உ.ச.போ எண் 04 (துரோகி! அவனைக்கொல்லாமல் விடப்போவதில்லை)

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 12,196 
 

சரவணன்! என் காதலை முளையிலேயே கிள்ளியெறிந்த சதிகாரன். என் சாதனாவை என்னிடமிருந்து தந்திரமாய்த் தட்டிப் பறித்த துரோகி! அவனைக்கொல்லாமல் விடப்போவதில்லை.

யார் இந்த சரவணன் என்கிறீர்களா? வேறு யார்? என் உத்தம நண்பன்தான். நண்பன் என்கிறாய், துரோகி என்கிறாய்! உண்மையில் அவன் யார் என்று குழப்பம் வருமே! எனக்கும் வந்தது. எப்போது தெரியுமா?

என் காதலுக்குத் தூது சென்று அவளுக்கென்று என் மனதில் தேக்கிவைத்திருந்த அத்தனைக் காதல் உணர்வுகளையும் கவிதைகளாய் வடித்து நான் எழுதிய காதற்கவிதைகளைத் தான் எழுதியதாய்ச் சொல்லி என் கனவு தேவதையின் மனதை வசியப்படுத்திவிட்டு, எல்லாவற்றையும் என்னிடமிருந்து மறைத்து ஒன்றும் தெரியாத அப்பாவி போல் என்முன் வந்து,

“மனசத் தேத்திக்கோடா…அவளுக்கு என்னைதான் பிடிச்சிருக்காம்!” என்று சொன்னானே அந்த நிமிடம்.

இது எப்படி சாத்தியமென்று குழம்பித்திரிந்த என்னை அவனே தெளியவும் வைத்தான். எப்படி என்கிறீர்களா? சொல்கிறேன்.

இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். காதலித்த பெண்ணின் மணம்போல் வாழ்வு அமைய வாழ்த்துபவன் தானே உண்மையான காதலன். நானும் அன்று அவளை வாழ்த்தினேன், தாளமுடியா வேதனையை என் நெஞ்சுக்குள் அழுந்தப் புதைத்து, மேலோட்டமாய்ச் சிரித்தபடி. அப்போதும் நான் அறியவில்லை, ஆசை நண்பனால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்ற விவரம்.

அடுத்தவாரத்தில் ஓர்நாள் ஓடிவந்தான் அவன்.

“டேய் மச்சி, என்னை மன்னிச்சிடுடா…. உன்னை ஏமாத்தின பாவத்தை இன்னைக்கு அனுபவிக்கிறேன்டா… அந்தக் கவிதையெல்லாம் நான் தான் எழுதினதா அவகிட்ட பொய் சொல்லீட்டேன்டா… எப்ப பாத்தாலும் கவிதை சொல்லச் சொல்லி பாடாப் படுத்துறாடா… கவிதை இல்லைன்னா வாழ்க்கையே இல்லைங்கிறாடா… நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டேன். ஒரு மண்ணும் தோணமாட்டேங்குது. கொஞ்சம் உதவி பண்ணுடா….”

எனக்கு எப்படியிருந்திருக்கும், யோசித்துப்பாருங்கள். என்னை ஏமாற்றி, தன்னை நம்பிவந்த பெண்ணை ஏமாற்றி இப்போது கொஞ்சமும் வெட்கமானம் இல்லாமல் என் காலில் விழுந்து கெஞ்சுகிறான். ச்சே! என்ன ஜென்மம் இவன்! இவன் லட்சணம் தெரிந்தால் சாதனா எத்தனை வேதனைப்படுவாள்? ஏமாந்துவிட்டோமே என்று எப்படி மருகுவாள்? வாழ்நாளெல்லாம் இவனுக்கு கவிதை சொல்லியே என் காதல் பிரிவை சுமந்து வாழவேண்டுமா? என்றாவது ஒருநாள் அவளுக்கு உண்மை தெரியத்தானே போகிறது. அது இன்றே தெரிந்துபோகட்டுமே! மறுத்தேன்.

“நீ இல்லைன்னா… உலகத்துல வேற எவனுமேவா இல்ல… காச விட்டெறிஞ்சா காதல் காதல்னு கத்துற எத்தனையோ நாய்களப் பாத்திருக்கேன்… நீ என்ன பெரிய…இவன்…”

ஆத்திரத்துடன் போய்விட்டான். எனக்குள் ஆறிக்கொண்டிருந்த காதலெனும் காயத்தை வார்த்தைகளால் கீறிக் காயப்படுத்திவிட்டுப் போனவனைப் பார்த்தேன். என் கையாலாகாத்தனம் என்னை என்னென்னவோ யோசிக்கவைத்தது.

உடைந்த மனதுடன் வாழவிரும்பாமல் தூக்கில் தொங்கினேன், அறிந்தவர்களால் கயிறு அறுக்கப்பட்டு இறப்பதற்கு பதில் இறக்கப்பட்டேன். விஷம் குடித்தேன், உப்புக்கரைசல் உட்செலுத்தப்பட்டு தப்பு செய்கிறாயடா என்று போதிக்கப்பட்டேன். இன்னும் எத்தனையோ….

இவ்வளவுநாள் பொறுத்தாயே! அப்படியே விட்டுவிடக்கூடாதா? இப்போது ஏன் அவனைக் கொலை செய்யத் துடிக்கிறாய் என்கிறீர்களா? பாவி! உங்களையில்லை, அவனைத்தான் சொல்கிறேன்.என் காதல் தேவதையை கண்கலங்காமல் காலமெல்லாம் காத்திருப்பான் என்று நம்பியிருந்த என்னை மறுபடியும் ஏமாற்றிவிட்டான், இந்தத் துரோகி. இவன் கவிஞனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை என்பதை அறிந்த அவள் விரக்தி மேலிட இவனை விட்டுப்பிரிந்து எங்கோ சென்றுவிட்டாளாம்.

நாய் வைக்கோற்போரில் படுத்த கதையாக தானும் வாழாமல் என்னையும் வாழவிடாமல் செய்தவன்மேல் கோபம் வராமல் என்ன செய்யும்? துரோகத்தின் பலன் தானே இது? இனியும் அவன் வாழவேண்டுமா? அவனைக் கொன்றால்தான் என் மனம் ஆறும்.

இதோ…நடுநிசி. நாய்களும் உறங்கிக்கொண்டிருந்தன. நல்லவேளை, என்னைப் பார்க்கவில்லை. எப்படியோ பலவழிகளிலும் முயன்று எவருமறியாமல் அவன் அறைக்குள் நுழைந்துவிட்டேன். ஆழ்ந்த நித்திரையிலிருக்கும் அவனைப் பார்த்தேன்.

என் சாதனா எங்கே இருக்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ? இங்கே நீ எந்தக் குற்ற உணர்வுமின்றி நிம்மதியாகத் தூங்கிகொண்டிருக்கிறாயா? தூங்கு… தூங்கு… இனி உனக்கு நிரந்தரத் தூக்கம்தானடா…. கையில் ஆயுதம் எதுவும் இல்லையென்பது நினைவுக்கு வந்தது. சுவரோரமாய் சாய்த்துவைக்கப்பட்டிருந்த இரும்புலக்கையைப் பார்த்தேன். சரியான ஆயுதம். இதால் ஒரே போடு போட்டால் போதும். எடுக்க முயன்றேன். முடியவில்லை. நல்ல கனம்.

போகிறது. இந்தச் சண்டாளனுக்கு என் கைகளே போதும். மூச்சை இழுத்துப் பிடித்து பலங்கொண்ட மட்டும் என்னிரு கைவிரல்களையும் அவன் கழுத்தைச் சுற்றிப் பற்றி நெறிக்கத் துவங்கினேன். இன்னும்…இன்னும்… பலமாக… உள்ளிருந்த ஆவேசம் அத்தனையும் விரல்களில் கொண்டுவந்து நெறித்தேன்… இன்னும்… இன்னும்…

சட்! என்ன இது? எந்தப் பாதிப்புமின்றி அவன் பாட்டுக்கு தூங்கிக்கொண்டிருக்கிறானே! அப்படியானால் என் கரங்கள் அவனைத் தீண்டவே இல்லையா? அடக்கடவுளே! என் கைகளுக்கு என்னாயிற்று? என் சக்தியெல்லாம் எங்கே? என்னால் அவனை ஒன்றுமே செய்யமுடியாதா? ஏன் முடியாது? நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை. மீண்டும் முயல…. இம்முறையும் காற்றையே கைகள் துலாவின.

என் கரங்களுக்கு அவன் கழுத்து அகப்படவே இல்லை.

ஹும்! நான் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால்…….. அவன் கதையை ஒரே மூச்சில் முடித்திருப்பேனே! இப்படி அவசரப்பட்டு செத்துத் தொலைத்துவிட்டேனே! என்னையே நொந்துகொண்டு வெளியேறி வழக்கமாய்த் தொங்கும் புளியமரத்தை நெருங்கினேன்.

யாரோ என்னை அழைக்க, திரும்பினேன். அங்கே சரவணன்!

“எங்கேடா போய்ட்டே? நான் உன்னைத்தான் தேடிகிட்டிருந்தேன். எனக்கு வாழ்க்கையோட அர்த்தம் லேட்டாதான்டா புரிஞ்சது. உன்னையும் சாதனாவையும் ஏமாத்திப் பிரிச்ச பாவத்துக்கான தண்டனைய நானே எனக்குக் கொடுத்திட்டேன். நேத்து ராத்திரி விஷம் குடிச்சி செத்துப்போய்ட்டேன்டா…. என்ன மன்னிச்சிடுடா… நாம ரெண்டுபேரும் பழயபடி நண்பர்களாவே இருப்போம்டா….”

“சரி, விடுடா…. நான் மட்டும் யோக்கியமா? கொஞ்ச முன்னாடி உன்னைக் கொல்லவந்தேனே!”

“நிஜமாவா…? அப்படியாவது என் பாவத்தத் தொலச்சிருக்கலாமே! அவசரப்பட்டுட்டேனே!”

இருவரும் பழையபடி எங்கள் நட்புக்காலங்களை நினைத்து நெக்குருகி நின்றவேளை…. ஒரு அழகிய பெண் ஆவி எங்களைக் கடந்துசெல்ல நான் அவள் அழகில் மயங்கிநின்றேன்.

சரவணனைப் பார்க்க… அவனும் என்னைப்போலவே வாய்பிளந்து நின்றிருந்தான்.

எனக்கு அப்போது என்ன தோன்றியது தெரியுமா?

“என்ன கொடும சரவணன் இது!”

Print Friendly, PDF & Email

1 thought on “உ.ச.போ எண் 04 (துரோகி! அவனைக்கொல்லாமல் விடப்போவதில்லை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *