இறந்தவன் திரும்பி வந்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 2,580 
 

ராமசுப்பு இப்படி போவான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தியாவின் ஜனத்தொகையில் ஒன்று குறைந்து விட்டது என்று மற்றவர்கள் நினைத்துக்கொள்ளலாம், ஆனால் ராம சுப்பு ஒரு இந்திய குடிமகனாய் எல்லாவிதமான சட்ட திட்டங்களையும் சரிவர பின்பற்றி இருப்பவன், அவனைப்போய்….

வாசகர்கள் ஆவலுடன் இருக்கலாம், இவனுக்கு என்னதான் ஆயிற்று?

அதற்கு முன்னால் நம் ராமசுப்பு எப்படிப்பட்டவன் என்று மேலோட்டமாய் சொல்லி விடுவோம். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து எல்லோரும் பாதையை கடந்து செல்ல்லாம் என்று தெரிந்தாலும் நம் ராமசுப்பு மட்டும் கடக்கும் போதும் எதிர் வண்டியை பார்த்து இரண்டு கைகளையும் விரித்து நான் கடக்கிறேன், நான் கடக்கிறேன் என்று இரண்டு முறை சொல்லிவிட்டுத்தான் கடப்பான்.

அதுவரை சிக்னல் எரிச்சலில் நின்று கொண்டிருப்பவர்கள் கூட இவனின் முன்னெச்சரிக்கையை கண்டு ஒரு நிமிடம் மனதை ரிலாக்சாகிக்கொள்வார்கள்.

அடுத்ததாக ரேசன் கார்டில் பெயர் சேர்ப்பதோ, நீக்குவதோ முதல் ஆளாய் செய்து முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான். அதுக்குத்தான் ஆட்கள் இருக்கிறார்களே என்று காதோடு சொன்னாலும் ஒத்துக்கொள்ள மாட்டான், நம் கடமை, அதை செய்யவேண்டியது என்று ஒரு இந்திய குடிமகனாய் சொல்வான். எல்லாவற்றையும் முடித்து விட்டு அவர்கள் மனசு சங்கடப்பட்டுவிடக்கூடாதே என்று கையூட்டும் கொடுத்து விடுவான். இப்படி ஒரு இளிச்சவாயனா என்று அவர்கள் நினைத்துக்கொண்டாலும்.

பான் கார்டு ஆகட்டும், தேர்தல் கார்டு ஆகட்டும் எல்லாவற்றையும் கனகச்சிதமாய் வைத்திருப்பான். ஏன் வண்டி இவனிடம் இல்லையென்றாலும், ஓட்டுநர் உரிமம் கூட வைத்திருப்பான், ஆனால் நடந்துதான் செல்வான். அப்புறம் எதுக்கு ஓட்டுநர் உரிமம் என்று கேட்டுவிட்டீர்கள் என்றால் ஒரு சிரிப்பு சிரித்து வைப்பான். சில நேரங்களில் நடந்து போறவங்க கிட்டேயும் கேட்டாங்கன்னா? என்று அப்பாவியாய் கேட்பான்.பேசாமல் அரசாங்கம் நடப்பவர் உரிமம் ஒன்றை எல்லோரும் வாங்கியாக வேண்டும் என்று அறிவித்து விட்டால் ராமசுப்புவுக்கு வசதியாக போய் விடும்.

அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை அதிரடியாய் வெளியிட்டது, ஆதார் கார்டு அவசியம் என்று. இந்திய குடிமகன் ராமசுப்பு உடனே அதை செயல்படுத்த அவர்கள் வீட்டில் இருந்த ஒன்பது உருப்படிகளுக்கும் வாங்கிவிட்டுத்தான் மறு வேலை பார்த்தான். இந்த காலத்தில் ஒன்பதா என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம், அவன் குடும்பத்தில் அவனுடைய சகோதர சகோதரிகள் குடும்பம், இவன் குடும்பம், இவர்களை தன் சொந்த செலவில் ஆட்டோ பிடித்து சென்று ஆதார் எடுத்து விட்டுத்தான் ஓய்ந்தான்.

மீண்டும் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது, ஆதார் எண்ணை உங்கள் செல்போனில் இணைத்துக்கொள்ளுங்கள். விடுவானா நம் ராமசுப்பு, மீண்டும் ஒன்பது உருப்படிகளுக்கு தன் செலவில் அரசாங்க கடமைகளை செய்து முடித்தான்.

எல்லாவித கார்டுகளையும், பராமரித்து தான் ஒரு இந்திய குடிமகன் என்று வாழ்ந்து கொண்டிருந்த ராமசுப்பு ஒரு நாள் எதிரில் வாகனத்தில் வந்த ஒருவனால் மோதப்பட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்த அரை மணி நேரத்தில் மருத்துவர் உயிர் போய் விட்டதாக அறிவித்து விட்டார்.

சுற்றத்தார் எல்லோரும் கதறிக்கொண்டிருக்க நம் ராமசுப்பு மட்டும் புகையாகி சந்தோசமாய் வான் வெளியில் பறந்து, பூமியை பார்த்து ஆஹா என்ன உலகம், என்ன உலகம், என்று வியந்து மேலே..மேலே போய்க்கொண்டிருந்தான்.

சட்டென ஒரு வலை போல் தடுக்கப்பட்டு இரண்டு புகை உருவங்களால் யார் நீ? எங்கிருந்து வருகிறாய் என்று மிரட்டப்பட்டான். திடுக்கிட்டவன் நான் இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல,அப்படியா என்ன ஆதாரம்? நீ இந்தியன் என்பதற்கு? எங்கள் நாட்டில் நான் இந்தியன் என்பதற்கு எல்லா கார்டுகளையும் வைத்திருக்க்கிறேன். பெருமையுடன் சொன்னான்.

அப்படியா? அதைக்காட்டு. இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று விழித்தான்.

என்ன விழிக்கிறாய், எல்லாவற்றையும் வைத்திருப்பதாக் சொன்னாயே அதை கொண்டு வந்து காட்டினால்தான் இங்கு வரமுடியும், போய்விடு இங்கிருந்து என்று விரட்டப்பட்டான்.

நம்முடைய உடலை எரித்திருப்பார்களோ என்று தலைதெறிக்க திரும்பி வந்த ராமசுப்பு உடல் இன்னும் மருத்துவமனையிலேயே இருப்பதை கண்டவுடன்தான் பெருமூச்சு விட்டு உடலுக்குள் புகுந்தான். அந்த பெருமூச்சு வெளிவர கண் விழித்தவனை பார்த்த மருத்துவர்கள் முதல் அனைவரும் அதிர்ச்சி கூட்டல் ஆச்சர்யமும் அடைந்தனர்.

மருத்துவர்கள் இன்னும் “it’s miracles” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உறவினர்களும், நண்பர்களும் ஆயுசு கெட்டி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ராமசுப்பு மட்டும் ஆதார் கார்டு இல்லாததால் அனுப்பிவிட்டார்கள் என்ற உண்மையை கடைசி வரை சொல்லவே இல்லை. காரணம் சொன்னால் தலை வெடித்து விடுமாமே, உங்களுக்கு தெரியுமா இதை பற்றி?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *