என்னைப் பிடிச்சிருக்கா?

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 29,842 
 

”எனக்குப் பிடிக்கலை, ரசிகா…’

‘எதும்மா… என் டிரெஸ்ஸா?’

‘ஒரு எடத்துல உக்காந்து பேச வேண்டியதுதான..? அது என்ன, கார்ல ரவுண்டு அடிச்சுக்கிட்டே பேட்டி எடுக்கிறது?’

‘ஏம்மா, செங்குட்டுவன் என்னை அப்படியே அவரோட கெஸ்ட் ஹவுஸுக்கு நைஸா கூட்டிட்டுப் போயிடுவார்னு பயப்படுறியா? அப்படியே போனாலும், ஐ டோன்ட் மைண்ட். எத்தனை பொண்ணுங்க ஏங்கிக்கிட்டு இருக்காங்க தெரியுமா?’

‘ச்சீ… அம்மாகிட்ட பேசுற பேச்சாடி இது?’

அப்போது ஹார்ன் சத்தம் கேட்டது. ரசிகா பால்கனிக்கு ஓடிவந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.

‘வந்தாச்சு!’ என்றபடி உடல் முழுவதும் பரவிய பரவசத்துடன் ஹேண்ட்பேக்கை அள்ளிக்கொண்டு ஓடினாள்.

பளபளவென ஆடி ஸ்போர்ட்ஸ். செங்குட்டுவனே ஓட்டி வந்திருந்தான். ரசிகாவுக்குக் கதவைத் திறந்துவிட்டான். கண்ணாடியை இறக்கி பால்கனியைப் பார்த்தான்.

‘அம்மா உள்ள போயிட்டாங்க’ என்றாள், ரசிகா.

டால்பின் போல் கார் வளைந்து திரும்பியது.

‘தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் என்னை வந்து கார்ல பிக்கப் பண்றதை என்னால நம்பவே முடியல!’

பெரிதாகப் புன்னகைத்து, கறுப்புக் கண்ணாடியை நெற்றியின் மேல் ஏற்றிக்கொண்டான்.

என்னைப் பிடிச்சிருக்கா1செங்குட்டுவன், திரையில் பார்ப்பதைவிட நேரில் சுருக்கப்பட்டவன்போல் தெரிந்தான். ஆனாலும், எவ்வளவு கம்பீரமாக இருக்கிறான்! நெருக்கமாக வெட்டப்பட்ட தலைமுடியில் 30 சதவிகிதத்துக்கும் மேல் நரை பூத்திருந்தது. அடர்த்தியான, வடிவான புருவங்களுக்குக் கீழ், ஒளிமிகுந்த கண்கள். செதுக்கிவைத்தது போன்ற நாசி. செயற்கையாகக் கட்டப்பட்டது போன்ற துல்லியமான பல்வரிசை. அவனுடைய நெற்றியும், புருவங்களும், கண்களும் எவ்வளவு விதமாக நடித்திருக்கின்றன!

‘எந்த காலேஜ்னு சொன்னே?’

அடிவயிறு வரை சென்று சிலிர்ப்பூட்டும் மாயமான, மயக்கும் குரல். தான் பயிலும் கல்லூரியின் பெயரைச் சொன்னாள் ரசிகா.

‘எங்க காலேஜ் மேகஸினுக்காகப் பேட்டி கொடுக்கிறதுக்கு ரொம்ப தேங்க்ஸ். பேட்டியை ரெக்கார்ட் பண்ணிக்கலாமா?’

‘ஷ்யூர்… முதல் கேள்வி?’ என்றான்.

‘ஏன் இந்தப் பழமையான பேரு?’

‘ஹா… ஹா…’ எனச் சிரித்தான். சற்றும் மிச்சம் வைத்துக்கொள்ளாத முழுமையான சிரிப்பு.

‘நான் இண்டஸ்ட்ரியில் நுழைஞ்சப்ப, ரஜினி, கமல், கார்த்திக், அஜித், விஜய்னு கலக்கிட்டிருந்தாங்க. என் பேரு தமிழ்ப் பேரு. சட்டுனு எல்லார் கவனத்தையும் கவரும்னு தோணிச்சு. தமிழ்நாட்டில் பொறந்து, தமிழில் நடிக்கிறவன், ‘செங்குட்டுவன்’கிற தமிழ்ப் பேரை ஏன் மாத்திக்கணும்?’

கார் கிழக்குக் கடற்கரைச் சாலையில் விரைந்தது. காரில் சிகரெட் பாக்கெட்டும் லைட்டரும் பார்த்தாள்.

‘நீங்க ஸ்மோக் பண்ணலாம்; எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை’ என்றாள்.

‘நான் சிகரெட்டை விட்டு 20 வருஷம் ஆகுது. அது என் ஒய்ஃபோடது.’

‘தப்புனு நெனைச்சு விட்டுட்டீங்களா?’

சிரித்தான். ‘சில சமயம், நமக்குப் பிடிச்ச சில விஷயத்தை நமக்குப் பிடிச்சவங்களுக்காக உதறுவோம் இல்லியா?’

* * * * * * *

இருபது வருடங்களுக்கு முன்பு, செங்குட்டுவனுக்கு தி.நகர் அபார்ட்மென்ட்டில் வாசம். அபார்ட்மென்ட்டை நிரப்பி புகை வாசம்.

கதவைத் திறந்து, ‘உள்ள வாங்க’ என்றான்.

எதிரில் நின்ற அனுசூயா, புடவைத் தலைப்பால் மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு இருமினாள். ‘ஸாரி… எனக்கு சிகரெட் புகை தாங்காது.’

‘ரியலி ஸாரி…’ என, கையில் இருந்த சிகரெட்டை ஆஷ் ட்ரேயில் அழுத்தி அணைத்தான் செங்குட்டுவன். வாஷ்பேசினுக்குச் சென்று வாயை பல முறை கொப்பளித்தான். ஒரு சூயிங்கத்தை மென்றுகொண்டே பால்கனியில் நாற்காலிகளை எடுத்துப் போட்டான்.

‘இங்க உட்காருங்க, பேசுவோம்.’

அவன் கையால் காபியைக் கலந்து எடுத்து வந்தான்.

‘நேத்துவிட்ட எடத்துலேர்ந்து பேட்டியைத் தொடரலாம்’ என்றான்.

அனுசூயா சிறு நோட் புக்கையும் பேனாவையும் திறந்தாள்.

‘நடிக்க வந்ததால், என்ன சந்தோஷம்… என்ன துக்கம்?’

‘பல லட்சம் பேரை சந்தோஷப்படுத்த முடியுதேனு சந்தோஷம்: என்னோட உலகம் ரொம்ப சுருங்கிப்போச்சேனு துக்கம்.’

‘எங்க காலேஜைத் தாண்டி என்னை யாருக்கும் தெரியாது. உலகம் பூரா உங்களைத் தெரியும். எப்படிச் சுருங்கிப்போச்சுனு சொல்வீங்க?’

‘கடலில் நீச்சல் அடிச்சப்ப, அலை அங்கேயும் இங்கேயுமாப் புரட்டிப்போட்டது. அப்போ, தனக்குனு தனியா நீச்சல்குளம் வெச்சிருக்கிறவன் மேல பொறாமை வந்தது. கடலில் நீந்திட்டு இருந்த மீனை எடுத்து குடத்துக்குள்ள போட்ட மாதிரி இப்ப உணர்றேன்.’

‘ரசிகர்கள் உங்க மேல உயிரையே வெச்சிருக்காங்களே?’

‘பார்த்தா துரத்திட்டு வராங்க: பக்கத்துல நின்னு போட்டோ எடுத்துக்கிறாங்க: வழியை மறிக்கிறாங்க: கலவரத்தில் ஈடுபட்டவங்களை போலீஸ் இழுத்துத் தள்ளுற மாதிரி அவங்களைத் தள்ளி, எனக்கு வழி பண்ணிக் குடுக்க வேண்டியிருக்கு. இல்லேன்னா, ஒருத்தன்… கன்னத்துல கிள்ளுறான்: இன்னொருத்தன்… விரலைப் பிடிச்சுக் கடிக்கிறான்.. கிரேஸி…’

‘அப்போ, ரசிகர்கள் விலகி நிக்கணும்னு சொல்றீங்களா?’

‘சத்தியமா இல்லை.. பல பேர்கிட்டே புதுப்புது விஷயங்களைக் கத்துக்கிட்டு இருக்கேன். வித்தியாசமா இருக்கிற ஒவ்வொரு ரசிகனையும் பார்த்துதான் வேற வேற பாத்திரங்களை என்னால செய்ய முடியுது.’

‘ரசிகனுக்கு என்னதான் சொல்றீங்க?’

‘சினிமாக்காரனைப் பாருங்க… ரசியுங்க… ஆனா, அவனைத் தூக்கிவெச்சுக் கும்பிடாதீங்க… கொண்டாடாதீங்க. அவனோட தனிப்பட்ட சுதந்திரத்துல தலையிடாதீங்க.’

‘ஸாரி, நீங்க சிகரெட் பிடிக்கிறது உங்க சுதந்திரம். அதுல நான் தலையிட்டுட்டேன் இல்ல..?’

‘அய்யோ, அப்படி அர்த்தம் பண்ணிக்கிட்டீங்களா? பாருங்க, எனக்கு சரியாப் பேசக்கூடத் தெரியல.’

* * * * * * *

”என் கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல..’ என்று ரசிகாவின் குரல் சற்று உரக்க ஒலித்தது.

‘ஸாரி.. ஐ வாஸ் வொண்டரிங் இன் தி பாஸ்ட்…’ என்றபடி, ஏ.சி. பேருந்து ஒன்றை லாகவமாக ஓவர்டேக் செய்தான் செங்குட்டுவன். ‘கேளு..’

‘நீங்க வருத்தப்படுற விஷயம்?’

‘சில சமயம், படத்தோட கடைசி நாள் ஷூட்டிங்ல, ‘அடடா… இந்த கேரக்டரை இப்படி நடிச்சிருக்கலாமே?’னு தோணும். ஆனா, ஒண்ணும் செய்ய முடியாது.’

‘உங்க வீட்ல யாரை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?’

‘சத்தியமா சொல்லணும்னா, என் நாய் பின்னியைத்தான்.’

‘உங்களைப் பத்தி உங்க அபிப்பிராயம்?’

‘சில சமயம் அப்பாவி; சில சமயம் அகம்பாவி. பொய் சொல்லியிருக்கேன்.. ஏமாந்திருக்கேன்.. ஏமாத்தியிருக்கேன்.. சுருக்கமா, கொஞ்சம் நல்லவன்; கொஞ்சம் கெட்டவன்’ என்றவன் சட்டென்று நிறுத்தி, ‘கோவளத்துல என் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. அங்க கொஞ்ச நேரம் உக்காந்து பேசலாமா?’ என்று சடாரென்று கேட்டான்.

ரசிகா ஒரு கணம் திகைத்தாள். ஆவலும் அச்சமும் சேர்ந்து அவளின் அடிவயிற்றில் புரண்டன. ஆனாலும், ‘ஷ்யூர்…’ என்றாள்.

கார் வேகம் பிடித்தது. ரசிகா ஏதோ கேட்க வாய் திறந்தபோது, ‘அதுவரைக்கும் கமர்ஷியல் பிரேக்’ என்று மிக வசீகரமாகச் சிரித்தான்.

சிரிக்கும்போது அய்யோ, எத்தனை அழகு இவன். அவனை முத்தமிட வேண்டும் என்ற பேராவலை ரசிகா தனக்குள் புதைக்கத் தடுமாறினாள்.

* * * * * * *

அனுசூயா கசக்காமல் அடுத்த பக்கத்தைப் புரட்டி எழுதும் அழகை செங்குட்டுவன் ரசனையுடன் பார்த்தான். வெளிச்சம் அவளுடைய ஒரு கன்னத்தில் படிந்திருந்ததே பேரழகாக இருந்தது.

அவளை முத்தமிட வேண்டும் என்றெழுந்த பேராவலை அவன் தனக்குள் புதைத்தான்.

கன்னத்தில் வந்து விழுந்த முடிகளை அலட்சியமாக ஒதுக்கியபடியே அவள் கேட்டாள்: ‘ ‘நடிப்பு’னா என்ன?’

‘ஒரு வரியில பதில் சொல்ல முடியாது. போட்டிருக்கிற டிரெஸ், மூஞ்சில விழுற வெளிச்சம், பேசப்போற டயலாக், சுத்தி இருக்கிற சூழ்நிலை, இவ்வளவும்தான் என் நடிப்பைத் தீர்மானம் பண்ணுது.’

‘யார் பேச்சைக் கேக்கலைனு வருத்தப்பட்டிருக்கீங்க?’

‘ ‘வேணாம், அந்தப் பாதையில போகாத… திரும்பி வர முடியாது’னு எங்கம்மா சொன்னாங்க. அதை மீறிட்டுதான் இவ்ளோ தூரம் வந்திருக்கேன். அப்பப்ப அம்மாவோட குரல் காதுல கேட்கும். ஆனா, வருத்தம் இல்லை.’

‘பிரஸ்மீட்டை ஏன் வெறுக்குறீங்க?’

‘நான் என்ன சொல்லப்போறேன்னு அவங்களுக்குத் தெரியும்: அவங்க என்ன கேட்கப்போறாங்கனு எனக்குத் தெரியும். ரெண்டு பேரும் சலிப்பை மறைச்சுக்கிட்டு, மறுபடியும், மறுபடியும் இந்த வெளையாட்டை எத்தனை நாள்தான் வெளையாடுறது?’

* * * * * * *

காரை தொலைவில் பார்த்ததுமே, கேட் அகலமாகத் திறந்தது. கெஸ்ட் ஹவுஸில் கார் நுழைந்தது.

எவ்வளவு பெரிய தோட்டம்! மிகக் கச்சிதமாகப் பராமரிக்கப்பட்ட புல்தரை. வெள்ளையும் மஞ்சளுமாகப் பூத்துக் குலுங்கும் சங்குமரம். புல்தரையின் இடையில் வளைந்து செல்லும் கான்கிரீட் பாதை. வாசலில் இழைத்து இழைத்துச் செதுக்கிய தேக்கு மரக் கதவு. தரையில் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட பளிங்குக் கற்கள்.

நுழைந்ததும், மாபெரும் ஹால். எவ்வளவு ஷீல்டுகள்… எவ்வளவு நினைவுப்பரிசுகள்… எவ்வளவு புகைப்படங்கள்!

‘என்ன சாப்பிடறே?’

‘ஏதாவது ஜூஸ்.’

உத்தரவை வாங்கிச் செல்லக் காத்திருக்கும் வேலைக்காரர்கள். படுக்கை அறைக்கு அழைத்தால் என்ன சொல்வது என்று ரசிகாவின் மனம் வேகமாகக் கணக்குப் போட்டது.

‘கடலைப் பார்த்தபடி தோட்டத்துல உட்காரலாமா?’ என்றான்.

ஏமாற்றமா, நிம்மதியா என்று புரியாமல் ரசிகா தவிக்க…

‘பேட்டியைத் தொடரலாம்’ என்றான்.

‘சினிமால போடுற மாதிரி நிஜத்துலயும் சண்டை போடுவீங்களா?’

‘போன வாரம் ஸ்டார் ஹோட்டல்ல நைட் பார்ட்டி. கொஞ்சம் போதையோட வெளியே வரும்போது பின்னாலே இருந்து ஒரு பையன் ஓடிவந்து, டப்புனு செல்லமாக் கட்டிப்பிடிச்சான். தடுமாறிட்டேன். அதுக்குள்ள பச்சக்னு கன்னத்துல முத்தம் வேற குடுத்தான். ‘நான் உன் வீட்டு நாய்க்குட்டி இல்லடா’னு கெட்ட வார்த்தையைச் சொல்லி அறைஞ்சிட்டேன். மத்தவங்க ஓடிவந்து பிரிச்சாங்க. மத்தபடி, சண்டை போடுற அளவுக்கு எனக்கு டெக்னிக்கும் தெரியாது; பலமும் கிடையாது.’

‘பிடிக்கலை.. ஆனா, உதற முடியலைனு ஏதாவது இருக்கா?’

‘ஒரிஜினல் மூஞ்சி பிடிக்காம முகமூடி மாட்டிக்கிட்டேன். அது சப்பக்னு ஒட்டிக்கிச்சு. இப்ப கழட்டினா, மூஞ்சி செதைஞ்சிடும். அசல் செங்குட்டுவன் செத்துட்டான்; ஒரு ஸ்டார்தான் இப்ப உயிரோட இருக்கான்!’

‘தத்துவமாப் பேசுறீங்க!’

என்னைப் பிடிச்சிருக்கா2‘உண்மையைப் பேசுறேன்.. எனக்குக் கிடைச்சது எல்லாமே வெளியே இருக்கு. இழந்தது எல்லாம் உள்ளே வலியா இருக்கு’ என்று கடல் அலைகளை வெறித்துக்கொண்டு அவன் சொன்னான். கண்களில் ஈரமா என்று அவளுக்குப் புரியவில்லை.

* * * * * * *

”இன்னும் ரெண்டு, மூணு கேள்விகள்தான்…’ என்று மன்னிப்பு கோரும் குரலில் சொன்னாள் அனுசூயா.

‘300 கேள்விகளுக்கு பதில் சொல்லவும் நான் ரெடி’ என்றான் செங்குட்டுவன்.

‘எதைப் பார்த்தா, ரொம்பப் பயப்படுவீங்க?’

‘மனுஷங்களைப் பார்த்தா!’

அனுசூயா, வாய்விட்டுச் சிரித்தாள்.

‘இந்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீங்க?’

‘கூண்டுக்குள்ள இருந்த சிங்கத்தைத் தொட்டுப் பார்க்கணும்னு ஆசையா இருந்தது. திடீர்னு கூண்டு திறந்து, சிங்கம் நாலு கால் பாய்ச்சல்ல வெளியே வந்தது. தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டவன், குதிச்சு அது மேல ஏறி சவாரியே செய்ய ஆரம்பிச்சுட்டேன். அதோட வேகத்துக்கு நிக்காம ஓடிட்டு இருக்கேன். காலாற நடக்கணும்னு தோணினாக்கூட, என்னால இறங்க முடியல.’

அனுசூயா, அவன் சொல்வதை வேகமாக எழுதிக்கொண்டாள்.

‘என்னை இவ்வளவு கேள்வி கேட்டீங்களே.. நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா?’

அனுசூயா வியப்புடன் நிமிர்ந்து பார்த்து, ‘ம்ம்…’ என்றாள்.

‘உனக்கு என்னைப் பிடிக்குமா அனுசூயா?’

‘இதென்ன கேள்வி? ரொம்ப… ரொம்பப் பிடிக்கும்.’

‘ஏன்?’

‘இப்படி எல்லாம் கேட்டா பதில் சொல்லத் தெரியலை. ஹேண்ட்ஸம்மா இருக்கீங்க.. உங்களை ஸ்கிரீன்ல பார்த்தா, உள்ளுக்குள்ள ஜிவ்வுனு இருக்கு.’

‘அதைத் தாண்டி?’

‘மூணு நாளாத்தான் உங்களை மீட் பண்ணிட்டிருக்கேன். வேற என்ன எனக்குத் தெரியும்? வெளிப்படையானவர். என்கிட்ட ரொம்ப டீசன்ட்டா நடந்திட்டிருக்கீங்க. மனசுல கள்ளம் இல்லைனு தோணுது.’

‘நான் பார்க்கிற பல பேர்கிட்டே இருந்து எனக்கு எனர்ஜி கிடைச்சிருக்கு. ஆனா, உன்கிட்டே இருந்து கிடைக்கிற எனர்ஜி, ரொம்ப வித்தியாசமா இருக்கு. அனு… இதுவரைக்கும் நான் அனுபவிக்காததா இருக்கு. ஆறு வருஷத்துல

ஒரு டஜன் கதாநாயகிங்ககூட பேசி, பாடி, மடியில படுக்கவெச்சு, நெருக்கமா அணைச்சு, முதுகுல தூக்கி, எல்லாம் பண்ணிட்டேன். ஆனா, யார்கிட்டயும் ஏற்படாத ஒரு கிளர்ச்சி உன்னைப் பார்த்தாலே கிடைக்குது. சினிமா டயலாக்னு நினைச்சிடாத. தொண்டையில இருந்தோ, மூளையில இருந்தோ இது வரல. இதயத்துல இருந்து வருது. நீ எனக்கு மனைவியா கிடைச்சா, வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும்னு தோணுது.’

அனுசூயா வாயடைத்துப்போனவளாக அவனையே பார்த்தாள்.

‘உன் பதிலுக்காக 10 வருஷம் வேணாலும் வெயிட் பண்றேன்.’

‘வெளிப்படையா மனசுல இருக்கிறதைக் கேட்டுட்டீங்க. நாளைக்கு பதில் சொல்றேன்.’

மறுநாள், அபார்ட்மென்ட்டில் ஒரு சிகரெட் துண்டுகூட இல்லை. ஊதுவத்திகளின் வாசம்தான் நிறைந்திருந்தது.

நேரடியாகவே பதில் சொன்னாள் அனுசுயா.

‘ஸாரி, செங்குட்டுவன்.’

‘நோ ப்ராப்ளம்…’ என்றான். ஆனால், உள்ளே இதயக்கண்ணாடி நொறுங்கும் ஒலி கேட்டது. ‘ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?’

‘பிடிக்குமானு கேட்டீங்களே, என்ன பிடிக்கும்னு யோசிச்சேன். உங்க ஹீரோ இமேஜைத்தான் ரொம்ப விரும்பி இருக்கேன். அதை நீக்கிட்டு, பெர்சனலா உங்களைப் பிடிக்குமானு வாழ்ந்து பார்க்காம சொல்ல முடியாது. தள்ளி நின்னு ரசிக்கிற ஒரு சினிமா நடிகரோட பக்கத்துல இருந்து சந்தோஷமா வாழுற பக்குவம் எனக்கு இல்லைன்னே தோணுது. ஸாரி, உங்களை ஹர்ட் பண்ணலியே..?’

‘என் கண்ல தண்ணி வருதா பாரு… வராது. ஏன்னா, நான் நல்ல நடிகன்’ என்று உலர்ந்த சிரிப்பை உதிர்த்தான்.

* * * * * * *

வீட்டு வாசலில் ரசிகாவை இறக்கி விட்டதும், ‘உள்ளே வந்துட்டுப் போங்க. அம்மா கையால ஒரு காபி கொடுக்கணும்னு ஆசைப்பட்டாங்க…’ என்றாள்.

அவனை முந்திக்கொண்டு படிகளில் ஓடி கதவைத் தட்டினாள். திறந்ததும், ‘அம்மா… செங்குட்டுவன் நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு’ என்று பரபரப்பானாள்.

அவளைப் பார்த்ததும், செங்குட்டுவன் கைகளைக் கூப்பினான்.

’20 வருஷம் இருக்குமா, நாம பார்த்து?’ என்று அனுசூயா கேட்டாள்.

’20 வருஷம், 8 மாசம், 3 நாள்…’ என்றான் செங்குட்டுவன்.

ரசிகாவின் கண்களில் ஆச்சர்யம் துள்ளியது. ‘எங்கம்மாவை மீட் பண்ண தேதியைக்கூட ஞாபகம் வெச்சிருக்கீங்க!’

‘அவ்வளவு சீக்கிரம் மறக்கிற நாளா அது?’ என்றபடி செங்குட்டுவன் வீட்டுக்குள் இருந்த சோபாவில் அமர்ந்தான்.

‘உங்களை எங்க காலேஜ் மேகஸினுக்காக 20 வருஷத்துக்கு முன்னால பேட்டி எடுத்தேன்னு சொன்னா, இவ நம்பவே இல்ல. நான் போன் பண்ணிக் கேட்டவுடனே, ரசிகாவுக்காக நேரத்தை ஒதுக்கினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.’

‘உன் முகத்துல உண்மையான சந்தோஷத்தைப் பார்க்கும்போது, எவ்வளவு புத்திசாலித்தனமா நீ முடிவு எடுத்தேனு தோணுது.’

‘இன்னிக்கும் உங்களை ரசிச்சிட்டுதான் இருக்கேன். நாளுக்கு நாள் அழகாயிட்டே இருக்கீங்க’ என்று சொல்கையில் அனுசூயாவின் கன்னங்கள் சிவந்தன. ‘காபி எடுத்துட்டு வரேன்’ என்று உள்ளே விரைந்தாள்.

சுவரில் மாட்டி இருந்த அனுசூயாவின் திருமணப் புகைப்படம் 20 வருடங்களில் சற்று பழுப்பேறி இருந்தது. அதை அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஏதோ குறிப்பைப் புரட்டிக்கொண்டே ரசிகா பக்கத்தில் வந்தாள்.

‘கல்யாண வயசுல எங்கம்மா எவ்வளவு அழகு!’ என்றாள்.

கன்னத்தில் வந்து விழும் முடியை ஒயிலாக ஒதுக்கியபடி காபியை எடுத்து வரும் அனுசூயாவை, செங்குட்டுவன் பார்த்தான். பதில் சொல்லாமல் புன்னகைத்தான்.

‘கோச்சிக்க மாட்டீங்களே? ஸாரி.. முக்கியமான ஒரு கேள்வி மிஸ்ஸாயிருச்சு. இப்ப கேட்கலாமா?’ எனக் கேட்டாள் ரசிகா.

‘ரசிகா…’ என்று அனுசூயா அதட்டினாள். ‘அதான் பேட்டி கொடுத்தார்ல! இன்னும் என்ன? அவரைத் தொந்தரவு பண்ணாத!’

‘பரவாயில்லை… கேட்கட்டும்.’

‘உங்க வெற்றிக்குக் காரணம் அதிர்ஷ்டமா, திறமையா?’

செங்குட்டுவன் வாய்விட்டுச் சிரித்தான்.

‘சினிமால ஜெயிச்சது திறமையால… வாழ்க்கையில தோத்தது அந்த அதிர்ஷ்டத்தால!’

– நவம்பர் 2014

Print Friendly, PDF & Email

1 thought on “என்னைப் பிடிச்சிருக்கா?

  1. அனுசூயாவும் செங்குட்டுவனும் அந்த பேட்டிக்கு பிறகு சந்தித்து இருப்பார்களா என்று யோசித்தபடியே அடுத்த வரி வாசிக்க 20 வருட இடைவெளிக்கு பிறகு செங்குட்டுவன் முன் வந்த அனுசூயாவை வாசித்த போது எதிர்பாராத மகிழ்ச்சி.

    ” சினிமால ஜெயிச்சது திறமையால
    வாழ்க்கையில தோத்தது அந்த அதிர்ஷ்டத்தால” இந்த வரி ஒரு நிமிடம் எங்கோ ஏதோ நினைவுகள் இடையே பயணப்பட வைத்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *