ஒரு சிறு காதல் கதை

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 24,326 
 

அது ஒரு விசித்திரமான சந்திப்பு என்றுதான் நினைக்கிறேன். அவளை, ஏழுவருடங்களாக,என் மனதில் எப்போதாவது சட்டென்று வந்துபோகும் நினைவில் குடியிருந்தவளை, லண்டனிலுள்ள ஹைட்பார்க்கில் ஒரு மாலை நேரத்தில் சந்திப்பேன் என்று நான் நினைக்கவில்லை. லண்டனில்,என்னுடன் வேலை செயயும் பல நேர்ஸஸின் சுறு சுறுப்பில், மலர்ந்த புன்முறுவலில்,பரிவுபொங்கும் சேவையில்,ஆதரவான வார்த்தைகளில் ‘அவள்’அடிக்கடி என் நினைவுக்குள் வந்துபோவாள்.

லண்டனுக்கு வரும் பல்வேறு நாட்டு மக்களின் கவனத்தைக் கவர்ந்த,அரசியல்வாதிகளுக்காக ஒரு மூலையில் மேடையமைத்துக்கொடுத்திருக்கும், ஹைட்பார்க்கில் மலர்கள் கொஞ்சும் தடாகத்துக்கு முன்னால் உள்ள பென்சில் அவள் உட்கார்ந்திருப்பதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

ஒருவிதத்தில் நான் இன்று பார்க்குக்குத் தனியாக வந்தது நல்ல விடயம் என்று நினைக்கிறேன்.

என் மனைவியிலுள்ள கோபத்தில், தனியாகக எங்கேயாவது காலாற, மனமாறத் திரியவேண்டும்போலிருந்தது. இப்போது இவளைக் காணும்வரை, என்மனதில் எனது வாழ்க்கையை நினைத்துக்குழம்பிக்கொண்டிருந்தேன். அந்தக்குழப்பத்தில் என் மனைவியைத் திட்டிக்கொண்டிருந்தேன். எங்களுக்குள் நடந்த தர்க்கம் இந்த நிமிடம்வரை எனது மனதைக் குழப்பிக் கொண்டிருந்தது. எனது மனைவி ஒரு பேர்த் டேய் பார்ட்டிக்கு வரச்சொல்லிக் கூப்பிட்டாள். நான் ஒரு டொக்டர், லண்டன் ஹொஸ்பிட்டல் ஒன்றில் கசுவல்டி டிப்பார்ட்மென்டில் வேலை செய்கிறேன். ஓயாத வேலையால் களைத்து வந்திருந்தபோது, யாரோ தெரிந்தவர்களின் பிள்ளையின் முதலாவது பேர்த் டேய் பார்ட்டிக்குப் போக என்னை எனது மனைவி கேட்டபோது, வேலைக்களைப்பில் வந்த நான் வரமுடியாது என்று சொன்னதால் சண்டை வந்தது. ஏன் மற்றவர்களின் திருப்திக்காக வேடம் போடவேண்டும்?

சந்தோசமாக இருப்பது மனித உரிமையாம். எனது மனைவி வாதம் செய்தாள். ‘சரி உனது சந்தோசத்தில் நான் தலையிட விரும்பவில்லை,நீ தனியாகப்போகலாம்’ என்று சொன்னேன். அவள் தனியாகச் சென்றாள். ‘அவருக்கு இன்று டியுட்டி’என்று அங்கு பார்ட்டிக்கு வந்திருப்பவர்களிடம் சொல்லியிருப்பாள். லண்டனில் டாக்டராக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று nதிரிந்தவர்கள் அவள் சொல்வதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் எனக்கு, பிள்ளைகளின் பிறந்த நாளைச் சாட்டாக வைத்துக் குடித்துக் கும்மாளம் போடுவது பிடிக்காது.

வேலையால் ஓய்வாக இருக்கும்போது, எங்காவது ஒரு நல்ல இடம்போக வேண்டும், அல்லது, ஒரு நல்ல நாடகம் பார்க்கவேண்டும் அல்லது ஏதோ ஒரு புத்தகம் படிக்கவேண்டும் என்று நான் யோசித்தால்,அது எனது மனைவியின் திட்டத்தால் பாழாகிவிடும்.அவள் எப்போதும், யாரோ ஒருத்தரின் பேர்த்டேய்,அல்லது சாமர்த்தியச் சடங்குப் பார்ட்டி என்ற ஒரு பெரிய லிஸ்டை வைத்திருப்பாள். ஓருகாலத்தில், தமிழ்ச்சமுதாயத்தில்,நெருங்கிய குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன் நடந்த சடங்குகள் இன்ற லண்டனில் பணச்சடங்காகி விட்டதால் அவற்றுக்குப்போவது சமுகக் கடமையாக நினைக்கிறாள் எனது மனைவி.அப்படி ஊதாரிச் செலவு செய்வதை இலங்கையில் பட்டினியால் வாடும் குழந்தைகளுக்குக்கொடுத்தால் என்ன என்று நான் கேட்டால் பெரிய தர்க்கம் வரும்.

சிலவேளைகளில்,நான்,’கணவன்’என்ற எனது அதிகாரத்தைச் சாடையாகக் காட்ட வெளிக்கிட்டால் அவள், இளக்காரமாகப் பேசுவாள். அவள் எனக்குத் தகப்பன் தந்த பெரும்தொகைச் சீதனப் பணத்தை மறைமுகமாகச் சொல்லிக் காட்டுவாள். ‘என்ன துள்ளுகிறீர்கள், நீங்கள் சொல்வதை எல்லாம் நான் உங்கள் அடிமைமாதிரிக் கேட்டுக்கொண்டிருக்கவா அப்பா உங்களுக்கு அவ்வளவு பணம் தந்தார்?’ என்று விளையாட்டாகக் கேட்பதுபோற் கேட்பாள். அவள் கேட்பதன் அர்தங்கள் எனக்குப் புரியும். அவளின் குடும்பம் தந்தபணம்தான் என்னை மேற்படிப்புக்காக லண்டனுக்கு அனுப்பியது. எனது தம்பிகளின் படிப்புக்கு உதவியது. எனது தங்கை நல்ல இடத்தில் திருமணம் செய்துகொள்ள உதவியது.

நாங்கள் மிகவும் கௌரவமான தம்பதிகள். அவள் கொழும்பிலுள்ள ஒரு பெரிய முதலாளியின் மகள். அவள் பிறந்தகாலத்தில், அவள் தாய் போன்ற பணக்காரப் பெண்கள், கொழும்பில் பெரியவர்க்கத்தைச்சேர்ந்த பெண்மணிகள்,கணவர்கள் பணம் சேர்க்கும் முயற்சியில் பிஸியாக இருக்கும்போது,மிகவும்,’சுதந்திரமாக’ வாழ்ந்தவர்கள்.

எனக்கு என் மனைவி வாழ்ந்த ‘மேற்தட்டு வாழ்க்கை’ தெரியும்.அதற்றுள் என்னை அவள் இழுத்துவிட எடுக்கும் முயற்சிகள் எனது வேலையுடன் முரண்படுவதை அவளாற் சகிக்க முடியாதிருக்கிறது. எனது தந்தை ஒரு அரசாங்க உத்தியோகத்தராகவிருந்து மிகவும் கஷ்டமான வாழ்க்கையை நடத்தி என்னைப் ‘பெரிய’படிப்பு படிக்க உதவியவர்.

இன்று எனது மனைவி, எனது நச்சரிப்புக்காக, என்னுடன் இந்தப் பார்க்குக்கு வந்திருந்தால்,’ இவளை’ச் சந்தித்திருக்கமுடியுமா, அல்லது சந்தித்திருந்தாலும் ஒருவார்த்தை பேசியிருக்க முடியுமா?

இந்தப் பார்க் ஒருகாலத்தில் பிரித்தானிய அரசபரம்பரையின் வேட்டைக் காடாகவிருந்தது.இன்று, பார்க்கின் ஒரு மூலையில்,மகாராணியின் பக்கிங்காம் மாளிகையும் அடுத்த பகுதியில் அவர்களின் அடுத்த தலைமுறைவாழும் கென்சிங்டன் மாளிகையுமிருக்கின்றன. நான் அங்கு தனியாக நடந்து கொண்டிருந்தேன்.இந்தப் பார்க்கில் என்னைப் போல் பலர்’தனியாக’ நடந்து கொண்டிருக்கிறார்கள்அவர்களிற் பலர், வேற்றுநாட்டிலிருந்து வந்த உல்லாசப் பிரயாணிகள், அல்லது,லண்டனிற் படிக்கும் மாணவர்கள், அல்லது, தனியாக நடந்து சிந்தனையைச் சீர்படுத்தும் கலைஞர்கள், கவிஞர்களாக இருக்கலாம்.

அவள் அந்த பென்சில் பேப்பர் படித்தபடி உட்கார்ந்திருந்தாள்.அவள்,வெளியிலடிக்கும் குளிருக்குப் போட்டிருந்த ஓவர்கோர்ட்டுக்குள்ளால், அவள் கட்டியிருந்த சேலைக்கரை தரை தட்டிக்கிடந்தது. ஓரு இந்திய,இலங்கைப் பெண்ணாக இருக்கலாம் என்று நினைத்தபடி நடந்தேன். பத்திரிகையைப் பிடித்திருந்த கைகள் யாரையோ ஞாபகப் படுத்தின.அல்லது ஞாபகப் படுத்தியதாக நினைத்துக்கொண்டேன்.

என் இதயத்தை ஏதோ சுண்டுகிறது.

அவளைத் தாண்டிச் சென்ற நான் என்னையறியாமல், சாடையாகத் திரும்பிப் பார்க்கிறேன். அவளுக்குப் பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும் அந்தக் குரல்?

நான்,சுவற்றில் அடித்து வைத்த ஆணிபோல் அப்படியே நின்று அவளை நோக்கினேன் . எனது நிழல் அவளிற் பட்டதும் அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

‘ஹலோ டாக்டர்’ அந்தப் புன்முறுவல் அழியாத ஒரு கலைப்படைப்பு.

நான் ஹலோ என்கிறேன் என் குரல் அவளுக்குக் கேட்டிருக்குமோ தெரியாது,எனது வார்த்தைகள் தொண்டைக்குள்ச் சிக்கி விட்டன,அந்த அளவுக்கு நான் ஆச்சரியத்தால் திகைத்து விட்டேன்.

என் ஆச்சரியம் அவளுக்குச் சிரிப்பைத் தந்ததோ என்னவோ அவள் மெல்லமாகச் சிரித்தாள். அவள் சிரிப்பு மல்லிகை குலுங்குவதை ஞாபகப்படுத்துபவை.

நானும் சிரித்தேன். நான் ஒவ்வொருநாளும் எனது நோயாளிகளைப்பார்த்துச் சிரிக்கும் உத்தியோக பூர்வமான சிரிப்பல்ல அது,எனது அகமும் முகமும் மலர்ந்த சிரிப்பு.

நான் இன்று லண்டனில் உத்தியோகம் பார்க்கும் ஒரு பெரிய டாக்டர்.அவள் என்னுடன் ஒரு காலத்தில் ஒன்றாக வேலை செய்த நேர்ஸ். நான் நினைத்தால் ‘ஹலோ’ என்ற ஒரு வார்த்தையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துபோயிருக்கலாம். அது என்னால் முடியாது என்பது என் மனச்சாட்சிக்கு மட்டும்தான் தெரியும்.

‘நாங்கள் ஒருநாளும் காதலர்களாக இருக்கவில்லை.

இருந்தாலும்……?

எங்களுக்கிடையில் நாங்கள் இருவரும் வாய்விட்டுச் சொல்லாமல்,மனம் தெரிந்து பழகியபின்,நீர் சிந்தி அழாமல் நெஞ்சுருகிப் பிரிந்த உறவு அது.

பகலில் பார்த்த மலர் முகம் இரவின் கனவில் வந்து என் இளமையை வதைக்கப் பண்ணிய உறவு அது.

எனது வாழ்வின் இறுதி நாட்களில்,எனது வாழ்க்கை ஏனோ தானோ என்றிருந்தது என்று நினைத்துக் கொண்டு செத்துத் தொலைக்காமல்,ஆத்மீகரீதியாக ஒருத்தியின் அன்பைக் கவர்ந்த,பழகிய.அந்த உறவில் காதல் என்றால் என்ன என்று புரிந்துகொண்ட நிம்மதியின்; சுவாலையாக எனனுடன் கலக்கும் உறவு அது.

அது அவளுக்குத் தெரியுமோ என்னவோ தெரியாது,அவை எனக்குள்ப் புதைத்துக்கொண்ட புனித ஞாபகங்கள் அவை.

ஏழுவருடங்களின்பின்,அந்நிய நாட்டில், தனிமையில் ,எதிர்பாராத நிலையில் சந்தித்துக்கொண்ட தவிப்பின் தர்மசங்டமான அதிர்ச்சியிலிருந்து இருவரும் மீழ ஒன்றிரண்டு நிமிடங்கள் எடுத்தன.

அவள் என்றுமே அவளின் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளவில்லை. தன் தவிப்பை என்னிடமிருந்து மறைக்க அந்தக் குழந்தையின் மீதுபார்வையைச் செலுத்தினாள். அந்தக் குழந்தை அவளின் குழந்தையாகத்தானிருக்கும். அந்தச் சிரிக்கும் கண்கள் இவள் பரம்பரைக்குத்தான் சொந்தம்.

அந்தப் பார்க் நிறைய மனிதர்கள். நாங்கள் இருவரும் சில நிமிடங்கள் மௌனமாகவிருந்தோம்.

அவளைப் பிரிந்தகாலத்தில் மனம் விட்டுப் பேச முடியாத விடயங்களை, வாழ்க்கை தந்த அனுபவத்தின் முதிர்ச்சியில் இன்று அவளிடம் மனம் விட்டுப் பேசவேண்டும்போல் என்னையறியாமல் எனக்குள் ஒரு ஆவேசம் வந்தது.

ஆனால் பழைய நினைவுகளைத் தேவையில்லாமல்க் கிண்டி அவளையும் உன்னையும் குழப்பாதே என்று என் அடிமனம் ஆணையிட்டது.

அவளுடன் எதைப் பேசுவது?

முன்பின் தெரியாத மனிதர்களைந் சந்தித்த அல்லது, என்ன விடயத்தைப்பற்றிப் பேசுவது என்று தெரியாத தர்மசங்கடமான நேரங்களில் ஆங்கிலேயர்கள் காலநிலைபற்றிப் பேசுவார்கள்.

அப்படிப் பேசிப் பழகிய எனக்கு அந்த விடயம் சட்டென்று வாயில் வந்து விட்டது. இது; பங்குனி மாதம் குளிர் குறைந்துகொண்டுபோகும் மாதம்.

இந்தப் பிற்பகல் நேரத்தில்,இலங்கையின் முற்பகல் பத்துமணி வெயிலடிக்கிறது.

ஆனால் சாடையான குளிர் காற்றால் வெயிலின் உஷ்ணம் தெரியவில்லை. தூரத்திலுள்ள, பேச்சாளர்கள் மூலையில் (‘ஸ்பீக்கர் கோர்ணரில்’),ஒரு அரசியல்வாதி, ‘முதலாளித்துவத்தின் அந்திமகாலம்’ பற்றி மிக ஆவேசமாகப் பேசுவதை ,அங்கு குவிந்திருக்கும் பல நாட்டு மக்களும் கேட்டுக் கைதட்டுகிறார்கள், அல்லது அந்தப் பேச்சாளருடன் தர்க்கம் செய்கிறார்கள்.

நாகரீகம் என்ற பெயரில், பல தரப்பட்ட உடையலங்கார, முக அலங்கார,தலையலங்காரங்களுடன் பவனி வரும் ஹிப்பிகள் அல்லது ‘பங்க்’ எனப்படும் வித்தியாசமான இளம் தலைமுறையினரை அவள் குழந்தை பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.

நாங்கள் சந்தித்து சில நிமிடங்களாகி விட்டன. நான் இன்னும் நின்றுகொண்டிருக்கிறேன். அவள் இருக்கும்; பென்சில் நான் உட்கார்வதற்கு அவள் நகர்ந்து கொடுக்கிறாள்.

இருவரின் மௌனத்தையும்,’எப்படிக் குளிர்’ என்ற கேள்வியுடன் நான் முடித்து வைக்கிறேன்.

‘பரவாயில்லை..ஆனாலும் இந்த வருடம் குளிர்,போனவருடம் மாதிரி; அவ்வளவாக இல்லை என்றுதான் நினைக்கிறேன். அவளும் எதையாவது பேசவேண்டும் என்பதற்காகப் பேசுகிறாள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

‘ஆனாலும் இது ஒரு நல்ல மாலை நேரம்’ நான் அப்படிச் சொன்னது எனக்குப் பிடித்தது. ஏழு வருடங்களுக்குப் பின் அவளைக் கண்டிருக்கிறேன்! அது நல்ல மாலை நேரமில்லாமல் இருக்கமுடியுமா?

இந்தப் பாhக்கில் பல இடங்களில் உட்கார்ந்திருக்கும் முன்பின் தெரியாதவர்கள்போல் நாங்கள் இருவரும் உடகார்ந்திருக்கிறோம்.

ஓருகாலத்தில், ஒருமேசையின் இருபக்கங்களிலும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டு உத்தியோக ரீதியில், வாயால் ஒன்றைப் பேசி, மனதில் இருப்பவற்றைக் கண்களால் பேசி ஒருத்தரை ஒருத்தர் உளமார விரும்பியதை உலகுக்குக் காட்டாமல் கடமை செய்த நாட்களில்,இப்படியான சூழ்நிலையில் ஒருநாள் சந்தித்து தவிப்போம் என்று நானோ அல்லது அவளோ கற்பனை செய்திருப்போமா?

அவள் எங்கேயோ எதையோ பார்க்கும் பாவனையில் முகத்தை வைத்திருக்கிறாள். நான் திரும்பி அவளின் முகத்தை ஆராய்கிறேன். எனது பார்வை அவள் முகத்தைத் தாண்டிப் போய் அவள் உள்ளத்தை எடைபோட நினைப்பது அவளுக்குப் புரியும். அவள் முகத்தில் பெரிதாக ஒரு மாற்றமும் இல்லை.

நான் இப்போது வசதி படைத்த ‘பெரிய டாக்டர்!

ஓருகாலத்தில் கற்றுக் குட்டி டாக்ராக அவளுடன் வேலைசெய்தபோது?

நாங்கள் என்னவாக இருந்தோம்?

இளமையின் துடிப்பில் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோமா? காதலர்களாக இருந்தோமா? அப்படி நினைக்கப் பயப்படுகிறேன். அவளோடு பழகும்போதும் எனது உண்மையான உணர்வுகளுக்குப் பயந்தேன். பயப்படமலிருந்தால் நான் இன்ற லண்டனில் மேற்படிப்பு படித்த டாக்டராக இருக்கமுடியாது.

எதிர்கால நன்மைகளுக்காகப் பெரும் சீதனத்துக்காக என்னை விற்றுக்கொண்டு, உலகத்துக்குக்குப் பயந்து போலி வாழ்க்கையுடன், திருப்தி தராத மணவாழ்க்கைiயில் நிம்மதியற்று அவதிப்படுவதுதான் என் வாழ்க்கையின் நியதியா?

நிம்மதி என்றால் என்ன?

எனது சீதனத்தால் எனது தங்கை நல்ல வசதியுள்ள மாப்பிள்ளையைத் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறாள். தம்பிகள் இருவரும் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்கள். எனது தாய் அதைப்பார்த்து நிம்மதியாக வாழ்ந்து மறைந்து விட்டாள். இவளுடன் வேலை செய்தகாலத்தில் எனது மனதில் உண்டான சலனத்தால், எனக்கு சீதனத் கொடுக்க வசதியற்ற இவளைத் திருமணம் செய்திருந்தால் எனது குடும்பத்தின் நிலையென்ன?

அவளின் குழந்தை,அந்த இடத்தைத் தாண்டிப் போகும், ‘ஹிப்பிகளைக்’கண்டு கைகொட்டிச் சிரித்ததுபோல் என்னையும் பார்த்துக் குழந்தைத்தனமாக, வஞ்சகமின்றிக் கை கொட்டிச் சிரிக்கிறது.

‘சிரி சிரி ஒருகாலத்தில் உனது தாயை மனமார விரும்பிவிட்டு பணத்திற்காகத் தன் மனச்சாட்சியை விற்றுக்கொண்டவனைப் பார்த்துச்சிரி’ என்று அலறவேண்டும்போல ஒரு பைத்திய உணர்வு வந்து மறைந்தது. அவளின் குழந்தையை வாஞ்சையுடன் பார்க்கிறேன்

பணவசதி நிறைந்த எங்கள் திருமணத்தில் ஒரு குறை அது. எங்களுக்குக் குழந்தைகள் கிடையாது. ஓரு குழந்தையைத் தத்தெடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

அவள் குழந்தை தன்னைச் சுற்றியிருக்கும் மலர்களையும் மனிதர்களையும் பார்த்து சந்தோசப் படுகிறது. எத்தனையான அழகான குழந்தையது? அதன் தகப்பனாக நான் இருந்திருக்கக் கூடாதா? அதற்கு எனக்கோ அவளுக்கோ விதியிருக்கவில்லையா?

………………………………………………….

……அந்த முதல் நாள்..அவளைச் சந்தித்த முதல் நாள்.

அன்றைக்கே இவள் தனது நேர்மையான, கடமைதவறாத, காருண்யமான சேவைத் திறனால் என்னைக் கவர்ந்துகொண்டாள்.

நான் அந்த ஹொஸ்பிட்டலுக்கு டியுட்டிக்குப் போன முதல் நாளது. இலங்கையில் மிகப் பிரபலமான ஒரு சேர்ஜனுடன் வேலைசெய்ய சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் சந்தோசமான விடயமாகவிருந்தது. காலையில் வேலை தொடங்கியதும் வார்ட்டுக்குப் போய் சத்திரசிகிச்சைக்குப் போகும் நோயாளிகளுக்கான பரிசோதனைகளைச் செக் பண்ணி விட்டுத் தியேட்டருக்குச் சென்றேன்.அன்று பகல் முழுதும் நிறைய ஆபரேசன்கள் நடந்தன. முழுநாளும் ஆபரேசன் தியேட்டரிலில் கழிந்தது.

இரவு எட்டு மணிக்கு, அன்று சத்திரசிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகளின் நிலையைச் செக் பண்ண வார்ட்டுக்குச் சென்றேன். அன்று காலையில் எனது ஸ்டெதஸ்கோப்பை வார்ட்டில் விட்டுவிட்டு வந்தது ஞாபகம் வந்தது. அதனால் எனது கழுத்தில் ஸ்டெதஸ்கோப் இல்லை. லண்டனில் டியுட்டி டாக்டர்கள் தங்கள் டியுட்டி முடியும் வரை அவர்களின் வெள்ளைக்கோட்டையோ ஸ்டெதஸ்கோப்பையோ கழட்டமுடியாது.இலங்கையில் அப்படியல்ல. இரவு வார்ட் ரவுண்ட் செய்யப்போகும் டாக்டர்கள் பெரும்பாலும் வெள்ளைக்கோட்டை மாட்டிக்கொண்டு போவது குறைவு.

நானும் அன்றிரவு, ஸ்டெதஸ்கோப்,வெள்ளைக்கோட் இரண்டுமில்லாமல் வார்ட்டுக்குள் நுழைந்தேன். அவள் நேர்ஸஸ் ஸரேசனில் உள்ள மேசையிலிருந்து குனிந்தபடி ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள்.

சில நோயாளிள் மெல்ல மெல்ல அங்கும் இங்கும் நடந்து போய்க்கொண்டிருந்தாள.;நான் போவதை அவள் கவனிக்னவில்லை என்று தெரிந்ததும் அவளின் கவனத்தைத் திருப்ப மெல்லமாக மேசையிற் தட்டினேன்.

நிமிர்ந்தவளின் கண்களில் நெருப்புப்பொறிகள் பறந்தன. நேரம் தவறி,அல்லது காவலாளிக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, நோயாளியைப் பார்க்கவந்த பார்வையாளர்களில் ஒருத்தரென என்னை நினைத்து விட்டாள் என்பது அவளின் அக்கினி பறக்கும் பார்வையில் பிரதிபலித்தது.

‘பார்த்தால் படித்தவர் போலிருக்கிறீர்கள்,இப்படி நேர காலம் கெட்ட நேரத்தில் ஒரு சத்திரசிகிச்சை வார்ட்டுக்குள் நுழையக் கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா?’

அவள் கடமையுணர்ச்சியில் என்னிடம் கர்ச்சித்தபோது நான் திடுக்கிட்டு விட்டேன்.அவளிடம் எனது உத்தியோக ‘தோரணையில்’ வராததற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்போல் உடனடியாகத் தோன்றினாலும் எனது ஆண்மை அவளிடம் மன்னிப்புக் கேட்க மறத்தது.

நான் புதிதாகச் சேர்ந்த டாக்டர் என்ற சொன்னேன். எனது பெயர் அவளுக்குப் பக்கத்திலுள்ள டியுட்டி டாக்டர்கள் லிஸ்டில் கிடந்ததைச் சுட்டிக் காட்டினேன்.

அந்தச் சந்தர்ப்பத்தில் அவளில் வந்த கோபம் எனது மனதில் குறுகுறுத்துக்கொண்டிருந்தது.

‘ஓ, நீங்கள்தான் இன்ற வேலை தொடங்கிய புது டாக்டரா..நான் யாரோ நோயாளியைப் பார்க்க வந்த விசிட்டர் என்று நினைத்து விட்டேன்.எனதுபெயர் ஸ்ராவ் நேர்ஸ் கருணா’அவள் அறிமுகம் செய்துகொண்டாள்.

அவள் மன்னிப்புக் கேட்டாள் ஆனாலும், உத்தியோக தோரணைற்ற உடுப்பகளுடன்; வந்து பிரச்சினை தருவது சரியில்லை என அழுத்தம் திருத்தமாகச்சொன்னாள்.

அன்று பகல் ஆபரேசன் செய்த ஒரு நோயாளியின் நிலைமை சரியாயில்லாததால்,அன்றிரவு முழு நேரமும் அந்த வார்ட்டிலேயே நிற்கவேண்டி வந்தது. ஏனக்கு அன்று எனது புது வேலையின் முதலிரவு. பெரிய சேர்ஜனின் வைத்தியக் கோட்பாடுகள் தெரியவில்லை.ஒவ்வொரு சேர்ஜனும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் வைத்திய முறைகளைக் கையாளுவார்கள்.அந்த வார்ட்டில் ,அந்த சேர்ஜனுடன் அவள் வேலைசெய்த அனுபவத்தால் எனக்கு அன்று நிறைய உதவி செய்தாள். ஆரம்பகால டாக்டர்களுக்கு நேர்ஸ்மார் ஆசிரியைகளாகவிருந்து சொல்லிக்கொடுப்பவை எவ்வளவு முக்கியமானவை என்று எனக்;குப் புரிந்தது. அன்று அவள் எனது ஆசிரியை. மிகவும் ஆபாயமான நிலையிலிருந்த நோயாளிக்குத் தேவையான சிகிச்சை செய்ய அன்று சில நேர்ஸசும் டாக்டர்களும் படாதபாடு பட்டோம்.

ஏனக்குச் சாப்பிடக்கூட நேரம் கிடைக்கவில்லை.அவள் ஒரு சகோதரிமாதிரித் தனது பிளாஸ்கிலிருந்து எனக்குக் காப்பி ஊற்றித்தந்தாள். அவளது அன்பும் கனிவும் சேர்ந்த சேவை எனக்குப் பிடித்துக்கொண்டது. அந்த முதல் நாளே அவளை எனக்கு அபரிமிதமாகப் பிடித்துக்கொண்டது.சிரித்த முகமும் சுறுசுறுப்பான சேவை மனப்பான்மையம் அவளுக்கு இயற்கையாக அமைந்திருந்தது.

டாக்டர்ஸ் விடுதியில் எனது நண்பனுடன் அவளைப் பற்றிச் சொன்னபோது,’ டேய் மச்சான், இந்த நேர்ஸஸ் இப்படித்தான்,சிரிச்சு மயக்கிப் பிடிக்கப் போடுங்கள்,கவனமாக இரு’ என்று அட்வைஸ் தந்தான்.

அவள் என்னைப் ‘பிடிக்கவில்லை’ நான்தான் அவளை எனது மனதில் பிடித்து வைத்துக்கொண்டிருந்தேன். இருவரும் சொற்ப நாட்களுக்குள் மிகவும் நெருங்கிப் பழகி விட்டோம்.இரவும் பகலும் ஒன்றாக நெருங்கி வேலை செய்யும்போது,எத்தனை டாக்டர்கள் அவர்களுடன் வேலை செய்யும் நேர்ஸ்மாரைக் காதலிக்காமற் தப்பினார்கள் என்ற உண்மையை மனம்விட்டுச் சொல்வார்களா?

ஏன் பல டாக்டர்கள் நேர்ஸ்களைக் காதலித்துவிட்டுக் கல்யாணம் செய்யாமல் ஓடிவிடுகிறார்கள்? நானே அதற்கு உதாரணம். நான் எனது குடும்பத்தின் முதற்பிள்ளை. எனது கடைசி வருடப் படிப்பு நேரத்தில் எனது தகப்பன் இறந்து விட்டார்.எனக்குக் குடும்பப் பொறுப்புக்கள் பல இருக்கின்றன. எனக்குக் காதலிக்க உரிமைகிடையாது. நல்ல விலைக்கு விலைப்பட வேண்டியது எனது கடமை.

இளம் டாக்டர்களினதும் தாதிமாரினதும் நெருக்கமாக வேலை செய்யும் வாழ்க்கை முள்ளில் நடப்பதற்குச் சமம்.அவளிடம்’ காதல்’செய்து விட்டு என்னால் ஓடவும் முடியாது. நான் ஆண் எனக்கொன்றம் நடக்காது பெரிய சீதனத்தில் நான் எனது எதிர்காலத்தையமைப்பேன்.அவள் பாவம், அவளை ஆட்டக்காரி,என்று பல மாதிரியான பெயர்களில் அழைப்பார்கள்;.

அவளை விட்டு விலகிப் பழக என்னால் முடியவில்லை சிலவேளை அவளைக்கனவு கண்டு விழித்திருக்கிறேன்.அவள் நைட்டியுட்டியாயிருந்தால் ஏதோ ஒரு சாட்டுச் சொல்லிக்கொண்டு வார்ட்டுக்கப்போவேன். அவள் குறும்புத் தனமாகச் சிரிப்பாள்.’என்ன டியுட்டி என்ற கனவு கண்டிPர்களா’ என்று வேடிக்கை செய்வாள்.

‘ உன்னைக் கனவு கண்டு ஓடிவந்தேன்’ என்ற சொல்லிவிட்டு,நாணத்தால் அவள் முகம் சிவப்பதைப் பார்க்கத் துடிப்பேன்.. ஆனால் எனது ‘கவுரவம் அப்படி நேர்மையாக என்மனதைத் திறந்து உண்மை சொல்ல விடாது.’இன்றைக்கு ஆபரேசன் செய்த நோயாளி எப்படியிருக்கிறார் என்ற பார்க்கவந்தேன்..’நான் மென்று விழுங்கிப் பொய் சொல்லுவது அவளுக்குத் தெரியும். ‘நீங்கள் இன்று டியுட்டியில்லை, இப்படி கண்ட நேரத்தில் வந்தால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்?’அவள் மெல்ல முணுமுணுப்பாள்.

‘நான் யாருககுப் பயப்படவேண்டும்’ நான் சொல்வேன்.

‘இப்போது உங்கள் சிகிச்சை யாருக்கும் தேவையில்லை’ அவள் குறும்பாகச் சிரிப்பாள்.

‘நான் என் தேவைக்கு வந்தேன்’ நான் வேடிக்கையாகச் சொனேனேன். என் தேவை என்ன?

என் மனதுக்குள் போராடினேன்.

அவளை எப்படி என் மனதிலிருந்து அகற்றுவது?

ஓரு நாள் ஏதோ ஒரு சின்ன விடயத்தில, அவள் செய்த ஒரு சின்னப் பிழையைப் பெரிதாக்கி பெரிய சேர்ஜனிடம் அவளை மாட்டி வைத்து விட்டேன்.அவள் மிகவும் கெட்டிக்கார நேர்ஸ். சேர்ஜனுக்கு அவளில் நல்ல மரியாதை. ஆனாலும் அன்று அவர் யார் முகத்தில் விழித்துக்கொண்டு வேலைக்கு வந்தாரோ தெரியாது,நோயாளிகளுக்கு முன்னால் அவளைக் கண்டித்துப் பேசி விட்டார்.

நான் அதை ஒரு வினாடியும் எதிர்பார்க்கவில்லை. ‘எனக்கு ஏன் இந்த அநியாயம் செய்தாய்?’ என்பதுபோல் என்னைப் பார்த்தாள்.அவள் கண்கள் கலங்கியிருந்தன. என் உயிரே துடிப்பது போலிருந்தது.அவள் கண்ணீரை என்னாற் சகிக்க முடியாது என்ற உண்மை அந்த நிமிடம்தான் எனக்குத் தெரிந்தது. ஓடிப்போய் அவள் கண்ணீரைத் துடைக்க மனம் துடித்தது. ஆனால் எனது கவுரமான ‘நான் ஒரு டாக்டரென்ற பெரிய தனம்’ அதைத் தடுத்தது.

அந்தக்கால கட்டத்தில் எனது வீட்டில் எனது ‘தகுதிக்கு’ விலை பேசிக் கல்யாணம் பேசிக் கொண்டிருந்தார்கள்.அவளின் கண்ணீரைத் துடைக்காததற்கு அந்தச் சீதனத்தொகை ஒரு காரணமென்பது எனக்குத் தெரியும்.

அன்றிரவு முழுதும் எனக்கு நித்திரை வரவில்லை. அவளின் கலங்கிய கண்கள் கனவிற் ;தோன்றி வருத்திக்கொண்டிருந்தன. அன்றைக்கு என்நிலை எனக்குப் புரிந்தது. ஆத்மீகத்தின் அபிலாசைகளைக் கொன்றுவிட்டு, பெரும்பாலான மனிதர்கள்போல் பணத்துக்காக வாழப்போகிறேன்.

அவளிடம் மனப் பூர்வமான மன்னிப்புக் கேட்கத் துடித்தேன்.

ஆனால் அடுத்த நாள் அவளை வார்ட்டில் சந்தித்தபோது என்னால் அதைச் செய்யமுடியவில்லை.

அவளிடம் என்னையிழக்க நான் தயாரில்லை என்ற நிர்ப்பந்தம் எனது மனச்சாட்சியை வதைத்தது.

எனது தங்கையின் நல்வாழ்வு, தம்பிகளின் எதிர்காலத்திற்காக எனது சுய உணர்வுகளை குழி தோண்டிப் புதைப்பதைவிட வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

அடுத்த நாளிலிருந்து நாங்கள்,ஒன்றாக வேலை செய்யும் வெறும் உத்தியோகத்தர்களாக நடக்க முயற்சித்தோம். அவளின் சோகமான முகம் என்னை வருத்தியது. என்னையும் மீறிச்சில நேரம் அவளுடன் வேடிக்கையாகப் பேசி பழையபடி அவளை மகிழ்வாக்கவேண்டும் என்ற எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது.

‘நீங்கள் டாக்டர்,நான் நேர்ஸ் இருவரும் நோயாளிகளின் சுக நலத்திறகாக் கடமையாற்றுகிறோம். அதற்குமேல் தனிப்பட்ட முறையில் வேடிக்கை சொல்லிச் சிரிக்க எங்களுக்குள் ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்’அவள் என்னை ஒதுக்கிவைத்துப் பேசினாள். எனக்கு ஆத்திரம் வந்தது.அவளிடம் நான் மண்டியடத் தயாரில்லை. கோபத்தில் கையில் வைத்திருந்த ஏதோ ஒரு றிப்போர்ட்டை அவளுக்கு முன்னால் எறிந்து விட்டு வந்தேன்.

அடுத்த நாள் அவள் டியுட்டிக்கு வரவில்லை. அடுத்த இருநாட்களும் வரவில்லை.என்னிலுள்ள கோபத்தில் லீவு போட்டுவிட்டாள் அல்லது மேட்ரனிடம் சொல்லி வேறு வார்ட்டுக்குப் போய்விட்டாள் என்று நினைத்தேன். நான்காம்; நாளும் அவள் வரவில்லை. மனம் ஏதோ செய்தது. அவளின் சினேகிதியின் அவளுக்கு என்ன நடந்தது என்ற கேட்டேன், வயிற்று வலியுடன் அவள் படுத்திருப்பதாகச் சொல்லப் பட்டது. உடனே போய் அவளைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.

அடுத்தநாள் அவள் எங்கள் வார்ட்டில் நோயாளியாக அனுமதிக்கப் பட்டாள். முகம் வெளுத்து,வலியுடன் துவண்டுகொண்டிருந்தாள். அவளையணைத்து ஆறுதல் சொல்லவேண்டும்போலிருந்தது.. அவசரமாக அவளுக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. அவளுக்குச் சிரமம் கொடுத்த பெரும் குடலின் கடைசிப்பகுதியான ‘அப்பெண்டிக்ஸ்’துண்டு வெட்டுப்பட்டது.

நான் அவளைப் பராமரிக்கும் டாக்டர். ஆபரேசன் தியேட்டரில் பெரிய சேர்ஜன் அவளுக்கு ஆபரேசன் செய்யும்போது நான் உதவி டாக்டரனானேன். ஆபரேசன் முடிந்து அவள் கண்விழித்தபோது அவளுடைய சினேகிதிகள் சூழ்ந்துகொண்டு அவளுக்குப் பணிவிடை செய்தனர். நான் எனது டியுட்டியைப் பார்க்க அவளிடம் சென்றேன் அவள் விழித்திருந்தாள்.

நான் அவளது கையைப் பிடித்து நாடி பார்த்தேன். ஆபரேசன் செய்த நோவிலும் அவள் களுக்கென்று சிரித்தாள்.’ நாடியின் எண்ணிக்கையைப் பார்க்க ஒரு நிமிடம் போதும்’அவள் குறும்பாகச் சிரித்தாள்.அப்போதுதான் அவளது கையை நீண்டநேரம் நான் பிடித்தக்கொண்டிருந்தது தெரிந்தது.

அவள் ஒரு நேர்ஸ் எத்தனையோ ஆண்களைத் தொட்டுப் பராமரித்திரக்கிறாள் ஆனாலும் எனது பரிசம் அவள் முகத்தைச் சிவக்கப் பண்ணியது. நான் அவள் கையைப் பிடித்தபடி அவள் முகத்தை உற்று நோக்கினேன். அவள் இப்போது எனது நோயாளி என்ற முறையில் அவளைத் தொட எனக்கு உரிமையுண்டு. ஆனால் எனது பரிசத்தின் அர்த்தம் அவளுக்குப் புரியும். இருவரும் ஒரு சில நிமிடங்கள் ஒன்றும்பேசாமல் ஒருத்தரை ஒருத்தர் ஆழமாகப் பார்த்தோம். எனது கண்களில் என்ன கண்டாளோ தெரியாது, அவள் கண்கள் பனித்தன.

என் கண்களில் என்ன கண்டிருப்பாள்? நான் உன்னை மிக மிக விரும்புகிறேன், ஆனால் எனது வாழ்க்கை; பிரச்சினையால் நான் உன்னுடையவனாக இருக்கமுடியாது என்ற எனது துயரை எனது கண்கள் சொல்லியிருக்குமா?

அந்த நிமிடத்தில் பணத்தின் அடிப்படையில் வாழ்க்கையின் அர்த்தங்களையேமாற்றும் கொடிய வாழ்க்கைமுறை மாறவேண்டும் எனப் பிரார்த்தித்தேன்.என்னைப்போல் எத்தனை மனிதர்கள் ஆத்மாவின் அபிலாசைகளைக் பறிகொடுத்த பாவிகளாக வாழ்கிறார்கள்?

அவள் ஆபரேசன் சிகிச்சை முடிந்த வீடு திரும்பியபோது, நாங்கள் பழையபடி சமாதானமாகிவிட்டோம்.

எனது கல்யாணம் சரிவந்ததும், எனக்கு பிரமாண்டமான சீதனம் கிடைத்ததும் நான் லண்டனுக்குப்போகவிருப்பதும் அங்கு எல்லோருக்கம் தெரிந்த இரகசியமாகிவிட்டது.அவள் என்னைப் பார்த்து ஏங்கவில்லை பெருமூச்ச விடவில்லை. மற்றவர்கள்மாதிரி, ‘காங்குராட்யுலேசன்’என்று சொன்னாள்.

அந்த வார்ட்டில் ஒரு வருடசேவை செய்தபின் எனக்கு வேறு இடத்திற்கு மாறுதல் வரப்போகிறது.

எனது சக டாக்டர் ஒருத்தனின் திருமண வீட்டுக்கு எனது காரில் அவளும் இன்னும் சில தாதிமாரும் வந்தார்கள். அவளை நான் ஒருநாளும் சேலை கட்டியபெண்ணாகக் காணவில்லை. பட்டுச்சேலை கட்டிய தேவதையாக வந்து காரில் ஏறினாள். பார்க்க அழகாக இருந்தாள். நீலப்பட்டுச்சேலை அவளை ஒரு வானத்துத் தாரகையாகக் காட்டியது.

எனது எதிர்கால மனைவிக்குப் பணமிருக்கிற மாதிரி, அவளைப் பார்ப்வர்களைக் கவரும் அளவுக்கு கவர்ச்சி என்ற எந்த அறிகுறியும் கிடையாது. என் மனைவி பெரிய விலையில் எவ்வளவு ஆடம்பரமாக உடுத்திக்கொண்டாலும் இவளுக்கு நிகராகமுடியாது என்பதை எந்த முட்டாளும் சொல்வான்.

காரில் ஏறிக் கொண்ட பெண்கள் கல கலவென்ற எதையோ எல்லாம் பேசிக்கொண்டவந்தார்கள். கார்க்கண்ணாடிவழியாக அவளை ரசித்தேன்.அவளை நான் பார்ப்பதை அவள் தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

போகும் வழியில், கல்யாணம் செய்யப்போகும் டாக்டரைப் பற்றிப் பேச்சு வந்தது.

அவன் ஒரு நேர்ஸைக் காதலித்துக் கைவிட்டதாகவும்,இப்போது பெரிய சீதனத்திற்காகப் பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்த கொள்வதாகவும் பேசிக்கொண்டு வந்தார்கள்.

அவர்களின் பேச்சு என் மனதில் உறைத்தது.

‘சிலருக்குப் பெரிய குடும்பப்பொறுப்புக்கள் உள்ளன. அதற்குப்பணம் தரும் நேர்ஸஸ் யாரையும் கட்டிக்கொள்ளத் தயார்’ விளையாட்டாகச் சொல்வதுபோல் நான் சொன்னேன்.

‘உங்களுக்கப் பெரிய சீதனம் தரும் வசதியிருந்தால் ஏன் நாங்கள் இரவுபகலாகக் கஷ்டப்பட்டு மற்றவர்களுக்கச் சேவை செய்கிறோம’ அவள்தான் சொன்னாள். அவள் குரல் நெகிழ்ந்திருந்தது,எனது நெஞ்சில் நெருஞ்சிமுள் பதிந்த உணர்ச்சி.

எனக்குத் தந்த பிரியாவிடை நேரத்தில் அவள் எல்லோரையும்போல் எனது பிரகாசமான எதிர்காலத்திற்கு எனக்கு வாழ்த்துச் சொன்னாள். அவள் கண்கள் குளமாகியிருந்தன.

காரில் அடிபட்டுக் காயம் வந்த எனது நோயாளி ஒருத்தனுக்குத் தையல்போடும்போது,அவள் சொன்னாள்’ நீங்கள் ஒரு சேர்ஜனாக இருந்தால் நல்ல பெயர் எடுப்பீர்கள். சிதிலமடைந்த தசையை இவ்வளவு சீராகத் தைக்கிறீர்கள். உங்களிடம் வந்த நோயாளிகள் பெரும்பாலும் நல்ல குணமடைந்து வீட்டுக்குப் போகிறார்கள் நீங்கள் ஒரு நல்ல கைராசிக்காரன்’ என்று பாராட்டினாள்.

‘நீ எனது நேர்ஸாக என்னுடனிருந்தால் எனக்கு எப்போதும் நல்ல கைராசி இருக்கும் என்ற நினைக்கிறேன்.’என்று நான் சொன்னேன்.

‘நாங்கள் இனி சந்தித்துக் கொள்வோம் என்று நான் நினைக்கவில்லை’ இதுதான் எனது பிரியாவிடை அன்று அவள் சொன்ன கடைசி வார்த்தைகள்.

…………………. …………………….. …………………….

இன்று ஏழுவருடங்களுக்குப்பின் சந்தித்திருக்கிறோம்.

நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது.குளிர் கூடிக்கொண்டுவருகிறது. என்னைப் பற்றிக் கேட்கமாட்டாளா என்று மனம் ஏங்கியது.

தூரத்தில்,படலம் கிளப்பிக்கொண்டோடும் குதிரைகளைக் கண்டு பயந்த அவள் குழந்தை தாயை ஓடிவந்து கட்டிக்கொண்டது.

அவள் என்னைப் பற்றிக் கேட்டால் எனது வாழ்க்கையைச் சொல்லியிருப்பேன்.அவள் எனது ஆத்மாவின் ஒருபகுதிமாதிரியிருந்தவள். ஆனால் அவள் கேட்கவில்லை.

அவள் நல்ல நிலையிலிருக்கிறாள் என்பது அவளைப் பார்த்தும் புரிந்தது. பழையமாதிரி அவள் என்னுடன் பேசவேண்டும் என்ற நினைப்பது முட்டாள்த்தனமாகப் பட்டது.

அவளைப் பற்றி, அவளிடமிருந்த அறிய,’எப்போது லண்டனுக்கு வந்தீர்கள்?’ என்று கேட்கிறேன்.

‘எனது கணவரின் மேற்படிப்புக்காக ஐந்து வருடங்களுக்கு முன் லண்டனுக்கு வந்தோம்’;.

நான் லண்டனுக்கு வந்த நான்கு வருடங்களாகின்றன.அவள் எனக்கு முதலே லண்டன வந்திருக்கிறாள்!

லண்டனுக்கு மேற்படிப்புக்க வரத்தானே நான் பெரிய சீதனத்தில் என்னை விற்றுக்கொண்டேன்?

மனைவியிடம் தகராறு பட்டுக்கொண்டு நான் தனியாகப் பார்க்குக்கு வந்ததுபோல் இவளும்……?’

‘உங்கள் கணவர் எங்கே’?

‘அவரின் தாய்க்குச் சுகமில்லை.. ஊருக்குப் போயிருக்கிறார். மகனுக்குச் சுகமில்லாதபடியால் நான் போகவில்லை

நான் குழந்தையைப் பார்க்கிறேன் துடிப்பான குழந்தை.

‘ஆள் நல்ல கெட்டிக்காரனாக இருப்பான்போலத் தெரிகிறது’ நான் எனக்குப் பட்ட உண்மையைச் சொல்கிறேன்.அவள் பெருமையுடன் மகனைப் பார்க்கிறாள்.

‘ என்னவாக மகனைப் படிப்பிப்பதாக யோசனை?’

‘அவன் வளரட்டும் அவன் என்னமாதிரி வரவேண்டும் என்ற அவனே தெரிவு செய்யட்டும.தனது வாழ்க்கையைத் தெரிவு செய்யும் சுயமையுள்ள மகனாக அவன் வளர்வான்;’ அவள் குரலில் உறுதி.

அவள் சொன்னது எனக்குச் சாட்டையடியாகப்படுகிறது.

அவள் சொன்னது சரிதானே? என்னைப் போன்றவர்கள் மற்றவர்களின் திருப்திக்காக வாழ்ந்து முடிக்கிறோம். அப்படி எங்கள் எதிhகால வாரிசுகளும் வளரவேண்டுமா?

(யாவும் கற்பனையே)

– 1980

Print Friendly, PDF & Email

3 thoughts on “ஒரு சிறு காதல் கதை

  1. ’ நன் ஒரு டாக்டர்’ எனும் வசனம் மீளவும் மீளவும் திகட்டும்படியாக வருகின்றது.

    எனினும் ராஜேஸ்வரி அக்கா இக்கதையை இப்போது எழுதியிருந்தாரானால் இதைவிடவும் அழகாகச் செதுக்கித்தந்திருப்பார். இருந்தும் சிறப்பான கதையாக்கும்.

    அக்காவா கொக்கா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *