கரிசல் காட்டு காதல் கதைகள்! – 6

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,087 
 

உச்சியில இருந்த பொழுது கொஞ்சமா மேற்க சாய்ஞ்சது. உழுதுக்கிட்டிருந்த வீரணனுக்கு வயிறு பசி எடுக்கவும், பெஞ்சாதி தேன்மொழி வர்றாளானு நிமிந்து பார்த்தான். கொஞ்ச தூரத்துல கஞ்சிக் கலயத்தைச் சொமந்து வந்துக்கிட்டிருந்தா தேன்மொழி. கலயத்தைத் தாங்கிக்கிட்டிருந்த அவ கை வளையலும், கால்ல இருந்த கொலுசும் அவ மாநிறத்தை இன்னும் கொஞ்சம் தூக்கலாக் காட்டுச்சு. மனசுக்குள்ள அதை ரசிச்சாலும் வெளியில காட்டிக்கல வீரணன். போன வெள்ளிக்கு முந்துன வெள்ளி அவங்களுக்குள்ள வந்த சண்டையில, பத்து நாளுக்கு மேல ஆகியும் இன்னும் பேச்சு வார்த்தை இல்ல.

கீழ் பார்வையா தன் புருசனைப் பார்த்த தேன்மொழிக்கு, மனசு உலையா கொதிச்சது. மண்ணுக்குள்ள வெளைஞ்ச சீனிக் கெழங்கு மாதிரி தெரண்டிருந்த அவன் ஒடம்பு, இப்போ இளைச்சு துரும்பாக் கெடந்தது. ‘லங்கோடு’ மட்டும் அவன் இடுப்புல தொத்திக்கிட்டு இருக்க, வெத்து ஒடம்புல விலா எலும்புங்க காவு காவாத் தெரியவும், தேன்மொழிக்கு ‘குபுக்’குனு கண்ணீர் பொங்கி, பாதையை மறைச்சது. ஆனாலும் புறங்கையால கண்ணீரைத் துடைச்சுக்கிட்டே அவனைப் பார்த்தா.

இவ வந்ததையே பார்க்காதவன் மாதிரி கெம்பீதமும், கெத்தளிப்புமா (திமிரும் அலட்சியமுமாக) அவன் உழவடிக்கறதுலயே கண்ணும் கருத்துமாயிருக்கவும், கொஞ்சமா இளக்கம் குடுத்த அவ மனசு திரும்பவும் இறுக்கமாகிடுச்சு. ‘கல்யாணம் முடிச்ச நாளையிலருந்து தேனு… தேனு…னு கொஞ்சலும் குழைவுமாக் கெடந்தவன் இவன்தானா?’னு அவளுக்கு திகைப்பாகிப் போச்சு.

பத்து நாளைக்கு முன்னால, காலையில பிஞ்சைக்குக் கௌம்பிப் போனவன், போன மாயத்துல ஒரு கதுவாலி(கவுதாரி)யோட திரும்பி வந்தான்.

‘‘ஏது மச்சான் இந்த கதுவாலி?’’னு கேட்டா தேன்மொழி.

‘‘முருசவாய்க்காலோரம் ரெண்டு குஞ்சோட இந்த கதுவாலி பம்மி கெடக்கதப் பாத்தேன். பய்ய (மெதுவாக), பூன கணக்கா போயி புடிச்சிட்டேன். குஞ்சுகளயும் புடிப்போமின்னு நெனச்சேன். ஆனா பச்ச குஞ்சிக. இன்னும் பொறிச்ச வாட மாறல. அதேன் விட்டுட்டேன். சரி… சரி… இன்னைக்கு களி கிண்டி, கதுவாலிய அடிச்சி, கொழம்பு வையி. நா போயி மாட்டப் பத்திக்கிட்டு, வீட்டுக்கு வந்துருதேன். வீட்டுல கறிக் கொழம்பு வைக்கும்போது பிஞ்சையில என்னத்த வேல ஓடும்…’’னுட்டு அவன் பிஞ்சைக்குப் போக, தேன்மொழி தன் கைக்குள்ள நடுங்கிப் போய்க் கெடந்த கதுவாலியையே பாத்தா.

தன்னோட ரெண்டு குஞ்சுக்காக அது துடிக்குற துடிப்பு அவளுக்குப் புரிஞ்சுது. ஓடிப்போய் தொட்டில்ல படுத்து ஒறங்கிட்டிருந்த தன்னோட ஒரு வயசு மகனைப் பார்த்துக்கிட்டா. ‘பிள்ளைகளை பறிகொடுத்துட்டு ஒரு தாய் இருந்துரலாம். ஆனா, தாயை இழந்துட்டு பிள்ளைக பரிதவிக்கக் கூடாது’னு நினைச்சப்போ, அந்த கதுவாலி மேல பாதரவா (பாவம்) இருந்துச்சு. ஒடனே, கதுவாலியை கொண்டு போய், தன் பிஞ்சையை ஒட்டுன ஓடையில விட்டுட்டு, அது ‘விருட்’டுனு தாவிப் பறந்த அழகைப் பார்த்துக்கிட்டே நின்னா.

கறிக் கொழம்பு நெனைப்போட வீட்டுக்கு வந்த புருசன்கிட்ட, தேன்மொழி விசயத்தைச் சொல்லவும் எகிறினான் வீரணன். அன்னிக்கு வந்த சண்டைதான். இன்னமும் பேச்சில்ல. இப்பிடியே விட்டா, சரிப்படாதுனு நெனைச்சவ, ஒரு முடிவோட வீட்டுக்கு வந்தா.

வேலை முடிஞ்சு, மாடுகளை கொட்டில்ல கட்டின வீரணன், வழக்கம்போல மந்தை, தெருனு சுத்திட்டு வீட்டுக்கு வந்தப்போ, வீடு இருண்டு கெடந்தது. பக்கத்து வீட்டு வைசாலி பாட்டி, இவனோட பிள்ளையை மடியில போட்டு தட்டிக் கொடுத்துட்டிருக் கதைப் பார்த்த வீரணனுக்கு நெஞ்சு திகீர்னுச்சு. அவன் கேக்க முந்தி அவளே முந்திக்கிட்டா.

‘‘என்ன வீரணா… உம் பொண்டாட்டிக்கும் உனக்கும் எதுவும் சண்டையா?’’

‘‘என்னத்தா சொல்லுத?’’

‘‘பிஞ்சைக்கு அவ கஞ்சி கொண்டுக்கிட்டு வந்தப்ப நீ ஒரு வார்த்த கூட பேசலயாமில்ல. ‘பொறியித வெய்யில்ல கஞ்சி கொண்டு போறேன்… என்னனு ஒரு பேச்சு, ஒரு சிரிச்ச மொவம் இல்லாத மனுசன்கிட்ட காலம் பூரா வாழ்க்க போட என்னால முடியாது’னு சொன்னவ, புள்ளய கூட தூக்காம வேகுவேகுனு கிழக்கு திக்கமா போறா. ஊரு எல்லைய தாண்டுனதும் அம்புட்டுக் கெணறும் வாயத் தொறந்தமான கெடக்கு. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிராம வீரணா’’னு பாட்டி சொன்னதும் அண்டம் கலங்கிப் போய்ட்டான் வீரணன்.

‘‘ஆத்தா… நானு ஒரு கூறுகெட்டவன். வாய் ருசிக்கு ஆசப்பட்டு எம்புத்திய கடன் குடுத்துட்டு அவள பாடா படுத்தி வச்சிட்டேன். நீ சொல்லதப் பாத்தா, என்னயும் எம் புள்ளயவும் நாதியத்தவளா ஆக்கிருவா போலுக்கே… நானு அவள தேடிப் பாத்துட்டு வாரேன் ஆத்தா’’னு புலி பாய்ச்சலா வெளிய ஓடினான்.

ராத்திரி முழுக்க காடு, கெணறுனு அலைஞ்சு, கலைஞ்ச தலையும் கழண்டு போன மனசுமா அவன் திரும்பி வந்தப்போ, அவன் மகன் வைசாலி கையில இருக்கை கொள்ளாம தும்பியா துடிச்சான்.

‘‘ஆத்தா… எந்தேன காணமே ஆத்தா’’னு பிள்ளையை நெஞ்சோட அணைச்சுக்கிட்டு அவன் நெஞ்சு வெடிக்கக் கதறுனப்போ, தேன் மொழியோட தலை, வாசல்ல தெரிஞ்சது. பாய்ஞ்சுபோய் அவளைக் கட்டிக்கிட்ட வீரணன், மேல பேச முடியாம தவிச்சான்.

‘‘எதுக்கு மச்சான் இப்பிடி கெடந்து துடிக்கீரு. நாந்தேன் வந்துட்டேனுல்ல…’’னா தேனு.

‘‘இல்ல தேனு. பெத்தவளக் காணாம இந்தப் புள்ள துடிக்கிறத பாக்க சகிக்கல’’

‘‘ஒத்த நா பொழுது உமக்கு தாக்குப் புடிக்க முடியாம இப்படி பரிதவிக்கீரு. நானு வவுத்து ருசி அறிஞ்சவ. அதேன் உம்ம வாய் ருசிக்காக தாப்பறவய கொல்ல மனசு வரல’’னு அவ சொன்னதும் அவ வாயைப் பொத்தினான் வீரணன்.

‘‘நீ ஒண்ணும் பேச வேணாம் தேனு. நானு இனிமே கறியே திங்க மாட்டேன்’’னு அவளை அணைச்சுக்கிட்டு கதறுனான் வீரணன்.

பாட்டியோட வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டே, ராவெல்லாம் புருசனை காடு முழுக்க அலைய விட்டதை நினைச்சப்போ, தேன்மொழிக்கு அழுகையும், சிரிப்பும் சேர்ந்து வந்தது.

– ஏப்ரல் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *