர்ந்தான்.

பக்த ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர், மலைதூக்கும் ஆஞ்சநேயர் என்று தேடித்தேடி விதவிதமான ஆஞ்சனேயர் கோவில்களுக்கு சென்று தரிசித்தான்.

பிரதி சனிக்கிழமைகளில் உபவாசம் இருப்பது; அன்று ஏதாவது ஒரு ஆஞ்சநேயருக்கு வெண்ணைக் காப்பு சார்த்துவது; மாதம் ஒரு சனிக்கிழமை 108 வடமாலை சார்த்துவது என்று கிட்டத்தட்ட ஆஞ்சநேயருக்குள்ளேயே ஐக்கியமானான் என்றால் அது மிகையல்ல.

அவனுடைய நண்பர்கள், “ஹனுமந்து பார்த்துடா, ஆஞ்சநேயர் நெஞ்சைக் கிழித்து காண்பிக்கிற படத்தில் எல்லாம், காலண்டர்காரங்க இனிமே உன்னைப் போட்டுடப் போறாங்க” என்று கலாய்த்தார்கள்.

தான் சம்பாதிக்கும்போது ஒருகார் வாங்கினால் ‘மாருதி’ கார்தான் வாங்க வேண்டும், அதுதான் ஹனுமார் கார் என்பான்.

இதைவிடக் கொடுமையான விஷயம் என்னவென்றால், ஜானகிராமன் கல்யாணராமன் என்ற பெயர் கொண்டவர்களிடம், அளவுக்கு அதிகமான மரியாதையுடன் நடந்து கொண்டான். சீதாராமன் என்று பெயர் இருந்தால் இன்னும் கொஞ்சம் அதிக பயபக்தியுடன் காலில் விழுந்து சேவித்துவிடுவான். ரொம்ப வயதானவர்களாக இருந்தால் அபிவாதையும் சொல்லிவிடுவான்.

அது ஏண்டா சீதாராமன் பெயர்ல அவ்வளவு பக்தி என்று கேட்டால், “அவா பெயர்ல தாயாரே இருக்காளே” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு பக்திரசம் மேலோங்க சொல்லிப் பூரிப்படைவான்.

நன்கு படித்ததினால், ஹனுமந்துக்கு சென்னையில் ஒரு புதிய மல்டிநேஷனல் ஐடி கம்பெனியில் மெரிட்டில் நல்ல வேலை கிடைத்தது. தினமும் கம்பெனிக்கு போகும் வழியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களை தரிசனம் செய்துவிட்டுத்தான் செல்வான். வேலையில் திறமையாக செயல்பட்டதால் கம்பெனியில் ஹனுமந்த் புகழ் ஓங்கியது. அதன் எம்டி இவனது திறமைக்கு மதிப்பளிக்கும் விதமாக சேர்ந்த ஒரு வருடத்திலேயே ஒரு டிப்பார்ட்மெண்ட்டுக்கு ஹெட்டாகப் போட்டு, அதற்கென ஒரு நல்ல டீமை புதிதாக வளர்க்கச் சொன்னார்.

அப்போது நேர்முகத்தேர்விற்கு வந்த பலரில் ஒருத்திதான் பவித்ரா. அவள் கெட்டிக்காரி. மெரிட்டில் ஹனுமந்த் டீமில் சேர்ந்தாள். ஹனுமந்தும், பவித்ராவும் ஒரு நல்ல புரிதலுடன் திறமையாக பணியாற்றினார்கள். வேலை நிமித்தமாக அடிக்கடி சேர்ந்து காணப்பட்டார்கள்.

ஹனுமந்த் மேன்ஷனில் தங்கியிருப்பதால், அவனுக்கும் சேர்த்து தினமும் பவித்ரா கொண்டுவரும் மதியச் சாப்பாட்டை இருவரும் பகிர்ந்து உண்டார்கள். வேலையையும் தாண்டி ஹனுமந்துக்கு பவித்ராவிடம் நெருக்கம் அதிகமாயிற்று.

சிறுவயதிலிருந்தே ஆஞ்சநேயர் பக்தனாகவும், ஒழுக்க சீலனாகவும் வளர்ந்த ஹனுமந்தின் தேஜஸ் பவித்ராவை அடித்துப் போட்டது நிஜம்.
குடி, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் அற்ற அவனின் பண்பாடு அவளுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. .

பவித்ராவின் அசரவைக்கும் அபரிதமான அழகு, எதையும் சட்டென்று புரிந்துகொள்ளும் புத்திசாலித்தானம், அளவான பேச்சு, அழகான சிரிப்பு அனைத்தும் ஹனுமந்துக்கும் மிகவும் பிடித்து விட்டது.

எதுக்காக நடுவில் சனி, ஞாயிறு வருகிறது என்று இருவரும் அலுத்துக் கொண்டார்கள்.

ஹனுமந்தின் ஆஞ்சநேயர் பக்தி, பவித்ராவின் வருகையால் மங்கத் தொடங்கியது. ஆனானப்பட்ட விஸ்வாமித்திரரே ஒரு பெண்ணின் வருகையால் தன் தவத்தையே கலைத்தபோது, பாவம் நம்ம ஹனுமந்த் எம்மாத்திரம்? ஒரு பெண்ணின், அதுவும் ஒரு அழகிய பெண்ணின் அருகாமையும்; அன்பும், வாஞ்சையும்…. ஹனுமந்த் அவளிடம் சொக்கிப் போனதில் வியப்பில்லை. அவன் மிகவும் மாறிவிட்டான்.

ஹனுமந்த் கம்பெனியில் கார்லோன் போட்டு அதில் ஒரு அழகிய சிறிய
மாருதி காரை வாங்கிக் கொண்டான். பவித்ரா சொன்ன கலரைத்தான் தேர்வு செய்தான். தினமும் அவளை பிக்கப் செய்துகொண்டுதான் கம்பெனிக்கு வருவான். போகும்போது ட்ராப் செய்துவிட்டுப் போவான்.

ஒரு கட்டத்தில் பவித்ராவைக் கேட்காமல் எதையும் செய்ய மாட்டான் என்கிற நிலைக்கு வந்தான். வேலையில்கூட அவளது வேலைகளை இவன் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து கொடுப்பான்.

இவர்களது நெருக்கத்தைக் கண்ட சக ஊழியர்கள் முதலில் இவர்களைப்பற்றி கசமுசாவென பேசத் தொடங்கினர். அதன்பிறகு பவித்ரா-ஹனுமந்த் பற்றிய கிசுகிசுக்கள் அதிகம் ரெக்கை கட்டிப் பறந்தன.

ஒரு சந்தர்ப்பத்தில் ஹெச்.ஆர் மனேஜர், இவர்களின் நெருக்கத்தைப்பற்றி எம்டி யிடம் எடுத்துச் சொன்னபோது அவர் “புல்ஷிட்…தே ஆர் இன் த சேம் டீம். ஆல்ஸோ இட் இஸ் தேர் பர்சனல் மேட்டர். ப்ரொடக்டிவிட்டி இஸ் ஆல்வேஸ் குட். வாட் இஸ் யுவர் ப்ளடி ப்ராப்ளம்?” என்று கோபத்துடன் கத்தினார்.
. .
அதற்கு ஹெச்.ஆர் மனேஜர், “நோ ஸார் த ரியல் ப்ராப்ளம் இஸ்….” என்று ஏதோ சொல்ல வந்தவரை இடைமறித்து, “பெட்டர் யு மைன்ட் யுவர் பிஸ்னஸ்” என்று ஸ்நப் செய்து அனுப்பி விட்டார்.

பொதுவாக மல்டி நேஷனல் ஐடி கம்பெனிகளில், எந்த ஆணும் தன்னுடன் அதே கம்பெனியில் வேலை செய்யும் எந்தப் பெண்ணுடனும் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், அந்தப்பெண் எழுத்து மூலமாகப் புகார் அளிக்காதவரை அவர்களைப்பற்றி கண்டுகொள்ளவே மாட்டார்கள். அதிலும் அவர்களின் ப்ரொடக்டிவிட்டி நன்றாக இருந்தால் வாயே திறக்க மாட்டார்கள்.

ஹனுமந்த்-பவித்ராவின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் சென்னை சில்க்ஸ் தீயாக பற்றிக் கொண்டது.

அது ஒரு திங்கட்கிழமை காலை. ஒன்பது மணி.

எப்போதும்போல் கம்பெனி மெல்ல இயங்கத் தொடங்கியிருந்தது.

ஹெச்.ஆர் மேனேஜர் தன் கையில் ஒரு பிரிண்ட் அவுட்டை எடுத்துக்கொண்டு எம்டியைப் பார்க்க ஓடினார்.

எம்டியின் கேபினுக்குள் பதட்டத்துடன் நுழைந்து, “சார்…..ஹனுமந்த் எலோப்டு வித் பவித்ரா லாஸ்ட் ப்ரைடே நைட். ஆல்சோ தே ஹாவ் ரிசைண்டு. நவ் தே ஆர் நாட் இன் அவர் ஸ்டேட்.” என்று தனக்கு வந்த இ-மெயிலைக் காண்பித்தார்.

எம்டி நிதானமாக மெயிலைப் படித்துப் பார்த்துவிட்டு அதை திருப்பிக் கொடுத்தார்.

கோபமோ, வெறுப்போ இல்லாமல் அமைதியாக “ஓகே… நோ இஷ்யூஸ்….கெட் ஸ்யூட்டபிள் ரீப்ளேஸ்மென்ட்ஸ் பார் போத்” என்றார்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் கம்பெனியின் ரிசப்ஷனில் டீசண்டாக உடையணிந்த ஒருத்தன் “என்னங்கடா மயிரு, நீங்க கம்பெனி நடத்துறீங்களா, இல்ல மாமா வேல பாக்குறீங்களா? எனக்கு நியாயம் கிடைச்சாகணும்…. நான் போலீஸுக்கு போவேன்” என்று உரத்த குரலில் சத்தம்போட, சத்தம்கேட்டு கேபினைவிட்டு வெளியே விரைந்துவந்த எம்டி, அங்கு கையைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்த ஹெச்.ஆர் மனேஜரிடம், “ஹூ இஸ் ஹி? வொய் இஸ் ஹிஸ் ப்ளடி கம்மோஷன்?” என்றார்.

“சார்…. ஹி இஸ் பவித்ராஸ் ஹஸ்பெண்ட்.”

Print Friendly, PDF & Email

3 thoughts on “காதலுக்கு கண் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *