கரைகள் தேடும் ஓடங்கள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 12,397 
 

மடத்தடிச் சந்தியிலிருக்கும் சமாதிப் பிள்ளையார் கோயிலில், ‘இன்றைய எங்கள் பயணம் எந்தவொரு பிரச்சினையுமில்லாமல் முடியணும்டா சாமி’ என்று மானசீகமாக வேண்டிவிட்டு அருகிலிருக்கும் பழக்கடைகள் மலர்ச்சாலைகளையெல்லாம் தாண்டிச் சற்றுத்தள்ளியிருந்த பஸ்தரிப்பில் போய் நான் நின்றபோது என்னை உரசுவதுபோல வந்து க்ரீச்சிட்டு நின்றது அந்தப் புத்தம்புதுக் கருநீலநிற சொகுசுக் கார்.

ட்ரைவர் ஸீட்டில் இருந்து என்னை உரிமையோடு அழைத்தவனைப் பார்த்ததும் மறுப்பேதுமின்றி கதவைத்திறந்து முன்புற ஆசனத்தில் ஏறிக்கொண்டேன். பஸ்தரிப்பில் நின்றிருந்த பலரின் பார்வை முதுகிலே ஊசியாய்க் குத்தியது. அந்த ஏஸிக் காரினுள்ளே அமர்ந்ததும் வேறோர் உலகத்திற்கு வந்துவிட்டது போலிருந்தது எனக்கு. வருடக்கணக்காகப் பழகிய தூசுபடிந்த சுற்றுவட்டத்து வீதிகளெல்லாம் கனவில் வரும் காட்சிபோல பளிச்சென்று தோன்றியது.

‘என்ன புதுக்காராயிருக்கு…? காரை மாத்திட்டீங்களா இல்ல உங்க ஆளையே மாத்திட்டீங்களா?’

‘கேள்வியைப் பாரு! அந்தப் பழைய காரை வித்தாச்சு. இது போன புதன்கிழமைதான் கஸ்டம்ஸ்லருந்து எடுத்தது. எப்பிடி நல்லாருக்கா?’ என்று ஆவலுடன் கேட்டான் அவன்.

‘ நல்லாருக்கு. அதுசரி, காரை எடுத்திட்டு வந்திருக்கீங்களே கார்லயே அங்க போகப்போறமா என்ன?’

‘ஓமோம், கடலுக்குள்ளால ரோட் ஒன்டு கண்டு பிடிச்சிருக்காங்களாம். அதாலேயே ஓட்டிக்கிட்டே போனா நேராய்ப் போய்ச்சேர்ந்திருவோம். ஆளைப்பாரு! இன்டைக்கு சனிக்கிழமை. பொஸ்ஸும் வெளிநாட்ல. இன்டைக்கு இரவுதானே நம்ம பிரயாணம்.. அதுதான் சும்மா காரை எடுத்துட்டு வந்தேன். அதிருக்கட்டும் பாவாடை, தாவணி, தலையில பூ, கையில கூடை.. சும்மா சொல்லக்கூடாதுடா எதை உடுத்தினாலும் உனக்கு அழகாவே இருக்குடா ராஸ்கல். இன்னும் நீ கோயிலுக்கெல்லாம் வாறியா?’

‘அதெல்லாம் இருக்கட்டும.; உண்மையில நாம இன்றைக்கு இரவு போறமா இல்ல போனமுறை மாதிரி இழுபறிதானா? காரை வேற கொண்டு வந்திருக்கீங்க. நம்ம சாமானெல்லாம் எங்க?’

‘அதெல்லாம் நிலாவெளியில ஒரு வீட்டுல நேற்றே ரெடி பண்ணி வச்சிட்டேன். காரை பீச் ஹோட்டல்ல பார்க்பண்ணி லொக்செய்துட்டு கீயைக் கொடுத்திட்டுப்போய் போட்ல ஏறவேண்டியதுதான். ரஞ்சித் காலைல பஸ்பிடிச்சு வந்து எடுத்திட்டுப் போவான்.?’

‘ஐயோ! அந்த ரஞ்சித்துக்கும் விஷயத்தைச் சொல்லிட்டீங்களா? பொஸ்ஸுக்கு மட்டுந்தான் சொல்லப்போறதா எனக்கிட்ட சொன்னீங்க?’

‘ ரஞ்சித்துக்கு நான் மட்டும் போறதாத்தான் சொன்னேன். நான் போனா என்னோட வேலை அவனுக்குத்தானே? அதனால நிச்சயம் யாருகிட்டயும் சொல்ல மாட்டான். பொஸ் நேற்றுத்தான் மக்காவுக்குப் போனாரு. ஏயாபோர்ட்ல வச்சு அவருகிட்ட நம்ம விசயத்தை விளக்கமாகச் சொன்னேன். முதல்ல அதிர்ச்சியாகிப் பிறகு மிச்சம் கவலைப்பட்டாரு. என்னை விஷ் பண்ணிக் காசும் கொஞ்சம் தந்தாரு. எல்லாத்தையும் ரஞ்சித்துக்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிட்டுப் போ என்றாரு.’

‘நீங்க இவ்வளவு றிஸ்க் எடுத்து நாம இப்படிப் போகத்தானா வேணும் மார்க்? இதெல்லாம் என்னாலதானே கஷ்டம். நான் வரல்ல மார்க்!’

‘சரி, வரலண்டா இறங்கிப் போ!’ என்றான் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு.

அதை உண்மையாகச் சொன்னானா இல்லை நடிக்கிறானா என்று தெரியாதபடி இருந்தது அவனது முகபாவம். ஆனாலும் எனக்குள்ள ரோசத்தை உடனடியாக நிரூபிக்க விரும்பி இறங்கிச் செல்வதற்காக கதவின் திருகியைக் கோபத்தோடு திருப்பினேன். ஆனால் எவ்வளவு முயன்றும் திறக்கவே முடியவில்லை.

‘ ஏய்; சும்மா பகிடிக்குடா! நான் சொன்னா உடனே நம்பிடுவியா நீ? ஓகே ஷேல்வீ கோ டு நிலாவெளி பீச் றைட் நவ்?’ என்று என்னிடம் கேட்டுக்கொண்டே செல்போனில் யாருக்கோ கோல் செய்தான் அந்தக் குறும்புக்காரன் மார்க் ஆன்டனி கெமிலஸ்.

அதுதான் அவனது முழுப்பெயர். அவனுடைய பெயரைப் போலவே அவனும் படு ஸ்டைலாகவும் ஸ்மார்ட்டாகவும் இருப்பவன்தான். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு திருகோணமலை அனுராதபுரச் சந்தியிலுள்ள நித்தியானந்தா கல்லூரியில் நான் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவேளை எனது பாடசாலை ஆசிரியனாக அதுவும் என்னுடைய வகுப்பாசிரியனாக இருந்தவன்தான் இவன் என்று சொன்னால் நம்புவீர்களா? ஒரு ஆசிரியரைப் போய் மரியாதையில்லாமல் அவன் இவன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றேனே என்று நீங்கள் யோசிப்பது புரிகின்றது. அது ஒன்றுமில்லை. பிற்காலத்திலே எங்கள் இருவருக்குள்ளேயும் உண்டான நெருக்கத்தின் விளைவுதான் இந்த மாற்றம். இதையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்தக் கதையை குறைந்தபட்சம் இன்னும் மூன்று நான்கு பராவாவது தொடர்ந்து படித்தாக வேண்டும்.

மார்க் ஆன்டனி கெமிலஸ் எங்கள் பாடசாலையின் பழைய மாணவனும் கூட. பாலையூற்றைச் சேர்ந்த பழைய ஏற்பாடுகளை மிகவிசுவாசமாக நம்பும் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தின் கடைசிப்பிள்ளை அவன். அவனது பெற்றோர்கள் சகோதரங்கள் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரும் வெளிநாடுகளில்தான் உள்ளனர். இவன் மட்டும் வெளிநாடு போவதிலே நாட்டமின்றி தனது வயதான பாட்டியுடன் ஊரிலே இருக்கின்றான். ஏஎல் பரீட்சையில் முதல் தடவையிலேயே பாஸாகி மூன்று வருடங்களில் கல்வியியல் கல்லூரியை வெற்றிகரமாக முடித்ததிலே இருபத்தியொரு வயது பூர்த்தியாவதற்கிடையிலே நியமனம் பெற்று நான் படித்துக்கொண்டிருந்த நித்தியானந்தா கல்லூரிக்கே உடற்கல்வி ஆசிரியராக வந்துவிட்டான். அவன் எங்கள் பாடசாலையின் முன்னாள் மாணவன் என்பதாலும் முன்பு எங்களோடு ஒன்றாகப்பழகி கிரிக்கட், புட்போல் விளையாடித் திரிந்தவன் என்பதாலும் அவனை ஏனோ ஒரு ஆசிரியருக்குரிய இடத்திலே வைத்துப் பார்க்க எங்களால் முடியவில்லை. அவனும் எங்களை மாணவர்களாக மட்டும் கருதாமல் ஏறத்தாழ நண்பர்கள் போலத்தான் நடாத்தினான். இருந்தாலும் ஒரு மரியாதைக்காக அவனை நாங்கள் எல்லோரும் பாடசாலையில் வைத்து மட்டும் ‘ஆன்டனி ஸேர்’ என்று அழைப்பதுண்டு.

அவன் வருவதற்கு முன்பு வரை எங்கள் நித்தியானந்தா கல்லூரி ஏறத்தாழ ஒரு வயோதிபர் மடம்போலத்தான் காட்சியளித்துக் கொண்டிருந்தது. பின்பு அடுத்தடுத்த வருடங்களில் பழைய ஆசிரியர்களெல்லாம் ஓய்வுபெற்று பல இளம் ஆசிரியர்கள் வந்து ஒன்று சேர்ந்து இயங்கத் தொடங்கிய பின்புதான் எங்களைப்போன்ற மாணவர்களுக்கெல்லாம் படிப்பிலும் ஸ்போர்ட்சிலும் அலாதியான உற்சாகம் தொற்றிக்கொண்டது. அவனது மாணவர்களிலே படிப்பில் எப்போதுமே கெட்டித்தனமாக இருந்து வந்தவனான எனக்கு ஸ்போர்ட்ஸிலே இருக்கும் ஆர்வத்தை பார்த்து மார்க் கெமிலஸுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும் போல. அதன் காரணமாகத்தான் பின்பு அவனுக்குள் என்மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருக்க வேண்டும். அது பின்பு எனது தனிப்பட்ட வாழ்க்கையிலே அக்கறை செலுத்துமளவு நெருக்கமாகி ஒருகட்டத்திலே ஆசிரியர்-மாணவ உறவுக்கும் அப்பாலும் சென்று இன்று எனது குடும்பப் பிரச்சினைகளைக்கூட அவனிடம் மனம்விட்டுப்பேசித் தீர்மானிக்குமளவுக்கு இறுக்கமான நட்பாகிப்போயிருக்கின்றது.

‘ஹேய்! என்ன இவ்வளவு யோசனை? பிரயாணத்துக்கு இரவு வரைக்கும் நேரமிருக்கு. லெட்ஸ் என்ஜோய் நவ்! நிலாவெளி பீச் உனக்கு ஓக்கேவா?’ என்ற அவனது குரல் கேட்டு நினைவுக்கு வந்தபோது வெளியே லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது.

நான் சிறிது யோசித்துவிட்டு, ‘யெஸ்!’ என்றதுதான் தாமதம்.

விர்ரெனக் கிளம்பிய கார் திருகோணமலை புகையிரத நிலையச் சந்தியைத்தாண்டி குவாடலூப் சேர்ச் முன்னாலிருந்த பொலீஸ் பாதுகாப்பு வீதித்தடையில்தான் போய் நின்றது. கரும்பச்சை நிற மழைக்கோட் அணிந்த வயதான ஒரு பொலீஸ்காரர் காரையும் எங்களையும் சில மில்லிகிராம் சந்தேகமாய் உற்றுப்பார்த்துவிட்டுத் தலையசைத்தார். அடுத்த நிமிடம் குளியலறையில் கைதவறிய சவர்க்காரம்போல கார்ப்பெட் வீதியில் வழுக்கிப் பாய்ந்தது கார். காதை உறுத்தாத மெல்லிய மேற்கத்திய சங்கீதத்தில் நனைந்தபடி கண்ணாடியூடாகத் தெரிந்த வெளியுலகம் வெகுநிசப்தமாய் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே வந்தேன்.

வீதியோரம் இடதுபுறமாய் ரயில்வே குவார்ட்டர்ஸ், நெருப்புவாகை மரங்கள்.. சித்திவிநாயகர்கோயில்.. பழக்கடை.. இரும்புக்கடை.. தேனீர்க்கடை.. சில்லறைக்கடைகள்.. வீடியோக்கிளப்.. கொம்யூனிக்கேஷன்கள், தரிசு நிலம், காத்திருக்கும் முச்சக்கரவண்டிகள்.. மஞ்சள் பெயிண்ட் அடித்த புல்டோசர்.. வாழைக்குலையேற்றிச் செல்லும் சைக்கிள்காரர்.. டியூஷன் செல்லும் பிள்ளைகள், சீமெந்து விளம்பரம்.. மெக்கானிக் ஷொப்.. குட்டிச்சுவர்கள்.. சினிமா போஸ்டர்களை அசைபோடும் மாடுகள், மீன்விற்கும் பெண்.. என்று எல்லோரும் வேகமாகப் பின்வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

‘என்னடா கோபமா? சரி, ஸீட் பெல்ட்டைப் போட்டுக்கோ.. ட்ரஃபிக்காரன் நிக்கிறான்!’

‘என்னை ஏன் இன்னும் நீங்க வாடா போடா என்றீங்க..?’ என்றேன் உண்மையான கோபத்தோடு.

‘சரி மகாராணி, தங்களது ஆசனப்பட்டியை அணிந்து கொள்ளுங்கள். எதிரே நமது போக்குவரத்துக் காவலர்கள் பாதையோரங்களிலே வசூலுக்காகக் காத்துக் கிடக்கின்றார்கள்!’ என்றான் வாய்க்குள் சிரித்தபடி.

‘சீ! நேத்திரா டீவில வாறவங்க பேசுற தமிழ் மாதிரியிருக்கு.. வாந்தி வருது!’

‘அதுக்குள்ளேவா.. இப்பதானே பழகினோம்.. ஏம் ஐ டூ ஃபாஸ்ட்?’

‘ச்சீ! யூ ஆர் எ பேட் போய்!’

ஸீட்பெல்ட்டை அணிந்த மறுகணம் நான் அடிக்க கை ஓங்கி சட்டென்று அவன் விலகமுயன்றதிலே காரின் பவர் ஸ்டியரிங் லேசாய்த் திரும்பி விட்டது. 120 கிலோமீற்றர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த கார் தடுமாறி கார்ப்பட் சாலையிலே சிறிது தூரம் சறுக்கிச் சென்று க்ரீச்சிட்டு மறுபுறம் திரும்பி நின்றது. சக்கரங்களின் உராய்வினால் லேசான டயர்நாற்றத்துடன் கூடிய புகைகிளம்ப பயத்திலே எனக்கு இரத்தம் உறைந்துவிட்டது. வெகுநிச்சயமாய் ஏற்படவிருந்த விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியதில் என்னை நான் ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குச் பல நிமிடங்கள் தேவைப்பட்டன. மார்க் கெமிலஸ் ஒரு கைதேர்ந்த சாரதி என்பதால் சட்டெனச் சுதாரித்து நடுவீதியில் நின்றுவிட்ட காரை ஒரு வட்டமடித்து சரியான பாதையில் திருப்பியெடுத்து விட்டான். அந்த வேளையிலே ட்ரபிக் பொலீஸ் யாருமில்லாதிருந்தது எங்கள் அதிர்ஷ்டமே.

கார் அலஸ்தோட்டத்தைத் தாண்டிக் கொண்டிருந்தபோதுதான் என்முகத்தில் இருந்த பயத்தையும் தவிப்பையும் அவன் தன்னெதிரேயிருந்த பின்பார்வைக் கண்ணாடியில் ரசித்தபடி வருவதைப் பார்த்தேன்.

நான் ஓஎல் பரீட்சைக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் போதுதான் முதன்முதலாக எனக்குள் ஒரு உடல் வேறுபாட்டை உணர்ந்தேன். ஆயினும் பரீட்சை மும்முரத்தில் இருந்த காரணத்தால் அதைச் சரியாகக் கவனிக்காமலிருந்து விட்டேன். பின்பு ஏஎல் கணிதப் பிரிவிலே சேர்ந்து படித்த அந்த இரண்டு வருட காலத்திலே இடையிடையே சில உடற்கோளாறுகள் தோன்றியிருந்தது. சில மாற்றங்கள் என்னை யோசிக்க வைத்தாலும் அவை குறித்து அதிக கவலையில்லாமல்தான் இருந்து வந்தேன்.

நான் ஓஎல் பரீட்சைக்குத் தோற்றிக் கொண்டிருந்த பழைய நாட்களில் மார்க் கெமிலஸ் என் படிப்பிலே அதிக அக்கறையெடுத்து நிறைய உதவிகள் செய்து கொண்டிருந்தான். அவனுடைய இந்த அபரிமித ஆர்வத்தினால் அவனையும் என்னையும் வைத்து நண்பர்களுக்குள் ஒரு கேலிப்பேச்சுக் கூட வளர்ந்திருந்தது. பரீட்சையின் பின்னர் தனது நண்பனொருவனின் கம்ப்யூட்டர் நிறுவனமொன்றிலே இலவசமாகப் பயிற்சி பெறும் ஏற்பாட்டையும் ஆங்கிலம் படிப்பதற்குரிய ஒழுங்கையும் அவனாகவே முன்வந்து வழங்கினான். இப்படியாக இருவருக்குமிடையே ஒரு நன்றி கலந்த நட்புணர்வு வளர்ந்திருந்தது.

நான் ஏஎல் பரீட்சை எழுதவேண்டிய நேரத்தில்தான் மார்க் கெமிலஸுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆம், கிழக்கிலே நடந்த மாகாணசபைத் தேர்தலையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சராகிய முஸ்லீம் அரசியல்வாதி ஒருவருக்கு அந்தரங்கச் செயலாளராக அவன் நியமிக்கப்பட்டு எங்கள் பாடசாலையிலிருந்து தற்காலிகமாக விலகிச் சென்றுவிட்டான். அதற்கிடையிலே ஒருவாறு உயர்தரப்பரீட்சையும் எழுதி முடிவும் வெளியாகியிருந்தது.

பிஸிகல் ஸயன்ஸ் கிடைக்கும் வாய்ப்புள்ள பெறுபேறு வந்திருந்த காரணத்தால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கெம்பஸ் போவதா அல்லது வேலையொன்றுக்காக முயல்வதா என்பதைத் தீர்மானிப்பதற்காக் காத்திருந்த வேளையில்தான் மீண்டும் எனக்குள் மீண்டும் சில வேறுபாடுகள் தலைதூக்கின. இம்முறை அவற்றின் தாக்கம் உக்கிரமாக இருந்ததால் அலட்சியம் செய்யமுடியவில்லை. ஒருநிலையில் வேறு ஒருவரின் உடலில் நான் இருப்பதைப் போலவும் சிலவேளைகளிலே எனக்குள்ளேயே வேறு ஒருவர் இருப்பது போலவும் சிக்கலான உள்ளுணர்வுகள் என்னை வாட்டியது. ஆனால் அவற்றை யாரிடமும் கூறவும் முடியவில்லை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

எனக்கென்று நெருக்கமாகப் பழகக்கூடிய நட்புவட்டத்தை நான் பெற்றிருக்காத காரணத்தாலும் வெட்கத்தினாலும் எனக்குள் நடந்து கொண்டிருந்த உடல் மற்றும் உள்ளுணர்வு மாற்றங்களையும் யாரிடமும் கூறமுடியாது போய்விட்டது. முன்பு போல கடினமான விளையாட்டுகளிலே ஈடுபட முடியவில்லை. வீதிக்குப் போவதற்குக்கூட யாராவது துணைக்கு வரவேண்டும் போலிருந்தது. யாரைப் பார்த்தாலும் எனக்கு ஆபத்தை விளைவித்து விடுவார்களோ என்ற இனம்புரியாத அச்சமும் தோன்றியது. கடைவீதிகளுக்குப் போய் பொருட்களை வாங்கி வரும் வேலைகளுக்குப் பதிலாக வீட்டுவேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வதற்கே ஆர்வமாக இருந்தது. என்னைத் தேடி யாராவது வந்தால்கூட ஒளிய ஆரம்பிக்கலானேன். வீட்டின் வரவேற்பறையிலிருப்பதைவிட கூடிய நேரங்களிலே சமையலறையிலும் பின்கட்டுகளிலுமே இருக்கலானேன். புட்போல், கிரிக்கட், கார் பந்தயம் போன்ற உற்சாகமான விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததுபோய் பெண்கள் அழுதுவடியும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களை இரசித்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

கார் சாம்பல் தீவு பாலத்தை தாண்டிக் கொண்டிருந்தது.

சற்றுத் தூரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த விஷ்ணு கோயிலின் பிரமாண்டமான கோபுரம் நீலவானின் பின்னணியிலே மிகவும் எடுப்பாகத் தெரிந்துகொண்டிருந்தது.

‘அதுசரி, உங்க வீட்ல என்னடா சொல்றாங்க? இப்ப உன்னோட எல்லாரும் எப்படி இருக்கிறாங்க? இல்ல முன்ன மாதிரித்தான் இப்பவும் நீ தனியாத்தான் திரியுறியா?’

எனக்குச் சட்டென கண்களிலே நீர் துளிர்த்தது. அவனிடம் மறைப்பதற்கு முயன்றபோதும் கண்டுவிட்டான். ஸ்டியரிங்கை ஒருகையில் பிடித்துக் கொண்டு டேஷ்போர்டிலிருந்த டிஷ்யூவைக் கிழித்து நீட்டினான்.

‘சரி, பதில் சொல்லணுமென்று கட்டாயமில்லை. ஷேல் வீ சேன்ஜ் த டொப்பிக்?’

‘இல்ல.. அதையே பேசலாம். அதுக்குத்தானே இப்பவே வந்தேன்..! மார்க், கொஞ்சம் நிப்பாட்டுங்க, இந்த கோயிலை ஒருக்கா இறங்கிப் பார்த்திட்டுப் போகலாம்’

அவன் என்னை வியப்பாய் பார்த்தபடியே காரின் வேகத்தைக் குறைத்து இடதுபுறமாய் ஓரங்கட்டினான்.

அது ஒரு புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பிரதிஷ்டை செய்யப்படாத கோயில் என்பதால் பல ஏக்கர் பரப்பளவிலுள்ள அதன் வளாகம் ஆட்களேயில்லாமல் வெறிச்சோடிக்கிடந்தது. வாசலிலே நின்றபடியே செருப்பைக் கழற்றிவிட்டு கண்ணைமூடிக் கையெடுத்துக் கும்பிட்டேன்.

‘உனக்கிருக்கிற பிரச்சினைக்கு இந்தக் தனிக்கோயில் ஒற்றைச்சாமியெல்லாம் போதாது. மொத்த சாமியையும் க்ளஸ்டர் மீட்டிங் கொன்பரன்ஸ் போட்டுத்தான் கும்பிடணும்’

‘இங்க, இந்த நக்கல்தானே கூடாது. வேணும்டா உங்க மேரி மாதாவையும் கும்பிடுறன் போதுமா?’

‘ஐயோ, நானே கும்பிடுறது கிடையாது. ஆனா பாவம் மாதா. உன்னால அவ நிம்மதியும் கெட்டுறப்போகுது’

‘சரி ஜோக்ஸ் இருக்கட்டும். பீ ஸீரியஸ் மார்க்! இப்ப என்னதான் நான் செய்ய?’

‘இப்பவா? வா முதல்ல கோயிலைச் சுற்றிப்பார்ப்போம்!’ என்றவாறு என்னைக் கையிலே பிடித்தபடி நடக்கத் தொடங்கினான்.

அரசியல்வாதிக்கு பீஏவாக ஆகிவிட்டதால் அந்த நாட்களிலே மார்க் கெமிலஸால் முன்பு போல அடிக்கடி என்னைக் காணவரமுடியாமலிருந்தது. எப்போது பார்த்தாலும் மீட்டிங்குகள், பயணங்கள், திறப்பு விழாக்கள் என்று அவன் வீட்டுப்பக்கம் வருவதே கிடையாது. அப்படியே வந்தாலும் குறைந்தபட்சம் ஆறுபேராவது புடைசூழ ஒரு சிற்றரசன் போலத்தான் வருவான். எதிரேயுள்ள மனிதர்களோடு பேசுவதைவிட செல்போனுடன் அவன் பேசுவதுதான் அதிகம்.

அவனது செல்போனும் கூட, ‘நீங்கள் அழைக்கும் நபர் தற்போது வேறு ஒரு அழைப்பிலிருக்கின்றார்’ எனும் பதிவுசெய்யப்பட்ட வாசகத்தைச் சொல்லும் கிளிப்பிள்ளையாகிப்போனது. இதனால் எனது பிரச்சினைகளை அவனிடம் கூட உடனடியாகச் சொல்ல முடியாது போனது. மனதிற்குள்ளேயே குமைந்து குமைந்து தற்கொலை செய்துவிடலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால் மார்க் கெமிலஸ் என்னைப் படிப்பிலும் விளையாட்டிலும் உருவாக்கிப் பார்க்க வேண்டும் என்ற பேராவலுடன் இருந்த காரணத்தால் அதற்கும் கூட அவன்தான் ஒருவகையிலே தடையாக இருந்தான். ஆனாலும் ஒருகட்டத்திலே என்னால் தாங்கவே முடியவில்லை. எப்படியோ இடைவிடாமல் முயன்று மார்க் கெமிலஸை வரவழைத்து தனிமையிலே சந்தித்துவிட்டேன். என்னுடைய அத்தiனை பிரச்சினைகளையும் ஒன்றும் விடாமல் அவனிடம் சொல்லி அழுது தீர்த்துவிட்டேன். அதையெல்லாம் கேட்டவன் அப்படியே ஆடிப்போய் விட்டான். அன்று எதுவுமே பேசமுடியாமல் சில நிமிஷங்கள் கல்லாய்ச் சமைந்து நின்றது மட்டும்தான் அதன் பிறகு அவன் ஓய்விலிருந்து நான் பார்த்த ஒரே சந்தர்ப்பம்.

அதன்பிறகு நடந்தவற்றையெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிப் புரியவைப்பதென்றால் தமிழ்மொழியிலுள்ள வார்த்தைகளெல்லாம் நிச்சயம் தமது சக்திக்கு மீறி உழைத்தாக வேண்டியிருக்கும்.

ஆம். எனது பிரச்சிiனையைத் தெரிந்த கொண்ட பிறகு மார்க் ஒரு மணிநேரம் கூட என்னைத் தனிமையில் விடவில்லை. தனது அரசியல்வாதியிடம் பொருத்தமான பொய்கூறி தனது பொறுப்புகளையெல்லாம் மிகப்பெரும் பிரயத்தனத்துக்கு மத்தியில் தற்காலிகமாக வேறுசிலரிடம் ஒப்படைத்துவிட்டு என்னுடனேயே இருந்தான். முதலில் என்மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொண்டான். இதற்காக அவன் மணிக்கணக்கில் தன் நேரத்தைச் செலவழிக்கவேண்டியிருந்தது. இதனால் எனது வீட்டாருக்குக் கூட அவனது என்னுடனான நடத்தை தொடர்பாக இலேசான சந்தேகம் உண்டானது. அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு பம்பரமாய் இயங்கினான். தனக்கு மிகவும் நம்பிக்கையானவரான திறமை வாய்ந்த ஒரு பெண் வைத்தியரிடம் என்னை அழைத்துச் சென்று காண்பித்து எனது நிலைமைகள் தொடர்பாகப் விரிவாகக் கேட்டறிந்தான்.

பின்பு அந்த டாக்டரின் ஆலோசனைப்படி என் பெற்றோர்களிடமும் சகோதரிகளோடும் தனித்தனியாகப் பேசினான். அதிர்ச்சியடைந்த அவர்கள் அடுத்த கணமே என்னைத் தோஷம் கழிப்பது, தெய்வக்குற்றம் போக்குவது என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். தீவிரமான மூடநம்பிக்கைகளிலும் சிறுதெய்வ வழிபாடுகளிலும் ஊறிப்போனவர்களான எனது குடும்பத்தினருக்கு மார்க் கெமிலஸின் அக்கறை புரிந்த அளவுக்கு எனது பிரச்சினைக்குரிய மருத்துவத் தீர்வு புரியவில்லை.

இனிமேல் எனது குடும்பத்தினரோடு போராடுவதிலே பலனில்லை என்று புரிந்துவிட்டதால் என்னுடைய உறுதியான முடிவுக்காக காத்திருந்து நான் சம்மதித்ததும் எனது உறவுகளின் விருப்பமின்மைக்கு மத்தியில் திடீர் நடவடிக்கையிலே இறங்கினான் அவன். இதனால் எங்கள் உறவுகளிடம் நிறைய வீண்பழி கேட்டான். வேறுவழியில்லாத நிலையிலே மிரட்டியும் பார்த்தான். எதுவுமே கைகொடுக்காத நிலையில் கடைசியில் தனது அரசியல்வாதியின் செல்வாக்கை மறைமுகமாகப் பயன்படுத்தி கொழும்புவரை என்னை ஏறத்தாழக் கடத்திச் சென்று மருத்துவ ரீதியாகக் கைகொடுத்தவன்தான் இந்த மார்க் கெமிலஸ் என்ற எனது முன்னாள் ஆசிரியன்.

இத்தனை களேபரங்கள் நடந்தும் கூட என்னுடைய பிரச்சினையை தங்களது குடும்பத்திற்கேற்பட்ட ஓர் அவமானச் சாபமாக எங்கள் வீட்டார்கள் கருதியதால் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் அடுத்த வீட்டுக்குக்கூடத் தெரியாமல் இரகசியமாக வைத்திருக்கவே நினைத்தார்கள். நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களுக்கேயுரிய அந்த எழுதாச்சட்டம் மட்டும் இல்லாதிருந்தால் நானும் மார்க் கமிலஸும் நடாத்திய மருத்துவப் போராட்டங்களெல்லாம் பாதிவழியிலேயே பிசுபிசுத்துப்போயிருக்கும்.

கடைசியில் சில இலட்சங்களை ஏப்பமிட்டதும் சிக்கல் வாய்ந்ததுமான சத்திரசிகிச்சைகளுக்கு நான் உள்ளாகினேன். அதன் பின்னர் வெகுவிரைவிலேயே என்னால் உடலளவிலே அதிக சிரமமின்றி புதிய ஒரு வாழ்வுக்கு மாறிவிட முடிந்தது பெரும் அதிஷ்டமே. இயல்பிலேயே அழகானதும் நளினமானதுமான தோற்றமுடையதாக எனது உடல் இருந்ததும் அதற்குரிய முக்கிய காரணங்களிலே ஒன்று. ஆயினும் உறவுகளின் கேள்விகளுக்கும் சமூகத்தின் ஏளனப்பார்வைகளுக்கும் முகம் கொடுப்பதுதான் எனக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது. இன்னும் இருந்தும் வருகின்றது.

இன்றைய உலகிலே என்னைப் போன்றவர்களாலும் அதிக சிரமமின்றி வாழமுடியும் என்பதற்கு என்னையே எனக்கு உதாரணமாக்கிக் காட்டியவன் மார்க் கெமிலஸ். எனது இரத்த உறவுகளே என்னை ஒருவித அசூயையுடன் பார்த்து ஒதுங்கிப்போகும் நிலையிலே எனக்கென்று எதுவித வாழ்க்கை நோக்குகளுமின்றிய வெட்டவெளியான இன்றைய நிலையிலும் மார்க் கெமிலஸுடனான அந்த நட்புறவு இன்னும் தொடர்ந்து வருகின்றது.

‘ம், சொல்லுங்க மார்க்ஸ். இப்ப நான் என்ன செய்யறது. பிறந்ததிலிருந்து நான் வைத்திருந்த என்னுடைய பேர் விபரமெல்லாம் இப்ப நான் மாத்தணுமா என்ன?’

‘அதுதான்டா எனக்கும் விளங்குதில்ல. நான் எனக்குத் தெரிஞ்சவங்ககிட்டயெல்லாம் கேட்டுப் பாத்திட்டன். பெயரை தனூஷா என்று மாற்றி பேர்த் ஸேட்டிபிகேட்டில் விபரங்களை புதுசா எழுதி திரும்பவும் பதிவு செய்ய வேணும் என்ற ஒரு விசயத்தைத் தவிர இது சம்பந்தமா எதுவும் தெரியல்ல! ஆனாலும் உனக்காக சில விசயங்களை கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஏற்கனவே நான் மாற்றித்தான் வச்சிருக்கிறேன்டா’

‘நம்ம நாட்டுல இதுவிசயமா எதுவும் கேட்கிறதுக்கே பயமாயிருக்கு. அதுக்காக எல்லாவற்றைமே மறைச்சுக்கொண்டு மனசுக்குள்ளேயே குமைஞ்சு கொண்டும் என்னால் வாழமுடியாது.’

‘ஒண்ணு செய்வோமா? இந்தத் திருட்டுப் பயணத்தை இப்படியே நிப்பாட்டிடுவோம். ஒரு மாதத்தில முறைப்படி பாஸ்போட் வீசா எல்லாம் எடுத்துத் தாறேன். இந்த நாட்டைவிட்டு சுவிஸ் கனடா என்று எங்காவது வெளிநாட்டுக்கு நீ மட்டும் போயிட்டு உன்ட படிப்பைப் முடிச்சிட்டுத் திரும்பி வா. அந்த நாடுகள்ல மெடிகல் வசதியும் நல்லாருக்கும் அங்கேயே உன்ட படிப்பையும் தொடரலாம்.. தனியாக உன்னை நீயே சமாளிச்சுக்கிறது அங்க சுலபம். இதெல்லாம் அங்க சகஜமாகிப் பலவருஷங்களாகிட்டுது’

‘இதுக்காக ஒருமாதம் காத்திருக்கணுமா நான்? இங்க உள்ள உறவுகளைச் சகிக்க முடியாமத்தானே வந்தேன். தவிர, நான் மட்டும் வெளிநாட்டுக்குப் போகணுமா? கொழும்புக்கு ஒபரேஷனுக்கு கூட்டிக் கொண்டு போனதுக்கே உங்களுக்கு அவ்வளவு பிரச்சினை போட்டவங்க என்னோட அக்காமார். என்னை நீங்க தனியாக வெளிநாட்டுக்கு அனுப்புறதைக் கேள்விப்பட்டா உங்களை என்ன பண்ணுவாங்க தெரியுமா? அப்படியெண்டாலும் நீங்களும்தான் வரணும்?’

‘உனக்காக எங்கேயும் வருவேன். ஆனா ஏனோ எனக்கு இங்க நம்ம நாட்டுல இருக்கிறதுதான் விருப்பம்டா.’

‘அது உண்மைதான் மார்க், அதுவுமில்லாம எங்க போனாலும் நம்ம சனங்களோட வாழறதுலதானே சந்தோசமிருக்கு’

‘ஆனா நம்ம சனங்கள்தானேடா இதையெல்லாம் ஏதோ பேய் பலாப்பழத்தைப் பார்க்கிற மாதிரி பார்க்குது?’

‘நம்ம சனங்களும் வேணும். ஆனா அதுகளோட இந்த சின்னப்புத்தியையும் சகிச்சுக் கொள்ளணும். என்னதான்டா பண்றது… என்னைப் பெத்தவங்களே இப்பிடியிருக்கிறாங்க.. மற்றவங்களை குறைசொல்ல முடியுமா? எனக்கு ஒருநேரம் செத்துடலாமா என்றுகூட இருக்கு!’

‘ஹேய்.. டோண்ட் டேக் திஸ் மச் ஸீரியஸ். இவ்வளவு படிச்சிருக்கிறவள் நீயே இப்பிடி யோசிக்கலாமா. கோபம் வந்தால் யாரையாவது கொல்லணும் போல இருக்கு என்டு சொல்லு. ஐ மே அண்டர்ஸடேண்ட். பட் உன்னை நீயே அழிச்சிக்கிறதெல்லாம்.. டூ மச்டா!’

‘ஐ’ம் ஸொறி. உங்களாலதான் எதையுமே செய்ய முடியாம இருக்கிறேன். இப்படிப் பேசிப்பேசியே என்னைக் கவுத்திட்டடா நீ!’ என்று அவன் தலையிலே செல்லக் குட்டு ஒன்று வைத்தேன்.

‘என்ன ‘நீங்க உங்க’ எல்லாம் போய் கடைசில ‘டா’ வந்;திட்டுது போல!’ என்று கிசுகிசுத்தவாறு என் இடையில் கைபோட்டு வளைத்து அணைத்துக் கொண்டான். யாரும் பார்த்து விடுவார்களோ என்று கூச்சமாக இருந்தாலும் அவனது செய்கையை உள்ளுக்குள் விரும்பினேன். என்னைத் தன் மார்போடு அணைத்து முத்தமிட மாட்டானா என்று மனம் ஏங்கியது. என்னை வெட்கம் பிடுங்கித் தின்றது. திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை. முகத்தை நெருங்கி வந்துவிட்டு ஏனோ அதற்குமேல் முன்னேறாமல் என்னை விடுவித்துவிட்டான்.

இருவரும் அருகிலிருந்த ஒரு வேப்பமரத்தின் கீழிருந்த சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்தோம்.

போன மாதத்தை விட வெட்கத்தின் அளவு கூடியிருப்பதை தெளிவாக உணர்ந்தேன். அப்படியானால் சிகிச்சை பலனளிக்கத் தொடங்கிவிட்டது என்றுதானே அர்த்தம். இதையும் அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

‘என்ன மகாராணிக்கு என்ன முகமெல்லாம் இப்படிச் சிவந்திருக்கு? அதுசரி இப்ப உனக்கு எல்லாம் ஓகேவா? ஏதாவது கொம்ப்ளய்ண்ட் இருக்கா. நேற்றுகூட நம்ம ஸர்ஜன் கோல் எடுத்து விசாரிச்சாருடா. இதுவரைக்கும் எத்தனையோ பேருக்கு ப்ளாஸ்டிக் ஸர்ஜரி செய்திருந்தாலும் உனக்காகச் செய்ததுதான் அவருக்கு மனநிறைவு தந்த விடயமாம் என்றெல்லாம் சொல்லிட்டிருந்தார். பாவம் நல்ல மனிசன்.’

‘அதனாலதானே அவரோட பேர்சனல் ஃபீஸ் கூட வேணாம்;டாரு. ஹொஸ்பிடல் சார்ஜ் மட்டுந்தானே. நல்லாருக்கணும் அந்த டொக்டர். நீங்களும் பாவம். எனக்காக எவ்வளவு காசு உங்க பொஸ்ஸுக்கிட்ட கடனா வாங்கி வாங்கிச் செலவழிச்சிட்டீங்க. அந்த அழகான பைக்கைக் கூட வித்திட்டீங்க.’

‘அதுதான் இப்ப அவரோட புதுக்கார் இருக்கே. இன்றைக்கு இரவு 11 மணி வரைக்கும் இது நம்ம கார்தான்…?’

‘ஆ! அப்ப சாமத்துலயா நம்ம போட்ல போகிற பயணம்? எனக்கேலாப்பா கடல்ல குளிர் நடுங்கும். கடைசில பாருங்க அங்க போய்ச் சேர்றதுக்குள்ள நான் குளிர்ல செத்தே போயிடுவேன். நீங்க இருந்து அழப்போறீங்க. ஏன் பகல்ல போனா என்னவாம்?’ என்று சிணுங்கினேன்.

‘ஆங், போகலாம்! உன் மச்சான்மார் நேவிக்காரன் இருக்கிறானே? வெத்திலை பாக்கு வச்சு வந்து கூட்டிட்டுப் போவான். பிறகு நீயும் நானும் டீவியில முக்காடு போட்டுட்டுப்போய் ட்ரிங்கோ ஜெற்றியில இறங்கிறதைக் காட்டுவான் பரவாயில்லயா? ப்ளெங்கட் ஸ்வெட்டர் க்ளவ்ஸ் எல்லாம் இருக்கு.. அதெல்லாம் ஒண்ணும் சாக மாட்டாய் நீ. எல்லாம் என்னோட பொஸ் தந்தது!’

‘சரி வாங்க போகலாம்.’ என்று எழுந்து காரை நோக்கி நடந்தேன்.

‘தனூஷா! கொஞ்சம் நில்லு! உனக்கு இப்ப எல்லாம் நோர்மலா இருக்குதா? எப்படியும் ஹோர்மோன்ஸ் ஸ்டிமியுலேஷன் ஸ்கேனிங் பார்க்க நாம ஒரு தடவை கொழும்புக்கு போய் வந்திருக்கத்தான் வேணும்டா. சே! அதுக்குள்ள இந்தப் பிரயாணம் ஓக்கேயாயிடுச்சு பாரு.’

‘அதெல்லாம் ஓக்கே. பீரியட்ஸ் கூட ரெகுலராயிட்டுது. எல்லாம் சரியாகி வந்துதான் என்ன? எங்க வீட்டு ஆக்களே முதல்ல என்ட பிரச்சினையைப் புரிஞ்சிக் கொள்றாங்கல்லயே. நீங்க அம்மாக்கிட்ட சொல்லி விளங்கப்படுத்தினதாலதான் ஓரளவு என்டாலும் ஒத்துக்கிட்டாங்க. என்டாலும் என்ட சகோதரங்கள் மற்ற உறவுகளெல்லாம் என்னை ஒரு பெண்பிள்ளை என்றே நினைக்கிறதில்ல. அவங்க என்னை உறவு என்று சொல்லிக்கொள்றதுக்கே விரும்புறாங்க இல்ல மார்க்.’

‘……….’

‘கோயிலுக்குப் போறதுக்கென்று எல்லாரும் வெளிக்கிடுவாங்க. நானும் வெளிக்கிட்டவுடனே சட்டென்று எல்லாரும் போகாம நின்றிடுவாங்க. ஒரு விசேஷத்துக்குக் கூட என்னை வீட்டுல விட்டுட்டு ரகசியமாக போயிடுவாங்க தெரியுமா? இத்தனைக்கும் என் குடும்பத்தில உள்ளவங்க யாரையும் விட நான் அழகிலயும் நிறத்திலயும் வடிவாத்தானே இருக்கிறேன்? பிறகு ஏன் எனக்கு இப்படியெல்லாம் செய்யிறாங்க. எனக்கு எப்படியிருக்கும் யோசிச்சுப் பாருங்க. இன்றைக்குக் கூட கோயிலுக்குத் தனியாகத்தான் வந்தேன்.’

‘சரி, அவங்கட கதையெல்லாம் விடு. இனி உன்னால அடுத்தவங்க துணையில்லாமலே சுதந்திரமா வாழ இயலும். கையில உன்னோட படிப்புக்குரிய சேர்ட்டிபிக்கட்ஸ் எல்லாம் பக்காவா இங்லீஷ்ல ட்ரான்ஸ்லேட் செய்து ரெடியா வச்சிருக்கேன். அங்க போய் சேர்ந்து செட்டிலானதும் படிக்கலாம். பிறகென்ன நல்ல வேலை கிடைக்கும். இப்பிடி இடையிலே சோர்ந்து போயிட்டியென்டா இத்தனை நாள் நீ பட்ட கஷ்டத்திற்கும் நானெடுத்த முயற்சிக்கும் பலனில்லாமப் போயிடும்.’

‘சரி, நம்ம போட் அங்க போய்ச்சேர எத்தனை நாளாகும் மார்க்?’

‘ஒரு பத்து பதினைஞ்சு நாளாகலாம். ஆனா கடல் நிலைமைகளைச் சொல்ல இயலாதுடா’

‘சரி மார்க், இனி உங்களை நான் டிஸ்கரேஜ் பண்ண மாட்டேன். சரி, எனக்குத் தூக்கம் வருது.’ என்றபடி நான் அவனது தோளிலே சாய்ந்ததும் காரை ஓட்டிக்கொண்டே இடது கையால் என்னை அணைத்துக் கொண்டான் மார்க்.

கடற்கரைக் காற்று இதமாய் வீசிக்கொண்டிருக்க கார் நிலாவெளியை நோக்கி தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது.

ஒரு குளிர்நிறைந்த அக்டோபர் மாதத்தின் அதிகாலையில் திடீரென வெளிச்சமும் சப்தங்களும் உறுத்த நான் கண்விழித்தபோது, நிலாவெளிக் கடற்கரையிலிருந்து ஆண்களும் பெண்களும் குழந்தை குட்டிகளுமாய் எழுபத்தைந்து பேருடன் புறப்பட்டு பதினொரு நாட்களாக கடினமானதொரு நெடும்பயணம் செய்து வந்த எங்கள் படகைச்சூழ நீலநிற கப்பற்படைச் சீருடையும் கறுப்புநிற கூலிங் க்ளாஸ்களும் அணிந்த வெள்ளைக்கார கடற்படை மாலுமிகள் ஆங்கிலத்திலே இரைச்சலாய்ப் பேசிக்கொண்டு நின்றிருந்தார்கள்.

‘ஓகே கைய்ஸ், யூ ஓல் ஆர் சேவ்ட்! நவ் யூ ஓல் ஹேவ்டு கெட்டவுண் ஃப்ரம் யுவர்; போட் போஃர் த இனிஷியல் மெடிகல் செக்கிங் பிபோஃர் என்டரிங் தி க்றிஸ்மஸ் ஐலண்ட்!’ என்று கரையிலிருந்து எங்களைத் தங்களது கப்பற்படைப் படகுக்குள் இறங்குமாறு மெகா போனில் அறிவித்துக் கொண்டிருக்க படகிலே எங்களோடு வந்த மக்களெல்லாம் அந்த வெள்ளைக்காரர்களின் நேவிப்படகுக்குள்ளே இறங்குவதற்காக தங்களது மூட்டை முடிச்சுகளுடன் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

இத்தனை நாளும் அத்தனைபேரும் முடங்கிக் கிடந்து பயணம்புரிந்த அந்தப் பெரிய மீன்பிடிப்படகின் இருளான உள்ளறையிலிருந்து நானும் மேலேறி வந்தபோது இத்தனை ஆரவாரங்களுக்கு மத்தியிலும் படகின் மேல்தளத்திலே ஓர் ஓரமாய் குளிரிலே இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் மார்க் கெமிலஸைப் பார்த்தேன். ‘எப்படி இவ்வளவு இரைச்சலுக்கும் இடையிலும் இந்தக் குறும்புக்காரன் இன்னும் வேண்டுமென்றே தூங்கிக் கொண்டிருக்கின்றான்’ என்ற கோபத்திலே அவனை எழுப்புவதற்காக நான் தொட்டுப்பார்த்தபோது..

அவன் உடம்பு ஐஸ்கட்டியாய் விறைத்துச் சில்லிட்டுப்போயிருந்தது.

– 2012.11.13

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *